திரை விமர்சனம்

அஜய் தீட்சித்தின் பிரச்சனை, அவன் லக்னோ பள்ளி ஒன்றின் வரலாற்று ஆசிரியராக இருப்பதோ, தனக்குத் தானேயும் மற்றவர்களிடத்திலும் தன்னைப் பற்றிய போலியான ஒரு பெரிய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டதோ,  அறிவும் அழகும் கொண்ட நிஷா மனைவியாக வாய்த்ததோ அல்ல. அவளுக்கு வலிப்புக் குறைபாடு இருப்பதை அறிந்து அவளை ஒதுக்க – அது அவர்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தியதும்  மனக் குழப்பத்தில் எம்.எல்.ஏ. விஷ்வாஷ் ரகுவன்சியின் மகன் அதுல் ரகுவன்சியை வகுப்பில் ‘பளா’ரென்று அறைந்ததும்தான்.  

அவை, அவன் போலியாகக்  கட்டமைத்துக்கொண்ட பிம்பத்தைச் சடுதியில் நொறுங்கச் செய்து, அவனது வேலைக்கே உலை வைக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கின்றன. அவற்றை அவன் எவ்விதம் எதிர்கொண்டான், மண உறவும் வேலையும் மீண்டும் அவனுக்கு வாய்த்ததா என்பதுதான், நிதிஷ் திவாரி இயக்கி, ஹிந்தியில் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன்  வெளியாகி உள்ள ‘பவால்’ திரைப்படத்தின் மொத்தக் கதை.

வலிப்புக் குறைபாடு இருப்பதைத்  திருமணத்திற்கு முன்பே நிஷா தெளிவாக அவனிடம் கூறியும் சம்மதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் அதையே காரணம் காட்டி அவளைத் தவிர்க்கும் அஜய், தனக்குள் வியாபித்திருக்கும் ஆளுமைச்  சிதைவை அறியாதது சோகம்.  

இரண்டாவது உலகப் போரில் தொடர்புடைய நாடுகளுக்கு, தவிர்க்க இயலாத நிலையில் மனைவியுடன் பயணித்துப்  பார்வையிடுவதும் அப்போது நாஜிக்களால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரோடு இருக்கும் ஒருவரது அனுபவத்தை அறிய நேரிட்டதால் அவனுக்குள் வரும் மாற்றத்தையும் அந்த மாற்றம் அவளுக்குள் ஏற்படுத்தும் நம்பிக்கையையும் அஜய் தீட்சித்தாக வரும் வருண் தாவணும் நிஷாவாக ஜான்வி கபூரும்  வெளிப்படுத்துவதில், தாங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை முழுவதும் உள்வாங்கி, நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர்.

அஜயின் தந்தை மனோஜ் பாவா, தாய் அஞ்சுமன் சக்சேனா, எம்.எல்.ஏ. ரகுவன்ஷி முகேஷ் திவாரி, அவரது மகன் அதுல் நிகில் சாவ்லா, நண்பன் பிரதீக் பச்சோரி (பிபின்) போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் சோடை போகவில்லை.

மித்தேஷ் மிர்ச்சந்தானியின் காமிரா, இந்தியாவில் லக்னோ, கான்பூர்,  மும்பை என்றும் பாரிஸ், பெர்லின், ஆம்ஸ்டர்டாம், கிரக்கோவ் வார்ஸா, போலந்து ஆகிய அயல்நாடுகளிலும் சுற்றிச் சுழல்வதுடன், இரண்டாம் உலகப்போர் காலத்திலான உருவகப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைக் கருப்பு வெள்ளையில் வழங்கி, மனதில் ஆழமாகப் பதிய வைப்பது சிறப்பு. டேனியல் பி ஜார்ஜ்ஜின் பின்னணி இசையும் சாரு ஸ்ரீ ராயின் படத்தொகுப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளன. இனிமையான பாடல்களுக்கு நால்வர் இசை அமைத்துள்ளனர்.

“எக்ஸாம் வருது பேப்பர் செட் பண்ணனும்” (அஜய்)

“முதல்ல உன் லைஃப்ப செட் பண்ணு” (அம்மா)

“பிரச்சனைகளைச் சமாளிக்கக் கத்துக்க. இப்படி ஓடாத” (அப்பா)

“எப்போ உனக்கு இந்த உறவைச் சமாளிக்க முடியாதுன்னு தோனுதோ, அப்போ எங்ககிட்ட வந்துரும்மா.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. டைவர்ஸ் வாங்கறது கேவலம் இல்ல” (நிஷாவின் அம்மா)

“தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டா எல்லாம் தெரியும்; இடத்தப் பத்தியும் மனுஷங்களப் பத்தியும்” (நிஷா)

“நமக்குள்ள எதுவுமே காமனா இல்ல” (அஜய்)

“காமனா இருக்கணும்னு அவசியமா?” (நிஷா)

“ஹிட்லரோட லைஃப்ல இருந்து முக்கியமா ஒன்னு கத்துக்லாம்னா, அது பொய், பித்தலாட்டம். இதனால உருவாகற இமேஜ் ரொம்ப நாள் நீடிக்காது. அதனாலதான் இந்த நிலம,  எங்க இட்லர் செத்தானோ அங்க ஒரு கார் பார்க்தான் இருக்கு, ஒரு மெமோரியலும் இல்ல.  சரிதான், கடைசியில உண்மைதான் வெல்லும். பொய்மை இல்ல” (அஜய்)

“பத்து மாசமா நெனச்சிகிட்டு இருந்தது, நீ எனக்கு லாயக்கில்லன்னு. ஆனா, இந்தப் பத்து நாள்ல புரிஞ்சுகிட்டேன் நான் உனக்கு லாயக்கில்லன்னு” (அஜய்)

“நம்ம வாழ்நாள்ல ஏற்படற துக்கம் அவங்களோட ஒருநாள் வாழ்க்கைக்கு முன்ன ஒன்னுமே இல்ல”

“வரலாறு இருக்கறதுக்குக் காரணம், நம்ம தப்ப திருத்திக்கத்தான்” (ரகுவன்ஷி)

“மத்தவங்ககிட்ட இருக்கிறதப் பார்த்து அதையே நினைச்சுகிட்டு வருத்தமா இருந்தா, நாம என்னைக்குமே சந்தோஷமா இருக்க முடியாது. ஆனா, கிடைச்சதுல சந்தோஷத்தைத் தேடினா அப்போ முகத்தில் தெரிகிற உண்மையான சந்தோஷம், அந்தச் சந்தோஷத்தைவிடச் சிறந்த இமேஜ் எதுவுமே இல்லை”

இவை, அர்த்தபூர்வமான, நினைவை வருடிக்கொண்டே இருக்கும் வசனங்கள்.

ஹிட்லரின் கொடிய ஆஸ்விட்ச் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பிலான அனுபவத்தைப் பெரியவர் ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, அதை மொழிபெயர்த்து உணர்வுப்பூர்வமாக அஜய்யிடம் சொல்லும் நிஷாவும் கேட்கும் அஜய்யும் அவை தங்களுடைய வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உள்ளான லேசான விரிசல் மறையவும் அவனுக்குள் அவன் திருத்தம் பெறவும் வாய்ப்பாக அமைத்திருக்கும் பாங்கு, இயக்குநரின் முத்திரை.

காதல், பாசம், குடும்பம், மனிதம், பிம்பம், ஆளுமை போன்றவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணரவும் நாயகன் அஜய் தீட்சித் போன்ற மனப்பான்மை கொண்ட எவரும் தங்களைச் சுயபரிசோதனை செய்து தெளிவு பெறவும் நித்தீஷ் திவாரி அற்புதமாக இயக்கி வழங்கி உள்ள ‘பவால்’ வாய்ப்பளிப்பது நிச்சயம்.

மதிப்பெண் : 7/10

  • மது ராஜேந்திரன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *