பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

நா. முத்துக்குமார் பிறந்தநாள் நினைவுக் கவிதை

சிறகு முளைத்த சிறிய காலங்களில்
வான் உயரப் பறந்த உன்னை
இன்னும் பாடலில்தான் தேடுகிறோம்
பறவையே எங்கு இருக்கிறாய்?

கணையாழியில் ‘தூர்’எழுதி
சுஜாதா காதல் கொண்டு
மென்பூவாய் மேல் வந்த
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

அம்மையை எழுதி எழுதி
அப்பனுக்குப் பிள்ளையாகி
‘ஆனந்த யாழை’ மீட்டிய
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

‘அணில் ஆடும் முன்றிலில்’
மகனுக்குக் கடிதம் எழுதிவிட்டு
அத்தைகளின் உலகம் போன
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

‘தெய்வங்கள் எல்லாம்
தோற்றே போகும்’தான்
உன் மகன் உனக்கு எழுத என்ன செய்வான்?
வார்த்தைகளையாவது சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

எழுத்து பழகி எங்களைப் பழகி
சத்தம் இல்லாமல் அதிகாலை முத்தம்போல் கடந்த
உன் காதல் கவிதைக்குத் துணை தேடுகிறோம்
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

‘உனக்கொரு தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்’ என்று சொன்னாயே
உன் தாலாட்டில் நாங்கள்
ஆண் தாயாக உறங்குகிறோம்
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

‘வெயிலோடு உறவாடி’ பால்யத்தையோ சொன்னாய்
வேறெங்கு உனக்கு உறவு?
வா விளையாடுவோம்
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

‘விழிகளில் ஒரு வானவில்
இமைகளைத் தொட்டுப் பேசுதே’ என்றாய்
நீ இல்லாமல் சிறு புல்லின்மீது விழுந்த
பனித்துளியாய் இருக்கிறோம்
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

“கனாக் காணும் காலங்கள்’ இல்லாமல்
இனி காதலிக்க முடியுமா இந்தத் தலைமுறை?
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

‘உனக்கென இருப்பேன்’ என்று முடித்திருக்கலாம்
‘உயிரையும் கொடுப்பேன்’ என்றாய்
‘வார்த்தைகள் இல்லை என்றால்
உன் மவுனங்கள் போதும்’ என்ற
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

‘சுற்றும் விழிச் சுடராய்
‘மண்ணை உண்ணும் பூக்கள்’ வரைந்த உன்னை
விழுங்கிய உலகில் தேடுகிறோம்
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

‘ஒரு பாதி கதவு நீயடி’ என்று
தாண்டவம் ஆடிய
பறவையே நீ எங்கு இருக்கிறாய்?

“உன் பேரைச் சொல்லும்போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்..
உன்னோடு வாழத்தானே எந்நாளும் போராட்டம்’ என்ற
பறவையே
இன்னும் கொஞ்சம்
போராடியிருக்கலாம் அல்லவா?

  • முத்து ஜெயா

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *