திரை விமர்சனம்

‘ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை?  ஏன் இன்னும் குழந்தைப் பேறு இல்லை?’  என்று கேட்கும் பழக்கம், இன்றும் தொடரவே செய்கிறது. இல்லாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவர்களே சொல்லாதபோது,  அப்படி அவர்களது தனிப்பட்ட விஷயத்தில், மூக்கை நுழைத்துக் கேட்பது என்பது விஷமமானது மட்டுமல்ல, அநாகரிகமானதும்கூட. தவிர, குழந்தை வேண்டுமா வேண்டாமா, எப்போது வேண்டும் என்று முடிவெடுப்பதில் முதல் உரிமை பெண்ணுக்கானது என்று சொல்கிறது சட்டம்.

‘மணம் செய்து கொள்ளலாம், குழந்தை வேண்டாம்’ என்கிற சாரா வின்சென்ட்டுடன் (அன்னா பென்) சம்மதித்துக் கை கோர்க்கிறான் ஜீவன் பிலிப் (சன்னி வைன்). ஆனால் நடந்ததே வேறு. அதனை அடுத்து சாரா ஜீவன் தம்பதியரின் வாழ்க்கைப் போக்கு என்னவானது என்பதுதான், அக்ஷய் ஹரிஷ் எழுதி ஜூட் அண்டனி ஜோசப் இயக்கி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளிவந்துள்ள ‘சாராஸ்’ மலையாளத் திரைப்படத்தின் கதை. 

வளர்ந்து வரும் திரைக் கலைஞர் சாரா. தனியார் நிறுவனத்தில் ஜீவனுக்கு வேலை. இரண்டாண்டு காலக் காத்திருப்புக்குப் பின், இயக்குனராகப் படம் செய்திட அவளுக்கு வாய்ப்பு. கருத்தரித்தல், குழந்தைப்பேறு, வளர்த்தெடுத்தல் என தனது லட்சியத்திற்கு இடையூறு இல்லாத,  இலட்சிய வாழ்க்கையை அவள் விரும்புகிறாள். ஜீவனும் அவளுக்குத் துணை நிற்கவே செய்கிறான், எதிர்பாராத அந்நிகழ்வு சம்பவிக்கும் வரை.

கதையில் டிவிஸ்ட் இல்லை. பரபரப்பான சம்பவங்கள் இல்லை. அடிதடிக்கு அவசியமில்லை. சிருங்காரக் காதல் காட்சிக்கு வாய்ப்பில்லை. எல்லாமே வெளிப்படையானவை;  உணர்வுப்பூர்வமானவை. சமூகக் களங்கமாகக் கருதும் விஷயங்களின்  பொருட்டு, மனிதர்கள் சரியானவற்றைப் புரிந்து கொள்வதும், அவர்களைப் புரிந்துகொள்ள வைப்பதும் அத்துனை சுலபமல்ல. ‘அப்பாடா’ என்றாகிவிடும்; விடுகிறது.

படத்தின் முதல் அரைமணி நேரம் முகம் முழுவதும் சிரிப்புடன்  வரும் அன்னா பென், பிறகு முற்றிலும் வேறான சாராவாகத் தனது பங்களிப்பை நேர்த்தியாக வழங்குகிறார். “சாரா, இங்கே எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. உன்னோட அப்பா, உன்னோட அம்மா, என்னோட அம்மா, என்னோட சகோதரி, எல்லாரோட சந்தோஷத்தையும் நீ கெடுக்கப் போறே?” என்கிற ஜீவனிடம், சாரா “அப்ப என்னோட சந்தோஷம்?” என்று கேட்பது நியாயமானதே. என்ன ஒன்று, ஏற்ற பாத்திரத்திற்கு உயரமும் உடல் வாகும் கூடுதலாக இருதிருந்தால்,  இன்னும் சிறப்பு கூடி இருக்கும். தாய்க்கும் தாரத்திற்கும் இடையே தவிக்கும் பாத்திரத்தை, ‘பளிச்’செனத்  துலங்க வைத்துள்ளார், சன்னி வைன்.

‘Better not be a parent than be a bad parent’ என்கிற ஆலோசனையுடன் வரும் டாக்டர் அபீஸ் (சித்திக்) கதையின் அஸ்திவாரம். எம்.பி.ஏ. கேட் நுழைவுத் தேர்வு, அதற்கானத் தயாரிப்பு என்று ஜீவனிடமும்,  “குழந்தைப் பருவம் சரியா இல்லாததால் அவங்க  கிரிமினல்களாகி விடுவதை நீங்க படங்கள்ல காட்டுறீங்க. படப்பிடிப்பு துவங்கறதுக்கு ரொம்பவும் முன்னேயே, அதப் பத்தி நிறைய யோசனைகள், விவாதங்கள் எல்லாம் நடத்துவது இல்லையா? இது அதையெல்லாம் விட மிகப் பெரிய முடிவு இல்லையா?” என்று சாராவிடமும் அறிவுரையாக இல்லாமல் ஆலோசனையாக வழங்குவது, அவரது நடிப்பைப் போலவே நயமானது.

சாராவின் தந்தை வின்சென்ட் (பென்னி பி நாயரம்பலம்), ஜீவனின் தாயார் ரீதம்மா பிலிப் (மல்லிகா சுகுமாரன்), ஜீவனின் சகோதரி டாக்டர் சந்தியா பிலிப் (தான்யா வர்மா) ஆகியோரின் அளவான நடிப்பு கவனம் பெறுகிறது.

பாடல்கள் மாண்டேஜ் வகை. ஷான் ரஹ்மான் இனிமையாக இசையமைத்துள்ளார். நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு பழுதில்லை. ரியாஸ் கே பாதர் படத்தொகுப்பைச் செய்துள்ளார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தின்  நீளத்தை 20 நிமிடங்கள் குறைத்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

கிளைமாக்ஸில், நான்கு குழந்தைகளுக்குப் பிறகு படுக்கையில் நெருங்கும் கணவனை பலவீனமான நிலையிலும் காலால் பலமாக உதைக்கும் பெண், இரண்டு குழந்தைகளுக்குப் பின்பே இன்னும் பலமாகவும், சமயோசிதமாகவும், உதைத்திருந்திருக்கலாமோ!

“சாரா, நீ தயாரா இருந்தா மட்டுமே இதைச்  செய்யணும். இது உன்னோட உடம்பு, முடிவும் உன்னுடையதாகத்தான் இருக்கணும்” என்று முத்தாய்ப்பாக டாக்டர் அபீஸ் கூறுவது சாராவுக்கு மட்டுமல்ல, எல்லாப் பெண்களுக்கும்கூடத்தான்.

மதிப்பெண் : 7 / 10

விமர்சனம் : மது ராஜேந்திரன்


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *