ஜி 20 மாநாடா? ஜி-இன் துதிபாடும் மாநாடா?

ஜி 20 நாடுகள் அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஒரு உறுப்பு நாட்டுக்குத் தலைமைப் பொறுப்பு அளிப்பது மரபு. அந்த அடிப்படையிலேயே இந்தியாவிற்கு இந்த ஆண்டில் மாநாட்டை நடத்தும் வாய்ப்புத் தரப்பட்டது. அது வாய்ப்பு என்பதைக் காட்டிலும் பொறுப்பு என்பதே சரியானதாக இருக்கும். ஆனால் பாஜகவினர், மோடி அரசின் விளம்பரத் தம்பட்டத்திற்கு இந்த மாநாட்டைக் கூச்சமின்றிப் பயன்படுத்திக்கொள்கின்றனர். மாநாடு நடக்கும் அரங்கத்திற்கு வெளியே பல மைல் தூரத்திற்கு மோடியின் ‘கட் அவுட்கள்’ வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏழை மக்களின் குடியிருப்புகள் வழக்கம்போலவே திரை கட்டி மறைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பெருமை மிக்க கலைப் படைப்புகளையோ, இயற்கை அழகு சார்ந்த சின்னங்களையோ, தமிழகத்தின் தொன்மையான கலை, இலக்கியம், பண்பாடு, தொல்லியல் ஆய்வுக் களமான கீழடி போன்ற இடங்களையோ ஒவ்வொரு விளம்பரத் தட்டியிலும் காட்சிப்படுத்தியிருந்தால் நம் நாட்டின் பெருமை வெளிப்பட்டிருக்கும். மாறாக, பிரதமர் மோடியின் கட் அவுட்டுகளே அதிகம் என்பது வழக்கம்போலவே இந்த அரசு மலிவான சுயவிளம்பரத்திற்கு இந்த மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்வது ஐயமின்றித் தெளிவாகிறது.

ஆர்.எஸ்.எஸ்.இன் கட்டளைப்படி கொடூரமாகக் கொல்லப்பட்ட காந்தியடிகளின் பெயரை எந்தவித தார்மீக உரிமையும் இன்றிப் பயன்படுத்துவதோடு, ஜி 20 பன்னாட்டு அரசுப் பிரதிநிதிகளை, காந்தியடிகளின் நினைவிடத்திற்கு கூட்டிச் சென்று வணக்கம் செலுத்துவதென்பது எவ்வளவு பெரிய நாடகம்!

இந்த மாநாடுபற்றி மின் ஊடக விவாதங்களில், வலது சாரி என்ற பொய்யான முகமூடியில் பங்கேற்கும் பல பாஜக ஆதரவாளர்கள், எந்தவொரு இடத்திலும் இதை இந்திய அரசின் சாதனையாகக் குறிப்பிடவில்லை. மாறாக மோடி புகழ் பாடுவதையே கூச்சமின்றிச் செயல்படுத்துகின்றனர். மோடியின் புகழ்பாடுவதாகக் கருதிக்கொண்டு, மாநாட்டுக்கு வருகைதரும் பிறநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் அந்த நாடுகளை இழிவு செய்யும் வகையில் பாஜகவினர் பதாகைகள் வைத்துள்ளது கேவலத்தின் உச்சம்.

இதில் மற்றொரு அவலம், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (காங்கிரஸ் தலைவர்) அவர்களுக்குக் குடியரசுத் தலைவரின் அழைப்பு அனுப்பப்படவில்லை. இது பாஜகவின் கொச்சையான அரசியல் எதிர்ப்பு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்? உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற பல நாடுகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் உள்நாட்டு அரசியலைப் புகுத்திக் கொச்சைப்படுத்துவதைக் காண முடியாது.

இந்த ஆளுங்கட்சி அரசியலின் கோர வடிவம்தான், திடீரென்று இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றி, ஜி 20 மாநாட்டு அழைப்புகளிலேயே மாற்றப்பட்டதும். அரசு நினைத்திருந்தால், பாராளுமன்றக் கூட்டத்தில் ஒரு சட்டமுன்மொழிவாக, மசோதாவாகக் கொண்டு வந்து அதை எளிதாக நிறைவேற்றியிருக்க முடியும். அதற்கான பெரும்பான்மை பாஜகவிற்கு இருக்கிறது. ஆனால் இதை அவசர அவசரமாகக் கொண்டுவரவேண்டிய தேவை என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “இனி இந்தியா என்ற பெயரைத் தவிர்க்க வேண்டும்; பாரத் என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும்” என்று பேசியிருந்தார்.

ஆகவே ஆர்.எஸ்.எஸ்.இன் கட்டளையை ஏற்று அரசு, இந்த மாற்றத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்திருக்கிறது என்பது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால். ஆனால் இதுபற்றி பாஜகவிற்கு எந்தவிதத் தயக்கமோ கூச்சமோ இல்லை என்பது பேரவலம். அதன் விரிவுதான் எதிர்க்கட்சித் தலைவருக்குக் குடியரசு தலைவர் விருந்தில் அழைப்பு அனுப்பப்படாததும் எனப் புரிந்துகொள்ளலாம்.

பல உலக நாடுகள் கலந்துகொள்ளும் சில நாட்களிலேயே கூடவுள்ள ஜி 20 மாநாட்டிற்கு முன்னதாக அவசர அவசரமாக இதைக் கொண்டுவந்தது, இந்த அரசை நடத்துவது இந்திய அரசியல் சட்டப்படியான பாராளுமன்ற ஜனநாயகமா அல்லது ஜனநாயகத்திற்குப் புறம்பான, மூடுண்ட கருத்துகளும் நடவடிக்கைகளும் கொண்ட ஆர்.எஸ்.எஸ்.இன் கொடுங்கரமா என்பதை இதுவரை மறுத்து வந்த, ஏற்றுக்கொள்ளாத, பாஜகவின் வெட்கமற்ற நடவடிக்கை தெளிவாக்கியுள்ளது.

இதன்மூலம் பாராளுமன்ற ஜனநாயகத்தில், முகம் தெரியாத, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத ஆர்.எஸ்.எஸ்.இன் நிழலாகத்தான் பாஜக இயங்குகிறது என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதற்குப் பிறகும் பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற பாஜகவிற்குத் தேர்தலில் பங்கு கொள்ளும் அருகதை, தகுதி உண்டா என்பதை மக்கள் மன்றம் முடிவு செய்யட்டும்.

கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, தான் விரும்பாததை நிராகரிக்கும் ஜனநாயக உரிமை ஆகிவற்றுக்காகப் போராடி, பல வகைகளில் அடக்குமுறையை அரங்கேற்றும் அரசின் கொடூர நடவடிக்கைகளில் களத்தில் பலியான ஈகியர்களுக்கு இக் கருத்தை காணிக்கையாக்குகிறோம்.

  • நெய்வேலி பாலு

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *