எங்கே போகிறது கல்வி..? பகுதி 3
கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி
அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் நிகழ்த்திய உரைத் தொகுப்பின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.
கற்பித்தலைப் பாழாக்கும் எமிஸ் (EMIS – Education Management Information System):
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது நிலையையும் பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பல தொடர்ச்சியான பணிச்சுமைகளுக்கு ஆசிரியர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
EMIS (Education Management Information System) என்ற கல்வி மேலாண்மைத் தகவல் முறையைக் கையாளும் நபர்களாக ஆசிரியர்களாக நடத்தப்படுகின்றனர். மாணவர் விபரங்களை நாள்தோறும் சேகரித்து, இந்த EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இது மட்டுமல்ல, எண்ணிறைந்த பணிகளான, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் வந்துவிட்டால் வாக்குச் சீட்டை வீடுவீடாகத் தேடிச்சென்று கொடுத்துக் கையெழுத்து வாங்குவது, முதியோர் கல்வி வளர்ப்பது, இது போதாதென்று இல்லம் தேடிக் கல்வி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதையெல்லாம் ஆசிரியர்களின் பணிகளாகத் தருகிறார்கள்.
ஆசிரியர்கள் எந்தவொரு பணியும் இல்லாமல் வெறுமனே அமர்ந்து இருப்பதைப்போல நினைத்து மற்ற பணிகளை எல்லாம் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பள்ளிகளில் மாணவர்களைத் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்கக்கூடிய வாய்ப்பையே இன்றைய ஆசிரியர்கள் பெற முடியாத ஒரு சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாகப் பள்ளிக்குச் செல்ல விரும்பக்கூடிய ஆசிரியர்கள், மாணவர்கட்குக் கற்றுத் தர ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அங்கே மாணவர்களைத் தொடர்ச்சியாக சென்று பார்ப்பது, அவர்களோடு இருப்பது என்ற நிலையே இல்லாத ஒரு சூழலை உருவாக்கிவிட்டார்கள். இதுதான் இன்று அரசுப் பள்ளிகளிலே நடைபெற்று வருகிறது.
மற்றொருபுறம் தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அங்கே கடுமையான பணிச்சுமையை ஆசிரியர்களுக்கு வழங்கி, 8 மணி நேரம் என்பதெல்லாம் தாண்டி, 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று பள்ளிகளிலேயே இருந்து அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு மிகவும் களைப்பாக வீடுகளுக்குச் செல்லும் நிலைமையில், எந்தவிதமான பணிச்சுமை குறித்தும் கேள்வி கேட்க முடியாமல் ஒரு அடிமை நிலையில்தான் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இப்படி ஆசிரியர்களைப் பற்றியோ அவர்கள் பணிச்சூழல் பற்றியோ தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணமோ அல்லது NCFFS ஆவணமோ வாயே திறக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இந்த ஆவணத்தின் அனைத்து அம்சங்களையும் தொடர்ச்சியாக வாசித்தால் ஆங்கிலத்தில் Rosy Picture என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது மிகவும் அருமையாகப் படம் காட்டுவது. அதுபோலத்தான் இவர்களும் ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்களுக்கு என்னவெல்லாம் வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்? இதையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கு எப்படியெல்லாம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்? என்று மிகவும் அழகான காட்சியை இந்த ஆவணத்தில் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தோமானால் அங்கே அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மாணவர்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதும் கடுமையான பணிச் சுமையில் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருப்பதும் அப்படியே நேர் எதிரான ஒரு நிலையை – கிட்டத்தட்ட அடிமைத்தனமான ஒரு நிலையை அங்கே நாம் காணமுடிகிறது. இதைப்பற்றியெல்லாம் இந்த அறிக்கைகள் வாயைத் திறக்க மறுப்பது ஏன் என்ற கேள்விதான் இங்கு எழுகிறது.
மொழிக் கொள்கை:
மொழிக்கல்வி குறித்து NCFFS என்ன கூற வருகிறது மற்றும் மாணவர்களுக்கு எண்களைக் அறிவித்தல் குறித்தும் எழுத்தை அறிவித்தல் குறித்தும் எப்படிப்பட்ட இலக்கை அது நிர்ணயித்திருக்கிறது என்பதை அடுத்து காணலாம்.
இங்கு ஏற்கனவே நம்மிடையே அறிமுக உரையாற்றிய பேராசிரியர் சிவக்குமார் அவர்கள், இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் L1, L2, L3 குறித்துப் பேசினார். அதென்ன L1 , L2, L3? ஒரு குழந்தை, தான் வாழக்கூடிய வீட்டில் தனது பெற்றோர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அதைத்தான் அவர்கள் L1 என்று கூறுகிறார்கள். அதைத்தான் வீட்டு மொழி (Home Language) அல்லது தாய் மொழி (Mother tongue) அல்லது Familiar Language என்று சொல்கிறார்கள்.
இங்கே ஒரு உதாரணத்திற்காக, வீட்டிலே பேசுவதைத் தாய்மொழி என்று வைத்துக்கொண்டால், அதையே அவர்கள் L1 என்கின்றனர். பிறகு ஏன் அதை Home Language என்று சொல்ல வேண்டும்? அல்லது Familiar Language என்று சொல்ல வேண்டும்? என்று அதை நாமாகச் சற்று யூகித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து வந்து பிறிதொரு மாநிலத்தில் வாழக்கூடியச் சூழலிலே, அங்கே அந்தத் தாய்மொழியை எழுத்து வடிவிலோ அல்லது வாசித்தல், எழுதுதல் போன்ற விஷயங்களைச் செய்யமுடியாத ஒரு சூழலிலே, அந்த மொழி என்பது அங்கே வீட்டில் பேச்சில் வழங்கக்கூடிய மொழியாக மட்டும்தான் இருக்கிறது. ஆனால் பள்ளிக்குச் சென்றால் அந்த மொழி என்பது அங்கே இருக்காது. இது வேற்று மாநிலங்களிலிருந்து வந்து ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களின் நிலையாக இருக்கும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. இதைத்தான் அவர்கள் L1 என்று சொல்கிறார்கள்.
ஆகவே L1 என்ற, வீட்டில் பேசப்படும் இந்த மொழியை மாணவர்களுக்கு உகந்த மொழியாக அறிவித்து, அந்த வகையிலே பள்ளிகளில் அந்த மொழியைப் பிரதானமாக சொல்லித் தரவும் அதன்மூலமாக மற்ற பாடங்களை மாணவர்களுக்குப் போதிக்கவும், அதாவது பயிற்று மொழியாக L1 என்ற அந்த மொழியைப் பயன்படுத்தவும் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு L1 மொழியைப் பாடங்களைச் சொல்லித்தரக்கூடிய மொழியாகக் கூறுகிறார்கள். அடிப்படையில் தர்க்கரீதியாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது.
அடுத்து L2, L3 என்று சொல்லக்கூடிய மொழிகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், மாணவர்கள் ஒரே நேரத்தில் தாய் மொழியையோ வீட்டிலே வழங்கப்படும் மொழியையோ பள்ளிகளில் கற்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி, அங்கே கற்க வேண்டும் என்று முதலாவதாகக் கூறிவிட்டு, இரண்டாவதாக, ஒரு குழந்தை – அதாவது முதல் வயதிலிருந்து எட்டு வயது வரை அதிகப்படியான மொழிகளைக் கற்றுத் தேறக்கூடிய வாய்ப்பை அக்குழந்தையினுடைய மூளையின் வளர்ச்சி வழங்குகிறது என்று கூறுகிறார்கள்.
தர்க்கரீதியில் யோசித்துப் பார்த்தால் உண்மைதான். ஆரம்பக் காலகட்டத்தில், ஒரு குழந்தை தனது எட்டு வயது வரை பல மொழிகளைக் கற்கக்கூடிய மிகச் சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அத்தகைய மூளை வளர்ச்சி அங்கே நடக்கிறது என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையாக இருக்கலாம். ஆனால் இங்கு எழக்கூடிய கேள்வி என்னவென்றால், அதற்காக நடைமுறையில் ஒரு குழந்தையால் எத்தனை மொழிகளைக் கற்க முடியும்? ஒரு குழந்தையைச் சுற்றி எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. ஒரு குழந்தையைச் சுற்றி அக்குழந்தை தெரிந்துகொள்வதற்காக இயற்கையாக அத்தனை மொழிகள் பேசப்படுகின்றனவா? அது இல்லை என்று சொன்னால், வகுப்பறையிலே இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி, நான்கு, ஐந்து என்று பல மொழிகளை போதனையின் மூலம் சொல்லித் தர முடியுமா என்றால், நடைமுறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.
இவர்களே பல இடங்களில் இந்த ஆவணத்தில் கூறுவதுபோல, ஒரு குழந்தை இயற்கையாகத்தான் மொழிகளைக் கற்றுக்கொள்ளும். குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது ஒன்று முதல் எட்டு வயது வரை படுவேகமாக இருந்தாலும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் இயற்கையான முறையில்தான் நடக்கும் என அவர்களே கூறிவிட்டு, ஆனால் பள்ளிகளில் இரண்டாவது மொழி, மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்வது அவர்களுடைய தர்கத்திற்கே புறம்பாகச் செல்வதைக் காட்டுகிறது.
ஆகவே, ஒரு குழந்தை இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி எல்லாம் கற்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்த்தால் தர்க்கரீதியில் அது இல்லை என்பதே பதில். ஏனென்றால் அது இயற்கையாக நடக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு குழந்தை வேறு மொழிகளே கற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் சொல்கிறோமா? நிச்சயமாகக் கிடையாது. ஒரு குழந்தை, வாய்ப்பு இருந்தால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவது – இயற்கைச் சூழலுக்கு மாறாக நடந்துகொள்வது என்பதைத்தான் நாம் மறுக்க வேண்டியிருக்கிறது.
ஆகவே, ஒரு குழந்தை எதார்த்தமாகத் தனது தாய் மொழியை தன் வழக்கத்திலிருக்கக்கூடிய மொழியைக் கற்றுக்கொள்வது, அதன்மூலமாகப் பிற அறிவைப் பெறுவது என்பதுதான் எதார்த்தமாக இருக்க முடியும். இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்கு அந்த வயதில் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வர வேண்டுமா என்றால், தேவையில்லை என்பதே நாம் கூற வருவது. ஒரு குழந்தைக்கு ஆறு வயதுக்குப் பின்னர், தாய்மொழி மட்டுமல்லாது பிறிதொரு மொழியையும் சொல்லித் தரக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்பதை நாம் கூறுகிறோம்.
இதே புத்தகத்திலே L 1, L 2, L 3 என்று கூறிவிட்டு, பிறிதொரு இடத்தில் R 1, R 2, R 3 என்று கூறுகிறார்கள். இவற்றுக்கிடையில் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. எந்த மொழியை வீட்டில் வழங்குகிறார்களோ அந்த மொழியை ட1 என்று வைத்துக் கொண்டால், அந்த மொழியை ஒரு குழந்தை எழுத்து வடிவிலோ அல்லது வாசிப்பதிலோ கற்க முடிந்தால் அதை R1 என்கின்றனர். R என்றால் இங்கே Read and Write என்று குறிப்பிடுகிறார்கள்.
எனவே எந்த மொழியில் பேசுகிறதோ அதை எழுத்து வடிவில் எழுதினாலும் படித்தாலும் அதை R1, R2, R3 என்று சொல்கிறார்கள். ஆகவே L1, L2, L3 என்பதும் R1, R2, R3 என்பதும் ஒன்றுதான். ஆனால் ஒரு சில நேரங்களில் வீட்டில் பேசக்கூடிய மொழி ஒன்றாகவும் பள்ளிகளில் சென்று படிக்கக் கூடிய மொழி வேறாகவும் இருக்கலாம். வேற்று மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து பிறிதொரு மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அந்தச் சூழல் ஏற்படலாம்.
இப்போது மற்றொரு விசயத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. என்னவென்றால், ஒரு குழந்தை வீட்டில் பேசக்கூடிய L1 மொழி, அது தாய்மொழியாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தாய் மொழியில் நல்ல பயிற்சியைப் பெற்றுவிட்ட பின்பு, L2 L3 என்ற அடுத்தடுத்த மொழிகளையும் அந்தக் குழந்தை கற்றுத் தேர்ச்சி பெற பள்ளி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஒரு வாதத்திற்காக அது சரி என்று நாம் வைத்துக்கொண்டால்கூட, இங்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று பார்த்தால், L2 அல்லது L3 மொழிகளானது ஆங்கிலமாகவும் இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதைத்தான் நாம் இங்கே கோடிட்டுக் காண்பிக்க வேண்டியுள்ளது. ஆங்கிலமும் வேண்டுமானால் இருக்கலாம் எனில், ஆங்கிலம் என்பது ஒரு தேர்வு (Option)தான். ஆங்கிலத்தை அவர்கள் நிச்சயமாகச் சொல்லித் தர வேண்டும் என்று சொல்லவில்லை. ஆங்கிலமாகவும் இருக்கலாம் என்றுதான் சொல்கிறார்கள். இதைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.
இங்கே L1, L2, L3 என்ற மூன்று மொழிகளைப் பொறுத்த வரை, L1 என்பதைத் தாய்மொழியாக நாம் வைத்துக்கொண்டால், L2 , L3 என்னவாக இருக்கலாம் ?
அவர்களுடைய, அதாவது தேசிய கல்விக் கொள்கை 2020இன் பார்வையில் L 2 (அ) L3 ஆங்கிலமாகவும் அல்லது பிற மொழிகளாகவும் இருக்கக்கூடிய இந்தி மொழியாகவோ சமஸ்கிருதமாகவோ அல்லது வேறு மாநிலத்தில் வழங்கப்படும் மொழிகளாகவோ இருக்கலாம் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆவணத்தில் எங்கேயுமே இந்தியோ சமஸ்கிருதமோ என்று எந்த ஒரு மொழியையும் குறிப்பிடவில்லை என்பது உண்மைதான். அதேவேளையில் தேசிய கல்விக் கொள்கை 2020 அறிக்கையைப் படித்தவர்களுக்கு ஒன்று நன்றாகத் தெரியும். அதாவது, NEP 2020 என்பது மீண்டும் மீண்டும் சமஸ்கிருதத்திற்கும் அதற்கு அடுத்தபடியாக இந்தி மொழிக்கும்தான் முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது ஆங்கிலத்தை ஒரு தேர்வாக மாணவர்களுக்குக் கொடுத்துவிட்டால் ஒருவேளை ஆங்கிலத்தை அவர்கள் படிக்காமல் போனால் அல்லது அந்தப் பள்ளியில் ஆங்கிலம் சொல்லித் தராது விடப்பட்டால், நிச்சயமாக வேறு எந்த மொழி சொல்லித் தரப்படும்?
உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் L1 தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் L 2 (அ) L3 ஆங்கிலமாகவும் இருக்கலாம் பிற மொழியாகவும் இருக்கலாம் என்று சொன்னால், ஒருவேளை அந்தப் பள்ளியில் ஆங்கிலம் சொல்லித் தரப்படாமல் போனால் வேறு எந்த மாநில மொழியாக இருக்க முடியும்? மலையாள மொழியாக இருக்க முடியுமா? அல்லது கன்னட மொழியாக இருக்க முடியுமா? அல்லது தெலுங்காக இருக்க முடியுமா? அல்லது ஹிந்தியாக இருக்க முடியுமா?
தமிழ்நாட்டிலே தமிழுக்கு அடுத்தபடியாக ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக, ஓரளவிற்கு அதற்கான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் இந்தி மொழிக்குத்தான் இருக்கிறார்கள். அப்போது அங்கு தெலுங்கோ கன்னடமோ மலையாளமோ L2 என்ற இடத்திற்கு வர முடியாது. அல்லது L3 என்ற இடத்திற்கும் வர முடியாது.
ஆகவே L1 என்பதைத் தமிழாகக் கொண்டுவிட்டால், L2, L3 என்பது ஆங்கிலமாக இல்லாமல் போய்விட்டால் அங்கு இந்தியும் சமஸ்கிருதமும்தான் வரக்கூடிய சூழல் இருக்கிறது. இதைத்தான் தேசிய கல்விக் கொள்கையும் விரும்புகிறது. ஆக, இங்கு என்ன தெளிவாகிறது என்று சொன்னால், L1 – அது தாய்மொழியாக இருந்துவிட்டுப் போகட்டும். L2 L3 ஆகிய இரண்டும் இந்தியும் சமஸ்கிருதமாகவும் இருக்கட்டும் என்பதை மறைமுகமாகவும் ஆனால் தீர்க்கமாகவும் முன்மொழிகின்றார்கள். இதை நேரடியாகச் சொல்லாவிட்டாலும் நிதர்சனமாக இதுதான் நடைமுறையில் நடக்கப்போகிறது.
ஒருவேளை NCFFS என்ற இந்த ஆவணத்தை முழுக்க முழுக்க நடைமுறைப்படுத்திவிட்டார்கள் என்று சொன்னால், நிச்சயமாக மூன்று மொழிகள் என்பது வந்துவிடும். அந்த மூன்று மொழிகளில் முதலாவதாகத் தாய்மொழி இருக்கும்பட்சத்தில், இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழிகளாக இந்தியும் சமஸ்கிருதமும் வருவதற்குத்தான் மிகவும் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
அதுவும் குறிப்பாக, ஆங்கிலத்தை விருப்பப் பாடமாக வைத்துவிட்டால், ஒருவேளை ஆங்கிலத்தைச் சொல்லிக்கொடுக்காமல் போனால், இதுதான் நடக்கும். மற்றொன்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். ஆங்கிலத்தை ஒரு அந்நிய மொழியாகச் சித்திரிக்கும் போக்கு அதிகமாக நடந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில், ஆங்கிலத்தைப் புறக்கணிக்கும் நிலையும் இங்கே இருப்பதை நாம் மறுக்க முடியாது.
இந்தச் சூழலில் ஒரு மாபெரும் கல்வியாளரும் மாபெரும் மனித நேயச் சிந்தனையாளருமான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்களைப்பற்றி நாம் குறிப்பிட்டாக வேண்டும். ஈஸ்வர சந்திர வித்யாசாகர் அவர்கள் 19ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் தோன்றிய மாபெரும் சிந்தனையாளர், கல்வியாளர், மனிதநேயவாதி. அவர் சாதித்த பல செய்திகளைப்பற்றிக் கூற நேரமில்லை. ஆனால் குறிப்பிட்ட ஒரு செய்தியைச் சுருக்கமாகக் கூற விழைகிறேன்.
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சமஸ்கிருத மொழியிலே மிகப் புலமை வாய்ந்தவர். சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் அதன் வேதாந்த இலக்கியங்களிலும் மிகவும் நன்றாகத் தேர்ச்சி பெற்றவர். ஆனால் அவர் சமஸ்கிருத இலக்கியங்கள் என்பவை மிகவும் பழமைவாதக் கோட்பாடுகளையும் வேதாந்தக் கோட்பாடுகளையும் சொல்லித் தருகின்றன என்று சொல்கிறார். அதிலுள்ள பல அம்சங்கள் நடைமுறைக்கு ஒவ்வாதனவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அது ஒரு பொய்யான தத்துவமாக (False philosophy) இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளார்.
சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு கல்வியாளர், சமஸ்கிருதம் பற்றியும் அந்த இலக்கியத்தினுடைய காலாவதியான விஷயத்தைப்பற்றியும் சொன்னதோடு, அவர் பேராசிரியராக, கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய பல இடங்களில் சமஸ்கிருதம் காலாவதியாகிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டி, அதற்குப் பதிலாக அவரது தாய்மொழியான வங்காள மொழியையும் ஆங்கிலத்தையும் கற்க முன்மொழிந்தார்.
ஆங்கிலத்தின் வழியாக ஐரோப்பிய வரலாறு, தத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றை நமது மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்பினார். ஆகையால் ஆங்கிலத்தை, அதன் முக்கியத்துவத்தை மிகவும் அழுத்தம் திருத்தமாக எடுத்துக் கூறினார். ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் NCFFS என்ற இந்த அறிக்கையிலே பல கல்வியாளர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். சாவித்திரி பாய் பூலே, ஜோதி ராவ் பூலே பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். விவேகானந்தரைப் பற்றிக் கூறியுள்ளார்கள். ஆனால் வித்யாசாகரை மறந்துவிட்டார்களா எனக் கேட்டால், அவர்கள் இப்படிப்பட்ட கல்வியாளரை, சிந்தனையாளரை மறக்கடிக்க முயற்சி செய்கின்றனர். ஏனெனில், வித்யாசாகர் சமஸ்கிருதத்துக்கும் அதனுடைய பழமைவாதக் கோட்பாடுகளுக்கும் எதிராக இருந்தார் என்ற காரணத்தால் அவர்கள் வித்யாசாகரைப் புறக்கணிக்கின்றார்கள்.
உண்மை என்னவென்றால், ஒரு குழந்தைக்குத் தாய்மொழி மிகவும் முக்கியம். தாய்மொழிக் கல்வி மிக முக்கியம். ஆனால் அதேவேளையில் இந்த உலகத்திற்கு ஒரு மிகப் பெரிய ஜன்னலாகத் திகழக்கூடிய ஆங்கில மொழி மூலமாக நவீன விஞ்ஞானக் கோட்பாடுகள், நவீன சிந்தனை ஆகியவற்றை ஒரு குழந்தை கைவரப் பெற வேண்டுமென்று சொன்னால் ஆங்கிலம் என்பது முக்கியம்.
ஆக, தாய்மொழி மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழி என்பது ஒரு குழந்தைக்கு அத்தியாவசியத் தேவை என்பதை உணர்ந்து அதைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வித்யாசாகர் நடைமுறைப்படுத்தினார் என்பதைப் பார்க்க முடிகிறது. அதை வலியுறுத்தவும் வேண்டியிருக்கிறது.
இந்தச் சூழலிலே இந்த மொழிக் கல்விக்கான NCFFS அறிக்கை என்பது ஒரு சிறந்த நல்ல அறிக்கையா அல்லது துரதிஷ்டவசமான ஒரு பிற்போக்குத்தனமான அறிக்கையா என்று நாம் ஆராய்ந்தால், இது பல உண்மைகளை மூடிமறைக்கக் கூடிய, இன்று கல்வி சந்தித்து வரும் பல சிக்கல்களையும் பல்வேறு துரதிஷ்டவசமான சூழல்களையும் மூடி மறைத்துவிட்டு, இந்தியப் பாரம்பரியம் இந்தியப் பாரம்பரியம் என்று வெறுமனே தம்பட்டம் அடித்து, ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டியமைக்க முயல்கிறது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இந்தியப் பாரம்பரியத்தையும் தேசியப் பெருமையையும் ஊட்டி, ஒருவிதமான பொய்யான சிந்தனையை அவர்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு அவர்கள் முயல்கிறார்கள்.
இது ஒரு குருட்டுத்தனமான, ஒருவிதமான பாசிச அணுகுமுறையைக் கொண்ட கொள்கை அறிக்கையாகத் திகழ்கிறது என்பதைக் காண முடிகிறது.
(விவாதம் தொடரும்)
- கட்டுரையாக்கம்: உமா மகேஸ்வரி, கல்விச் செயல்பாட்டாளர்

Comments (0)