திரை விமர்சனம்

அறிவியல் ரீதியாகச் சொல்லும் கதைகளை விட, திரைக் கலைஞர்களுக்குச் சுலபமானதும், பெருவாரியான ரசிகர்களுக்குச் சுவையானதுமானவை, அமானுஷ்யம் கலந்து  சொல்லும் கதைகளே. நிரூபிக்க வேண்டிய அவசியமில்லாது, தகவல்களைக் கடத்தினால் மட்டும் போதும் என்கிற நிலையில், திரைமொழியில் இது ஒரு புதிய உத்தி. 

இந்த உத்தியில் உதித்ததுதான், ரவீந்திரன் ரா. பிரசாத் எழுதி இயக்கி, நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள பூமிகா. ‘புவியை நாம் பாதுகாத்தால், அது நம்மைப் பாதுகாக்கும்’ என்கிற கருத்தைக் கொண்ட ஒற்றை வரிதான் மொத்த கதையும். 

ஒரு நள்ளிரவில் கர்ப்பிணி மனைவியுடன் பேசிக்கொண்டே காரைச் செலுத்தும் கேப் டிரைவர் கிருஷ்ணா (ஈஸ்வர் கார்த்திக்) விபத்தில் இறக்கிறான். மறுநாள் மலைப்பாங்கான பகுதியில், மரம் செடி கொடிகள்  அடர்ந்த வெளியை வெட்ட வெளியாக்கி, அமைச்சரின் ஒரு திட்டத்தை நிறைவேற்ற கௌதம் (விது), சம்யுக்தா (ஐஸ்வர்யா ராஜேஷ்), குழந்தை சித்து (அய்யன் அபிஷேக்), காயத்ரி (சூர்யா கணபதி), அதிதி (மாதுரி) காரில் அங்குள்ள கைவிடப்பட்ட ஒரு கட்டடத்திற்கு வந்து, தங்குகின்றனர். உதவிக்குக் காவலாளி தர்மன் (பாவெல் நவகீதன்). அந்த நிமிடத்தில் இருந்து துவங்குகின்றன, திடுக்கிட வைக்கும் அசாதாரண நிகழ்வுகள், தேடல்கள்.

அமானுஷ்யம் கலந்த திரில்லர் உத்தியில் வெளியான, இயக்குனரின் ‘இன்மை’ படத்தைப் போன்றே, இதிலும் மர்ம முடிச்சுகளைப் படிப்படியாக அவிழ்த்துக் கொண்டே, நிகழ்விலும் பிளாஷ்பேக்கிலுமாகக் கதையை இறுதிவரை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நகர்த்திச் செல்லும் விதம் பாராட்டத்தக்கது. இயக்குனரின் இந்த உத்தி அவரின் பாணியாகவே தொடராமல் இருந்தால், முத்திரைக்கு  இலக்காவதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வழக்கம்போல் இயக்குனர் ரதீந்திரன் இதிலும், ஜேம்ஸ் லவ்லாக் எனும் பிரிட்டன் விஞ்ஞானியின் ‘கையா ஹிப்போதீசிஸ்’ எனும் சயின்டிஃபிக் தியரியை, புதிய விஷயமாக அறிமுகம் செய்து, ரசிகர்களின் சிந்தனைக்குத் தீனி இடுகிறார்.  

அவந்திகா வந்தனாபு ஆட்டிஸ சிறுமியாக, படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். உடல் மொழியே முழு மொழியாக, பூமிகா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதே தெரியாத அளவிற்கு இயல்பாக மிளிர்கிறார். கதை நடிகர்களைத் தேர்வு செய்துள்ளதால்,  ஐஸ்வர்யா ராஜேஷ், பாவெல் நவகீதன் தவிர மற்றவர்கள் அறிமுகக் கலைஞர்களாக இடம்பெற்றுள்ளது, எந்த விதத்திலும் கதை நகர்வுக்கு இடறலாக இல்லை. அடுத்து, பூமிகாவின் கதையை ஒட்டி, பூமியை அழகாகவும் அழுத்தமாகவும் உருவகிக்கும் காவல்காரர் தர்மன் கவனத்தைக் கவருகிறார். 

ஒரு சைக்காலஜிஸ்ட் என்கிற மனநிலையோடு, உறுதியுடன் பிரச்சனைகளை அணுகும் பாத்திரத் தன்மையை அழகுற வெளிப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ், பேசிய வார்த்தைகளில் அதிகமாக உச்சரித்தது, ‘என்னாச்சு? ஏன், என்னாச்சு? சூர்யா கணபதி, விது அந்தச் சூழலுக்கு இன்னும் கூடுதலான அளவு ரியாக்ட் செய்திருக்கலாம். அதிதியின் ரியாக்சன் சற்று அதீதம்.

பிரித்வி சந்திரசேகரனின் இசை, கதைக்குப் பக்கபலம் மட்டுமல்ல, பக்கா பலமும் கூட. இதற்குச் சற்றும் குறையாத உழைப்பை ஒளிப்பதிவாளர் ரோபோர்டோ ஜஜ்ஜாரா வழங்கியுள்ளார். பூமிகா வரையும் ஓவியங்களாகட்டும்,  அவள் உலவும் இயற்கை அழகு ததும்பும் இடங்களாகட்டும், ஒளியும் வண்ணமும்  தெறித்து விழுகின்றன. ஓவியங்கள் அத்தனையும் அருமை. கலை இயக்குநருக்கும் ஓவியர்களுக்கும்  பாராட்டுகள். ஆனந்த் ஜெரால்ட்டின் படத்தொகுப்பு சற்று சவாலானதுதான். படத்தின் முன் பகுதியில் சற்று வேகத்தைக் கூட்டி இருக்கலாம் அல்லது நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

“பூமிகா யாரு? அது பூமிங்க. இந்த பூமி கிதே பூமி, அது ஒவ்வொரு நிமிஷமும் நம்ம கிட்ட பேசுது. அது தெளிவா சொல்லுதுங்க, என்ன தெரியுங்களா? ‘என்ன காப்பாத்திக்க எனக்குத் தெரியும், முடிஞ்சா எங்கிட்ட இருந்து உங்கள காப்பாத்திக்குங்க’. அவ கொஞ்சம் சிலிர்த்தாலும் ஒருத்தரும் தாங்க மாட்டீங்க ” என்று சொல்லும், தெள்ளத்தெளிவாக அந்தப் பகுதியின் வரலாறு தெரிந்த தர்மனிடம், இவர்கள் எதையும் விசாரிக்காதது, சற்று வியப்பைத் தருகிறது .

அமானுஷ்யம் என்று வந்து விட்டாலே, ‘லாஜிக்’ பார்க்க முடியாதுதான். என்றாலும் அதற்குள்ளாகவே, அதற்கென்று இருக்கக்கூடிய லாஜிக்கும் கூட ஆங்காங்கே சறுக்குகிறது.  மீண்டும் இடைஞ்சல் தருவதாகக்  கருதி, அவர்களை அங்கிருந்து விரட்ட முனையும் பூமிகா, அவர்கள் காரில் கிளம்பிச் செல்ல முடிவெடுத்தபின் நிறுத்துவானேன்? அப்படி காரை நிறுத்த முடிந்த பூமிகாவால், ஐஸ்வர்யா ராஜேஷ் செல்லும்போது, அவ்விதம் நிறுத்த முடியாமல் பின்தொடர்ந்து ஓடுவானேன் . அப்பள்ளத்தாக்கில் கட்டுமானப்  பணியில் இருந்தவர்களைத் தவிர்த்து, மாணவர்களையோ ஆசிரியர்களையோ பூமிகா பாதிக்காத நிலையில், மவுண்ட் ரோஸ்யார்ட்  பள்ளியை மூட வேண்டிய அவசியமோ, அப்பகுதி மக்கள் இடம்பெயர வேண்டிய அவசியமும்தான் ஏனோ?

‘பாராநார்மல்’ செயல்பாடுகளுக்கு,  மிதமானது முதல் மிக அதிகமானது வரையிலான நிலநடுக்கம், நிலச்சரிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி இருந்தால், அவரவர்கள் பார்வையில் அவை அமானுஷ்ய நம்பிக்கையாகவும், அறிவியல் பூர்வ உண்மையாகவும், ஏற்புடையதாக அமைந்திருக்கக் கூடும்.

ஒரு உத்தியாகக்  கொண்டுள்ள அமானுஷ்யத்தில்,

இந்த லாஜிக் தேடல்களை எல்லாம் சினிமா லிபர்டியாகக் கொண்டு விட்டுவிட்டு, புவி சமநிலையை வலியுறுத்தும் அக்கறையுடன், “என்னிக்குப்  பாலை மட்டுமே குடிக்க வேண்டிய குழந்தை, பெத்தவ மார்பைத் தின்ன ஆரம்பிக்குதோ, அன்னிக்குத் தாய்,  பேயா மாறிடுவா” என்கிற கலை வடிவான, அழுத்தமான, திரை வடிவச் செய்திக்காகவே ரதீந்திரனின் பூமிகாவை வரவேற்கலாம்.

விமர்சனம்: மது ராஜேந்திரன்

மதிப்பெண் : 7/10


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *