1947

எழுபத்தைந்தைக் கடந்த வயதெனக்கு
யுத்த மகள் என்பார்கள் என்னை
பெரிய யுத்தத்திற்குப் பின்னால் நானும்
எங்கள் சேக்காளிகளும் பிறந்தோம்
பிறந்ததும் எங்களைச் சொந்தம் கொள்ள
ஆலை அதிபர்களுக்கும் பண்ணையார்களுக்கும்
கொள்ளை ஆசை

1948

எனக்கும் வயதாகிவிட்டது
பிறக்கும்போது சவலைப் பிள்ளையாக இருந்தாலும்
இப்போது கொழுத்துத் திரிகிறேன்
இப்போதெனக்குத் தோழர்கள் அதிகம்
என்னை அன்று சவலை ஆக்க
முயன்றவர்களை எல்லாம்
இல்லாமல் ஆக்கியோ
அல்லது கூட்டாளி ஆக்கியோ
நான் ஊதி இருக்கிறேன்

1950

நான் நாற்பத்தேழுக்கும் நாற்பத்தெட்டுக்கும் இளையவள்தான்
என்னை ஜனநாயகத்தின் மகள் என்றார்கள்
சமதர்மத்தின் தங்கை என்றும் சொல்லி மகிழந்தார்கள்
நானும் – என்னைக் கொஞ்சிய
கோடானுகோடி பங்காளிகளும்
பூரித்துப் போனோம்
ஆனால் எங்களுடன் நாற்பத்தெட்டும் இருந்தது
நாங்கள் நானாவிதப் பிரிவினராக இருந்தோம்

1960
நாங்கள் ஐம்பதுகளின் பிள்ளைகளால்
அவர்களுக்காக உருவானோம்
ரயிலடிகளாக, சாலைகளாக, ஆலைகளாக,
நவநவ எந்திரங்களாகப் பரவிக் கிடந்தோம்
நாற்பத்தெட்டு எங்களுக்குள் தலைகாட்ட வழியில்லை
என்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டோம்

1975
நாங்கள் 25 வயதான ஐம்பதுகள்தான்
ஆனால் நாங்கள் சொன்னதே ஜனநாயகம்
நாங்கள் சொல்வதே சமதர்மம்
நாற்பத்தேழில் வந்தவர்களைச் சத்தமில்லாமல் செய்தோம்
நாறபத்தெட்டையும் மிரட்டி வைத்திருந்தோம்

1977

நாற்பத்தேழின் நாயகர்களும்
நாற்பத்தெட்டின் நாயகர்களும்
சேர்ந்து கொண்டோம்
ஐம்பதை அடக்கி வைக்க
அச்சாரம் போட்டோம்
ஆஹா என்றெழுந்தது பார் யுகப் புரட்சி
ஐம்பது ஆடிப் போனது

1980

நாற்பத்தேழு வளர்வதை
நாற்பத்தெட்டு பொறுக்கவில்லை
கழன்று கொண்டது
மீண்டும் ஐம்பது செங்கோல் பிடித்தது

1990

உலக பூதம் வீட்டுக்குள் வந்தது
தொலைத் தொடர்புக் கூட்டாளியும் வந்தது
பூதத்தை ஆண்டவர்கள்
ஆள்பவர்கள் ஆனார்கள்
பூதங்களை நிறுவனங்கள் என்றார்கள்
பூதங்களுக்கு நாற்பத்தெட்டும்
ஐம்பதும் தலையாட்டின
தங்களுக்கு யார் வேண்டும் என்பதை
பூதங்கள்தான் தீர்மானித்தன

2014

பூதங்கள் நாற்பத்தெட்டை
நல்ல நண்பன் ஆக்கிக்கொண்டன
இப்போது அப்படியும் இப்படியுமாக
ஐம்பதைப் பிரித்துப் போட்ட பிறகு
நாற்பத்தெட்டு ஊதிவிட்டது

2024

நாற்பத்தெட்டுக்கு சவால் விட
ஐம்பது, அறுபது எல்லாம் தயார்
ஆனால் பூதங்கள் சிரிக்கின்றன
சோழி உருட்டுகின்றன
நாற்பத்தெட்டா? ஐம்பதா?

ஆமாம்.. நாற்பத்தேழுக்கு என்னவாயிற்று..?

  • செந்தூரான்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *