கவிதைகள்
மயில் குட்டி
ஒளியை உள் வாங்கிய
மகிழ்வுந்தின் கண்ணாடியொன்று
கம்பி மயிலுக்குக் கதவு திறந்திட
அது கருக்கொண்டு
வெண்சுவரில் பிரதிபலித்தாடுகிறது
அது கண்டு
சிறு திடலென மேடு கண்ட
தன் வயிற்றில் குறுகுறுத்த
குட்டி மயிலை விரல் பூசி
வண்ணம் செய்கிறாள்
தோகதவதி
வன்மம் களைந்த மெய்
மொழி தவிர்த்த துக்கம்
சில உடைந்து
வெளிக்கொணராமல் இருக்க
இறுகிய குரல்வளை
கயிற்றை அறுத்தெறிய
தேவையாக ஒரு
குளியலறை கிட்டியது
பொதுபொதுவெனக் கொட்டிய
நீர் தாங்கிய குழாயினைத்
திறக்கும் ஓசையில்
அடித்துச் செல்லப்பட்ட
விழி நீரும்
உடைந்த வார்த்தைகளும்
‘ஓ’வெனச் சிதறிய
மன இரைச்சலும்
மறுசுழற்சி செய்த பின்
ஒரு குளிர் தேகம்
வெற்றுடலுடன் கடந்து வருகிறது
வன்மத்தை
வாழைக்காய்ப் படகோட்டி
வியாழக்கிழமைச் சந்தையில்
அப்பா
பச்சை நிறப் படகு
ஒன்று வாங்கி வந்தார்
அது அண்டா தண்ணியில்
பத்திரமாக இறக்கப்பட்டது
நிசப்தத்தில் அது
ஒரே இடத்தில் நிலைகொண்டது
செம்பு கொண்டு
அம்மா நீரெடுக்கையில்
அலை மோதி அவள்
கை தொட்டது
அதை விரலால் குத்தி
மூழ்கச் செய்து பார்த்தான்
அண்ணன்
அன்றிரவு என் கனவில்
ஆளில்லாப் படகில் நான்
ஏறிக்கொண்டேன்
அது குதித்துக் குதித்து இப்போது
ஒரு சுறா மீன் ஆனது
இறுகப் பற்றிக்கொண்டு
நீர் சூழப் பயணித்தேன்
படாரென்று
பத்துத் தலைப் பாம்பாகியது
வாலைப் பிடித்து
சறுக்கு மரம் போல் ஏறினேன்
உந்தி ஏறுகையில்
கடற்குதிரையானது
வசமான முதுகு இல்லாததால்
அதன் பிடரி சதையைப்
பிடித்திழுத்தேன்
பிடியகல விடாததால் அது
எனையொரு பெருங்கடலில்
இறக்க நினைத்தது
போகும் நதி
கடல் சேரும் முன்
கை மாற்றப்பட்டது
இப்போது என் சாயலில்
ஒரு யுவதி அதை இயக்கி
வீட்டுப் பாத்திரத்தில் போடுகிறாள்
கரத் துடுப்பு
- சிவகாமி சரவணன்

சுவடு மன்சூர்
June 8, 2023மிக அருமை.. வாழ்த்துகள் கவியே..
சுதர்சனம்.E.S
June 15, 2023அருமை!
வாழைக்காய் படகோட்டி!👍👏👏
Arjun Karthik
June 30, 2023Beautiful written…!!