சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்ட விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று 50ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

விளையாட்டு என்பது மனத்தையும் உடலையும் பலப்படுத்துவதற்கான, செழுமைப்படுத்துவதற்கான ஒரு செயல்முறை. மற்றவர் திறனைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஊக்கமளிப்பது. தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றிபெற வேண்டும் என்ற பாடத்தைக் கொடுப்பது. தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி என்பதைப் பயிற்றுவிப்பது. இறுதிவரை போராடும் குணத்தைக் கற்றுக் கொடுப்பது. வெற்றியும் தோல்வியும் வாழ்வில் இயல்பானவை என்பதை உணர்த்துவது. இவற்றையெல்லாம் முறையான பயிற்சிகள் மூலம் கைவரப் பெறலாம்; மேம்படுத்தலாம். எனவேதான் விளையாடுபவர்களை வீரர்கள் என்று சொல்கிறோம். அந்த அடிப்படையில்தான் மனிதனை மனிதனாக்கும் செயல்முறைப் போக்கான கல்வியில், விளையாட்டும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நடைமுறையில் அது எப்படி உள்ளது என்பது வேறு விஷயம்.

ஆனால் சூதாட்டம் அப்படி அல்ல. ஒருவரிடம் ஆசையைத் தூண்டி ஏமாற்றுவது என்பதே சூதாட்டத்தின் தத்துவம். எப்படியாவது அதிகமாகப் பணம் ஈட்டலாம் என்ற நப்பாசையைத் தூண்டி, அதற்கு அவரை அடிமைப்படுத்தி, அதன் மூலம் அவரிடம் கொள்ளையடிப்பது. சூதாட்டம் என்பது திரைமறைவு வேலைகள், நேர்மையற்ற தந்திரங்கள், ஏமாற்று வித்தைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பவைப்பது. இது ஒரு இழிவான செயல். இதனை எவரும் பாடமாக ஏற்கமுடியாது.

இந்த நிலையில், சூதாட்ட விளையாட்டு என்ற பதம் சரியான ஒன்றா? நிச்சயமாக இல்லை. சூதாட்டமும் விளையாட்டும் எதிரெதிர் குணாம்சங்களைக் கொண்டவை. சூதாட்டம் ஒரு முறைகேடான செயல். முறைகேட்டிற்கு வழிவகுக்கும் செயல். இத்தகைய சூதாட்டங்கள் மிக மோசமான விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்திக்கொண்டிருப்பதை அறிவோம். குறிப்பாக, இன்றைய இணையவழித் தொடர்பு உலகில், ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் ஏராளமான ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏதோ விரும்பிச் செல்பவர்களை மட்டும் இந்த சூதாட்டங்கள் ஏமாற்றவில்லை. மொபைல் ஆப்கள் மூலமாகவும் குறுஞ்செய்திகள் வாயிலாகவும் வண்ணமயமான படங்களையும் போலியான தகவல்களைக் காட்டி விளம்பரங்கள் செய்கின்றனர். ‘ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தின் வசனத்தைப் பின்பற்றி, ‘உங்கள் கணக்கில் சில ஆயிரங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது; வந்து விளையாடுங்கள்’ என்று, நப்பாசையைத் தூண்டும் விதமாகச் செய்திகளை அனுப்புகின்றனர். இவையெல்லாம் கணினி மென்பொருட்கள் வாயிலாக நடைபெறுபவை.

பிதாமகன் திரைப்படத்தில், கதாநாயகன் சூதாட்டம் நடத்துவார். கதாநாயகி முதலில் ஒரு ரூபாயை வைத்து சூதாடத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்ததும் அந்தத் தொகையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது, அவரைக் கட்டாயப்படுத்தித் தொடர்ந்து சூதாட வைத்து, அவரிடமிருந்த பொருட்கள் அனைத்தையும் நாயகன் பறித்துக்கொள்வார். இதே வழிமுறையைத்தான் இணைய வழியில் நடக்கும் சூதாட்ட மென்பொருட்கள் பின்பற்றுகின்றன. அதாவது, சூதாட்டக் களத்தில் இறங்கிய ஒருவர், அதிலிருந்து மீள வழியே இல்லாதவாறே அவை வடிவமைக்கப்படுகின்றன.

முதலில் குறிப்பிட்ட திறனுடையவர்களை, அல்லது அனைவரையும் வெற்றிபெற மென்பொருளானது அனுமதிக்கும். குறைந்த தொகையை வென்றதாக அறிவிப்பும் கிடைக்கும். ஆனால் அந்தத் தொகையை நம்மால் வங்கிக் கணக்குக்கு மாற்ற இயலாது. நீங்கள் மேலும் பணம் செலுத்தி விளையாடவேண்டும் என்று நிர்பந்திப்பர். அது கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி, சூதாட்ட வளையத்திற்குள் ஆழமாக இழுத்துச் செல்லும். இப்படிப்பட்ட சூதாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழக்கின்றனர். எப்படியாவது இழந்த பணத்தை மீட்டுவிட வேண்டும் என்ற வேட்கையில், கடன் வாங்கிப் பணத்தைச் செலுத்தி விளையாடி அதையும் இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய சூதாட்டங்கள் மனநோயாளிகளையும் உருவாக்கி வருகின்றன. சிலர் பெரும் பணத்தை இழந்து, இறுதியில் மன அழுத்தத்தாலும் கடன் தொல்லையாலும் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

வயது வித்தியாசமின்றி பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர் வரை இதற்கு பலியாகின்றனர். அபரிமிதமான கேளிக்கை வெறியை உண்டாக்கும். எனவேதான் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்ததையும் தமிழ்நாடு கண்டது.

ஏற்கனவே விளையாட்டுகளையே சூதாட்டமாக்கிவிட்டனர். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சூதாட்டம் நடப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஐபிஎல்-லில் சூதாட்டமென்று நடவடிக்கையே எடுத்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். பல விளையாட்டு வீரர்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், சூதாட்டத்துக்கு வரி விதிப்பு என்பது, உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய சூதாட்டத்தை நடத்த அனுமதிப்பதுபோல் உள்ளது. இத்தகைய சூதாட்டங்களில் நிழலுக தாதாக்கள், சமூக விரோதிகள் ஈடுபடுவதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில் பார்த்தால் மது, போதைப் பழக்கங்களைப் போலவே, சொல்லப்போனால் அதைவிட, சூதாட்டமும் மிகவும் மோசமானது.

இப்படிப்பட்ட நிலையில் சூதாட்ட விளையாட்டு என்று பெயரிட்டு அதற்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பது எத்தகைய செயல்? ஒரு மக்கள் நல அரசாங்கம் இப்படிச் சிந்திக்க முடியுமா? சூதாட்டங்களுக்கு வரி வசூல் செய்ய நினைப்பது எரிகிற பிணத்திலிருந்து எதையாவது உருவும் செயலுக்கு ஒப்பாகும். இப்படியே போனால் கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிப்பார்களோ!!!??? “நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், எங்களுக்கு வரி கொடுங்கள்” என்று கூறுவது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் காட்சிகளையே நினைவூட்டுகிறது. வளர்ச்சிக்கான ஒரு அரசாங்கம் மனிதகுலத்திற்கு நன்மை தரும் பொருளுற்பத்தி, அறிவு உற்பத்திகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் இன்று அரசாங்கங்கள் மது, சூதாட்டம் போன்ற மனிதர்களுக்குக் கேடிழைக்கும் செயல்களை அரசாங்கத்தின் வருவாயாகப் பார்ப்பது மோசமானது, ஆபத்தானது, மனிதகுலத்தின் வளர்ச்சிக்கே எதிரானது.

ஒரு பொருள் அல்லது சேவையின் மீது வரி விதிப்பது என்பது, அந்தப் பொருள் அல்லது சேவை விற்பனையைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் செயலாகும். சூதாட்டத்துக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால் அது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதப்படும். அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, அதே வகைமையில் வரும் இன்னொரு மோசடிக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது வேடிக்கையான செயல் அல்லவா?

சூதாட்டத்துக்கு வரி விதிக்கத் தயாராக இருக்கும் அரசு, பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புழங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்களை வரி வளையத்துக்குள் கொண்டுவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசவையிலேயே மனைவி முதலான அனைத்தையும் வைத்து சூதாடியவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு ஆள்பவர்களின் ஆட்சியில் இதெல்லாம் மிகச் சாதாரணம்தானே?

  • செ. ரெகுரதிப் பாண்டியன், திருத்தங்கல்

Comments (4)


Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
Gomathi Sankar Gosar
July 13, 2023

இந்தக் கட்டுரையின் முத்தாய்ப்பு ஒன்று போதும், இந்த ஆட்சியாளர்களின் கலாச்சாரத்தையும் அறத்தையும் புரிந்து கொள்வதற்கு..
பாரதி பாடிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
‘பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’

ம. செம. மோகன் ராஜா
ம. செம. மோகன் ராஜா
July 13, 2023

அருமையான கட்டுரை..
“சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் – வறுமை தருவதொன்று இல்” _ குறள்

Anita Srikanth
Anita Srikanth
July 13, 2023

அருமையா எழுதி இருக்கீங்க..
பார்க்கப் போனா சூதாட்டத்தை தடை செய்யணும்…
நம்ப தேசிய விளையாட்டான ஹாக்கியை தூக்கி நிறுத்தணும்…
எத்தனை கோடிபோட்டு கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில எடுக்கிறாங்க…
அப்ப இந்தியா பணக்கார நாடு தான்…
ஏழை நாடு னு சொல்லி சாதாரண மக்களை ஏமாத்தி இந்த மாதிரி பணத்தை புடுங்குறாங்க…

கடைசி வரி..நச்…

ர.மணிகாந்த்
ர.மணிகாந்த்
July 14, 2023

எனக்கு தேவை பணம்!
எவனோ ஆகிறான் பிணம் !!

என்பது போல்தான் இருக்கிறது ஆட்சியாளர் போக்கு…

சூதாட்டத்தை முதலில் தடை செய்ய வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *