லொகி ஷெல்லே (ஒரு தேவதையின் முத்தம்)

வங்க மொழித் திரைப்பட அறிமுகம்

மேற்கு வங்கத்தில் இச்சான் கஞ் என்கிற கிராமத்தில் நிலவும், மனிதத்தை வதைக்கும் வகையிலான சமூக, மதக் கோட்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும், மூன்று இளம் மருத்துவ மாணவர்களைச் சுற்றிச் சுழலும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்த வங்க மொழித் திரைப்படம்தான், கௌஷிக் கங்குலி துணிச்சலுடன் எழுதி இயக்கி, சோனி லைவ் தளத்தில் தமிழ் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகியுள்ள ‘லொகி ஷெல்லே.’

“லட்சுமி, மாதாவோட மறுபிறப்பு! நாலு கை இருந்துச்சாம்…” இந்தச் செய்தியும் சாரை சாரையாக மக்கள் செல்வதும் அந்தக் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதும், ஒரு திருமணத்திற்குச் சென்று கொல்கத்தா திரும்பும் வழியில் கார் பழுதானதையடுத்து, அதில் வந்த இளம் மருத்துவர்களான அமீர் உசேன் (உஜ்ஜ்ன் கங்குலி), காயத்ரி சட்டர்ஜி (ரித்விகா பால்) ஹிப்நாத் தாத்தா (புரப் சீல் ஆச்சார்யா) ஆகியோரை அங்கேயே தங்கவைத்துவிட்டது.

பத்திரிகையாளர் ஜாய் மித்ரா (அம்ரிஷ் பட்டாச்சாரியா) தந்த கூடுதல் தகவல்கள், குழந்தை லட்சுமியைப் பார்க்கத் தூண்டியது. குழந்தையைப் பார்த்துக்  குழப்பம் அடைந்து, தொடர்பு கொண்ட மூத்த மருத்துவர் டாக்டர் மிதாலி சென் (சுர்னி கங்குலி), அந்தக் குழந்தை ‘பாராசிட்டிக் ட்வின்ஸ்’ என்றும் கூடுதலான கைகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றாது விட்டால், அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்க, அதிர்ச்சி அடைகின்றனர்.

தீண்டத்தகாதவர்களாக அதுவரை ஒதுக்கி வைக்கப்பட்ட அந்தக் கிராமத்தில், கடவுளே வந்து பிறந்துள்ளதாக நம்பி, அம்மக்களும் சுற்றியுள்ள கிராம மக்களும் குழந்தை லட்சுமியைத் தரிசிக்கவும் காணிக்கை செலுத்தவும் குவியத் தொடங்குகின்றனர். இதனை அறிந்த ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், அந்த மக்களின் அறியாமையைப் பணமாக்கவும் அந்தக் குழந்தையை வணிகப் பொருளாகக் காட்டித் தங்களுக்கான நிரந்தர வருமானமாக மாற்றவும் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது.

“எல்லாம் மூட நம்பிக்கை… இதே மாதிரிதான் சில வருஷத்துக்கு முன்ன, பிள்ளையார் பால் குடிச்சதா சொன்னாங்க” என்று சொன்ன அமீர், எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று முனைகிறான். நண்பர்களுடனும் பத்திரிகையாளர் ஜாய் மித்ராவுடனும் சேர்ந்து, அதற்கான திட்டத்தை வகுக்கிறான்.

குழந்தையின் தன்மையை உணராத, அதன் உருவத்தை வைத்துக் கடவுளின் அவதாரமாக நம்புகிற,  அறியாமையில் உழலும் மக்கள் ஒருபுறம். அவர்களின் அறியாமையையும் அந்தக் குழந்தையையும் வைத்து வருமானம் பார்க்க விழையும் ஆதிக்க சாதிக் குடும்ப வாரிசான ரஜத் நாராயன் ராய் (இந்ராசிஷ் ராய்) அடியாட்களுடன் மறுபுறம். இவர்களிடமிருந்து அந்தக் குழந்தையை மீட்டு, உரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டும் என்று அமீர் உசேன்  வகுத்த திட்டம் வெற்றி பெற்றதா என்பதுதான் ‘லொகி ஷெல்லே’ படத்தின் மீதிக் கதை.

கௌஷிக் கங்குலி செதுக்கிய பாத்திரப் படைப்புகளும் அப்படைப்புகளை உணர்ந்து உயிர் கொடுத்துள்ள கலைஞர்களும் திரைப்படத்தை இறுதிவரை விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாக நெகிழச் செய்வதாகவும் சில காட்சிகளில் மனதை உலுக்கிவிடுவதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் ஆக்கிவிடுகின்றனர்.

உஜ்ஜன் கங்குலி, ரித்விகா பால், புரப் சீல் ஆச்சார்யா, சுர்னி கங்குலி, இந்ராசிஷ் ராய், அம்ரிஷ் பட்டாச்சார்யா, ரிவிடொபிரிடோ சென், பிரிதீப் பட்டாச்சாரியா போன்ற முதன்மைப் பாத்திரங்களின் அட்டகாசமான நடிப்பிற்குக் குறையில்லாமல், குழந்தையின் அம்மா உட்பட துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பை வழங்கியுள்ளது சிறப்பு.

  • ஒரே பிரசவத்துல பதினொரு குழந்தய பெறுவதற்கு எல்லாம் வாய்ப்பு இருக்கா?
  • வாய்ப்பு இருக்கு. நம்ம காந்தாரி, ஒரே பிரசவத்ல 100 குழந்தைக பெற்றெடுத்தா!    (பாபா)
  • பிராமின் ஆரம்பிச்சு மேல் ஜாதி வரயில, இங்க சுத்தம் இல்லன்னு சொன்னாங்க. இப்ப அவங்க கடவுளைக் கும்பிடற மாதிரி, இங்க வந்து கும்புட்டுப் போயிட்டு இருக்காங்க. (கிராமத் தலைவர் ஹரேன்)
  • சரி, ஜனங்க எப்படி அந்தக் கிராமத்துக்குப் போவாங்க? (ரஜத்)
  • கிராமத்த சுத்தப் படுத்தியாச்சுன்னு சொல்லுங்க. விவேகானந்தர் என்ன சொன்னாரு? ஒதுக்கப்பட்டவங்க மேல வருவாங்கன்னு சொன்னாரு… அது இப்ப நடக்குதுங்க (பாபா)
  • கடவுளுக்கு எப்படி ஜுரம்?! (ஜாய் மித்ரா)
  • டாக்டரால கடவுள எப்படிக் குணப்படுத்த முடியும்? (ரஜத்)
  • வர்ற பணத்த, காணிக்கைய எல்லாம் கரெக்டா வீட்டுக்குக்  கொண்டுவந்து கொடுத்துடணும். நார்த்லேயே இந்த இடம் பெரிய இடமா மாறப் போகுது. மார்பிள் கல் வைத்துக் கோயில கட்டிடலாம் (ரஜத்)
  • நீங்க டாக்டரத்தான் பாக்கணும். இந்த விஷயத்துல கடவுள், தேவதைன்னு எந்த சம்பந்தமும் இல்லை (அமீர்)
  • நூறு வருஷமா எங்கள தீண்டத்தகாதவங்களா வெச்சிருந்தாங்க. நிழலைக்கூடத் தொட மாட்டாங்க. அப்படிப்பட்டவங்க இப்ப எங்க வீட்டுக்கு வராங்கன்னா, அது இந்த லட்சுமி தேவியாலதான்! (கிராமத் தலைவர் ஹரேன்)
  • இது ஆபத்தான விஷயம்தான். அதுக்காக ஏன் பயந்து சாகுறீங்க? அந்தக் குழந்தை கஷ்டத்ல அழுதுட்டு இருக்குங்கண்ணே.  எதுக்கு நாம டாக்டருக்குப் படிச்சோம் சொல்லு, காப்பாத்தணும்பா.. (அமீர்)
  • கொல்கத்தா போய் இதையெல்லாம் பேஸ்புக்ல போடுங்க. சயின்ஸ் படிக்கற பசங்களே போட்டா, இதையெல்லாம் நம்புவாங்க இல்ல? (ரஜத்)
  • அமீரும் அவங்களோட ஃபிரண்ட்ஸ்சும்… ஜூனியர் டாக்டர்ஸ்சா மனிதத்தை உச்சிக்குக் கொண்டு போகணும்னு நினைக்கறாங்க   ( டாக்டர் மிதாலி சென்)
  • வெளிநாட்ல எல்லாம் தெருவுல கெடக்கற ஒரு நாயைக்கூடக் காப்பாத்துவாங்க. நாம யாரைக் காப்பாத்தறோங்கறது முக்கியம் கெடயாது, நாம ஒரு உயிரக் காப்பாத்தறோம் (அமீர்)
  • நம்மளையே பாரேன், நாம இந்தக் குழந்தைய காப்பாத்தத்தான் முயற்சி பண்றோம்… அதுக்கு, ஏதோ திருட்டுத்தனம் பண்ற மாதிரி ஓடி ஒளிஞ்சிகிட்டு இருக்கோம் (அமீர்)
  • ஆனா, இர்ரெஸ்பான்ஸிபல் ஜெனரேஷன்னு சொன்னீங்களே, அத ஒத்துக்க முடியாது… ஒரு உயிரைக் காப்பாத்தற ரெஸ்பான்ஸ் இல்ல, வாட் இஸ் தி ரெஸ்பான்ஸ்சிபிலிடி? (அமீர்)  
  • துர்கா தேவிக்குப் பத்துக் கைகள் இருக்கு. அது ஒரு சிம்பாலிசம். யாருக்குத் தெரியும், அவங்க பத்து விஷயங்கள கத்துக்கிட்டு இருக்கலாம்!
  • கடவுளுக்கு நாலு தல இருக்கிறது எல்லாம் பாசிபிலே கிடையாது. அது ஒரு சிம்பாலிதான், ஒரு மெட்டபார்.. ஒரு டைனமிக் பர்சன், ஒரே நேரத்தில் நான்கு விஷயத்தை யோசிக்கலாம்.
  • உதாரணத்துக்குச் சொல்னம்னா ராவணன். அவருக்குப் பத்து தலை இருந்துச்சாம். அப்பன்னா அவரால பத்து விஷயத்தைக் கவனிக்க முடியும், அஸ் அன் அட்மினிஸ்ட்ரேட்டர்! (அமீர்)
  • அமீர், ஆக்சுவலி நீ சொன்ன இந்த அனாலஜி இருக்கே, ரொம்ப நல்லா இருக்கு. இத என்னால மறக்கவே முடியாது (பபுல் சுப்ரியா)
  • ஒரு முஸ்லிம் டாக்டர், இந்துக் கடவுளுக்கு வந்த பிரச்சனய சரி பண்ணிக் காப்பாத்திட்டேங்கிறியா? யோவ் பெருசு, இத நம் ஆளுங்க ஒத்துப்பாங்கங்கறீங்க?  (ரஜத்)
  • டாக்டருக்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, லட்சுமிய விட்டிருந்தா, செத்துருப்பா. நாங்க காப்பாத்தி இருக்கோம் (அமீர்)
  • ஜெயில்ல இருந்தா யாராலயும் ஓட்டு போட முடியாதுதான், ஆனா, ஜெயில விட்டு வெளியே வந்தா எலெக்ஷன்ல நிக்க முடியுமில! (ஜாய் மித்ரா)

இப்படி, சிந்தனையைத் தூண்டும் வசனங்களாலேயே கட்டமைக்கப்பட்ட அற்புதமான திரைக்கதை.

கோபி பகத்தின் ஈர்ப்பான ஒளிப்பதிவும் பிரபுதா பானர்ஜியின் பின்னணி இசையும் பாடலிசையும் சுபஜித் சின்காவின் கச்சிதமான படத்தொகுப்பும் கௌஷிக் கங்கோலியின் இயக்கத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, வலு சேர்க்கின்றன.

இந்தியாவில் இரண்டொரு மாநிலங்களைத் தவிர்த்து, இதர மாநிலங்களில் பெருவாரியான கிராமங்களில், ஏன் நகரங்களில் ‘படித்த’ மாந்தர்கள் உட்பட, மதரீதியாகக் கட்டமைக்கப்பட்ட புராண, இதிகாசக் கதைகளில் மாற்றுச் சிந்தனையின்றி ‘நம்பிக்கை’ கொண்டு வாழும் அப்பாவி மக்களும் அறியாமையில் உழலும் அம்மக்களைச் சுரண்டும் சாதி அடுக்கில் மேலோங்கி நிற்கும் ஆதிக்க, ஆன்மிகவாதிகளின் கட்டுக்கடங்காத சுரண்டல் அராஜகங்களும் அவற்றுக்குமிடையே அரிதாக உயிரைப் பணயம் வைத்தும் மனிதத்தை உயர்த்திப் பிடித்து உணர்த்தும் சில மனிதர்களும் உள்ள நடப்பை, படம்பிடித்துக் காட்டும் சீரிய படைப்புதான் ‘லொகி ஷெல்லே’  

“சிட்டியோ கிராமமோ, அங்கு லட்சுமி மாதிரி யாரையாவது ஒரு குழந்தையப் பார்த்தீங்கன்னா, அமீர் வர்ற வரையில வெயிட் பண்ணாதீங்க. அதுக்குப் பதிலா, நீங்களே அமீர் ஹுசைன் மாதிரி களத்துல இறங்குங்க!”

பத்திரிகையாளர்  ஜாய் மித்ராவின் இறுதியான இந்த வார்த்தைகள்தான், நெடுநாட்களுக்குக் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும்.  

மதிப்பெண்: 8/10

  • மது ராஜேந்திரன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *