கவிதை

இரங்கற்பா
எழுதிக்கொண்டிருக்கிறேன்
விரைவில் வந்துவிடும்
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

மலர் மாலைகள்
தயார் செய்ய நேரமாகலாம்
வேம்பு நிச்சயம் இருக்கும்
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

ஆயிரம் முதலைகள்
உடனே ஒப்புக்கொண்டுள்ளன
போட்டியில் கலந்துகொள்ள
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

வண்ணக் கோலாட்டம்
மிதமாகத் தோன்றலாம்
பறை அடித்து விளையாட
குத்தாட்டம் வரும்
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

தள்ளிப் போகுமோ
கவலை வேண்டவே வேண்டாம்
முகச் சவரமும் உடன் செய்வார்
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

தண்ணீர்ப் பானைக்காகத்
தேடி அலைய வேண்டாம்
தோளை வலுவாக வைத்து
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

என்ன!
வாய்க்கரிசிக்கும் வழியில்லையா? அடடா!
சரி, அதையும் நாங்களே தருகிறோம்
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

முறையாகச் செய்ய வேண்டிய
காரியங்கள் தெரியுமா?
இல்லை, அதுவும் எங்கள் வேலையா?
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

ஐந்தாம் நாள், மாதக் கணக்காவது
முடியுமோ என்னவோ.. பரவாயில்லை
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

கழுத்து நெரிபட்டுக்கிடந்த
சனநாயகம் இறந்த நேரமாவது
சரியாகக் குறித்தீரா சோதிடரே
பாவம் அந்தப் பச்சை மண்ணை
இனியாவது பிரித்துப் பார்க்காமல்
வலியின்றி அடக்கம் செய்வோம்

விரைந்து வருகிறது எல்லாம்
எங்கும் போய்விடாமல்
அங்கேயே இருங்கள்

  • நடராஜன் பெருமாள்

Comments (3)


Sunitha Manikandan
Sunitha Manikandan
August 22, 2023

நாம் எல்லோரும் இங்கேயாதான இருந்தாக வேண்டும். சாட்டையடி வரிகள்.

Anita Srikanth
Anita Srikanth
August 22, 2023

//கழுத்து நெரிபட்டுக்கிடந்த
சனநாயகம் இறந்த நேரமாவது
சரியாகக் குறித்தீரா சோதிடரே
பாவம் அந்தப் பச்சை மண்ணை
இனியாவது பிரித்துப் பார்க்காமல்
வலியின்றி அடக்கம் செய்வோம்//

வரிகளை படிக்கும் போது என்னவோ பண்ணுது…

அருமையான கவிதை…

மங்கையர்க்கரசி
மங்கையர்க்கரசி
August 22, 2023

நிதர்சனமான கருத்துகள். குடியரசைக்‌ கொன்றுவிட்டு கொடியேற்றம் செய்வதென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *