காட்சி 9

காலம் : 1911 ஜனவரி மாதத்தில் ஒருநாள்
இடம் : ஈசுவரன் தர்மராஜா வீதி, பாண்டிச்சேரி
நேரம் : காலை 8 மணி
பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், வ.ரா., வ.வே.சு.ஐயர்

வாஞ்சிநாதன் : (வீதி முனையில் நின்றுகொண்டு எதிரே வரும் நபரிடம்) ஐயா, இங்கே பாரதியார் வீடு எங்கே இருக்கிறது..?

எதிரே வந்த நபர் : இதே தெருவில் கடைசி வீடுதான்.. நீர் யார்? பாரதியாருக்கு என்ன உறவு..?

வாஞ்சிநாதன் : ஐயா, நான் பாரதியாரைப் பார்க்க வரவில்லை. அவர் வீட்டில் தங்கியிருக்கும் என் நண்பர் ஒருவரைப் பார்க்க வேண்டும்.

எதிரே வந்த நபர் : பாரதியின் வீட்டிலா..? நானும் அங்குதான் இருக்கிறேன். அங்கு வேறு யாரும் இல்லையே.. (வந்தவரை ஏற இறங்கப் பார்க்கிறார்)

வாஞ்சிநாதன் : ஐயா, ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்..?

எதிரே வந்த நபர் : இல்லை.. பாரதி வீட்டைத் தேடி வருகிற பாதிப் பேர் மாறுவேடத்தில் வரும் போலீஸ்காரர்கள். மீதிப் பேர் போலீசுக்கு உளவு சொல்கிறவர்கள். அதனால்தான் பார்த்தேன். உம்மைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நீர் யாரைத் தேடிவந்திருக்கிறீர்..?

வாஞ்சிநாதன் : ஐயா. என்பெயர் வாஞ்சிநாதன்.. எனக்கு ஊர் செங்கோட்டை. நான் பிரம்மச்சாரியைத் தேடி வந்திருக்கிறேன்.

எதிரே வந்த நபர் : யாரை..? பிரம்மச்சாரியையா..? (பலமாகச் சிரிக்கிறார்) பிரம்மச்சாரிதான் பெண்ணைத் தேடுவார். நீர் எந்த பிரம்மச்சாரியைத் தேடுகிறீர்..? (மீண்டும் சிரிக்கிறார்) இங்கே நிறைய பிரம்மச்சாரிகள் உண்டு. கல்யாணம் பண்ணிய, பண்ணாத பிரம்மச்சாரிகள்.. நானும் பிரம்மச்சாரிதான்.

வாஞ்சிநாதன் : ஐயா, நான் நீலகண்டரைத் தேடி வந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி.

எதிரே வந்த நபர் : ஓ..! அவரா..? அட்டைக் கரி பாய்ந்த தேகத்தில் இருப்பாரே.. புரட்சிக்காரர் என்று பாரதி சொல்லுவார். பாரதியைவிட என்ன புரட்சி செய்துவிட்டார் என்று தெரியவில்லை. அவர் பாரதியைவிட அரவிந்தரிடத்தும் வ.வே.சு.அய்யரிடமும்தான் அந்தரங்கம் பேசுவார். இப்போ வ.வே.சு. அய்யரிடம் கேட்கலாம் வாரும்.

வாஞ்சிநாதன் : ஐயா, உங்களைத் தெரிந்து கொள்ளவில்லையே.. நீங்கள்..?

எதிரே வந்த நபர் : அதனால் ஓன்றும் ஆகிவிடாது. என்னைத் தெரிந்துகொள்ளாததால் பாண்டிச்சேரியில் புயல் ஒன்றும் வந்துவிடாது. நான் இந்தப் பாண்டிச்சேரியில் அவ்வளவு முக்கியமானவன் அல்ல. என்பெயர் ராமசாமி. வ.ரா. என்று சுருக்கி அழைப்பார்கள்.

(இருவரும் பேசிக்கொண்டே சென்று ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள்)

வ.ரா. : இதுதான் வ.வே.சு. அய்யருடைய வாசஸ்தலம்.. ஐயரே.. ஐயரே..

வ.வே.சு. ஐயர் : வாரும் ஓய் வ.ரா.. என்ன இந்தக் காலை வேளையில்..?

வ. வே. சு. அய்யர்

வ.ரா. : எனக்கு ஒன்றுமில்லை.. இந்தப் பையன்தான் நீலகண்டரைத் தேடி வந்திருக்கிறார். நீலகண்டர் உம்மோடு இருப்பார் என்று அழைத்து வந்தேன்.

வ.வே.சு. ஐயர் : நீலகண்டர் இரண்டு நாளைக்கு முன்னால் இங்கு இருந்தார். ஏதோ அவசரம் என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்கப்புறம் காணவில்லை ஓய்.. அந்த ஆளைத் தேடி இவரு வந்தாராமா..? என்ன விஷயம்..?

வ.ரா : உள்ளே அழைத்துப்போய் விசாரியுங்கள் ஐயரே.. நான் கிளம்புகிறேன்.. பாரதியார் தேடுவார்.
வ.வே.சு. ஐயர் : சரி ஓய்.. பாரதியாரை வரச்சொல்லும்.

(ஒளி மங்கி இருளாகிறது. ஒளி பரவும்போது மேடை ஒரு வீட்டின் அறையாக இருக்கிறது)

வ.வே.சு. ஐயர் : உன் பேரு என்ன தம்பி? நீலகண்டருக்கும் உமக்கும் எப்படிப் பழக்கம்..?

வாஞ்சிநாதன் : என் பேரு வாஞ்சிநாதன். தேசபக்த வேலையிலதான் நீலகண்டருடன் பழக்கம். அவரைப் பார்த்து முக்கிய விஷயம் பேசணும்.

வ.வே.சு. ஐயர் : அவரு வெளியூர் போயிட்டாரு. எங்கப் போனாரு, எப்ப வருவாருன்னு தெரியாது தம்பி.

வாஞ்சிநாதன் : சரி ஐயா.. அப்ப நான் ஊருக்குப் போக வேண்டியதுதான்.

வ.வே.சு.ஐயர் : தம்பி.. என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா உமக்கு உதவலாம்.

வாஞ்சிநாதன் : மன்னிக்கணும் ஐயா, அதைச் சொல்ல முடியாது.

வ.வே.சு.ஐயர் : ஓ..! ரகசிய இயக்கமா..? நானும் உங்க இயக்கத்தோட பழக்கம்தான். நீலகண்ட பிரம்மச்சாரியோட எல்லா ரகசியமும் எனக்கும் தெரியும். அதனால தைரியமா உன்னோட பிரச்சினையைச் சொல்லலாம்.

வாஞ்சிநாதன் : (அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு) பிரம்மச்சாரி உங்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறார். ஆனா..

வ.வே.சு.ஐயர் : (வாஞ்சியின் தோளில் கை போட்டவாறே) பயம் வேண்டாம். இந்தப் பாண்டிச்சேரில நாங்க போலீஸ் பரிவாரத்தோடத்தான் இருக்கோம். பயந்தா எப்படி..? பயப்படாமச் சொல்லும்.

வாஞ்சிநாதன் : சரி ஐயா.. இப்போ திருநவேலி ஜில்லாவுல பரங்கியர் அதிகாரம் சகிக்கலே. கலெக்டர் ஆஷ் தேசபக்தர்களைத் தொடர்ந்து வேட்டையாடுறார். எத்தனை நாள் அவரைச் சகிச்சுக்கிட்டுப் போறது..?

வ.வே.சு.ஐயர் : அதெல்லாம் சரி.. நீலகண்டரைப் பார்க்க இவ்வளவு தூரம் வர்றதுக்கு என்ன அவசரம் வந்தது?

வாஞ்சிநாதன் : வெள்ளைக்காரங்களைக் கொன்னு சுயராஜ்யம் சமைப்போம்ன்னு நீலகண்டர் சொல்லிக்கிட்டே இருக்காரு. ஆனா ஒன்னும் நடந்த பாடில்லை. ஆயுதங்கள் வரணும். சந்தர்ப்பம் வரணுமுன்னு சொல்றாரே தவிர, ஒன்னும் ஆரம்பிச்ச பாடில்லை.
(கொஞ்சம் தயங்கியவாறு)
இப்போ ரெண்டு மாசமா ஆளையும் காணலை. சூர்யோதயம் பத்திரிகையும் வரலை. அதுக்குக் கணக்கும் சொல்லலை. அதுதான் அவரை நேரில் பார்த்து ரெண்டுல ஒன்னு கேட்டுறலாமுன்னு நம்ம ஆளுங்க அனுப்பிச்சு இந்த ஊருக்கு வந்தேன்.

வ.வே.சு.ஐயர் : தம்பி, நீலகண்டரின் காரியங்கள் எப்படி இருந்தாலும், பண விஷயத்தில் அவர் ரொம்பக் கறார். நீங்க கொடுத்த பணத்திற்குச் சரியாகக் கணக்கு வைத்திருப்பார். பட்டினி கிடந்தாலும் பொதுப் பணத்தில் கை வைக்கவே மாட்டார். அந்த விஷயத்தில் உமக்குக் கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டியதில்லை.

வாஞ்சிநாதன் : சரி ஐயா.. அப்ப நான் கிளம்ப வேண்டியதுதான். நீலகண்டர் வந்த உடனே, நான் வந்து போனதைச் சொல்லிவிடுங்கள்.

வ.வே.சு.ஐயர் : சரி.. அப்போ உடனே கிளம்பணுமா..? ரெண்டு மூனு நாள் இருந்து நீலகண்டர் வந்துட்டா பார்த்துட்டே போயிறலாமே.. வாரும்.. பின்னால கிணற்றடியிலே ஸ்நானம் பண்ணிட்டு சாப்பிட வாரும்.. மத்தத அப்புறம் பேசலாம்..’

(மேடையில் இருள் பரவி திரும்ப ஒளி வரும்போது ஓம்காரின் அறையில் காட்சி தொடர்கிறது)

சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, இது என்ன..? நீலகண்டரிடம் அவர் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதுபோல..?

ஓம்கார் சுவாமிகள் : இந்த ரகசிய இயக்கங்களின் பெரிய பலவீனம் என்னவென்றால், சிறிது தொடர்பு விட்டுப்போனாலும் சந்தேகம் கிளை விட்டுவிடும். பண விவகாரம் இருந்தால் இன்னும் ஆபத்து. ரெண்டு மாச காலமா நானும் போகவில்லை. சூரியோதயமும் அனுப்ப முடியவில்லை. பத்திரிகையை நடத்த மிகச் சிரமமாக இருந்தது. அச்சடிச்ச பிரதிகளையும் அனுப்ப முடியவில்லை. போலீஸ் கெடுபிடி அப்படி இருந்தது. இன்னொரு விஷயம், சந்தாப் பணம் வேறு வேலையில் செலவு ஆகிவிட்டது. இயக்க வேலைதான். இருந்தாலும் அதை நான் திருநெல்வேலி சென்றால் அல்லவா சொல்ல முடியும்..?

சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..?

ஓம்கார் சுவாமிகள் : அப்புறம் என்ன.. வ.வே.சு.ஐயர் வாஞ்சிநாதனை மடை மாற்றினார். ஆசிரமப் பணிகள் முடிந்தபிறகு, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்கிறேன்.

(திரை விழுகிறது)

நாளை பார்க்கலாம்.

  • இரா.கோமதிசங்கர் – திருநெல்வேலி

(நாளை பார்க்கலாம்)


Comments (4)


ச.உமாமகேஸ்வரி
ச.உமாமகேஸ்வரி
August 23, 2023

படித்தாயிற்று..எப்போதும் போல விறுவிறுப்பு. சுதந்திரப் போராட்ட வரலாற்றின் போக்கை அடுத்த அத்யாயத்தில் படிக்க ஆவலாக….

சு.உமாமகேஸ்வரி
சு.உமாமகேஸ்வரி
August 23, 2023

படித்தாயிற்று..எப்போதும் போல விறுவிறுப்பு. சுதந்திரப் போராட்ட வரலாற்றின் போக்கை அடுத்த அத்யாயத்தில் படிக்க ஆவலாக….

Anita Srikanth
Anita Srikanth
August 23, 2023

ஒரு இடத்தில ஓம்காரஸ் சுவாமிகள் நானும் போக முடியவில்லை.. சூர்யோதயமும் அனுப்ப முடியலை னு சொல்லுராரு…
ஆனால் தலைமறைவா இருக்கிறவர் நீலகண்டகராச்சே….
ஏதோ ரகசியத்தை சொல்ல வரீங்க…

அடுத்த காட்சிக்கு ஆர்வமா இருக்கேன் அண்ணா…

Rasal

பாண்டிச்சேரியில் நடந்தது என்ன?என்ற ஆவலில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *