மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைக்கின்றன! முத்தரசன் ஆவேசம்!

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைக்கின்றன! முத்தரசன் ஆவேசம்!

தமிழக அரசின் கொரோனா நோய் தடுப்பு செயல்பாடுகள் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை அறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனைச் சந்தித்தோம்… “ கொரோனா கட்டுப்படுத்துவதில் தமிழக அரசின் முக்கியமாக தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள்  எப்படி இருக்கிறது?” “கட்சியில் பதவிப் போட்டி, ஆட்சியில் அதிகாரப் போட்டியும் தானென்ற ஆளுமையை முன்னிலைப் படுத்தவேண்டும் என்பதிலும் ஒட்டுமொத்த ஊடகங்களும் தங்களை முன்னிறுத்தியே செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் மூத்த அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள். தமிழக அரசியலே இவர்களது ஆளுமைக்குக் கீழ் செயல்படுவது போன்ற ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர். முதலமைச்சர் சொல்வதை அமைச்சர்கள் கேட்பதில்லை. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையிலும் பல மந்திரிகள் ஊடகங்கள் பக்கம் தலை வைத்துக்கூடப் படுத்தது கிடையாது. அவரது மறைவிற்குப் பிறகே தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற பழமொழிக்கு ஏற்ப, கட்சியில் இருப்பதாலேயே நாங்களும் முதலமைச்சருக்கு இணையானவர்கள் என்கிற எண்ணத்தில் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாய்க்கு வந்ததைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்கிற தொனியில் செயல்பட்டு வருகின்றனர். உதாரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அறிக்கை கொடுக்கிறார் ஒரு அமைச்சர். பிறகு அரை மணி நேரத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தத் தடையில்லை என்று அவரே அறிக்கை விடுகிறார். இவர்கள் அரசையும் ஊடகங்களையும் விளம்பர தூதுவர்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது தான் உண்மை. மற்றபடி இவர்களின் செயல்பாடுகள் பற்றிக் கூறுவதற்கு  ஒன்றுமில்லை.” “கொரோனா உயிரிழப்பு விகிதங்களை அரசு மறைகின்றதா?” “2014ம் ஆண்டு சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது போது ஏற்பட்ட உயிரிழப்பை இருட்டடிப்புச் செய்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா. அதற்கடுத்ததாக டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மறைக்க மர்ம காய்ச்சல் மரணங்கள் என கணக்குக் காட்டினார்கள். தங்களது இயலாமை வெளி உலகிற்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இந்த மரணங்கள் மறைக்கப்பட்டன. அதுபோலத்தான் தற்போதைய கொரோனா மரணங்களும் மறைக்கப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து இவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு புள்ளி விபரமும் ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. உதாரணமாக, சென்னை ஐசிஎஃப் ரயில்வே மருத்துவமனையில் கொரானா தாக்குதல் காரணமாக 27 பேர் மரணமடைந்துள்ளர். ஆனால் மாநகராட்சிப் பதிவேட்டில் இது காட்டப்படவில்லை. ஒருகட்டத்தில் இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுபற்றி விசாரணை செய்யக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ் கூறியிருந்தார். தமிழக அரசு அறிவித்துள்ள மரணப் பட்டியலில் குளறுபடிகள் உள்ளது என்பதை இதன் மூலமே உறுதிப்படுத்த முடிகிறது. கல்வி, சுகாதாரத்தில் முன்னேறிய ஒரு மாநிலத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் என்றால், அது அந்த ஆட்சியாளர்களின் ஆளுமைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் என்று அனைவரும் அறிந்ததே. தங்களது தோல்வியை மறைப்பதற்காகவே தற்போதைய கொரோனா உயிரிழப்புகளை இந்த அரசு மூடி மறைக்கிறது.” “முதல்வரும், அமைச்சர் விஜயபாஸ்கரும் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவது பற்றி…? “இந்த அரசு வெளியிடும் அனைத்து அறிக்கைகளும் முரண்பட்டே வருகின்றன. உதாரணமாக, “பரிசோதனைக்கு உட்படுத்தப் படும் நபர் மட்டுமின்றி அவர் சார்ந்த குடும்பத்தாரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறுகிறார். சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அதற்கு வேறு மாதிரியாக ஒரு விளக்கம் கொடுக்கிறார். சுகாதாரத்துறை அமைச்சர் முற்றிலுமாக முரண்பாடான கருத்துக்களைத் தெரிவிக்கிறார். இவர்கள் சொல்லும் தோராயக் கணக்குகளை வைத்து போகிற போக்கில் ஒரு புள்ளி விவரத்தைக் கொடுத்துவிட்டுச் செல்கிறார் முதலமைச்சர். சமூகப் பரவல் வரக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமும். ஆனால், அதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை இவர்கள் விலக்க வேண்டும் அல்லவா? சமூகப் பரவல் இல்லை என்று கூறும் வேளையில் சென்னையில் ஏன் இவ்வளவு உயிர்ப்பலிகள் அதிகரித்து வருகிறது? அம்மா வழியில் ஆட்சி என்று கூறும் எடப்பாடியார் ஆட்சியில் தமிழ்நாட்டு தனியார் மருத்துவமனை களில் கொரோனா பரிசோதனை செய்ய 4,500 ரூபாய் என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மராட்டிய அரசு 2200 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுப்பும், வேட்கையும் கொண்ட ஆட்சியாளர்கள் இருந்தால் அனைத்தும் சாத்தியம் தான். ஆனால் பாலைவனத்தில் நீர் தேக்கி, அந்த நீரைக் கொண்டு விவசாயம் செய்யப்போகிறோம் என்கிறது முதலமைச்சரின் இந்த அறிக்கை.  யாரோ ஒருவர் எழுதிக் கொடுப்பதை அப்படியே ஊடகங்கள் முன் படித்துக் காட்டுகிறார் இவர். மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தினம் தினம் ஊடகங்கள் முன் முன்னுக்குப் பின் முரணான பல செய்திகளைக் கூறி வருகிறார். தற்போது மாநில அமைச்சரவையில் யார் பெரியவன் என்ற அதிகாரி போட்டி வலுத்து வருகிறது. அதன் வெளிப்பாடுகள்தான் தற்போது வந்து கொண்டிருக்கும் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகள். என்னை பொறுத்தவரை கொரோனா விவகாரத்தில் தமிழகத்தில் சுகாதாரத்துறை முற்றிலுமாக தோற்றுப் போய்விட்டது. இதற்குப் பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.” “மாநில அரசுக்கு வரவேண்டிய தேசியப் பேரிடர் நிதி மற்றும் ஜிஎஸ்டி வருவாய்ப் பங்கீடுகள் இன்னும் கிடைத்திடாத இந்தச் சூழலில் மாநில அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?” “கடுமையான நிதி நெருக்கடியில் தமிழக அரசு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தச் சூழலில் மத்திய அரசு ஒதுக்க வேண்டிய மாநில பேரிடர் நிதி, தேசியப் பேரிடர் நிதி மற்றும் தமிழகத்திற்குக் கொடுக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி வரி வசூல் பங்கை உடனடியாகக் கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், மத்திய அரசு தமிழகத்திற்குக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கு 5,000 கோடி ரூபாயை கேட்டிருக்கிறோம் என்று கூறியிருந்தார். இவர்கள் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதற்குப் பதிலாக அவர்களிடம்  தங்களது உரிமையைக் கேட்டுக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல, இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் தமிழகத்திற்கு நாம் கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. கொரோனா தொற்று அதிகப்படியாக இருக்கும் வேளையில் எங்களுக்கு 18 ஆயிரம் கோடி தேவை என்று முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ள போதிலும், மத்திய அரசு மக்களையும் மாநில அரசையும் புறக்கணிக்கிறது என்பது தான் உண்மை.” “ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து அமைச்சர் தங்கமணி கூறியுள்ளது பற்றி?” “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று ஜெயலலிதா தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார். ஆனால் தற்போதைய சூழலில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இருக்கிறதோ இல்லையோ, மதுபானக் கடைகளில் என்னென்ன வகை மதுபானங்கள் இருக்க வேண்டும் என்பதை உடனடியாக சுற்றறிக்கை மூலம் கண்காணிக் கின்றனர். மக்களுக்குத் தேவையான காய்கறிகள், ரேஷன் பொருட்களை ஆன்லைன் மூலமாகக் கொடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் பாராட்டி இருக்கலாம். ஆனால் சாராயக் கடைகள் மூலமாக வரும் வருமானம் தான் பிரதான வருமானம் என்ற நினைப்பில் அது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர் களை என்னவென்று சொல்வது?!” “ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர்களில் மாற்றம் செய்வது இப்போதைய சூழலில் அவசியமான ஒன்றா?” “ஆங்கிலத்தில் உள்ள ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்றம் செய்ய வேண்டு மென்று பல வருடங்களாகக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது வரவேற்கக்கூடிய ஒன்று என்றாலும், சாவின் விளிம்பில் உள்ள மனிதர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப்பற்றி சிந்தித்துச் செயல்படுவதை விட்டுவிட்டு, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது தேவையற்றது என்றே நினைக்கிறேன். கொரோனா விசயத்தில் அரசின் தோல்வியைப்பற்றி மக்கள் பேசாத வண்ணம் பிரச்சினைகளைத் திசை திருப்பும் நடவடிக்கை இது.” “கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில், பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்படுவதன் காரணம் என்ன?” “கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு உலகம் முழுவதும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 16 டாலர்கள் வரை வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக விலை வீழ்ச்சியின் பலன் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இதுதான் உண்மையான ஒரு அரசு மக்களுக்கு செய்யும் சேவையாகும். ஆனால் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைக்கின்றன. மாநில அரசுக்கு மதுகடை களால் வருமானம் வேண்டும். மத்திய அரசைப் பொருத்தவரை பெட்ரோல் டீசல் மூலமாக மத்திய அரசின் கஜானா நிறைய வேண்டும். இவர்கள் ஆட்சியாளர்கள் போல செயல்பட வில்லை. கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் போல செயல்பட்டு வருகிறார்கள்.” “கடந்த ஆறு ஆண்டுகால மோடி ஆட்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு மதிப்பீடு செய்கிறது?” “யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். அதுபோலத்தான் பாஜகவும் ஆட்சிக்கு வந்துள்ளது. கடந்த ஓராண்டில் இது ஆர்எஸ்எஸ் அரசு என்பதை தெள்ளத் தெளிவாகக் கூறி வருகிறது. அதுபோல தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளான ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்ற அமைப்புகளை பாஜகவின் சொந்த நலனுக்காகப் பாடுபடும் அமைப்புகளாக மாற்றி வருகின்றனர்.” “விவசாய நாடான இந்தியாவில் விவசாய சங்கங்கள் அதிகம் வலுப்பெறவில்லையே? விவசாயி களை ஒருங்கிணைக்க என்ன திட்டங்கள் உள்ளன?” “இந்தியா விவசாய நாடு. விவசாயத்தைச் சார்ந்த மக்கள் அதிகமாக உள்ளனர். அதுபோல அதிகமாக விவசாயிகள் மரணிப்பதும் இந்த நாட்டில்தான். விவசாயிகள் ஒருங்கிணைப்பிற்கு, விடுதலைப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் துரை மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகங்கை குணசேகரன், இவர்கள் தலைமையில் பல்வேறு கட்டப் போராட்டங்களை செய்து வந்துள்ளோம். மேலும் தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து வருகிறோம். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 2020 தனியார் மின்சார விநியோகம் தொடர்பான விசயத்தில் ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுக்க, ஒரு பெரிய கூட்டமைப்பை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயன்று வருகிறது.” “மக்கள் நலக்கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதா?” “கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மக்கள் நலக் கூட்டணி செயல்பாடாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலும் இந்தக் கூட்டணியை ஒருங்கிணைத்த முக்கிய

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை நோயை பற்றிய முந்தைய கட்டுரையின் தொடர்ச்சி…. மஞ்சள் காமாலை நோயானது சித்த மருத்து வத்தில் சிறப்பாக குணப்படுத்த படுகிறது. ஆனால் அதில் பல வகைகள் உள்ளன. அதில் குறிபிட்ட ஒரு வகையை மட்டும் தான் சித்த மருத்துவத்தில் குணப்படுத்த இயலும். இப்போது எத்தனை வகையான மஞ்சள் காமாலை இருக்கிறது என காண்போம்.  1.ஹீமோலைட்டிக் மஞ்சள் காமாலை இவ்வகை மஞ்சள் காமாலையானது , முன்பு கூறியது போல் இரத்த சிவப்பணுக்களின் வாழ்க்கை காலமான 120 நாட்களுக்கு முன்பே உடைய ஆரம்பிப்பதால் வருகிறது. அதிக அளவு இரத்த சிவப்பணுக்கள் உடைவதால் அதிகளவு இணையமற்ற பிலிரூபின்கள் உருவாகின்றன. இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும். இதன் அறிகுறிகள்: வயிற்று வலி அடர்த்தியான ப்ரெளன் கலர் மூலம் அடர்த்தியான நிறம் கொண்ட சிறுநீர் பொதுவான உடல் சோர்வு  2.Hepatocellular jaundice   அதாவது, கல்லீரலினால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலை ஆனது கல்லீரலில் உள்ள நோய் மற்றும் குறைபாடு களினால் ஏற்படும். ஹெபாடிட்டிஸ் எனப்படும் கல்லீரல் தொற்று, சிர்ஹோசிஸ் எனப்படும் கல்லீரல் நோய் போன்ற வற்றால் கல்லீரலின் செயல்பாடு குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இணையமற்ற பிலீருபின் இணையான பிலீருபின் ஆவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இரத்தத்தில் இதன் அளவு அதிகரித்து மஞ்சள் காமாலையை கொடுக்கிறது. இதன் அறிகுறிகள்: 1. அடர் நிறம் கொண்ட சிறுநீர். 2. #வெளுமை நிற மலம் 3. உடல் சோர்வு 4.வயிற்று வலி  3.Obstructive மஞ்சள் காமாலை இந்த வகை மஞ்சள் காமாலை நோயானது, பித்தப்பையில் ஏற்படும், பித்த கல்லினால் உண்டாகும் அமைப்பினால் ஏற்படும் மஞ்சள் காமாலை. இந்த மஞ்சள் காமாலைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.  இதன் அறிகுறிகள் : 1. மஞ்சள் நிற உடல் 2. அடர்த்தியான நிறம் கொண்ட சிறுநீர் 3. வெளுமை நிற மலம் 4. உடல்அரிப்பு 5. காய்ச்சல், உடல் சோர்வு, வாந்தி, வயிற்று வலி தொடரும்…

பிழைத்துச் செத்தவன்

பிழைத்துச் செத்தவன்

அண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும் அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் அய்யனே என்னய்யனே……..’ என செல்போன் ஒலித்தது வெளிவாசலில்  உட்கார்ந்திருந்த எனக்கு சன்னமாய்க் கேட்டது. எழுந்து போய்ப் பார்த்தேன். ஊரிலிருந்து மாதவன் அழைத்திருந்தான். “சொல்லுடா மாதவா” சுவாரஸ்யமின்றிக் கேட்டேன். “திருநா செத்துட்டான்டா….  உடனே கிளம்பி வா” பதற்றத்துடன் ஒலித்தது மாதவன் குரல் “ஏன்டா…?? என்னாச்சு?” “நேர்ல வா பேசிக்கலாம்”  போனைத் துண்டித்துவிட்டான். உடனே பேண்டை மாட்டிக் கொண்டு பஸ்ஸ்டாண்ட் கிளம்பி விட்டேன். திருநா என்னும் திருநாவுக்கரசு. எங்கள் செட்டிலேயே கல்லூரி வரை சென்றவன். எதற்கும் அஞ்சாதவன். எல்லோர்க்கும் உதவும் குணம் கொண்டவன். பிறந்த ஊரில் பிழைக்க வழியிருந்தும் அதிக வருமானம் தேடி வேறு ஊருக்குச் செல்லாதவன். நேற்று வரை விவசாயம் மட்டுமே செய்து வந்தவன். `உனக்கெல்லம் சாவே வராதுடா` என்னும் சொல்லுக்குப் பொருத்தமானவன். அப்படிப் பல முறை சாவின் விளிம்பு வரை சென்று திரும்பியவன், செத்துட்டான் என்ற செய்தியை இன்னும் கூட என்னால் முழுமையாய் நம்ப முடியவில்லை.  ஆனாலும் என்ன? செத்தவன் இனித் திரும்பப் போவதில்லை. அருகிலிருந்து பார்க்கும் சாவுகளை விடத் தொலைவிலிருந்து கேட்கும் சாவுகள் அதிக துக்கத்தைக் கொடுக்கும். அருகிலிருப்ப வனுக்குப் பிணத்தைப் பார்த்தோ,  உறவினரைப் பார்த்தோ உடனே அழுதிட முடியும். துக்கம் கொஞ்சமேனும் தூரப்போகும்.  தூரத்திலிருப்ப வனுக்கு சாவு வீடு வரை துக்கம் நெஞ்சுக் கூட்டுக்குள்ளேயே இருக்கும். இழப்பை நினைத்து நினைத்து மனது விம்மியழத் துடிக்கும். புறச்சூழல் அழுகையைத் தடுக்கும். மௌனம் மனதைப் பிசையும். அழுவதா, அழுகையை அடக்குவதா என்ற எண்ணம் போராட்டத்துக்குள்ளாகும். முடிவில் துக்கமே மேலோங்கும். துக்கத்தைத் தொலைக்கத் தெரியாதவனாய் எனக்குரிய பஸ்ஸில் ஏறினேன். என் மனமெங்கும் திருநாவைப் பற்றிய நினைவுகளே வியாபித்திருந்தன. இன்னும் நான்கு மணி நேரப் பயணம் போக வேண்டும். ஜன்னலோர இருக்கையைத் தேடி அமர்ந்தேன்.  பேருந்துக்கு வெளியே வீசிய குளிர் காற்று என் மீது தெளித்த இனிமையை அனுபவிக்க முடியவில்லை. இதைப் போன்றதொரு குளிர்ந்த காற்று வீசிய மத்தியான வேளையில் மொசக் கண்ணி கட்ட காடுகாடாய் நானும் அவனும் அலைந்தோம், மொசக் கண்ணி கட்டுவதில்  திருநா திறமை சாலி. இரண்டு காடுகளுக்கிடையில் இருக்கும் கிலுவமுள் வேலியின் அடிப்பகுதியில், முயல் தான் கடப்பதற்காக வழி ஏற்படுத்தி வைத் திருக்கும். அதில் கெட்டியான கிலுவங்கட்டையில் இரும்புக் கம்பியின் ஒரு முனையைக் கட்டி. மறு முனையில் சுருக்கு வைத்துக் கட்டிவிட வேண்டும். அதுதான் `மொசக் கண்ணி’. கம்பி கட்டிய மொசக் கடவு வழியே கடக்கும் முயல், கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.  கம்பியில் வைக்கும் சுருக்கு, சுருக்கில்  சிக்கிய முயல் தப்பிவிடாமல் இருக்க முள்ளில் கம்பியைக் கட்டும் பாங்கு, இவற்றைப் பிசிறில்லாமல் செய்வதில் திருநா கில்லாடி. அப்படி ஒரு கடவில் கம்பியைக் கட்டும் போதுதான், வேலிக்குள் இருந்த பாம்பொன்று அவனைக் காலில் கடித்து விட்டது. கடித்த பாம்பை அடித்தபின்தான் தெரிந்தது அது விரியன் பாம்பென்று. ‘அய்யோ… விதி முடிந்தவர்களுக்குத்தான் விரியன் பாம்பு கடிக்கும் என்பார்களே!’. கடித்தது விரியன் பாம்பென்று உறுதி செய்தபின், கைகள் நடுங்கின, கால்கள் தடுமாறின. வார்த்தை குழறியது இவையெல்லாம் எனக்குத்தான் நடந்தது. ஆனால், கடிவாங்கிய திருநா எந்தச் சலனமுமின்றி  இருந்தான். கண்ணி கட்டக் கொண்டு வந்திருந்த கம்பியில் கடிவாயிலிருந்து அரையடி தள்ளி காலில் இறுகக் கட்டினான். என்னையே பாம்பு கடித்த மாதிரி இருந்த என்னைத் தேற்றினான். எப்படியும் ஊரிலிருந்து காடு வழியாகவே ஏழெட்டு மைல் வந்திருப்போம். திரும்பி ஊருக்குச் செல்ல நடந்தேதான் செல்ல வேண்டும். விதி வீதி வழியே வராமல் காடு வழியே வந்திருக்கிறது. காடு வரை கூட வந்தவன், கடைசி வரை கூட இருந்தவன் நான்தானே! நினைத்தவுடன் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. ரோட்டை அடைந்த பின், அவனை ரோட்டோர பாலத்தின்  கைப்பிடிச் சுவரில் உட்கார வைத்து விட்டு, ஏதாவது வண்டி வருகிறதா எனப் பார்த்தேன். எங்கள் நேரத்திற்கு சைக்கிள் தான் ஒன்று வந்தது. அவரிடம்  சைக்கிளையாவது கேட்கலாம் என நான் சைக்கிளைக் குறுக் காட்டினேன். குறுக்காட்டிய மறுகணம் திருநா அவரிடம்   சாதாரணமாய்ப் பேசியது எனக்கு அந்த வேதனையிலும் வியப்பைத் தந்தது. ஒரு வழியாக சைக்கிள்காரரின் உதவியோடு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று ஒரு வார காலப் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைக்க வைத்தோம். எமனின் எல்லைவரை சென்றவன் தனது மன உறுதியினால் மட்டுமே எல்லைக் கோட்டைத் தொட்டு எமனை அவுட்டாக்கித் திரும்பினான். மருத்துவமனையிலிருந்து வந்தவனின் தலையில் பாதி முடியைக் காண வில்லை. யாராவது கேட்டால் “உட்ரா உட்ரா.. உசுருக்கு வந்தது மசுரோட போச்சு”  என்பான். “சார் எந்த ஊருக்குப் போகணும்?” நடத்து நரின் குரல் என் நினைவை நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்தது. வழிந்த கண்ணீரை அவருக்குத் தெரியாமல் துடைத்துக் கொண்டு டிக்கெட் வாங்கினேன். என் கண்ணீர் பஸ்ஸிலிருந்த யாருக்கும் தெரியக்கூடாதென பார்வையை ஜன்னலுக்கு வெளியே, வானத்தை நோக்கித் திருப்பினேன். வானத்தில் போருக்குத் தயாராகும் யானைக் கூட்டங்கள் போல கருமேகங்கள் திரண்டிருந்தன. இப்படியொரு கருமேகங்கள் திரண்டு, இடியுடன் மழை பெய்த நாளில்தானே, இன்னொரு முறை சாவிலிருந்து தப்பினான் திருநா! அன்று அவர்கள் வீட்டு எருமையொன்று கன்று ஈனத் தயாரான நிலையில் இருந்தது. தொண்டுப்பட்டியில் இரவுக் காவலனாய்த் திருநா இருந்தான். அன்றைய இரவுக் காட்சி சினிமாவுக்குச் செல்வது எங்களின் திட்டம். அதுவும் திருநாவுக்குப் பிடித்த `குஷ்பு’ நடித்த படம். என்ன சொல்லியும் அவன் சினிமாவிற்கு வரவில்லை. எருமைக் காவலுக்கு, எருமைக்கு அருகிலேயே கட்டிலை விரித்துப் படுத்து விட்டான். அவனை விட்டுவிட்டு நாங்கள் சினிமாவிற்குச் சென்று விட்டோம். இடைவேளையின் போதுதான் தெரிந்தது, கடும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. சினிமா முடிந்து ஊர் திரும்பிய போது திருநாவின் தொண்டுப்பட்டியில் ஊரே கூடியிருந்தது. கும்பலை விலக்கிவிட்டு உள்ளே சென்றோம். அங்கே நாங்கள் கண்ட காட்சி எங்களை உறைய வைத்துவிட்டது. மின்னல்  தாக்கி எருமை இறந்திருந்தது. பத்தடி தூரத்தில் படுத் திருந்த திருநாவுக்கு ஒன்றுமே ஆகவில்லை. “பையன ஊட்டுக்குக் கூட்டிட்டுப் போயி சுத்திப் போடு செல்லாத்தா “ “இன்னியோட இவனப் புடிச்ச கெட்ட கெரகமெல்லாம் தீந்துது” “இந்தச் செம்மத்துல இவுனுக்குச் சாவே வராது.” “இவுங்க பாட்டன், பூட்டன், அப்பாரய்ய னெல்லாம் பண்ணுன புண்ணியந்தா இவனக் காப்பாத்திருக்கு. “ “அவுங்க மட்டுமா, ஊருல எதுனாலும் இவந்தான் முன்னால நின்னு இழுத்துப் போட்டுகிட்டுச் செய்யறான். அந்த செல்லாத்தா காப்பாத்தாம உட்ருமா” கூட்டம் பலவாறாப் பேசியது. இந்த முறை வந்த எமன் தன் வாகனத்தை மட்டும் ஓட்டிக் கொண்டு போய்விட்டான் போலும். பயல் சாவுக்குப் பத்தடி தூரத்தில் இருந்து தப்பித்திருந் திருக்கிறான். வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில், தூரமாக இருப்பது, அருகே இருப்பது போன்றும். அருகே இருப்பது தூரமாக இருப்பது போன்றும் தோன்றும். இது உறவுகள் மத்தியில் அடிக்கடி  ஏற்படும் சாதாரண தூரங்கள். திருநாவுக்கான இந்தப் பத்தடி தூரம் ஒரு ஜென்மம் எடுப்பதன் கால அளவாகிப் போனது. கரடுமுரடான திருநாவுக்குள்ளும் காதல் கண்சிமிட்டிய பொழுதுகள் இருந்தன. இரண்டு முறை செத்துப் பிழைத்தவன் வாழ்வில்  வசந்தம் வீசிய நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறின. எங்கள் ஊரிலிருந்து கல்லூரிக் குள் கால் வைத்த பெண்களின் பட்டியலைக் கை விரல் கொண்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கையில் ஒரு விரலாய் இருந்தவள் சுதா. தினமும் காலையில் பஸ்பிடித்து கல்லூரிக்குச் சென்றுவிட்டு மாலையில் பஸ்ஸிலேயே வீடு திரும்புவாள். அவள் இவனை வசீகரித்தது எந்தப் புள்ளியில் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. சுதாவைப் பார்க்க, பார்த்துச் சிரிக்க, பார்த்துச் சிரித்துப் பேச இரண்டு முறை பஸ்ஸ்டாண்ட் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது திருநாவுக்கு. ஒரே நேரத்தில் இரண்டு பஸ்களுக்கு மேல் நிற்காத ஊருக்கு பத்து பழக்கடைகளும், கார் மற்றும் டெம்போ நிறுத்து மிடமே பஸ்ஸ்டாண்ட் ஆனது. பஸ்ஸ்டாண்ட் போக வேண்டியதின் அவசியம் காரணமாகவே ஒரு டெம்போ வாங்கி அதற்கு டிரைவரும் ஆனான். ஓனர் கம் டிரைவர் என்ற அந்தஸ்துடன் வலம்வரத் துவங்கினான். அவனது டெம்போவுக்கு சுவாமி விவேகானந்தா எனப் பெயரிட்டான். பெயரின் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சற்றே பெரியதாக வேறு கலரில் இருக்கும். மற்றவர்களுக்கு  விவேகானந்தரின் மேல் கொண்ட பற்றுதல் காரணமாகத் தெரிந்த டெம்போவின் பெயர்,  எங்களுக்கு மட்டுமே சுதாவின் மேல் கொண்ட பற்றாகத் தெரிந்தது. இப்படியே  மூன்றாண்டுகள் ஓடியதே தெரியாமல் காதலும், டெம்போவும் ஓடின. காதல் சினிமாக்களில் மட்டுமல்ல `வாழ்க்கை யிலும் சந்தோச முகத்தையும் காட்டும், கோர முகத்தையும் காட்டும். மூன்றாம் ஆண்டு கல்லூரி முடியும் முன்பே சுதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள். இரண்டு மணி நேரப் பேச்சும், ஒரு கர்ச்சீப் நனையு மளவுக்கான கண்ணீரும் கலந்து திருநாவுடனான காதலுக்கு விடை கொடுத்து விட்டாள். இவன் அழுகவில்லையே ஒழிய ஒடிந்துவிட்டான். அதன்பின் யாருடனும் கலகலப்பாய்ப் பேசவில்லை. ஒரு சுபயோக சுபதினத்தில் நடந்த சுதாவின் திருமணத்தன்று கடலைச் செடிக்கு அடித்து விட்டு மிச்சம் வைத்திருந்த `டெமக்ரானை’  எடுத்துக் குடித்து விட்டான்.  ஊரே சுதா திருமணத்தில்.  இவனை மட்டும் காணவில்லை.  நானும் மாதவனும் தேடித் தேடிக் களைத்து தென்னை மரங்களுக்கிடையில் அவன் டெம்போவைக் கண்டோம். எந்த சுதாவின் பொருட்டு டெம்போ வாங்கினானோ, அதே சுதாவின் பொருட்டு பூச்சி மருந்தைக் குடித்துவிட்டுக் கிடந்தான். நாங்கள் போகும் போது, அவனிடம் எந்த அசைவும் இல்லை. பக்கத்தில் இருந்த ‘டெமக்ரான்’ பாட்டில்  எங்களுக்கு எல்லாம் சொல்லியது. உடனே டெம்போவில் அவனைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை செல்ல, அங்கே ஒரு அறுவை சிகிச்சையின் அவசரத் தினூடே வந்து இவனைப் பரிசோதித்த டாக்டர், “உயிர் போய்விட்டது, ஜி.எச்சுக்குப் போயிருங்க” என்றார். கண்ணில் நீர் பெருக ஊருக்குத் தகவல் சொல்லி, காவல்நிலையத்துக்கு தகவல் சொல்லி அரசு மருத்துவ மனையில் போஸ்ட்மார்ட்டம் பகுதியில் அவனைக் கிடத்தினோம். கிடத்தும்போது அவனது ஒருகை எனது சுண்டுவிரலைப் பிடித்தது.  உயிர் அணுவினும் சிறியதாய், மலரினும் மெல்லியதாய்  அவன் உடம்பில் ஒட்டியிருப்பது தெரிந்தது.  நான் டாக்டர் எனக் கத்திய கத்தல் பக்கத்துத் தெருவில் இருக்கும்

காற்றே…

காற்றே…

உருவம் இன்றி அலைந்து திரியும்என்னுயிர் காற்றே …நீ …..விரைந்திடும் வழியில்புரிந்திடும் திருவிளையாடல் கோடி பார்வை இன்றிஎன் திசை அறிந்துபாய்ந்து வருகிறாய்பாசம் கொண்ட தலைவன் போலபாசாங்கு செய்கிறாய்…. கால்கள் இன்றிகடக்கும் பாதையில்காவல் நிற்கிறாய்காதல் கொண்ட தலைவனாய்கவிதை சொல்கிறாய்…… கைகள் இன்றிகன்னம் வைத்து களவு செய்கிறாய்கள்ளம் கொண்ட காதலனின்கைவிரல் போலகளைந்த என் ஆடையினில்வேவு பார்க்கிறாய்……. ஆவல் கொண்டுஉன்னைப் பற்ற கைகள் நீட்டினேன்தேடல் கண்டு மகிழமறைந்து அரூபமாகிறாய் ஊடல் கொள்ள எண்ணிஎன்னை உரசிப் பார்க்கிறாய்நாடல் கொண்டநங்கை மனம் நயந்து போகாமல்பாடல் கொள்ளும் தலைவனாய்பக்கம் வந்திடு……..

வீடு இழத்தல்

பழைய வீட்டின் லட்சுமிமூலையில் தகரஸ்டாண்டில் வைத்து தினந்தோறும் துடைத்து சூடம் காட்டி வெள்ளிக் கிழமைகளில் பூச்சரம் சார்த்தி புதுவீடுகட்ட பூமி பூசை நாளில் என்னையே வணங்கி நின்றாய். வீட்டை இடிக்கையில் எங்கள் சாமியென்று வேலியோரம் பத்திரப்படுத்தினாய். வேலிமாற்றி மதில்சுவராகும்போது தெருமுக்கில் விநாயகர் மேடையோரம் இடம் பெயர்த்தாய். வீடுகட்டி முடிந்து புரோகிதன் பட்டியலிட்ட புதுச்சாமிப் படமொன்றுடன் புதுவீட்டில் நீ குடியேற கைதொழ நாதியற்றுப்போன சாமியானேன் நான் தெருமுனையில். உனக்கென்ன ராசா … புது வீடு புதுச் சாமி. வீடிழந்தவன் நான்தானே.? பழைய சாமிக்கு இருக்காதா மனவலி!!!???

இருந்தும் இல்லாதது…

இருந்தும் இல்லாதது…

வட்டிக்கடையில் உப்புப்படிந்தகட்டுக்கட்டான பணத்தை‘எண்ண’ முடியாமல் எண்ணிகஜானாவில் நிரப்பும்ஏழை கணக்கப்பிள்ளை! ஒவ்வொரு ஞாயிறும்அறுநூறு கிலோ கறியைஅறுத்து அளந்துபோட்டுவிட்டுஒரு துண்டு இறைச்சிக்காகஒரு திருமண அழைப்பின்தேதியினை அன்றாடம்மனக் காலண்டரில் கிழிக்கும்கசாப்புக்கடைச் சிப்பந்தி! வண்ணங்களின் குழைவுகளில்தோய்ந்த தூரிகையைப்போல்கனவு ஓவியங்களைத் தீட்டிகலர் கலர் பொம்மைகளோடுபுழுங்கிப் பொறாமையில் தவிக்கும்புடவைக் கடை பெண்! மூக்கைத் துளைக்கும் மசாலா –நாக்கைத் தூண்டும் பதார்த்தம்..வயிற்றைக் கொல்லும் எதார்த்தம்!எஞ்சிய எச்சில் தட்டுகளைஎப்போதும் ஏந்திச் செல்லும்புலனடக்கம் அறியாபுலம் பெயர்ந்த சிறுபிள்ளை! இவர்கள் எல்லோரை விடவும்இரவு வயிற்றுக்கு ஒன்றுமில்லாமல்முழங்கையைத் தலையணையாக்கிமுடங்கி தூங்கப்போகும் அந்தமூடைத் தூக்கும் தொழிலாளிஒருவகையில் ஆசிர்வதிக்கப்பட்டவன்.. இல்லையில்இருப்பதைவிடஇருப்பதில்இல்லாமல் போவதே பித்தம்!புத்தனும்தோற்றுப்போகும் யுத்தம்!

ஜார்ஜ் ஃப்ளாய்ட்டு நாள்

ஜார்ஜ் ஃப்ளாய்ட்டு நாள்

அமெரிக்க வரலாற்றின் முக்கியத் திருப்பம்! அமெரிக்கா சற்றே அடங்கி இருக்கிறது. பற்றி எரிந்த கூக்குரல்கள் சற்றே ஆசுவாசம் அடைந்திருக்கின்றன. மக்களுக்குள் ஓர் ஒழுங்கு வந்திருக்கிறது. போராட்டங்களில் தற்போது கூர் நோக்கு வந்திருக்கிறது. அமைதியாக, ஆனால் வலிமையாக மக்கள் போராடிக் கொண்டிருக் கிறார்கள்.. ஒரு மாபெரும் மாற்றத்துக்கான துவக்கமாக மக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே கடந்த மே 25 ம் தேதி துவங்கியது. யாருக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், ஒரு வேளை செய்தியைக் கவனிக்கத் தவறியவர்களுக்காக சிறு முன்னோட்டம். அந்த மே 25-ல் அமெரிக்காவின் மினியா போலிஸ் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற நாற்பத்தாறு வயது கறுப்பு மனிதர் ஒருவர் இருபது டாலர் நோட்டைக் கொடுத்து ஒரு பாக்கெட் சிகரெட் வாங்குகிறார். அவர் போனதும் அந்த நோட்டைப் பரிசோதிக்கும் கடை ஊழியர் அது கள்ளநோட்டு என்று சந்தேகிக்கிறார். கோபமாக வெளியே போகிறார். சூப்பர் மார்க்கெட்டுக்கு எதிரில் சாலையில் பார்க் செய்த காரில் உட்கார்ந்து ஜார்ஜ் ஃப்ளாய்ட் இரு நண்பர்களோடு பேசியபடி சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் செல்லும் கடை ஊழியர் அந்த 20 டாலர் நோட்டு கள்ள நோட்டு என்றும் வேறு நோட்டு தருமாறும் விவாதம் செய்கிறார். ஆனால் ஃப்ளாய்டோ அது நல்ல நோட்டுதான், உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று சொல்லி விடுகிறார். கோபத்தோடு உள்ளே செல்லும் ஊழியர் உடனடியாக அமெரிக்க எமர்ஜென்சி நம்பரான 911க்கு கால் செய்து போலீசின் உதவியை நாடுகிறார். உடனடியாக அங்கே போலீசார் வந்துவிடுகிறார்கள். அங்கே நடந்ததையும், ஃப்ளாய்டு நண்பர்களோடு இன்னும் கடை எதிரில் காரில் உட்கார்ந்திருப்பதாகவும் போலீசிடம் கடைக்காரர் தெரிவிக்கிறார். உடனே போலீசார் சென்று ஃப்ளாய்டை கைது செய்கிறார்கள். ஃப்ளாய்ட் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. ஆனால் போலீஸ் காரில் ஏற மறுக்கிறார்.. ஏனென்றால் அங்கே போலீஸ் காரில் கைது செய்தவர்களைப் பின் சீட்டில் ஏற்றுவார்கள். அந்த பின்சீட்டே ஒரு சிறை போல இருக்கும். உட்கார்ந்திருப்பவர் எதிர்த்துப் போராட முடியாது. தனக்கு க்ளாஸ்ட்ரோஃபோபியா இருப்பதாகக் கூறி, ஃப்ளாய்ட் அதில் ஏற மறுத்து பிளாட்பாரத்திலேயே உட்கார்ந்து விடுகிறார். உடன் போலீசாரும் இருக்கிறார்கள். அப்போதுதான் மற்றொரு போலீசான டெரக் சாவின் வருகிறார். அவர் ஃப்ளாய்டை கீழே தள்ளி கடுமையாகக் கையாண்டு, இழுத்து வண்டியில் ஏற்ற முயல்கிறார். ஆனால் ஃப்ளாய்டு மறுபடி வண்டியில் ஏற மறுக்கிறார். உடனே அவரைக் கீழே தள்ளி அமெரிக்கப் போலீசாரின் வழக்கப்படி அவரது கழுத்தின் மீது தன் முழங்காலை அழுத்தி உட்காருகிறார். இதை அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் தங்கள் மொபைல்களில் வீடியோ எடுக்கத் துவங்குகிறார்கள். முதலில் அந்த நான்கு போலீசாரும் அவர்கள் வீடியோ எடுப்பதைத் தடுக்கிறார்கள். அதனால் முதலில் வீடியோ எடுத்தவர் வீடியோவை ஆஃப் செய்துவிடுகிறார்.. ஆனால் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பதினேழு வயதான கறுப்பினப் பெண் ரகசியமாக வீடியோ எடுப்பதைத் தொடர்கிறார். கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள், சரியாக சொல்வதானால் எட்டு நிமிடம் நாற்பத்தாறு நொடிகள். ஃப்ளாய்டின் கழுத்தின் மீது தன் உடல் பலத்தை எல்லாம் திரட்டி டெரக் தன் முழங்காலால் அழுத்தியபடி உட்கார்ந்திருக்கிறார். ஃப்ளாய்டின் கழுத்து எலும்பு கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்குகிறது. அவரது மூச்சுக் குழல் உடைகிறது. அதற்கிடையிலும் அவர் முனகுகிறார். என்னால் சுவாசிக்க முடியவில்லை என்று பலவீனமாக சொல்ல முயல்கிறார். தண்ணீர் வேண்டும் என்கிறார். என்னைக் கொன்று விடாதீர்கள் என்று பலவீனமான குரலில் மன்றாடுகிறார். அம்மா… என்று அரற்றுகிறார். இத்தனையும் நடக்க நடக்க அவரது எலும்புகள் உடைந்து கொண்டே இருக்கின்றன. வேடிக்கை பார்ப்பவர்கள் போலீசாரிடம் கெஞ்சுகிறார்கள். அவன் கழுத்தில் இருந்து காலை எடுங்கள் என்று மன்றாடுகிறார்கள். அவனுக்கு நாடித்துடிப்பு இருககிறதா என்று சோதிப்போம் என்று கெஞ்சுகிறார்கள். எதற்கும் அந்த நான்கு போலீசாரும் செவிசாய்க்கவே இல்லை. கடைசியில் எட்டு நிமிடம் நாற்பத்தாறு நொடிக்குள் கழுத்தெலும்பு உடைந்து மூச்சுக் குழல் நொறுங்கி ஃப்ளாய்ட் இறந்தே போகிறார். இத்தனையும் எதற்காக? வெறும் இருபது டாலர் நோட்டுக்காக. அவர் தந்த நோட்டு கள்ள நோட்டுதான் என்று இப்போது வரை நிரூபிக்கப்படவே இல்லை. அவரது ஒன்பது நிமிட மரணப் போராட்டத்தை வீடியோ எடுத்த பெண் அதை வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங் களில் பதிவிடுகிறார். அதைப் பார்க்கும் நமக்கே குலை நடுங்குகிறது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் இடத்தில் ஒரு வேளை ஒரு வெள்ளையன் இருந்திருந்தால் அந்த ஸ்டோர் ஊழியர் போலீசை அழைத்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். அப்படியே அழைத்து போலீஸ் வந்திருந்தாலும் அந்த போலீசார் ஃப்ளாய்டை நடத்தியது போல  அந்த வெள்ளை யனை நடத்தி இருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். நம் நாட்டில் தலித்துகளின் உயிருக்கு மதிப்பில்லை. இந்த மதவாத ஆட்சியில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எப்போதும் தம் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே வாழ்கிறார்கள். அமெரிக்கா வளர்ந்த தேசம். மிகப் பரந்த மனப்பான்மை உடையவர்களின் தேசம். அங்கே கறுப்பு வெள்ளை என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது என்றே நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் அங்கே இந்தப் பாகுபாடு இருக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடும் வெள்ளையர்களை விட, கறுப்பர்களே அதிகமாகக் கொல்லப் படுகிறார்கள். சின்னச் சின்ன விஷயங்களுக்காக வெல்லாம் அமெரிக்க வெள்ளைப் போலீசார் கறுப்பர்களை சுட்டுக் கொல்வார்கள். ஒவ்வொரு முறையும் இந்தக் கொலைகள் பெரும் சர்ச்சை யாகும். ஆனாலும் பின்னால் அடங்கிவிடும். ஆனால் ஃப்ளாய்ட் படுகொலை ஒவ்வொரு நியாயமான அமெரிக்கனின் மனத்தையும் உலுக்கிப் போட்டிருக்கிறது. அந்த வீடியோவில் தெறித்த வன்முறையின் வன்மம் தாங்காமல் மனதுக்குள் அறவுணர்வு இருக்கிற ஒவ்வொரு அமெரிக்கனும் போராட வீதிக்கு வந்தான். அதில் வெள்ளையன் கறுப்பன் என்ற பேதம் இல்லை. பழுப்பு, மஞ்சள், சிவப்பு என்ற நிற வேறுபாடே இல்லை. கிட்டத்தட்ட முக்கால்வாசி அமெரிக்கர்கள் இந்தப் படுகொலையைக் கண்டித்தார்கள். அமெரிக்க சமூகம் என்பது கொண்டாட்டமான சமூகம்தான். அவர்களது சமூக ஒழுக்கம் என்பது நிறைய விலக்குகளும் விதிவிலக்குகளும் கொண்டது. ஆனாலும் அவர்களிடம் இருக்கும் சமூக அறம் சார்ந்த மனநிலை மிக மிக உயர்வானது. மினியாபோலிஸ் நகரவாசி கறுப்பர்கள் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு கலவரத்தில் இறங்கினார்கள். கார்கள் எரிக்கப்பட்டன. மினியாபோலிஸ் நகர போலீஸ் ஸ்டேஷன் கொளுத்தப்பட்டது.  தற்போது இந்த போலீஸ் ஸ்டேஷன் தீ வைக்கப்பட்டது தொடர்பாக 23 வயது கறுப்பின இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டிருக்கிறான். என்றாலும் அவர்களது போராட்டம் முதலில் ஆக்ரோஷமாகத்தான் இருந்தது. இது பல நகரங்களுக்கும் பரவியது. இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் மக்கள் ஒன்று கூடி போராட்டங்களிலும் கலவரங்களிலும் ஈடுபட்டார்கள் என்பது ஆச்சரியமான உண்மைதான். ஆனாலும் போராட்டம் பரவியது. நாடு முழுக்க போலீசுக்கு எதிரான போர்க்குரல்கள் எழுந்தன. ட்ரம்ப் அரசாங்கம் இதை, வழக்கமான ஓர் எதிர்ப்புக் குரல் என்றும் எளிதில் அடக்கி விடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டது. அதனாலேயே மினியாபொலிசுக்குத் துணை ராணுவப் படையை அனுப்பி அடக்கப் பார்த்தது. அதைப் பொய்யாக்கி இன்று வரை அணையாச் சுடராக இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்க வரலாறே கறுப்பினத்தவரின் அடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் உட்பட உலகமெங்கும் புதுப் புது தேசங்களைக் கண்டு பிடித்தவர்கள் எல்லாரும் அடிமை வணிகத்தில் ஈடுபட்டவர்கள்தான். அடிமை வணிகம் என்றால் என்ன என்பது உங்களுக்கு முதலில் புரிய வேண்டும். கொலம்பஸ் மாதிரியான ஆட்கள் எல்லாம் ஒரு கப்பலில் ஆட்களையும் துப்பாக்கிகளையும் வெடி மருந்துகளையும் ஏற்றிக் கொண்டு கிளம்புவார்கள். ஆப்பிரிக்க தேசத்தில் சென்று இறங்குவார்கள். அங்கே மிருக வேட்டையாடுவது மாதிரி ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவரைச் சுற்றி வளைத்து வேட்டையாடுவார்கள். அவர்கள் கை கால்களில் சங்கிலி கட்டிக் கப்பலில் ஏற்றி வருவார்கள். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் புதுப்புது குடியிருப்புகள் உருவாகிக் கொண்டிருந்த நேரம். அவரவர் தங்களால் முடிந்த அளவுக்கு நிலங்களை வளைத்துப் போட்டிருந்தார்கள். ஆனால் அந்த நிலங்களில் வேலை பார்க்க வேலையாட்கள் இல்லை. ஏனெனில் வெள்ளையர்கள் அனைவருமே நில உடைமையாளர்கள். அவர்கள் வளைத்துப் போட்ட நிலத்தைப் பண்படுத்தி விவசாய வேலைகள் செய்ய ஆட்கள் தேவை. இந்த நேரத்தில்தான் கொலம்பஸ் மாதிரியான மாலுமிகள் கப்பல் கப்பலாக கறுப்பினத்தவரைக் கொண்டு வந்து இறக்குகிறார்கள். வேலையாட்கள் தேவைப்படும் வெள்ளை முதலாளிகள் அங்கே வந்து கறுப்பினத்தவரை ஏலத்தில் எடுப்பார்கள். அப்படி எடுக்கப்பட்ட கறுப்பினத்தவரைத் தத்தம் ஆக்கிரமிப்பு நிலங்களுக்குக் கொண்டு சென்று வேலை பார்க்க வைத்து லாபம் பார்த்து கொழுப்பார்கள். ஆக இந்த அடிமை வியாபாரம்தான் கொலம்பஸ் போன்ற ஆட்களுக்கு மூலதனம். இப்படி அடிமைகளாக வந்த கறுப்பினத்தவர்கள்தான் பிற்காலங்களில் பல போராட்டங்களுக்குப் பிறகு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களாக ஆனார்கள். ஆனாலும் இன்று வரை கறுப்பினத்தவர் மீதான துவேஷம் அமெரிக்காவின் குறிப்பிட்ட சதவீதம் வெள்ளையர்கள் மனதில் கனன்று கொண்டுதான் இருக்கிறது. இன்னும் அவர்கள் வெள்ளையர்கள்தான் உயர்வானவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். கறுப்பினத்தவர் அனைவரும் அடிமையாக வந்தவர்கள், அவர்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கும் கூட்டம் அமெரிக்காவில் மிக அதிகமாக உள்ளது. இதைத்தான் ஒயிட் சுப்ரீமசி – white supremacy – என்கிறார்கள். இந்த மன நிலை இன்றுவரை உள்ளதால்தான் வெள்ளை போலீசார் கறுப்பினத்தவரைக் கொடூரமாக நடத்துகிறார்கள். இந்த வெள்ளை போலீசாரின் கடுமை காரணமாக இன்றுவரை அமெரிக்காவில் உயிரிழந்திருக்கும் கறுப்பர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.. அதன் அண்மைக்கால  களப்பலிதான் ஜார்ஜ் ஃப்ளாய்ட். இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பைப்பற்றிப் பார்ப்போம். வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்த வொயிட் சுப்ரீமசி என்னும் கருதுகோளை முதன்மையாகக் கொண்டவர்தான் ட்ரம்ப். அதனாலேயே ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையை வெளிப்படையாகக் கண்டிக்காமல் அதை எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்க நினைக்கிறார். இதுதான் பெரும்பான்மை அமெரிக்க மக்களின் கோபத்துக்குக் காரணம். மொத்த நாடும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வெள்ளை மாளிகை முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் போராடிக்  கொண்டிருக்கிறார்கள். அந்தத் தருணத்தில் ஒரு அதிபராக ட்ரம்ப்  என்ன செய்ய வேண்டும்.? அந்த மக்களுடன் பேச வேண்டும், அவர்களது கோரிக்கை என்ன என்பதைக் கேட்க வேண்டுமல்லவா? ஆனால் ட்ரம்ப் அதைச் செய்யவில்லை. வெள்ளை மாளிகை முன்பு மக்கள் போராடிக் கொண்டிருக்க அவர் சர்ச்சுக்குப் போக விரும்புகிறார். உடனே ராணுவமும் சீக்ரெட் சர்வீஸ் ஏஜன்சியும் வெள்ளை மாளிகை

இன்றைய சூழலில் கல்வி

இன்றைய சூழலில் கல்வி

இந்தியாவின் இதயத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான துயரத்தின் ஒற்றை அடிப்படையாகக் கல்வியின்மை இருக்கிறது – தாகூர் அவரது கூற்று 150 வருடங்கள் கடந்து இன்றும் இந்தியாவைப் பல வழிகளில் அழுத்திக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. சமூக முன்னேற்றம்  என்பது கல்வியை அடிப்படையாகக் கொண்டே நிகழும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஒரு மனிதன் இந்த சமூகத்தில் தனக்கான  எல்லாவித சுதந்திரத்தையும் புரிந்து கொள்ள உதவுவது கல்வி தான். மடை திறந்த அறிவை வழங்குவதும் கூட கல்வியின் அடுத்தடுத்த விரி சிந்தனைகளே எனலாம். இத்தகைய அறிவின் வாயிலை அடைய அறியாமை என்ற சிறைக்கதவைத் தகர்ப்பதாக நமது கைகளில் தரப்படும் பலமான ஆயுதம் ஒன்று உண்டெனில் அது பள்ளிக் கல்வி தான். இன்றைய நாளில் பள்ளிக் கல்வியை ஆய்வு செய்தோமானால் நாடு முழுவதிலுமிருந்து கல்வி குறித்தான, பல பிரச்சனைகளை நம்மால்  தொகுக்க முடியும். தமிழகப் பள்ளிக் கல்விக்கும் இவை அனைத்தும் பொருந்தும். இப்படியான பள்ளிக் கல்வியின் ஒரு முக்கிய தவிர்க்க முடியாத இடமாக, நம் அனைவராலும் பார்க்கப்படுவது பத்தாம் வகுப்பு . இதற்கான பொதுத் தேர்வு  ரத்து என்ற அறிவிப்பைத் தொடர்ந்து,  வரும் நாட்களின் கல்வி குறித்தும் நம்மை சிந்திக்க வைக்கிறது. பொதுத் தேர்வு ரத்து… அடுத்து செய்ய வேண்டியது என்ன? தமிழகம் வேறெப்போதும் இல்லாத பேரிடர் காலத்தின் ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. தொற்று பரவி வரும் இச்சமயத்தில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகளின் உயிரைக்  கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது அரசு. மாணவர் நலன் சார்ந்து எடுத்துள்ள  அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்கிறோம். அதே சமயத்தில்  கல்வி முறையின் அடுத்த நகர்வு குறித்தும்  பரிசீலிக்க வேண்டும் . தேர்வுக்கான மாற்று ஒன்றை நாம் கண்டறியத் தேவை எழுந்துள்ளது. நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் மதிப்பெண் சார்ந்த தேர்வு முறையை மாற்றும் காலகட்டமாக  இந்தக் கொரோனா துயரக் காலம் பாடம் கற்றுக் கொடுக்கிறது. மதிப்பீட்டின் இடைவெளி தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடுவதும் அதன் அடிப்படையில் பள்ளிகளைக் கணிப்பதும் , பள்ளிக் கல்வியைச் சீரமைக்கும் போது சந்திக்கின்ற களப் பிரச்சனைகளில் முக்கியமானவை .தற்போது  பள்ளிக்கல்வித் துறையில் நடைமுறையில் இருக்கும் மதிப்பீட்டு முறை குறித்து பார்ப்போம்.  கல்வி உரிமைச் சட்டத்தின் (2010) படி ஒரு குழந்தை ஒரு வகுப்பில் என்ன கற்றிருக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல், மேல் வகுப்பிற்குத் தன்னிச்சையாக (automatic) செல்லலாம். அதோடு இச்சட்டம் 8 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வைத் தடை செய்கிறது. ஆனால் பள்ளித் தேர்வுகளைத் (வாரியத் தேர்வு களுக்கு மாற்றாக) தடை செய்யவுமில்லை, அவற்றை ஊக்கப்படுத்தவுமில்லை. மாறாக  ஒரு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டைப் (Continuous and Comprehensive Evaluation) பின்பற்ற வழி காட்டுகிறது. ஆனால் இம்முறையின் விவரங்களில் தெளிவு இல்லை. மதிப்பீட்டிற்கான இப்புதிய அணுகுமுறை நடைமுறையில், மதிப்பீடே இல்லாமல் போகிறது என சில மாநிலங்களில் கருத்துகள் உள்ளன. இவற்றில் உள்ள குறை களைக் களைந்து இந்த முறையை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியத் தேவை மிக அவசரமாக நமக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தேர்வு முறை பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பதும் உண்மை. பல நேரங் களில் தேர்வுகள் என்பவை குழந்தைகள் மீதான அதிகப்படியான அழுத்தத்தைத் தருவதுடன், மனப்பாடமுறையை வலுவாக்கு கிறது. ஆனால் தேர்வுகளை முற்றிலும் அகற்றி விடுதல் என்பதும் ஏற்புடையதாக இருக்காது. ஆகவே தேர்வுக்கான மாற்றை உருவாக்கும் தேவையுடன் இந்த மதிப்பீட்டு முறையை சீரமைப்பதும் இன்றியமையாததாகப் பார்க்கலாம். மாணவர்களின் அடைவு குறித்த விவரங்கள் ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் உடனடியாகத் தெரிய வேண்டியது தேவை தான். ஆனால் அதே சமயம் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கூட அவை அவசிய மானவை. ஆனால் பள்ளிகளின் நடைமுறை மதிப்பீட்டு முறைகளோ தேர்வு முறைகளோ பெற்றோர்களுக்குப் புரிவதில்லை. பள்ளிக் கல்வி முறையின் பொறுப்புணர்வின்மையை இதற்கானக் காரணமாகக் குறிப்பிடலாம். ஏனெனில் தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் என்ன படித்திருக்கிறார்கள் , என்ன படிக்கப் போகிறார்கள் என்பது பற்றிய புரிதலோ பெற்றோர்களுக்கு இல்லாமல் இருப்பதும் இந்த மதிப்பீட்டு முறைகளின் விமர்சனங்களாக உள்ளன . மதிப்பீட்டு இடைவெளி தான் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே தேர்வுக்கு மாற்று முறைகளை வடிவமைக்கும் தேர்வு சீர்திருத்தம் தேவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் தேர்வுக்கு மாற்று முறை கடந்த 8 ஆண்டுகளாக நமது பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை  வலுவாக்கப்பட வேண்டும். திறன்கள் அடிப்படையில் மாணவரை மதிப்பீடு செய்யும் நடைமுறையான இந்த CCE முறை தான் மதிப்பெண்கள் சார்ந்த  தேர்வுகளுக் கான சிறந்த மாற்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த CCE எனப்படும் (Continuous and Comprehensive Evaluation) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ஏற்கனவே 9ஆம் வகுப்பு வரை நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.  இதே முறையை 10 ஆம் வகுப்பிற்கும் இனி வரும் காலங்களில்  நீட்டிக்கலாம். அப்படிச் செய்வது, பொதுத் தேர்வு என்ற இறுக்க மனநிலையை உடைத்து மாணவர்களின் சுதந்திரமான மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி வகுக்கும். அதே போல தேர்வுகளின் உள்ளடக்கம் மற்றும் இயல்பு குறித்த ஆழ்ந்த சிந்தனை ஆசிரியர்களுக்கும் துறை சார்ந்த வல்லுநர் களுக்கும் தேவைப்படுகிறது. உதாரணமாக குழந்தைகளின்  மனப்பாடம் செய்வதல்லாத பிற திறன்களையும் மதிப்பிடும் வகையில் தரமான தேர்வுகளை வடிவமைப்பது சாத்தியம்.அவ்வாறே மனப்பாடத்திலிருந்து திறன் அல்லது புரிந்து கொள்வதை நோக்கித் தேர்வுகளின் கவனத்தைத் திருப்புவதற்கு திறந்த புத்தகத் (Open Book) தேர்வுகள் உதவும். உடனடித் தேவை மேற்கூறிய மதிப்பீட்டு முறைகளும் தேர்வுக்கு மாற்று என்ற கருத்தும் சார்ந்த சீர்திருத்தங்கள் ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால்  பள்ளி திறக்கும் நாட்கள் நம் கண்களுக்குத் தெரிய வில்லை. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கூட ஆக வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு வீடுகள் அவ்வளவு மகிழ்ச்சியைத் தராது என்பது கண்கூடு. ஏனெனில் இது ஒரு அசாதாரண காலம். விடுமுறை தினங்களில் மட்டும் வீடுகளில் இருந்து பழகிய குழந்தைகள் மாதக் கணக்கில் வீட்டுக்குள் முடங்குவதை உளவியல் அழுத்தம் என்ற வார்த்தைகளால் கடந்து போக முடியாது. பள்ளிகள் சில, குறிப்பாக தனியார் பள்ளிகள்  இணையவழிக் கல்வியைக் (Online Teaching) கையிலெடுத்துள்ளன. ஆனால் அது குழந்தை களுக்கு எவ்விதத்திலும் வகுப்பறைக் கற்றலைப் போன்று  நிறைவு செய்யாது என்பது யதார்த்தம். அப்படியே இணைய வழியை முறைப்படுத்தினால் அரசுப் பள்ளிகளின் 20% குழந்தைகள் மட்டுமே பயன் பெற முடியும். சமவாய்ப்பற்ற பொருளாதார சூழல் இதற்கு ஒரு முக்கியக் காரணம் . நோய்த் தொற்று பரவலாக இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து அதிகப் பரவல் இல்லாத மாவட்டங்களில் அங்குள்ள கிராமங்களில் தகுந்த பாதுகாப்புகளுடன் மாணவர்களையும்  அவர்களது பெற்றோர்களையும் சந்தித்து ஆசிரியர்கள் உளவியல் சார்ந்த கலந்துரை யாடல்களை  மேற்கொள்ளலாம். பள்ளி திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ள ஊர்களில் உள்ள பள்ளிகளில் குறைவான எண்ணிக்கையில், பகுதி பகுதியாக முறை வைத்து ( Alternative days –  Shift) மாணவரை வரவழைத்து அதே போல ஆசிரியர்களையும் வரவழைத்து  உரையாடல்கள் மேற்கொள்ளலாம். தேவைப்படின் எளிய வகைப் பாடங்களை மாணவர் மனநிலைக்கேற்ப அறிமுகப்படுத்தலாம். எல்லாவற்றையும் விட மதிய சத்துணவை நம்பி அரசுப் பள்ளிக்கு வரும் லட்சக்கணக்கான மாணவர்கள் இருக்கின்றனர் .அவர்களுக்கான அத்தனை நிதி ஒதுக்கீடுகளும் இருக்கும். பள்ளி சமையலறையில்  உணவு சமைத்து மாணவருக்கு  வழங்கி வந்த நடைமுறையைத் தொடர வேண்டியது பள்ளிகளின் உடனடிக் கடமைகளுள் ஒன்று. இன்றைய சூழலில் பள்ளி கிடையாது, குழந்தைகளுக்கு வீடு மட்டும் போதாது, ஜான் ஹோல்ட் அழுத்தமாய் வலியுறுத்திய ‘குழந்தை களுக்கான மூன்றாம் இடம்’ (Third place) நினைவுக்கு வருகிறது. வீடும் பள்ளியும் போக குழந்தைகளுக்கான மூன்றாம் இடம்! என்கிறார். பேரா ச.மாடசாமி,  இதயங்களை மலர வைக்கும் மூன்றாம் இடம். சக்கையாய்ப் பிழிந்து இதுதான் என்று இலக்கணம் வகுத்து வடிவமைக்கப்படாத மூன்றாம் இடம். புதுப் புது வடிவங்களில், புதுப் புதுக்  கற்பனைகளுக்கு இடங்கொடுத்து மலரும் மூன்றாம் இடம்! இன்றைய தேவை என்கிறார் . இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொடர்ந்து உரையாடுவோம்.!

தனித்து விடப்படுகிறதா தமிழகம்?

தனித்து விடப்படுகிறதா தமிழகம்?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு முழுவதுமாக 4 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் வீழ்ச்சி பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் கொரோனா தடுப்புக்கான மாநில அரசின் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்க மத்திய அரசிடமிருந்து தமிழகம் கோரிய நிதி இதுவரை கிடைத்தபாடில்லை. ஆனால் பொருளாதார மந்தத்தால் இந்திய மாநிலங்கள் அனுபவித்து வரும் நிதி நெருக்கடிகளைக் கண்டு கொள்ளாத மாதிரி கடந்து செல்கிறது மத்திய அரசு. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும், வருவாய் பற்றாக்குறையாகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்நிலையில்,  2020-21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் வரிவருவாய் ரூ.1,33,530.30 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில். கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசுக்கு ரூ.11,127.30 கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில்  நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் வெறும் 10% மட்டுமே வருவாயாக கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. அதாவது 2020-21 நிதியாண்டின் முதல் மாதத்தில் வரவேண்டிய வருவாயில் 90% அளவிற்கு இழப்பைச் சந்தித் துள்ளது தமிழக அரசு. ஆட்குறைப்பு, வேலையின்மை காரணமாக வருமானம் இழந்து தவிக்கும் மக்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதற்காக தமிழக அரசின் சார்பில் மாநில தொகுப்பு நிதியாக ரூ.16,000 கோடி, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் 1000 கோடி ரூபாயைத் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று நிதி உதவி கோரியிருந்தார் முதலமைச் சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் கொரோனா நிவாரண நிதியாக வட மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு. கொரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் 2வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.510 கோடியும் மகாராஷ்ட்ராவுக்கு ரூ.1,611 கோடியும் அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 10 வரை 361 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.966 கோடியும் கொரோனா தாக்குதல் பட்டியலில் குறைந்த பாதிப்பு விகிதத்தில் உள்ள மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு முறையே ₹910 கோடி, ₹708 கோடி என அதிகளவில் ஒதுக்கப்பட்டுள்ள விவகாரம் தென்னிந்திய மாநிலங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தமிழ்நாட்டைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. எல்லா மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்த்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய அரசாங்கம் தற்போது பாரபட்சம் பார்ப்பது நியாயமானதா என்ற கேள்வி எழுகிறது. மேலும் உணவு தானிய கொள்முதலுக்காக ரூ.1321 கோடியும், மருத்துவப் பாதுகாப்புக் கருவிகள் வாங்குவதற்காக  தேசியப் பேரிடர் நிதியிலிருந்து ரூ.1000 கோடியும் வழங்கும்படி மத்திய அரசைக் கோரியிருந்த நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசின் சார்பில் இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்றே அறிய முடிகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி  நிலுவைத் தொகை ரூ.6,420 கோடியை கடந்த ஏப்ரல் மாதம் கொடுத்து விட்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிதி இது தான் என்று கூறுகிறது மத்திய அரசு. ஏற்கனவே கஜா புயலுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி  இதுவரை வந்து சேரவில்லை என்பது கொசுறுச் செய்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி நாடே கதறிக் கொண்டி ருந்த வேளையில், நான் வெங்காயமும் பூண்டும் அதிகம் சாப்பிடு வதில்லை என்று புளகாங்கிதம் அடைந்த‌ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதைய நிதிப் பற்றாக்குறை நிலைக்கு என்ன காரணம் சொல்லப்போகிறார் என்று ஒட்டு மொத்த தேசமும் விரக்தியுடன் காத்துக் கொண்டிருக் கிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம், பள்ளி-கல்லூரி மாணவா் களுக்கான உதவித் தொகைத் திட்டம் உள்பட கடந்த பிப்ரவரி மாதக் கணக்கின்படி தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய மானிய நிதி மொத்தமாக ரூ.12 ஆயிரத்து 263 கோடி இதுவரை வழங்கப் படவில்லை. மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பித் தரவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, பேரிடர் கால நிதி, மருத்துவ சேவைகளுக்கான நிதி என இதுவரை எதையும் வழங்காத காரணமாக தற்போதைய நிலைமையைச் சமாளிக்க தமிழக அரசு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.8,000 கோடிக்கு பத்திரம் வெளியிட்டு கடன் திரட்டியிருக்கிறது. பற்றாக்குறையை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியுள்ளது, மேலும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதன் உண்மையான காரணம் இதுதான். தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட நிதிகளை வைத்து கொரோனா பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக அரசின்  கடன் 4 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பினை ஈடுகட்ட தமிழகம் ஒட்டுமொத்தமாக மேலும்1 லட்சம் கோடி கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமை யிலான தமிழக பொருளாதார மேம்பாடு ஆலோசனைக் குழு. கடந்த மார்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் காய்கறிகளின் விலை 60 சதவீதமும், பருப்பு வகைகள் 20 சதவீதமும், மீன், இறைச்சி உள்ளிட்டவை 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளன. இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு முற்றிலுமாக மத்திய அரசுக்குப்  போய் விடுவதால் மாநில அரசுகள் விழிபிதுங்கிப் போயுள்ளன. மேலும் நாடு முழுவதும் திரட்டப்பட்ட ஜி.எஸ்.டி வருவாயில் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி பங்கையாவது கொடுங்கள் என்று மாநில அரசுகள் மன்றாடி வருகின்றன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழலைக் கருத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்யும் தேதியை மேலும் நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள தாக வளர்ந்துள்ள தகவலை அடுத்து. தமிழகத் திற்குக் கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி பங்கு முடங்கியுள்ளது. கூட்டாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய நிதியைக் கூட மத்திய அரசு வழங்காத காரணமாகவே கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணி சுணக்க மடைந்து இன்று சென்னை மாநகரமே சுடுகாடாக மாறி வருகிறது. மத்திய அரசின் இத்தகைய பழிவாங்கும் போக்கிற்கு மாநில அரசு தலைசாய்த்து நிற்பதைக் கண்டு திகைத்து நின்றனர் இவர்களுக்கு வாக்களித்த பொதுமக்கள். ஏற்கனவே 2020 – 21ஆம் நிதியாண்டுக் கான தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசின் வருவாய் பற்றாக்குறை 21 ஆயிரத்து 617 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. அதற்கு அடுத்தபடியாக தமிழக அரசு வாங்கி யுள்ள கடன் தொகைக்கு ஆண்டுக்கு 37 ஆயிரத்து 120 கோடி ரூபாய் வட்டியாக மட்டுமே செலுத்துவதால், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.59 ஆயிரத்து 346 கோடி என்று கணிக்கப்பட்டிருந்த வேளையில். தற்போதைய ஊரடங்கு காலத்தில் அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-யை அமல்படுத்தும் போது ஒருங்கிணைந்து செயல்படுவோம், ஒரே நாடு, ஒரே வரி என்று கூறிய மத்திய அரசு; தற்போது தென்மாநிலங்களுக்கு வஞ்சனை செய்து வருகிறது. அதை நம்பிக் கையெழுத்து போட்ட தன் விளைவு, இப்போது ஏதாவது பார்த்துப் போட்டுக் கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன மாநில அரசுகள். ஏற்கனவே ஒட்டுமொத்த பொருளாதாரமும் தலைகீழ் மாற்றத்திற்கு ஆளாகி உள்ளதால் தேசிய அளவில் வேலையிழப்பைச் சந்தித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி வேலையிழப்பு விகிதம் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 43.5 சதவீதம் உயர்ந்து தற்போது 49.8 சதவீதமாக உள்ளது. ஜார்கண்ட், பீகார் மாநிலங்களை விட தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வளவு நெருக்கடியானச் சூழலிலும் டிசம்பர் – ஜனவரி மாதத்துக்கான பங்கீடு தமிழக அரசுக்கு 2,400 கோடி கடந்த பிப்ரவரி மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாநிலங் களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி பாக்கியை மத்திய அரசு கடந்த 4 மாதங்களாக தராமல் உள்ளது. இந்தத் தொகையை தரவில்லை என்றால் மாநில அரசு எப்படி இந்த பிரச்னையைச் சமாளிக்கும்? கொரோனாவுக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் இருக்கும் குளறுபடி களைப்போலவே, நிதி திரட்டுவதிலும் மத்திய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போதுள்ள நிதி நெருக்கடி சூழலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகைகளை ரத்து செய்து, அவர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிதியை முழுமையாக வசூலித்தாலே சுமார் 8 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கும். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்ற இந்த ஒரு வருடத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரித் தள்ளுபடி மட்டுமே 2 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும். மேலும்  அமெரிக்காவோடு 21,000 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தம், கடும் பொருளா தாரச் சீரழிவில் உள்ள உலக நாடுகள் அனைத்துமே போரிடும் நிலையில் இல்லாத இந்த வேளையில் ராணுவத்துக்குப் புதிய கருவிகள் வாங்குவதை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தினாலே சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவினங்களை கட்டுப்படுத்த முடியும். தற்போது நம் நாடு மிகப்பெரிய இக்கட்டில் சிக்கியுள்ளது. முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றாலும், கூட்டாட்சித் தத்துவத்தின்படி மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கும் மத்திய அரசு செவிகொடுக்க வேண்டும். உலகப் பொருளாதாரத்துக்கே சவால் மிகுந்ததாக உள்ள இந்தச் சூழலில் தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அளிக்கும் யோசனைகளையும் கேட்டு, அவற்றில் சிறந்த யோசனைகளைச் செயல்படுத்த வேண்டும் என்பதே பொருளாதார அறிஞர்கள் பலரின் கருத்தாகும். அண்டை நாடுகளுடனான உறவு எவ்வளவு முக்கியமோ அதேபோல, அனைத்து மாநில அரசுகளுக்கும் பொதுவாக நடந்துகொண்டு நல்லுறவைப் பேணுவதும் மத்திய அரசின் கடமை. நேரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டு ‘வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது’  என்று உரிமைக்குரல் எழுப்பியது அன்றைய அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.க. ஆனால் இன்று அவரின் பெயரில் செயல்படும் கட்சியோ மத்திய அரசின் பாரா முகத்தை எதிர்க்கவும் முடியாமலும் மாநில வருவாயைக்

திரு தாய் அவளே…

திரு தாய் அவளே…

இலக்கியங்களில் எத்தனையோ தமிழ்ச் சமூகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் மனித சமூகங்களின் ஆண் பெண் எனும் இரு பிரிவுகளிலும் சேராமல் வாழ்ந்து வருகின்ற திருநங்கைகளுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் “திரு தாய் அவளே…” எனும் குறும்படம் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. போராட்டமே வாழ்க்கையெனப் பயணிக்கும் திருநங்கைகளுக்கு எதிரான கௌரவக் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் நிகழ்ந்து வந்தாலும் சமகால வாழ்வியலில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும், உணர்வுகளின் அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சிறப்பாகப் பேசுகிறது இந்தக் குறும்படம். தற்போதைய சூழலில் தங்களுக்கென ஒரு அங்கீகாரம் வேண்டும் எனக் கடுமையாகப் போராடி வரும் இவர்களின் வாழ்விலும் தற்போதைய சூழலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு ஊர்கள், சின்னஞ்சிறு அறைகள்;  வாடைகைக்குக்கூட எளிதில் கிட்டாத வீடுகள், தன் மனதுக்குப் பிடித்த குடும்பம் அமையுமா? என்ற ஏக்கம் என எப்போதும் மன அழுத்தத்துடனே வாழும் வாழ்வு அவர்களுடையது. மக்கள் மத்தியில் நிலவி வந்த தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, தங்களாலும் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று இவர்கள் சமீப காலமாக நிரூபித்து வருகிறார்கள். வனங்களில் சுற்றித் திரியும் பறவைகள் கூட இளைப்பாறும் வேளையில், மனிதராகப் பிறப்பெடுத்த திருநங்கைகளின் எண்ண ஓட்டங்களுக்கு ஓய்வே இல்லை என்றே கூறலாம். அதன் காரணமாக,  தற்போதைய சமூகத்தின் செவிலியர், அழகுக் கலை நிபுணர், காவல்துறை ஆய்வாளர் என பல தடைகளை தாண்டி தங்களுக்கென்று தனி அடையாளத்தைப் பதித்து வரும் இவர்கள் நிலவொளியில் உருவான கிறுக்கல்கள் என்றால் மிகையாகாது. பொது இடங்களில் திருநங்கைகள் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. இக் குறும்படத்தின் முதல் காட்சியில் குழந்தை ஒன்று காணமல் போய்விட, அதன் பெற்றோர் மற்றும் நண்பர்கள் தெருத்தெருவாக தேடி வருகின்றனர். ஓரிடத்தில் அந்தக் குழந்தையைக் காணும் படத்தின் நாயகி ஜீவா சுப்ரமணியம், அந்தப் பெண் குழந்தையுடன் விளையாடுவது போன்று கதை துவங்குகிறது. அங்கும் இங்குமாகக் குழந்தையைத் தேடும் பெற்றோர், தங்கள் குழந்தை திருநங்கையுடன் விளையாடுவதைக் காண்கிறார்கள். அதனைக் கண்ட குழந்தையின் தாய் “உங்களுக்கெல்லாம் கைதட்டிக் காசு வாங்கத்தான் தெரியும், குழந்தையைப்  பெத்து வளர்த்திருந்தால்தானே ஒரு தாயின் வலி தெரியும்” என்று கோபமாகப் பேச, அந்தப் பெண்ணிடம் இருந்து  வெளிப்படும் பாலின வெறுப்பு வார்த்தைகளால் கலங்கிப் போகிறார் நாயகி. தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு குழந்தைக்காக வசவுகள் வாங்கியது எண்ணி மனம் நொந்து அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் ஜீவா. அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி தவிக்கும் அவள் மறுநாள் டாக்டரிடம் சென்று தனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளதாகக் கூறுகிறார். டாக்டர் மட்டுமல்ல, பார்க்கும் நமக்கும் இது அதிர்ச்சியையும் இது சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. திருநங்கைகளின் வாழ்வியலில் நமது சமூகம் இதுவரை சந்திக்காத மறுபக்கங்களை மையப்படுத்துகிறது இதன் தொடர்ச்சி. தாய்மை எனும் தகுதியைப் பெறத் துடிக்கும் ஒரு திருநங்கையின் உணர்வை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது இந்தக் குறும்படம். தனக்கு தானே சீமந்தம் செய்து கொள்ளும் காட்சியில் ஜீவாவின் நடிப்பு நமது கண்களைக் குளமாக்குகிறது. தாய்மை என்பது பெண்களுக்கான தனித்துவ மான அடையாளம் என்பதை இந்தக் குறும்படம் மூலமாக உணர்த்தியுள்ளார் இதன் இயக்குநர் பிரவீன் குமார். வாடகைத் தாயாக பரிணாமம் பெறும் ஜீவாவின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. சிவகாசியைச் சேர்ந்த ஜீவா சுப்பிரமணியன் திருநங்கைகள் எதிர் கொள்ளும் கேலி கிண்டல்களை எதிர்கொண்டு வளர்ந்தவர். முன்னதாக கவண், தர்மதுரை, அயிரா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். படத்தின் இசை பல இடங்களில் படத்திற்கு ஒவ்வாத சூழலை உண்டாக்கினாலும், நாயகியின் நளினம் இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடுகிறது. ஒளிப்பதிவு அருமை என்று தான் கூற வேண்டும். வெளியிடப்பட்டதில் இருந்து சுமார் 31 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ள இந்தக் குறும்படம், தேசிய அளவில் 23 விருதுகளை வென்றுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தாலும் ஒரு காலத்தில் ஓரங்கட்டி வைக்கப்பட்ட திருநங்கைகள் இன்று தங்களது தனியாத‌ உணர்வுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ள தாய்மை உணர்வை அடையமுடியும் என்பதை இந்த வாடகைத்தாய் முறையை வெளிப்படுத்துவதன்மூலம் சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முயலும் “திரு தாய் அவளே”  குறும்படம், எதிர்காலக் குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு ஆவணக் காப்பகம் என்று தான் கூற வேண்டும்.

ஊருக்கு ஊரு பிழை! குளறுபடியான அரசின் திருத்தம்!

ஊருக்கு ஊரு பிழை! குளறுபடியான அரசின் திருத்தம்!

தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ள ஊர்ப்பெயர் களின் திருத்தத்தில் காணப்படும் ஒலிக்குறிப்புக் குழப்பங்கள்! தமிழக அரசு சமீபத்தில் செய்துமுடித்துள்ள சீக்ரெட் ஆபரேசன் தான் அனைவராலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கொரோனாவை விரட்டியடிக்க எதாவது திட்டம் தீட்டிட்டாங்களா என்றெல்லாம் நப்பாசைகொள்ள வேண்டாம். தமிழகத்திலுள்ள ஊர்ப்பெயர்கள் பலவற்றின் ஆங்கில மொழியாக்கத்தில் கொண்டுவந்துள்ள திருத்தத்தைத்தான் குறிப்பிடுகிறேன். எழும்பூர் என்பதை எக்மோர் என்று குறிப்பிடுவதையும், திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் என்று குறிப்பிடுவதையும், தூத்துக் குடியை டூட்டிகொரின் என்று குறிப்பிடுவதையும் மாற்ற வேண்டுமெனப் பலகாலமாக பேசப்பட்டு வந்ததுதான். அதுபோல் அமைந்த பெயர்களை மட்டும் மாற்றாமல், ஏற்கனவே ஓரளவு சரியாகவே குறிப்பிடப்பட்டிருந்த பெயர் களிலும்கூட திருத்தங்களைச் செய்து விட்டார்கள். இந்த வேலையை மாவட்ட வாரியாகக் குழு அமைத்து செய்துமுடித்ததாகத் தெரிகிறது. இதில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ள மாற்றங்களை ஏற்றும், மாற்றியமைத்தும் இறுதிசெய்து கெஜெட்டில் வெளியிட்டுள்ளனர். இதற்குப்பின்னர்தான் பொதுமக்களுக்கு இந்த செய்தியே தெரியவந்துள்ளது. ஆனால் இந்த மாற்றங்களில் பல்வேறு குழப்பங்கள் காணப் படுகின்றன. இந்த குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணமே, ஒலிக்குறிப்பு அடிப்படையிலான மாற்றத்தில் எடுக்கப்பட்ட தவறான சில முடிவுகளாகும். குறிப்பாக, ‘உ’ என்ற எழுத்துக்கு ‘U’ பயன்படுத்துகிறார்கள். அதேவேளை, ‘ஊ’ என்ற எழுத்துக்கு ‘’OO’ பயன்படுத்துகிறார்கள். இது சிலவகை ஒருங்குறி விசைப்பலகைகளின் அடிப்படையில் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது தவறு. உ என்பதற்கு ‘U’ என்றால், ஊ என்பதற்கு ‘UU’ தான் வரவேண்டும். இதில் அவர்களுக்கே தெளி வில்லாததால், தொடர்ச்சியாகப் பல பிழைகளைக் காணமுடிகிறது. ஊர்ப்பெயர்களை ஆங்கிலப்படுத்துமுன், “ka – க, kaa – கா, ki – கி, kii – கீ, ke – கெ, kee – கே, kai – கை, ku – கு, kuu – கூ, ko – கொ, koo – கோ, kau – கௌ” என்ற அடிப்படையைப் பின்பற்றியிருக்க வேண்டும். இதில் அவர்கள் தவறியிருப்பது தெரிகிறது. இதன்காரணமாக ஏற்பட்டுள்ள பிழைகள் என்னவென்று பார்க்கலாம். கோயம்புத்தூர் பெயரை ஆங்கிலப் படுத்துகையில், இறுதியில் ‘thoor’ என முடிக் கிறார்கள். அதேவேளை, குன்னத்தூர் என்ற ஊரின் இறுதியில் ‘thur’ என்று முடிக்கிறார்கள். இங்கே தூ என்ற எழுத்துக்கு ‘thoo’ மற்றும் ‘thu’ என இரண்டுவிதமாகப் பயன்படுத்தியி ருக்கிறார்கள். இது ஒரு குழப்பம். இந்த குழப்பம், பல ஊர்களில் தொடர்கிறது. இதேபோல, மேலக்கூடலூர் என்பதற்கு ‘lur’ என்று முடிக்கிறார்கள். அதுவே அரியலூர் என்பதற்கு ‘’loor’ என்று முடிக்கிறார்கள். குச்சனூர் என்பதற்கு ‘nur’ என்று முடிக்கிறார்கள். அதுவே ஆதனூர் என்பதற்கு ‘noor’ என்று முடிக்கிறார்கள். இவற்றிலும் அதே தவறைச் செய்துள்ளார்கள். அடுத்து, குறில் நெடில் தவறுகள் எக்கச் சக்கமாக உள்ளன. கூட்டுறவுபட்டி என்ற ஊரின் தொடக்கத்துக்கு Koo பயன்படுத்து கிறார்கள். அப்படியானால் கூ என்பதற்கு Koo என்றாகிறது. புதுக்கோட்டை என்பதற்கு Puthukkottai என்று எழுதுகிறார்கள். இதை உச்சரித்தால் புதுக்கொட்டை என்றுதான் வரும். கொட்டாபட்டி என்பதற்கும் Kottapatti என்றே எழுதுகிறார்கள். கோயமுத்தூர் என்பதற்கும் Koyampuththoor என்றே எழுதுகிறார்கள். இதனை கொயம்புத்தூர் என்றுதான் அழைக்க வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்ட மொழிமாற்றத் துக்கான அடிப்படைப் புரிதல் இல்லாததால் வந்த விளைவு தான் இது. ‘OO’ என்பதை ‘ஊ’ என்ற அர்த்தத்தில் தமிழக அரசு பயன்படுத்து கிறது. எனவே ‘கொ’ என்பதற்கு ‘KO’ என்று பயன்படுத்தியவர்களால், ‘கோ’ என்பதற்கு ‘KOO’ என்று பயன்படுத்த முடியவில்லை. அதன் அர்த்தம், அவர்களின் மொழிமாற்ற அகராதிப்படி ‘கூ’ என்றே ஒலிக்கும். எனவே குறில், நெடில் குறித்தெல்லாம் சிந்திக்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள். அடுத்து ‘THTH’ பயன்பாட்டில் இருக்கும் குழப்பம். வத்திராயிருப்பு என்பதற்கு ‘Vaththiraayiruppu’ என்று எழுதுகிறார்கள். அதேவேளை, சேத்தியாத்தோப்பு என்பதை ‘Setthiyathoppu’ என்று எழுதுகிறார்கள். ‘TTH’ மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதேபோன்ற தவறுகளுடன் பல ஊர்கள் இருக்கின்றன. அடுத்து, சாத்தமங்கலம் என்பதையும் ‘’satthamangalam’ என்று எழுதுகிறார்கள். சாத்தாம்பட்டி என்பதை மட்டும் ‘’saatthampatti’ என்று எழுதுகிறார்கள். இங்கே ‘சா’ என்ற எழுத்துக்கே ‘Saa’ மற்றும் ‘Sa’ என இரண்டுவிதமாகப் பயன்படுத்துகிறார்கள்.    எருக்கஞ்சேரி என்பதை ‘erukkanjery’ என்று மாற்றியுள்ளார்கள். மல்லிகைச்சேரி என்பதை ‘‘mallikaichcheri’ என்று எழுதுகிறார்கள். முன்னதில் ‘‘Y’ எனவும், பின்னதில் ‘‘I’ எனவும் முடிகிறது. அதேபோல ‘சே’ என்பதை ‘‘che’ எனக் குறில் எழுத்தாகப் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொன்றாகக் கவனித்தால் மொத்தமுள்ள 1018 ஊர்ப்பெயர்த் திருத்தங்களில் ஆயிரக்கணக்கான பிழைகளைக் கூறலாம். இதில் நான் காணுகின்ற ஒரே சிறப்பு,  என்ற வடமொழி எழுத்தை திரு என்று தமிழில் எழுதுவதுபோல ஆங்கிலத்திலும் ‘‘thiru’ என்று மாற்றிவிட்டார்கள். இதற்காக மட்டும் பாராட்ட லாம். மற்றபடி இவர்கள் பிடுங்கிய ஆணிகள் அனைத்துமே தப்பும் தவறுமான ஆணிகளாகவே இருக்கின்றன.

இன்னும் எத்தனை லாக் டவுனோ!

இன்னும் எத்தனை லாக் டவுனோ!

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் கடந்த மூன்று மாதங்களைக் காட்டிலும் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. ஆனாலும் சமூகப்பரவல் இல்லை என்ற அதே பழைய பல்லவியை அரசு இன்னமும் பாடிக் கொண்டுள்ளது. பெரம்பூர் இரயில்வே மருத்துவமனை, ஆவடி ஐ.சி.எஃப். மருத்துவ மனைகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் அரசின் பட்டியலில் வராதது, சுகாதாரத்துறைச் செயலாளர் மாற்றம் போன்ற நடவடிக்கைகள் அரசின் செயல்பாட்டில் உள்ள குளறுபடி களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. தற்போது சென்னை மற்றும் சுற்றுபுற மாவட்டங்களுக்கு மீண்டும் ஒரு பொது முடக்கத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார். கூடவே இம்மாவட்டங்களைச் சேர்ந்த அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகையும் அறிவித்துள்ளார். அரசின் செயல்பாடுகளை மட்டுமே எதிர் வரிசையில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து குறைகூறி வருகின் றன. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் முடக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கை களால் மக்களின் இயல்பு வாழ்க்கையும், வாழ்க்கைத் தரமும் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளதை யாரும் மறுக்க இயலாது என்றாலும், மக்களின் ஒட்டுமொத்தப் பொருளாதார இழப்பையும் ஈடுகட்டும் நிலையில் அரசு இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை மக்கள் முறையாகப் பின்பற்றியிருந்தால் தற்போது இத்தனை பெரிய பரவல் நிகழாமல் தடுத்திருக்க முடியும். கோயம்பேடு காய்கறிச் சந்தையை அரசு முதல் கட்டத்திலேயே மூடியிருக்க வேண்டும். போலவே அதிகப் பரவல் நிகழும் மண்டலங்களில் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி, பரிசோதனைகளை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். நாம் எவ்வளவுதான் அரசின்மீது குறைப்படுக்கொண்டாலும் நோய் வந்தால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள் மட்டுமே. எனவே அன்றாட வாழ்வில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், இனியாவது மக்கள் மிக மிக அவசியமின்றி வெளியே நடமாடுவதைக் குறைத்துக்கொண்டு, பொது முடக்கத்தை முழுமையாகப் பின்பற்றினா லன்றி பரவலைத் தடுக்க இயலாது. ஏற்கனவே சென்னையில் மட்டும் கொரோனா பலி எண்ணிக்கை 400ஐத் தொட்டுவிட்ட நிலையில், முகக் கவசம் அணிவதிலும் தனிமனித இடைவெளி கடைபிடிப்பதிலும்கூட மக்கள் அலட்சியம் காட்டுவது வேதனை தருகிறது. சமூகமும் நாமும் வேறு வேறல்ல என்பதை உணர்ந்து, நம் குடும்பத்தினரையும் நம்மோடு வாழும் மக்களையும் இழந்து விடாமல் இருக்க, நாம் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால் மீண்டுவிடலாம். கொரோனாவைக் கட்டுப்படுத்த தற்போது நம்மிடம் உள்ள ஒரே வழி, நம்மை நாமே காத்துக்கொள்வது மட்டுமே!

என்ன நடக்கிறது எல்லையில்?

என்ன நடக்கிறது எல்லையில்?

இசுலாமிய வெறுப்பை மக்களிடம் வளர்ப்பதற்காக, பாகிஸ்தானை மட்டுமே இந்தியாவின் எதிரியாகச்  சித்தரித்து வந்த மோடி தலைமையிலான அரசு, இந்திய ஒன்றியத்தின் தென்கோடி முனைக்கு கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களிடமிருந்து சிங்கள அரசு அபகரித்த பகுதியில் தனது இருப்பைச் சீனா நிலைநிறுத்திய போதும், தமிழகத் தலைவர்கள் பலரும் எச்சரித்தபோதும்கூட சீனா குறித்து மோடி அரசு கவலை கொள்ளவில்லை. மாறாக  சீன அதிபரை மாமல்லபுரம் அழைத்து வந்து குலாவியது. ஆனால் தற்போது லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பதற்றம் நிலவி வந்த நிலையில், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று மழுப்பப்பட்டது. இந்நிலையில் ஜூன்16 பிற்பகலில், இந்திய சீன இராணு வத்தினர் இடையில் நடந்த மோதலில் மூன்று இந்திய வீரர்கள் அடித்தே கொல்லப் பட்டதாக செய்திகள் வந்து திகைக்க வைத்தன. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரரும் ஒருவர். ஆனால், அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. லடாக் பகுதி மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருப்பதாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, கொரோனா நோய்ப் பரவல், கடும் பொருளாதார வீழ்ச்சி, அரசால் கைவிடப் பட்டு கால்நடைகளான அப்பாவி மக்கள்,  வேலை இழப்பு, 20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்புகள் என எல்லாப் பக்கமும் தோல்வி அடைந்த மோடி அரசு, தற்போது வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியடைந்திருப்பது அம்பலமாகிவிட்டது. பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையோ, துணிவோ இன்றி  மௌனம் காக்கும் பிரதமர், நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.