வெளிச்சத்துக்கு வரும் பார்ப்பனியப் படுகொலை

ராம்குமார் – இந்தப் பெயரை நம்மில் பலர் மறந்தே போயிருப்போம். நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில், ஜெயிலில் கரண்ட் கம்பியைக் கடித்துச் செத்த ராம்குமார் என்று சொன்னால் பலருக்கும் நினைவு வரும்.

ராம்குமார் தற்கொலை?! வழக்கை, ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் சூ மோட்டோ வழக்காக எடுத்து விசாரித்தது.

விசாரணையில், ‘ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் Pathology துறைப் பேராசிரியர் டாக்டர் ஆண்டாள் பழனி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் வேணு ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

போகிற போக்கில் அவர்கள் இதைச் சொல்லவில்லை. ராம் குமாரின் மூளை, சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், நாக்கு, உதடு உள்ளிட்ட பல பாகங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ததில், எந்த பாகத்திலும் எந்தத் திசுவிலும் மின்சார பாதிப்புக்கு ஆளானதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் அப்துல் காதர், ராம்குமாரின் உடலோடு சிறை மருத்துவரும் வந்திருந்ததாகவும், சிறையில் என்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன என்று கேட்டறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறுக்கு விசாரணையின்போது, ‘ராம்குமாரின் உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதன் அடையாளம் அல்ல. உடலை மார்ச்சுவரிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், நான் அவரது உடலில் இருந்த புறக்காயங்களை சோதிக்கவில்லை. அவரது உடலின் திசுக்களை ஆய்வு செய்தால்தான் மின்சாரம் தாக்கியதா என்று தெரியவரும். ஆனால், முந்தைய அறிக்கையில், மின்சாரம் தாக்கிய காயம் இருந்ததாக, தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

முன்னதாக, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் மறுவிசாரணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிமுக ஆட்சியில், பார்ப்பனியம் நடத்திய படுகொலைகளில் ராம்குமார் மரணமும்! ஒன்று என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய காவல்துறை, உயிர்காக்க வேண்டிய மருத்துவத்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதித்துறை, அனைத்துக்கும் பொறுப்பான அரசு ஆகிய அனைத்துமே கூட்டாக இந்தச் சதியில் பங்கெடுத்துள்ளன.

இது மட்டுமல்லாது, சுவாதி வழக்கில் உண்மையான குற்றவாளியைத் தப்ப வைக்க இவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டுள்ளார்கள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வரும். அதற்காக பலியிடப்பட்ட அப்பாவிதான் ராம்குமார் என ஒருநாள் நிரூபிக்கப்படலாம்.

தற்போது அமைந்துள்ள அரசு, ராம்குமார் மரணம்!, சுவாதி கொலை ஆகிய இரண்டு வழக்குகளையுமே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டால், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ராம்குமார் சாவுக்கும் நீதி கிடைக்கலாம்.

செய்யுமா புதிய அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்.


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *