“என்னையும் புதைத்துவிடுங்கள்”

பசுமைக் குடை பிடித்து,

பகலவன் கதிர் தடுத்து,

பனி கூட உருகாமல்

பகலையும் குளிராக்குவேன்.

பசிக்கு உணவு தந்து,

புசிக்கும் பழங்கள் தந்து,

ருசிக்கும் எல்லாம் தந்து,

தவிக்கும் நோய்க்கு மருந்தாம்

மூலிகை தருவேன்.

காடுகரை வளர்த்து

கழனி  செழிக்க

கார்மேகம் தடுத்து,

கண்மாய் நிறைக்கும்

கனமழை தருவேன்.

வீட்டிற்கு நிலைக்கதவாக,

விலங்கிற்கும் இரையாக,

விளைச்சல் தரும் பயிராக,

விறகாக, நீ வெட்டியெடுக்கும்

கட்டித்தங்கம் நிலக்கரியாக,

இலையாகத்  தழையாக,

உரமாக, மரமாக, நீ,

உயிர் வாழ உள்ளிழுக்கும்

உயிர்க்காற்றை

உருவாக்கித் தருவேன்.

பூக்களும் பூங்காக்களும்

புற்களும், புதருகளும், தந்து,

எதையும் தின்றுவிடும்

பூமியையே  வென்றுவிடும்

புதிரான சக்தி நான்.

வெட்டிய அளவிற்கு

நட்டவன் இல்லை.

வெட்டிய எதுவும்

அவன் நட்டதுமில்லை.

நட்டவே இல்லை என்றால்

நட்டம் எனக்கில்லை.

என் பெயர் விதை.

விதையுங்கள் என்பதன் சுருக்கம்.

இன்று முளைக்கப்பட்ட எல்லாமும்,

என்றோ புதைக்கப்பட்டவைதான்.

ஆதலால்,

என்னையும்,

புதைத்து விடுங்கள்.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *