நீலகண்ட பிரம்மச்சாரி – 15
காட்சி 15
காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்.
இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)
பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர்.
ஆர்யா : நீலகண்டரே, சரணடையும் முடிவைக் கல்கத்தா போய் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..?
நீலகண்டர் : நான் இயங்கி வந்த இயக்கத்தின் நண்பர்கள் வங்கத்தில்தான் இருந்தார்கள். உண்மையில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். புதுச்சேரி நண்பர்கள் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று அறிந்திருந்தேன். அவர்களின் இலக்கு ஆஷ் என்பது தெரியாது.
புதுச்சேரியைவிட்டு வெளியேறிய நான், திருநெல்வேலிக்குச் சென்று தோழர்களைப் பார்த்து என் நிலைமையை விளக்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எத்தனைத் தவறாகப் போய்விட்டது..?!
என்மேல் அவர்களுக்கிருந்த சந்தேகங்களையேனும் நிவர்த்தி செய்திருக்கலாம். இந்தக் கொலையைப்பற்றித் தெரிய வந்திருந்தால் தடுக்க ஒரு முயற்சியும் எடுத்திருக்கலாம்.
ஆஷ் கொலையுண்டதைப் பத்திரிகைகளில் பார்த்த நான், என் பெயர் தேடப்படும் சதிகாரர்கள் பட்டியலில் இருப்பதை அறிந்ததும், இதுபற்றி யோசித்துத் தெளிவு பெற எனக்குக் கல்கத்தா நண்பர்களே உதவமுடியும் என்பதால், நான் அங்கு சென்றேன். சரணடைந்துவிடலாம் என்று அங்குதான் முடிவு செய்தோம்.
ஆர்யா : சரணடைவது உமது குணமில்லையே நீலகண்டர்..?
நீலகண்டர் : சரணடைவதைத் தவிர வேறு இரண்டு வழிகளை யோசித்தோம்..
முதலாவது, நண்பர்கள் உதவியைப் பெற்று எங்கேனும் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவது. இரண்டாவது, நமது தேசத்திலேயே தலைமறைவாக வாழ்வது.
முதல் வழியில் போனால் இந்தியா விடுதலை பெறும்வரை தேசத்திற்குள் வர முடியாது. சுதந்திரம் பெறப் பல காலம் ஆகலாம். அதுவரை தேச சேவைக்கு வரவே முடியாது.
இரண்டாம் வழியில் தேசத்தில் இருக்கலாம். ஆனால் பல காலம் ஒளிந்து வாழ வேண்டும். பயந்துகொண்டே தேச சேவை செய்ய வேண்டும். அது ஆபத்தானது.
ஆஷ் கொலையில் எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததாலும் சதியின்போது நான் திருநெல்வேலியில் இல்லாததாலும் வழக்கிலிருந்து தப்பிக்க சரணடைவதே சரியாக இருக்கும் என்று யோசித்தோம். சிறைத் தண்டனை என்றாலும் சிறிய காலமே அமையும் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து தேசப் பணியைத் தொடரலாம் என்று கருதியதால், கல்கத்தாவிலேயே சரணடைந்து வாக்குமூலம் கொடுத்தேன்.
ஆர்யா : (பாரதியாரைப் பார்த்து) ஏன் பாரதி.. கடலூரில் உன்னைக் கைது செய்தபோது, ஆஷ் கொலை வாரண்டில் உன் பெயர் இருந்ததைச் சாக்காக வைத்துக்கொண்டார்கள் என்கிறார்களே?
பாரதியார் : 1908இல் நான் புதுச்சேரி வந்தபோது, என் பேரில் எந்த வாரண்டும் இல்லை. ஆஷ் கொலைச் சதியில் புதுவையில் இருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது என்பதை வாஞ்சிநாதன் மற்றும் அவரது சகாக்களின் கடிதங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு, எங்கள் மீது 1911இல் வாரண்ட் பிறப்பித்தது. பல ஆண்டுகள் சென்றபின்னும் அதற்கு உயிர் இருந்தது, கடலூரில்தான் தெரியவந்தது.
ஆர்யா : அப்போ நீலகண்டர் வாக்குமூலத்திற்கு முன்பே பாண்டிச்சேரியின் தொடர்பு பிரிட்டிஷ் அரசுக்கு தெரிந்திருக்கிறதே.. அப்படியானால் நீலகண்டர் புதுவைச் சுதேசிகளை காட்டிக்கொடுத்தார் என்ற பேச்சு வந்தது எப்படி..?
நீலகண்டர் : என் வாக்குமூலம் திருநெல்வேலியில் இரண்டு நாட்களாகப் பெறப்பட்டது. ஆனால் இரண்டாவது நாள் வாக்குமூலத்தை என்னை நிர்ப்பந்தித்து வாங்கினார்கள். ஜூலை 12 அன்று, முதல் வாக்குமூலத்தில், நான் அறிந்த விவரங்களையே சொன்னேன். இதில் எனது புதுச்சேரித் தொடர்புகள் பற்றிச் சொல்லவேண்டியிருந்தது.
பாரதியார் : உண்மையில், புதுச்சேரி தர்மாலயத்தில் என்ன நடந்தது என்றே எனக்கும் அரவிந்தருக்கும் தெரியாது. எங்களைத் தவிர்த்தே எல்லாம் செய்தார்கள். நீலகண்டரும் அப்போது அங்கு இல்லை என்பதால் அவருக்கும் திட்டங்கள் தெரிந்திராது.
(மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறை வருகிறது. ஓம்கார் அறையில் சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கின்றனர்)
சங்கர கிருஷ்ணன் : உங்களிடம் ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்..?
ஓம்கார் சுவாமிகள் : அவர்கள் வழக்கில் ஒரு உருவத்திற்கு வந்திருக்க வேண்டும். என்னைத் தனியாகவே வைத்திருந்தார்கள். வழக்கு என்ன, யார் என்ன சொல்லியிருப்பார்கள் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். இரண்டாம் நாள் வாக்குமூலத்தை அதிகாரிகள் ஒருபக்கம் அச்சம் காட்டியும் மறுபக்கம் விடுதலைக்கு ஆசை காட்டியும் தயார் செய்து வாங்கினார்கள். மாஜிஸ்டிரேட் தம்பு என்பவர் முன்னிலையில் அப்ரூவர் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை கொடுத்த வாக்குமூலத்திற்கு ஒத்துப்போகிற மாதிரி என் வாக்குமூலத்தை மாற்றினார்கள். என் குழப்பத்தாலும் எனக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை என்று நம்பியும் அப்படிக் கொடுக்கவேண்டியதாயிற்று. ஆனாலும் முழுமையாக எதுவும் சொல்லிவிடவில்லை.
சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..?
ஓம்கார் சுவாமிகள் : உயர்நீதிமன்றத்தின் விசாரணையின்போது நீதிபதியிடம் நடந்த உண்மையைக் கூறினேன். என்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து அவ்வாறு பொய் சொல்ல நேர்ந்த என் பலவீனத்தை நீதிமன்றத்திலேயே குறிப்பிட்டேன். இப்போது நினைத்தாலும் அதை வெட்கப்படும் செயலாகவே உணர்கிறேன். நீதிமன்றம் என் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் தீர்ப்பு என்னவோ அப்ரூவர் வாக்குமூலத்தை ஒட்டியதாகவே அமைந்தது.
அதுவும் கொலை வழக்கின் தீர்ப்பில் நான் காசிக்குப் போனதை, எனது திருநெல்வேலி நண்பர்களிடம் வசூல் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்ட திருடனாகச் சித்தரித்துச் சொல்லியிருந்தார்கள். புதுச்சேரியிலிருந்து நானாக வெளியேறினேனா அல்லது மற்றவர்கள் என்னை வெளியேற்றினார்களா என்பதைச் சந்தேகமாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.
சங்கர கிருஷ்ணன் : தீர்ப்பை எதிர்த்து நீங்கள் அப்பீலுக்குப் போகவில்லையா சுவாமி?
ஓம்கார் சுவாமிகள் : (புன்னகைக்கிறார்)
(திரை விழுகிறது)
- இரா. கோமதிசங்கர் – திருநெல்வேலி

Anita Srikanth
August 29, 2023இப்டி எல்லாம் பேசினதை கூட இருந்து நீங்க கேட்ட மாதிரி எழுதி இருக்கீங்க அண்ணா…
ரொம்ப நல்லா இருக்கு…
Rasal
August 30, 2023‘செத்தும் கெடுத்தான் செவ்வூர் சிவந்தியப்பன்’ என்பது போல இந்த டுபாக்கூர் ‘ஆஷ்’ நம் தியாகிகளை அலைக்கழித்து விட்டானே! இருந்தபோதும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்…👊👊👊