கவிதை

அடைத்து வைக்கத் தோதான
சதுர வடிவத் தர்ப்பூசணிகள்
தம் இடம் தாண்டி
பெட்டியின் மூலைகளைச் சுவாசிக்க
இடம் கேட்டு நச்சரிப்பதில்லை

இதய வடிவத் திராட்சைகள்
ஏற்கனவே ஏற்றிருந்த
கோள வடிவை நீங்கியதில்
ஏதொரு பதட்டமுமின்றித்தான்
காற்றிலாடுகின்றன

குண்டுக் கத்தரிக்காய்கள்
புடலங்காயைப் பிரதியெடுத்ததில்
குட்டையாகிப் போனது
கல் கட்டும் காய்

மென்தோல் தக்காளிகள்
வன்முறைக்கு மாறி
வெகுநாட்களாயிற்று

மெழுகிட்ட ஆப்பிள்
ஆறு மாதமாய் அழுகாமலிருப்பது கண்டு
கடித்துப் பார்க்கும் ஆசை
கடவுளுக்கே வருகிறது

ஒட்டுருவாக்கத்தில்
குயில் முட்டையென
ஆரஞ்சையும் ஏற்கிறது
மாமரம்

வயலோரங்களில் குலுங்கிக் கிடந்த
நினைவு மறந்து
பாக்கெட்டுகளில் தஞ்சமடையத்
தயாராகவே இருக்கின்றன
ஹைபிரிட்டில் சுட்ட பழங்கள்

வெட்டி ஒட்டும் கலையில் தேறிய
சிற்றினம் ஒன்றின்
மொத்த வாழ்வையும்
செவ்வகத்துக்குள் அடக்கிச்
சிரிக்கிறது இயற்கை

  • கி. சரஸ்வதி

Comments (2)


கி. சரஸ்வதி
கி. சரஸ்வதி
June 25, 2023

Thank a lot🌹

ஆறுமுகம்
ஆறுமுகம்
June 25, 2023

உண்ணுவதெல்லாம் நஞ்சு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *