ஊருக்கு ஊரு பிழை! குளறுபடியான அரசின் திருத்தம்!
தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ள ஊர்ப்பெயர் களின் திருத்தத்தில் காணப்படும் ஒலிக்குறிப்புக் குழப்பங்கள்!
தமிழக அரசு சமீபத்தில் செய்துமுடித்துள்ள சீக்ரெட் ஆபரேசன் தான் அனைவராலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கொரோனாவை விரட்டியடிக்க எதாவது திட்டம் தீட்டிட்டாங்களா என்றெல்லாம் நப்பாசைகொள்ள வேண்டாம். தமிழகத்திலுள்ள ஊர்ப்பெயர்கள் பலவற்றின் ஆங்கில மொழியாக்கத்தில் கொண்டுவந்துள்ள திருத்தத்தைத்தான் குறிப்பிடுகிறேன். எழும்பூர் என்பதை எக்மோர் என்று குறிப்பிடுவதையும், திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் என்று குறிப்பிடுவதையும், தூத்துக் குடியை டூட்டிகொரின் என்று குறிப்பிடுவதையும் மாற்ற வேண்டுமெனப் பலகாலமாக பேசப்பட்டு வந்ததுதான். அதுபோல் அமைந்த பெயர்களை மட்டும் மாற்றாமல், ஏற்கனவே ஓரளவு சரியாகவே குறிப்பிடப்பட்டிருந்த பெயர் களிலும்கூட திருத்தங்களைச் செய்து விட்டார்கள்.

இந்த வேலையை மாவட்ட வாரியாகக் குழு அமைத்து செய்துமுடித்ததாகத் தெரிகிறது. இதில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ள மாற்றங்களை ஏற்றும், மாற்றியமைத்தும் இறுதிசெய்து கெஜெட்டில் வெளியிட்டுள்ளனர். இதற்குப்பின்னர்தான் பொதுமக்களுக்கு இந்த செய்தியே தெரியவந்துள்ளது. ஆனால் இந்த மாற்றங்களில் பல்வேறு குழப்பங்கள் காணப் படுகின்றன. இந்த குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணமே, ஒலிக்குறிப்பு அடிப்படையிலான மாற்றத்தில் எடுக்கப்பட்ட தவறான சில முடிவுகளாகும். குறிப்பாக, ‘உ’ என்ற எழுத்துக்கு ‘U’ பயன்படுத்துகிறார்கள். அதேவேளை, ‘ஊ’ என்ற எழுத்துக்கு ‘’OO’ பயன்படுத்துகிறார்கள். இது சிலவகை ஒருங்குறி விசைப்பலகைகளின் அடிப்படையில் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது தவறு. உ என்பதற்கு ‘U’ என்றால், ஊ என்பதற்கு ‘UU’ தான் வரவேண்டும். இதில் அவர்களுக்கே தெளி வில்லாததால், தொடர்ச்சியாகப் பல பிழைகளைக் காணமுடிகிறது.
ஊர்ப்பெயர்களை ஆங்கிலப்படுத்துமுன், “ka – க, kaa – கா, ki – கி, kii – கீ, ke – கெ, kee – கே, kai – கை, ku – கு, kuu – கூ, ko – கொ, koo – கோ, kau – கௌ” என்ற அடிப்படையைப் பின்பற்றியிருக்க வேண்டும். இதில் அவர்கள் தவறியிருப்பது தெரிகிறது. இதன்காரணமாக ஏற்பட்டுள்ள பிழைகள் என்னவென்று பார்க்கலாம்.
கோயம்புத்தூர் பெயரை ஆங்கிலப் படுத்துகையில், இறுதியில் ‘thoor’ என முடிக் கிறார்கள். அதேவேளை, குன்னத்தூர் என்ற ஊரின் இறுதியில் ‘thur’ என்று முடிக்கிறார்கள். இங்கே தூ என்ற எழுத்துக்கு ‘thoo’ மற்றும் ‘thu’ என இரண்டுவிதமாகப் பயன்படுத்தியி ருக்கிறார்கள். இது ஒரு குழப்பம். இந்த குழப்பம், பல ஊர்களில் தொடர்கிறது. இதேபோல, மேலக்கூடலூர் என்பதற்கு ‘lur’ என்று முடிக்கிறார்கள். அதுவே அரியலூர் என்பதற்கு ‘’loor’ என்று முடிக்கிறார்கள். குச்சனூர் என்பதற்கு ‘nur’ என்று முடிக்கிறார்கள். அதுவே ஆதனூர் என்பதற்கு ‘noor’ என்று முடிக்கிறார்கள். இவற்றிலும் அதே தவறைச் செய்துள்ளார்கள்.
அடுத்து, குறில் நெடில் தவறுகள் எக்கச் சக்கமாக உள்ளன. கூட்டுறவுபட்டி என்ற ஊரின் தொடக்கத்துக்கு Koo பயன்படுத்து கிறார்கள். அப்படியானால் கூ என்பதற்கு Koo என்றாகிறது. புதுக்கோட்டை என்பதற்கு Puthukkottai என்று எழுதுகிறார்கள். இதை உச்சரித்தால் புதுக்கொட்டை என்றுதான் வரும். கொட்டாபட்டி என்பதற்கும் Kottapatti என்றே எழுதுகிறார்கள். கோயமுத்தூர் என்பதற்கும் Koyampuththoor என்றே எழுதுகிறார்கள். இதனை கொயம்புத்தூர் என்றுதான் அழைக்க வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்ட மொழிமாற்றத் துக்கான அடிப்படைப் புரிதல் இல்லாததால் வந்த விளைவு தான் இது. ‘OO’ என்பதை ‘ஊ’ என்ற அர்த்தத்தில் தமிழக அரசு பயன்படுத்து கிறது. எனவே ‘கொ’ என்பதற்கு ‘KO’ என்று பயன்படுத்தியவர்களால், ‘கோ’ என்பதற்கு ‘KOO’ என்று பயன்படுத்த முடியவில்லை. அதன் அர்த்தம், அவர்களின் மொழிமாற்ற அகராதிப்படி ‘கூ’ என்றே ஒலிக்கும். எனவே குறில், நெடில் குறித்தெல்லாம் சிந்திக்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.
அடுத்து ‘THTH’ பயன்பாட்டில் இருக்கும் குழப்பம். வத்திராயிருப்பு என்பதற்கு ‘Vaththiraayiruppu’ என்று எழுதுகிறார்கள். அதேவேளை, சேத்தியாத்தோப்பு என்பதை ‘Setthiyathoppu’ என்று எழுதுகிறார்கள். ‘TTH’ மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதேபோன்ற தவறுகளுடன் பல ஊர்கள் இருக்கின்றன. அடுத்து, சாத்தமங்கலம் என்பதையும் ‘’satthamangalam’ என்று எழுதுகிறார்கள். சாத்தாம்பட்டி என்பதை மட்டும் ‘’saatthampatti’ என்று எழுதுகிறார்கள். இங்கே ‘சா’ என்ற எழுத்துக்கே ‘Saa’ மற்றும் ‘Sa’ என இரண்டுவிதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
எருக்கஞ்சேரி என்பதை ‘erukkanjery’ என்று மாற்றியுள்ளார்கள். மல்லிகைச்சேரி என்பதை ‘‘mallikaichcheri’ என்று எழுதுகிறார்கள். முன்னதில் ‘‘Y’ எனவும், பின்னதில் ‘‘I’ எனவும் முடிகிறது. அதேபோல ‘சே’ என்பதை ‘‘che’ எனக் குறில் எழுத்தாகப் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொன்றாகக் கவனித்தால் மொத்தமுள்ள 1018 ஊர்ப்பெயர்த் திருத்தங்களில் ஆயிரக்கணக்கான பிழைகளைக் கூறலாம். இதில் நான் காணுகின்ற ஒரே சிறப்பு, என்ற வடமொழி எழுத்தை திரு என்று தமிழில் எழுதுவதுபோல ஆங்கிலத்திலும் ‘‘thiru’ என்று மாற்றிவிட்டார்கள். இதற்காக மட்டும் பாராட்ட லாம். மற்றபடி இவர்கள் பிடுங்கிய ஆணிகள் அனைத்துமே தப்பும் தவறுமான ஆணிகளாகவே இருக்கின்றன.
Comments (0)