திரை விமர்சனம்

ஒருவரது இதயத்திலிருந்து  வரும் ஒரு சில வார்த்தைகளும்கூட,  இன்னொருவரது வாழ்க்கையின் பிடிமானமாகி, சடுதியில் தெளிவை ஏற்படுத்தும் என்பதன் அழகான திரை வடிவம்தான், அஷ்ரப் ஹம்சா எழுதி இயக்கி, மலையாளத்தில் உருவாகி, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் தமிழ் வசனங்களுடன் வெளியாகியுள்ள ‘சுலைகா மன்சில்’.

சுலைகாவின் ஒரே மகள் ஹாலா. அவள் விரும்பும் ஆஷிக்கிடம் தான் எதிர்பார்க்கும் தகுதியில்லை என்று மூத்த சகோதரன் சமீர் மறுக்க, எதிர்பாராமல் விபத்தில் அவன் உயிர் இழக்கிறான்.  பிறகு சகோதரன் பார்க்கும் வரன்களையெல்லாம் ஏதோ ஒரு காரணம் கூறி, ஐந்தாண்டுகளாக மறுத்துவரும் ஹாலா, ஒரு கட்டத்தில் அமீனை மணக்கச் சம்மதம் தெரிவிக்கிறாள்.

நிச்சயதார்த்த நிகழ்வுக்கு முன்னதாக, வளைகுடா நாட்டிலிருந்து வந்திருக்கும் அமீன், ஹாலாவைத் தொடர்புகொண்டு பேச முயல்கிறான். விருப்பம் இருந்தும் வீட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளால் அவளால் பேச இயலாத நிலை. அதைப் புரிந்து கொள்ளாத அமீன் அவளிடம் கடுமையாகப் பேசிவிடுகிறான். நண்பன் அன்வர் எடுத்துக் கூற, அவளிடம் மன்னிப்புக் கோருகிறான். அன்றிரவு அவளது வீட்டின் பின்புறம் சந்திக்கிறான். பேச்சு வாக்குவாதமாகிவிட, திருமணத்தை நிறுத்திவிடுவதாக அவன் முடிவு செய்கிறான். திருமணம் பிரச்சனையில் முடிந்ததா, பிரச்சனை தீர்ந்து திருமணம் முடிந்ததா என்பதுதான் ‘சுலைக்கா மன்சில்’ படத்தின் மீதிக் கதை.

ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழும் எளிமையான சம்பவங்களின் தொகுப்பாக, படம் முழுவதும் ஒரே சீராக, கலகலப்பாகச் செல்ல மாப்பிள்ளை, மணப்பெண் உள்ளங்களில் மட்டும் ஏற்றமும் இறக்கமுமான உணர்ச்சி அலைகள். இரு வேறு நிலைகளையும் அழகியலுடன் வழங்கியிருக்கிறார் இயக்குநர் அஷ்ரப் ஹம்சா.

ஹாலாவாக அனார்கலி மரிக்கர், குதூகலக் காதலையும் கொஞ்சம் வெறுமையையும் வரப்போகும் புதிய உறவில் தெளிவையும் உறுதியையும் அவற்றுக்கு ஏற்ற முகபாவங்களுடன், அழகுற வெளிப்படுத்தும் பாங்கு பாராட்டுக்குரியது.

லக்மேன் அவரன் அமீன் பாத்திரத்தின் அவசரத்தன்மை கொண்ட, உணர்ச்சிவயப்பட்ட, சற்றுக் குழப்பமான தன்மையை நடிப்பில் குழப்பம் இல்லாமல் செய்துள்ளது சிறப்பு.

செம்பொன் வினோத் ஜோஸ் (சமீர்), ஆமல்டா லிஸ் (பத்துல்),

சபரீஷ் வர்மா (ரம்ஜான்), தீபா தாமஸ் (டாக்டர் அமீனா), நவ்ஷத் அலி (அன்வர்), அர்ச்சனா பத்மினி (ஹவ்வா), மம்மு கோயா (அப்துல் ரகுமான்),  சுபா ஸ்ரீதரன் (சுலைகா), ஷெபின் பென்சன் (ஆஷிக் மலியெக்கல்) உட்பட துணைப் பாத்திரங்களை ஏற்ற அனைவரும் தத்தம் பங்களிப்பை  நிறைவாகவே வழங்கியுள்ளனர்.

“ஜென்னத்துக்கே வந்துட்ட மாதிரி இருக்கு…”
“ஜென்னத்துன்னா… சொர்க்கம்னு அர்த்தம்”
“அப்பா.. சொர்க்கத்துல இப்படியெல்லாம்தான் லைட் போட்டுருப்பாங்களா?”

“முறையா என்ன கூப்பிடல.. எனக்குத் தன்மானம்தான் முக்கியம்”
“என்னால நடக்கிற கல்யாணத்துக்கு என்னையே கூப்பிட வருவியா? நாங்க அங்க வர்றதுக்குத்தான் கிளம்பிட்டு இருக்கோம்”

“என்னடா தலை மட்டும் தனியா வருது?”
“உடம்பும் இருக்கு”

“செருப்பு இல்லாம கபரஸ்தான் வழியா போனா, கல்லு இல்ல, பாம்புகூட குத்தும். எப்பவும் ‘சென்டிமென்ட்ஸ்’சோட சுத்தனா இப்படித்தான் நடக்கும்”

“படா பையாவா இருக்கறது ரொம்பக் காம்ப்ளிகேட்டட் பொசிஷன் இல்ல?”

“பார்லர்க்கா? ஏற்கனவே அங்க இருந்து வந்த மாதிரிதான் இருக்கீங்க. திரும்ப பெயிண்ட் அடிக்கப் போறீங்களா?”

“கொஞ்ச நேரத்துல அப்படி என்ன பேச முடியும்?”
“காலைல எழுந்து சுலைமானி டீ குடிப்பியா? இல்ல.. பிளாக் காபி குடிப்பியான்னு கூடத் தெரியாதே!”

“இது நல்லா இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இத போட்டுக்க வேண்டாம், போட்டுக்கறேன்னு அவர்கிட்ட ஒரு வார்த்த மட்டும் சொன்னா போதும், மத்தத நான் பாத்துக்கறேன்”

“உங்களுக்கிருக்கற சாய்சும் பெர்சனாலிட்டியும் எனக்கும் இருக்குமில்ல?”
“நீங்க ஹேப்பியா இல்லன்னா எங்க பைய்யாகிட்ட வந்து பேசுங்க, பொறுமையா டைம் எடுத்துட்டு லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கலாம்”

“நான் வீட்டுக்குப் போய் சொல்லட்டுமா, ஹாலா?”
“அப்போ அவங்க சந்தோஷம் முடிஞ்சு போயிடும்”
“உங்களுக்கு இத்தனை பேரோட சந்தோஷத்தக் கெடுக்கணும்னு தோணல இல்ல.. இதவிடப் பெரிய குவாலிட்டி உள்ள லைஃப் பார்ட்னர் எனக்கு வேணும்னு நான் ஆசைப்பட்டதில்ல”

~இவை ரசிக்கத்தக்க, அர்த்தபூர்வமான வசனங்களில் சில.

“நாளைக்குதானே உங்க அண்ணனோட கல்யாணம்?” என்று இளநீர்க் கடைக்காரர் அமீனிடம் கேட்பதும் அதற்கு அமீன் மறுப்பேதும் சொல்லாததும் நம்மைக் குழம்பச் செய்கிறது.  

கண்ணன் பட்டேரியின் ஒளிப்பதிவு, கண்களுக்குக் குளுமை. பாடல் காட்சிகளைப் படமாக்கிய விதமும் அருமை. பாடல்களுக்கான விஷ்ணு விஜயின் துள்ளலான இசை தாளம் போட வைக்கின்றது. பின்னணி இசையும் அருமை. நவ்புல் அப்துல்லாவின் படத்தொகுப்பு கச்சிதம்.

வெறும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை கலந்து கலகலப்பாகவும் இளைய தலைமுறைக்கு ஒரு ‘பிரீ வெட்டிங் கவுன்சிலிங்’ போலவும் ‘சுலைகா மன்சில்’ படத்தை வழங்கியுள்ள இயக்குநர் அஷ்ரப் ஹம்சாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

மதிப்பெண் : 7.5/10

  • மது ராஜேந்திரன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *