காட்சி 11

காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்
இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.
பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.
(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)
வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..
(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி முடிகிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள்)
வ.வே.சு.அய்யர் : (கம்பை நழுவவிட்டவரைப் பார்த்து) கண்ணுப்பிள்ளை, நன்றாகத்தான் மோதினாய்.. இதுவரை உன்னைக் கவனித்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நல்ல தேர்ச்சி தெரிகிறது. ஒரு சிறு கவனப் பிசகு. ராகவனுக்குப் போதும்; உன்னை வீழ்த்திவிட்டான். (வென்றவனைப் பார்த்து) ராகவா, லாகவமும் நேரக்கணிப்பும் கவனத்தில் நன்றாக வைத்துக்கொள்கிறாய்.. நல்லது.

இன்று புதிய சகோதரர் நம்மிடம் வந்திருக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர். பெயர் வாஞ்சிநாதன்.
அனைவரும் : வணக்கம் (வாஞ்சிநாதனைப் பார்த்து கும்பிடுகிறார்கள்)
வாஞ்சிநாதன் : (நெகிழ்ந்து போய்) வணக்கம். (கும்பிடுகிறார்)
வ.வே.சு.அய்யர் : அனைவரும் தர்ம இல்லத்திற்கு வந்து சேருங்கள். அங்கே நமது கூட்டம் நடக்கவிருக்கிறது.
(மேடையில் இருள் பரவி, ஒளி வரும்போது தர்ம இல்லத்தில் சபை கூடியிருக்கிறது)
வ.வே.சு.அய்யர் : நாகசாமி, நீங்கள் இன்று சபைக்கு அக்கிராசனம் செய்து சபையை நடத்துங்கள்.
நாகசாமி : சகோதரர்களே, இந்த பாரத பூமியின் புதல்வர்களாகிய நம்மைக் கீழ்மைப்படுத்துவதற்கான காரியங்களை வெள்ளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் உச்சக்கட்டமாக மிலேச்ச அரசன் ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்கிற வைபவத்தை இந்தியாவிலும் தர்பார் நடத்திக் கொண்டாடப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்த தேசத்தின் பெரியவர்கள் வெஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பரங்கிப் பஞ்சமன் முடிசூட்டிக்கொள்வதைக் கொண்டாடுவார்களாம்.. நாம் பார்த்துக்கொண்டிருக்க வேணுமாம்.

பொழுதெல்லாம் எங்கள் செல்வங்கொள்ளை கொண்டு போகவோ?
– நாங்கள் சாகவோ?
அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ?
– உயிர் வெல்லமோ?
நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ?
– பன்றிச் சேய்களோ?

என்று சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை செக்கடியில் நொந்துகொண்டிருக்கிறார். நாம் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் ஏன் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்று பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மேற்கொண்டு அய்யர் பேசுவார்.

வ.வே.சு.அய்யர் : ஸ்ரீமான் பிள்ளை சிறையில் வாடுவதைப்பற்றி கல்லும் கரையும்வண்ணம் பாரதியார் பாடிவைத்தார்.

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி – இரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?

என்று பாரதியார் பாடியிருப்பதை நினைவுகொள்ளுங்கள்.
பிரான்ஸ் நாட்டில் இருக்கிற நமது தலைவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜார்ஜ் முடிசூட்டு விழா நாளில் நாம் நம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அவன் இந்த நாட்டில் கால் வைக்கும் வேளையில் நாடெங்கிலும் உள்ள பரங்கி அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.
பரங்கியரைக் கொல்வது பாவம் அன்று. இது போன்று ஒரு திட்டத்தை இங்கிலாந்தில் நானும் சாவர்க்கரும் வெற்றியாக்கினோம். சாவர்க்கர் இப்போது பம்பாய் தாணா சிறையில் இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்துகிறேன்.

‘தனிநபர் படுகொலை அந்நிய அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்யவும் மக்களை எழுச்சிகொள்ளவும் செய்யும். புரட்சியின் தொடக்கமாகத் தனிநபர் கொலைகள் இருக்கும்’ – என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார்.

நம் தமிழ்நாட்டிலும் நமது இயக்கத்தில் நாம் 3000 உறுப்பினர்கள் இருக்கிறோம். நமது இலக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்தான். தூத்துக்கடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூடிப்போவதற்குக் காரணமாக இருந்த இன வெறியன். நமது சங்கத்தின் உறுப்பினரும் மகத்தான தேசத் தொண்டருமாகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் துயரங்களுக்கும் இவனே காரணகர்த்தா.
இவனைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டு இயக்கத்தின் இரகசியத்தைக் காக்கும் தியாகமும் துணிச்சலும் கொண்டவரே இந்தப் பணியைச் செய்ய வல்லவர். நம்மில் அதைச் செய்யப்போகிற வீரர் யார்..? உடனே சொல்ல வேண்டியதில்லை. யோசித்துச் சொல்லுங்கள். இந்தத் தியாக வேள்வியில் தம்மையும் ஆகுதியாக்கி பாரத மாதாவின் பாதங்களில் வெற்றிக் காணிக்கை செய்யும் பாக்கியம் பெறப் போகிறவர் யார்..?
(வாஞ்சிநாதன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயல, வ.வே.சு. அய்யர் கையமர்த்தி)

யாரும் இப்போது எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நன்றாக யோசித்து மனத்தையும் சிந்தையையும் ஒருமுகப்படுத்தி அடுத்த கூட்டத்தில் தர்ம இல்லத்தில் கூடி முடிவு செய்யலாம். இப்போது இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.
(உறுதிமொழியை நாகசாமி சொல்ல, அனைவரும் உறுதி ஏற்கிறார்கள்)
(வாஞ்சிநாதனைப் பார்த்து) தம்பி, நீர் சில நாட்கள் நாகசாமி இல்லத்தில் தங்கியிருங்கள். கண்ணுப்பிள்ளை, நீ வாஞ்சியுடன் தங்கிக்கொண்டு அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் தினமும் காலையில் வருவேன். மாலையில் இந்த உடற்பயிற்சிக் கழகத்தில் சந்திக்கலாம். கூட்டம் முடிந்தது.

வாஞ்சிநாதன் : ஐயா, என் விடுப்பு முடிவதற்குள் நான் செல்ல வேண்டும். நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க நேரும்? நீலகண்டர் எப்போது வருவார்..? ஏதேனும் தெரியுமா?

வ.வே.சு. அய்யர் : நீர் எத்தனை நாள் விடுப்பில் இருக்கிறீர்?

வாஞ்சி நாதன் : ஒரு மாதம் ஐயா..

வ.வே.சு. அய்யர் : ஒரு வாரம் இருந்து பாருங்கள். அடுத்த கிழமைக்குள் நீலகண்டர் வரவில்லையெனில் நீர் செல்லலாம்.

(மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவும்போது ஓம்கார் அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்)

சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, ஒரு சந்தேகம். பல சமயங்களில் கேட்க நினைத்தேன். இப்போது அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்கலாமா..?

ஓம்கார் சுவாமிகள் : கேளுங்கள் தம்பி..

சங்கர கிருஷ்ணன் : நாகசாமி பேசும்போது இங்கிலாந்து அரசனைப் ‘பஞ்சமன்‘ என்று குறிப்பிட்டார் அல்லவா..?

ஓம்கார் சுவாமிகள் : ஆமாம்..

சங்கர கிருஷ்ணன் : பஞ்சமன் என்றால் நான்கு வருணத்திற்கும் கீழாக ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதானே பொருள்..?

ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.

சங்கர கிருஷ்ணன் : அப்படியானால் இந்தப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் சாதி பேதம் இருக்கத்தானே செய்தது..? சாதியின் பெயரால் சக மனிதனை இழிவாகப் பார்க்கும் பார்வையை இவர்கள் விட்டுவிடவில்லையே..?

ஓம்கார் சுவாமிகள் : கேள்விகள் முடிந்தனவா தம்பி..?

சங்கர கிருஷ்ணன் : இன்னும் இருக்கின்றன சுவாமிஜி. ‘இந்தப் புரட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு சாதியினராகிய பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார் என்ற வேளாளர்களாக இருக்கிறார்களே’ என்ற உறுத்தல் எனக்கு இருந்து வந்தது.
இப்போது புதுச்சேரிக்காரரான நாகசாமி ஐயர், இங்கிலாந்து அரசனைச் சாதியில் கீழானவன் என்ற பொருளில் அழைக்கிறார் என்பதால் இவர்களிடம் சனாதனம் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது தெரிகிறது. சாதி இழிவைப் பிறர்மீது சுமத்திக்கொண்டு இவர்கள் புரட்சி பேசியது எப்படி..?

ஓம்கார் சுவாமிகள் : நீண்ட கேள்விகள்.. இன்னும் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும். நானும் பிராமணன் என்பதால், நான் வருணாஸ்ரமத்தை நம்புகிறேனா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டுமே!

வாஞ்சிநாதன் தன்னைச் சுட்டுக்கொண்டபோது, அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்திலும் ‘ஜார்ஜ் பஞ்சமன்‘ என்ற சொல் இருந்தது. ‘அழியாத சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் செயலைச் செய்ததாக’ வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார்.

எங்கள் காலத்தில் இந்தத் தமிழ்நாட்டில் கல்வி வசதியைப் பெற்றிருந்தவர்கள் பிராமணர்களும் வசதியான செல்வந்தர்களாக இருந்த வேளாள சாதியினரும்தான். தாங்கள் பெற்ற கல்வியினால் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்கள் அவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இடத்திலும் அவர்களே இருந்தார்கள். அதே நேரத்தில், மதம் மாறிய பிற சாதியினருக்கு கிறித்தவம் கல்வி கொடுத்தது. கல்வி பெற்றதின் நன்றியுணர்ச்சி அவர்களை ஆங்கில அரசுக்கு விசுவாசிகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்த முரண்பாடு சனாதனிகளை அவர்களிடம் நெருங்கவிடவில்லை.

‘சனாதானம் என்பது மாறாதது.. அது படைப்பில் தீர்மானம் ஆகிறது’ என்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை. ‘எல்லாம் மாறக்கூடியதே.. பிறப்பின் காரணமாக மேல் கீழ் என்று சட்டம் வைத்துக்கொள்வது மனித இனத்தின் நாகரிகம் அல்ல’ என்ற புரிதல் எங்கள் காலத்தில் வந்துவிடவில்லை.

இந்து சனாதனிகள் அரசியல் விடுதலையைப் பேசினார்களே தவிர, சாதி சமயச் சடங்குகளை விட்டுவிடவில்லை. கீதை, பாரதம், இராமாயண மேற்கோள்களில் இருந்தே அவர்களின் வியாக்கியானங்கள் இருந்தன. திலகர், பாலர், சாவர்க்கர், வ.வே.சு.அய்யர் எல்லாருமே சனாதனத்தை முழுமையாக விட்டுவிடவில்லை. ஒரு சிலவற்றை விட்டிருப்பார்கள்.. ஆகவே நாகசாமி பேசிய சொற்களில் சனாதனம் தொனித்ததில் வியப்பு இல்லை.

பாரதியார் மற்றும் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் மட்டுமே சாதி மறுப்பைப் பேசியும் செயலில் காட்டியும் வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் சாதிக்காரர்களால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்கள். பாரதி, தன் மகள் கல்யாணத்தில் கலகம் செய்து விடுவாரோ என்று வைதிகம் பயந்தது. நான் பாரதியைப்போல சாதிச் சடங்குகளுக்கு எதிரானவனாகவே இருந்தேன். பாரதி சிதைக்குத் தீ மூட்டும் பாக்கியத்தை எனக்குத் தருவதற்கு முன்வந்தார்கள். சாதிச் சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியினால் நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன்.

சுதேசி இயக்கத்தை எல்லா சாதியினரும் நம்பினார்கள். அந்தத் தலைவர்களை, அவர்களின் செயல்பாடுகளை ஒரு கட்டம் வரை ஆதரிக்கவும் செய்தார்கள். காந்தியடிகளும் கம்யூனிஸ்ட்களும் தேச அரசியலில் வரும்வரை, சாதி என்ற தீமையைப் போக்க வேண்டும் என்பதில் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை.

ஆனால் நாளடைவில் எங்களில் பலர் சனாதனத்தை உதறினோம். அதை நிரூபிக்க எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அந்தத் தலைமைப் பாத்திரம் காந்தி யுகத்திற்குப் போய்விட்டது. ஆனால் உடல், பொருள், ஆவி அத்தனையும் தேச விடுதலைக்கு அர்ப்பணித்ததில் எங்களின் பாத்திரத்தில் எந்தக் கறையும் களங்கமும் சொல்ல முடியாது.

இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை.

சங்கர கிருஷ்ணன் : உங்கள் நீண்ட விளக்கத்தைச் சுருக்கினால், திலகர் வழியில் வந்த பலாத்காரப் புரட்சியாளர்கள் அனைவரும் சனாதனிகளே என்ற விடைதான் வருகிறது சுவாமிஜி.

(திரை விழுகிறது)

  • இரா. கோமதிசங்கர் – திருநெல்வேலி

Comments (6)


piriya

அக்கிராசனம் என்றால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுவதா சார். பிரித்தால் ஆசனம் என்றும் வருவதால் புரியவில்லை. விளக்கம் தாருங்கள்..

Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
August 25, 2023

அக்கிராசனம் என்றால் சபைக்கு தலைமை வகித்தல் என்று பொருள்.

piriya

ஓ! நன்றி..

Rasal

சாதி தலைத்தூக்கி, கல்வியால் தாழ்ந்தது.

Anita Srikanth
Anita Srikanth
August 25, 2023

கேள்விகளுக்கு ஓம்காரஸ்வாமிகள் தந்த பதில்கள் செமையா இருக்கு ண்ணா…
எவ்வளவு விஷயத்தை சொல்லி இருக்காரு…

உமாமகேஸ்வரி.சு
உமாமகேஸ்வரி.சு
August 25, 2023

கல்வி பெற்றதால் தான் தாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்று புரிந்து கொண்டனர்….
உரையாடல்கள் அந்தக் காலகட்டத்திற்கே
அழைத்துச்செல்கிறது ..
வரலாறு சூடு பிடிக்கிறது.,அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *