சரித்திரப் பயணத்தில் சந்திரயான் 3
இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் அனைவரும் இன்றைய மாலைப் பொழுதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஜூலை 14 அன்று நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், நிலவில் தரையிறங்கவுள்ளதைக் காணவே இத்தனை ஆவல் நிலவுகிறது.
கற்பனையில் நிலவைப் பாடிக்கொண்டிருந்த காலத்தை மாற்றியது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் அது மிகையில்லை. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஏற்கனவே சந்திரயான் 1 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தாலும் சந்திரயான் 2, தன்னுடைய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் 40 நாள் பயணம் இன்று நிறைவடைகிறது. சந்திரயான் 1 நிலவின் வட துருவத்தில் தரையிறங்கியது. ஆனால் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இதனால், நிலவின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், சந்திரயான் 3க்கு முன்னதாகவே நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் அது நிலவில் மோதி நொறுங்கியது. எனவே, சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கப் போகும் அந்த இறுதி நிமிடங்களை உலகமே உற்றுநோக்குகிறது.
சந்திரயான் 3 விண்கலத்தின் 40 நாள் பயணம் 10 கட்டங்களாக நிகழ்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சிறிது சிறிதாக முன்னேறி நிலவை நெருங்கியுள்ள சந்திரயான் மூன்றின் பயணத்தின் படிநிலைகளைக் காண்போம்.
- விண்வெளிக்கு அனுப்புதல்: முதல் கட்டமாக, விண்கலமானது பூமியிலிருந்து விண்வெளிக்கு LVM3 லாஞ்சர் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட், பூமியிலிருந்து 170 கிலோமீட்டர் உயரத்துக்கு விண்கலத்தைக் கொண்டுசென்று சேர்த்தது.
- பூமியைச் சுற்றிவரச் செய்தல்: அடுத்ததாக, விண்கலத்துக்கு ஒரு உந்துசக்தி அளிக்கப்பட்டு அது ஒரு நீள்வட்டப் பாதையில் பூமியைச் சுற்றிவரச் செய்யப்பட்டது. இந்த நீள்வட்டப் பாதையானது பூமிக்கு அருகில் 170 கிலோமீட்டராகவும் பூமியிலிருந்து தொலைவில் 36500 கிலோமீட்டராகவும் இருந்தது. இந்தச் நீள்வட்டச் சுற்றுப்பாதையில் விண்கலம் பூமியைச் சுற்றி வந்தது.
- சுற்றுவட்டப் பாதை உயரத்தை அதிகரித்தல்: மூன்றாவது கட்டத்தில் பூமியைச் சுற்றிவரும் விண்கலம் ஒவ்வொருமுறை பூமியை நெருங்கும்போது அதற்கு உந்துசக்தி வழங்கப்பட்டு, சுற்றுவட்டப் பாதையின் உயரம் சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டது. இந்தச் செயல்பாடு, கவணைச் சுழற்றிக் கல்லை உயரமாக எறிவதற்கு ஒப்பாகும். சுமார் 20 நாட்கள் இந்தப் பணி நடைபெற்றது.
- ஈர்ப்புவிசை சமநிலைப் புள்ளிக்கு விண்கலத்தைக் கொண்டு செல்லுதல்: புவியீர்ப்பு விசையைப் போன்றே நிலவுக்கும் ஈர்ப்புவிசை உண்டு. இந்த நான்காவது கட்டத்தில், பூமியின் ஈர்ப்பு விசையும் நிலவின் ஈர்ப்பு விசையும் சந்திக்கும் புள்ளிக்கு விண்கலத்தை நகர்த்தும் பணி நடைபெற்றது. இந்த ஈர்ப்பு விசை சமநிலைப் புள்ளியானது சுமார் 62630 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
- ஈர்ப்பு விசை சமநிலைப் பயணப் பாதையை ஒழுங்குபடுத்துதல்: பூமி, சந்திரன் இரண்டுமே தொடர்ந்து சுழன்றுகொண்டே இருப்பதால், அவற்றின் சுழற்சி வேகம், விண்கலத்தின் பயணப்பாதை இரண்டையும் கணித்து, ஈர்ப்பு விசை சமநிலைப் பாதையில் விண்கலம் சுற்றிவரும்படி அதன் பாதையை ஒழுங்கு செய்யும் பணி இந்தக் கட்டத்தில் நடைபெற்றது.
- சந்திரனின் ஈர்ப்பு விசைப் பகுதிக்கு விண்கலத்தை நகர்த்துதல்: ஈர்ப்பு விசை சமநிலைப் புள்ளியை அடையும்வரை விண்கலமானது பூமியின் ஈர்ப்பு விசையில் இருக்கும். ஈர்ப்புவிசை சமநிலைப் புள்ளியில் விண்கலம் மீதான பூமி மற்றும் சந்திரன் இரண்டின் ஈர்ப்புவிசையும் சம அளவில் இருக்கும். ஆறாம் கட்டத்தில், விண்கலத்திற்குச் சந்திரனை நோக்கி சிறிய அளவிலான உந்துசக்தியை அளித்து, சந்திரனின் ஈர்ப்பு விசைப் பகுதிக்கு விண்கலம் நகர்த்தப்பட்டது.
- நிலவைச் சுற்றிவரச் செய்தல்: இந்தப் படிநிலையில், இரண்டாம் கட்டத்தில் எவ்வாறு விண்கலம் பூமியைச் சுற்றிவரச் செய்யப்பட்டதோ, அதேபோல, விண்கலமானது ஒரு நீள்வட்டப் பாதையில் நிலவைச் சுற்றிவரும்படி செய்யப்பட்டது.
- விண்கலத்தின் தரையிறங்கும் பகுதியைப் பிரித்து நிலவுக்கு நெருக்கமாகச் சுற்றிவரச் செய்தல்: விண்கலத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. அடிப்பகுதியில் விண்கலத்தை உந்தித் தள்ளும் கலனும் (propeller) மேல் பகுதியில் தரையிறங்கும் கலனும் (lander) பொருத்தப்பட்டுள்ளன. இந்த எட்டாவது கட்டத்தில், இவற்றைத் தனித்தனியே பிரித்து, தரை இறங்கும் கலன் மட்டும் நிலவுக்கு நெருக்கமான – அதிகபட்சம் 100 கிலோமீட்டர், குறைந்தபட்சம் 30 கிலோமீட்டர் – தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றிவரச் செய்யப்படும்.
- லேண்டரைத் தரையிறக்குதல்: இந்தக் கட்டத்துக்காகத்தான் நாம் அனைவரும் இன்று ஆவலாகக் காத்திருக்கிறோம். இந்தக் கட்டச் செயல்பாடு வெறும் 15 நிமிடங்களில் நிறைவேற்றப்படும். நீள்வட்டப் பாதையில் நிலவைச் சுற்றிவரும் லேண்டரைப் படிப்படியாக நிலவில் தரையிறக்க வேண்டும். நிலவில் வளிமண்டலம் இல்லை என்பதால் இது மிகவும் சவாலான பணி ஆகும். லேண்டரின் கால்களில் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டுகளை இயக்கி, அதன் வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து, நிலவில் மெதுவாகத் தரை இறங்கச் செய்யவேண்டும். ஒருவேளை மேடுபள்ளமான இடங்களில் லேண்டரைத் தரையிறக்கினால் அது கவிழ்ந்துவிடக் கூடும். எனவே விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீனக் கேமிராக்கள் அனுப்பும் படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அந்த இடத்தின் தன்மையைக் கணித்து, விண்கலத்தைத் துல்லியமாகத் தரை இறக்க வேண்டும்.
- ரோவரை நிலவில் இறக்குதல்: மேற்சொன்ன ஒன்பது கட்டங்களையும் கடந்து, இந்தப் பத்தாவது கட்டத்தில் லேண்டரின் சுவர்களில் ஒன்றைத் திறந்து, அதனைச் சரிவுப் பலகை போல அமைத்து, லேண்டரின் உள்ளே இருக்கும் ஊர்திக் கலனை (rover) மெதுவாக நிலவில் தரையிறக்க வேண்டும். லேண்டரானது நிலவின் தரை மட்டத்திலிருந்து சுமார் 10 மீட்டர் உயரத்திலிருந்து நொடிக்கு 2 முதல் 3 மீட்டர் என்ற வேகத்தில் நிலவின் மீது விழச் செய்யப்படும் (மூன்று மாடிக் கட்டடத்திலிருந்து குதிப்பதைப் போல). இதனால் நிலவின் தரைப் பகுதியிலிருந்து தூசி மற்றும் புழுதி கிளம்பக்கூடும். அதை லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமிராக்கள் மூலம் கண்காணித்து, புழுதி அடங்கிய பின்னர் லேண்டரின் சுவர் திறக்கப்பட்டு, ரோவர் தரை இறக்கப்படும். இந்த ரோவர், நிலவின் தரைப்பகுதியில் சுற்றி வந்து ஆய்வு செய்து நிலவைக் குறித்த செய்திகளையும் படங்களையும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவைக்கும்.
பெரும் சவால்களைக் கடந்து, எட்டாவது கட்டப் பயணத்தை இன்று நிறைவு செய்யவுள்ள சந்திரயான் 3 விண்கலம், தனது பயணத்தின் 9 மற்றும் 10ஆம் கட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்து, இந்தியாவின் அறிவியல் வலிமையை உலகிற்கு உணர்த்தும் நாளாக இந்த நாள் அமையட்டும். சந்திரயான் 3 திட்டத்தில் பங்காற்றிய அறிவியலாளர்கள் உள்ளிட்ட இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
உமாமகேஸ்வரி.சு
August 23, 2023மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
உலகமே உற்றுநோக்குகிறது.
சிறப்பான தொகுப்பு தோழர்.
piriya
August 23, 2023சந்திராயன்3 குறித்த அருமையான, விளக்க கட்டுரை..