கவிதை

வீழ்ந்து கிடந்தது தெருமூலையில்
கிழிந்த கம்பளியில் கசங்கிய கவிதை
குலுங்கிய கம்பளியில் இருமலின் இசை
எழுதிய கவிஞர் எண்திசை ஓடினர்
காற்றில் பக்கங்கள் பின்னால் புரண்டன
காலத்தின் கசடுகள் கவிதையாய்ச் சிரித்தன
ஞாலத்தின் தவறுகள் கிறுக்கலாய் விரிந்தன

இருட்டிய பிறகுதான் இவர்களின் சொர்க்கம்
முக்காடு மாக்களின் இடைகளின் ஏற்றம்
சாக்காடுச் சல்லாபச் சரித்திரப் பதிவேற்றம்
குலுங்கிய வளையினில் குதூகல ஆட்டம்
குழைந்த மைதொட்டுக் கவிதையின் ஓட்டம்
பல்மொழிக் கவிஞர் உரைபட்டி மன்றம்
சிதைந்த கழிவாய்க் கம்பளியில் ஒடுக்கம்

தேனிருந்த கூடுஅதுவோ தெருவினில் கிடக்குது
தேனுண்ட நரியெலாம் வேறெங்கோ சென்றது
மானென்று சொன்னதெலாம் மறுகி விலகிஓடியது
பழந்தின்ற வௌவால் பறந்தெங்கோ மறைந்தது
கறைநனைத்த அலையெலாம் திசைமாறிச் சென்றது
காலத்தின் கோலத்தால் நூலதுவும் கிழிந்தது
காமத்தின் குப்பையாகிக் கம்பளிக்குள் நடுங்குது

எண்திசைப் பறவைகள் நாடிவந்த ஆலமரம்
தன்னாசை எச்சமிட்டு ஆடிநின்ற இச்சைமரம்
நிலவொளிக் கவிஞர் கற்பனை காத்தமரம்
கணக்கின்றிக் காலிடை காமரசம் ஏற்றமரம்
உடையின்றி இரவினில் உல்லாசம் விற்றமரம்
எச்சங்கள் ஏற்றதனால் நாற்றத்தில் நலிந்தமரம்
விழுதுகள் இல்லாததால் வீழ்ந்திட்ட ஆலமரம்

  • கவிஞர் வைகறையான்

Comments (2)


Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
June 10, 2023

கடைசிப் பத்தியில் மட்டுமே கவிதை இருக்கிறது..
மற்றவை கொலுச் சொற்கள்..

சுதர்சனம்.E.S
சுதர்சனம்.E.S
June 15, 2023

வாழ்த்துகள்!

கடைசி வரிகள்👍👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *