இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.
இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act) எனப்படும் ‘சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது.
இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டையும் எதிர்த்து முனைப்புடன் இயக்கம் நடத்த வேண்டிய தேவையை பாசிச எதிர்ப்பு மற்றும் குடியாட்சிய ஆற்றல்கள் போதிய அளவு உணரவில்லை எனத் தோன்றுகிறது.
இந்நிலை குறித்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில், என் ஐ ஏ குறித்தும் ஊபா குறித்தும் அண்மைக்காலத்தில் இவை ஏவப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும் மக்களிடையே முனைப்புடன் பரப்புரை செய்யத் தீர்மானித்துள்ளோம்.
இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் தடைசெய்யப்பட்டவுடன் அவ்வமைப்பைக் கலைத்துவிட்டதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துவிட்டனர். ஆனால் சுமார் ஏழு மாதங்கள் கழித்து, அவ்வமைப்பில் நிர்வாகியாய் இருந்த சென்னையைச் சேர்ந்த தோழர் அப்துல் ரசாக் உள்ளிட்ட ஐந்து இசுலாமியர்கள் கடந்த மே 9 அன்று தேசியப் புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்காக முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் வாதாடினார்கள். எந்த வழக்குக்காக அவர்கள் வாதாடிக்கொண்டிருந்தார்களோ அதே வழக்கில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிடுகின்றனர்; சட்டவிரோதச் செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர்; இரு பிரிவினருக்கு இடையே பகை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்; தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்சேர்க்கின்றனர்; பேரணி நடத்துகின்றனர்; ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இரகசியத் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்றனர் போன்ற தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இவ்வழக்கைப் போட்டிருப்பதாகச் சொல்கிறது என்.ஐ.ஏ..
பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த செப்டம்பர் 28ஆம் நாள் தடைசெய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 19 அன்று போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(B), 153-A, 153-AA ஆகியவற்றின் கீழும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13,17,18, 18(B), 38, 39 ஆகியவற்றின் கீழும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 9 பேர் சிறைபட்டிருந்தனர். ஊபா உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றின் தமிழ் மாநில அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் காலித் முகமதுவும் அந்த 9 பேரில் ஒருவர்.
கடந்த ஏப்ரல் 13 அன்று மேற்சொன்ன பிரிவுகளுடன் ஊபா பிரிவுகள் 20, 22B-ஐயும் சேர்த்து இன்னொரு வழக்கு போடப்பட்டிருந்தது. முதல் வழக்குப் போடப்பட்டதோ ஏப்ரலில். ஆனால், அதற்கான கைது நடவடிக்கையை என்.ஐ.ஏ. மேற்கொண்டது செப். 22இல். இதில் 21 பேர் சிறைப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர்.
உரத்து எழுப்ப வேண்டிய கேள்விகள்:
பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி மேற்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்ததாக என்.ஐ.ஏ. சொல்கிறது. அந்தத் தகவல்களைக் கொண்டு ஏப்ரலில் ஒரு வழக்குப் போட்டுள்ளது. பின்னர் அதே தகவல்களைக் கொண்டு இன்னொரு புதிய வழக்கை செப்டம்பரில் பதிந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைத் தவிர வேறெந்த மாற்றமும் இவ்விரு வழக்கிலும் இல்லை. ஒரே குற்றத்திற்கு இரு வேறு வழக்குகள் போடுவது சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பானது இல்லையா?
பயங்கரவாதக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்ரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு, ஐந்து மாதங்கள் கழித்து புதிய வழக்குக்காகக் கைது செய்திருப்பதிலிருந்தே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை அம்பலமாகிறது இல்லையா?
ஊபா பிரிவு 13, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது பற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்ட சட்டவிரோதச் செயல்கள் என்ன? இது பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லாமல் பிரிவு 13ஐ வழக்கில் சேர்த்தது சட்டப் புறம்பானதில்லையா?
இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் எங்கு, எப்போது, என்ன பேசப்பட்டது?
பிரிவு 38,39 ஆகியவை பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராய் இருப்பது பற்றியது. பாப்புலர் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு என்பதற்காகத் தடை செய்யப்படவில்லை. மாறாக, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்ற பெயரிலேயே தடைசெய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அப்படித் தடைசெய்யப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்பே ஊபாவின் இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்தமுடியுமா?
வழக்கம்போலவே, ஊபாவின் பிரிவு 18, பயங்கரவாதச் செயல்களை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்கான பிரிவு இவ்வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம்போலவே, எவ்வித பயங்கரவாதச் செயல்களும் நடக்காமலே இப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிவைக்கப்படும் வழக்கறிஞர்கள்:
இவ்வழக்கு சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை ரத்து செய்யக் கோரி குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். குற்றஞ் சாட்டப்பட்டவர்களை என்.ஐ.ஏ. தன் விருப்பப்படி விசாரணைக்கு அழைப்பதையும் பொருட்களைப் பறிமுதல் செய்ததையும் அவர்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள்தான் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் ஆவர். முகமது அப்பாஸ் இவ்வழக்கை எதிர்த்த 10 வழக்குகளில் வாதாடியவர்; 4 வழக்குகளில் முகமது யூசுப்பும் வாதாடியிருந்தார்.
இதற்கிடையே 05.03.2023 அன்று மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரை ‘விசாரணை’ என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரி டி.எஸ்.பி. செந்தில்குமார் கூட்டிச் சென்றார். என்.ஐ.ஏ அதிகாரிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதால் மயங்கி விழுந்த ஜின்னா இறந்துவிடுவாரோ என்று அஞ்சி உடனே அவரை மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேர்த்தனர். ஆனால், அவருக்கு வலிப்பு வந்த நிலையில் மருத்துவமனைக்கு அருகில் கிடந்ததாக இட்டுக்கட்டுகின்றனர்.
இவ்விசயத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கையும் களவுமாகச் சிக்கும் வகையில் மருத்துவமனையில் ஜின்னாவை சேர்க்கும்போது பதிவான சிசிடிவி காணொளிகளை வழக்கறிஞர் முகமது அப்பாசு பெற்றுவிட்டார். இது டி.எஸ்.பி. செந்தில்குமாருக்கு ஆத்திரமூட்டுகிறது. என்.ஐ.ஏ. வின் சித்திரவதையை அம்பலப்படுத்தி முகமது அப்பாஸ் ஒரு முகநூல் பதிவை எழுதினார். இதனால் ஆத்திரம் அடைந்த என்.ஐ.ஏ. டி.எஸ்.பி செந்தில்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ‘என்.ஐ.ஏ. மீதான அவதூறு பரப்பல்’ என்று முகமது அப்பாஸ் மீது புகார் செய்தார்.
இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களைச் சேர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டிக் கைது செய்திருக்கிறது என்.ஐ.ஏ. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? என்.ஐ.ஏ. வழக்குகளுக்கு எதிராக வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்து சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன?
இதைக் கண்டித்து மதுரை ‘பார் அசோசியேசன்’ தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரியது. முகமது அப்பாசையும் முகமது யூசுப்பையும் பொய் வழக்குகளில் கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
வழக்கறிஞர்களுக்கு எதிரான இதுபோன்ற பயங்கர அச்சுறுத்தல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மே 30 அன்று சென்னையில் நடந்த ஊடகச் சந்திப்பில் மேனாள் உச்சநீதிமன்ற நீதியர் மார்கண்டேய கட்ஜூ முழங்கினார்.
இஸ்லாமியர்களைக் குதறும் என்.ஐ.ஏ.
திறந்த வீட்டில் நுழைந்த நாய் போல் என்.ஐ.ஏ. தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொதுச்சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது.
பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக்கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரை குத்தி அச்சுறுத்த நினைக்கிறது பாசிச பாஜக அரசு.
கடந்த செப்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிக்கையை அணியமாக்க மார்ச் 27 வரை இழுத்தடித்தது என்.ஐ.ஏ. அதையும்கூட நீதிமன்றத்தில் முன்வைக்காமல் காலந்தாழ்த்தியது; குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான் ‘குற்றப்பத்திரிக்கையை என்.ஐ.ஏ. வெளியிட்டாக வேண்டும்’ என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்து, கூடுதல் குற்றப்பத்திரிக்கையை அணியமாக்கியுள்ளது என்.ஐ.ஏ.
கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக்கொண்டு, ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைகட்டத் துடிக்கிறது என்.ஐ.ஏ. கேட்பார் யாரும் இல்லை என்பதுபோல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கின்றன.
பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!
ஊபா வந்த பாதை:
திமுக திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிக்கொண்டிருந்த பின்புலத்தில், தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை தேசிய ஒருமைப்பாடு மற்றும் வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 19ஐத் திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு இணங்க 1963ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16வது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக்கூடிய திருத்தத்தைப் புகுத்தியது.
மேலும் பிரிவினைக் கோரிக்கையைக் கொண்டிருக்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவல்ல திருத்தங்களும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, ‘நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் காத்து நிற்பேன்’ என்று உறுதிமொழி ஏற்கும் திருத்தமும் அப்போது செய்யப்பட்டது.
16ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் செயல்படுத்தும் நோக்கில் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதுவரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாகக் காரணம் சொல்லப்பட்டது.
மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறை சட்டங்கள் ஜனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தைக் கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதை ஆளும் வர்க்கம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
2001ஆம் ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றது அமெரிக்கா. புதுத் தாராளியப் பொருளியல் கொள்கையை எதிர்க்கும் மேற்காசியாவில் உள்ள அரபு நாடுகளை ஒடுக்குவதற்கு அவர்களின் எதிர்ப்பை ‘பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் புதுத் தாராளியம் என்னும் அரசியல் பொருளியல் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான இராணுவக் கோட்பாடாக வடிவமைத்தது அமெரிக்கா. உலகில் உள்ள எல்லா அரசுகளும் தன்னாட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அமெரிக்க வல்லரசியம் (ஏகாதிபத்தியம்) உருட்டிவிட்ட ‘பயங்கரவாதத் தடுப்பு’ என்ற பகடைக்காயைப் பயன்படுத்திக்கொண்டன.
2002ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைச் சாக்காகக் கொண்டு பொடா சட்டத்தை பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. அந்தக் கறுப்புச் சட்டத்தின் பேயாட்டம் கிளப்பிவிட்ட போராட்டப் புழுதியால் சட்டத்தைத் திரும்பப்பெறும் கட்டாயம் ஏற்பட்டது. வழமைப் போலவே, 2004ஆம் ஆண்டு பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்றவுடன் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தில் (ஊபா) பயங்கரவாதத் தடுப்புக் கூறுகளைச் சேர்த்தது காங்கிரசு அரசு. சட்டவிரோதத் தடுப்புச் செயல்களின் வரைவிலக்கணத்தில் ‘பயங்கரவாதச் செயல்’, ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகியவை சேர்க்கப்பட்டன. பிணை கிடைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் சிறைப்பட்டவரின் முதல் நோக்கிலான குற்றமின்மையை நீதிமன்றம் ஒப்புகொண்டால்தான் பிணை தரப்படும் என்ற திருத்தம் செய்யப்பட்டது.
2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு ஊபா சட்டம் திருத்தப்பட்டது. இச்சட்டத்தில் உள்ள பிரிவு 43(D) இல் செய்யப்பட்ட திருத்தங்கள் பிணை கொடுப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. ஆறு மாதத்திற்கு மேல் தடுத்து வைப்பதற்கும் புலனாய்வு செய்வோர் 90 நாட்களுக்குள் புலனாய்வை முடிக்க இயலாவிடில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுத்து வைப்பதற்கான காலத்தை 180 நாட்கள் வரை நீட்டிக்கவும் திருத்தங்கள் வழிவகுத்தன. இந்தத் திருத்தத்தின் மூலம் ஊபா என்பது பண்பளவில் ஆபத்தான சட்டமாக மாற்றப்பட்டது. இதே ஆண்டில், என்.ஐ.ஏ. சட்டமும் இயற்றப்பட்டு என்.ஐ.ஏ. என்றொரு புதிய புலனாய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது.
2012 இல் மீண்டும் ஒருமுறை இச்சட்டம் திருத்தப்பட்டது. ‘Financial action task force‘ என்ற பன்னாட்டு அமைப்பில் ஒப்புக்கொண்டதற்கு இணங்க, பண மோசடியையும் பயங்கரவாதத்திற்குப் பணம் கொடுப்பதையும் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் திருத்தங்கள் செய்யப்பட்டன. எந்த ஒரு இயக்கத்தையும் காரணம் சொல்லாமல் ‘சட்ட விரோதம்’ என அறிவித்து, கைதுகளைச் செய்யலாம். ஆறு மாதங்கள் வரை இப்படி சட்டவிரோதமாக அறிவித்ததற்கான காரணங்கள் என எதையும் சொல்ல வேண்டியதில்லை ஆகிய திருத்தங்களும் செய்யப்பட்டன.
(அடுத்த பகுதியில் முடியும்)
- தியாகு

சிவ சங்கரன்
June 19, 2023அடக்குமுறைக்கு எதிராக மக்கள் திரளும் வரை ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கையாள்வது வழக்கமாகவே தொடரும்.. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை போராட்ட வியூகங்கள் வகுத்துச் செயல்படுவது அவசியத்தேவை..
சரியான நேரத்தில் இந்தக் கட்டுரையை வெளியிட்ட சுவடு வுக்கு பாராட்டுகள்..❤