கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்!

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கும் நிலை.

என்ற வள்ளுவர் குறளின்படி நாட்டின் வளர்ச்சியில் உழவர்கள் முக்கியத்துவத்தை பற்றி கூறியுள்ளார் வள்ளுவர்.

இன்றைய கார்ப்பரேட் காலகட்டத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே உணவு என்கிற சூழலை உருவாக்கி வருகிறது மத்திய அரசு. இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் வகையிலும் மற்றும் ஆலைகள், சுரங்கங்களின் விரிவாக்கத்தை எளிமைப்படுத்தும் விதமாகவும் புதிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மதிப்பீடு மசோதா – 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மானுடவியல் வளர்ச்சியின் முதல் கூறு விவசாயம் என்பது வரலாறு. உணவுப் பொருட்களை உருவாக்கிக் கொண்ட மனித இனம் நிலம் தொடர்பான தனது சமூக வளர்ச்சியில், நீர்ப்பாசன வேளாண்மை மூலமாக பல்வேறு சிறப்புக்கூறுகளால் உலகிற்கு அறிமுகமானது நவீன விவசாயம். புதிய உத்திகளோடு நவீன வேளாண் தொழிலால் வளர்ந்து வரும் இந்திய விவசாயம் இன்று  பெருநிறுவனங்களும், அரசியல்வாதிகளுக்கும் அடிமைப்பட்டு கிடப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் இந்திய விவசாயிகள்.

அதற்கு உதாரணமாக தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மதிப்பீடு மசோதாவை தாக்கல் செய்துள்ள விவகாரம் இந்திய விவசாயிகள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2006ல் நிறைவேற்றப்பட்ட சுற்றுச் சூழல் சட்டத்தினை  ரத்து செய்துவிட்டு, கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான வகையில் திருத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு மதிப்பீடு மசோதா – 2020 நாட்டில் உள்ள விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், ஒடீசா ஆகிய மாநிலங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மீறப்படுவதாக இந்த மசோதாவை எதிர்த்துக் மேற்கண்ட மாநிலங்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

ஒருகாலத்தில் பொதிகை தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சி வந்தாலே அந்த நிகழ்ச்சியை மாற்றிவிட்டு அடுத்த சுவாரசியமான நிகழ்ச்சிக்கு சென்று விடும் தொலைக்காட்சி ரசிகர்கள் போல தற்போது விவசாயிகள் வாழ்வாதாரம் அழிந்து வரும் நிலையில்  மத்திய மாநில அரசுகள் வேறு சுவாரசியமான திட்டங்களில் கவனம் செலுத்துவதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

நாம் நமது பள்ளிக்கூடப் புத்தகங்களில் இந்தியா ஒரு வேளாண் நாடு எனவும் உழவனே இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு என படிக்க வைக்கப் பட்டிருக்கிறோம். ஆனால் உழவனின் முதுகெலும்பே முறிக்கப்படும் அவலம் வேளாண் தொழிலுக்கு கிடைத்த பரிசு என்பதை நாம் அறிவோமா.?

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மசோதாவில் சிறப்பம்ச திட்டங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி பாசனத் திட்டங்கள், கட்டிடங்கள், கட்டுமானங்கள் மற்றும் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை நவீனப்படுத்துதல், உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல், தேசியப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், 12 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடல்சார் திட்டங்கள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு வழங்குகிறது இந்த மசோதா.

உச்ச நீதிமன்றத்தால் தடை அறிவிக்கப்பட்ட பின்னும் சென்னை- சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு அதிமுக  அரசு அக்கறை காட்டுவது இந்த மசோதாவின் உற்சாகத்தில் தான் என்பது கூடுதல் தகவல். இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் சென்னை – சேலம் எட்டு வழி சாலையை திட்டத்திற்கு பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்வு அன்றாட தகவலாக மாறி வருவதால் இவர்களின் வாழ்க்கைய பற்றிய ஆர்வமின்றி விவசாயிகளைக் கடந்து செல்கிறோம்.

தங்கள் பயிர்களை பாதுகாப்பதற்காக வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டும், ரயில் தண்டவாளங்கள் கிணறுகள், சுருக்கு கயிறு மற்றும் மத்திய மாநில அரசுகள் என இந்திய விவசாயிகளின் வாழ்வை இறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது அறிக்கை ஒன்று.

தற்போது நடைமுறையில் உள்ள  தாராளமய மாக்கலை குறிக்கோளாகக் கொண்ட இந்திய அரசு செயல்படுவதும்.

இதற்கு ஆதரவாக உலக வங்கியும் உலக வர்த்தக நிறுவனங்களும் இணைந்துள்ளதால். உலக நாடுகளின் இந்த விற்பனை கொள்கைகளை நிறைவேற்ற இயற்றப்பட்ட புதிய  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற தமிழக அரசும் மத்திய அரசும் போட்டிபோட்டு ஆர்வம் காட்டி வருகின்றன.

இதன் காரணமாகவே கொரோனா ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட திட்டங்களை நிறைவேற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் முழு முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. அதன்படி வெளிநாட்டுப் பொருட்களின் தங்குதடையற்ற இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும் வரைவு.

வேளாண்துறையில் நீர் பாசனம் உள்ளிட்ட இன்றியமையா தேவைகளுக்கு அரசு மூலதனம் படிப்படியாக குறைக்கப்படுதல்.

மின்சாரம், விதைகள், உரம், பூச்சிமருந்து ஆகிய விவசாயத்திற்கான அத்தியாவசிய பொருட்களுக்கு அரசு மானியங்கள் அடியோடு ஒழிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளன. இப்படி இந்திய விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக உள்ள மேற்கண்ட சட்டவரைவு நடைமுறைப் படுத்தப்படும் வேளையில்.  மத்திய மாநில அரசுகள் வழிகாட்டுதலின் படி உழவர்களும் வேளாண் தொழிலும் எப்படி தன்னிறைவை எட்ட முடியும் என்ற பெரும்கேள்வி எழுகிறது?

1995 இல் இருந்து இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலோடு 2016 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் சுமார் 11 ஆயிரத்து 370 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக கூறுகின்றன தேசிய குற்ற ஆவண புள்ளி விவரங்கள்.

இந்தியாவில் மொத்தம் 24.7 கோடி குடும்பங்களில் 16.8 கோடி குடும்பங்கள் கிராமங்களில் வசிக்கின்றனர் எனவும். இதில் 9.2 கோடி குடும்பங்கள் வேளாண் தொழிலை மட்டுமே நம்பி உள்ளன என்றும். இந்தியாவில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் நிலங்களின் சராசரி அளவு 4 எக்டேராக குறைந்து வருவதாக வருத்தம் தெரிவிக்கின்றட இந்திய புள்ளியியல் திட்ட மேலாண்மை துறை. உலக நாடுகளைப் பொறுத்தவரையில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் சராசரி நிலங்கள் 14 ஏக்டேராக உள்ளது குறிப்பிடத் தக்கது.

2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என கடந்த பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போதை சுற்றுச் சூழல் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்ததன் மூலமாக இந்திய விவசாயிகள் வாயில் வாய்க்கரிசி போட ஒப்புதல் அளித்துள்ளார் என்று தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர் ஒட்டுமொத்த வேளாண் தொழிலை நம்பியுள்ளவர்கள்.

ஏற்கனவே கடந்த 1991-ம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டு போயுள்ளதாகவும். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு போயுள்ளதாக பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நீர் நிலைகளை காப்பாற்றி மக்களை காக்க வேண்டிய இந்த அரசே அவற்றை அழிப்பதில் அசுரவேகம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் எனவும் இந்தியாவில் விவசாயத்தின் அழிவு என்பது நம்மிடம் வளர்க்கப்பட்ட இறையாண்மையை அழித்து விவசாயிகள் அனைவரும் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும்  சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

நமது பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது. விவசாயத்தின் உற்பத்தி திறன் குறைவது என்பது நாட்டின் வளர்ச்சி விகிதத்தின் குறைவு என்பதின் காலக்கோடு என்பதை அரசு  உணர வேண்டும். இந்தியாவில் விவசாயமும் விவசாயிகளும் எப்போது தன்னிறைவு பெறுகின்றனரோ அப்போதுதான் நமது தேசமும் வளர்ச்சியடையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஒரு  நாடு உண்மையிலேயே வல்லரசு நிலை அடைந்துவிட்டது என்பது நவீன ஆயுதங்களை இறக்குமதி செய்வதல்ல.

அந்த நாட்டின் உழவர் பெருமக்கள் கடனில் சிக்காமல் உணவு விளைச்சலின் அபார உற்பத்தியில் தன்னிறைவு அடைய வைப்பதே உண்மையான வல்லரசு என அர்த்தமாகும்.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *