காட்சி 18

(திரை விலகும்முன் மேடையில் செவ்வொளி பரவியிருக்க குரல் மட்டும் கேட்கிறது)

குரல் : மீண்டும் ஒருமுறை உங்களிடம் பேசவேண்டியதாகிவிட்டது. நீலகண்டரின் கதையில் பாரதியின் இறுதி நாளில் அவர் அங்கிருந்தார் என்பதாலேயே, பாரதியின் பிரிவை நாடகத்தில் விரிவாகக் காட்டவேண்டி வந்தது. இந்த நாடகம் தொடங்கிய பாரதி வீட்டிலேயே முடிந்தும் போனால் நன்றாகத்தான் இருக்கும். ஒரு காவியப் பூச்சுகூடக் கிடைத்து விடும். ஆனால், இன்னும் கொஞ்சதூரம் நாம் போய்த்தான் ஆக வேண்டும்.

(திரை விலகி ஓம்கார் ஆசிரம அறையில் காட்சி தொடங்குகிறது. சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்)

ஓம்கார் சுவாமிகள் : எனக்கு அப்போது பெரிய பலம் பாரதியார்தான். என் மீது கடைசி வரை பிரியம் காட்டியவர். அவருடைய மறைவால் நான் நிராதரவாக உணர்ந்தேன். பதினாறு வயதில் தேச விடுதலை இயக்கத்திற்கு வந்த எனக்கு, அப்போது 32 வயது. என் எதிர்காலம் குறித்த கவலை என்னை அலைக்கழித்தது.

சங்கர கிருஷ்ணன் : புரிகிறது சுவாமிஜி, அப்புறம் என்னாச்சு..?

ஓம்கார் சுவாமிகள் : சிங்காரவேலரிடம் சென்றேன். அவருடன் கொஞ்சகாலமே இருக்க முடிந்தது. சுமார் ஒரு வருடம் போலத்தான்.

(மேடையில் ஒளி மாறியதில் ஒரு வீட்டின் வரவேற்பறை)

காலம் : 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் ஒருநாள்
இடம் : சிங்காரவேலர் இல்லம்
பாத்திரங்கள் : சிங்காரவேலர், நீலகண்டர்

சிங்காரவேலர் : நீலகண்டரே, எம்மோடு இருப்பதை நீர் எவ்வாறு உணர்கிறீர்..?

நீலகண்டர் : இதுவரை நான் அறிந்திருந்த உலகத்திற்கு இப்போது புதிய விளக்கங்களைக் காண்கிறேன். தேச விடுதலை என்பது தொழிலாளர், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள் எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன்.

படைப்பில் மேல் – கீழ் என்பதும் ஆண்டான் – அடிமை என்பதும் கீழ்மைச் சிந்தனைகள் என்பதை பாரதி பாடல்கள் மூலம் தெரிந்திருந்த எனக்கு, உங்கள் பழக்கம் வந்தபிறகு அவற்றின் பொருள் சார்ந்த காரணங்கள் புரியவந்தன.

சிறிய குழுக்களாக வேலை செய்து வந்தவன், இப்போது கட்டற்ற விடுதலையை உணர்கிறேன். தொழிலாளர் சங்கங்களில்,தலைவரும் உறுப்பினர்களும் வெளிப்படையாகப் பேசி, பெரும்பான்மை முடிவை அமுல்படுத்தும் பாங்கு எனக்குப் பிடித்திருக்கிறது.

சிங்காரவேலர் : நல்லது.. உம்மைப் பிரசாரக் குழுவில் வேலை செய்யச் சொன்னோம். மற்ற உறுப்பினர்களோடு சேர்ந்து செய்து வாரும். நாம் தயாரிக்கும் பிரசுரங்களை நீரும் கவனமாகப் படித்து, போகிற இடங்களில் தெளிவாக விளக்கிப் பேச வேண்டும். எப்போதும் எச்சரிக்கை உணர்வுடன் இயங்க வேண்டும்.

நாம் காங்கிரசு இயக்கத்தில்தான் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. காங்கிரசில் காந்தியாரின் தலைமை விரைவில் வரும். வருகிற டிசம்பரில் குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்கப்போகும் காங்கிரசில், திலகர் விட்டுப்போயிருக்கிற இடமும் செல்வாக்கும் காந்தியாருக்குப் போய்விடலாம்.

சம்பாரண் விவசாயிகளுக்காக நான்காண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய போராட்டம், அதைத் தெளிவாக இந்த ஏழை தேசத்திற்குப் புரிய வைத்திருக்கிறது.

நீலகண்டர் : அப்படியானால் அது தேசத்திற்கு என்ன மாற்றத்தைக் கொண்டுவரும்..?

சிங்காரவேலர் : இப்போ எதையும் சொல்லிவிட முடியாது. ஆனால் மக்களை பேரலையாக இயக்கத்தில் கொண்டு வரும் சக்தி, காந்தியாரிடம் உண்டு. அரசியல் என்பது மக்களின் பங்களிப்போடு, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பற்காகப் போராடுவது என்பதை, காங்கிரசில் கொண்டு வந்தது காந்தியார்தான்.
இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று, பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் இருப்பதாக, காங்கிரசில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது.

அகமதாபாத் காங்கிரசில் காந்தியார் தமது பாதையை அறிவிக்கலாம். இனிமேல் அந்நிய ஆட்சியை எதிர்ப்பதோடு, காந்தியாரோடும் பயணிக்கிற கடினமான பணி நமக்குக் காத்திருக்கிறது. பார்ப்போம்..

(மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறையில் காட்சி தொடர்கிறது)

சங்கர கிருஷ்ணன் : காங்கிரசில்தான் இருப்பதாக சிங்காரவேலர் சொன்னாரே, அப்படியானால் 1921இல் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகவில்லையா..?

ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கட்சியாக உருவாகவில்லை. ஆனால் ‘இந்தியப் பொதுவுடமை நிறுவனங்களின் இணைப்பு’ என்ற அமைப்பாக இயங்கினார்கள். வங்காளத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் மத்திய பாரதத்திலும் சென்னை மாகாணத்திலுமாகக் குழுக்களாக இயங்கி வந்தார்கள். காங்கிரசுக்குள்ளே இருந்துகொண்டே இயங்கினார்கள்.

சங்கர கிருஷ்ணன் : உங்கள் வேலை என்னவாக இருந்தது?

ஓம்கார் சுவாமிகள் : கம்யூனிஸ்ட் பிரசாரப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வது..

சங்கர கிருஷ்ணன் : பழைய பயங்கரவாத இயக்கத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் கண்ட வேறுபாடுகள் என்ன சுவாமி..?

ஓம்கார் சுவாமிகள் : பழைய இயக்கத்தில் மக்களின் பங்களிப்பு இல்லை; மக்களோடு ஐக்கியமும் இல்லை. இயக்கம் செய்யும் வேலைகளால் வரும் பின்னடைவைச் சரி செய்யவே முடியாமல் போனது. ஆனால், அந்தப் பழைய குழுக்களின் தோழர்களே பெரும்பாலும் புதிய இயக்கத்திற்கு மாறிக்கொண்டார்கள். அவர்களின் புரட்சிகர குணாம்சங்களைக் குறை சொல்ல முடியுமா..?

சங்கர கிருஷ்ணன் : சிங்காரவேலர் பற்றிய உங்கள் அபிப்பிராயம் எப்படி இருந்தது?

ஓம்கார் சுவாமிகள் : அவர் பேரறிஞர்.. நிரம்பிய நூல் பழக்கம் கொண்டிருந்தார். அவர் வீட்டில் இருந்த நூல்களின் சேகரத்தைப் பார்த்து வியந்து போனேன். கடினமான உழைப்பாளி. தொழிலாளர் மேன்மை பற்றியே சிந்தித்து வந்தார். மார்க்சிய வழியில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொன்னார்.

சங்கர கிருஷ்ணன் : காந்தியின் வருகையைக் கம்யூனிஸ்டுகள் தீவிரமாகப் பரிசீலித்தார்கள் என்பது அவர் பேச்சில் தெரிகிறதே..!

ஓம்கார் சுவாமிகள் : காந்தியின் பாதையைக் கம்யூனிஸ்டுகள் போல யாரும் தெரிந்திருக்க மாட்டார்கள் தம்பி.

சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, உங்கள் பேச்சு மிக வியப்பாக இருக்கிறது. இத்தனை தூரம் கம்யூனிஸ்ட்கள் பற்றிப் பேசுகிற நீங்களா சாமியாராக மாறினீர்கள்..?! பெரிய புதிராக இருக்கிறது சுவாமி.

ஓம்கார் சுவாமிகள் : கம்யூனிஸ்ட்களோடு, அதுவும் சிங்காரவேலர் போன்ற ஒரு சிலரோடு ஒரு வருட காலமே என் தொடர்பு. அதற்குப் பிறகு இன்னுமோர் நெடிய சிறைவாசம் என் மனப்போக்கை மாற்றி, இப்போதைய வாழ்வுக்கு என்னைக் கொண்டு வந்து சேர்த்தது.

(திரை விழுகிறது)

நாளை தொடரும்.

  • இரா. கோமதிசங்கர் – திருநெல்வேலி

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *