கவிதை
நீள் சன்மார்க்க வெண் தந்தம்
வண்ணத்துப் பூச்சிகளுக்கு
வளைந்துகொடுப்பதைக் கண்டு
உங்கள் எண்ணப் புழுக்களால்
துளையிட்டு நுழைய முயல்கிறீர்கள்
நெருப்பைத் துளையிட
புழுக்களால் முடியுமோ?
சன்மார்க்கத்தைத் துளையிட்டு
சனாதன இசை கேட்க விரும்பும்
உங்கள் செவிகளால்
சத்ய தரும சாலையின்
சடசடப்பைத் தாங்க இயலுமா?
உங்கள் அகப் பை
குப்பைகளை வாரக்கூடியது
தரும சாலையின் அகப்பை
எளியோரின் தவிப்பைத் தீர்க்கக் கூடியது
இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்களென
மீண்டும் சொல்கிறோம்
மட்கும் மட்கா என்ற
இரண்டுள்ளும் அடங்காதவற்றை
மறுசுழற்சி செய்ய முயன்று
சூழலுக்கு ஏன் சீர்கேடு செய்கிறீர்கள்?
ஞானசபைக்கு வந்து
நாடக சபையின் வசனமான
இந்திரசபை போலிருக்கிறது என்கிறீர்கள்
இல்லை
இங்கே கற்பகத் தரு ஏதுமில்லை
தனித்திரு இருக்கிறது
உங்களிடமிருந்து தனித்திருக்கிறோம்
விழித்திரு இருக்கிறது
உங்களிடம் விழிப்போடிருக்கிறோம்
பசித்திரு இருக்கிறது
உங்கள் ஆறிப்போன ஆரியச் சுவை விலக்கி
பகுத்தறிவுப் பசியோடிருக்கிறோம்
- தசாமி

GOMATHISANKARR
June 25, 2023சபாஷ்
N.Paneer Selvam
June 25, 2023நிறைவான செறிவான கவிதை
ஜெயந்தன்
June 25, 2023அதிகார அரிதார புழுக்கள்
கரையான்கள் என்பதே
வருத்தம் தருகிறது