”பா.ஜ.க. காலூன்றினால் தமிழகம் மோசமான நிலைக்குத் தள்ளப்படும்!”- பியூஸ் மானுஷ் ஆவேசம்
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சூழியல் போராளி பியூஸ் மானுஷ். பிறப்பால் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றாலும் அவரின் செயல்பாடுகள் அனைத்தும் தமிழக சுற்றுச் சூழலை பாதுகாப்பதிலேயே உள்ளது. சுவடுக்காக அவரிடம் பேசினோம்.
“காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின் வாக்குறுதியின்படி இந்தியா நடந்து கொள்ளவில்லை என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டுக்கு காரணம் என்ன?”
“கொரோனா காலத்தில் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தைக் கொண்டு வந்ததே மிகப்பெரிய தவறு. மக்களுக்கான இந்த திட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மிகப்பெரிய கோளாறுகளை உள்ளடக்கி வெளியிடப் பட்டுள்ளது. இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு மசோதாவால் எந்த ஒரு பயனும் இல்லை என்று பாஜகவைச் சேர்ந்த நிதின் கட்கரியே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதைதான் முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் வலியுறுத்தி உள்ளார்.”
“கொரோனா தொற்று அதிகரிக்க ஈஷா யோகா மையமும் ஒரு காரணம் என்று நீங்கள் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தீர்கள் அதன் உண்மைத் தன்மை என்ன சார்?”
“உலக நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வெளிநாட்டு பயணிகளின் வரவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த வேளையில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஈஷா யோகா மையத்தின் சார்பில் நடைபெற்ற சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு வந்திருந்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு சரியான மருத்துவ பரிசோதனை செய்தார்களா?
இந்த நிகழ்ச்சிக்கு வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பேர் வந்து இருந்தார்கள் என்கிற பட்டியல் மாவட்ட நிர்வாகத்திடம் உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் இதுபற்றி கேள்வி கேட்கவேண்டிய மாவட்ட சுகாதாரத் துறையும் மாநில அரசு மவுனம் காத்து வருகின்றன.
வெள்ளியங்கிரி மலையை ஆக்கிரமித்த போதும், காவேரி அழைக்கிறது இயக்கம் மூலமாக பொதுமக்களிடமிருந்து பணத்தை சுரண்டிய போதும் எப்படி இந்த அரசாங்கம் அமைதியாக இருந்ததோ, அதுபோலவே இந்த வைரஸ் தாக்குதலால் ஈஷா யோகா மையத்தில் ஏற்பட்ட மரணங்களை கண்டும் காணாதது போல மௌனித்து வருகிறது மாநில சுகாதாரத்துறை.”
“சென்னை சேலம் எட்டு வழி சாலை மற்றும் சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டதிற்கு மக்களிடையே எழுந்து வரும் எதிர்ப்புகள் பற்றி?”
“எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவிக்கு வந்த பிறகு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த பல்லாயிரக் கணக்கான மரங்கள் உரிய அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன. மரங்களை எதற்காக வெட்டினார்கள் என்று கேட்டால், அந்த இடத்தில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டு விட்டால் சரியாக போச்சு என்று கூலாக பதில்கூறியுள்ளார் முதலமைச்சர்.
சேலம் மக்கள் மீது அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் இவர், சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாமல், விவசாய நிலங்களை பாழாக்காமல் சேலத்திலிருந்து சென்னைக்கு புல்லட் ரயில் விடுவதற்கு முயற்சி எடுத்து இருந்தால் பாராட்டி இருக்கலாம். இந்த எட்டு வழி சாலை திட்டத்திற்கு ஆகும் செலவில் பாதி அளவு தான் புல்லட் ரயில் திட்டத்திற்கு ஆகும். மேலும் சேலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் அதிவிரைவு தேஜஸ் ரயில் இயக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இந்த விரைவு ரயில் அனுமதி கிடைத்தால் சேலத்திலிருந்து இரண்டரை மணிநேரத்தில் சென்னை போய் சேர்ந்து விடலாம். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பசுமையான விவசாய நிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை போடப் போவதாக இந்த திட்டத்திற்கு ஆர்வம் காட்டி வருகிறார் முதல்வர்.
சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு கூறவில்லை. ஆனால் விவசாய நிலங்களை கையகப் படுத்தாமல், மாநில அரசுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சேலம் நகரத்திற்கு வெளியே இருக்கின்றன. அந்த இடத்தில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யுங்கள் என்பதுதான் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. சேலம் புதிய விமான நிலைய விரிவாக்க திட்டம் ஒருபுறம் இருக்கட்டும். 1972இல் சேலம் விமான நிலைய கட்டமைப்புக்காக நிலம் கையகப்படுத்திய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. சேலம் இரும்பாலை திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நிலைமை இப்படி இருக்க புதிதாக சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மாநில அரசு வழங்கும் என்று என்ன உத்தரவாதம் உள்ளது? நமது விவசாயத்தை அழித்து எட்டு வழிச்சாலை போடப்போவதாக இந்த அரசு கூறுவதும் நகைப்பிற்கு உள்ளான ஒன்றுதான்.”
“வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் அரசின் நடவடிக்கை எப்படி இருக்கிறது?”
“ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் பத்து நாளில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பூரிகள் செய்து சேலம் வழியாக பயணித்த ரயில் பயணிகளுக்கு தினமும் கொடுத்து வந்தோம். இதுவரையிலும் சுமார் 3 லட்சம் முகக் கவசங்கள் வினியோகம் செய்துள்ளோம். ஒரு தனி நபரால் இவ்வளவு செய்ய முடிகிற போதும் இந்த அரசுக்கு மக்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லை. முதலமைச்சருக்கோ அமைச்சர் களை எப்படி வேலை வாங்குவது என்று தெரியாமல் விழிபிதுங்கி போயுள்ளார்.”
“மோடி எதிர்ப்பு எண்ணம் எப்போது தோன்றியது?”
“மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டிலிருந்தே குஜராத் மாடல் என்பது பொய் என்றுகூறி வருகிறேன். தற்போது கூட டோலேரா என்ற ஒரு நகரத்தை உருவாக்கி டெல்லியை விட ஆறு மடங்கு வளர்ச்சி அடைந்த நகரம் என்றும் ஷாங்காயை விட பத்து மடங்கு வளர்ச்சி அடைந்த நகரம் என்றும் இன்னமும் பச்சை பொய்யை கூறி வருகிறார். இதற்கு மேலும் மோடியை மக்கள் நம்பும் பட்சத்தில் நம்மை அந்தக் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. கடந்த ஆறு வருடமாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை கூட நடத்த வக்கில்லை இவருக்கு. பொய்யை மட்டுமே மூலதனமாக்கி மக்களை அடிமைப்படுத்தி கார்ப்பரேட் அரசியல் செய்து வருகிறார். ஒரு சமூக ஆர்வலராக இதை நான் எப்படி வரவேற்க முடியும்!”
“நேரடி அரசியலுக்கு வருவது போன்ற எண்ணம் உள்ளதா?”
“அரசியல் என்பது என்ன? நேரடியாகவோ மறைமுகமாகவோ மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும். அந்த வேலையை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன். ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பு மூலமாக அரசியலுக்கு வந்து மக்களிடம் வாக்குகள் பெற்றால் தான் நான் அரசியல் வாதியா? சேலத்தில் சுற்றியுள்ள பல ஏரிகளை பொது மக்கள் ஒத்துழைப்புடன் தூர்வாரி உள்ளேன், பச்சைப் பசேலென்ற காடுகளை உருவாக்கி உள்ளேன். தவறு செய்யும் அரசாங்கத்தை தட்டிக்கேட்க என்னை போன்ற பல சமூக ஆர்வலர்களை உருவாக்கி யுள்ளேன். நான் மக்களுக்கான அரசியல் செய்து கொண்டிருக்கிறேன். இதுதான் இன்றைய நிதர்சன அரசியல்.”
“திராவிட கட்சிகளால் தமிழகம் சீரழிந்து விட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீர்கள்?”
“என்னுடைய பூர்வீகம் ராஜஸ்தான். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடுதான். இந்தியாவில் வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தை போன்ற கல்வியறிவு, மருத்துவ வசதி, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்பட இவ்வளவு வளர்ச்சியடைந்த மாநிலத்தை யாராவது ஆதாரத்துடன் காட்ட முடியுமா? திராவிடர்கள் ஆட்சியில் இருந்ததால் தான் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலத்தில் திமுக அதிமுக என்ற திராவிட கட்சிகள் யார் வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம் பாஜகவை மட்டும் உள்ளே விட்டு விடக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஊழலை எப்போது வேண்டுமானாலும் அழித்துவிடலாம். ஆனால் சாதி மத பிரிவினை ஆதிக்க வெறி கொண்டவர்களை எப்போதும் மாற்ற முடியாது. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைத்தால் வட மாநிலங்களை விட மோசமான நிலைக்கு இந்த மாநிலம் தள்ளப்படும் என்பதில் மாற்று கருத்து இல்லை.”
“நித்தியானந்தா தற்போது எங்கு இருக்கிறார்?”
“இந்தக் கேள்வியை எச்.ராஜாவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நித்யானந்தா இந்தியாவில் இல்லை. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே நான் கூறிவிட்டேன். பல்வேறு வழக்குகள் பதியப் பட்ட பிறகுதான் குஜராத் நீதிமன்றத்தில் நித்தியானந்தா இந்தியாவில் இல்லை என்று ஒத்துக் கொண்டார்கள். நித்யானந்தா கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈகுவடாரில் தான் இருந்துள்ளார். அங்குள்ள மலைப்பகுதிகளை வீடியோ எடுத்து புதிதாக ஒரு தீவு வாங்கி உள்ளதாகவும் அந்த தீவிற்கு கைலாசம் என்று பெயரிட்டுள்ளதாகவும் பெரும் பித்தலாட்டத்தை கூறிவருகின்றனர்.இந்த அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டில் உள்ள குற்றவாளிகளை மிரட்டி அவர்களிடம் உள்ள பணத்தை பிடுங்கிக்கொண்டு வெளிநாடு களுக்கு அனுப்பி வைத்தது போல நித்தியானந் தாவிடம் இருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.”
“சமூகப் பணிகளில் ஈடுபடுவதற்கு உங்களுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது?”
“நான் ஒரு மூங்கில் விவசாயி. என் நண்பர்களுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மூங்கில் பயிரிட்டு அதன் மூலமாக கட்டில், ஊஞ்சல் போன்ற மர பொருட்களும், மலைத்தேன் மற்றும் கற்றாழை போன்ற இயற்கை பொருட்களை விற்பனை செய்து அதன் மூலமாக வரும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்தி வருகிறேன். அந்த வருமானத்தில்தான் மக்களுக்கான சேவையும் செய்து வருகிறேன். எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமோ கார்ப்பரேட் நிறுவனத்திடமோ கையேந்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எனக்கான சுயசார்பு பொருளாதாரத்தை நானே உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகிறேன். எனக்கு பிரச்சனை என்பது பணம் அல்ல. என்னைப் போன்று அரசாங்கத்தை கேள்வி கேட்க இன்றைய இளைஞர்கள் முன்வர வேண்டும். மக்கள் கேள்வி கேட்கும் பட்சத்தில் அரசாங்கம் தங்கள் செய்யும் தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். ஆனால்,தற்போதைய சூழலில் சமூகத்தின் மீது ஆர்வமுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வேதனை அளிக்கிறது.”
Comments (0)