இருந்தும் இல்லாதது…
வட்டிக்கடையில் உப்புப்படிந்த
கட்டுக்கட்டான பணத்தை
‘எண்ண’ முடியாமல் எண்ணி
கஜானாவில் நிரப்பும்
ஏழை கணக்கப்பிள்ளை!
ஒவ்வொரு ஞாயிறும்
அறுநூறு கிலோ கறியை
அறுத்து அளந்துபோட்டுவிட்டு
ஒரு துண்டு இறைச்சிக்காக
ஒரு திருமண அழைப்பின்
தேதியினை அன்றாடம்
மனக் காலண்டரில் கிழிக்கும்
கசாப்புக்கடைச் சிப்பந்தி!
வண்ணங்களின் குழைவுகளில்
தோய்ந்த தூரிகையைப்போல்
கனவு ஓவியங்களைத் தீட்டி
கலர் கலர் பொம்மைகளோடு
புழுங்கிப் பொறாமையில் தவிக்கும்
புடவைக் கடை பெண்!
மூக்கைத் துளைக்கும் மசாலா –
நாக்கைத் தூண்டும் பதார்த்தம்..
வயிற்றைக் கொல்லும் எதார்த்தம்!
எஞ்சிய எச்சில் தட்டுகளை
எப்போதும் ஏந்திச் செல்லும்
புலனடக்கம் அறியா
புலம் பெயர்ந்த சிறுபிள்ளை!
இவர்கள் எல்லோரை விடவும்
இரவு வயிற்றுக்கு ஒன்றுமில்லாமல்
முழங்கையைத் தலையணையாக்கி
முடங்கி தூங்கப்போகும் அந்த
மூடைத் தூக்கும் தொழிலாளி
ஒருவகையில் ஆசிர்வதிக்கப்பட்டவன்..
இல்லையில்
இருப்பதைவிட
இருப்பதில்
இல்லாமல் போவதே பித்தம்!
புத்தனும்
தோற்றுப்போகும் யுத்தம்!
Comments (0)