திரை விமர்சனம்

பழனி நகராட்சியில் பணிபுரியும் ஈஸ்வரன், அவனது அண்ணி, அவளது எட்டு வயது சுந்தரி என மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது அக்குடும்பம். அவனுக்கு சுந்தரியும் சுந்தரிக்கு சித்தாவும்தான் எல்லாமுமே. அண்ணி அவனுக்குப் பெண் பார்க்க முனைகிறாள். பிடி கொடுக்காத ஈஸ்வரன், அதே நகராட்சியில் பணியில் சேரும் தன்னுடன் பள்ளியில் படித்த சக்தியை நேசிக்கிறான்.

இந்நிலையில், சுந்தரியுடன் படிக்கும் பொன்னியின் வேறுபாடான நடவடிக்கையைக் கவனித்த ஈஸ்வரன், அவளைத் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க முயல, அவள் பித்துப் பிடித்தவள் போல பயத்தால் நடுங்கி, அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள்.  மருத்துவப் பரிசோதனையில் பொன்னி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். மேலும் அந்தப் பழி அவன் மீது விழ, இது இரட்டிப்பாகி அவனை நிலைகுலையச் செய்கிறது.

அதிர்ச்சியிலிருந்து மீண்ட பொன்னி சொன்ன உண்மை அவன் மீதான பழியைத் துடைக்க, நிம்மதி அடைந்த வேளையில் சுந்தரி காணாமல் போக, பேரதிர்ச்சி அடைகிறான் ஈஸ்வரன். சுந்தரி எப்படிக் காணாமல் போனாள், அவள் கடத்தப்பட்டாளா, அவள் என்ன ஆனாள், மீட்கப்பட்டாளா என்பதுதான் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சித்தா’ தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் கதை.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது போக, ஒவ்வொரு நாள் விடியும்போதும் இந்தக் கொடூரங்கள் நாடெங்கும் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்திற்கிடையே ‘சித்தா’ கவனம் பெறுகிறது. இந்தக் கதையை அருண்குமார் எழுதி இயக்கியதும் நடிகர் சித்தார்த் தயாரித்ததும் அவர்களுக்குக் குழந்தைகள் மீதுள்ள அக்கறையையே காட்டுகிறது.

சித்தார்த் (ஈஸ்வரன்), சகஸ்ர ஸ்ரீ (சுந்தரி), நிமிஷா சஜயன் (வள்ளி), அஞ்சலி நாயர் (அண்ணி) முக்கியப் பாத்திரங்களாக இருந்தாலும் சித்தார்த்  ‘சேட்டை’ என சுந்தரி மீது கட்டற்ற பாசத்தைப் பொழிவதிலாகட்டும் பெண்ணுக்கு நேர்ந்ததை அறிந்து உடைந்து போவதிலாகட்டும் பழி தம்மீதே பேரடியாக இறங்கும்போதிலாகட்டும் “சித்தப்பாவாக இருந்தாலும்..” என்று அண்ணி சொல்வதைக் கேட்டு வேதனையான சிரிப்பை உதிர்ப்பதிலாகட்டும் சேட்டை காணாமல் போனதை அறிந்து துடித்துப் போவதிலாகட்டும் வள்ளி தனக்கு நேர்ந்ததைச் சொன்னதைக் கேட்டு நொந்து போவதாகட்டும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத கையறு நிலையில் கதறுவதாகட்டும் திறம்பட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பால் படம் முழுவதும் மட்டுமல்ல, நம் மனத்திலும் வியாபித்து நிற்கிறார் சித்தார்த்.

காதல், வலி, வேதனையைத் துல்லியமாக நிமிஷா சஜயன் வெளிப்படுத்துகிறார். சுந்தரியாக சகஸ்ர ஸ்ரீயின் பங்களிப்பும் பொன்னியாக நடித்த சிறுமியின் நடிப்பும் அருமை. அண்ணியாகவும் ஓர் அம்மாவாகவும் அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்கிறார் அஞ்சலி நாயர். வடிவேலு பாத்திரத்தை ஏற்றவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். வசனங்கள் கூர்மையானவை; சிந்திக்கத் தக்கவை.

கதைக் கருவுக்கு இணக்கமாக பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவும் விஷால் சந்திரசேகரின் விறுவிறுப்பைக் கூட்டும் பின்னணி இசையும் சுரேஷ் ஏ.பிரசாந்தின் படத்தொகுப்பும் படத்தின் சிறப்பு.

கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாகப் போய்விடக்கூடிய நிலையில், கத்தி மேல் நடப்பதான சவாலாக நடந்து,  உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், பார்ப்போர் மனத்தில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு, இயல்பாகப் பதியும் வகையில் நேர்த்தியான திரைப்படமாக ‘சித்தா’வைத் தந்து, சவாலில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் அருண்குமார்.

மதிப்பெண்: 8.5/10

  • மது ராஜேந்திரன்

Comment (1)


Rasal

‘சித்தா’ OTT ரிலீஸ் வந்ததும் பார்த்துவிடவேண்டியது தான். நிமிஷா-வின் நடிப்பு எப்போதும் பேசும்படியாக இருக்கும் (மலையாளப்படங்களில்). ஆவலாய்…நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *