சமூக விரோதிகளின் கூடாரமா சாத்தான்குளம் காவல்நிலையம்?

சாத்தான்குளம் படுகொலைச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மட்டுமல்லாது ஐ.நா. அமைப்பும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. வேலியே பயிரை மேய்வதுபோல, மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய காவலர்களே மக்களின் உயிரைப் பறிக்கும் கொலைகாரர்களாக மாறியிருக்கிறார்கள். 

இந்தப் படுகொலைகளை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நேரடி விசாரணைக்குச் சென்ற நீதிபதியையே சாத்தான்குளம் காவல்நிலையக் காவலர்கள் மிரட்டி இருக்கிறார்கள். விசாரணைக்குச் சென்றபோது தன்னை அவமதிக்கும் விதமாகக் காவல்துறையினர் நடந்துகொண்டதாகவும், தங்கள் உடல் பலத்தைக் காட்டும்விதமாகவே அவர்களின் நடவடிக்கைகள் இருந்ததாகவும், காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே மகாராஜன் என்ற காவலர் தன்னைப் பார்த்து “உன்னால ஒன்னும் புடுங்க முடியாதுடா” என்று மிரட்டியதாகவும் விசாரணை நீதிபதி பாரதிதாசன் உயர்நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல்  அனுப்பியுள்ளார். மேலும், “ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடியத் தாக்கப் பட்டுள்ளார்கள் என்பதை நேரடி சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மூலம் மாஜிஸ்திரேட் உறுதி செய்துள்ளார். லத்தியைக் கேட்டபோது ஒரு காவலர் தப்பி ஓடியதாகவும் காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் ஒருநாள் மட்டுமே இருக்கும் வகையில் செட்டிங் செய்துள்ளதால், அன்றையதினம் காவல்நிலையத்தில் நடந்த அனைத்து வீடியோ பதிவுகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் நீதிபதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். சாட்சியம் அளித்த பெண் காவலர் ஒருவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சாதாரண காவலர், மாவட்ட நீதிபதியையே மிரட்டும் அளவிற்குக் கொடூரமானவராக இருக்கிறார் என்றால், அந்தக் காவல் நிலையத்தில்  பொதுமக்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள்? வீடியோ பதிவுகள் அனைத்தையும் அழியும்படி செட்டிங் வைத்திருக்கிறார்கள் என்றால், எத்தனை பேர் இத்தகைய கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி யிருப்பார்கள்? இப்படியான கொடுஞ்செயல்கள் காவல் நிலையத்தில் அரங்கேறுவது உயர் அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் கொலைக்குக் காரணமான காவல்துறைக் கொலைகாரர்களைத் தற்காலிகப் பணிநீக்கம்கூடச் செய்யாமல், இதுவரை முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாமல் அவர்களைப் பாதுகாத்துவரும் தமிழக அரசு, தற்போது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதாக அறிவித்து நாடகமாடுகிறது. இந்தக் கொலைகளுக்கு சாத்தான்குளம் காவலர்கள் மட்டும் பொறுப்பல்ல. அவர்களின் உயரதிகாரிகள், இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர், கோவில்பட்டி கிளைச் சிறைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருமே இந்தக் கொலைகளில் கூட்டுக் குற்றவாளிகள்தான். அவர்கள் அனைவரையுமே பணியிலிருந்து நீக்கம் செய்து, வழக்கை முறையாக விசாரித்து தண்டனை வழங்கவேண்டும்.

சி.பி.ஐ. வழக்கு விசாரணையைத் துவங்கும்வரை இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். யார் இந்த வழக்கை விசாரித்தாலும், விசாரணையானது நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும். சாட்சியம் அளிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு வழங்கும் காவலர்கள், நேர்மையாகப் பணியாற்றுபவர்களாக இருப்பது மிக அவசியம். இல்லையேல், பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட காவலர்களை வைத்தே சாட்சிகளைக் கொலை செய்யவும் இந்தக் கொடூரர்கள் தயங்கமாட்டார்கள்.

மனித உயிர்கள் விலை மதிப்பற்றவை. அரசு என்பது மக்களுக்கானது. ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, இனியும் கொலைகாரர்களைப் பாதுகாக்க முயலாமல், மக்களைப் பாதுகாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபடுவதோடு, காக்கி உடைக்குள் ஒளிந்திருக்கும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு களையெடுக்கவும் வேண்டும். மேலும் காவல்துறையில் உரிய சீர்திருத்தம் மேற்கொண்டு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்களோடு இணைந்த ஒரு குழு ஒவ்வொரு காவல்நிலையத்திலும் அமைக்க்கப்பட வேண்டும்.  காவலர்கள் உண்மையிலேயே மக்களின் காவல்காரர்கள்தான் என்ற நிலையை உருவாக்கி, இனி ஒரு உயிரும் அதிகார வெறிக்குப் பலியாகாது என்ற நிலையை ஏற்படுத்துவதுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் கொலைக்கு வழங்கப்படும் நீதியாக இருக்கமுடியும்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *