விடுதலையின் வரலாறுகள்

நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் – என்பது வள்ளுவர் வாக்கு.

வாசிப்புப் பழக்கம் உள்ள எல்லாரும், ஏதோ ஒரு நாளில் எழுதவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். சில சமயம் அதை வெளியே சொல்வதும் உண்டு. சொல்பவர்கள் எல்லாரும் செயல்படுத்திவிடுகிறோமா என்ன?

கடந்த ஜூலை 2 அன்று, தாம்பரத்தில் நடைபெற்ற சென்னை வாசிப்பாளர்கள் சந்திப்பில், தான் ஒரு நாடகத்தை எழுதவிருப்பதாக அறிவித்தார் தோழர் கோமதிசங்கர். யாரைப்பற்றி, எந்தக் கருவை மையமாகக் கொண்டு அந்த நாடகம் அமையப்போகிறது என்கிற எந்த விவரமும் அன்று அவர் குறிப்பிடவில்லை.

இன்று, அக்டோபர் 2. மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள். சிறப்புமிக்க இன்றைய தினத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், கோமதிசங்கர் தோழர் எழுதிய நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அன்று கூறியது போலவே, ஆகஸ்டு 15, இந்திய சுதந்திர தினத்தன்று நீலகண்ட பிரம்மச்சாரி பற்றிய வரலாற்றுத் துளிகளை, நாடக வடிவில் தினசரித் தொடராக நமது சுவடு வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினார். 24 காட்சிகளாக, நாள் தவறாது சுவடு இணைய இதழில் வெளிவந்தது. வெளிவரும் நாட்களிலே நாடகத்திற்குப் பரவலான வரவேற்பு இருந்தது என்பதை சுவடு வாசகர்கள் நன்கறிவர். அறிவிப்பு வெளியான நாளிலிருந்து மிகச் சரியாக 90 நாட்களில் இந்த நாடகம் நூலாக்கம் பெற்று சுவடு பதிப்பக வெளியீடாக வந்துவிட்டது.

இன்று, காலை 10 மணியளவில் சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில், புத்தகத்தின் வெளியீட்டு விழா மிக விமர்சையாக, நூற்றுக்கணக்கான தோழர்கள் மற்றும் வாசகர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு அவர்கள் நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர். மு.வீரபாண்டியன் மற்றும் தோழர். ஜீவபாரதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர் கணபதி இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.

நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய தோழர் முத்தரசன், பெயரே தெரியாத, தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடியில் வாழ்ந்த ஒரு சவரத் தொழிலாளியின் தேசப்பற்றையும் தன்மானத்தையும் பறைசாற்றும் செயலை மிகச் சுருக்கமாகவும் அவரின் எளிமையான கம்யூனிச சித்தாந்தத்தையும் எடுத்துரைத்தார். இந்த நாடகம் தமிழ்நாடு முழுவதும்  நிகழ்த்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

தோழர் ஜீவபாரதி அவர்கள் தனது தலைமை உரையில், விடுதலைப் போராளியை அவமதிக்கும்விதமாக, ஆங்கிலேய அதிகாரி அவருக்கு மொட்டை அடிக்கச் சொன்னபோது, தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு முடி திருத்துநரின் தியாகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். தோழர் வீரபாண்டியன் அவர்களுடைய உரையில், இந்த நூல் குறித்து முழுமையானதொரு ஆய்வரங்கம் இதே அரங்கில் நிகழ்த்தப்பட வேண்டும் என்றார்.

அவரைத் தொடர்ந்து இந்த நாடகப் பனுவலை முன்வைத்து உரையாற்றிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர். ஆ. பாஸ்கர் அவர்கள் தனது மதிப்பீட்டு உரையைச் சிறப்பாக முன்வைத்தார். நாடக வடிவத்தின் தாக்கம் குறித்துத் தொடங்கிய அவர், புத்தகத்தின் சாராம்சத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் மிகச்சிறப்பாகவும் சற்று விரிவாகவே கூறியதுடன், இந்த நாடகத்தை மேடையேற்ற வேண்டும் என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக புத்தகத்தின் ஆசிரியர் தோழர் கோமதிசங்கர், தனது ஏற்புரையை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார். ஏன், எதனால், எதன்பால் இந்த நாடகம் தொடங்கப்பட்டு இவ்வளவு விரைவாகப் புத்தகமாகப் வெளியிடப்பட்டது என்ற விவரங்களோடு, நூலில் இடம்பெற்றுள்ள தரவுகளுக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றியுரைத்து தனது ஏற்புரையை நிறைவு செய்தார். இறுதியாக சுவடு பதிப்பாசிரியர் தோழர் நல்லு இரா. லிங்கம் ரத்தினத்தைவிடச் சுருக்கமாக நன்றியுரை நல்கினார்.

இன்றைய நாளின் அதிசிறப்பு, ஒரு விடுதலைப்போராட்ட வீரரின் வரலாற்றுப் பக்கங்களை வாழும் விடுதலைப் போர் வீரர் தோழர் நல்லகண்ணு அவர்கள் வெளியிட்டதுதான். தனது 98 ஆம் அகவையிலும் காந்தி பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் கட்சிக் கூட்டத்திற்கும் பதிப்பகத்தார் மற்றும் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்த அவருக்கு நன்றி என்ற ஒரு சொல் காணாது. நூலைப்பற்றியும் நூலாசிரியர் பற்றியும் வயது மூப்பு காரணத்தால் பேசமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அந்த உள்ளத்தை என்னவென்று சொல்ல! அவரைப் பார்த்ததே பேறு என்று உணர்கையில், நூலாசிரியருக்கோ அது வாழ்நாளுக்கான வரலாறு அல்லவா?!

  • தொகுப்பு: பிரியதர்ஷினி கோபால் —– படங்கள்: பன்னீர்செல்வம் நடராஜன்
  • ——————

Comments (2)


பானுரேகா
பானுரேகா
October 2, 2023

அருமை ப்ரியா.நிகழ்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு சிறப்பான நிகழ்ச்சித் தொகுப்பு. வாழ்த்துகள்💐💐

Rasal

சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து விட்டீர்கள். 98- வயதிலும் நல்லகண்ணு ஐயா பங்கேற்றது பெருமகிழ்ச்சிக்குரியது👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *