பயணம்
இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டி ருந்தது. “காளிய வச்சி தார்பாயை கட்டிகிட்டு இரு. நான் போய் டீ சாப்ட்டு வந்துடறேன்” என்று புதிதாக வேலைக்கு வந்திருந்த சீனியிடம் சொல்லிக்கொண்டே கைலியின் மடிப்பில் பீடி இருக்கிறதா? எனப் பார்த்தபடி டீக்கடை வாசலை அடைந்தார் டிரைவர் சாமி.
சற்று நேரத்தில் வண்டியை எடுக்க வேண்டும். ‘மழை வருகிறதா?’ என வானத்தைப் பார்த்த போது மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு”
“கெளம்பிட்டீங்களா?”
“இல்ல, இனிமே தான். வந்துட்டானா?”
“இல்ல. ஆள இன்னும் காணல. அதான் போன் பண்ணேன்”
“வருவான். நீ சாப்ட்டு படு”
“நா வேணா பாத்துட்டு வரட்டா..? கோவிலாண்ட இருக்கானான்னு.. “
“வருவான். வரலைனா அப்டியே போறான். அதுக்கு என்ன பண்றது? பொண்ணு ஒன்னு தான் நமக்குன்னு இருந்துற வேண்டியதுதான்.”
“ம்”
“வந்தா நீ ஏதும் பேசாத. நான் நாளைக்கு நைட்டு வந்துருவேன்.”
“ம். சரி.”
“வச்சிர்றேன்..” என்றவாறு அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டபடி, “அடிச்சிருக்கக் கூடாதுதான். ஆனா, அந்த வார்த்தை? வயசுக்கு வந்த புள்ள இருக்குற வீட்டுல அப்படியா பேசுறது? வேலை வெட்டிக்குப் போனா இதெல்லாம் வருமா?” என்று எண்ணியபடியே டயர்களைச் சரிபார்த்துவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார்.
“சீனி…”
“வந்துட்டேன்ண்ணே, இங்கனதான் இருக்கேன்”
“ஓனர்ட்ட சொல்லிட்டியா?”
சொல்லிட்டேன் என்பதுபோலத் தலையை ஆட்டினான்.
“ஏறு… போலாம்” என்று கூறியவாறு வண்டியைக் கிளப்பினார். முப்பத்திரண்டு வயதில் தொடங்கிய சாமியின் பயணம், நாற்பத்தொன்பது வயது ஆகியும் நிற்கவில்லை. பதினேழு வருட உழைப்பில் குடும்பத்தை ஓரளவு நிமிர்த்தியிருந்தார். மகன் படிப்பு முடிஞ்சதும் ஓரளவிற்கு மனதளவிலாவது ஓய்வு பெறலாம் என்று எண்ணியிருந்தவருக்கு அதில்தான் சிக்கல் இருந்தது.
முதலாளி காதில் போட்டு வைத்தால் அவர் ஏதாவது வழி செய்வார் என்ற எண்ணத்தில் ஒருநாள் பேச்சுவாக்கில், “ஒரு வேலையும் செட் ஆக மாட்டேங்குதுண்ணே” எங்க போனாலும் வந்துர்றான். என்ன பண்றதுன்னு தெரியல. இவனும் பொட்ட புள்ளையா இருந்திருந்தா கவலை இல்லனு தோனுது” என்று முதலாளியிடம் பேசும்போது தன் கவலையைப் பகிர்ந்து கொண்டார். வேலை ஒன்றில் மகனைத் திணித்தால் மட்டும்தான் நிம்மதி வரும் என்ற கவலை மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது.
வண்டி நகரத்தைத் தாண்டி நெடுஞ்சாலையில் பயணமானதும் சீனியைக் கவனித்தார்.
“சாப்டியாடா…?” என்றார். அவனிடமிருந்து “ம்” என்ற ஒலியுடன் தலை அசைத்தல் வந்தது. ‘பையன் யாராக இருக்கலாம்?’ என்ற யோசனை சாமிக்கு வர, “யாருடா உன்னை இந்த வேலைக்கு சேர்த்து விட்டது?” என்ற கேள்வியை அவனை நோக்கி வீசினார்.
இரண்டு நாட்களாக லாரி செட்டில் வேலை செய்துகொண்டிருந்த பையனை, “இன்னைக்கு இவனைக் கூட கூட்டிட்டு போ சாமி, உனக்கு ஏதாவது உதவியா இருப்பான்” என்று சொல்லி முதலாளி தான் அனுப்பிவைத்தார்.
“எங்க அம்மா ஓனர் வீட்டுலதான் வேலை பாக்குறாங்கண்ணே. சும்மா இருக்குறேன்னு அனுப்பி வச்சாங்க” என்றதும் “பள்ளிக்கூடம் போகலையா? இங்க வந்துட்ட…” என்றார்.
“இப்போ லீவுண்ணே. திறந்ததும் போயிருவேன்” என்று அவன் பதில் சொல்ல, “பரவால்ல, நல்ல பொறுப்பான பையனா இருக் கான்” என்ற எண்ணம் சாமிக்குள் எழுந்தது.
“தூக்கம் வந்தா சொல்லிரனும், சரியா..? ” நீ பாட்டுக்கு டோர்ல சாஞ்சிறக் கூடாது” என சாமி சொல்ல, வழக்கம் போல தலையை ஆட்டிக்கொண்டான் சீனி.
“எத்தனாவது படிக்கிற?”
“எட்டு முடிச்சி ஒன்பது போறேன்ண்ணா” என்றான். ஏனோ வண்டியில் இருக்கும் வானொலியைப் பாட விடுவதற்கு அவருக்கு மனமில்லை. சீனி கூட பேசிக்கொண்டிருப்பது தேவையாய் இருந்தது. “படிச்சிட்டு என்ன வேலைக்குப் போகப் போற?” என்ற கேள்வியைக் கேட்டவாறு அவன் முகத்தைப் பார்த்தார். முன்னாள் சாலையின் நடுவில் இருந்த வெள்ளைக் கோடுகள் வண்டிக்கு அடியில் ஓடி மறையும் காட்சியைப் பார்த்தபடியே ஆனந்தத்தில் இருந்து விலகாமல், “எந்த வேலை கிடைச்சாலும் போவேன்ண்ணா” என்றான்.
சாமிக்கு மகனின் ஞாபகம் வந்தது. ‘கிடைக்குற வேலையை செய்யறேன்னு நம்ம மகனுக்கு ஏன் தோணல? எந்தக் குறையும் இல்லாமல் தான வளர்த்தோம். கேட்டத கஷ்ட்டப்பட்டாவது வாங்கித் தந்தோம்ல. நம்ம கஷ்டம் நம்ம புள்ள படக்கூடாதுன்னு தானே வெயில்லயும் மழையிலயும் பாடுபடுறோம்?!’ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்”.
“இன்னும் எவ்ளோ தூரம் போகணும்ண்ணா?” என்று சீனி வாய் திறந்தான்.
“ஏன்டா தூக்கம் வருதா?” என்றார் சாமி. இல்லை என்பதாகத் தலையை ஆட்டினான்.
“விடிய காலை ஆகிரும்டா. நீ தூங்கு” என்றதற்கு எதுவும் சொல்லாமல் அமைதியாக சாமியின் கை கால் அசைவுகளைப் பார்த்தவாறு இருந்தவன், “எப்பயுமே நைட் தூங்க மாட்டிங் களா?” என்றான். “வீட்டுக்கு போனாதான்டா தூக்கம். லோடு இறக்குற வரைக்கும் காலையில கொஞ்சம் தூங்கலாம். வேணும்னா நீ வண்டி ஓட்டு நா வேணா தூங்குறேன்..” என்றார் கிண்டலாக.
“இல்ல… தினமும் நைட்டு கண்ணு முழிக் கிறது கஷ்டமா இருக்கும்ல. நான் இவ்ளோ நேரம் முழிச்சிருந்ததே இல்ல” என்றான்.
சாமிக்கு மனைவியின் ஞாபகம் வந்தது. வீட்டில் இருக்கும் போது தூங்காமல் யாருட னாவது கதை பேசிக்கொண்டிருந்தால் சத்தம் போடுவாள். “ராவுல தூங்காம அப்டி என்ன பேசிட்டு இருப்பிங்க?” என்பாள்.
சோதனைச் சாவடி வந்ததும் இடது ஓரத்தில் நிறுத்திவிட்டு சீனியைப் பார்த்து, “வண்டிலயே இரு வந்துர்றேன்” என்று சொல்லிக்கொண்டே காக்கிச்சட்டையை மாட்டிக்கொண்டு காவல் வாகனத்தை நோக்கிப் போனார். எதுவும் பேசாமல் வாகனச் சான்றிதழைச் சரி பார்த்த காவலர், “வண்டிய விட்டு இறங்கினாதான் சட்டை போடுவீங்களோ?” என்றார். “இல்ல சார் புழுக்கமா இருந்தது” என்ற சாமியை நோக்கி “நாங்க என்ன ஏசி லயா நிக்கிறோம்? சரி போ” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.
இருக்கைக்கு வந்த சாமியோடு சீனி பேசவில்லை. “ஏலே சீனி… நீ வேணா படிச்சி போலீஸ் ஆகிறேன்” என்றார் முகத்தில் சிரிப்பு மலர. “அதுக்கு கோவம் வரணும்ண்ணே. எனக்கு கோவமே வரமாட்டேங்குதுன்னு அம்மா சொல்லும்” என்று அவன் முடிக்கும் முன்பே சாமிக்கு பையனின் ஞாபகம் வர, அலைபேசியை எடுத்துப் பார்த்தார். அதில் மிஸ்டு கால் ஒன்றும் இல்லை.
சீனிக்குத் தூக்கம் வருவது போல இருந்தது. வண்டியின் வேகத்தில் உள்ளே வரும் குளிர்காற்று முகத்தில் பட்ட சுகத்தில் கண்கள் சொக்க சாமியைப் பார்த்தான். “நாங்கதான் இப்படிக் கிடந்தது அல்லாடுறோம். ஓனர் போகச் சொன்னா, நீ முடியாதுன்னு சொல்லி இருக்கலாம்ல?” என்றார்.
“செட்ல இருந்ததுக்கே நூறு ரூபா குடுத்தாரு ண்ணா. வண்டில போனா இன்னும் அதிகமா குடுப்பாருன்னு வந்துட்டேன்” என்றான்.
“காச வாங்கி உங்கம்மாகிட்டதான குடுக்கப் போற?” என்ற சாமியைப் பார்த்து “இல்லண்ணா, லீவு முடியறவரைக்கும் வேலைக்குப் போய்க் கிடைக்கிற காசைச் சேர்த்து சைக்கிள் வாங்கணும்ண்ணா, பள்ளிக்கூடம் போறதுக்கு” என்ற சீனியின் குரலை சாமி கவனித்தார். அதில் சொந்த உழைப்பில் சைக்கிள் வாங்கி ஓட்டப்போகும் பெருமிதம் மிளிர்ந்தது.
அந்தப் பெருமிதம் கண்டு மகன் வந்தவுடன் அவனிடம் என்ன பேசவேண்டும் என்ற முடிவிற்கு சாமியும் வந்திருந்தார்.
Comments (0)