பொன்னியின் செல்வன் – 23
வெகுநேரம் கழித்து கண்விழித்த பழுவேட்டரையர் சோழ நாட்டை எத்தகைய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று சிந்திக்க முயன்றார். பெரும்பிரயாசைப்பட்டு தன்னை அந்த மண்டபக் கல்லிலிருந்து விடுவித்துக் கொண்டவர், வெகுவாக அடிப்பட்டிருந்த போதும் தான் செய்ய வேண்டிய செயல்களை எண்ணி மனதிடத்துடன் எழுந்து நின்றார்.
அப்போது வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த தூமகேது பிரகாசித்து வானிலிருந்து பெரும் வெளிச்சத்துடன் ஒளிர்ந்து வீழ்ந்தது. துர்ச்சகுனமாக அதைக் கருதியவர், முதலில் நாகைக்கும், தஞ்சைக்கும் செய்தியை அனுப்பிவிட்டு ஆதித்த கரிகாலனை காப்பாற்ற தானே முயல வேண்டுமென நினைத்த அந்த வீரக்கிழவர் தன் காயங்களை பொருட்படுத்தாது வேகமாக விரைந்தார். அந்த இடம் குடந்தைக்கருகில் இருக்கிறதென்பதையும் அங்கே பக்கத்தில்தான் குடந்தை ஜோதிடர் வீடு இருக்கிறதென்பதை யோசித்து அவர் மூலம் செய்தி அனுப்பலாம் என்று குடந்தை ஜோதிடர் வீட்டுக்கு வேகமாக விரைந்தார்.
அப்போது வீட்டின் வாசலில் ரதங்கள் நிற்பதையும், வானதி, குந்தவையின் பேச்சு சப்தம் கேட்பதையும் உணர்ந்தவர் சீடனின் எச்சரிக்கையை தன் ஹூங்காரம் மூலம் அலட்சியம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தார்.
குந்தவை, மந்தாகினி காணாமல் போனதையும், தூமகேது மறைந்ததையும் வைத்து வருந்தி நாகையிலிருந்து வந்துகொண்டிருக்கும் அருள்மொழியை பழையாறையில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அதிகாலையிலேயே புறப்பட்டவள், வழியில் குடந்தை ஜோதிடரிடம் ஏதாவது கேட்டுச் செல்லலாமென வந்திருந்தாள்.
பழுவேட்டரையரின் ஹூங்காரத்தை அடையாளம் கண்டு கொண்டு ஜோதிடரிடம் ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்த திரைச்சீலையின் பின் இருவரும் ஒளிந்து கொண்டார்கள்.
ஜோதிடரிடம் பதட்டமாக பேசிய பழுவேட்டரையர், அவரது சீடனிடம் முத்திரை மோதிரத்தை தருவதாகவும், அதை எடுத்துக் கொண்டு தஞ்சை எடுத்துச் சென்று சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லிபொக்கிஷ நிலவறையில் காத்திருக்கும் யமனிடமிருந்து சக்ரவர்த்தியை காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
அப்போது உள்ளிருந்து வெளிப்பட்ட குந்தவை மறைந்திருந்து அவரது பேச்சை கேட்க நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க, குந்தவையிடம் பழுவேட்டரையரும் நந்தினியின் போதனைகளால் இத்தனை நாள் தான் நடந்து கொண்டற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு உடனே தஞ்சைக்கு திரும்பி சக்ரவர்த்தியை காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். மேலும் தான் கடம்பூர் திரும்பி தன் கையாலேயே நந்தினிக்கு முடிவு கட்டுவதாக சூளுரைக்க, குந்தவை அவரின் தாள் பணிந்து நந்தினியை அவர் எதுவும் செய்துவிடக்கூடாது, ஏனெனில் அவள் தங்களுடைய சகோதரி என்று வேண்டினாள். திகைத்து நின்ற ப்ழுவேட்டரையருக்கு பழைய சம்பவங்கள் எல்லாம் கண்ணுக்குள் வந்து போக ஆதித்த கரிகாலனுக்கு இது தெரியுமா எனக் கேட்க, வந்தியத்தேவன் மூலமாக சொல்லி அனுப்பியிருப்பதாக குந்தவை கூறினாள்.
ஆதித்த கரிகாலன் அதை நம்பியிருக்கமாட்டான் எனக் கூறிய பழுவேட்டரையர் தான் இளவரசி வந்த ரதத்தை எடுத்துக் கொண்டு கடம்பூர் சென்று கரிகாலனை காப்பாற்றுவதாகவும், பொன்னியின் செல்வனையும் சக்ரவர்த்தியையும் காப்பது குந்தவையின் பொறுப்பு என்று கூறி விடை பெற்றார்.
சில நிமிடத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து கொடும்பாளூர் படைகள் தஞ்சையை முற்றுகையிட நெருங்கி கொண்டிருப்பதாக கூறினான். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரி மாபெரும் சைன்யத்தைக் கூட்டிக் கொண்டு பழுவேட்டரையர்கள் சின்ன இளவரசரையும், சக்ரவர்த்தியை எங்கேயோ சிறைவைத்திருப்பதாக சந்தேகப் பட்டு கோட்டைப்பொறுப்பையும், தனாதிகாரி பொறுப்பையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் நிபந்தனை வகுத்துள்ளதாக கூறினான். மேலும் அருள்மொழி வர்மருக்கு வானதியை திருமணம் செய்து, அடுத்த பட்டத்துக்கு உரியவராக அவருக்கே பட்டாபிஷேகம் நடத்துமாறும் இதற்கெல்லாம் சம்மதிக்காவிட்டால் தஞ்சைக் கோட்டையை மூன்று நாட்களுக்குள் தரைமட்டமாக்கிவிடுவேன் எனவும் செய்தி அனுப்பியிருப்பதாக கூறினான்.
ஆழ்வார்க்கடியானின் செய்தியைக் கண்டு குந்தவை சகோதர யுத்தம் மூண்டு விடப் போகிறதே எனக் கலங்க, வானதி தன் பெயரை இந்த கலகத்தில் இழுத்து வைத்து தன் பெரிய தகப்பனார் பேசுவதில் விருப்பமில்லை என புலம்பினாள். நேரே சென்றாவது தன் பெரிய தகப்பனாரிடம் இதை வலியுறுத்தப் போவதாக வானதி சொல்ல, அப்போது உள்ளே நுழைந்த பூங்குழலி இடக்காக, சோழ சிங்காதனத்தில் பட்டத்தரசியாக அமர யாருக்குதான் ஆசை இல்லை என்பது போல் பேச வானதி சினந்தாள்.
இருவரையும் அமைதி படுத்திய குந்தவை, பூங்குழலி அங்கு எப்படி வந்தாள் என விசாரிக்க, தன் அத்தை பொக்கிஷ நிலவறையில் ஒளிந்து கொண்டு சக்கரவர்த்தியைக் கொல்ல ஆயுதத்துடன் மறைந்து இருக்கும் கொலைகாரன் ஒருவனைப் பின்தொடர்வதாகவும், அவனிடமிருந்து சக்கரவர்த்தியை காப்பாற்ற முயல்வதாகவும், பொன்னியின் செல்வனுக்கு ஏதோ ஆபத்து இருப்பதாக அவர் உணர்ந்து அதனால் பொன்னியின் செல்வரைக் காப்பாற்ற தன்னை அனுப்பியதாகவும் கூறினாள்.
மேலும் மற்றவர்கள் போல் தனக்கு அரண்மனை வாழ்வு பிடிப்பதில்லை எனவும் வானதியை இடித்துரைத்தவாறே கூறினாள். வானதி மேலும் சினந்து ஒருவேளை பொன்னியின் செல்வரை மணக்கும் நற்பேறு தனக்குக் கிடைத்தால் கூட சிங்காதனத்தில் தான் உட்காரப் போவதில்லை என ஆவேசமாக சபதமிட்டாள். அனைவரும் திகைக்க, பூங்குழலி, சிரிப்பும் அழுகையுமாய் பாட வேறு தொடங்கினாள்.
பைத்தியங்கள் போல் இரு பெண்களும் நடந்து கொள்வதைக் கண்ட குந்தவை, ஆழ்வார்க்கடியானை வினவ, அவன் இளவரசியின் ரதத்தில் இணைந்திருந்த படகைப் பெற்றுச் செல்லவே இங்கு வந்ததாகவும், பழுவேட்டரையர் அதையும் எடுத்துச் சென்றுவிட்டதால் என்ன செய்வதென புரியவில்லை எனவும் கூறினான்.
ஜோதிடரின் சீடனை வேறொரு படகைச் சம்பாதித்துக் கொண்டுவர அனுப்பியிருப்பதாகவும், அதில் குந்தவையும் வானதியும் அரண்மனைக்குச் சென்று சக்ரவர்த்தியை ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு கூறினான். வானதி அதை அடியோடு மறுத்து தான் பொன்னியின் செல்வனிடம் செல்லப் போவதாக கூறினாள்.
அதற்குள் அரசலாறு உடைந்து வெள்ளம் வருவதாக ஜோசியர் கூறி படபடப்புடன் அம்மன் கோவிலின் கூரை மீது ஏறிக் கொள்ளச் சொல்ல அனைவரும் ஓடினர். பூங்குழலி விரைவாக மேலே ஏறி குந்தவைக்கு கைகொடுத்து ஏற்றிவிட்டாள். பின்னால் வந்த வானதி பூங்குழலியின் கையை பற்ற விரும்பாமல் தண்ணீருக்குள் வீழ்ந்தாள். நீரின் போக்கில் சென்று ஜோதிடர் குடிசையின் கூரை மீது ஏறிக்கொள்ள அனைவரும் நிம்மதியுற்றனர். ஆனால் அவ்வீட்டின் சுவர்கள் வெள்ளத்தினால் கரைய கூரை மட்டும் மிதந்து வெள்ளத்தினூடே சென்றது. வானதி அங்கிருந்து ‘ தான் மிதந்து பொன்னியின் செல்வரை சந்திக்கப் போவதாக பூங்குழலிக்கு கேட்குமாறு கத்திக் கொண்டே மிதந்து போய்க் கொண்டிருந்தாள்.
குந்தவை வானதியைக் குறித்து பெரிதும் கலங்க, சீடனின் படகு மெதுவாக வந்து கொண்டிருந்தது. வானதி இருந்த கூரையோ வெகுவாக அவர்களை விட்டு விலகிப் போய்க்கொண்டிருந்தது. படகு இவர்கள் அருகே வந்து ஏற்றிக்கொண்டு வானதியை நோக்கி செல்வதற்குள் வானதி வெகுதூரம் அடித்துச் செல்லப்படுவாள். இதையெல்லாம் நினைத்து குந்தவை கவலைப்பட்டாள். பூங்குழலி தன் அஜாக்கிரதையால்தான் வானதி கீழே விழ நேர்ந்தது என்றும், தான் எப்படியாவது அவரைக் காப்பாற்றிக் கூட்டி வருவதாகவும் குந்தவையிடம் உறுதி கூறிவிட்டு வெள்ளத்தில் குதித்து படகை நோக்கி வேகமாக நீந்திச் சென்றாள்.
இந்த வெள்ளம் இப்படியிருக்க மக்கள் வெள்ளம் சூழ, பொன்னியின் செல்வர் திருவாரூருக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து மக்களால் தன் பிரயாணம் ஆங்காங்கே தடை படுவதும், நதிகளில் மழைவெள்ளம் அதிகரித்து வருவதால் திருவாரூரிலேயே தங்கிச் செல்லுமாறு ஊர்மக்கள் சொன்ன அறிவுரைகளும் அவரை வெகுவாக சங்கடப் படுத்தின.
யானை மூலமாகத் தான் தனியே கிளம்புவதுதான் உசிதம் என முடிவு கட்டி யானைப்பாகனை அழைத்துவரச் சொன்னபோது, முருகைய்யன் இளவரசரைப் பார்ப்பதற்கு அழுதுகொண்டே வந்து சேர்ந்தான்.
தான் இங்கு வந்த பொழுது, அவன் மனைவி ராக்கம்மாள் யானைப்பாகனை மயானத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பின் தொடர்ந்து போனபொழுது, மந்திரவாதி போன்ற ஒருவன், ‘நாளைக் காலை இளவரசர் ஏறும் யானைக்கும் மதம் பிடிக்கப் போகிறது. நீ தப்பி ஓடி விடு’ என்று யானைப்பாகனிடம் கூறியதைப் பார்த்ததாக வந்து கூறினான்.
இளவரசர் அன்றுவரை நடந்ததை நினைத்துப் பார்த்த பின் தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு அன்றிரவு உறங்கினார். அதிகாலையிலேயெ எழுந்து பிரயாணத்துக்கு தயாராக, யானைப்பாகனை பலமுறை அழைத்தபின் முகமெல்லாம் மாறிப்போனவனாக யானைப்பாகன் வந்து சேர்ந்தான். அவன் மேலே ஏறி உட்கார முயல யானை அவனை துதிக்கையால் தூக்கி எறிந்தது. ஜனங்கள் நாலாபக்கமும் யானைக்கு மதம் பிடித்து விட்டது என பயந்து சிதறி ஓடினர்.
அந்த கலவரத்தை சரியாகப் பயன் படுத்திக் கொண்ட இளவரசர் சடுதியில் முருகைய்யன் காதோடு ஏதோ சொல்லிவிட்டு யானையின் மேலேறி அம்பாரியை தள்ளிவிட்டு விட்டு அதன் காதில் ஆணையிட யானை வெகுவேகமாக அங்கிருந்து ஓட தொடங்கியது.
யானைக்கு மதம் பிடிக்கவில்லை, வந்த போலி யானைப்பாகனின் தீய நோக்கத்தால்தான் யானை அவனை தூக்கி எறிந்தது என்பதைப் புரிந்து கொண்ட இளவரசர் சரியாக அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார்.
இளவரசர் சொன்னதைப் புரிந்து கொண்ட முருகைய்யன் தூக்கிவீசப்பட்ட யானைப்பாகனிடம் போக அவன் தான் யானைப்பாகனில்லை என்று நடித்தான். நேற்றிரவு மந்திரவாதியாக நடித்தது நீதானே என்று கேட்கவும் போலி யானைப்பாகனாக வந்திருந்த பாண்டிய ஆபத்துதவி ரேவதாஸ கிரமவித்தன் அங்கிருந்து ஓடிவிட்டான்.
வீசியெறிந்த அங்குசத்தை எடுத்துக்கொண்டு ஊரில் ஒரு வீட்டில் கட்டி வைக்கப் பட்டிருந்த உண்மையான யானைப்பாகனை விடுவித்தான். மயானத்தில் யானைக்கு மதம்பிடிக்காமலிருக்க சில மருந்துகளைத் தருவதாகக் கூறி தன்னை இந்த வீட்டில் கட்டிவைத்து விட்டதாக யானைப்பாகன் அழுதான். இளவரசரின் நலம் குறித்து விசாரித்த அவனை ஊர்மக்களிடம் முருகைய்யன் கூட்டிச் செல்ல, அனைவரும் உண்மை அறிந்து தஞ்சைச் சாலையில் சிலரும் மந்திரவாதியைத் தேடிக்கொண்டு சிலரும் ஆவேசத்துடன் புறப்பட்டனர்.
நதி வெள்ளத்தில் வானதி சென்று கொண்டிருந்த கூரை ஆங்காங்கே வேகமாகவும் மெதுவாகவும் சென்றது. பயமாக இருந்த போதும் இளவரசரிடம் தன்னைக் கொண்டுபோகிறது என்ற நம்பிக்கையில் சென்று கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஒரு நதியின் கரை தெரியவும், அது திருவல்லம் தலம் என்பதும் மழவரையர் மகளான செம்பியன் மாதேவி அங்கு திருப்பணி செய்திருந்ததும் அவள் ஞாபகத்துக்கு வந்தன.
அங்கு முன்பு ஒருநாள் தங்கியிருந்த பொழுது மரத்திலிருந்த பறவைக்குஞ்சுகள் கீழே விழுந்து விடாமல் தான் பதட்டமுற்றதும், அவற்றைக் காப்பாற்ற பெயர் தெரியாத ஒரு இளைஞன் யானையின் மீது அமர்ந்து வந்து காப்பாற்றியதும் நினைவுக்கு வந்தது. யாரென்றே தெரியாமல் அந்த இளைஞனை ‘யானைப்பாகா’ என்று மிரட்டியதும் பின் இலங்கைக்கு பொன்னியின் செல்வன் கிளம்புகையில் அந்த யானைப்பாகன்தான் அவர் என்று தெரிந்தவுடன் தான் மயங்கிவிழுந்ததையும் எண்ணிக் கொண்டு சிலிர்ப்படைந்தாள்.
தன்னை பட்டத்தரசியாக்கும் பொருட்டு தன் பெரிய தகப்பனார் இளவரசரின் கழுத்தில் தன்னைக் கட்டுவதில் தனக்கு விருப்பமில்லை எனவும் ஒரு யானைப்பாகனாக அவர் இருந்தாலும் அவரையே மணக்க விரும்புகிறேன் எனவும் பொன்னியின் செல்வரிடம் தெரிவித்து விடவேண்டும் என நினைக்கும்போதே வெள்ளத்தை நினைத்து அவள் மனம் சோர்ந்தது.
அப்போது வெள்ளத்தைக் கடந்து ஒரு யானை வேகமாக யானைப்பாகனுடன் செல்வதைக் கண்டவள் தன்னைக் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டாள். ஆனால் யானை வெகுவேகமாக கரையேறி விட்டது. அப்போது சுழலில் சிக்கியது போல் கூரை சுழலத் தொடங்கியது. கரையில் இருக்கும் வேர்களில் மோதி சிதறிவிடும் என பயந்த வானதி, வேர்களில் இருக்கும் ஒரு முதலையைக் கண்ட தும் மேலும் பயந்து போனாள். அப்போது வேகமாக மோதிய கூரை உடைந்து சிதற மரக்கிளைகளில் மாட்டிக்கொண்ட வானதி அதைப்பிடித்து ஏறி மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு கூரையின் சிதறல்களில் மாட்டிக்கொண்ட முதலையைப் பார்த்தாள்.
அதற்குள் அவளைத் தொடர்ந்து வந்த படகு நெருங்கிவிட பூங்குழலியைக்கண்டவள் அதே நேரத்தில் யானையின் மீது பொன்னியின் செல்வரையும் கண்டாள். படகு வேகமாக செல்ல பூங்குழலி வானதியைப் பார்த்துக்கொண்டே கவனிக்காமல் முதலையின் அருகில் குதித்து விட்டாள். வானதி ‘முதலை’ என்று கத்தியபின் திரும்பி பார்த்தவள் அபாயம் உணர்ந்து வெள்ளத்தின் போக்கில் நீந்த முடியாமல் தடுமாறினாள். இதைக் கண்ட வானதி அவளைக் காப்பாற்றும் பொருட்டு வேகமாக கீழ்க்கிளைக்கு வந்து அவளின் கூந்தலைப் பிடித்து, பின் கைகொடுத்து அவளை மேலே தூக்கத் தொடங்கினாள். வெள்ளத்தை எதிர்த்து பூங்குழலியும் வானதியின் கையைப் பிடித்து மேலே ஏற முயற்சிக்க வானதியின் மெல்லிய கரங்கள் பூங்குழலியின் வலிய உடலைத் தாங்கவியலாமல் நடுங்கியது.
அப்போது யானைத் துதிக்கையின் மூலம் பூங்குழலியையும், வானதியையும் இளவரசர் காப்பாற்றிக் கரையில் விட, வானதி பூங்குழலியை அத்தனையும் மறந்து இறுகக் கட்டிக் கொண்டாள். பூங்குழலி வானதிக்கு நன்றி தெரிவித்து விட்டு தன் அத்தை சொன்னதைச் சொல்லிவிட்டு போவதற்காகவே தன் உயிரை பிரயாசைப்பட்டு காப்பாற்றிக் கொண்டதாகக் கூறினாள்.
வானதிக்கு விஷமக் குதூகலம் பெருக, பொன்னியின்செல்வனைப் பார்த்து, ‘யானைப்பாகா.. யானைப்பாகா.. எங்களை உன் யானை மேல் ஏற்றிச் செல்கிறாயா? எனக்கேட்டுவிட்டுக் கலீர் என்று சிரித்தாள்.
- சவிதா

Comments (0)