வைகைப் புயலே வருக!
நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடை விதித்து போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அவர் களம் இறங்கவிருக்கிறார் என்பது மகிழ்வான செய்தி. ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்துப் பேட்டியளித்த அவர், “இது என்னுடைய மறுபிறவி” என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்.

ரெட் கார்ட் வழங்கப்பட்ட காலத்தில், திரைப்படங்களில்தான் வடிவேலு நடிக்கவில்லையே தவிர, தொலைக்காட்சிகள் வழியாகவும் மீம்கள் வழியாகவும் அன்றாட வாழ்வில் அவரது வசனங்கள் வாயிலாகவும் நம்மைத் தொடர்ந்து சிரிக்க வைத்துக்கொண்டேதான் இருந்தார் என்பதுதான் உண்மை.
தனி மனிதன் என்பது வேறு. ஒரு கலைஞனாக இருப்பது என்பது வேறு. தனிமனிதனின் கருத்து சுதந்திரத்திற்காக ஒரு துறை அவனது கலை வாழ்வை முடக்கி வைத்திருந்தது. இப்பொழுதாவது அந்தத் தடை நீங்கியிருப்பது நல்லது.

ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு பருவம் உண்டு. SEASON என்று சொன்னால் சிலருக்கு எளிதில் புரியும். அதேபோல, ஒரே மாதிரியான தொனி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசப்படும். நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ஜனகராஜ் , கவுண்டமணி, செந்தில், விவேக், சூரி என இப்பொழுது இருக்கும் யோகிபாபு வரை நீண்ட நெடிய பருவங்கள் உண்டு. நாகேஷ் ஒரு ட்ரெண்ட் செட் செய்தார். அவர் காலத்தில் அல்லது அவரது காலத்தைத் தொடர்ந்த சிலர் அவரவர் பாணியில் ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுக்கென ஒரு பாணியை உருவாக்குவதற்குள் நிலைத்தன்மை பெறாமல் பல நல்ல கலைஞர்கள் காணாமல் போனார்கள். அது தான் நிதர்சனம். ஆனால் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் வகையான இசை இருப்பது போல் சில நகைச்சுவைகளை நாகேஷ் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.

கவுண்டமணி – செந்தில் காம்போவும் சரி, கவுண்டமணியின் சிங்கிள் ட்ராக் காமெடிகளும் சரி, நகைச்சுவையில் புது ட்ரெண்ட்டை உருவாக்கினாலும் அதைத் தொடர்ந்து வந்த வடிவேலு, விவேக் பருவங்கள் முக்கியமானவை. அதில் நிலைத்து தனக்கென்று தனிப்பட்ட முத்திரையை இன்றளவும் பதித்துக்கொண்டிருப்பவர் வடிவேலு.
வடிவேலுவின் மகத்தான வெற்றிக்கு சில காரணங்களைப் பட்டியலிட்டுச் சொல்ல முடியும்.
முதலில் திகட்டவே திகட்டாத தென் தமிழகத்தின், முக்கியமாக மதுரை வட்டார வழக்குமொழி.
சொற்களைப் பிரயோக்கிக்கும் அலைவரிசை மற்றும் அதற்கேற்றபடி உடல் மொழியை, முக பாவனைகளைக் கோர்க்கும் நடிப்புத்திறமை.
ஒரு சாமான்யனாக, மனதில் தோன்றும் அசரீரிகளை அசரீரிகளாகவே ஒலிக்கவிட்டு, அதையும் வடிவேலுவின் குரலாக ஒலிக்கவிட்டு எல்லா மூலைகளிலும் வடிவேலுவைப் பயன்படுத்தத் தெரிந்த, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த கன்டென்ட் ரைட்டர்ஸ் மற்றும் இயக்குனர்கள்.
இவை எல்லாம் ஒன்று சேர்ந்த கலவைதான் வடிவேலுவின் வெற்றி.

குழந்தைகளை ஈர்க்கும் முக பாவனைகள் வடிவேலுவிடம் உண்டு. ஒரு படத்தில் ஒரு குழந்தை பலூன் ஊதச்சொல்லும், அவரும் ஊதுவார். பலூன் உடையும். உடைந்ததும் முகத்தில் ஒரு பாவனை காட்டுவார். குழந்தை அழும்போது குழந்தையை மிரட்டும் தொனியாக மாற்றுவார். ஆனால் குழந்தையிடம் தோற்கும் முகத்தை நகைச்சுவைக்காக மாற்றுவார்.


எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் அது விகாரமாக மாறும் என்று தெரியாமல் பயன்படுத்தி சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் வடிவேலுவிடம் இருக்கும் தனித்திறமை, எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்பதைப் புரிந்து வைத்திருப்பது. இது அனைவருக்கும் வராது. உதாரணத்திற்கு, ‘உயிரே.. உயிரே.. தப்பித்து எப்படியாவது ஓடிவிடு… ஐயயோ வருதே… மூதேவி வருதே…” என்று வடிவேலுவின் குரலில் ஒலிக்கும்பொழுது திரையில் வடிவேலுவின் முகமும் உருவமும் பர்தாபோட்டு மூடியிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனாலும் நம்மால் அந்தக் குரலைக் கேட்டவுடன் வரும் வெடிச்சிரிப்புக்குத் தடை போட முடியாது. நகைச்சுவையில் தனித்து நின்ற உச்சரிப்புகளில் அதுவும் ஒன்று.

வடிவேலு பற்றி சமூக வலைத்தளங்களில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருந்தாலும் நுணுக்கமான விசயங்களை மட்டுமின்றி வெகுஜனக் காமெடிகளில் பரவலாக அறியப்பட்ட காமெடிகளைச் சொல்லாமல் கட்டுரை நிறைவு பெறாது என்பதுதான் வடிவேலுவின் வெற்றி.
ஒரு தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வரும் வாக்காளர் இன்னொரு கட்சி பூத்தில் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும் வடிவேலுவின் பூத்திற்கு வந்து உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன் என்றும் கூறுவார். “அவன்ட்ட வாங்குன காசுக்கு ஏணியில ஒரு குத்து, உன்ட்ட வாங்குன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து” என்றும் சொல்வார். “மூன்றாவது குத்த நான் குத்தவா?” என்று வடிவேலு சொல்வதற்கு முன், எழுத்தால் எழுத முடியாத ஒரு சத்தத்தை (ஜங்……) எழுப்பி, “ங்கொய்யாலே” என்று அவனை அடிப்பார். உண்மையில் அந்தக் காமெடிக்கான சிரிப்பின் ஆதிப்புள்ளி முத்துக்காளை வசனத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது உருவானாலும் வடிவேலு உச்சரிப்பில் மொழியும் சொல்லும் அற்ற அந்த ஒலிதான் சாமான்யனையும் தன்னை மறந்து சிரிக்க வைக்கும் அல்லது வெடிக்க வைக்கும் பெரும்புள்ளி.


அதே காட்சியில் அடுத்து வரும் நபர், அவர் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று சொல்வதை வடிவேலு நம்ப மறுப்பார். அதற்கு அவர் “நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரிஞ்சுதான் ஓட்டு போட்ட சீட்டைக் கொண்டு வந்திருக்கேன்” என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து சீட்டை வெளியே எடுத்துக் காண்பித்து, 17 வருசமா உங்களுக்குத்தான் ஓட்டு போடறேன்” என்று சொல்வார். “அப்படின்னா 17 வருசமா கொண்டு போய்ட்டுதான் இருக்கியா?!!” என்று சொல்லி, முதல் நபருக்குக் கோபத்தைக் காண்பித்தவர், இரண்டாவது நபருக்கு முகத்தில் அதிரிச்சியையும் குரலில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் அந்த நகைச்சுவையின் நீட்சி.
ஒரு நெடிய காட்சியைத் திரைப்படுத்தும்பொழுது இரண்டு சவால்கள் உள்ளன. அந்தக் காட்சிக்கென்று இருக்கும் உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவது. இரண்டாவது, காட்சி தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பார்வையாளனை அந்த உணர்வுக்குள்ளேயே தக்க வைப்பது. ஆனால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் நெடிய காட்சிகளாகப் படமாக்கப்படும்பொழுது, அவை அதே உணர்வில் இருப்பதோடு அல்லாமல், உணர்வு மோலோங்கவும் செய்யும். அதாவது நகைச்சுவையின் வீச்சு அதிகமாகவும் செய்யும்.
அதே திரைப்படத்தில் ஒரு நபரிடமிருந்து ஃபோன் வரும், இவர் சொல்ல வருவதற்குள் எதிர்முனையில் இருப்பவர் இவரைப் பேசவே விடாமல் ஏதோ பேசுவார். அந்த ஒலி திரையில் வராது. ஆனால் எதிர்முனையில் இருப்பவன் தன்னைப் பேச விடாமல் பேசுவதைத் தன் குரல் சமிக்ஞைகள் மூலமாகவே எதிரொலிப்பார், எதிரொளிப்பார். வடிவேலுவின் வெற்றிக்கு அவரது வட்டாரமொழி என்று இந்தக் கட்டுரையை ஆரம்பித்தாலும் வெறுமனே சமிக்ஞைகளைக் கொண்டு மனதில் நின்ற கலைஞனாகவே வடிவேலுவை நிலை நிறுத்த விரும்புகிறேன்.

பல ஐ.டி நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வடிவேலுவின் பிரபல மீம்களும், அவர் பேசிய உரையாடல்களும் பேசப்படுகின்றன. வடிவேலுவின் நகைச்சுவைகள் A B C என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமாய் இருந்தது என்பதுதான் உண்மை.
நகைச்சுவையோடு இசையையும் இணைத்து அதற்குத் தன் குரலையும் நடனத்தையும் ஒருசேர ஒப்புக் கொடுத்தவர் வடிவேலு. பல பாடல்கள் வடிவேலுவிற்கென்றே நடன அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டன. நடன அமைப்பாளரின் தொனியை வடிவேலுவிற்கு ஏற்றுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த நடனக் கலைஞர்களும் வடிவேலுவின் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. பிரபுதேவாவுடன் இணைந்து ஆடிய ‘ஆல் டே ஜாலி டே’, விஜய்யுடன் இணைந்து ஆடிய ‘வாடி வாடி வாடி, கை படாத ஜோடி’ உள்ளிட்ட பல பாடல்களில் திறமையான நடனக் கலைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருக்கும்.


வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் எளிய நகைச்சுவையில், ‘எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை” எனக் காந்தர்வக் குரலிசையை ஒலிக்கச் செய்திருந்தார். “இந்த ஊரே என் பாட்டைப் பாடும்” என்ற குரல் பாடகர் வடிவேலுவிற்கானது. என்.எஸ்.கே., சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிகர் பாடகராக வலம் வருவதும் அந்தக் குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாடுவதும் வடிவேலுவின் குரல்தான். மிகவும் சாமானியர்களில் ஒருவனாக பல படங்களில் நடித்த வடிவேலு, 23ஆம் புலிகேசியாக நகைச்சுவையை மிக இயல்பாக வெளிப்படுத்தினாலும் ஒரு மன்னனுக்கு உண்டான அந்த கெத்துடன் வாழ்ந்து காட்டினார் என்று சொன்னால் அது மிகையில்லை.

ஒவ்வொரு நடிகனும் ஒவ்வொரு காலகட்டத்தில் தேங்கி நின்றுவிடுவான். அதற்கு திரைக்காட்சியின்மீது ஏற்படும் அயற்சியும் தலைமுறையினர் மாறுவதால் ரசனையின் வீச்சு மாறுவதாலும்தான். ஆனாலும் அனைத்துத் தலைமுறையையும் கவரும் ரஜினி போல தன்னைத் தலைமுறைகள் கடந்து தக்க வைத்துக்கொண்டவர் வடிவேலு.
கலைத்துறையில் கலைஞனுக்கும் சரி, ரசிகனுக்கும் சரி சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. இருவரில் ஒருவருக்குச் சலிப்பு ஏற்பட்டாலும், அந்தக் கலைஞன் தன் சந்தையைத் தவறவிடுவான். வடிவேலுவின் வளர்ச்சியில் பல முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவருக்குக் விதிக்கப்பட்ட தடைக் காலத்தில் அவருடைய இருப்பை பல ரசிகர்கள் தவறவிட்டார்கள். சூரி யோகிபாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் அந்த இடங்களைப் பூர்த்தி செய்தாலும் புது ரகங்களைக் கொண்டுவந்தாலும் வடிவேலுவின் வசனங்களும் சமிக்ஞைகளும் பார்வைகளும் மக்களின் வாழ்வியலில் ஒன்றாகிவிட்டன.
நேசமணி காண்ட்ராக்டருக்குத் தலையில் அடிபட்ட நகைச்சுவை வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, #PrayForNesamani ஹேஷ் டேக் உலக அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களிலும் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலும் பேசுபொருளாய் ஆனது.

கமலஹாசனின் விக்ரம் பட போஸ்டரில் வடிவேலுவை போட்டும், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் அவரைப் போட்டும் வலைதளங்கள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. பொன்னியின் செல்வன் போஸ்டர்கள் வெளியான சில மணி நேரங்களில் அனைத்து கதாபாத்திரங்களிலும் வடிவேலுவின் முகத்தைப் பொருத்தி அதிரச் செய்தார்கள் மீம் கிரியேட்டர்கள்.
ஒரு கலைஞன், தன் தொழிலுக்கு நேர்மையாக தியாக மனப்பான்மையுடன் உழைக்கும்பொழுது வெற்றி பெறுகிறான். மக்களை மகிழ்விக்கும் கலையை அவன் நேசிக்கும் விதமே, அவனை மக்கள் மத்தியில் நிறுத்துகிறது.









இவ்வளவு ஆண்டுகால தடைக்குப் பின்னும் வடிவேலுவின் நடிப்பும் பாணியும் மக்களிடம் புழங்குவதன் மையச்சரடு, வடிவேலு சாமான்யர்களின் கலைஞன் என்பதும் அவரது நகைச்சுவைகள் வாழ்வியல் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதும்தான்.
எவ்வளவு கடினமான மனநிலையிலிருந்தும் வெளிவர, ஒற்றை வீரபாகுவின் பார்வையோ, ஏட்டு ஏகாம்பரத்தின் ‘மல…’ என்ற சிரிப்போ, ‘வேணாம், வலிக்குது, அழுதுருவேன்’ என்ற கைப்புள்ளயின் குரலோ, ‘ஒய் பிளட், சேம் பிளட்’ என்ற வார்த்தையோ போதுமானது. பல குழப்பங்களுக்கு மத்தியில் ‘என்னடா நடக்குது இங்க…?’ என்ற விசித்திர குரலும், ‘தம்பி, டீ இன்னும் வரல’, ‘இது வாலிப வயசு’ போன்ற கெத்தும்தான் வாழ்வியல் முறைகளுக்குள் ஊடுருவிவிட்ட வெற்றியின் தடயம்.






யாராலும் தடைசெய்ய முடியாத வைகைப் புயல் மீண்டும் வருகிறது, பலரின் சுமைகளைத் தீர்க்க. தயாராகவே இருப்போம். இனி, “Sing in the rain….”

கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை
படங்கள்: இணையத்திலிருந்து
மோகன் ராஜா
September 7, 2021அருமையான திறனாய்வு.
Nandini
September 7, 2021Semmmma PK Sir
Suresh
September 8, 2021அட்டகாசமான அலசல்….
வாழ்த்துகள் தம்பி
Murugesan
September 8, 2021வடிவேலு அவர்களின் ரீ என்ட்ரியை வேறு யாரும் இந்த அளவிற்கு கொண்டாடி கட்டுரை எழுதவில்லை. அற்புதமான கட்டுரை வாழ்த்துகள்.
I S J Pandi
September 8, 2021Vadivelu is now reentry, but your presentation Palani kumar is sweet entry, Thanks for the wonderful article
Rathiraj
September 12, 2021தெளிவான கண்ணோட்டம்..
💐💐💐