எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நிறைவுப் பகுதி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர்க் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்களின் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதியைப் பார்க்கலாம். அத்தியாயம் : 4 – கல்வியைக் கற்றுத் தரும் முறைமைகள் (Pedagogy): கல்வியைக் கற்றுத் தருவதற்குப் பல்வேறு முறைமைகள் என்பது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தோன்றியிருக்கின்றன. வரலாற்று ரீதியிலே கல்வி கற்பிக்கப்படும் முறைமைகள் நிறைய இருக்கின்றன. அதைப்பற்றி இந்த அறிக்கையில் விளக்கமாகப் பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கையை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி என்பது செயல்வழிக் கற்றலாக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை சொல்கிறது. கல்வி என்பது ஒரு குழந்தையை உற்சாகப்படுத்திப் படிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழலை ஒரு வகுப்பறையும் ஆசிரியரும் ஏற்படுத்த வேண்டும், ஆசிரியர் மாணவர்களை வரவேற்கக்கூடியவராக இருக்க வேண்டும், வகுப்பறை என்பது செயல்வழிக் கற்றல் இடமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இந்த அறிக்கை விளக்கமாகக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது மிக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆகா! மிக அருமையான ஒரு அறிக்கையாக இருக்கிறதே, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லமுடியாதே என்ற எண்ணம் தோன்றும்படி இருக்கிறது. அதுபோன்ற கட்டமைப்பு, கற்பித்தல் முறைகளைப் பின்பற்ற சிறப்பான வழிகளைக் கூறுகிறார்கள். ஆனால் இங்கு அடிப்படையாகக் கவனிக்க வேண்டியது, கற்றுத் தருவதற்கு நூறு அல்ல, ஆயிரம் அல்ல, பல்லாயிரக்கணக்கான முறைகளையும் வழிகளையும் ஆசிரியர்களே நாள்தோறும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட முறைமைகளையெல்லாம் பின்பற்றினால் மாணவர்கட்கு அறிவைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை ஆசிரியர்களே யோசித்து, பல்வேறு விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை. இந்த அறிக்கையை நாம் வாசித்துப் பார்த்தால் பல்வேறு அம்சங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் சொல்வதைத்தான் நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் கூறுவதைத்தான் நாம் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த நாட்டில், இத்தனை மாநிலங்கள் இத்தனை மொழிகள் பேசக்கூடிய நாட்டில், இத்தனைக் கலாச்சாரப் பின்னணிகள் உள்ள நாட்டில், இவர்கள் சொல்லக்கூடிய இந்தக் கல்வி முறைமைகளைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று எப்படிக் கூற முடியும் என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கும் அவர்கள் ஓரிடத்தில் விடை வைத்திருக்கிறார்கள். என்ன வைத்திருக்கிறார்கள் என்றால், ஆசிரியர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது, ஆசிரியர்களும் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே பல விசயங்களைச் செய்ய வேண்டும் என்றுகூடச் சில இடங்களில் குறிப்பிடுவதை நாம் பார்க்க முடியும். ஆசிரியர்கள் பாடல்களின் மூலமாக, விளையாட்டின் மூலமாக, செயல்வழிக் கற்றலின் மூலமாக என்று பல்வேறு முயற்சிகள் வழியாக மாணவர்களுக்கு அறிவைக் கொண்டுபோய்ப் சேர்க்கலாம் என்று பலப்பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள். இதை ஆசிரியர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றெல்லாம்கூடச் சொல்கிறார்கள். ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஆசிரியர்கள் போதனா முறையில் என்ன சொல்லித்தர வேண்டும்? மாணவர்களிடம் எப்படிப்பட்ட திறனைக் (Competency) கொண்டுவர வேண்டும்? கல்வி விளைவுகள் (learning outcomes) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஆசிரியர்கள் யோசித்து, தங்கள் திட்டங்களில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆசிரியர்கள் பாடத்தின் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கே ஆசிரியர்கள் வழிகாட்டி சொல்லித் தர வேண்டிய பாடங்கள், மாணவர்களே செய்து பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பல வகையாகப் பிரித்துப் பிரித்துச் சொல்லியிருக்கின்றார்கள். இதெல்லாம் படிப்பதற்கு நன்றாகவும் பாராட்டத்தக்கதாகவும்தான் இருக்கின்றன என்பது உண்மை. மற்றொரு இடத்தில் அவர்கள் சொல்வதுபோன்று ஐந்து கட்டங்களாகப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். அது அறிமுகம், ஒரு கோட்பாட்டை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், நடைமுறையில் தொடர்புபடுத்துவது, அதை எங்கே கொண்டுசென்று (Application) பயன்படுத்துவது, அதற்கு வெவ்வேறு அம்சங்களில் பொருத்திப் பார்ப்பது, அதை விரிவாக்குவது என்று பல வகைகளிலும் விளக்கங்களை முன் வைத்துள்ளனர். அதேபோல, ஆசிரியர்கள் போதிப்பதில், தான் செய்து காட்டுவதும், ஆசிரியர்களுடன் சேர்ந்து செய்வதும், இறுதியில் மாணவரையே செய்ய வைப்பதும் என்ற வகையில் – I do it , We do it , You do it and you do it alone – பல்வேறு கட்டங்களில் அறிவைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதெல்லாம் குறித்து அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். ஆக, மாணவர்களுக்குக் கற்கும் பொறுப்பு எப்படியெல்லாம் இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுடன் உகந்த உறவை வைத்துக்கொள்வதோடு பெற்றோர்களோடும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு மாணவர் – பெற்றோர் இருவருடனும் இயைந்து பழகி அவர்கள் மனத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல எண்களை அறிவித்தல், எழுத்துகளை அறிவித்தல் குறித்து நாம் அறிவோம். அதில் எழுத்தை அறிவித்தல் என்பதில் Oral language Development, Word Recognition, Reading and writing என்ற நான்கு கட்டங்களாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதேபோல எண்களைக் கற்பிப்பதில் வாய்மொழி வழியாகக் கணக்கைக் கற்றுத் தருவது (Oral Math talk), பல்வேறு செயல்வழிக் கற்றல் வழியாகக் கணக்கைக் கொண்டு சேர்ப்பது, ஒரு குழந்தைக்கு எளிதாகப் புரியக்கூடிய கணக்கிலிருந்து படிப்படியாக சிக்கலான கணக்கு விஷயங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது, விளையாட்டு வழியாகக் கணக்கை எடுத்துச் செல்வது (Math game) என அனைத்து வழிகளையும்பற்றிக் கூறியிருப்பது உண்மைதான். இங்கு நமக்கு அடிப்படையான சில கேள்விகள் தோன்றுகின்றன. எண்ணை அறிவித்தலும் எழுத்தை அறிவித்தலும் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்கு மிகமிக அடிப்படையான விஷயங்கள் என்று அறிவோம். Basic Building Block என்று சொல்வார்கள். மிக அடிப்படையான விஷயத்தை, மிகத் திறமையாக, தெளிவாக மாணவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அடிப்படையான தேவையாக இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கு எத்தனை விதமான கற்பித்தல் முறைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று பலவாறு கூறியுள்ளதும் சரிதான். ஆனால் என்னுடைய கேள்வி, அப்படிப்பட்ட சூழலைத்தான் பள்ளிகளிலே மத்திய, மாநில அரசாங்கங்கள் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றனவா? எத்தனைப் பள்ளிகளிலே மாணவர்களுடன் உரையாடக்கூடிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களே இல்லை, போதுமான எண்ணிக்கையில் பள்ளிகளும் இல்லை. ஒருவேளை அரசுப் பள்ளிகள்தான் இப்படி இருக்கின்றன என்று சொன்னால், தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை நடத்தக்கூடிய இடங்களாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வு கொடுக்காமல், இப்படிப்பட்ட ஒரு அறிக்கையில் நேர்த்தியாக விஷயங்களை விளக்கியிருக்கிறார்களே ஒழிய, இதையெல்லாம் எங்கே போய் இவர்கள் அமல்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறையில் உரையாட முடியாத வகையில் ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கொடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் கூடுதலாக ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையைக் கொடுத்து, எதிர்த்துக் கேள்விகூடக் கேட்க முடியாத நிலையில் வைத்திருக்கின்றார்கள். இதற்கான தீர்வை NEP 2020 எங்கே முன்வைத்துள்ளது? அல்லது NCFFSதான் இதற்கான தீர்வை எங்கே முன்வைத்துள்ளது? இவற்றையெல்லாம் தாண்டி, இன்று ஆசிரியர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள்? ஒரு பள்ளிக்கு நாம் சென்றோமானால் அவர்கள் உட்காருவதற்கு மேசை, நாற்காலிகூடக் கிடையாது. உட்காரக் கூடாது, உட்கார முடியாது. அவர்களுக்கு என்ன பணிக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உட்கார வேண்டும். நல்ல விஷயம்தான். மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயது வரை மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர் இருப்பது மிக மிக நன்மையான விஷயம், சரியான விஷயம்தான். ஆனால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு வந்ததற்குப் பிறகு ஆசிரியர் எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, அங்கு கரும்பலகை இருக்க வேண்டும், கரும்பலகையில் எழுதிக் கற்பிக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு இவர்கள் என்ன தீர்வு வழங்குகின்றார்கள் என்று பார்த்தால், அந்த வகுப்பறையில் கீழே உயரம் குறைந்த இடத்திலே மாணவர்கள் எழுதிப் பார்க்கும் வகையில், கரும்பலகையை அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் காலம் காலமாகப் பார்த்து வருவது என்னவென்றால் ஆசிரியர்தான் எண்களையும் எழுத்துக்களையும் அறிவிப்பவராக இருப்பார். ஆசிரியர்தான் பயிற்சியளிப்பவராக இருப்பார். அப்படி இருக்கும்போது, கரும்பலகை என்பது மாணவர் உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் அங்கே மாணவர்களுடன் இணைந்து அமர்ந்து கொண்டு கற்றுத்தர வேண்டும் என்று சொல்வதும் ஆசிரியர்களை எந்தவொரு நிலையில் கொண்டு சென்று வைத்துவிட்டது என்பதைப் பார்க்க வேண்டும். ஆசிரியர் என்பவர் சொல்லித்தரக்கூடிய, கற்றுத்தரக்கூடியவராக இருக்கும் நிலையை மாணவர்கள் பார்க்க வேண்டும். இவர்கள் கூட குரு குரு என்று சொல்கிறார்களே தவிர, அங்கே ஆசிரியரை எண்ணையும் எழுத்தையும் கற்றுத்தரக்கூடியவராக இவர்கள் வைக்கவில்லை. இப்போது நடைமுறையிலிருக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சிரத்தை எடுத்து எண்ணையும் எழுத்தையும் அறிமுகம் செய்தால்கூட, இங்கு ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை. அவர்களால் கணக்குப்போட முடியவில்லை என்ற சூழலைத்தான் உருவாக்கி வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் மிகப்பெரிய தோல்வியில்தான் முடிந்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலாவது காரணம், கற்றுத் தரக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியரை மாணவருக்கு நண்பர்களாக ஆக்குவோம் என்ற பெயரிலே ஆசிரியர் நிலையை வைத்தது. மற்றொரு காரணம், முதலாம் வகுப்பிலிருந்தே தேர்ச்சி – தோல்வி என்ற நிலையே இல்லை. இது வந்தபிறகு முதலாம் வகுப்பில் சேர்ந்தவுடன் எட்டாம் வகுப்பு வரை தொடர்ச்சியான தேர்ச்சிதான் என்ற நிலை வந்தபிறகு பள்ளியில் ஒரு சிரத்தையான சூழல் இல்லை. ஆகவேதான் இன்றைய நிலையில் எண்ணையும் எழுத்தையும் அறிவித்தல் என்பது தோல்வியில் முடிந்துள்ளது. இது கடந்த பதினைந்து / இருபது ஆண்டுகளுக்குள்ளாக நடந்துள்ளதேயன்றி அதற்கு முன்பாக இந்நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆக, Pedagogy என்று இவர்கள் சொல்லும் கற்றுத்தரும் முறைமைகள் என்பதும் ஒரு பெரிய தோல்வியில்தான் போய் முடிந்திருக்கிறது. மாணவர்களோடு உட்கார்ந்துகொண்டுதான் ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும் என்ற நிலையும் பாடப் புத்தகங்களே வேண்டாம் என்று அறிவிக்கும் நிலையும் அப்படியே பாடப் புத்தகங்கள் இருந்தாலும் அதற்கான பாடத் திட்டத்தை என்.

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் நிகழ்த்திய உரைத் தொகுப்பின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். கற்பித்தலைப் பாழாக்கும் எமிஸ் (EMIS – Education Management Information System): அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது நிலையையும் பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பல தொடர்ச்சியான பணிச்சுமைகளுக்கு ஆசிரியர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். EMIS (Education Management Information System) என்ற கல்வி மேலாண்மைத் தகவல் முறையைக் கையாளும் நபர்களாக ஆசிரியர்களாக நடத்தப்படுகின்றனர். மாணவர் விபரங்களை நாள்தோறும் சேகரித்து, இந்த EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இது மட்டுமல்ல, எண்ணிறைந்த பணிகளான, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் வந்துவிட்டால் வாக்குச் சீட்டை வீடுவீடாகத் தேடிச்சென்று கொடுத்துக் கையெழுத்து வாங்குவது, முதியோர் கல்வி வளர்ப்பது, இது போதாதென்று இல்லம் தேடிக் கல்வி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதையெல்லாம் ஆசிரியர்களின் பணிகளாகத் தருகிறார்கள். ஆசிரியர்கள் எந்தவொரு பணியும் இல்லாமல் வெறுமனே அமர்ந்து இருப்பதைப்போல நினைத்து மற்ற பணிகளை எல்லாம் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பள்ளிகளில் மாணவர்களைத் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்கக்கூடிய வாய்ப்பையே இன்றைய ஆசிரியர்கள் பெற முடியாத ஒரு சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாகப் பள்ளிக்குச் செல்ல விரும்பக்கூடிய ஆசிரியர்கள், மாணவர்கட்குக் கற்றுத் தர ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அங்கே மாணவர்களைத் தொடர்ச்சியாக சென்று பார்ப்பது, அவர்களோடு இருப்பது என்ற நிலையே இல்லாத ஒரு சூழலை உருவாக்கிவிட்டார்கள். இதுதான் இன்று அரசுப் பள்ளிகளிலே நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அங்கே கடுமையான பணிச்சுமையை ஆசிரியர்களுக்கு வழங்கி, 8 மணி நேரம் என்பதெல்லாம் தாண்டி, 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று பள்ளிகளிலேயே இருந்து அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு மிகவும் களைப்பாக வீடுகளுக்குச் செல்லும் நிலைமையில், எந்தவிதமான பணிச்சுமை குறித்தும் கேள்வி கேட்க முடியாமல் ஒரு அடிமை நிலையில்தான் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஆசிரியர்களைப் பற்றியோ அவர்கள் பணிச்சூழல் பற்றியோ தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணமோ அல்லது NCFFS ஆவணமோ வாயே திறக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆவணத்தின் அனைத்து அம்சங்களையும் தொடர்ச்சியாக வாசித்தால் ஆங்கிலத்தில் Rosy Picture என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது மிகவும் அருமையாகப் படம் காட்டுவது. அதுபோலத்தான் இவர்களும் ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்களுக்கு என்னவெல்லாம் வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்? இதையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கு எப்படியெல்லாம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்? என்று மிகவும் அழகான காட்சியை இந்த ஆவணத்தில் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தோமானால் அங்கே அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மாணவர்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதும் கடுமையான பணிச் சுமையில் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருப்பதும் அப்படியே நேர் எதிரான ஒரு நிலையை – கிட்டத்தட்ட அடிமைத்தனமான ஒரு நிலையை அங்கே நாம் காணமுடிகிறது. இதைப்பற்றியெல்லாம் இந்த அறிக்கைகள் வாயைத் திறக்க மறுப்பது ஏன் என்ற கேள்விதான் இங்கு எழுகிறது. மொழிக் கொள்கை: மொழிக்கல்வி குறித்து NCFFS என்ன கூற வருகிறது மற்றும் மாணவர்களுக்கு எண்களைக் அறிவித்தல் குறித்தும் எழுத்தை அறிவித்தல் குறித்தும் எப்படிப்பட்ட இலக்கை அது நிர்ணயித்திருக்கிறது என்பதை அடுத்து காணலாம். இங்கு ஏற்கனவே நம்மிடையே அறிமுக உரையாற்றிய பேராசிரியர் சிவக்குமார் அவர்கள், இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் L1, L2, L3 குறித்துப் பேசினார். அதென்ன L1 , L2, L3? ஒரு குழந்தை, தான் வாழக்கூடிய வீட்டில் தனது பெற்றோர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அதைத்தான் அவர்கள் L1 என்று கூறுகிறார்கள். அதைத்தான் வீட்டு மொழி (Home Language) அல்லது தாய் மொழி (Mother tongue) அல்லது Familiar Language என்று சொல்கிறார்கள். இங்கே ஒரு உதாரணத்திற்காக, வீட்டிலே பேசுவதைத் தாய்மொழி என்று வைத்துக்கொண்டால், அதையே அவர்கள் L1 என்கின்றனர். பிறகு ஏன் அதை Home Language என்று சொல்ல வேண்டும்? அல்லது Familiar Language என்று சொல்ல வேண்டும்? என்று அதை நாமாகச் சற்று யூகித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து வந்து பிறிதொரு மாநிலத்தில் வாழக்கூடியச் சூழலிலே, அங்கே அந்தத் தாய்மொழியை எழுத்து வடிவிலோ அல்லது வாசித்தல், எழுதுதல் போன்ற விஷயங்களைச் செய்யமுடியாத ஒரு சூழலிலே, அந்த மொழி என்பது அங்கே வீட்டில் பேச்சில் வழங்கக்கூடிய மொழியாக மட்டும்தான் இருக்கிறது. ஆனால் பள்ளிக்குச் சென்றால் அந்த மொழி என்பது அங்கே இருக்காது. இது வேற்று மாநிலங்களிலிருந்து வந்து ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களின் நிலையாக இருக்கும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. இதைத்தான் அவர்கள் L1 என்று சொல்கிறார்கள். ஆகவே L1 என்ற, வீட்டில் பேசப்படும் இந்த மொழியை மாணவர்களுக்கு உகந்த மொழியாக அறிவித்து, அந்த வகையிலே பள்ளிகளில் அந்த மொழியைப் பிரதானமாக சொல்லித் தரவும் அதன்மூலமாக மற்ற பாடங்களை மாணவர்களுக்குப் போதிக்கவும், அதாவது பயிற்று மொழியாக L1 என்ற அந்த மொழியைப் பயன்படுத்தவும் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு L1 மொழியைப் பாடங்களைச் சொல்லித்தரக்கூடிய மொழியாகக் கூறுகிறார்கள். அடிப்படையில் தர்க்கரீதியாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது. அடுத்து L2, L3 என்று சொல்லக்கூடிய மொழிகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், மாணவர்கள் ஒரே நேரத்தில் தாய் மொழியையோ வீட்டிலே வழங்கப்படும் மொழியையோ பள்ளிகளில் கற்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி, அங்கே கற்க வேண்டும் என்று முதலாவதாகக் கூறிவிட்டு, இரண்டாவதாக, ஒரு குழந்தை – அதாவது முதல் வயதிலிருந்து எட்டு வயது வரை அதிகப்படியான மொழிகளைக் கற்றுத் தேறக்கூடிய வாய்ப்பை அக்குழந்தையினுடைய மூளையின் வளர்ச்சி வழங்குகிறது என்று கூறுகிறார்கள். தர்க்கரீதியில் யோசித்துப் பார்த்தால் உண்மைதான். ஆரம்பக் காலகட்டத்தில், ஒரு குழந்தை தனது எட்டு வயது வரை பல மொழிகளைக் கற்கக்கூடிய மிகச் சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அத்தகைய மூளை வளர்ச்சி அங்கே நடக்கிறது என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையாக இருக்கலாம். ஆனால் இங்கு எழக்கூடிய கேள்வி என்னவென்றால், அதற்காக நடைமுறையில் ஒரு குழந்தையால் எத்தனை மொழிகளைக் கற்க முடியும்? ஒரு குழந்தையைச் சுற்றி எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. ஒரு குழந்தையைச் சுற்றி அக்குழந்தை தெரிந்துகொள்வதற்காக இயற்கையாக அத்தனை மொழிகள் பேசப்படுகின்றனவா? அது இல்லை என்று சொன்னால், வகுப்பறையிலே இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி, நான்கு, ஐந்து என்று பல மொழிகளை போதனையின் மூலம் சொல்லித் தர முடியுமா என்றால், நடைமுறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. இவர்களே பல இடங்களில் இந்த ஆவணத்தில் கூறுவதுபோல, ஒரு குழந்தை இயற்கையாகத்தான் மொழிகளைக் கற்றுக்கொள்ளும். குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது ஒன்று முதல் எட்டு வயது வரை படுவேகமாக இருந்தாலும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் இயற்கையான முறையில்தான் நடக்கும் என அவர்களே கூறிவிட்டு, ஆனால் பள்ளிகளில் இரண்டாவது மொழி, மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்வது அவர்களுடைய தர்கத்திற்கே புறம்பாகச் செல்வதைக் காட்டுகிறது. ஆகவே, ஒரு குழந்தை இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி எல்லாம் கற்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்த்தால் தர்க்கரீதியில் அது இல்லை என்பதே பதில். ஏனென்றால் அது இயற்கையாக நடக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு குழந்தை வேறு மொழிகளே கற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் சொல்கிறோமா? நிச்சயமாகக் கிடையாது. ஒரு குழந்தை, வாய்ப்பு இருந்தால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவது – இயற்கைச் சூழலுக்கு மாறாக நடந்துகொள்வது என்பதைத்தான் நாம் மறுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, ஒரு குழந்தை எதார்த்தமாகத் தனது தாய் மொழியை தன் வழக்கத்திலிருக்கக்கூடிய மொழியைக் கற்றுக்கொள்வது, அதன்மூலமாகப் பிற அறிவைப் பெறுவது என்பதுதான் எதார்த்தமாக இருக்க முடியும். இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்கு அந்த வயதில் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வர வேண்டுமா என்றால், தேவையில்லை என்பதே நாம் கூற வருவது. ஒரு குழந்தைக்கு ஆறு வயதுக்குப் பின்னர், தாய்மொழி மட்டுமல்லாது பிறிதொரு மொழியையும் சொல்லித் தரக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்பதை நாம் கூறுகிறோம். இதே புத்தகத்திலே L 1, L 2, L 3 என்று கூறிவிட்டு, பிறிதொரு இடத்தில் R 1, R 2, R 3 என்று கூறுகிறார்கள். இவற்றுக்கிடையில் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. எந்த மொழியை வீட்டில் வழங்குகிறார்களோ அந்த மொழியை ட1 என்று வைத்துக் கொண்டால், அந்த மொழியை ஒரு குழந்தை எழுத்து வடிவிலோ அல்லது வாசிப்பதிலோ கற்க முடிந்தால் அதை R1 என்கின்றனர். R என்றால் இங்கே Read and Write என்று குறிப்பிடுகிறார்கள். எனவே எந்த மொழியில் பேசுகிறதோ அதை எழுத்து வடிவில் எழுதினாலும் படித்தாலும் அதை R1, R2, R3 என்று சொல்கிறார்கள். ஆகவே L1, L2, L3 என்பதும் R1, R2, R3 என்பதும் ஒன்றுதான். ஆனால் ஒரு சில நேரங்களில் வீட்டில் பேசக்கூடிய மொழி ஒன்றாகவும் பள்ளிகளில் சென்று படிக்கக் கூடிய மொழி வேறாகவும் இருக்கலாம். வேற்று மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து பிறிதொரு மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அந்தச் சூழல் ஏற்படலாம். இப்போது மற்றொரு விசயத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. என்னவென்றால், ஒரு குழந்தை வீட்டில் பேசக்கூடிய L1 மொழி, அது தாய்மொழியாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தாய் மொழியில் நல்ல பயிற்சியைப் பெற்றுவிட்ட பின்பு, L2 L3 என்ற அடுத்தடுத்த மொழிகளையும் அந்தக் குழந்தை கற்றுத் தேர்ச்சி பெற பள்ளி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு வாதத்திற்காக அது சரி என்று நாம் வைத்துக்கொண்டால்கூட, இங்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று பார்த்தால், L2 அல்லது

எங்கே போகிறது கல்வி?  பகுதி 2

எங்கே போகிறது கல்வி? பகுதி 2

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி (நேற்றைய முதல் பகுதியின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை அமுல்படுத்துகிற அபாயமான நடவடிக்கைகள் குறித்து, அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி நடத்திய இரண்டாவது விழிப்புணர்வுக் கூட்டம் குறித்த கட்டுரைத் தொகுப்பு இது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசிரியர் சிவகுமார் ஆற்றிய உரையை முந்தைய பகுதியில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்கள் நிகழ்த்திய உரையின் தொகுப்பைப் பார்க்கலாம். அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு சிறப்புரை: பேரா. சீ. ஹோசிமின் திலகர் நமது அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் சார்பாக NEP 2020இன் முன்மொழிவாக இருக்கக்கூடிய, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற ஆவணத்தைப் பற்றிய ஆய்வின் இரண்டாவது கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் (அத்தியாயம்-3), பாடத்திட்ட முறைமை (அத்தியாயம்- 4) ஆகியவை குறித்து எனது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி. முதல் இரண்டு அத்தியாயங்களின் சாராம்சம்: இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் அரசியல் சாசன மதிப்புகளையும் அதனுடைய அடிப்படைக் கடமைகளையும் பெறக்கூடிய வகையில், ஒரு சிறந்த கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கான நோக்கத்தை NEP 2020 கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்துவதற்காக ECCE – அதாவது, குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) குறிப்பாகச் சொல்லவருவது இந்தியப் பாரம்பரியத்தில் கல்வி வேர் விட்டுள்ளது (It is rootedness in Indian traditions) என்பதாகும். அதாவது, முன்பருவ மழலையர் கல்வியானது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குழந்தை, கல்வி பெறும் போக்கில் அடையும் வளர்ச்சியில் அந்தக் குழந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் எப்படிப்பட்ட ஆழமான இந்தியக் கருத்தாக்கத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒருபுறம் இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் இந்த NCFFS ஆவணம், மறுபுறம் குழந்தையின் உள்ளேயும் வெளியேயும் இந்தியாவின் கருத்தாக்கம், இந்தியாவின் பார்வை குழந்தைக்குள் செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. இங்கேதான் அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது. கல்வியின் நோக்கம் என்பது முதலில் எழுத்தை அறிவித்தல், எண்களை அறிவித்தலில் தொடங்க வேண்டும் என்பதை அறிவோம். ஆனால், இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் பார்வை, அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், இந்தியா எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம், ஒரு குழந்தை தனக்கு உள்ளேயும் வெளியேயும் பார்க்க வேண்டும் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தியாயம் : 3 – மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் தேசிய கல்விக் கொள்கை 2020 குழந்தைப் பருவக் கல்வியில் இரண்டு கட்டங்கள் அமைய வேண்டும் என்று கூறுகிறது. முதலில் 3 வயது முதல் 6 வயது வரை ஒரு கட்டமாகவும் பிறகு 6 வயது முதல் எட்டு வயது வரை மற்றொரு கட்டமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் மூன்று வயதில் கல்வி என்பது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று எந்தவொரு கல்வி அமைப்பும் கூறியதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், முதன்முதலாக இந்தியாவில், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரிலே மூன்று வயதுக் குழந்தை கல்வி அமைப்புக்குள் வர வேண்டும் என்று ஒரு கல்விக் கொள்கை கூறியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் ECCE-இல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், அங்கன்வாடிகள் அல்லது பால்வாடிகள் அல்லது முன் பருவ மழலையர் கல்வி (Pre-schools) என்று வரையறுக்கிறார்கள். அதாவது 3 வயது முதல் 6 வயது வரை நிச்சயமாக ஒரு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே அங்கன்வாடிகளும் பால்வாடிகளும் நம் நாடு முழுவதும் இருக்கின்றன. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதைக் கல்வி அமைப்புக்குள் வரையறுப்பதுதான் இங்கே புதிதாக இருக்கிறது. அதுதான் இங்கே பல நெருடல்களை ஏற்படுத்துகிறது. ஆரம்பகாலக் கல்வி இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த அறிக்கை, ஒரு குழந்தை ஆறு வயது முடிந்த பிறகுதான் முதலாவது வகுப்பு செல்ல வேண்டும் என்று NCFFS வரையறுக்கிறது. ஆறிலிருந்து ஏழு வயது வரை முதலாம் வகுப்பும் ஏழு வயது முதல் எட்டு வயது வரை இரண்டாம் வகுப்பு என்று அது வரையறுத்துள்ளது. இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது. ஒரு குழந்தை மூன்று வயது முதல் ஆறு வயது வரை படிக்காமல் விட்டுவிட்டால், அதாவது அங்கன்வாடிக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் என்ன நேரும் என்பதற்கு இந்த அறிக்கையில் எந்த பதிலும் கிடையாது. நாம் யூகித்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிகிறது. ஒருவேளை அதுபோன்று ஒரு குழந்தை 3 வயது முதல் 6 வயது வரை அங்கன்வாடிப் பள்ளிகளுக்குச் செல்லாமல் விட்டுவிட்டால் நேரடியாக, ஆறு வயதுக்குப் பின்பாக முதலாம் வகுப்பில்தான் சேர முடியும் என்று தோன்றுகிறது. இதுவும் மிகவும் ஒரு புதிரான விஷயம்தான். ஏனெனில், ஒரு பெற்றோரோ ஒரு குழந்தையோ பள்ளிக்கு முன்பருவக் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். குழந்தை தீர்மானிக்க முடியாவிட்டாலும்கூட, அதன் பெற்றோருக்குத்தான் தீர்மானிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும். அப்படியிருக்கும்போது, நிச்சயமாக மூன்று வயதிலே சேர்த்தே ஆக வேண்டும் என்பதெல்லாம் மிகவும் வேடிக்கையாகவும் புதிராகவும் இருக்கிறது. மேலும் அதைக் கட்டாயப்படுத்துவதென்பது, மிகவும் ஒரு ஆரோக்கியமற்ற போக்காக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இப்போது ECCE குறித்து நாம் மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் பள்ளிகளின் நிலையும் கல்வியின் நிலையும் மாணவர்கள் நிலையும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். அரசுப் பள்ளிகள் மூடலும் வேகமெடுக்கும் தனியார்மயமும் தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 58,897ஆக இருக்கிறது. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும் 9392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் 5788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 24,310 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 7,024, அதே போல உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,135 ஆக இருக்கின்றன. 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று மொத்தம் 12,382 பள்ளிகள் இருக்கின்றன. அதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பார்த்தால், தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆசிரியர்கள் விபரங்களைப் பார்தோமானால், 5.6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2.27 லட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளிலும் 77 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 37,579 பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள்தான் பணிபுரிகின்றனர். ஆனால் 12, 382 தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதை எதைக் காட்டுகிறது என்று சொன்னால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக இருக்கிறது. அடுத்ததாக, கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக, தேசிய கல்விக் கொள்கை 1986 நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பின்னால் – அதற்கு முன்பாகவும் தனியார் பள்ளிகள் வளர்ந்து வந்தாலும் – தமிழ்நாட்டில் பள்ளிகள் தனியார்மயம் என்பது படுவேகமாக நடந்திருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை ஒரு கணக்கெடுப்பு செய்தால், அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்களும் மற்ற பள்ளிகளில் 83,755 மாணவர்களும் படிக்கின்றனர். 35,579 பள்ளிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள்தான் பயில்கின்றனர். ஆனால், வெறும் 12,382 எண்ணிக்கையே உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்கள் பயில்கின்றனர். (புள்ளி விவரங்கள் உதவி: 2022 மே மாதம் 28 அன்று தினமணியில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை, முன்னாள் கல்வி அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் எழுதியது). இது மீண்டும் எதைக் காட்டுகிறது என்றால், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது. பள்ளிகளில் தனியார்மயம் என்பது மிக வேகமாக நடைபெறுகிறது. கல்வியை மறுக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009 இப்போது சில அடிப்படையான கேள்விகள் நம் முன் எழுகின்றன. அவை என்னவென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, சமுதாயத்தில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வி உரிமைச் சட்டம் 2009, 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கூறியதை நாம் அறிவோம். அது உண்மையென்று சொன்னால், அரசுப் பள்ளிகளின் நிலை ஏன் இப்படிச் செல்கிறது? அரசுப் பள்ளிகளிலிருந்து விலகி, தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஏன் செல்கின்றனர் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடவேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்குமான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE-2009) என்ன சொல்கிறது என்றால், அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். தனியார் பள்ளிகளின் மொத்த மாணவர்களில் 25% மாணவர்கள் இதுபோல் சேர்ந்து படிக்க அரசே முன்வந்து வாய்ப்பளிக்கும். அவர்கள் கட்டவேண்டிய கல்விக் கட்டணத்தையும் அரசே கட்டும் எனச் சொல்கிறது. இந்தக் கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் 25% தனியார் பள்ளிச் சேர்க்கைக்கு அரசாங்கமே நிதி வழங்குவது குறித்தும் SRM கல்வி நிறுவன மாணவர்

எங்கே போகிறது கல்வி?

எங்கே போகிறது கல்வி?

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நாடாளுமன்ற விவாதம் ஏதுமின்றி, கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அடிப்படைப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு அகில இந்தியா கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC) தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் முதலாவது அமர்வில் பேராசியரியர் யோகராஜன் ஆற்றிய உரையின் தொகுப்பை முன்பு சுவடு இதழில் வெளியிட்டிருந்தோம். அடுத்ததாக, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து அலசுவதற்காக அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கூட்டத்தில் பேராசியர் ஹோசிமின் திலகர் சிறப்புரை ஆற்றிய நிகழ்வின் முழுத் தொகுப்பை தொடராக சுவடு வெளியிடுகிறது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) மெய்நிகர்க் கூட்டத்தைத் தொகுத்தளித்த தோழர் ரெங்கையா முருகன் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி குறித்த ஓர் அறிமுகத்துடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கைக் குறித்து, அதன் நன்மை தீமைகளை ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு அமைப்பு உருவானது. உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் இந்த அமைப்பின் தலைவராகவும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஷில் குமார் முகர்ஜி உள்ளிட்ட சிலரும் இணைந்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கினர். இதன் தமிழ்நாடு பிரிவும் அப்போதிருந்தே செயல்பட்டு வந்தது. 1986இல், அக்கல்விக் கொள்கை குறித்து MIDS (Madras Institute of Development Studies) நிறுவனரும் உலகப் புகழ்பெற்ற கல்வியாளருமான மால்கம் ஆதிசேஷய்யா, யோஜனாவில் மிகச் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதினார். “அய்யோ… அதனை ஒரு முனைப்படுத்தாதீர்” என்ற கட்டுரைதான் அது. அதாவது, ‘நீங்கள் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் வேலூருக்குத் தேவையான கல்வித் திட்டத்தை வகுக்காதீர்கள்’ என்றார். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையானவற்றை உள்ளடக்கிய கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்றார். ‘கல்வி என்பது வேறு, கல்வி முறை என்பது வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனவும் கல்வி முறை என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய தொகுப்பு என்றும் அவர் கூறினார். ஆனால் தற்போது நடைமுறையிலிருக்கும் கல்விக் கொள்கையை யார் வகுக்கின்றனர் என்றால், ஆளும் அரசுதான் வகுக்கிறது. இன்றுள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறும் இந்த அபிவிருத்திக்குத் தகுந்தவாறும் உருவாக்கப்பட்டுள்ளதே தேசிய கல்விக் கொள்கை 2020. இதன் அபாயங்கள் குறித்தும் கல்வி வணிகப் பண்டமாக மாறப்போவதையும் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும்போது எவ்வாறு ஓரிடத்தில் அமர்ந்து கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்றும் அப்போதே ஆதிசேஷயா தனது கட்டுரையில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக உரை: பேராசிரியர் சிவக்குமார் 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (AlSEC) அமைப்பு எனக்கு அறிமுகமாயிற்று. மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியராக நான் இருந்தேன். 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, கல்விக் கொள்கை குறித்து ஒரு அருமையான தொகுப்பை வெளியிட்டது. அந்த வரலாற்றை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 1986இலிருந்து இந்தக் கல்விக் கொள்கைகள் எவ்வாறு கல்வியை வணிகமயத்துக்கு, கார்ப்பரேட் மயத்துக்குக் கொண்டுசெல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்று நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு கல்விக் கொள்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. ராஜீவ் காந்தி கல்விக் கொள்கை, பிர்லா – அம்பானி கல்விக் கொள்கை, தற்போது அமலாகிக்கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 உள்ளிட்ட அனைத்துமே தமிழ்நாட்டின் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் திறன் மேம்பாடு (Skill Development) என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட் கல்விக் கொள்கையாகத்தான் உருவாகியுள்ளன. முந்தைய மெய்நிகர்க் கூட்டத்தில் பழம்பெருமை, பாரம்பரியம் இரண்டையும் எவ்வாறு பாஜக அரசு கையிலெடுத்து மிக நாசூக்காக வேலை செய்துகொண்டுள்ளது என்று பேராசிரியர் யோகராஜன் மிக அருமையாக எடுத்துரைத்தார். NCF குறித்த விவரங்களை AISEC அமைப்பு தமிழில் வெளிக்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி என எல்லாவற்றிலும் மிக அழகாகத் திட்டமிட்டு, பாஜகவினர் செயல்படுத்திக்கொண்டுள்ளனர் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ஹிட்லர் உயிரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எதற்காக என்றால், கண், இமை, முடி இவற்றையெல்லாம் வைத்து ஒரு பாசிச வெறியை, வெறுப்புணர்வை யூதர்கள் மேல் வைத்து, அவர்களைக் கொலை செய்யும் அளவிற்குத் தூண்டும் வகையில் உயிரியல் பாடம் கற்பிக்கப்பட்டது. நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களுக்குப் போதிக்கப்பட்டது. முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் ஆற்றிய உரையை நாம் மிகச் சாதராணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. NCFஇன் அடிப்படை என்பது மிகவும் ஆபத்தானது. அத்தியாயம் 3இல் மொழிக்கொள்கை பற்றியும் அத்தியாயம் 4இல் கல்வியியல் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஹோசிமின் திலகர், இன்று நம்மிடையே அவற்றின் பின்னணியையும் பேசவுள்ளார். நான் இதை வாசிக்கும்போது மூன்றாம் அத்தியாயத்தில் ஒரு ஆபத்தான சொல்லாடலைக் கையாள்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டேன். காந்தியடிகள், தாகூர் போன்றவர்களெல்லாம் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தியது பற்றி நமக்குத் தெரியும். 1966 கோத்தாரி கல்விக் கொள்கை குறித்து யோகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார். அக்கோத்தாரிக் குழு அறிக்கையில் தாய்மொழி வழிக் கல்வி குறித்து வலியுறுத்தப்பட்டது. தாய்மொழி வழிக்கல்வி என்று சொன்னார்களே தவிர, வீட்டு மொழி (Home Language) என்று அங்கே சொல்லப்படவில்லை. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோத்தாரி கூறினார். கல்லூரி வரையிலும் – பட்ட வகுப்புகள் வரை அது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 1970களில் பட்ட வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது முடங்கிப் போயிருக்கிறது. நான் தமிழ் வழியிலேயே இயற்பியல் பாடம் கற்பித்தேன். தமிழ் வழியிலேயே முதுநிலை வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்கள் எல்லாம் எழுபதுகளில் இருந்தன. இன்று எல்லாமே வணிகமயமாகவும் தாய்மொழிக் கல்வியைப் புறந்தள்ளும் நிலைக்கும் மாறியுள்ளன. NCFஐ உற்றுநோக்கினால், இதன் அடிப்படையாக மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் உள்ள குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்க வேண்டும், எவ்வாறு உருவாக்க வேண்டும், பிறந்த உடனேயே அந்தக் குழந்தைகள் எதைச் சொல்ல வேண்டும், எதை உச்சரிக்க வேண்டும்? எந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்று அழுத்தம் கொடுக்கப்பட இருக்கிறது. இவை குறித்தெல்லாம் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மூன்று வயதிலிருந்தே பள்ளிக்கூடம், வகுப்புகள், பாடமுறை என்று பேசுவதைக் குழந்தைகள் மீதான வன்முறையாகப் பார்க்கிறேன். முக்கியமாக, மொழியைப் பொறுத்தவரை L1, L2, L3 என்று பிரிக்கிறார்கள். Home Language, Mother tongue பின்பு Familiar language என்று குறிப்பிடுவது விந்தையாக உள்ளது. Home Language என்பதை ஹிந்தி என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறிவிடலாம். தாய்மொழிக்கு இரண்டாமிடம் கொடுக்கிறார்கள். இந்த மூன்று மொழிகளையும் கற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இதற்காகப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அடுத்து, கல்வியியல் திட்டங்கள், அவற்றின் அமலாக்கங்கள், கலைத் திட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. நாம் மிக ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 1986 கல்விக் கொள்கை தொடங்கி, தனியார்மயத்துக்கு எதிராகப் போராடிய அமைப்பு கல்விப் பாதுகாப்புக் கமிட்டி. Delinking degree from job என்பதைப்பற்றி அன்று நாம் விரிவாகப் பேசியிருக்கின்றோம். ஹோசிமின் திலகர், யோகராஜன், சுதாகர் மற்றும் மூத்த தோழர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். அந்த Delinking degree from job இப்போது நடந்துவிட்டது. திறன் மேம்பாட்டுப் பாடம் (Skill Development Course) இல்லாத, பரவாத, வேரூன்றாத இடமே இல்லை. மக்கள் கல்விக் கூட்டியக்க மாநாடு குறித்துப் பேச நாங்கள் இரண்டு கல்லூரிகளுக்குச் சென்றோம். இரண்டுமே அரசுக் கல்லூரிகள். அதில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் எங்களிடம் குறைபட்டுக்கொண்டார். அது கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது. பொதுப் பாடத்திட்டத்தை மக்கள் கல்விக் கூட்டியக்கம் எதிர்த்தது. அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியும் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தது. பொதுப் பாடத்திட்டத்தைக் கலை அறிவியல் கல்லூரிகளில் அமல்படுத்தியுள்ளார்கள். அவர் கூறியது என்னவென்றால், ‘தனியார் தன்னாட்சிக் கல்லூரிகளெல்லாம் அவர்கள் விருப்பம்போல் பாடத்திட்டத்தை அமைத்துக்கொள்ளலாம்’ என்று அமைச்சர் சொன்னபடி அமைத்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால் அரசுக் கல்லூரிகளில் இது வலிந்து புகுத்தப்படுகிறது. குறிப்பாக, முதல்நிலைப் பாடத்தில் 4 கோர் (Core) பாடங்கள், உதாரணமாக அறிவியல் பாடத்தை எடுத்துக்கொண்டால் 4 பாடங்கள் வெளியேற்றப்பட்டு திறன் மேம்பாட்டுப் பாடங்கள் உள்ளே நுழைக்கப்பட்டுள்ளன. ஒன்று தெளிவாக இருக்கிறது. ஆளுகின்ற அரசு வேலையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் கல்வியையும் பாடங்களையும் பிரித்தல் (Delink degree from job, Delink Subject from Society) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமூகத்தைவிட்டு இந்தப் பாடங்கள் விலகி இருக்க வேண்டும். சமூக உணர்வையோ சிந்தையையோ உருவாக்குகின்ற வகையில் பாடங்கள் இருக்கக்கூடாது என்று கருதுகிறது. இயற்பியலைக் கற்பிக்கும்போது நீ செய்ய வேண்டியதெல்லாம், அவர்களுக்கு அணுகுண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமே தவிர, அணு சோதனைகள் பற்றியோ அது குறித்து ஐன்ஸ்ட்டீன் பின்னாளில் வருந்தி வெளியிட்ட அறிக்கை குறித்தோ சொல்லக் கூடாது. இவற்றைப் பேசுவதற்கு வகுப்பறைகளில் இடம் இருக்கக்கூடாது. திறன், திறன் (Skill, skill) என்றுதான் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை வந்தபோது நாம் கூட்டம் போட்டிருக்கின்றோம். அதற்கு முன்னால் கஸ்தூரி ரங்கன் அறிக்கை வந்தபோதும் கூட்டம் நடத்தியுள்ளோம். 2016இல் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை வந்தபோதும் கூட்டம் போட்டுள்ளோம். அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக அமுலாக்குவதற்கான மறைமுகமான சட்டங்கள்தான் இந்தக் கட்டமைப்பு (Frame Work) என்றுகூட நான் சொல்வேன். இந்த ஒன்றிய அரசின் பல திட்டங்களை எதிர்ப்பதாக மாநில அரசாங்கம் இப்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டுள்ள திராவிட அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சனாதனத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு நமது முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் பேசிய அந்தப் பாரம்பரியத்தைப் பற்றித் தெரியுமா என்றால், நாம்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். அதுபற்றித்தான் மூன்றாவது

பொது சிவில் சட்டம்தேவையா?

பொது சிவில் சட்டம்தேவையா?

ஆய்வரங்க நிகழ்வுத் தொகுப்பு சுவடு இணைய இதழ் மற்றும் இந்திய சமூக நீதி ஊடக மையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பொது சிவில் சட்டம் தேவையா?’ என்ற ஆய்வரங்கம், கடந்த ஆகஸ்டு 12, சனிக்கிழமையன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள MEET அரங்கத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியர் அரிபரந்தாமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தோழர் வாலாசா வல்லவன், சமூக சமய ஆய்வாளர் ஹமீது ஹுசைன் ஆகியோர் இந்த ஆய்வரங்கில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேசிய தோழர் ஹமீத் ஹூசைன், இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்பட்ட வரலாறு, அதன் பின்னணி, பொது சிவில் சட்டம் என்று கூறப்படுவதன் அரசியல் நோக்கங்கள், பசுவதைத் தடுப்புச் சட்டம், முத்தலாக், பாபர் மசூதி, ஞானவாபி மசூதி போன்ற பிரச்சினைகளைப் பற்றியும் சமகாலத்தில் முஸ்லீம்கள் சந்தித்து வரும் ஒடுக்குமுறைகள் பற்றியும் ஒன்றிய அரசு இசுலாமிய மக்களைக் குறிவைத்துத்தான் இந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டுவருகிறது, சில சட்டங்களைத் திருத்துகிறது என்றும் இத்தகைய வேலைகளில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்துகிறது என்று தமது உரையில் குறிப்பிட்டுப் பேசி, இன்றைய சூழலில் பொது சிவில் சட்டத்தை எந்தக் காலத்திலும் ஏற்க முடியாது என்ற கருத்தை முன் வைத்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து தோழர் வாலாசா வல்லவன் பேசும்போது, 1939ஆம் ஆண்டு முதல், சுதந்திர இந்தியாவில் அண்னல் அம்பேத்கர் ஆற்றிய சட்டச் செயல்முறைகள் பற்றிய செய்திகளையும் அன்றைய காலகட்ட நிகழ்வுகளின் வரலாறுகளையும் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கான சட்டங்களை இயற்றுவதற்கு அம்பேத்கர் முன் நின்ற பெரும் சவால்கள், அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகியது வரை பல வரலாற்றுச் செய்திகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிப் பேசியதுடன், பாஜகவின் மூன்று முக்கிய நோக்கங்களான காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, ராமர் கோயில் கட்டுவது ஆகிய இரு நோக்கங்களை நடைமுறைப்படுத்திவிட்டார்கள் என்பதையும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து அவர்களின் மூன்றாவது நோக்கமான பொது சிவில் சட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார். அடுத்து உரையாற்றிய தோழர் தியாகு, இந்து கூட்டுக் குடும்பச் சட்டம், அதனை முன்வைத்து நிகழ்த்தப்படும் வரி ஏய்ப்புகள் என பொருளியல் பின்புலத்தில் இயங்கும் சட்ட நடைமுறைகள் மீதான விமர்சனத்துடன் தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து, பிற மதத்தினருக்கு கூட்டுக் குடும்பச் சட்டம் இல்லாமை, குற்றவியல் சட்டங்களும் திருமணம், சொத்துரிமை தவிர்த்த இதர சிவில் சட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவாக இருப்பதையும் சட்டம் குறித்த கருத்து கேட்கும்போதே பழங்குடிகளுக்குச் சட்ட விலக்கு என்ற உள்துறை அமைச்சரின் வாக்குறுதி ஆகியவற்றையும் சுட்டிக்காட்டிக் காட்டியதுடன் இதைப்போன்ற செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள, சமூகப் பொருளியல் அழுத்த விளைவுகள் ஆகியவற்றையும் அழுத்தமாக எடுத்து வைத்து, இசுலாமியர்களின் வாழ்க்கையையும் இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டுப் பேசி, இந்து ராஜ்ஜியம் என்ற நோக்கத்தின் வெளிப்பாடே இந்தப் பொதுசிவில் சட்டம் என்று பேசினார். நிறைவாகப் பேசிய நீதியர் அரிபரந்தாமன், பொது சிவில் சட்டம் குறித்துத் தொடர்ந்து பேசுபவர்கள், அதற்கான வரைவுகூட முன்வைக்கபடாத நிலையிலேயே விலக்கு குறித்துப் பேசுவதையும் வடகிழக்கு மாநிலங்களில் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் இசுலாமியர்கள் மீது மட்டும் பாகுபாடு காட்டப்படுவதையும் சிறுபான்மை மக்களுக்குள்ளும் இசுலாமியர்கள் தனித்துக் குறி வைக்கப்படுவதையும் குடும்பம், சொத்து தொடர்பான வழக்குகளிலும்கூட நீதிமன்றங்களுக்கு வரும் வழக்குகள் பொதுச் சட்டங்களின் அடிப்படையிலேயே விசாரிக்கப்படுகின்றன என்பதையும், சிறுபான்மையினர் தொடர்பான சில வழக்குகளில் பெரும் முரண்பாடாக மனுநீதி கோலோச்சுவதையும் அம்பலப்படுத்திப் பேசினார். திருமணச் சட்டங்களில்கூட வயது வரம்பு, வரதட்சணை போன்ற அம்சங்கள் ஒப்பீட்டளவில் இந்துக்களால்தான் அதிகம் மீறப்படுகின்றன என்ற புள்ளிவிவரங்களையும் முன்வைத்தார். உலகின் பல்வேறு நாடுகளிலும் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட நடைமுறைகளையும் குறிப்பிட்டு, சிறுபான்மையினருக்கு இருக்கும் அச்ச உணர்வுகள் நீங்கி, காலப்போக்கில் உருவாகும் சமூக மாற்றங்களால், அனைத்து சிறுபான்மையினரையும் உள்ளடக்கிய (inclusive) சமூகமாக இந்தியச் சமூகம் மாறும் காலத்தில், பொது சிவில் சட்டம் இயல்பாகவே நடைமுறைக்கு வந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, நமது இலக்கு அத்தகைய நல்லிணக்கச் சமுதாயத்தை உருவாக்க வேண்டியதாக இருக்க வேண்டுமேயன்றி, வலிந்து திணிக்கும் சர்வாதிகாரத்தால் பொது சிவில் சட்டம் என்ற கருத்துக்குக்கூட ஆதரவு பெற முடியாது என்று கூறி முடித்தார். சிறுபான்மையினர் பாதுகாப்புப் பேரவையின் தலைவரும் சுவடு இணைய இதழின் நிர்வாக ஆசிரியருமாகிய சுவடு மன்சூர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். சுவடு இணைய இதழின் ஆசிரியர் நல்லு இரா. லிங்கம், இந்திய சமூக நீதி ஊடக மையத்தின் நிறுவனத் தலைவர் பவா சமத்துவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் ஆர்க்காடு ராஜா முஹம்மது நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். பத்திரிகையாளர் பீட்டர் பால்ராஜ் நன்றிகூறி நிகழ்வை நிறைவு செய்தார். நிகழ்வில் சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பரந்த இந்த நிலப்பரப்பில் ஏராளமான இன, மொழி, பண்பாட்டு, பழக்கவழக்க, ஆட்சி முறை வேறுபாடுகள் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த அந்த இந்தியாவும்கூட இன்று இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பல பகுதிகள் இன்றைய இந்தியாவில் இல்லை. அப்போது ஆங்கிலேயர் வசமில்லாத சில பகுதிகள் இப்போது இந்தியாவுடன் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்கூட, இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகளும் முழக்கங்களும் போராட்டங்களும் எழாமல் இல்லை. ஆனாலும்கூட, காலச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, வேற்றுமைகளைப் புறந்தள்ளித்தான் இந்திய ஒன்றியம் இதுகாறும் நிலைபெற்று இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், பாரதிய ஜனதா கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும், தொடர்ந்து பொதுக் குடிமைச் சட்டம் – Uniform Civil Code என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்திலேயே, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பார்சிகள் தவிர்த்த அனைவரையும் இந்துக்கள் என்ற வட்டத்தில் அடைத்ததன் மூலம், பல்வேறு பண்பாடு, பழக்கவழக்க, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்த சமூகங்களின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பது, இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கக் கூடும் என்பதை அவர்கள் உணர முற்படவேயில்லை. இந்தச் சூழலில், 2014இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. முந்தைய சட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு, பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்று கூறிய பிறகும், தற்போது அமைந்துள்ள 22ஆவது சட்ட ஆணையம்,  பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துவரும் சூழலில், இந்தக் கருத்துக் கேட்பு, நாளையுடன் (ஜூலை 14) முடிவடைகிறது. தமிழக அரசின் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் மு. நாகநாதன், இந்தியா சட்ட ஆணையம் அமைத்துள்ள குழுவிடம், பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்ற தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் மு. நாகநாதன், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சட்ட ஆணையத்திடம் வழங்கிய கருத்துரு: பொது சிவில் சட்டத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்காக எனது கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்கிறேன். 1. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது, பல்வேறு இன, மொழி, மதங்கள் கொண்ட இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும். 2. பன்முகத்தன்மையில்தான் இந்தியா வாழ்கிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும்கூட, பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்; வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள்; வெவ்வேறு உணவுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான திருமண முறைகள் உள்ளன. இந்தத் திருமண முறைகளும் கிராமத்திற்கு கிராமம் மற்றும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்ற பெயரில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு காரியம். 3. மாபெரும் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனரும் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படுபவருமான டாக்டர்.சி.என்.அண்ணாதுரையின் கருத்துகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் இனம் மற்றும் தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாசாரத்தை உறுதிப்படுத்த, அவர் தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கொண்டிருந்தார். இருப்பினும், 1962இல், சீனாவுடனான எல்லைப் போரின்போது, பிரிவினைக்கான கோரிக்கையை அவர் ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் ஜவஹர்லால் நேருவை முழு மனத்துடன் ஆதரித்து, தேசத்தின் ஒற்றுமைக்காக உடன் நின்றார். 4. ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில், தமிழ்நாடு ஒருபோதும் தனது தனித்துவத்தைப் பலியிடாது என்றும் அண்ணா கூறியிருந்தார். 5. 1967இல் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ‘தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் தொடர்கின்றன’ என்பதை, அண்ணா தனது சட்டமன்ற உரையில் நினைவூட்டினார். எவ்வாறாயினும், நாட்டில் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அனைத்து அரசியல் தலைவர்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் தற்போதைய அடிப்படை சமூக – பண்பாட்டுக் கட்டமைப்பிற்கு எதிரான எந்தவொரு சட்டத்தினாலும் ஒற்றுமையை கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. 6. எந்தவொரு பொதுவான சட்டத்தின் பெயராலும், இந்தப் பன்முகத்தன்மைகளை ஒருபோதும் சிதைக்கக்கூடாது. 7. 1963இல் அண்ணா தனது உரையில், “இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிடுவதில்லை. நம்மிடம் ஒரு கூட்டாட்சி அமைப்பு உள்ளது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்புக்குப் பதிலாக, கூட்டாட்சிக் கட்டமைப்பை விரும்பினர். ஏனெனில் பல்வேறு அரசியல் தத்துவ அறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி, இந்தியா மிகவும் பரந்தது. உண்மையில் இது ஒரு துணைக் கண்டம் என்றே குறிப்பிடப்படுகிறது. மக்களின் மனநிலைகள் மாறுபட்டவை.  மரபுகள் மிகவும் வேறுபட்டவை. வரலாறு மிகவும் மாறுபட்டது. இங்கு ஆதிக்கம் மிக்கதொரு ஒற்றையாட்சி அமைப்பு இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 8. அண்ணாவின் கருத்தில் உள்ள அதே பார்வையை, நோபல் பரிசு பெற்ற டாக்டர். அமர்த்தியா சென் தனது ‘The Argumentative Indian’ என்ற புத்தகத்தின் முன்னுரையில், இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்தியா என்பது மிகப்பெரும் வேறுபாடுகளைக் கொண்ட, பலவேறுபட்ட நோக்கங்கள், பரந்த அளவில் வேறுபட்ட நம்பிக்கைகள், பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான சிந்தனைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நாடு.” 9. இந்தப் பின்னணியில், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தையும் அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, “வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தில் ஊறிப்போயுள்ளது. தெற்கு முற்போக்குப் பாதையில் பயணிக்கிறது. வடக்கில் மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. தெற்கில் பகுத்தறிவு பரவியுள்ளது. தெற்கு கல்வியில் முன்னோக்கிப் பயணிக்கிறது. வடக்கு கல்வியில் பின்தங்கியுள்ளது” என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். நான் வழக்கமானதொரு சந்திப்பிற்காக திரு.ராஜகோபாலாச்சாரியாரிடம் சென்றேன். அதுதான் அப்போதைய நடைமுறை. அத்தகைய ஒரு சந்திப்பில், அரசமைப்புச் சபை உருவாக்கும் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி திரு.ராஜகோபாலாச்சாரி  குறிப்பிடுகையில், “நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கொண்ட, இந்தியா முழுமைக்குமான ஒரு கூட்டமைப்பு சரிவராது. அப்படிப்பட்டதொரு கூட்டமைப்பில், இந்தியப் பிரதமரும் குடியரசுத் தலைவரும் எப்போதும் இந்தி பேசும் பகுதியிலிருந்துதான் தேர்வுசெய்யப்படுவார்கள். இங்கே, வடக்கில் ஒரு கூட்டமைப்பும் தெற்கில் ஒரு கூட்டமைப்புமாக இரண்டு கூட்டமைப்புகள் இருக்க வேண்டும். மேலும் வடக்கு மற்றும் தெற்குக் கூட்டமைப்புகள் இணைந்து, சமமான பிரதிநிதித்துவத்தோடு  சட்டமியற்றுவதற்கு மூன்றாவது கூட்டமைப்பும் வேண்டும்” என்று கூறினார். இவைதான் திரு.ராஜகோபாலாச்சாரியின் சிந்தனைகள். ஒரு உண்மையான காங்கிரஸ்காரரின் ஆழ்மனத்தில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் இவை. நான் இப்போது, இந்தியா வடக்கு மற்றும் தெற்காக உடைவதை முன்னறிவிக்கும் தொலைநோக்காளராகவே திரு.ராஜகோபாலாச்சாரியைக் கருதுகிறேன். அவரது துல்லியமான கணிப்பைப் பொய்யாக்குவதற்கு நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். 10. அமெரிக்காவில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் உள்நாட்டுப் போர் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம். காலம், அத்தகைய மோதலுக்குப் பல காரணங்களை வழங்கும். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பரந்த பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன என்பதையும் அவை எளிதில் பற்றி எரியக்கூடியவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 11. வடக்கை ஒருங்கிணைத்து, தெற்கைப் புறக்கணிப்பதன் வாயிலாக, ‘இது வெறும் மொழிப் பிரச்சினை அல்ல; ஒரு அரசியல் பிரச்சினை’ என்பதை ஆணையம் உணரவில்லை. இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, சரியான, அறிவுசார்ந்த, இயைந்த அணுகுமுறை அல்ல. இதற்கு என்னதான் தீர்வு? 12. வருந்தத்தக்கது என்னவெனில், 1940களில் சி.ராஜகோபாலாச்சாரி கணித்த விஷயங்களில் ஒன்று, இப்போது மணிப்பூரில் நடப்பதை நாம் காண்கிறோம். ஒற்றுமையின் அடிப்படைக் கோட்பாடுகள், நாட்டு மக்களின் பல்வேறு கலாச்சார, இன, மொழி நடைமுறைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டம், அடிப்படையில் இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களைக் கலந்தாலோசிக்காமல், ஆளும் பாஜக அரசால் தொடங்கப்பட்ட ஒரே மாதிரியான சிவில் சட்டத்தின் முன்மொழிவு, இயல்பிலேயே கூட்டாட்சிக்கு எதிரானது. இது இந்திய ஒற்றுமைக்கு சாவு மணி அடிக்கும். கடுமையான நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு, அச்சுறுத்தலான பல பொருளாதாரப் பிரச்சினைகள் அவசரமாகக் கையாளப்பட வேண்டியுள்ளன. நாட்டில் சமத்துவமின்மை அதிகரிக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது, வறுமை அதிகரித்து வருகிறது, விலைவாசி உயர்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மென்மேலும் ஏழையாகிறான். பொதுக்கடன் அதிகரித்து வருகிறது. வங்கி அமைப்பு நிலையற்ற தன்மையைச் சந்தித்து வருகிறது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே தொடர்ந்து இடைவெளி இருப்பதால், நிதி அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின்படி, பசி மற்றும் வறுமைக் குறியீடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதாவது, 191 நாடுகளில் இந்தியா 132ஆவது இடத்தில் இருப்பதாக UNDP மனித மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அச்சுறுத்தும் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக எதிர்கொண்டு தீர்வு காண, நமக்கு ஒரு அறிவுப்பூர்வமான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. ஒரே மாதிரியான சிவில் சட்ட நடவடிக்கைக்கான முன்மொழிவு விவேகமற்றது மற்றும் தேவையற்றது. இந்தத் திட்டத்தைக் கைவிடுவதே நியாயமான நடவடிக்கையாகும். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பேராசியர் மு.நாகநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை, சட்ட ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்புவோர், நாளைக்குள் தங்கள் கருத்துகளை, membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.  

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

நேற்றைய பதிவின் தொடர்ச்சி. முந்தைய பதிவை வாசிக்க https://naarkaram.com/p-2023-0619-01/ 2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவொரு ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருக்கும் சட்டங்களிலேயே மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது. புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன? இந்தச் சட்டங்கள் காங்கிரசு அரசால் கொண்டுவரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாஜக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் ஆண்டொன்றுக்கு  13 ஊபா வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு  34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான ஊபா வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித் திட்டம் தீட்டுவதற்கான பிரிவு 18 பயன்படுத்தப்படுகிறது.  என்.ஐ.ஏ.வால் புலனாய்வு செய்யப்படும் 357 ஊபா வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18  பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றிலெல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை;  சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஊபா வழக்குகளின் விசாரணை முடிவதற்குக் குறைந்தது மூன்றிலிருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே ஊபாவின் குறி. ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி ஊபா வழக்குகளில் சிறைப்பட்டோரில் 2018இல் 16.32%, 2019இல் 32.08%, 2020இல் 16.88%  பேர் மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர். ஊபா வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57 (2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் ஊபாவில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே. மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கடந்த  2022 அக்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும். ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால், ’குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வழக்கமான சட்ட நடைமுறைக்கு முரணாக, ‘மெய்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல’ என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது ஊபா.  ஊபா சொல்லும் ‘அதிருப்தி’ என்றால் என்ன? இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை அரசுக்கு வழங்குகிறது. அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய நபர்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது. இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ அல்லது தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ அல்லது இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால், அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம். யாரைத்தான் விட்டுவைத்தது ஊபா? மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கில், கனிம வளங்களைக் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு எதிராக, பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்குத் துணை நின்றவர்கள்,  தலித் மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டனர். நாடறிந்த மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர்கள்,  கலைஞர்கள்,  பேராசிரியர்கள், அருட்தந்தை ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன் நோய்க்கு ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது. பீமா கோரேகான் வழக்கில் மூன்று முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு புதிய புதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்லச் சதி செய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால்,  குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாகச் சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருன்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித், சர்ஜீல் இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா ஜார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நர்வால், அசிப் இக்பால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா உள்ளிட்ட மாணவர்கள் ஊபாவின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர். ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராஜ்தீப் சர்தேசாயும் வினோத் கே ஜோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைத் திறனாய்வு செய்ததற்காக அரச துரோகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத் ஜாக்ரா, பீர்சாடா ஆசிக் ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்மீது ஊபாவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக் கப்பான்மீது உத்தரபிரதேச அரசு ஊபா பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது. பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின்போது அவர்கள் மீது ஊபாவின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு. அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்களும் தனியார் சுரங்க நிறுவனங்களும் சட்ட விரோதச் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள் மற்றும் பிற பழங்குடிகளை  இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். ஜார்க்கண்டின் மஸ்தூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்துகொண்டிருக்கிறது. எந்தக் குற்றமானாலும் இஸ்லாமியர் என்றால் ஊபா பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இஸ்லாமிய இளைஞர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றமற்றவர் என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்காக வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் ஊபா பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தெலங்கானாவைச் சேர்ந்த  9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் என ஊபா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களைச் சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இஸ்லாமியர்கள் ஒருபக்கம். இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாப், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொரு பக்கம். இந்துத்துவத்தின் கார்ப்பரேட் கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்சல்பாரி அமைப்பினர்,  உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொரு பக்கம். இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலைப் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஊபா கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19  வழங்கியுள்ள அடிப்படை உரிமை இதுவாகும். இதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஊபா சட்டம் அமைந்துள்ளது. மேலும் ஊபா சட்டத்தில் உள்ள பிரிவுகள் 35, 36 ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும்  அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். உறுப்பு 19 மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முன்வைக்கும் உறுப்பு 14, வாழ்வுரிமையையும் ஆள்வகைச் சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் உறுப்பு 21 ஆகியவற்றிற்கும் எதிரானதாகும். பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் என்.ஐ.ஏ. 2008இல் இச்சட்டம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. எல்லை கடந்த பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்தின் பின்னணியில் எல்லா நாடுகளைப்போல நாமும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று காங்கிரசு வாதாடியது. தேசப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஓர்மைக்கும் ஊறு செய்யக்கூடிய குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் தண்டிக்கவும் என்.ஐ.ஏ. நிறுவப்பட்டது. அதாவது, மாநில அரசின் ஆட்சிப்புலத்திற்குள் நடக்கும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதை, ஒன்றிய ’காவல்துறை’க்கு மாற்றிவிட வழிவகுக்கும் சட்டம் இது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. காவல்துறை என்பதும் மாநில அரசின்கீழ் வருகிறது. ஒன்றிய அரசு என்.ஐ.ஏ. என்றொரு புலனாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. என்.ஐ.ஏ. சட்டத்தில் பட்டியலிடப்பட்ட சட்டப் பிரிவுகளில் ஊபா சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 2021ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. 2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள்,  வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட என்.ஐ.ஏ. சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டுவரப்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு எந்தத் தெளிவான காரணமும்  சொல்லப்படவில்லை. இவற்றை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் நிறுவனங்களும் இருக்கும்போது மாநில உரிமைக்குள் மூக்கை நுழைத்து அவ்வழக்கை என்.ஐ.ஏ. எடுத்துக்கொள்வதற்கு வழிசெய்யவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. தொடங்கப்பட்டு வெறும் 15 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் இதன் இந்துத்துவ அரசியல் சார்பு அம்பலப்பட்டு நிற்கிறது. இந்துத்துவப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் புலனாய்வில் குற்றவாளிகளிடம் மென்மையான போக்கைக் கடைபிடிக்குமாறு என்.ஐ.ஏ.வால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதென அவ்வழக்கை  நடத்திய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சலைன்  2015 ஜூன் 25 அன்று தெரிவித்தார். இவ்வாறாக, ஊபா சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மக்கள் அமைப்பாகத் திரள்வதையும் தடுக்கிறது. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் தங்களைக் குற்றமற்றவர்கள் என உறுதிப்படுத்த வேண்டும் என்பது எவர்மீதும் பொய்யான குற்றச்சாட்டைப் பதிவு செய்து, அவர்களை முற்றாக முடக்கிச் சிறையில் அடைத்துவிட வழிவகை செய்கிறது. என்.ஐ.ஏ. அமைப்பானது ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் துணை போவதாகவும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. இந்தச் சூழலில், முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இவ்விரண்டுக்கு எதிராகவும் இவற்றை முற்றாக அகற்றவும் குரல் எழுப்புவதும் செயல்படுவதும் தற்போதைய முக்கியத் தேவையாகும்.

வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

மகாபாரதத்தில் ஒரு காட்சி:அர்ஜுனன் அம்பு எய்யப் பழகிக் கொண்டிருக்கிறான்.துரோணர் கேட்கிறார், “மரம் தெரிகிறதா?”“இல்லை”“மரத்தின் கிளை தெரிகிறதா?”“இல்லை”“கிளையில் இலையின் அசைவுகள்?”“தெரியவில்லை குருவே”“கிளையில் அமர்ந்திருக்கும் குருவியாவது தெரிகிறதா?”“மன்னித்துக் கொள்ளுங்கள் குருவே. குருவியும் தெரியவில்லை”துரோணருக்கு ஆச்சரியம்.“பிறகு என்னதான் தெரிகிறது அர்ஜுனா?”“நான் வீழ்த்த வேண்டிய குருவியின் தலை மட்டும் தெரிகிறது”பெருமை தொனிக்க துரோணர் சொல்கிறார்:“அம்பினை விடுக” அப்படித்தான் பாஜக-வை வீழ்த்தக் குறி வைப்பதற்காக இந்தியாவின் பெரும்பாலான எதிர்கட்சிகள் வருகின்ற ஜுன் 23 அன்று பாட்னாவில் சந்திக்க இருக்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், டெல்லியிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிவசேனாவின் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். சமீபத்திய கர்நாடகத் தேர்தல் வெற்றியும் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையும் காங்கிரசிற்கு உத்வேகம் அளித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் மேலே சொன்ன தலைவர்கள் அனைவருமே அவரவர் மாநிலங்களில் தங்களுக்கென வாக்கு வங்கியைக் கொண்டவர்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து பாஜக-விற்கு எதிராகப் பொது வேட்பாளரை நிறுத்த முடியுமா என்பது மில்லியன் டாலர் வினா. அனைவருமே தோளில் கை போட்டு, காலை வாரி விடுவதில் கை தேர்ந்தவர்கள்தான். இருப்பினும் ‘நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் மதவெறிக்கு எதிராக, மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்’ என்ற புரிந்துணர்வு மட்டுமே, அவர்களுக்கு 2024 தேர்தலில் பாஜக என்ற குருவியின், இல்லையில்லை, வல்லூறின் தலையை மட்டும் பார்க்க வைக்கிறது. ஆம், வல்லூறுதான். இந்தியாவில் பாஜக தவிர வேறு கட்சிகளை ஒழித்துவிட்டு, பாஜக மட்டுமே ஒற்றைக் கட்சியாக இருக்க வேண்டும். ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே பண்பாடு என எல்லாவற்றையும் மதவாதம் என்னும் ஒற்றைச் சித்தாந்தத்தக் குடையின்கீழ் கொண்டுவரத் தீவிரமாகச் செயலாற்றி வரும் ஒன்றிய வல்லூறு. ஜனநாயகத்தின் சிறப்பே, வலிமையான எதிர்க்கட்சி என்பதுதான். எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியல்ல; ஆளும் கட்சி தவறிழைக்கும்போது அதைச் சுட்டிக்காட்டி, சரிப்படுத்திச் செல்ல உந்தும் ஒரு அமைப்பு முறை. எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த ஆட்சியின் ஒற்றுமையையும் சிறிது காலத்திற்குப் பின்னர் வந்த வி.பி.சிங் ஆட்சியையும் இங்கே கவனத்தில் கொண்டால், இந்திய ஜனநாயகம் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு மதிப்பளித்திருந்தது என்று புரிந்துகொள்ள முடியும். அதேபோல கூட்டணி ஆட்சிமுறையில் குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆட்சி முறை. இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அதிகம் இருந்த நாட்களையும் அவர்கள் குறைந்துபோய், பாராளுமன்றம் என்பதே ஒரு கேலிக்கூத்து ஆகிவிட்ட இந்தக் காலத்தையும் ஒப்புமைப்படுத்தி தற்போது என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களும் அவற்றை வழிநடத்திய காட்சிகளும் இருப்பதுதானே ஜனநாயகம்? ஒரு குறிப்பிட்ட மதத் தலைவர்கள், அவர்களுக்கு மாபெரும் ஓவியங்கள், சிலைகள் வைத்து, இந்தியா மதரீதியான நாடாக நிறுவ முயற்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இவற்றையெல்லாம் ஒற்றுமையுடன் மக்களிடம் கொண்டு சேர்த்து, மதவாதப் பொது எதிரியை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்கும் களமாக எதிர்க்கட்சிகள் சந்திப்பு இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு எப்படி இருக்கும், ஒரே நாளில் புரிதல் வருமா, பிரதமருக்கான பொது வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியுமா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்கென்று இருக்கும் கெத்து, ஈகோக்களை விட்டுக்கொடுத்து,பொதுவான கருத்தொற்றுமையை யார் உருவாக்கப்போகிறார்கள், இவர்களை ஒன்றிணைப்பவர்களாக யார் யாரை முன்னிறுத்தப்போகிறார்கள் என்பதெல்லாம் பெரிய விவாதப் பொருள்களாக இருக்கப்போகின்றன. முதல் சந்திப்பின் தலைவர் என்பதாலேயே நிதிஷ்குமார்தான் தலைமை என்று சொல்ல முடியாது. எல்லா மாநிலங்களுக்கும் ஜாதா சென்றதாலேயே ராகுலை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்ல முடியாது. ராகுல் காந்தி பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக நாட்கள் நடக்கவில்லை; குறைந்த அளவு நகரங்களையே தேர்வு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வர் பெயர் நாடு முழுவதும் பரவியுள்ளது; திராவிட மாடல் குறித்து அனைவரும் பேசுகின்றனர் என்றாலும் வட இந்தியத் தலைவர்கள் எந்த அளவு மதாராஸியை நம்புவார்கள் என்பதைக் கணிப்பது கடினம். இவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பாக இடதுசாரிகளைத்தான் காணமுடிகிறது. ஆனால் மற்றவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள், முக்கியமாக மம்தாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அனைவரும் சேர்ந்து அந்தந்த மாநிலங்களில் தாங்களே தேர்தலைச் சந்தித்துக் கொள்ளலாம்; மாநில அளவில் எதிர்ப்பு அணியை உருவாக்கிக் கொள்ளலாம்; தேர்தல் முடிந்த பிறகு தலைமையைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று கருதுவார்களேயானால், அது எந்த அளவிற்கு சாதகமாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கலாம். அதற்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு பற்றி பாஜக தலைவர்கள் கூறியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. பாலம் இடிந்துபோன பாட்னாவில் கூடுகிறார்கள்; அந்தப் பாலம் போலவே இடிந்துவிடப் போகிறது என்று கூறியுள்ளார் ஸ்மிருதி இரானி. ஆனால் அவர் சொல்ல மறந்தது, அந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுத்ததும் கடந்த முறையும் இடிந்து விழுந்ததைச் சரி செய்ததும் ஒரு குஜராத் கம்பெனி என்பதை. இதே நேரம் தமிழ்நாட்டில் வேறொரு முயற்சி நடைபெற்று வருகிறது. எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்பதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இங்கே எதிரியின் எதிரியைப் பிளவுபடுத்தி அழிக்கும் வேலையை பாஜக செய்ய ஆரம்பித்துள்ளது. நாம் மேலே சொன்ன எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவத்தை இங்கும் பொருத்திப் பார்க்கலாம். டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் புதிதாகக் கூட்டணி சேர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வைக் கைப்பற்றப் போவதாகக் கூறுகிறார்கள். ஓபிஎஸ் ஏற்கெனவே பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்டவர். பாஜக, தான் நினைத்ததைச் சாதிக்க வசதியாக எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த நினைக்கலாம். அதன்மூலம் தற்போது உருவாக்க முயன்றுவரும், தானே பிரதான எதிர்க்கட்சி என்ற மாயத் தோற்றத்தை நிலைநிறுத்த நினைக்கலாம். தற்போதைய எதிர்க்கட்சியை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான விதையை பாஜக ஊன்றுகிறது. அதற்கு, அமைப்பு ரீதியாகவும் சட்டரீதியாகவும் பலவீனமானவர்கள், ஒரே இடத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நேற்றுவரை எதிரெதிராக இருந்தவர்கள், ஒருவர்மீது மற்றவர் மாறி மாறி துரோகி முத்திரை குத்தியவர்கள், திடீரென ஒன்றாகச் சேர்ந்துகொண்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள். இதை ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அதிமுக-வின் வீழ்ச்சி தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் கவலைக்குரிய விசயம் என்னவெனில், ஆளும் கட்சியான திமுகவும் பாஜகவின் இந்த முயற்சிக்கு உரம் கொடுத்து உதவுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அண்ணாமலையைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை, தொழிற்கொள்கை, அதிகாரிகடம் குவிக்கப்பட்ட நிர்வாக அதிகாரம் போன்றவற்றைச் செயல்படுத்துவதில் ஒன்றிய அரசை விடவும் தீவிரம் காட்டுவதும் நமக்கு திமுகவின் மேல் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. கவர்னர் பதவியை ஒரு கட்சியின் தலைவர் பதவிபோல நடத்திக்கொண்டிருக்கும் போக்கு ஒரு தனி ஆவர்த்தனம். நாடு தழுவிய எதிர்ப்பு அணியில் இதன் தாக்கம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் மேற்கண்ட எதிர்க்கட்சிகள் சந்திப்பை திமுக எப்படிக் கையாளப்போகிறது என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் சொன்னதுபோல் ஒரு சிட்டுக்குருவி தற்போது வல்லூறாக மாறி, மரத்தில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் இரையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. பாட்னா சந்திப்பில் எல்லாரும் சேர்ந்து வல்லூறை வீழ்த்துவதை இலக்காகக் கொள்வார்களா அல்லது வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டு வல்லூறின் இலக்குக்கு இரையாவார்களா என்பதை வருங்காலம் நமக்கு உணர்த்தும். ஜுன் 23க்காகக் காத்திருப்போம்.

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

ஆசிரியர் சங்கங்கள் பெரும் சாபக்கேடு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக, 2021இல் திமுக அரசு கொடுத்த தேர்தல் அறிக்கையை உற்று கவனிப்போமானால், கல்வித்துறையைப் பொறுத்தவரை முதல் வாக்குறுதியாகக் காணக் கிடைப்பது  அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்ததாக, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் சமூக நீதி மற்றும் மொழிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை அழித்தொழிப்பதாக அமைந்துள்ளதால், திராவிட முன்னேற்றக் கழகம் அதனை முற்றிலும் நிராகரிக்கிறது என்பது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் அதீத நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட்ட மனநிலைக்குச் சென்றதென்னவோ உண்மைதான். ஆனால் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர என்ன மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தெரியவில்லை; தெளிவுமில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரை அரசு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்தாலும்  நாம் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா எனில் அது ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது. ஏனெனில் கல்விக்காகப் பல நல்ல திட்டங்களை இந்த அரசு  கொண்டு வந்ததாகக் கூறினாலும் அந்தத் திட்டங்கள் பலவும் ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை மையப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்பதாகக் கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தற்போதைய தமிழ்நாடு அரசு செய்வதென்ன?  கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒன்றிய அரசின் அதே தேசிய கல்விக் கொள்கையின் உட்கூறுகள் ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதோ, இந்தக் கல்வியாண்டின் முதல் பயிற்சி. ஆசிரியர்கள் அனைவருக்கும் CPD பயிற்சி, வரும் சனிக்கிழமை (10/06/2023) தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த கல்வியாண்டுக்கு முன்புவரை, 1-10 வகுப்புகளுக்கான 5 பாடம் கற்பிக்கும்  இடைநிலை ஆசிரியர்கள் (SGT) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (B.T) மட்டும் இந்தப் பயிற்சிகள் இருக்கும். கடந்த கல்வியாண்டில் முதுகலை ஆசிரியர்களுக்கும் (PG Teachers) பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி,  பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, காலமுறை ஊதியம் (Regular Pay) வாங்கும் அனைவருக்கும் இந்தப் பயிற்சி, பகுதி நேர ஆசிரியர்கள் தவிர என்று குறிப்பிட்டுள்ளனர்.  அதாவது விளையாட்டு ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், பாட்டு ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே ஊதியம் சார்ந்து ஏதோ மாற்றம் வரப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2019இலிருந்து, புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒவ்வொரு கூறாக தமிழ்நாடு கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று நாம் கரடியாகக் கத்துகிறோம். ஆனால் ஆசிரியர்கள் சங்கத்தினரில் பெரும்பகுதி அதைக் கண்டுகொள்ளவில்லை. பள்ளிக் கல்வி ஆணையர் நியமனம்இல்லம் தேடிக் கல்விஎண்ணும் எழுத்தும்இணையவழி மதிப்பீட்டு முறைகள்கல்வியில் தொழில்நுட்பம்EMIS developmentநம்ம ஸ்கூல் பவுண்டேஷன்தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்நான் முதல்வன் திட்டம்ஃபெல்லோஷிப் நியமனங்கள்பள்ளிகளில் தன்னார்வலர்களை முழுவதும் நுழைத்தல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் கல்வி இப்படியாக NEP-2020இன் எல்லாப் பகுதிகளும் மிக அழகாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளிக்கல்வி ஆணையருக்கு பதிலாக மீண்டும் இயக்குநர் நியமனம் மட்டும் நடந்துள்ளது. மேற்சொன்னவற்றின் நீட்சியாக, கல்விக்கொள்கையில் ஆசிரியர்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள தரவுகளின்படி அவர்களுக்குத் தரப்படும் பயிற்சிகளுக்கு CPD என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை குறுவள மையப் பயிற்சி (CRC- Cluster Resource Centre) என்று அழைக்கப்பட்டு வந்தது, தற்போது CPD ( Continuous Professional Development) தொடர்ச்சியான தொழில்சார் மேம்பாடு என்று மாற்றப்பட்டுள்ளது. கற்பித்தல் பணி செய்யும் ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சி தேவைதான். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது ஊக்க ஊதியம், பதவி உயர்வு என அடிப்படை வாழ்வாதாரத்தில் கை வைப்பதாக மாறப்போகிறது என்பதைத்தான் நாம் இங்கு கேள்விக்கு உட்படுத்துகிறோம். NEP வரைவு 2019இன் படி CPD என்பது, ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு வருடமும் 50 மணி நேரம் திறன் மேம்பாடு பற்றிய பாடங்களை நேரடி வகுப்பாகவோ அல்லது இணைய வழியாகவோ கட்டாயம் கற்க வேண்டும். இந்தப் பாடங்களில் தொடர்ச்சியான மதிப்பீடு இருக்கும். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு 5 வகையான தர மதிப்பீடு (RANK) வழங்கப்படும். Early Teacher (without tenure), Early Teacher (with tenure), Proficient Teacher, Expert Teacher and Master Teacher ஆகிய ஐந்து பிரிவுகளாக ஆசிரியர்கள் தரம் பிரிக்கப்படுவார்கள். இதன் விளக்கத்தை அறிந்துகொள்ள தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை இங்கு தருகிறோம். வரைவு தேசிய கல்விக் கொள்கையில், (பகுதி I) பள்ளிக் கல்வி என்ற தலைப்பில் (5) ஆசிரியர்கள் என்ற உபதலைப்பில் (5.4) பணி மேலாண்மை என்ற உட்பிரிவு உள்ளது. அதில், 5.4.3இன் படி,   தொழில் சார் திறமைகளுக்கு ஏற்ப பதவி மற்றும் ஊதிய உயர்வு, தங்களது நிலை சார்ந்து இல்லாமல் தகுதி உள்ள ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பகுதி IIIஇல் முக்கிய கவனம் பகுதியில், (எண் 19.3) ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முன் தயாரிப்பு மற்றும் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாடு என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை (NEP 2020) நடைமுறைப்படுத்துவது வெற்றிபெற வேண்டுமானால் ஆசிரியர்களின் CPDயை நோக்கிய மிகப்பெரிய முயற்சி தேவைப்படும். இவை 2019இல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளவை. அடுத்து, தேசிய கல்விக் கொள்கை இறுதிப்படுத்தப்பட்ட பிறகு வெளியிட்ட கொள்கைக் குறிப்பில் பின்வரும் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 5.15 தொடர்ச்சியான தொழில் சார் மேம்பாடு (CPD- Continuous Professional Development) என்ற பகுதியில், மிகச் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள் மற்றும் ஊக்கப்படுத்தப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வும் அளிக்கப்படும் இவற்றை வழங்க செயல்திறன் அடிப்படையிலான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 5.17. மிகச் சிறப்பான பணிகளைச் செய்யும் ஆசிரியர்கள் அங்கீகரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் மேலும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். 5.20. ஆசிரியர்களுக்கான தொழில்சார் தர நிலைகள் என்ற தலைப்பின் கீழ், ஆசிரியர்களுக்கான தேசிய தொழில் முறை தர நிலைகளின் (NPST- National Professional Standards for Teachers ) ஒரு பொதுவான வழிகாட்டல் 2022இல் உருவாக்கப்பட்டு, தேசிய கல்விக் கவுன்சில் அதன் மறுசீரமைக்கப்பட்ட புதிய வடிவத்தில் பொதுக் கல்விக் கவுன்சிலின் (GCE- General Education Council) கீழ் ஒரு தொழில் முறை தர நிர்ணய அமைப்பாக (PSSB- Professional Standard Setting Body)  உருவாக்கப்படும். NCERT மற்றும் SCERTகள், பிராந்தியங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்களை உருவாக்கும் மற்றும் வளர்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற அமைப்புகள், தொழிற்கல்வியில் நிபுணத்துவ அமைப்புகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுடன் ஆலோசனை மேடையில் வெவ்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் பங்கு பற்றிய எதிர்பார்ப்புகளையும் அந்த நிலைக்குத் தேவையான திறன்களையும் தர நிலைகள் உள்ளடக்கும். ஆசிரியர்களுக்கான தேசிய தொழில்முறை தர நிர்ணய அமைப்பானது ஆசிரியர்களுக்கான பயிற்சி பாடத்திட்டத்தை வடிவமைக்கும். இது மாநிலங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆசிரியர் தொழில் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களையும் தீர்மானிக்கலாம். இதில் பதவிக்காலம், தொழில்முறை மேம்பாட்டு முயற்சிகள், சம்பள உயர்வு, பதவி உயர்வு மற்றும் பிற அங்கீகாரங்கள் அடங்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு ஆகியவை பதவிக்காலம் மற்றும் மூப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட மாட்டாது ஆனால் தர நிர்ணய அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்சொன்ன அனைத்தும்தான் தற்போது நடைமுறைக்கு வந்துகொண்டுள்ளது. எனில் தமிழக அரசு NEP 2020ஐ நிராகரிக்கிறது என்று நாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்? அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகவே நமக்கு உணர்த்திவிடலாம். புதிய தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்கிறோம் என்று அறிவித்து விடலாம். கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசின் மேற்சொன்ன நிலைப்பாடு குறித்துத் தெரியவில்லையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அறியமுடியவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இருவரும் வெளிப்படையாகக் கூறிய நல்ல விஷயங்களில் இவையும் அடங்குமா எனத் தெரியவில்லை. 2022இல் இதற்கான NPST உருவாக்கப்பட்டுள்ளது. வரைவறிக்கையிலேயே (2019) இதுபற்றி முன்னறிவிப்பு செய்துவிட்டது ஒன்றிய அரசு. எனில் நடவடிக்கை எடுக்காமல், விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது  தமிழ்நாட்டு ஆசிரியர் இனமே. நாம் நமது பணிக்காலத்தை முடித்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்களாக ஆசிரியர்கள் இருப்பதும் எதிர்காலச் சந்ததியினர் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக நியமனம் ஆகவேண்டும் என்ற வேட்கையும் இல்லாதவர்களாக, இயங்காத அமைப்புகளாக சங்கங்கள் மாறியுள்ளது பெரும் சாபக்கேடு.  அரசியல் கட்சிகளுக்கு அடிவருடும் வேலை செய்யும் நபர்களாகவும் சில சங்கவாதிகள் மாறியுள்ளது வெட்கக்கேடு.  ஆசிரியர்கள் சங்கத்தினர் ஆசிரியர்களுக்குத் தெரியாமல் அரசுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துள்ளனரா எனவும் சாமானிய ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில்  சங்க நிர்வாகிகள் 2019இல் வந்த தேசிய கல்விக் கொள்கை வரைவை வாசித்தார்களா அல்லது அதன்மீது விவாதம் எதுவும் நடத்தினார்களா என்ற கேள்வி எழுகிறது. சங்கம் என்பது ஆசிரியர்கள் சமூகத்தின் மிக முக்கியமான  ஆயுதம். ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் வேண்டிய முக்கியக் கடமை சங்கங்களுக்கு உண்டு. இன்றைய ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி எதிர்கால ஆசிரியர்களுக்கும் நம்பிக்கை தரும் அமைப்புகளாக அவை இருக்க வேண்டும். ஆனால் நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் வெற்று அமைப்புகளாகவே அவை இருக்கின்றன. ஆசிரியர்களோ எதற்காகவும் மறுப்போ எதிர்ப்புக்குரலோ பதிவு செய்ய முன்வராத மிக நல்ல மனிதர்கள். மாணவர்களிடம் எப்படி கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்களோ அதேபோல, அவர்களும் அதிகார அடுக்குகளுக்கும் ஆணைகளுக்கும் கீழ்ப்படிந்து நடக்கும் நற்குணம் பெற்றவர்கள் அவர்கள்.  புதிய தேசிய கல்விக் கொள்கைதான் நமது மாநிலத்தில் பின்பற்றப்படுகிறது என்ற உண்மையை, மாண்புமிகு கல்வி அமைச்சர், பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியோ அல்லது அறிக்கை வெளியிட்டோ சுற்றறிக்கை மூலமாகவோ வெளிப்படையாகவே அறிவித்துவிடலாம்.  ஆசிரியர்கள் தங்களைத் தேர்வுகளுக்கும் துறையின் கட்டளைகளுக்கும் தயார் செய்ய ஆரம்பிக்கட்டும். ஐந்து வகையான தர மதிப்பீடு (Rank) அவர்களுக்கு வழங்கப்படட்டும். அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, இன்னபிற அங்கீகாரங்கள் வழங்கப்படட்டும். CPD என்ன செய்யும்? பணி மூப்பின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படை என்றால், அதை நிர்ணயிப்பவர்கள் யார்? இங்கு தகுதி என்பது எது? ஆசிரியர்கள் பெறும் மாநில, தேசிய விருதுகள் போல இதிலும் ஊழல் நிலவுவதா? அதோடு இணைய வழியில் தேர்வு என்பது எத்தனை தூரம்

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

உங்கள் மகன் மெக்கானிக்கல் என்ஜினியரென வைத்துக்கொள்வோம். அல்லது ஏதோ ஒரு பட்டதாரி. படித்து முடித்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் வெறுமனே கையை பிசைந்தபடி இருக்கும் சூழலில், மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கான கடிதம் வருகிறது. மகிழ்கிறீர்கள்; வேண்டிக்கொள்கிறீர்கள்; கனவு காண்கிறீர்கள்; இனி எல்லாம் சுகமேயென ஆனந்தக்கண்ணீரை துடைத்துக் கொள்கிறீர்கள். நேர்முகத்தேர்வில், “எட்டுமாதம் மட்டுமே பணிக்காலம், மாதம் 15000 சம்பளம், எட்டு மாதம் கழித்து நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் சம்மதமா?”யென வினவுகிறார்கள். உங்கள் மகனின் பதில் என்னவாக இருக்கும்? பெற்றோர்களாகிய உங்கள் மனநிலை மற்றும் பதில் என்னவாக இருக்கும்? எனக்குத் தெரிந்த வரை “கிடைத்த வேலையைத் தவற விடாதே. சும்மா இருப்பதைக் காட்டிலும் இது மேல். உள்ளே நுழைந்து விடு பிறகு பார்த்துகொள்ளலாம்” என்பதாகவே இருக்கும். எட்டு மாதப் பணிக்குப் பிறகு வெளியேறி, வேறொரு நிறுவனத்திற்கு இதே எட்டுமாதப் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டி வரும். இப்படியாக எட்டு எட்டாகப் பிரித்துக்கொண்டு 58 வயது வரை, சொற்ப மாதச் சம்பளத்திற்குப் பணி செய்து ஓய்வு பெறுபவர்களும் உண்டு. சம்பளம் மற்றும் பிஎஃப் தவிர வேறு எந்தப் பலனுக்கும் இவர்கள் தகுதியானவர்கள் அல்ல. சில நிறுவனங்களில் பிஎஃப் பணத்திற்கு உத்திரவாதம் கிடையாது. ஒப்பந்தப் பணியாளரெனில், உங்கள் ஒப்பந்தக்காரர் என்ன தருகிறாரோ, அதுவே உங்களுக்கான பிஎஃப் பணம். உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்கள், ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய போக்கைக் கடைபிடித்து வருகின்றன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 5000 பேர் பணிபுரிவதற்கான தேவை இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2000 பேர் மட்டுமே ஆரம்ப கால, நிரந்தரப் பணியாளர்களாக அந்த நிறுவனம் தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள 3000 பேர் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்துக்கொள்ளும். நிரந்தரப் பணியாளரின் வேலையும் தற்காலிகப் பணியாளரின் வேலையும் எந்த மாற்றமும் இன்றி, வேலைப் பளு முதல் வேலை நேரம் வரை ஒன்றாகவே இருக்கும். நிரந்தரப் பணியாளரின் மாதச் சம்பளம் 1,00,000 என வைத்துக்கொண்டால், தற்காலிகப் பணியாளரின் சம்பளம் வெறும் 15000 ஆக இருக்கும். இத்தகைய உழைப்புச் சுரண்டல் மூலமாக அதீத இலாபத்தின் சுவையை அனுபவித்துப் பழகிய முதலாளிகள், நிரந்தர வேலைக்கு நிரந்தரப் பணியாளர்களை ஒரு போதும் நியமிக்க மாட்டார்கள். நிர்வாகத் தரப்பைப் பொருத்தமட்டில் கூறப்படும் காரணங்கள்: நிலையற்ற வியாபாரச் சந்தை. மாறிவரும் தொழிற்நுட்பத்திற்கான முதலீடுகள், போட்டியாளர்கள், உள்நாட்டு வரிகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இத்தகைய பணியாளர்களை நியமித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள். இவை உண்மைதானே என எண்ணும் அதே நேரம், ஈட்டும் இலாபத்தை வளராத மாநிலங்கள் அல்லது வளராத நாடுகளில் முதலீடு செய்து மிகக் குறைந்த மாதச் சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி, உற்பத்தியைத் தொடங்கி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வார்கள். சுருக்கமாகச் சொல்வதனால், வளர்ச்சி என்பது முதலாளிகள் வகையினர்களுக்கு ஆனதாக மட்டுமே இருக்கும். ஏதோவொரு காரணத்துக்காக ஒரு ஆலை மூடப்பட்டாலும், பிற ஆலைகள் இயங்கும்படியான திட்டமிடல் அவர்களுக்குக் கை கொடுத்து விடுகிறது. இத்தகைய தனியார்களின் போக்கைத்தான் அரசுத் துறைகளிலும் அரசு நிறுவனங்களிலும் அமுல்படுத்த, அரசு நினைக்கிறது. இதன் மூலம் பொருளாதரத்தைச் சீர் திருத்தம் செய்துக்கொள்ள முனைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, உள்நாட்டுத் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்துவது, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு ஏற்ற நம்பகத்தன்மையுடன் கூடிய சூழலை உருவாக்கும் திறனற்றுக் கிடக்கிறது. தேவையற்ற சர்ச்சைகள் மூலம் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்க வழி வகுப்பது போன்ற செயல்கள் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவையே ஏற்படுத்தும். அதிகப்படியான நிதி ஒதுக்கப்படும் ராணுவத்தில் இருந்து “சாப்பிட ரொட்டி கூட இல்லை” என, கண்ணீர் மல்கிய ராணுவ வீரரின் காணொளி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராணுவத்தில் காலியிடங்கள் இருந்த போதும் அதை நிரப்பாமல், நான்கு ஆண்டுகள் வரை மட்டும் பணிபுரியவேண்டும்; அதில் 25% பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் என்றால், மீதம் 75% பேரைத் தகுதியற்றவர்களாகத்தானே கருத வேண்டி வரும்.? அவ்வாறு தகுதியற்றவர்களாகக் கருதப்படும் அத்தகைய வீரர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்!? என்ற கேள்வி எழுவதோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் 12 இலட்ச ரூபாய் எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும்? அவ்வாறு ராணுவத்திற்குத் தகுதியற்றவர்களை முன்னணி நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தும்? அந்தப்பணி எத்தகையதாக இருக்கும்? பொருளாதாரப் பின்னணியோ, மேம்பட்ட கல்வித்திறனோ அற்றவர்கள்தானே பெரும்பாலும் ராணுவத்தை தேர்வு செய்கிறார்கள்? அதிலும் மூத்த பிள்ளையெனில் உடன் பிறந்தோரைக் கரைசேர்த்து, தான் கரையேறுவதற்குள் அனைத்தும் கரைந்து விடுமே. அடுத்து எங்கே செல்ல முடியும்? தற்போது அவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறிவருகிறார்கள். அப்படியான வேலை வாய்ப்பு இருக்குமேயானால் எட்டுமாத வேலைத் திட்டத்தை நீக்கி நிரந்தர வேலைவாய்ப்பை பொறியியல் மற்றும் தொழிற்நுட்பம் பயின்ற இளைஞர்களுக்கு அளித்திருக்கலாமே? தெளிவில்லாத திட்டங்களை ஆதரிப்பது என்பது, நம் பிள்ளைகளின் வாழ்விற்கு நாமே சூன்யம் வைத்துவிடுவதாக அமைந்துவிடும். நிரந்தரமான பணிமுறைகளுக்கு நிரந்தரமான பணியாளர்களை அமர்த்துவது ஒன்றே சரியானது. அதற்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை. ஜெகதீஷ் நிதி

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

நீட் தேர்வு இன்னொரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. “மருத்துவம் மட்டும்தான் படிப்பா?”, “ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி நீட்டை நீக்க முடியும்? தேதி குறிப்பிட்டுச் சொன்னார்களா?”, எல்லாம் சட்டப்படிதானே செய்ய முடியும்?”, “நீட்டை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு”. இப்படி அவரவர் பங்குக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே இழந்த உயிர்களை மீட்டுத் தரப்போவதும் இல்லை. இவர்கள் எவருமே மீட்பரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. கடந்த ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மரணங்களை முன்வைத்து முழங்கியவர்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், இந்நேரம் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும்போது, உண்மையிலேயே அந்த உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்களால் ஆற்றாமையும் அறச்சீற்றமும் பீறிட்டு எழுவதைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, நீட் தேர்வை முன்வைத்து மாணவர்களின் உயிரோடு விளையாடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசும் முன்பாக நீட் தேர்வு கடந்து வந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். கடந்து வந்த பாதை 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India -MCI) கெசட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்து, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை “Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் MCI 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் எதிரிப்பு காரணமாக தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது. கெசட் அறிவிப்பு வந்ததுமே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு, பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தனர். மே 5, 2013ல் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. கல்லூரி உள்ளிட்டோர் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தனர். அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஒய்வு பெறுகிற நாளில் அவரது கடைசித் தீர்ப்பாக நீட் தீர்ப்பு வெளியானது. “நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தவே ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. நீட்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானபோது, நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தவே, ஓய்வு பெறும் நாள் வந்துவிட்டதால், வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி கபீர் மீது குற்றம் சாட்டினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, முந்தைய வழக்கில் நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த, நீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்த கபீர் மீது குற்றம்சாட்டிய நீதிபதி தவே தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் 2017-ல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கி அன்றைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் ஆணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரைவு அவசரச் சட்டத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பியது. அது சட்ட ரீதியாக செல்லாது என்ற அட்டார்னி ஜெனரலின் கருத்தால் கைவிடப்பட்டது. இத்தனை இடர்களைக் கடந்து, 2020 ஆம் ஆண்டில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய அதிமுக அரசு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது. சுமார் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க அந்தச் சட்டம் வழிவகை செய்தது. 7.5% இடஓதுக்கீட்டை ஏற்க முடியாது என்றவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பொறியியல், சட்டம், விவசாயம் உள்ளிட்ட இதர தொழிற்கல்விக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து அதிமுக அரசுமீது குற்றம் சாட்டிவந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது. தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கில், ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து கருத்துக் கேட்பு நடத்தி சட்டமுன்வடிவைத் தயாரித்து வருகிறது. விரைவில் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீட் தேர்வு இல்லாத நிலை உருவாகுமா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வார் இங்கே யாருமில்லை. பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் கல்வி முறையில், அனைவருக்குமான ஒற்றைத் தேர்வு என்பது, அரசியல் சாசனம் வழங்கும் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். பெரு நகரங்களில் பல லட்சங்களைக் கொட்டி, தனிப்பயிற்சி பெற்று வரும் மாணவனோடு, எங்கோ தொலைதூரக் கிராமத்திலும், மலைப்பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவனைப் போட்டியிடச் செய்வது சமூக நீதியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் செயலாகும். இடைக்கால நடவடிக்கைகள் ஏன் இல்லை? நீட் தேர்வு அறிவிப்பு வெளியான 2010, நீட்டுக்கு எதிரான தீர்ப்பின் மீதான மேல் முறையீடு செய்யப்பட்ட 2013 ஆகிய ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் திமுகவும் பங்கு வகித்தது. திமுகவின் காந்திச்செல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் 85% இடங்களை, சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் தீரப்பைப் பெற்றுத் தந்தவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் முந்தைய திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனராலாக இருந்த பி.எஸ்.ராமனும் ஆவர். தீர்ப்பு வெளியான பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நளினி சிதம்பரம், “இனி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அப்போது எதிர்க்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் இருந்து நீட்டுக்கு எதிராகப் பேசிவரும் திமுக, இன்றுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு வெறும் ஐந்து நீதிபதிகளின் சிந்தனையோடு முடிந்துவிடுவதில்லை. அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. ஐந்து நீதிபதிகள் அமர்வோடு நீதி நின்றுவிடுவதில்லை. இதற்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஏழு மற்றும் ஒன்பது நீதிபதிகள் அமர்வுகள் அமைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. சபரிமலை வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. 1973-ல் கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் வழக்கில் அதிகபட்சமாக 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்ட வரலாறும் நம்மிடையே உள்ளது. ஆனால், நீட் தேர்வைப் பொறுத்தவரை, இவ்வளவு தீவிரமாக நீட்டை எதிர்ப்பவர்களும், எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்பவர்களும் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் +2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வைக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை, பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்ணை முற்றாகப் புறம் தள்ளுகிறது. குறைந்தபட்சம், மாநில அரசின் இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களே அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்திக்கொள்ளக் கூட இங்கே உரிமை கோரப்படவில்லை. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முகமையாக, தகுதி பெற்ற அமைப்பாக வரையறை பெற்றது எப்படி என்ற கேள்விகளுக்கு விடையளிப்பார் யாருமில்லை. முந்தைய அதிமுக ஆட்சி மீதும், 2014 – 2019 வரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதே எண்ணிக்கையில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்டுக்கு எதிராக டெல்லியில் எழுப்பிய குரல்கள், மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? கருத்துக் கேட்புக் குழு அமைத்த தற்போதைய திமுக அரசு, மேல்முறையீட்டு வாய்ப்புகள் குறித்து ஏன் ஆலோசிக்கவில்லை? அதிகாரம், பொருளாதாரம், எண்ணிக்கை என அனைத்திலும் பலம் பொருந்தியவர்கள் மாணவர்களின் மரணங்களுக்கு விலை வைத்துக் கொண்டிருக்க, இவை எதுவுமே இல்லாத எளியவர்கள் இப்படியான கேள்விகளை மட்டுமே தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. நீட் தேர்வு ஒழிக்கப்படுமா? அந்த அதிசயம் எப்போது நிகழும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்வரை மாணவர்கள் மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும். போராட்ட முடிவில் வெற்றி வசப்படாவிடில்