தஞ்சையில் சக்ரவர்த்தியின் உயிரைக் காக்க தன்னுயிரை விட்ட மாதரசி மந்தாகினி தேவியை நினைத்து அனைவரும் பெருமிதமும், வருத்தமும் கொண்டிருந்த அதே நேரத்தில் கடம்பூரில் நடந்த சம்பவங்களை பார்க்கப் போகிறோம்.

நந்தினி தனது அறையில் அலங்காரமுடைய கொலை வாளை எடுத்து தீப ஒளியில் அதன் பிரதிபலிப்பில் உவந்து அதை பயன்படுத்தும் வேளை வந்துவிட்டது எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். திடீரென மேலே பார்த்து வீரபாண்டியனின் ஆவிபேசுவதாக நினைத்துக்கொண்டு தான் கொடுத்த சபதத்தை நிறைவேற்றி விடுவதாக கெஞ்சினாள்.
அப்போது மணிமேகலை உள்ளே வர நொடியில் முகபாவனைகளை மாற்றிக் கொண்டு தேனொழுக அவளுடன் பேசலானாள்.

மணிமேகலை, பழுவேட்டரையர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதை தன் தமயனும் தகப்பனாரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு நந்தினியிடம் உடனே சொல்ல வந்ததாக பதட்டத்துடன் கூறினாள். பெரிதாய் அந்த செய்திக்காக அலட்டிக் கொள்ளாத நந்தினியை அதிசயத்துடன் பார்த்த மணிமேகலையிடம், ‘ இது கந்தன் மாறனும், பார்த்திபேந்திரனும் தன்மேல் துர் எண்ணம் கொண்டுள்ளதால் என்னை அடைய அவர்கள் செய்யும் சதியாக இருக்கலாம்’, என்றாள். ‘தன் கணவருக்கு எதுவும் ஆகாது என்று நம்பிக்கை உள்ளதாகவும் தனக்கு மணிமேகலையை நினைத்து தான் பயம்’ எனவும் கூறினாள்.

மணிமேகலை தன் மனது வந்தியத் தேவனிடம் இருப்பதாகவும், ஆதித்த கரிகாலருக்கு மணம்முடிக்க கந்தன்மாறன் தொடர்ந்து தன்னை வற்புறுத்துவதால் அவனை வெறுப்பதாகக் கூறினாள்.

நந்தினி மணிமேகலையின் நிலையைக் கண்டு தான் வெகுவாக கலங்குவதாகவும் ஆதித்த கரிகாலர் மணிமேகலையை மணந்து கொள்ள ஆசைப்படுவதால் கந்தன்மாறன், அவள் தகப்பனார், அனைவரும் சேர்ந்து வந்தியத் தேவனின் உயிருக்கு ஊறு விளைவிக்க வாய்ப்பிருப்பதாகவும் விருப்பமில்லாத ஆண்மகனைக் கல்யாணம் செய்து கொண்டால் அந்த துயரத்தை மணிமேகலையால் தாங்க முடியாதெனவும் கூறி மணிமேகலையைக் குழப்பினாள்.

வீரனான வந்தியத் தேவனிடம் இதையெல்லாம் எடுத்துக் கூறினால், அதை மறுத்து நேருக்கு நேராய் நின்று ஆபத்தில் மாட்டிக்கொள்வான்; எனவே தன்னிடம் கூட்டி வந்தால் பழுவேட்டரையரின் நிலையை பார்த்து வருமாறு தான் கெஞ்சிக் கேட்டு சுரங்க வழியில் அவனை பாதுகாப்பாக அனுப்பிவிட்டால், நாம் இங்கே சமாளித்துக் கொள்ளலாம் என மணிமேகலையிடம் நைச்சியமாகக் கூறினாள்.

அதை அப்படியே நம்பிய பேதை மணிமேகலை, உடனே அவனை அழைத்து வருவதாகக் கூறி வெளியே சென்றாள்.

அப்போது வேட்டை மண்டபத்தின் ரகசிய அறையிலிருந்து மந்திரவாதி ரவிதாசன் கதவைத் தட்ட, நந்தினி வேட்டை மண்டபக் கதவைத் திறந்து சுரங்க அறைக்குள் நுழைந்தாள்.

ரவிதாஸனின் முகம் முன்னிலும் கோரமாய் இருந்தது. அவன் உடலில் காயங்கள் இருந்தன. நந்தினியின் சபதத்தை நிறைவேற்றுவது குறித்து திரும்ப திரும்ப கேள்விகள் கேட்டு, ‘இன்றில்லையானால், மறுபடி ஆதித்த கரிகாலனை முடிப்பது இயலாததாகிவிடும்’ எச்சரித்தான்.

‘யாரும் குறுக்கே வராமலிருந்தால் போதும், இன்று எடுத்த காரியம் முடிக்காமல் விடமாட்டேன்’ என்று கூறிய நந்தினி அவன் உயிரைப் பறித்தபின்பு தானும் தன்னுயிரை விட்டுவிடப் போவதாகக் கூறினாள். ரவிதாஸன், அவளை அங்கிருந்து பாதுகாப்பாக சுரங்க வழியில் அழைத்துக்கொண்டு கொல்லிமலைக்கு போகத் தயாராக இருப்பதாகவும் அதற்காகவே நான்கு பேர் சுரங்க அறையில் காத்திருப்பதாகவும் கூறினான்.

பரமேஸ்வரன் வெளியில் காத்திருப்பதாகவும், ஐயனார் கோவிலில் ஒரு காளாமுகனைத் துரத்திவிட்டு தேவராளன் காத்திருப்பதாகவும் கூறினான். காரியம் முடிந்ததும் தான் சிரிக்கப் போவதாகவும், அப்போது உதவிக்கு வருமாறும் நந்தினி சொல்லிவிட்டு சுரங்க அறையை விட்டு வெளியே வந்தாள்.

அன்று மதியத்திலிருந்து ஆதித்த கரிகாலர் ஒரு நிலையில் நில்லாமல் உன்மத்தம் பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்ததைக் கண்டு வந்தியத்தேவன் கலங்கினான். ஆதித்த கரிகாலரின் பாட்டனார் மிலாடுடையார் சைன்யத்துடன் வருகிற செய்தியை சம்புவரையர் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தார்.

தன்னை சம்புவரையரும் பழுவேட்டரையரும் செய்கிற சதிச் செயல்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே தன் பாட்டனார் படை திரட்டி வருகிறார் எனக் கூறி அவரை நோகடித்தான். பார்த்திபேந்திரன் சமாதானம் செய்ய முன்வர, ‘கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் பழுவூர் இளைய ராணியிடம் மதிமயங்கி தன்னை இங்கே கூட்டி வந்த’தாகப் பழி கூறினார்.

அதை ஒப்புக்கொண்ட பார்த்திபேந்திரன், நல்ல நோக்கத்துக்காகவே நந்தினி அவனை அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். அதை ஒப்புக்கொள்ளாத கரிகாலன் தன்னை பின்னாலிருந்து தாக்கி கொல்ல பார்த்திபேந்திரனும், கந்தன்மாறனும் முயன்றதாகவும் வந்தியத்தேவன் காப்பாற்றியதால் தான் பிழைத்தேன் எனவும் பேசிக்கொண்டே போனார்.

மேலும் ஈழத்திலிருந்து அருள்மொழிவர்மரைக் கூட்டிவரச் சென்றுவிட்டு நடுக்கடலில் மூழ்க விட்டு விட்டதாக சொல்லியபோது கந்தன் மாறன் உள்ளே வந்தான். இளவரசர் அருள்மொழி சாகவில்லை என்றும் லட்சக்கணக்கான மக்கள் புடைசூழ தஞ்சைக்கு செல்வதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினான்.

இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவான் கரிகாலன் என்று எல்லோரும் நினைத்தபோது, மகிழ்ச்சியடைவதற்கு பதில் கோபப்பட்ட ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவனைப் பார்த்து, தான் சொல்லும்வரை நாகப்பட்டினத்திலேயே அருள்மொழிவர்மன் இருப்பார் எனக் கூறியது எப்படி மாறியது எனக் கேட்டார். இளைய பிராட்டி அப்படி சொல்லித்தான் தன்னை அனுப்பியதாகவும், நடுவில் என்ன நிகழ்ந்தது எனத் தனக்குப் புரியவில்லை என வந்தியத்தேவன் சொல்ல, ஆதித்த கரிகாலன் வெகுவாக கோபப்பட்டார்.

தன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் எனவும், தொலைவிலேயே இருக்குமாறும், மறுநாள் அவனுக்குரிய தண்டனையை வழங்குவதாகவும் கூறி அவனை வெளியேற்றி விட்டார்.

பிற்பகலில் சம்புவரையரும் பார்த்திபேந்திரனும் மிலாடுடையாரை எதிர்கொண்டு அழைக்க ஆதித்த கரிகாலரின் ஆணையின் பேரில் வெளியே செல்வதை தெரிந்து கொண்டான் வந்தியத்தேவன். கரிகாலரின் கோபத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே நந்தவனத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது சந்திரமதியும் மணிமேகலையும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.

மணிமேகலை சந்திரமதியிடம் ‘எங்கேயாவது தேடி வந்தியத்தேவனைக் கண்டுபிடித்து வரும்படி’க் கூறி அவளை அனுப்பி வைத்தாள். மணிமேகலையின் மீது கரிசனம் கொண்ட வந்தியத்தேவன் அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டிருந்தாலும், கந்தமாறன் தன்மீது வைத்துள்ள அவநம்பிக்கையையும் உத்தேசித்து அங்கு வந்ததிலிருந்து மணிமேகலையை விட்டு தள்ளியே இருந்தான்.

இப்போது மணிமேகலை தன்னைத் தேடுவதை அறிந்து கொண்டவன், அவளுக்கு தன்னுடைய உதவி தேவைப்படலாம் எனத் தோன்ற தனியே அமர்ந்து கொண்டிருந்த மணிமேகலையை நெருங்கி குரல் கொடுத்தான். தனிமையில் அமர்ந்திருந்த மணிமேகலை வந்தியத்தேவனின் குரலைக் கேட்ட தும் விதிர்த்து குளத்தில் விழப் போக, அவன் தாங்கிப் பிடித்தான்.

அதற்கு வெட்கப்பட்டவளாய், தன்னை பொருட்டாக மதிக்காததில் கோபமுற்று நன்றிகெட்டவர் என்று மணிமேகலை குற்றம் சாட்டினாள். தன் நிலையை விளக்கிய வந்தியத்தேவன் கந்தன்மாறனின் கோபத்துக்காகவே ஒதுங்கியதாக தெரிவிக்க, ‘அவன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கோட்டையை விட்டு வெளியேறுமாறும்’ மணிமேகலை வேண்டினாள். வந்தியத்தேவன் மறுக்க, ‘நந்தினி கூறியது சரிதான்’ என மணிமேகலை கூறவும், அவன் பதட்டமுற்று நடந்ததைக் கேட்க, அனைத்தையும் சொல்லி முடித்தாள்.
நந்தினி அவனிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் அவளின் செயல்கள் சந்தேகத்துக்கு இடமாய் இருப்பதாகவும், தான் அறையிலிருந்து வெளியேறிய பின் வேட்டை மண்டபத்திலிருந்து குரல்கள் கேட்டதாகவும் மணிமேகலை கூறினாள்.

நந்தினி அறையிலிருந்து வேட்டை மண்டபத்துக்கு போகும் வழி ஒன்றும், வெளியிலிருந்து வரும் வழி ஒன்றும் அல்லாமல் அரண்மனைக்குள் இருந்து போகிற மூன்றாவது வழி இருக்கிறதா என வந்தியத் தேவன் கேட்க மணிமேகலை இருப்பதாகக் கூறினாள். அதை தனக்கு காட்டித் தருமாறு வந்தியத்தேவன் மணிமேகலையிடம் வேண்டினான்.

தன்னைக் கூடவே அழைத்துச் செல்லும் நிபந்தனையை விதித்து ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு அந்த வழியில் மணிமேகலை அவனைக் கூட்டிச் சென்றாள். போகும் வழியில் வந்தியத்தேவனின் அருகாமையில் கிளர்ச்சியுற்று மகிழ்ந்து, அவனுடன் குறும்பாக பேசியபடியே மணிமேகலை வர அவன் உள்ளமோ என்னமோ நடக்கப் போகிறது என்ற அபாய உள்ளுணர்ச்சியால் பயந்திருந்தது.

அப்போது குறுகிய பாதையில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு விளக்கைத் தவறவிட்டனர். அப்போது இடும்பன்காரி விளக்குடன் எதிரே வந்து இவர்களைக் கண்டு திடுக்கிட்டது போல நடித்தான். மணிமேகலை சுரங்கப் பாதையை சரிபார்க்க வந்ததாகவும், வேட்டை மண்டபத்தில் வேல் ஒன்றை எடுக்கப் போவதாகவும் கூறி விளக்கை வாங்கிக் கொண்டு இடும்பன்காரியை அனுப்பி வைத்தாள்.

இருவரும் வேட்டை மண்டபத்தை அடைந்தபொழுது முதலில் புலப்படவில்லையாயினும் இருட்டு கண்களுக்கு பழகிய பின் அங்கிருந்த விலங்குகளின் பின் மனிதர்கள் மறைந்து நின்று கொண்டிருந்தது தெரிந்தது. அப்போது திடீரென ரவிதாஸனின் ஆட்கள் வந்தியத்தேவனை பின்னிருந்து இழுத்து அங்கிருந்த வாலில்லாக் குரங்கோடு சேர்த்துக் கட்டியவர்கள், மணிமேகலையையும் கலைமானின் கொம்புகளோடு கட்டிவைத்தார்கள்.

வந்தியத்தேவன் அவளை அவிழ்த்து விடுமாறும், நந்தினியின் அழைப்பின் பேரிலேயே தாங்கள் வந்ததாகவும் கூறினான்.

ரவிதாஸன் இந்த அறையிலும் வெளியேயும் எது நடந்தாலும் அமைதியாக இருப்பான் எனில் அவனுடைய உயிருக்கு ஏதும் தீங்கு செய்ய மாட்டோம் என்றும் நந்தினிதான் பாண்டிமாதேவி, தான் பாண்டிய முதன் மந்திரி என்றும் சொல்லிக்கொண்டு போனான்.

இந்த சந்தர்ப்பத்தில் மணிமேகலையை யாரும் கவனிக்கவில்லை ஆதலால் அவள் கையிலிருந்த கத்தியால் கட்டுக்களை அறுத்துக் கொண்டு விடுவித்துக் கொண்டவள், ரவிதாஸன் துவாரத்தை திருகி அதில் வெளியே பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் வந்தியத்தேவனின் கட்டுகளையும் விடுவித்தாள். சப்தம் கேட்டு அனைவரும் அவன்மேல் பாய, வந்தியத்தேவன் தன் வலிமையைக் காட்ட, கதவைத் திறந்து கொண்டு நந்தினி வேட்டை மண்டபத்திற்குள் வந்தாள். அனைவரையும் திட்டியவள், மணிமேகலையை அவள்தான் வந்தியத்தேவனை அழைத்து வரச் சொன்னதாகச் சொல்லி அவர்கள் இருவரையும் அறையினுள் கூட்டிச் சென்றாள்.

உடனடியாக வந்தியத்தேவனை தப்பிச் செல்லும்படி நந்தினி கேட்க, அவளின் வாளைக் கொடுத்து விட்டால் தான் உடனே அங்கிருந்து போய்விடுவதாக அவன் மறுமொழி உரைத்தான். நந்தினி தடுமாற, ஆதித்த கரிகாலன் நந்தினியின் சகோதரன் எனவும், சகோதரஹத்தி ஏற்படாதவாறு தடுக்கவே தான் வாளைக் கேட்பதாகவும் வந்தியத்தேவன் இறைஞ்சினான்.

இதை ஆதித்த கரிகாலனிடமே சொல்லித் தடுக்கலாமே என நந்தினி ஏளனமாய் வினவ, தான் தடை செய்தால் இன்னமும் அதிகமாக கோபப் படுவார் என்பதால் தான் நந்தினியிடம் இறைஞ்சுவதாக வந்தியத்தேவன் கூறினான்.

மேலும் ஈழநாட்டில் அவளின் தாயாரை தான் சந்தித்ததையும் அவர் சோழ நாட்டின் மீது அளவற்ற பாசம் கொண்டிருப்பதையும், பொன்னியின் செல்வனை எல்லா ஆபத்திலிருந்தும் காத்து வருவதையும் குறிப்பிட்டான். இப்போது ஆதித்த கரிகாலனுக்கு நந்தினியால் தீங்கு நேருமானால் அந்த மாதரசி நந்தினியை எந்நாளும் மன்னிக்க மாட்டார் எனவும் எச்சரிக்கை செய்தான்.

நந்தினி தொய்வுற்று அமர, அரண்மனையில் தன் அன்னை போல் வேடமிட்டு நந்தினி சுந்தர சோழரை பயமுறுத்தியதையும், அனைத்தும் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை, வாளைக் கொடுத்துவிட்டால் இனியும் யாரிடமும் கூற மாட்டேன் எனவும், வந்தியத்தேவன் சொல்லச் சொல்ல நந்தினி இளகினாள்.

வாளை எடுத்து அவன் கையில் கொடுக்க வந்தவள், மறுபடியும் பின்வாங்கி வேட்டை மண்டபத்தினுள் உள்ளவர்கள் தன்னை உயிருடன் விடமாட்டார்கள் எனவும், தன்னை தன் அன்னையிடம் சேர்க்க வேண்டுமெனவும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள். கரிகாலர் வருவதற்கு முன் இங்கிருந்து கிளம்ப வேண்டும் என அவசரப் படுத்தியவள், வேறு வழி இருக்கிறதா என வினவினாள். மணிமேகலை தன்னையும் அழைத்து போகும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.

வாளைக் கொடுக்கும்படி வந்தியத்தேவன் கேட்க அவள் கொடுக்க முனையும்போது கைதவறி கீழே வீழ்ந்தது. வந்தியத்தேவன் எடுக்க முனைகையில் தெய்வத்தின் சித்தம் வேறாக இருப்பதால் உடனே அவனை மட்டும் கிளம்பி விடும்படி நந்தினி கூறினாள். கேட்காமல் அவன் வாளை எடுக்கப் போக நந்தினி வாளை தன் கால்களால் மிதித்துக் கொள்ள கூரான முனை வந்தியத்தேவனின் உள்ளங்கையில் காயம் செய்து விட்டது.

அதற்குள் இளவரசர் வரும் சத்தம் கேட்டதால், இருவரையும் மறைந்து கொள்ளச் சொல்லி நந்தினி கூற, வந்தியத்தேவன் ஒரு கணம் தயங்கினான். அவனுக்கு கொடுத்த வாக்கின் படி உடன்பிறந்தவனைக் கொல்ல மாட்டேன் என உறுதி கூறி அவனை அங்கு ஆதித்த கரிகாலன் பார்த்து விட்டால் ஆபத்து என துரிதப் படுத்தினாள். மணிமேகலையும் இறைஞ்ச, யாழ் களஞ்சியத்தின் படிகளில் வந்தியத்தேவன் மறைந்து கொள்ள மணிமேகலை அங்கிருந்த திரைச்சீலைகளின் பின் மறைந்து கொண்டாள்.

ஆதித்த கரிகாலனும், கந்த மாறனும் உள்ளே நுழைந்தனர்.

  • சவிதா

Comment (1)


BALASUBRAMANIAM
BALASUBRAMANIAM
April 1, 2023

பிரமிக்க வைக்கும் காட்சி விவரிப்புகள்… அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *