பெண்ணால் முடியும் – நூல் அறிமுகம்

பெண்ணால் முடியும் – நூல் அறிமுகம்

நூல்: பெண்ணால் முடியும்ஆசிரியர்: நஸீமா ரசாக்விலை: 180 ரூபாய்பதிப்பகம்: ஸீரோ டிகிரி ‘பெண்ணால் முடியும்’ என்ற புத்தகத்தை Pen-ஆல் முடியும் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கும் நஸீமா ரசாக் அவர்களின் புதிய படைப்பு. என்னுரை இல்லாமல் வந்திருக்கும்போதே தெரிகிறது, நல்ல எழுத்திற்கு எந்த உரையும் தேவையில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார். எழுத்தாளர் என்றால், சுவாரசியமான நாவலைத் தருவது அல்லது சமூகத்திற்கு ஒவ்வாத கற்பனைப் படைப்பைத் தருவது என்று இல்லாமல் சமூகத்தில் சரியாக நிரம்பிடாத இடத்தை நிரப்பிட முயன்றிருக்கிறார். ஆசிரியர் அந்தச் சிறிய முயற்சியில் பெரிய விதையை விதைத்திருக்கிறார். இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் தடம் பதித்துவிட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியென்றால் இந்தப் புத்தகம் எதற்கு என்ற கேள்வியும் கூடவே சேர்ந்து எழத்தான் செய்கிறது. பெண் என்பவள் எப்போதும் பெருஞ்சக்திதான். கிளியோபாட்ரோ போன்ற அரசியல்வாதியை இன்று வரை பார்த்திட முடியாத அளவுக்கு, அப்படியொரு அரசியலை சுமார் 2300 வருடங்களுக்கு முன்பே நடத்தியிருக்கிறார். இராஜராஜனுக்கு ஒரு பஞ்சமாதேவி் என்று பட்டியல் நீண்டுகொண்டேதான் இருந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டில் பெண்கள் என்றால் பெருஞ்சக்தி என்று பாரதி முழங்க ஆரம்பித்தது முதல் அந்த முழக்கம் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. அப்புறம் ஏன் இந்த முழக்கம் தொடர்கிறது என்று பார்த்தால், இன்று இருக்கிற வளர்ச்சி பெண்களுக்கானதாக இருக்காதோ என்ற எண்ணம் முளைக்கிறது. பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல, நாகரீகம், அறிவியல், தொழில்நுடபம் போன்ற பூக்களால் பெண்கள் நாராக மணந்திருப்பதைத்தான் வளரச்சி என்று சொல்லித் திரிவதாகத் தோன்கிறது. புரிகிற மொழியில் சொல்லவேண்டுமென்றால், பெண்களால் பலன் வருகிற தருணத்தில் பயன்படுத்திக்கொள்வதாகவும் தோன்றுகிறது. இந்த வளர்ச்சி, மாயைக்கும் உண்மைக்கும் இடையில் இருக்கிறது. அதாவது, தனியாக பெண்கள் தனித்துவம் பெற்றிருக்கிறார்கள். ஒரு குடும்பமாய் இருக்கிறார்களா என்றால் ஒரு தயக்கம் வரத்தான் செய்கிறது. இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும் என்றால், இன்னும் அந்தக் கட்டு முழுமையாக விலக்கப்படவில்லை. ஒரு கையில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, வேண்டும்போது அதை இழுத்துக்கொள்வது போல, இன்றும் குடும்பத்தில் சிக்கிக்கொண்டு, இலக்கை அடையும் பெண்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில் மொத்தம் 20 சக்திகள் பற்றிய வாழ்வியல். இதில் பலரின் வாழ்வியல் கண்ணீரை வரவழைத்தது. எம். எஸ். சுப்புலட்சுமி, ராமாபாய், மிருணாளினி சாராபாய், வி. சாந்தா, சாவித்திரி பாய் பூலே, ஆர். சூடாமணி, சுதா மூர்த்தி, தமிழிசை சௌந்தராஜன் என்று அனைவரின் வாழ்வியலிலும் நினைத்துப் பார்த்திடாத சாதனைகள் நிறைந்துள்ளன. அவர்களின் வெற்றியை மட்டும் பார்த்த நமக்கு, அந்தக் கரையைத் தொட அவர்கள் எப்படித் தங்களையே மெழுகாக்கிக்கொண்டு பிரகாசித்திருக்கிறார்கள் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தின் வெற்றியாகப் பார்ப்பது எழுத்து நடையே. யாருடைய வாழ்வியலாக இருந்தாலும், எதைச் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து எழுதியிருப்பதும் ஆங்காங்கே இன்றைய நிகழ்வோடு பொருத்தி எழுதியிருக்கும் எழுத்தும் வாசிப்பை சுவாரசியப்படுத்தியிருக்கிறது. ஆளுமைகளின் தேர்வும் அப்படி. ஒன்றிரண்டு பேர் மட்டுமே நமக்குப் பரிச்சயம். நான் ரசித்த சில வரிகளை உங்கள் கண்களுக்கு விருந்தாக்குகிறேன். “பூவுக்கு மலரத்தான் தெரியும். எப்படி மலர்கிறாய் என்று கேட்டால், எப்படி பதில் சொல்லும்?” என்று எம். எஸ். சுப்புலட்சுமி பற்றி ஒரு நிருபர் கேட்டபோது, அவர் கணவர் சதாசிவம் அளித்த பதில் அத்தனை நெகிழ்வு. இரு ஆத்மாக்கள் பிணைந்த தாம்பத்யம் கண்களில் தெரிந்தது. சாவித்ரி பாய் பூலே அவர்கள் கல்வி கற்றுத்தரச் சென்ற இடத்தில் சாணத்தையும் சேற்றையும் வாரி இறைக்கும்போது, வழியில் அழுக்குச் சேலை அணிந்துகொண்டு பாட சாலைக்குச் சென்று, அங்கே சென்றதும் வேறு சேலை மாற்றிக்கொண்டது, காந்தியடிகளை மிஞ்சிய அகிம்சை கண்களில் நிழலாடியது. இது நடந்தது 150 வருடங்களுக்கு முன்பு என்றால் நம்பமுடியவில்லை. ராமாபாய் அம்பேத்கர் தனது கணவனின் லட்சியம் பாதித்திடாமல் இருக்க, அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பறிக்கொடுத்தும் அதையும் தாங்கிக்கொண்ட தாய்மையைக் கண்டபோது, இன்றைய யுவதிகளுக்கு இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. அம்பேத்கர் மனைவிக்கு எழுதிய கடிதம், நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதத்தைவிடக் கொண்டாடியிருக்கவேண்டிய கடிதமாகத் தெரிந்தது. இந்தப் புத்தகத்தின் வாயிலாக, அன்பின் ஆழம் எப்படி இருக்க வேண்டும், தன்னோடு இருப்பவர்களின் இலட்சியத்தில் எப்படித் துணை நிற்க வேண்டும், எந்தச் சூழலிலும் இலட்சியம் மாறாத உறுதி எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்திடும் வாழ்வியல், உணர்வுகள் நிறைந்த வேதியியல். இந்தப் புத்தகத்தை யார் படித்தாலும் மாற்றம் வரும். ஒரு புத்தகம் தனி மனிதனுக்கு மாற்றத்தைத் தருகிறது என்றால், அது சமூகத்தின் மாற்றமாகக் கண்டிப்பாக உருப்பெறும். வாழ்த்துகள் நஸீமா ரசாக் அவர்களே.

பேசாத காரியம்

பேசாத காரியம்

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத அவனுடைய பாடல் ஒன்றுடனும் பாரதியைக் கண்டு மகிழ்வோமா? சகோதரி நிவேதிதா அயர்லாந்து தேசத்துப் பெண்மணி. சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஆளுமையால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர். பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்ட விவேகானந்தரின் முயற்சிக்கு உதவியாக இருப்பதற்காக விவேகானந்தரால் அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். 1902இல் விவேகானந்தரின் மறைவுக்குப்பிறகு தேச விடுதலைக்கான புரட்சிகர ரகசிய இயக்கங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1905இல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்த நிகழ்ச்சி வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேச பக்தர்களை ஆவேசத்தில் தள்ளியது. சுதேசி இயக்கம் வங்கத்தில் தொடங்கி தேசம் முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தளபதியாக வ.உ.சி.யும் இயக்கத்தின் பரப்புரையாளனாக மகாகவி பாரதியும் விளங்கினர். 1905 டிசம்பரில் காசி நகரில் நடந்த காங்கிரசுக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேசபக்தனாகவும் பத்திரிகையாளனாகவும் பாரதி சென்றிருந்தான். திரும்பும்வழியில் கல்கத்தாவில் டம்டம் பகுதிக்கு வந்திருந்த நிவேதிதாவை முதன்முதலாகச் சந்தித்தான். இந்த நிகழ்ச்சியை பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் தங்கள் படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதி தனது வாழ்நாளில், தானே அச்சிட்டு வெளியிட்ட நூல்களில் முதல் நான்கு நூல்களை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் வரலாற்றை ‘பாரதியார் சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அவரது மனைவி செல்லம்மா பாரதி. தமது குருமணியாக பாரதியார் வரித்துக்கொண்ட சகோதரி நிவேதிதாவைப்பற்றியும் அவரை பாரதி சந்தித்த வரலாற்றையும் சொல்லவந்த செல்லம்மா பாரதி அந்தக் கட்டுரைக்கு ‘குரு உபதேசம்’ என்று தலைப்பிட்டதோடு அக்கட்டுரையின் முடிவில், அந்தச் சந்திப்பை ‘ஆனந்தக் களிப்பு மெட்டில்’ பாரதியார் பாடியிருப்பதாகச் சொல்லி இந்தக் கவிதையை நமக்குத் தந்துள்ளார். ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் – எனைச்சூதாய் தனிக்கவே சும்மா யிருத்திமுன்னே ஏதுமில்லாதே – சுகமுற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப்பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தேபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்பேசாத காரியம் பேசினார் தோழி’ செல்லம்மா பாரதி எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் அவர் தந்திருக்கிற இந்தக் கவிதை, பெரும்பாலான பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை நம் கவனத்திற்கு வராத தொகுப்பு வேறெதிலும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.   இந்தக் கவிதையில் ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்?’ என்று செல்லம்மாவிடம் வியப்போடு தொடங்குகிற பாரதி, ‘பெற்றதை ஏதென்று சொல்வேன்?’ என்ற மர்மத்துடன் தொடர்ந்து, ‘பேசாத காரியம் பேசினார் தோழி’ என்று முடிக்கிற அழகைப்பாருங்கள். மனைவியைத் ‘தோழி’ என்றழைக்கிற சமத்துவப் பாங்கினை பாரதியார் கற்ற இடம் சகோதரி நிவேதிதாவின் சந்நதியில்தான். காரியம் என்ற சொல்லுக்குச் செயல் என்றோ வேலை என்றோ பொருள் கொள்கிறோம். ‘பேசாத காரியம்’ என்பதும் அந்தச் சொல்லாடலைப் ‘பேசினார்’ என்று முடிப்பதும் எங்ஙனம்? தனது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை (1909 ஜனவரி) சமர்ப்பணம் செய்கிறவேளையில் அந்தப் ‘பேசாத காரிய’த்தின் சாயல் தொனிக்க பாரதி எழுதுவதைப் பார்க்கலாம். ‘எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு’ என்று எழுதுகிறார். ‘பேசாத காரியம்’ எதுவென்று மேற்கண்ட வரிகளில் நமக்குப் புலனாகிவிடுகிறது. அது ‘சொல்லாமல் உணர்த்துவதாம்’. மீண்டும் செல்லம்மா பாரதியிடம் வருவோம். பாரதியார் நிவேதிதா தேவியிடத்து என்ன உபதேசம் பெற்றார் என்பதைத் தன்னிடம் ‘ரொம்பவும் உணர்ச்சியுடன்’ விவரித்ததாகவும் ஆனால் அச்சம்பவத்தைத் தன்னால் ‘விரித்துக்கூற முடியவில்லை’ என்றும் செல்லம்மா எழுதியிருக்கிறார். நிவேதிதாவிடம் பாரதி பெற்ற உபதேசம் எத்தகையது என்றும் அவரது வாக்கின் மூலமாகவே அறியலாம். 1908 ஜனவரியில் தனது முதல் நூலை வெளியிட்டு, அதனைச் சகோதரி நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பிக்கிறபோது, ‘ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதற்கொப்ப, எனக்கு பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். நாம் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கவிதையில், ‘முன்னே ஏதுமில்லாதே – சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார். பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப் பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற வரிகளில் அடங்கியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தின் பொருளை இப்போது தெரிந்துகொள்ளமுடிகிறது. பாரதி, தனது குருமணி சந்திப்பின் வருணிப்பில் அதைக் கீதைக் காட்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ‘பாரத மாதாவின் சம்பூர்ண ருபத்தைக் காட்டி’ என்ற சொல்லாட்சியையும் நாம் தேர்ந்துகொண்ட கவிதையின் ‘பார்த்த விடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொற்றொடரையும் இணைத்துப் பார்க்குமிடத்து அந்தக் காட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. அந்தச் சந்திப்பை, பாரதியார் பற்றிய ஆய்வு நூல்களில் ஆங்காங்கே பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிற செய்திகளின் அடிப்படையில் நாம் இந்த கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதை வரிகளின் பேசுபொருளைத் தாண்டிவிடாத எல்லைக்குள் நின்றுகொண்டு சுவைத்துப் பார்க்கலாம். சமூகப் பிரக்ஞைமிக்க கவிஞன், தான் வாழ்ந்தகாலத்தின் பிரதியைத் தனது படைப்புகளில் பதிந்துவைக்கின்றான். தனது காலத்தில், தான் இயங்கும் கருத்துவெளியில் துலங்கித்தெரிந்த தன் சமகால ஆளுமையான சகோதரி நிவேதிதாவால் பாரதி ஆகர்சிக்கப்பட்டிருந்ததை இந்தக் கவிதையும் நிவேதிதாவுக்கு பாரதியின் ஆக்கங்களில் செய்யப்பட்டிருக்கும் சமர்ப்பணங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்தக் கவிதை, உள்ளடக்கத்தில் ஒரு சம்பவத்தை விவரிப்பதுபோலத் தோன்றுவதைத் தாண்டி, பாரதி என்ற ஆளுமை செதுக்கப்பட்டதின் வரலாற்றையே பிணைத்துக்கொண்டுள்ள கதையை பாரதியே சொல்வதாகும்.  அது என்ன? 1903லேயே தேசபக்த இயக்கத்திற்கு பாரதி வந்துவிட்டதை அவன் வார்த்தைகளாலேயே அறிகிறோம். 1909இல் தான் வெளியிட்ட ‘ஜென்ம பூமி’ நூலுக்கு அவன் எழுதிய முகவுரையில் ‘சென்ற சுபகிருது வருஷத்திலே’ தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியதாகவும் தான் அதில் ஈடுபட்டதாகவும்’ கூறுகிறான். சென்ற சுபகிருது வருஷம் என்று அவன் குறிப்பிடுவது 1902 ஏப்ரல் முதல் 1903 மார்ச்வரையிலான காலமாகும். இந்தக் காலத்தில் 1902 ஜனவரிவரை பாரதி காசியில் இருந்தார். ஆகவே இந்த நவீனமார்க்கத்தில் 1903 முதலே ஈடுபட்டிருந்த தேசபக்தன் பாரதி, 1905இல் வங்கத்தில் தொடங்கிய சுதேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த விவேகானந்தரின் சீடர்கள் உள்ளிட்ட பல தேசபக்தத் தலைவர்களை நேரடியாகவும் பத்திரிகையாளனாகவும் அறிந்திருந்தான். தமிழகத்தில் அந்த சுதேசிய இயக்கத்தின் பரப்புரையாளனாக பாரதி மாறியிருந்த காலத்தில் வங்கத்தில் அந்தத் தலைவர்களில் ஒருவராக இயங்கிய நிவேதிதா தேவியை ஆர்வமுடன் சந்தித்திருக்கிறான். அந்தச் சந்திப்புபற்றி செல்லம்மா பாரதியின் கருத்துக்களை ஒட்டியே பாரதியார் வரலாற்றை எழுதிய இரா.அ.பத்மநாபன் தனது ‘சித்திர பாரதி’யில் குறிப்பிடுகிறார். பாரதியே தம்மிடம் சொன்னதாக திரு.வி.எஸ்.குஞ்சிதபாதம் என்ற பாரதி அன்பர், பாரதி – நிவேதிதா சந்திப்பை ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இவரது கட்டுரை திரு.கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் பதிப்பித்த ‘பாரதி விஜயம்’ தொகுப்பில் படிக்கக்கிடைக்கிறது. 1905 காசிக் காங்கிரசிலும் 1906 கல்கத்தா காங்கிரசிலும் சகோதரி நிவேதிதா அழைக்கப்பட்டு பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஏனெனில் தீவிர இரகசிய இயக்கங்களில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு காங்கிரசில் நேரடிப் பங்கேற்பு அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. டம்டம் நகரில் ஒரு மாளிகையில் இரகசியக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்குச் சகோதரி நிவேதிதாவும் வந்திருந்து பேசுகிறார். பாரதியும் அவரது நண்பர்களும் அவரைச் சந்திக்கின்றனர். பாரதி சில பாடல்களைப் பாடுகிறார்.  நிவேதிதாவும் பாரதியும் உரையாடுகின்றனர். பாரதி திருமணமானவர் என்று தெரிந்துகொண்டதும் மனைவியை அழைத்து வராததன் காரணத்தைக் கேட்கிறார் நிவேதிதா. ‘அவ்விதம் பொது இடங்களில் சரிசமமாக மனைவியை அழைத்துவரும் வழக்கம் இல்லை’ என்றும் அவ்வாறு ‘மனைவியைக் காங்கிரசுக்கு அழைத்துவருவதால் பயன் என்ன கிடைக்கப்போகிறது?’ என்றும் பாரதி மிக இயல்பாகப் பதிலளிக்கிறார்.  சகோதரி நிவேதிதா கொதித்துப்போகிறார். ‘சமூகத்தில் பாதியான பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டே மறுபாதிமட்டும் விடுதலைபெறமுடியாது. உன்னைப்போன்ற படித்தவர்களே பெண்களோடு சமத்துவம் பேணவில்லையெனில் எப்படி இந்தத் தேசத்தில் சமூகச் சீர்திருத்தங்கள் மலரும்? பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பொது இயக்கங்களில் வராதவரை இந்தத் தேசத்தின் விடுதலை சித்திக்கப் போவதில்லை’ என்றெல்லாம் பாரதியைக் கண்டித்துப் பேசுகிறார். ‘இனியேனும் மனைவியை உன் இடதுகையெனக் கருது. மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி வா’ என்கிறார். இதைத்தான் பாரதி, ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்’ என்று குறிப்பிடுகிறார். பிறகு நடந்ததை திரு.குஞ்சிதபாதம், பாரதி தம்மிடம் கூறியதாகத் தாம் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார். ஒரு தருணத்தில் பாரதியைக் கைப்பிடித்து மாளிகைக்கு வெளியே தனியே அழைத்து வந்த நிவேதிதா, பாரதியை அங்கிருந்த ஒரு ஆலமரத்தடியில் நிறுத்தி பாரதியிடம், ‘அதோபார், பாரதமாதாவின் அற்புத தரிசனத்தை’ என்றாராம். பாரதியார் அவர் காட்டிய திசையில் பார்க்கிறார். நிவேதிதாவின் வார்த்தைகள் அத்தனைச் சக்தி மிக்கவையா என்ன! பாரதி பாரதமாதாவின் சம்பூர்ண ரூபத்தைக் காண்பதாகப் பிரமை கொள்கிறார். ‘எனைச் சூதாய் தனிக்கவே சும்மா யிருத்தி முன்னே ஏதுமில்லாதே –  சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்.’ ‘பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொல்லாடல் இந்த ஆவேசப் பரவசத்தையே நம் கண்முன் நிறுத்துகிறது. ‘பாரத மாதாவின் ஆணையைக் கேட்டுக்கொள். உன் கவியாற்றலை அன்னையின் சேவைக்கே அர்ப்பணிப்பாயாக’ என்ற நிவேதிதாவின் குரல் பாரதியின் உள்ளத்தின் உள்ளே ஒலிக்கிறது. சகோதரி நிவேதிதா பாரதியைத் தொட்டுப் பிரமை கலைக்கிறார். அந்த ஆலமரத்தின் இலை ஒன்றைப் பறித்து பாரதியிடம் கையளித்தார். தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரததேவியின் தொண்டிற்கே என்ற சங்கல்பம் போல பாரதி அதை வாங்கிக்கொண்டார். அந்த ஆலிலைப் பிரசாதத்தை வெகுகாலம் பாரதி பொக்கிஷம்போல் பாதுகாத்துவந்தார் என்று செல்லம்மா கூறுகிறார். ‘சற்றும் பேசாத காரியம் பேசினார் தோழி’ என்ற சொற்றொடரால் பாரதி ‘குருமணியின் தரிசன’த்தைப் பேசுகிறார். ‘அதன்பிறகு தம் உள்ளத்திலிருந்து தேசபக்தி ததும்பிக்கனிந்த பாடல்கள் வெள்ளமாய்க் கொட்டலாயிற்று’ என்றாராம் பாரதியார். நிவேதிதா தேவியுடனான சந்திப்புக்குப்பிறகு மகாகவி பாரதி தனது பாடல்களிலும் கட்டுரைகளிலும் பெண்ணியக் கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். 1906இல் அவர் பேசியதன் வீச்சு பின்னாளில் 1920களில் பெரியாரியத்தில் பூரணம்பெற்றது என்பதை அறிகிறோம். சாதி மறுப்பு மற்றும் பெண்ணியக் கருத்துகளின் ஆரம்பம் இந்தச் சந்திப்பு என்பதை இந்தத் தருணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.

கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?

கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?

தமிழினி இணையத்தில் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய இசைவு என்ற சிறுகதை நேற்றிலிருந்து (05.09.2022) இலக்கிய இணைய உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. சரி, அப்படி என்னதான் பஞ்சாயத்தைக் கிளப்பி வைத்திருக்கிறார் என்று பார்க்கலாம் என்று கருதி, அந்தப் பக்கத்திற்குச் சென்று கதையை வாசித்தேன். மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே உறவு உண்டாகி, மருமகனின் பிள்ளைக்குத் தாயாகிவிடுகிறார் மாமியார். தொடக்கத்தில் இருவரையும் கண்டிக்கும் மகள், கதையின் இறுதிக்காட்சியில் இந்த உறவு தந்தைக்குத் தெரியாமல் மறைப்பதை, அந்த உறவுக்கான இசைவு எனக் குறிப்பால் உணர்த்துவதாகக் கதை முடிகிறது. இணைய வெளியில் பலரும் விமர்சித்ததைப்போல, நகர்ப்புற நாகரிகத்துக்குத் தம்மை வரித்துக்கொண்டு, மேட்டிமைச் சிந்தனைக்குள் குடியேறிவிட்ட தற்காலச் சமூகத்துக்கும், மனதின் ஒரு மூலையில் கதைக்களம் குறித்த தெளிவு இருந்தாலும், எங்கே நாம் இதை எதிர்க்கவில்லையென்றால் பெரும்பான்மைச் சமூகம் நம்மையும் ஒரு பாலியல் குற்றவாளி ஆக்கிவிடுமோ என்ற பதற்றத்தில் சிக்கிக்கொள்வோருக்கும் நிச்சயமாக இந்தக் கதை ஒரு அதிர்ச்சியாகவோ ஆபாசமாகவோ தோன்றுவதில் வியப்பில்லை. அண்மையில் வெளியான, வீட்ல விசேஷம் திரைப்படத்தில், திருமண வயதில் வீட்டில் மகன் இருக்க, குழந்தை பெற்றுக்கொண்ட தாயின் மனப் போராட்டம், அந்தக் குடும்பத்திலேயே நிலவிய குழப்பம், இறுதியில் உண்டான தெளிவு ஆகியவை நகைச்சுவை இழையோட, நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்தப் படமும் முற்போக்காளர்களால் சிலாகித்துப் பேசப்பட்டது. முக்கியமாக, அந்தப் படத்தில் பாட்டி கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம் முக்கியமானது. ‘எத்தனை வயது கடந்தாலும் கணவன் மனைவிக்குள் நெருக்கம் இருந்தால்தானே குழந்தை பிறக்கும்?! 50-களைக் கடந்த பின்னும் பிறக்கும் இந்தக் குழந்தை, அந்தக் கணவன் மனைவிக்குள் இன்னமும் நீடிக்கும் காதலின் சாட்சி’ என்பதாக இருக்கும். வீட்ல விசேஷம் திரைப்படத்துக்கும் இசைவு சிறுகதைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, பிறந்த அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்  என்பதுதான். இசைவு கதையில் மாமியாரின் குழந்தைக்கு மருமகன் தந்தை ஆகிறான். அதாவது, தன் மகனுக்கு, தானே மைத்துனனும் ஆகிறான். இந்த உறவுச் சிக்கல்தான் கதையில் விழுந்துள்ள சிக்கலான முடிச்சு. இந்த முடிச்சுதான் எல்லோரையும் பதற்றம் கொள்ள வைக்கிறது. அந்தப் பதற்றமே இந்தக் கதையை, மஞ்சள் பத்திரிக்கை கதை, சரோஜாதேவி கதை என்றெல்லாம் வகைப்படுத்தச் செய்கிறது. மணி பார்க்கும் கடிகாரம்கூட ஊருக்கு ஒன்றோ இரண்டோ மட்டுமே இருக்கும் அளவினான குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த, மிகவும் எளிமையான மக்களோடு வாழ்ந்து பழகிய என்னைப் போன்றோருக்கு இப்படியான கதைகள், வெறும் கதைகள் மட்டுமே. அதாவது, இவ்வாறான நிகழ்வுகளை எங்கள் இளம் வயதிலேயே கதைகளாகவும் செய்திகளாகவும் கேட்டும், தவிர்க்க இயலாத சில தருணங்களில் கண்டும் கடந்தும் வந்திருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியும் சினிமாவும் மிகமிக அரிதாக இருந்த காலத்தில் வாழ்ந்த எளிய மக்கள் இத்தகைய நிகழ்வுகளை மிக எளிதாகப் புறந்தள்ளி, கடந்து சென்று, வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்த மக்களைக் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள். மாமியார் மருமகன் மட்டுமல்ல, மாமனார் மருமகள், கணவன் இருக்கும்போதே தன்னுடைய மனம் கவர்ந்த தன்னைவிட வயதில் இளைய ஆடவனைத் தன் வீட்டோடு வைத்துக்கொண்ட பெண், மனைவியின் நண்பன் வந்தால், அந்த நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவன், நெருங்கிய உறவுக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு வீடுகளில் இரட்டைப் பிள்ளைகளைப் போல அச்சு அசலான பிள்ளைகள், இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்தித்துவிட்டு, அவர்களோடு பழகிவிட்டுத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒரு திரைப்படத்தில், ஊருக்குள் திருவிழா நடக்கும் நேரத்தில், மைக் செட்காரர் வீட்டுக்குள் ஊர்ப் பெரிய மனிதர் நுழைந்து, ‘சுத்தபத்தமாதானே இருக்க?’ என்று கேட்பாரே, அதற்கு இணையான காட்சியை கண்ணால் கண்ட சாட்சிகள் நானும் என் தம்பியும். அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும்கூட, இரண்டு பெண்கள் மீதும், தான் சமமான காதல் வைத்திருப்பதாக அந்த நாயகன் சொல்வார். அதனால் இரண்டு பெண்களுமே அவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால், ஒரே மேடையில் இரண்டு பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஒரு அழைப்பிதழும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது பலராலும் ஏளனமும் செய்யப்பட்டது. தமிழ் சினிமா ஊதி ஊதிப் பெருக்குவதற்கு முன்பாக இந்தச் சமூகம் கற்பைக் குறித்து அத்தனை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தாலி மற்றும் கற்பு குறித்தான சென்ட்டிமென்ட்களைக் காட்டுத் தீயினும் வேகமாகப் பரப்பிய பெருமை சினிமாவையே சாரும். அதன் நீட்சியைத் தற்போது தொலைக்காட்சித் தொடர்கள் செய்து வருகின்றன என்று கருதுகிறேன். அண்மையில் ஒருவர், ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மீது ஈர்ப்பு வந்தால் அது மனநலக் கோளாறு என்று எழுதி இருந்தார். காதல் ஒரே ஒருவரிடம் மட்டும்தான் வரவேண்டும் என்ற சிந்தனையின் மறுபக்கம்தான் அது என்றுதான் அதை என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. ஒரு மனநோயாளி தன்னை ஒருபோதும் மனநோயாளி என்று ஒப்புக்கொள்ள மாட்டார் என்று சொல்வதைப் போல, ஈர்ப்பு வந்தாலே மனநோயாளி என்றால், இங்கே ஏராளமான மனநோயாளிகள் தங்களை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். உண்மையாகவே – நேர்மையாகவே – ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றால், அவர்கள் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது கட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு. இன்னும் சில இடங்களில், காமம் சார்ந்த செயல்களை விலங்குகளோடு ஒப்பிட்டு வசை பாடுவதும், அதற்கு முரணாக, கருவுற்று இருக்கும் பெண் விலங்கை ஆண் விலங்கு அணுகாது என்பதும் எனக்குள் சிரிப்பை உண்டாக்கும் நகைச்சுவைகளே அன்றி வேறல்ல. விலங்குகளுக்கு காமம் என்பது இனப்பெருக்கச் செயல்பாடு என்று மட்டுமே இங்கே வரையறுக்கப்படுகிறது. ஆனால், விலங்குகள் மனிதர்கள் கையில் அகப்படாதவரை அவற்றுக்குக் காமம் தோன்றிய உடனே வடிகாலும் கிடைத்துவிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மனிதன் கையில் சிக்கிக்கொண்ட விலங்குகளுக்கு அவற்றின் இயல்பான காம உணர்வுக்கான வடிகால் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. கண்ணகியைக் கற்புக்கரசி என்று சொல்லித்தானே மெரினாவில் சிலை வைத்துப் போற்றுகிறோம்? கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண்ணில் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று மேடை போட்டு முழங்குகிறோம்? கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகி, தன்னைத் தவிக்கவிட்டு வெளியேறிய கணவனுக்கும் தண்டனை தரவில்லை. அல்லது தானும் இன்னொரு துணை தேடிக்கொள்ளவில்லை. இன்சூரன்ஸ் துறையில் நீங்கள் இழப்பீடு கோரும்போது ‘விபத்துக்கான/ மரணத்துக்கான காரணம்’ – cause of accident/ death – என்வென்று ஆய்வு செய்வார்கள். உதாரணமாக, ஒரு வண்டியில் பிரேக் ஆயில் லீக் ஆகி, அதன் காரணமாக பிரேக் பிடிக்காமல் விபத்து நடந்தால், அது வண்டியின் பராமரிப்பில் கோளாறு என்ற காரணத்தால் இழப்பீடு நிராகரிக்கப்படும். ஆனால், மழையின் காரணமாக, சாலை சேறும் சகதியுமாக இருந்து வண்டி பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்று விபத்து நேர்ந்தால் அது தங்கள் கட்டுப்பாடுக்குள் இல்லாத விபத்தாகக் கருதப்பட்டு இழப்பீடு வழங்கப்படும். அதேபோல, கோவலன் வறுமை நிலைக்கு வந்து மதுரைக்கு வந்ததற்கு அவனேதான் காரணம். இருந்தாலும் தண்டனை என்னவோ ஒட்டுமொத்த மதுரை மக்களுக்கும். ஆனால் நமக்கு முக்கியமானது என்னவோ, கணவன் கைவிட்டுப்போன பின்னும் அவனுக்காகவே காத்துக்கிடந்த அவளின் கற்பு நெறிதானே? இன்னமும் இந்தச் சமூகம் கற்பு எனும் கற்பிதத்தைத்தான் பிடித்துத் தொங்குகிறதா? அல்லது, மற்றவர்களுக்கு உற்ற துணை யார் என்பதை இந்தச் சமூகம்தான் தீர்மானிக்க விரும்புகிறதா? ஒழுக்கத்துக்கான அளவுகோலாகப் பெண்களின் உடலை மட்டுமே வைத்திருக்கவே இந்தச் சமூகம் விரும்புகிறதா? காமம் என்பதைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஒழுக்கசீலர் சான்றிதழ் வழங்கப்படுமா? காமத்தைக் கடந்து இந்தச் சமூகத்தில் நிலவும் பிற சிக்கல்கள் யாவும் உரிய தீர்வினை எட்டிவிட்டனவா? ஒரு பெண்ணுக்குத் தன்னுடைய உடல் மீதான உரிமையை இந்தச் சமூகம்தான் எப்போதும் தீர்மானிக்குமா? இப்படி ஏராளமான கேள்விகள் என் உள்ளத்தில் ஊற்றெடுத்தவண்ணம் இருக்கின்றன. எனக்குள் எழும் இன்னொரு முக்கியமான கேள்வி, இவர்களில் எத்தனை பேர் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை வாசித்திருப்பார்கள் என்பதே. இந்தக் கதையிலும் அந்தப் பெண்ணுக்கு விருப்பமான ஆண், மருமகனைத் தவிர வேறு ஒருவராக இருந்திருப்பின் இந்தப் பதற்றம் உருவாகி இருக்காது என்றே நான் கருதுகிறேன். அதை முற்போக்குச் சிந்தனை என்றும்கூடச் சிலர் கொண்டாடி இருக்கக்கூடும். ஆனால் அந்தப் பெண்ணின் விருப்பத்தையோ அல்லது கதாசிரியர் விருப்பத்தையோ, விமர்சிப்பவர்கள் தீர்மானிக்க முடியாது அல்லவா? இதற்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். தோழர் சி. ஞானபாரதி எழுதிய அவஸ்தை என்ற சிறுகதையின் ஒரு காட்சியில், வறுமையில் வாடும் ஒரு ஏழைப் பெண்ணின் வீட்டைக் குறித்த வர்ணனையில், வீட்டின் சமையலறையில் சடை சடையாக ஒட்டடை தொங்குவதாக எழுதி இருந்தார். அந்தக் கதையை வாசித்துவிட்டு நான் அவரோடு உரையாடுகையில், வறுமைக்கும் தூய்மைக்கும் தொடர்பு இல்லையே தோழர்; சிறிய வீடாக இருந்தாலும் அந்தப் பெண் வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளலாம் அல்லவா? என்று கேட்டேன். அதற்கு ஞானபாரதி தோழர் சொன்ன பதில், “நீங்கள் பார்த்த வீடுகள் அவ்வாறு இருக்கலாம் தோழர். ஆனால், நான் பார்த்த பெண்ணின் வீடு எப்படி இருந்ததோ அதைத்தான் எழுதியுள்ளேன்” என்பதுதான். ஒருவேளை தோழர் இராசோ-வும் இதே பதிலைச் சொல்லக்கூடுமல்லவா? நல்லு இரா. லிங்கம் செப்டம்பர் 9, 2022

வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்

வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்

“பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்தால், அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்றமாகாது” என்று கேரள நீதிமன்றம் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான சிவிக் சந்திரன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டிற்கு, நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் வருடம் நந்தி கடற்கரையில் நடந்த எழுத்தாளர்கள் முகாமின்போது தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அவர் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தன் தரப்பு சாட்சியாக அளிக்கப்பட்ட புகைப்படங்களில் சம்பந்தப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடை, பாலியல் ரீதியான செயல்பாடுகளைத் தூண்டும் விதமாக இருந்ததாக நீதிபதியே கூறுவது “விக்டிம் ப்ளேம்” செய்யப்படுவதாகவே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பாலியல் குற்றங்கள் எழும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட பெண் மீதே முன்வைக்கப்படும் இது போன்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வெகுசனத்தைத் தாண்டி நீதிமன்றங்களே தெரிவிப்பது வேதனைக்குரிய விசயம். இதுதான் சாக்கு என்று சில ஊடகங்களும் “ஆபாச ஆடை அணிவது பாலியல் இச்சையைத் தூண்டுகிறது” என்று தன் பங்கிற்கு அந்த விசயத்தை ஆதரிக்கின்றன. பாலியல் குற்றங்களுக்கு ஆடை காரணமல்ல என்று தொடர்ச்சியாகப் பெண்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், சமூகம் இன்றளவும் பெண்ணின் ஆடை மீதே விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று “ஒழுக்க விதிகள்” கற்பிப்பதில் மட்டுமே இந்தச் சமூகம் கவனம் செலுத்துகிறது. பொதுசனம், ஊடகம், நீதிமன்றம் என்று அனைவரும் பொதுவெளியில் பெண் மீதான மாண்பைக் குறைக்கும் வகையில் இது போன்ற பிற்போக்குக் கருத்துகளைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கின்றனர். உண்மையிலேயே பெண்கள் குறித்த முற்போக்குப் பார்வை இருந்தால், ஊடகத்துறையில் வேலை செய்யும் பெண்களிடமே கேட்டுப் பாருங்கள். அவர்களில் எத்தனைப் பெண்கள் தங்கள் வீட்டில் பெரும் எதிர்ப்பைச் சுமந்துகொண்டு தினந்தோறும் பணிக்குச் செல்கிறார்கள் என்று தெரியும். ஊடகம் என்றாலே “நோ” என்று சொல்லி விடும் போக்கு இன்னும் மாறாத சமூகத்தில் இருந்து கொண்டு, இது போன்ற கருத்துகள் வெளிவருவது ஆரோக்கியமான போக்கிற்கு வழி காட்டாது. பொதுவெளியில் ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும், ஒரு ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது இடத்தில் அவள் எங்கே நிற்க வேண்டும், எந்தப் பேருந்தில், எத்தனை மணிக்குப் பயணிக்க வேண்டும் என்று அவளுக்கான வரையறைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.   அப்படியானால் பெண் உடல் காம ஆசையைத் தூண்டுவது இல்லையா? பெண்ணின் உடல் பகுதிகள் காம இச்சைகளைத் தூண்டும் என்பதில் எனக்கும் துளி சந்தேகமும் இல்லை. ஆனால் அவை எப்போதும் காமத்தையே தூண்டிக் கொண்டிருக்கிறதா? சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் இடத்தில் அக்குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாததால் ஒருபுறம் தாய் பாலூட்டிக் கொண்டே இருக்க, மறுபுறம் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த மார்புடன் அவள் பாலூட்டுவதைப் பார்த்துக் கூடியிருந்தவர்கள் காமத்தில் வெறி கொண்டு விட்டார்களா? அதில் ஓர் அழகியல் இருந்ததால் அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தர்கள். இங்கே ஆபாசம் எங்கிருந்து வந்தது. பெண்ணின் சம்மதமின்றி நடக்கும் பாலியல் வல்லுறவை நியாயப்படுத்தும் விதமாக அவளின் ஆடையை, அவளின் நிர்வாணத்தை – பகடையாய் உபயோகிப்பது முறையல்ல. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் மூன்று வயது குழந்தையின் ஆடை என்ன செய்தது? இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று அவர் பக்கம் நியாயங்களை அடுக்கும் சில ஊடகங்கள், சௌமியாவை இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன்‌. ஆண் உடல் போன்று பெண் உடலும் இயல்பு என்று எத்தனை முன்னெடுப்புகள் செய்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக வீணாகிப் போகின்றன. இச்சமூகம் பெண்கள் மீது நடத்தும் உடல் ரீதியான வன்முறைகளுக்கு இணையாக இது போன்ற வார்த்தை வன்முறைகளும் மிகுந்த கண்டனத்துக்குரியது. பெண்களை ஒடுக்கி வைக்கும் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனை, படித்தவர்கள் அதிகமாக உள்ளதாகச் சொல்லப்படுகின்ற, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கின்ற மாநிலத்திலேயே இவ்வளவு வலுவாக உள்ளது எனில், நாட்டின் பிற பகுதிகளில், பிற்போக்கு சக்திகளின் பிடியில் சிக்கி இருக்கும் மாநிலங்களில் எந்த அளவில் இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் குறித்த இத்தகு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட நபர்களை அரசியல், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகம் போன்ற அமைப்புகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். சாந்தி சண்முகம்

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

“உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையில்தான் சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்” என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவை இன்றும் சொற்களாகவேதான் இருக்கின்றனவேயன்றி, செயலாக்கம் பெறவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது தமிழக அமைச்சரின் நேற்றைய செயல். ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஆறாவது முறையாக அமைச்சராகவும் பதவியில் இருக்கும்  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு செயலை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள  பாலவநத்தம் கிராமத்தில், அமைச்சரைக்கண்டு தனது கோரிக்கை குறித்து  மனு அளிக்க வந்த ஒரு பெண்ணின் தலையில், தன் கையிலிருந்த பேப்பரால் அமைச்சர் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல்கொடுப்பவர்களும் அமைச்சரின் இந்த ஆனவப் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதுடன் தேசிய மகளிர் ஆணையம் அமைச்சரமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பாஜக வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வழக்கம்போலவே செலக்டிவ் பாலிடிக்ஸ் மனப்பான்மையுடன் கள்ள மௌனம் காக்கின்றன. சற்றே துணிவுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்களை மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடக்கி வைக்கும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. சமுக வலைத்தளங்களில் நொடிக்கொருமுறை வலம் வரும் இது போன்ற காணொலிகளைக் காணும் எந்தப் பெண்களும், இனி எப்படி மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முற்படுவார்கள்? தங்களுக்கான உரிமைகளையோ, தேவைகளையோ எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்? பலர்கூடி நிற்கும் பொதுவெளியில் மனு கொடுக்கச் செல்லும் பெண்களுக்கே இந்த நிலைதான் இங்கு. தனது அதிகாரத்தின் வலிமையை விளிம்புநிலை மக்களிடம் காட்டுவதுதான் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களுக்கான மாண்பா? பொதுவாக அரசியல்வாதிகளின் அதிகார போதையே ஏழை மக்களின் மீது கை வைக்கும் துணிச்சலைத் தருகின்றது. அதுவும் பெண்கள் என்றால், அந்தத் துணிவு பன்மடங்காகப் பெருகி விடுகிறது.  மூச்சுக்கு மூச்சு, சமூக நீதியை வலியுறுத்தும் கட்சியிலிருந்துதான் இப்படியொரு மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஐ சமூகநீதி நாளாக அறிவிப்பதனால் மட்டும் சமூகநீதி பிறந்துவிடாது. அதன் ஓர் அங்கமான பெண் உரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும்  பெரியார் காட்டிய பாதையில் நடப்பதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, சமூக நீதி என்பது குறிப்பிட்ட இனத்திற்கானது இல்லை,  இச்சமூகத்தில் உள்ள அனைவருக்குமானது. குறிப்பாக ஆயிரமாயிரமாண்டுகளாக  பள்ளங்களிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் புதையுண்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கானது. அந்தப் பள்ளங்களைச் சமன் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியேயன்றி தங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான இடங்களில் மட்டுமே பேசி, கைதட்டு வாங்குவதல்ல என்பதை அமைச்சரும், கட்சி மேலிடமும் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி சூடுபிடிக்கத் துவங்கிய சில மணி நேரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே, “அமைச்சர் என்னை அடிக்கவில்லை, அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என விளக்கமளித்திருப்பது – விளக்கமளிக்க வைக்கப்பட்டிருப்பது – நகைச்சுவையின் உச்சம். இன்றைய முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரை அடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி இப்போது நம் நினைவில் மீண்டும் வருகிறது. தன் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் அடிக்கும் உரிமையை எந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது? ஒரு சாமானியப் பெண்ணைப் பொதுவெளியில் அலட்சியமாக நடத்தும் அரசியல்வாதிகள், இதுபோன்ற சாமானியர்களால்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் பெண்களை அராஜகமாக நடத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களோ, மேன்மைதாங்கிய(!) மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே, இது மக்களாட்சி என்ற நம்பிக்கையை உருவாக்கும். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவரைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உருவாகும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பதவி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி மக்கள் அனைவரையும் சமமாக மதிப்பதே உண்மையான சமூக நீதி. அதுவே உண்மையான திராவிட மாடல். எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி அவமதிப்பது திராவிட மாடல் அல்ல; அது சட்ட விரோதம். ரமாதேவி இரத்தினசாமி

அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்

அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்

‘ஆண்களைப் போலவே சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்று பெண்கள் தங்கள் கருத்துக்களை, அவர்கள் அனுபவத்தில்  கண்ட அடக்குமுறையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாதிடுவது இயல்பான ஒன்று. குர்ஆன் மற்றும் பல்வேறு தீர்க்கதரிசனங்கள் பற்றிய விளக்கங்கள் அளித்துள்ள பாகிஸ்தானின் ரிஃபத் ஹாசன் (1943), அமெரிக்காவின் அமினா வதூத்-முஹ்சின் (1952), மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா மெர்னிஸ்ஸி (1940), எகிப்து நாட்டின் நவல் எல் சாதவி (1931) போன்ற பெண்ணியவாதிகளின் எழுச்சி, இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் இயக்கம் இன்னும் உறுதியாக உள்ளது என்பதற்குச் சான்று. ஆனால் இஸ்லாமிய ஆண் பெண்ணியவாதிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?  சமகால இஸ்லாமிய உலகின் சீர்திருத்தச் சிந்தனையாளரான ஆண் பெண்ணியவாதிகளில் ஒருவரான அஸ்கர் அலி இஞ்ஜினியர், ஆண்-பெண் சமத்துவம், திருமண உரிமைகள், ஹிஜாப் போன்ற பல விஷயங்களில் குர்ஆனின் அடிப்படையில், விளக்கங்கள் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர். இஸ்லாமிய சமுதாயத்தில் அதற்குப் பெரும் பங்கு வகித்தவர் அஸ்கர் அலி இஞ்ஜினியர். முனைவர். அஷ்கர் அலி இன்ஜினியர், 1939 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் உதய்பூருக்கு அருகிலுள்ள சலும்பரில் பிறந்தார். அவர் தனது தந்தையிடமிருந்து இளம் பிராயத்திலேயே இஸ்லாமியக் கல்வியில் ஆரம்பப் பயிற்சி பெற்றார். அரபு மற்றும் பாரசீக மொழிகளையும் இதற்காகக் கற்றுக்கொண்டார். மேலும் இந்த இரு மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தார். அவரது இளம் வயதிலிருந்தே, அறிவார்ந்த பகுத்தறிவுச் சிந்தனையை வெளிக் காட்டினார். அவர் ‘ஆசியாவின் எஸ்பினோசா’ (Espinoza) என்று மேனாள் இந்தியத் துணை ஜனாதிபதி முனைவர் ஹமீத் அன்சாரியால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் மற்றும் அது கூறும் மனிதாபிமான விழுமியங்களைப் பற்றி எப்பொழுதும் அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் சிவில் இன்ஜினியர் பட்டம் பெற்று, பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனில் பொறியாளராக தனது பணியைத் தொடங்கினார். இருபது ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றார். அஷ்கர் ஒரு எழுத்தாளராக நாட்டில் அமைதி, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அசாத்தியத் துணிச்சலுடன் செயல்பட்டவர். சமூகம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய ஆய்வு மையத்தின் நிறுவனத் தலைவர். அவர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்ட பல நாடுகளில் இருந்து உலக மதச்சார்பின்மையின் போக்குகளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். அவரது சுயசரிதை நூலான ‘A Living Faith: My Quest for Peace, Harmony and Social Change’ 2011 ஆம் ஆண்டில் அன்றைய இந்தியத் துணை ஜனாதிபதியான ஹமீத் அன்சாரி அவர்களால் வெளியிடப்பட்டது. அவரது அரும்பணி அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. மத நல்லிணக்கத்திற்கான அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசாங்கம் 1997-இல் அவருக்கு ‘வகுப்புவாத நல்லிணக்க’ விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் வகுப்புவாத வன்முறை மசோதாவை உருவாக்கிய தேசிய ஆலோசனைக் குழுவின் ஒரு அங்கத்தினராகவும் தம் பங்களிப்பைச் செலுத்தினார். “அஸ்கர் சமகால இஸ்லாமிய உலகில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட, அதே சமயத்தில் எளிதில் அணுகக்கூடிய சீர்திருத்த சிந்தனையாளர்களில் ஒருவர்” என்று பன்முகக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் எழுத்தாளர், மொஹமத் இம்ரான் மொஹமத் தயிப் மேற்கோள் காட்டியுள்ளார். இஸ்லாமிய சமூகத்தில் சீர்திருத்தம் குறித்த பிரச்சனைகள் பற்றிய அவரது கருத்துக்கள், முஸ்லீம் சட்டம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கியப் பங்களிப்பாகும். ஆயினும், அவை உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களில் காணப்படும் அடிப்படைவாத மீளுறுதிப்பாட்டின் கருத்தாடலினால் முட்டுக்கட்டை ஏற்பட்டு, மேற்செல்ல முடியாத நிலையை அனுபவித்துள்ளது. இஞ்ஜினியர், உலகெங்கிலும், அனைத்து சமூகங்களுக்கிடையில்  பெண்-நிலை பெற்ற முக்கியத்துவம் குறித்துத் தனது மிகுந்த கவனத்தை செலுத்தினார். ​​அஸ்கரின் கூற்றுப்படி பல விஷயங்கள், குறிப்பாக சமூகத்தின் நிலை மாறியுள்ளன. எனவே, மதநூல்களின் வசனங்களையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் கருதினார். மற்றொரு அர்த்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், அடிமை நிலைக்கு தெய்வீக சட்டங்களின் தத்துவங்கள் இனி பொருந்தாது என்று அவர் தீர்ப்பளித்தார். இவ்வாறாக, சமய மறைகள் கைவிடப்பட்டு, மதச்சார்பற்ற அடிப்படையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், அல்லது நவீன நிலைக்கு ஏற்றவாறு அவற்றை மீள் வாசிப்பு செய்து மறுவிளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.  அதே சமயத்தில், ‘அர்ரிஜாலு கவ்வாமுனா அலனிசா’ (arrijaalu qawwamuuna alannisaa) என்ற குர்ஆனின் வசனம் பெண்களை ஒடுக்கி ஆண்களின் கீழ் நிலையில் வைக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, அந்த வசனம், பெண்கள் மீது கடுமையாக உள்ளதாக அவர் கருதினார். ஆனால் ‘பெண்கள் தங்கள் வீடுகளில் பிணைக்கப்பட்டிருந்த காலங்களில், ஆண்களே அவர்களுக்குத் தேவைகளை வழங்குபவர்களாக இருந்தனர்’ என்கிற அக்காலச் சூழலையும் பார்க்கிறார். எனவே, குர்ஆன் அத்தகைய சமூக அமைப்பை மகிமைப்படுத்தவோ அல்லது அதை நெறிமுறையாக அறிவிக்கவோ இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் நிகழும்போது, பெண்கள் ஆண்களுடன் இணைப் பங்காளிகளாகும்போது, பெண்கள் ஆண்களுக்கு சமமாகவோ அல்லது உயர்ந்தவளாகவோ ஆக வேண்டும்; மேலும் ஆண்களைப் போலவே குடும்பத்தில் மேலோங்கிய பாத்திரத்தை வகிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றுரைக்கிறார். இன்னொரு எடுத்துக்காட்டாக, திருமண விஷயத்தில் ஆடவர் மற்றும் பெண்டிர், இருவருடைய நிலையைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு பெண்களை விட சிறப்புரிமை ஏதுமின்றி, மாறாக, ஆண்களை விடவும் பெண்களுக்கும் எவ்விதச் சலுகையுமின்றி, சமமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கடவுளால் வேண்டப்படுவனவற்றை மீறாதவரை, ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பியபடி மண ஒப்பந்தத்தை வைத்திருக்க உரிமை உண்டு. விவாகரத்து உரிமை (talaq tajwiz) உட்பட, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்துடன் அவள் அந்த உடன்பாட்டில் ஈடுபடலாம். உண்மையில், பாதுகாவலர் (guardian) என்ற கருதுகோளையே குர்ஆன் அங்கீகரிக்கவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார்; ஒரு பெண் அவள் தெரிவு செய்யும் பட்சத்தில், ‘பாதுகாவலர்’ யாருமின்றி மணம் செய்து கொள்ளச் சுதந்திரம் உள்ளது என்கிறார். ‘இஸ்லாமிய அமைப்பு, அதன் சட்டதிட்டங்களின் படி, பெண்களின் நிலைக்கு ஒரு சாபம்’ என்று சொல்லும் மதச்சார்பற்ற பெண்ணியவாதிகள், இஸ்லாத்தை ஒரு ஒடுக்குமுறையாகச் சித்தரித்து, மேற்கத்திய மதச்சார்பற்ற மாற்றுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களை மதக்கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். குர்ஆனின்  முறையான விளக்கத்தைப் பார்க்கும்போது, பெண் விடுதலையைப் புரிந்துகொள்வது உண்மையில் ஒரு பிரச்சனையா அல்லது தேவையா? பெண் விடுதலை இஸ்லாத்திற்கு இயைந்ததா? இல்லையா? என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்கிறது.   இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, இஸ்லாத்தின் பார்வையிலிருந்து, பெண் விடுதலையைக் காண்பதற்கான விளக்கங்கள், பெண் விடுதலைக்கான சிந்தனை எழுப்பப்பட்ட அதே காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளன என்கிறார். இன்றைய சமூகம் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக, பெண் விடுதலை தொடர்பான சமகாலப் பிரச்சனை இஸ்லாமிய சமூகம் முழுவதும் பரவலாகப் பரவியுள்ளது. எனவே, இந்த நவீன யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஏற்ற விளக்கத்தை, அந்தச் சமூகமே பயன்படுத்திக்கொள்ள, மதிப்புமிக்க பங்களிப்பை அஸ்கர் அலி இஞ்ஜினியர் வழங்கிவிட்டு, அழியாச் சுவடுகள் பதித்துச் சென்றிருக்கிறார். ஆனந்த் பாசு

ஹிஜாப் அணிவது மத அடையாளமா?

ஹிஜாப் அணிவது மத அடையாளமா?

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவரத் தடை விதித்த பிரச்சினை தற்போது அடுத்த வடிவம் பெற்றுள்ளது. தற்போது கர்நாடக அரசு, தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அந்தந்த நிர்வாகம் சொல்லும் சீருடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், இந்தக் கட்டுப்பாடு அரசியல் சாசனம் வழங்கும் மதச் சுதந்திர உரிமைக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளது. மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர, 200க்கும் மேற்பட்ட மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனால், அந்தக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுதின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட வணியில் வடிவமைக்கப்பட்ட இந்து மதச் சாமியார் சிலையை விடவா ஹிஜாப் அணிவது மத அடையாளத்தை முன்னிறுத்துகிறது? தலையில் முக்காடு அணியும் வழக்கம் தென் மாநிலங்களில் அதிகம் இல்லையென்றாலும் வட மாநிலங்களில், குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலப் பெண்களில் அனைத்துப் பெண்களிடமும் உண்டு. கிறித்தவ மதத்திலும் கூட, தொழுகை நேரங்களில் பெண்கள் முக்காடு அணிந்தே தொழகை நிகழ்த்துவார்கள். இந்தியாவில் பல்வேறு மத, சமுதாயப் பெண்களிடையே, வேற்றுக் குடும்ப ஆண்களைக் கண்டால் உடனடியாகப் பெண்கள் தங்கள் தலையில் முக்காடு இட்டுக் கொள்வது இன்னமும் வழக்கமாகவே உள்ளது. ஏதோ ஒரு வகையில் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக்கொள்வது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. ஆனாலும், ஹிஜாப் அணிவது ஒரு மத அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை மத அடையாளமாகவே எடுத்துக் கொண்டாலும், விபூதி குங்குமம் வைப்பது, நாமம் போடுவது போன்றவையும் மத அடையாளங்களே. அவ்வளவு ஏன், ஒரே மதத்துக்குள் பிறரைத் தாழ்த்தும் வகையில் பூணூல் அணிவது சாதியத்தின் அடையாளம் இல்லையா? ஹிஜாப் அணியத் தடை விதிப்பவர்கள், இந்த அடையாளங்களுக்கும் தடை விதிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. ஹிஜாபுக்குப் போட்டியாக காவி ஷால் அணிந்து வருவது மதவாத அரசியலின் மற்றொரு வெளிப்பாடே அன்றி வேறில்லை. கல்லூரி மாணவிகள் வரை தற்போதைய சிற்பான்மையினர் மீதான மதவெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது இந்த சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதை மரமாகிக்கொண்டு இருப்பதன் நிகழ் சாட்சி. ஹிஜாப் என்பது ஆணாதிக்கத்தின் சாட்சி என்றாலும் இன்றைய பெண்களில்‌ சிலர் அதை அலங்காரத்தின் வடிவமாக மாற்றிக்கொண்டு பல்வேறு வண்ணங்களில் பல்வேறு டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த வழிபபாட்டுப் பாடல்கள், நடைமுறைகளை இன்னமும் வைத்துக்கொண்டு,கல்லூரி வயதில் உடைக் கட்டுப்பாடு விதிப்பது என்பது இன்னமும் இந்தச் சமூகம் எவ்வளவு பிற்போக்கான சிந்தனைகளில் உழல்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஜீவன் சந்தியா

ஜீவன் சந்தியா

திரை விமர்சனம் அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா. காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக. மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை. நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும்,  ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும், அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள். தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை. பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு. சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர். அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும். காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

அம்மாவுக்குக் கல்யாணம்

அம்மாவுக்குக் கல்யாணம்

வேர்களாகும் விழுதுகள் – 3 “அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை பிடிப்பானாம். ஆனாலும் ரெண்டாங் கல்யாணத்துக்கு இம்புட்டு ஆடம்பரம் ஆகாது”. கெட்டி மேளச் சத்தத்தை மீறி, பின்னாலிருந்து குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். மெல்லிய குரலென  நினைத்துப் பேசிக்கொண்டிருந்த பெண்கள்  அசடு வழிய சிரித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர். அது ஒரு திருமண வீடு. மணப்பெண்ணின்  முதல் திருமணம் தோல்வியுற்றதால் நடைபெறும்  மறுமணம், அப்பெண்களின் வாயில் அவலாகிக் கொண்டிருந்தது. கணவனை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், மணமுறிவு பெற்று வாழ்பவர்கள், திருமணமாகாதவர்கள் என, தனித்து வாழும் கணிசமான  பெண்களால் நிரம்பிக் கிடக்கிறது  இந்தச் சமூகம். ஆனாலும்கூட, ஒரு  பெண்ணிற்கு  மறுமணம் என்பதை இன்னும்  இங்கு இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்களின்  சிறகுகளை முறிப்பதில் இதுபோன்ற  பெண்களுக்கும் பங்குண்டு. ஐ.நா.வின் ‘உலகப் பெண்களின் முன்னேற்றம் 2019 – 2020; மாறும் உலகில் குடும்பங்கள்’  என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள அறிக்கையில், உலகிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. அதே நேரத்தில் இந்தியாவில்தான் மிகக்  குறைந்த அளவில் 1.3 சதவீத  விவாகரத்துகள் (1000 திருமணங்களில் 13 திருமணமே மணமுறிவு)  நடைபெறுவதாகவும் குறிப்பாக  நகர்ப்புறங்களில் மட்டுமே நிகழ்வதாகவும்  கூறுகிறது. இந்த இரண்டு முரண்களுக்குமான காரணத்தை ஆராய்ந்தால் மீண்டும் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்ற சக்கரங்களுக்குள்ளேயே சுழல வேண்டியிருக்கும்.  இந்தியாவின் இந்த மிகக் குறைவான மணமுறிவுகளுக்கு பின்னால் இருப்பது மகிழ்வான, புரிதலான திருமண உறவா? அல்லது சமுதாய அழுத்தமா? என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியே. பில்கேட்ஸ் – மெலிண்டா இணையரின் திருமண முறிவு அறிக்கையைக்கூட  ஏற்றுக்கொள்ள முடியாமல் பொங்கும் கூட்டத்தை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஏனெனில், இன்றும் இங்கு விவாகரத்து  என்பது, தனி மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல் எனப் புரிந்து கொள்ளப்படாமல், வெட்கத்திற்குரியதாகவும் அவமானத்திற்குரியதாகவும், குடும்ப கௌரவமாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது.  இந்தியாவின் முதல் (கணவனை இழந்த) பெண் மறுமணம் 1856 டிசம்பர் 7 ஆம் தேதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் முயற்சியால்  வங்கத்தில் நடைபெற்றதாக  வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றும்கூட கணவனை இழந்த பின்போ அல்லது மணமுறிவுக்குப் பின்போ மறுமணம்  செய்யத் தயங்கி, துவண்டு நிற்கும் பெண்களே இங்கு அதிகம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மறுமணங்கள் இன்று பரவலாக மனதளவில்  ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்கூட, ஆணின் மறுமணம் போல பெண்ணின் மறுமணம் எளிதாகக் கை கூடுவதில்லை. குறிப்பாக குழந்தையுடைய  பெண்கள்  மறுமணம் செய்யக்கூடாது என்றே உலகம் எதிர்பார்க்கின்றது. பெண் என்பவள் ஆணைச் சார்ந்தே வாழவேண்டும் என நிர்பந்திக்கும் இதே சமூகம், இணையர் இறந்து விட்டாலோ, பிரிந்து விட்டாலோ பெண் தனியாகவே வாழ்ந்து முடிக்க  வேண்டும்  என்றும் எதிர்பார்க்கிறது. குழந்தையுடன் மறுமணம் நோக்கிச் சிந்திக்கும் பெண்ணைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, அவளை வாழ்நாளெல்லாம் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது, இன்றும்.  ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே  பெண்களின் மறுமணம் குறித்து சிந்தித்திருக்கிறார் எழுத்தாளர் சூடாமணி. இவரது ‘இரண்டாவது அப்பா’  என்ற சிறுகதை, ஏழு வயதுக் குழந்தையுடன் கணவனை இழந்த கதைநாயகி, துணிவுடன் இரண்டாம் திருமணம் முடித்து அதனை எதிர்க்கும் தன் தாயையும் ஏற்கத் தயங்கும் மகனையும் அழகாக சமாளித்து, தன்னம்பிக்கையுடன்  புது வாழ்வைத் தொடர்வதை விவரிக்கிறது. சூடாமணியின் ‘இரண்டாம் அப்பா’  காலத்திற்கும்  முன்பே  ஒலித்த  குரலாய், பெண்கள் மறுமணத்தை ஓங்கிச் சொல்கிறது. இன்றும்  பெண்ணின் மறுமணத்தை கள்ளத்திருமணம் போல் நடத்தும் பெற்றோர்களுக்கிடையே தன் மகள்   சௌந்தர்யாவின் மறுமணத்தை  ஊரறிய  நடத்தி, பொருள் பொதிந்ததாக மாற்றி,  வாழும்  உதாரணத் தந்தையாகத் திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.  இந்த சமூகத்தில் அப்பாவாக இருப்பதற்கும் அம்மாவாக இருப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அப்பா மறுமணம் முடித்தால் ஏற்றுக் கொள்ளும் குழந்தைகளால்  அம்மாவுக்கு மறுமணம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. காரணம், நாம் உருவாக்கி வைத்திருக்கும்  அம்மா என்ற புனித பிம்பம்.  தன் உணர்வுகளை அழித்து, குழந்தைகளுக்காகவே தங்கள் வாழ்வை  ஒப்புக் கொடுத்துவிடுபவள்தான்  தியாகத்தாய் என  செல்களில் உறைந்து கிடக்கும் அழுக்கை அகற்றினாலன்றி  பெண்ணிற்கான மறுமணங்கள் சாத்தியப்படாது. இப்படிப்பட்ட சூழலில்தான் அம்மாவிற்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு  என்பதைப் புரிந்து, தங்கள் தாய்க்கு திருமணம் முடித்து வைத்து நம்பிக்கை வெளிச்சம் தந்திருக்கின்றனர் இரண்டு  இளைஞர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும். அவர் பெயர் மினி. கேரளாவில் கொல்லம் அருகில் பள்ளிமோன் என்னுமிடம். திறமையான, அன்பான ஆசிரியை. மகன் கோகுல் ஸ்ரீதர். கணவரின் கட்டளைக்கிணங்க, குழந்தைக்காக பணியை உதறிய உதாரண மங்கை.    திருமண பந்தம் சுகப்படவில்லை. தினந்தோறும் வாக்குவாதம், பிரச்சினை, சண்டை. குழந்தைக்காக கசப்பான திருமண வாழ்வை சகித்துக்கொண்டு, பூட்டிய கதவுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோரில் ஒருத்தியாக  வாழ்ந்தார். அப்படியான ஒரு நாளில்  தலையில் விழுந்த அடியால் இரத்தம் சொட்டச்சொட்ட நின்ற அம்மாவைப் பார்த்து பதறிய மகனிடம், “ஒண்ணுமில்லடா, அம்மா உனக்காக என்ன வேணா தாங்கிக்குவேன்” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் தன்னைத் தூங்க விடவில்லை எனக் கூறுகிறார்  கோகுல் ஸ்ரீதர். ஏனெனில், இது போன்ற வன்முறைகள் அம்மாவின் மீது ஏவப்படுவது  முதன்முறையல்ல.  ‘உனக்காகத் தாங்குவேன்’ என்பது மினியின் வார்த்தைகள் மட்டுமல்ல. இந்தியாவின் பெரும்பான்மை அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்காகவே  எந்தத் துன்பத்தையும்  தாங்கிக் கொண்டு, திருமண பந்தத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சண்டை, சச்சரவு, பிரச்சினைகள் சூழ்ந்த சூழலில் வாழும், வளரும் குழந்தைகள் நம்பிக்கையின்மை, மன அழுத்தம், தனிமை உணர்வுடனே வாழ்வதாகக் கூறுகிறது சைல்ட் ட்ரெண்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு.  கோகுலும் அப்படியே வளர்ந்தான், வாழ்ந்தான்.  தொடர்ந்த பிரச்சினைகளுக்குப் பிறகு, தன்  அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அப்பாவின் வீட்டை விட்டு வெளியேறிய அந்தக் கணத்தில் அவருக்கென ஒரு வாழ்வை அமைத்துத் தரவேண்டும் என, தான் முடிவெடுத்ததாக கோகுல் கூறுகிறார். தனக்காக தன் தாய் இதுவரை அனுபவித்த கொடுமைகளின் முற்றுப் புள்ளியாக  மறுமணத்தை யோசித்திருக்கிறார் இந்த இளைஞர்.  “எனக்காக இவ்வளவு காலம் எல்லாவற்றையும் எதிர்த்து வாழ்ந்த அம்மா கொஞ்சம் தனக்காகவும் வாழட்டும்” என விரும்பினேன் எனக் கூறும் கோகுல், மறுமண முடிவுக்கு தன் தாயை சம்மதிக்க வைக்க, பெருமுயற்சி எடுக்க வேண்டி இருந்திருக்கிறது. தன் தாயின் பள்ளிப் பருவ நண்பன் வேணு என்பவரே வரனாக வந்தபோது இந்த மறுமணம் கைகூடியிருக்கிறது. தன் அம்மாவின் மறுமண முடிவை மற்றவர்கள் தவறாக சித்தரித்து விடக் கூடாது என்பதே கோகுலின்   கவலையாக இருந்தது. அதனால் அவரே இந்த நிகழ்வை முகநூலில் பகிர்ந்து  “அம்மாவின் இரண்டாவது திருமண முடிவை ஏற்றுக்கொண்டு, அவருக்கான மரியாதையை அளியுங்கள்” என்று கூறிய இந்த முற்போக்கு இளைஞனை சமூக வலைத்தளங்கள் கொண்டாடித் தீர்க்கின்றன. “அப்பாக்கள் மறுமணம் செய்தால் ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள், அதையே அம்மாக்கள்  செய்தால் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?” என்று முடித்த  கோகுலின் நியாயமான கேள்விக்கு  இளைஞர்களே பதிலாக வேண்டும்.   தமிழ்நாட்டின் சித்தார்த்தன் கருணாநிதி எழுதியுள்ள, Right to Marry  என்ற நூலை வாசித்துவிட்டு, அவரைத் தொடர்புகொண்டு I’m proud of you என்று கூறிய என் வார்த்தைகளுக்கு கேள்விகளாலேயே சாட்டை வீசுகிறார் அவர். “இதில்  பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இன்றும்  இதைப் பெருமையாகப் பேசுகிறோம் என்பதே வேதனைக்குரிய விஷயமல்லவா? இது சாதாரணமான, இயல்பான ஒரு நிகழ்வாக மாற இந்தச் சமூகத்திற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும்?” என்று கேள்வியால் அசரடிக்கும்  சித்தார்த், தந்தை இறந்து  பத்தாண்டுகள் கழித்து தன் அம்மா செல்விக்கு, 47 வயதில்  மறுமணம் செய்து வைத்திருக்கிறார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், வலையாம்பட்டு என்ற கிராமத்தில் வறுமையில் சுழன்ற குடும்பம் அது. 2009-ல் கணவர் இறந்துவிட,  கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த சித்தார்த் கருணாநிதி, பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகிழ்னன்  என்ற இரு மகன்களோடு, வறுமையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் செல்வி அம்மாள்.  இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் படும் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தார்.   வழக்கமான தமிழ் அம்மாவாக தன் ஆசாபாசங்களைத் தள்ளிவைத்து, தன் பிள்ளைகளின் படிப்பிற்காக உழைத்துத்  தேய்ந்தார். மகன்கள் இருவரும் படித்து, வேலை தேடி, நகரம் நோக்கி நகர்ந்துவிட தனிமை அவரைத் தின்றது.  நல்லகாலம்,  சராசரி மகன்களாய் இல்லாமல், இருவரும் தாயின் வலியை உணர்ந்து கொண்டனர். சித்தார்த், தன் தம்பியோடு கலந்தாலோசித்து அம்மாவுக்கு மறுமணம் செய்யும் முடிவைக் கையிலெடுத்தார். ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சமூகத்தின் கட்டமைப்பு குறித்தும் கவலைப்பட்ட செல்வி அம்மாள் மறுத்து ஒதுங்கினார். மனம் தளரவில்லை சித்தார்த்தன். 2017 ல் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்தது. இறுதியில் பிள்ளைகளே வென்றனர்.  அருகிலுள்ள சூலாங்குறிச்சியில் மறுமணம் முடிய, இன்று குடும்பமுமே உற்சாகத்தில். “பத்தாண்டுகளுக்கு முன்பே எனது ஆசிரியர் ஒருவர் அம்மாவின் மறுமணம் குறித்து என்னிடம் பேசியபோது அருவெறுப்பாக இருந்தது. ஆனால் நானும் காதலித்து,  பிரிவு நேரிட்டபோதுதான், அம்மாவிற்கு மறுமணம் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார்  கோவையில் ஆங்கில மொழிப் பயிற்றுனராக இருக்கும் சித்தார்த் கருணாநிதி.  “ஆணோ, பெண்ணோ இணையரில் ஒருவர்  இறந்து விட்டால் சிறிது காலம் எடுத்துக் கொண்டு மீண்டும் மணம் புரிவதில் என்ன தவறு?”  என்று அவர் கேட்கும் கேள்வியின் நியாயத்தை ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் உணர வேண்டிய தருணமிது. “நான் கணவரை இழந்து தனியாக இருந்தபோது உதவி கேட்டு எந்த ஆண்களிடமாவது பேசினால் கூட, என்னைத் தவறாகப் பேசியவர்கள், நான் மறுமணம் முடித்த பிறகு என்னை அவ்வாறு பேசுவதில்லை. என் மீதான அவர்கள் பார்வை மாறியிருக்கிறது” என மகிழ்ச்சியோடு கூறும் செல்வி அம்மாளின் வார்த்தைகளிலுள்ள மற்றொரு கோணம் பெண்கள் மறுமணத்திற்கு வலுசேர்க்கிறது. இந்தியாவில் 1.36 மில்லியன் பேர்   விவாகரத்தானவர்கள் என்றும், 40 மில்லியன் பெண்கள் கணவரை இழந்தவர்கள் என்றும் 2016-ல் வெளியான BBC  அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, தனித்து வாழும் ஆண்களை விட, தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்.  முறிந்து  போகும் திருமண பந்தங்களிலும், முடிந்துபோன திருமண வாழ்க்கையிலும் தோற்றுப் போய்விட்டோம் என்று எண்ணாமல் மீண்டும் ஒரு வாழ்வை ஏற்றுக்கொள்ள பெண்கள் முன்வர வேண்டும். புராதனச் சிந்தனைகளைத் தூக்கிக்கொண்டு, தனிமையில்  உழலாமல், விருப்பமான வாழ்வை அமைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை.   ஊர்

உண்மையான சமூகநீதி நாள்

உண்மையான சமூகநீதி நாள்

பெரியார் பிறந்த செப்.17-ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரியார் விரும்பிய சமூக நீதி எது? அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதா? வெறும் உறுதிமொழி மட்டும் ஏற்பதா? பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தங்களுக்குத் தாங்களே இட ஒதுக்கீடு வழங்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் அடைந்தவர்கள் வேற்றுகிரகவாசிகளைப் போல நடந்துகொள்ளும் அளவிற்கு அதன் வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது என்பது சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சமூக நீதி என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிட்டதா? இதனைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா? ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களுக்கான இடப் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? எப்போது கட்சிப் பதவிகளில் வாரிசு அரசியல் ஒழிந்து, தலைமைப் பொறுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும்? எப்போது ‘கல்வியும் மருத்துவமும் விற்பனைக்கு’ என்ற நிலை மாறி அனைவருக்கும் சமமான கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? இட ஒதுக்கீட்டின் பலன் எப்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்? மிக முக்கியமாக, எப்போது பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாகும்? இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, “நான் இப்போது பேசுவதைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பிய பெரியாரின் கனவு நனவாகும் நாளே உண்மையான சமூக நீதி நாளாகும். அப்படியான ஒரு நாள் உருவாகும் வகையில், இளைய தலைமுறையை வழிநடத்துவோம் என்று உறுதியேற்றுச் செயல்படுவதே உண்மையான சமூகநீதியை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இருக்கும்.

சமத்துவத் தலைவர்

சமத்துவத் தலைவர்

பெரியார் பக்கம் 21 புரட்சியாளர் பெரியார் (3) எழுத்துச் சீர்திருத்தம் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி துல்லியமான கருத்து கொண்டிருந்தார் பெரியார். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியே நடத்தியிருப்பதற்கான சான்றுகள் அவர் தரும் முறைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழில் எழுத்துகள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துகள் அதிகம். தமிழ் உயிர் எழுத்துகளில் ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகளைக் குறைத்துவிடலாம். இவை இரண்டும் தேவையில்லாதவை. மேலும் இவை கூட்டெழுத்துகளே ஒழிய, தனி எழுத்துகள் அல்ல. அவற்றுக்கு மாற்றாக ஐ=அய், ஒள=அவ் என எழுதலாம். இப்படிக் குறைப்பதால் மொத்தத்தில் 38 எழுத்துகள், அதாவது உயிரெழுத்து ஐ, ஔ ஆகிய இரண்டும் அவை ஏறும் மெய்யெழுத்துகள் 2×18=36, ஆக மொத்தம் 38 எழுத்துகள் ஞாபகத்திற்கும் பழக்கத்துக்கும் தேவையில்லாதவை ஆகிவிடும்.  மற்றும் மெய்யெழுத்துகளில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில் நெடில் எழுத்துகள் கொண்ட 18×4=72 தனி உருவ எழுத்துகளை நீக்கிவிட்டு, தனிச் சிறப்புக் குறிப்பை உண்டாக்கி உயிர்மெய் 10, மெய் 18, குறில் நெடில் குறிகள் 9, ஆய்தம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துகளாகச் சுருக்கிவிடலாம். அடுத்தபடியாக, மெய்யெழுத்துகளில், ந, நு, ஞ ஆகிய மூன்றையும் எடுத்துவிடலாம். ன்+த=ந, ன்+க=நு, ன்+ச=ஞ என்று ஆக்கிவிடலாம். இப்படிச் செய்தால் உயிர் 5, மெய் 15, சிறப்புப் பகுதி 8, ஆய்தம் 1 மொத்தம் 29 உருவ எழுத்துகளிலேயே கூடத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சுருக்கிவிடலாம். எப்படியும் தமிழ் எழுத்துகள் குறைக்கப்படவேண்டும். கற்கும் குழந்தைகள் மூன்று மாதங்களில் படிக்கத் துவக்கலாம் என்பதுதான் என் ஆசை என்று தன் உள்ளக்கிடக்கையை வெளியிட்ட பெரியார், இந்த எழுத்துச் சீர்திருத்தம் செய்வதால் தமிழ் மொழிக்கோ, இலக்கணத்திற்கோ எவ்விதக் குறைபாடோ கேடோ விளையாது என்று உறுதி கூறினார். எனினும் நினைத்தோம், சொன்னோம், செய்தோம் என்று மின்னல் போக்கில் பெரியார் செயல்படவில்லை. உரியவர்களின் உளப்போக்கை மாற்றி ஒப்புதல் பெறவே முனைந்தார். பெரியாரின் முதல் தளபதிகளில் ஒருவராகிய திரு.குருசாமி 1932இல் துறையூரில் நடந்த தமிழர் மாநாட்டின் முன் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் ஒன்றை வைத்தார். அதை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளாமல் மாநாட்டுத் தலைவர் தள்ளிவிட்டார். 1933 ஆம் ஆண்டின் கடைசியில் சென்னையில் நடந்த தமிழன்பர் மாநாட்டிற்கு எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானத்தை, திருவாளர்கள் கே.எம்.பாலசுப்ரமணியம், சேலம் ஆர்.நடேசன், சாத்தான்குளம் அ.இராகவன் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார்கள். மாநாட்டில் அத்தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதைப்பற்றி, நுணுக்கமாக ஆய்ந்து கருத்து சொல்ல, பதினோரு பேர்கள் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. ஆனால் அக்குழு கூடவேயில்லை. பெரியார் ஓராண்டு காலம் பொறுத்திருந்துவிட்டு, 1.1.1935 முதல் தமிழ் நெடுங்கணக்கில் பலவற்றைப் புதிய முறையில் அமைக்கத் தலைப்பட்டார். ணா, னா, றா, ணொ, னொ, றொ, ணை, னை, லை, ளை போன்ற எழுத்துகளின் படத்தில் உள்ளபடியான பழைய வரி வடிவத்தை மாற்றி தற்போதைய நடைமுறை வரிவடிவில் எழுதுதல் ஆகும். பெரியாரின் ‘குடி-அரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ இதழ்கள் இம் முறையைப் பின்பற்றின. ‘குடி-அரசு’ வெளியீடுகள் மேற்கூறிய எழுத்து மாற்றங்களைக் கையாண்டன. திரு.ஓமாந்தூர் இராமசாமி முதலமைச்சராகவும், திரு.டி.எஸ்.அவினாசிலிங்கம் கல்வியமைச்சராகவும் இருந்தபோது தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஆய்ந்து ஆலோசனை கூற, பல தரப்பினர்களையும் கொண்ட குழுவொன்று நிறுவப்பட்டது. அதில் பன்மொழிப் புலவர் டாக்டர் மீனாட்சி சுந்தரனார், டாக்டர் மு.வரதராசனார், கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியோர் இடம் பெற்றிருந்தனர். அக்குழு, பெரியார் கையாண்ட எழுத்துச் சீர்திருத்தங்களை ஆதரித்துப் பரிந்துரைத்தது. அரசு அப் பரிந்துரைகளைப் பார்த்து ஆணையிடுவதற்கு முன், அமைச்சரவையில் மாறுதல் ஏற்பட்டது. புதிய அமைச்சரவை, இதைப்பற்றி முடிவெடுக்காமல், காலங் கடத்திவிட்டது. இப்படி இருபத்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. இதற்கிடையே தமிழகப் புலவர் குழு, பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்தது. பின்னர், தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவினை ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவதென்று மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் பாராட்டுதலைப் பெற்றது. விழாக்களைத் திட்டமிட ஓர் உயர்மட்டக் குழுவொன்று டாக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் நியமிக்கப்பட்டது. அக்குழு, விழாக் கொண்டாட்டங்களுக்கு அப்பால், நிலையாக நிற்கக்கூடிய, பெரியாருக்கு உடன்பாடான, சில ஆலோசனைகளைக் கூறிற்று. அதில் ஒன்று, பெரியார் கையாண்ட தமிழ் எழுத்து முறையைப் பின்பற்றுவது என்பதாகும். ஒருமனதாகக் கூறப்பட்ட இப்பரிந்துரையைத் தமிழகஅரசு உடனடியாகக் கவனித்து, ஏற்றுக்கொண்டு ஆணை பிறப்பித்தது, போற்றத்தக்கதாகும். பெரியார் கையாண்ட எழுத்து முறைகளில் ‘ஐ’ என்பதை ‘அய்’ என்றும், ‘ஔ’ என்பதை ‘அவ்’ என்றும் எழுதுவதும் அடங்கும். மேற்படி அரசு ஆணைக்குப் பிறகு இதைப்பற்றிச் சிலர் சலசலப்பை எழுப்பினார்கள். அரசின் சார்பில் மறுபரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. ‘ஐ’, ‘ஔ’ என்பவை ஓரொலி எழுத்துகள் அல்ல, ஈரொலிகள் சேர்ந்தவை. அவற்றைப் பெரியார் கையாண்டபடியே இனிக் கையாளுவதில் குறையேதும் வந்துவிடாது. முதலில் அரசு இட்ட ஆணைப்படியே செயல்படலாம்.  பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் அவருடைய புரட்சிகரமான சிந்தனையின் வெற்றிக்குச் சான்றாக விளங்குவதோடு, தமிழ் அச்சுக்கும், தட்டச்சுக்கும் உதவியாக அமையும் என்பது உறுதி. பெண்களின் திருமண வயது பெண்களின் திருமண வயது 16-க்கு மேற்பட்டிருக்க வேண்டுமென்று அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் முடிவு செய்தபோது, புருவங்களை நெறித்தார்கள்; வசைமாரி பொழிந்தார்கள். இன்று இது சட்டமாகிவிட்டது. நடை முறையில், எண்ணற்ற பெண்கள், பதினெட்டு இருபது வயது வரை திருமணம் செய்து கொள்ளாதிருக்கிறார்கள். பழைய காலத்தில், இது ஓயாத பேச்சுக்கு இடமாகும். இப்போது அப்படியில்லை. ஒவ்வொரு சுயமரியாதை மாநாட்டிலும் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் பலித்துவிட்டது. ஆண் பெண் இருவருக்கும் ஒரே மாதிரியான சொத்துரிமை என்னும் கொள்கை சட்டமாகிவிட்டது. பழையகாலம் போல், மூன்றுநாள் திருமணம் தேடினாலும் கிடைக்காது. பெரும்பாலான திருமணங்கள் ஒன்றரை நாள் திருமணங்களாகி உள்ளன. புரோகிதம் நீங்கிய திருமணங்கள் ஒரு வேளைத் திருமணங்களாகி உள்ளன. இதில் மேலும் செலவுக் குறைப்புக்கும் காலச் சிக்கனத்திற்கும் இடம் இருக்கிறது. இத்தகைய சீர்திருத்தங்களை இளைஞர்கள் போதிய துணிவோடு முன்னிலும் அதிகமாக நடைமுறைப்படுத்துவார்களாக. குடும்பக் கட்டுப்பாடும் கடவுள் மறுப்பும் ‘அளவான குடும்பம் வளமான வாழ்வு’ என்னும் கொள்கையைத் தென்னகத்துப் பொது மக்களிடையே பரப்பிய முன்னோடி தந்தை பெரியார் ஆவார். அப்போது கிண்டல் செய்தவர்களே ஆட்சியாளராக மாறியபோது, அதைத் தீவிரமாகச் செயல்படுத்த முனைந்தது பெரியாரின் மற்றோர் கொள்கைக்கு வெற்றியாகும். வெவ்வேறு சமய நம்பிக்கை உடையவர்கள், நம்பிக்கையில்லாதவர்கள் ஆகிய அனைவருக்கும் பொதுவான அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், பொது அமைப்புகள் ஆகியவற்றில் கடவுள் படங்கள் இருத்தலாகாது, பூசைகள் நிகழ்த்தலாகாது என்று பேரறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது ஆணையிட்டார். பல பொது இடங்களில் இவ்வாணை செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமூட்டுவதாகும். பொதுக்கூட்டங்களின் தொடக்கத்திலாவது முடிவிலாவது அரசு வாழ்த்து, கடவுள் வணக்கம், தலைவர் வணக்கம் பாடக்கூடாதென்ற தன்மான இயக்க முடிவு, அவ்வியக்கத்திற்கு அப்பால் செயற்படவில்லை.  எத்தனையோ சிலை திருட்டுகள் வாரந்தோறும் வெளியாகின்றன. தமிழ்நாட்டு நாத்திகர் எவரும் எந்தச் சிலைத் திருட்டுக் குற்றத்திற்கும் ஆளாகவில்லை என்பது பெரியாருக்குப் பெருமை; பகுத்தறிவு இயக்கத்திற்குச் சிறப்பு; நாத்திகர்கள் மற்றவர்களைவிட ஒழுக்கச்சீலர்களாக, உண்மையாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமென்று, தந்தை பெரியார் கற்றுக்கொடுத்த பாடத்தைத் தன்மான இயக்கத்தவர்கள், கசடறக் கற்றுக்கொண்டார்கள்; கற்றபடி நிற்கிறார்கள் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. கடவுள் நம்பிக்கை கோயில் வழிபாடு, இவைகளைப் பொறுத்தமட்டில் இலட்சக்கணக்கானவர்கள் இந்நம்பிக்கையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் கோடிக்கணக்கானவர்கள் சமயநம்பிக்கையை விட்டபாடில்லை. சிலை வணக்கத்தை ஒதுக்கியபாடில்லை. இவற்றிற்காக, பொருளையும் நேரத்தையும் சிந்தனையையும் பழையபடியே பாழாக்கி வருகிறார்கள். தாமே, நேரே, பொருள் படாடோபமின்றி, வழிபடும் அளவுக்குக்கூடப் பெரும்பாலான ஆத்திகர்கள், தெளிவோ, துணிவோ பெறவில்லை. ‘ஏட்டிக்குப் போட்டி’ மக்கள் பிரிவில் எங்கும் உள்ள மனநோயாகும். தமிழர்களுக்கோ இந்நோய் அளவுக்குமீறி செறிந்துள்ளது. எனவே, பலவேளை, தங்கக்கூரை, வெள்ளித்தேர் போன்ற தேவையற்ற ஆடம்பரங்களில், வழிபாட்டின் பேரால், திளைக்கிறார்கள். இது பெரியாருக்கோ அவரது கொள்கைக்கோ இழுக்கல்ல. தமிழர்களுடைய சிந்தனைப் போக்கிலுள்ள குறைபாடுதான். வெளிச்சத்தில் இருக்க வேண்டுமென்பதற்காக  சமுதாயத்திற்குத் தவறான வழிகாட்டும் ‘பெரியவர்களின்’ கோணல் புத்தி. சமதர்மத் திட்டம் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28, 29 தேதிகளில் ஈரோட்டில் சுயமரியாதைத் தொண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி அதில் சமதர்மத் திட்டம் ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியதை முன்னரே கண்டோம். பொருளியல் அமைப்பை மாற்றும் கொள்கையைப் பெரியார் வீரமாகப் பரப்பி வந்தார். இரயில்வே துறை நாட்டுடைமையாக வேண்டுமென்பது பெரியார் தீட்டிய சமதர்மத் திட்டத்தின் ஓர் பகுதியாகும். அது பலித்துவிட்டது. சாலைப் போக்குவரத்துகள், நாட்டுடைமை ஆகவேண்டுமென்பது அத்திட்டத்தின் மற்றோர் கிளை. அதுவும் பெருமளவு பலித்துவிட்டது. கப்பல் போக்குவரத்து இனி நாட்டுடைமை ஆகவேண்டும். விமானப் போக்குவரத்து நாட்டுடைமையாகிவிட்டது எல்லோரும் அறிந்ததே. தொழில் துறைகள் போன்ற உற்பத்திச் சாதனங்களின் நிர்வாகத்தையும் அதன் இலாபத்தையும் தனிப்பட்ட மனிதர்கள் அடையாமலிருப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் அமைப்புகளின் வழியாகச் செய்ய வேண்டுமென்னும் பெரியாரின் சமதர்மத் திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது. ஆனால், அதற்குப் பிறகு அக்கட்சிக்கு ஆளும் வாய்ப்பே கிட்டவில்லை. அறிஞர் அண்ணாவின் பாராட்டு ஈராண்டு காலம் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா, பெரியார் எனும் பகுத்தறிவுப் பல்கலைக்கழகத்தின் தலை மாணாக்கர் ஆவார். அவர் ‘விடுதலை வரலாறு’ என்ற நூலில் பெரியாரைப் படம் படித்துக் காட்டுகிறார். அது இதோ: ‘கல்லூரி காணாத கிழவர். காளைப் பருவம் முதல் கட்டுக்கடங்காத முரடர். அரசியல் நோக்கத்துக்கான முறையிலே, கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர். பொதுமக்கள் மனம் புண்படுமே; புண்பட்டவர்கள் கோபத்தால் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்ப வேண்டுமென்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர். அவர், யார் யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுவர். யாரைக் காண வேண்டுமோ அதற்கேற்ற கோலம் வேண்டாமா என்ற யோசனை அற்றவர். தமிழ் ஆங்கிலத் தினசரிகளின் ஆதரவு இல்லாதவர். ஆரிய மதம், கடவுள் எனும் மூடமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடு வருமென்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டப்பட மறுப்பவர்…’ மேற்கூறியபடி பெரியாரின் ஆளுமையைக் காட்டிய அண்ணா , அவருடைய சாதனைகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘பெரியார், எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக்கூடிய செயல்களை இருபதே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். “அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக்கொண்டால், நாட்டினுடைய விழிப்பினுக்கு

அழகு எங்கள் அடையளமல்ல

அழகு எங்கள் அடையளமல்ல

வேர்களாகும் விழுதுகள் 2 “டீச்சர்… டீச்சர்… இனிமேல் இவ  வீட்டுக்கு  ஓடி வந்தா மூஞ்சிலேயே ஆசிட்ட ஊத்துங்க” என்ற குரல் கேட்டு, குனிந்து எழுதிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். ஐந்து வயதுப் பெண்ணைப் பிடித்து தர தரவென இழுத்து வந்த அந்த இளம் தாய்க்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து  வயதுக்குள்  தானிருக்கும். அந்தத் துறு துறு குட்டிப்பெண் என் வகுப்பு இல்லையென்றாலும், அரசுப் பள்ளிகளில் ஒரு வசதி உண்டு. பள்ளிக்கு ‘செட்’ ஆகும் வரை பிடிச்ச டீச்சர்களிடம் இருக்க ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதுண்டு. அப்படி என்னிடம் வந்த வாண்டு  அது. கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் வீட்டுக்கு ஓடி ஓடிப் போவதால், தன் தீப்பெட்டி ஒட்டும்  வேலை கெடுகிறதே என்ற கவலை தாய்க்கு. அது மட்டுமல்ல, “தலைச்சான் ஆம்பளப்புள்ள பொறந்தா நீ அமோகமா வருவ” என்று குறி கேட்டு வந்ததற்கு மாறாக, பெண்குழந்தை பிறந்ததால், தாய்க்கும் தகப்பனுக்கும் அந்தக் குழந்தை மேல் கோபம். அதை அவ்வப்போது வெளிப்படையாய்க் காட்டுவதுண்டு. ‘அதற்காக இப்படியெல்லாமா ஐந்து வயதுக் குழந்தையைத் திட்டுவார்கள்?’ ஆச்சர்யமாக இருந்தது.   உடலையும் மனதையும் சிதைக்கும் ஆசிட் கொடூரம் பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? திருமணமான இரண்டு வாரத்தில் ஓடும் இரயிலில் ஆசிட் அடிக்கப்பட்ட பிரயாக் சிங், சொந்த சகோதிரியால் ஆசிட் வீசப்பட்ட தௌலத்,வேலூர் குரிசிலாபட்டி பெண் காவலர் லட்சுமி அகர்வால், பெங்களூர் ஹசீனா இவர்களெல்லாம் ஆசிட்டின் தழும்புகளைத் தாங்கி துயரம் சுமப்பவர்கள். உயிரிழந்தவர்கள் பட்டியல் தனி. அவ்வளவு ஏன்? அரசியல் காரணங்களுக்காக பெண் ஐ.ஏ.எஸ். ஆட்சியர் மீதே ஆசிட் அடித்து  சாதனை படைத்ததுதானே தமிழகம்? அந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்கள் சொல்வார்கள், ஆசிட் தங்கள் கனவுகளை, தங்கள் மகிழ்ச்சியை எப்படி சிதைத்ததென்று?  இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 250 முதல் 300 அமில வீச்சுகள் என்ற பதிவு செய்யப்பட்ட  தரவுகளோடு, உலகின் முதலிடத்தில் நிற்கிறது இந்தியா. ஆனால் உண்மையில் நிகழ்வுகள் ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்கிறது ஆசிட் சர்வைவர்ஸ் ட்ரஸ்ட் இன்டர்நேசனல் எனும் அமைப்பு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமில வீச்சுகளுக்கான காரணம் காதலும் குடும்ப வன்முறையாகவுமே இருக்கும் அதே சமயத்தில், உலகெங்கிலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப் படுவோரில் 80 சதவீதம் பெண்களே என்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. இரு ஆண்களுக்கிடையே பிரச்சினை என்றாலும்கூட எங்கும்  அந்த வீட்டுப்  பெண்தானே  பழிவாங்கப்படுகிறாள்? ஆசிட் வீச்சுக்கு 10 வருடங்கள் வரை  சிறைத்தண்டனை உண்டு என்பதெல்லாம் இவர்களுக்கு பயத்தைத் தருவதில்லை. “எனக்கு கிடைக்கலேன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாது’   என்ற ஆணாதிக்க சிந்தனையின் பொருட்டே, தன் காதல் மறுக்கப்படும்போது, எந்த அழகால் ஈர்க்கப்பட்டானோ அந்த  அழகை அழிப்பதன் மூலம் தன் ஆண்மையை நிறுவ முயற்சிக்கிறான் ஆண்.   பெண்களைச்சிதைக்கும் குற்றவாளிகளின்  வாழ்க்கை சில வருட  சிறைத்தண்டனைக்குப் பிறகு இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட, அமில வீச்சுகளுக்கு ஆளாகும் பெண்கள்,  வாழ்க்கை முழுவதும் வலிகளுடன்   வடுக்களையும் அவமானங்களையும் சுமந்து கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளது.   தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் ஆசிட் வீச்சால் ஒரு பெண் படும் துயரை, வலியை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. வழக்கம்போல பணக்காரக் குற்றவாளியை மறைக்க, ஒரு ஏழைப் பையனை பகடைக்காயாக்கி செய்யும் சித்தரவதையையும்  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதி மறுக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியது. இறுதிக்காட்சியில் அதுவரை  தழும்புகளை மறைத்து வந்த பெண்,  தன் முகம் காட்டி தனக்கு அநீதி இழைத்த காவலர் மீது அதே ஆசிட் ஊற்றுவதாக முடிவடையும். ஆனால் ஆசிட்டுக்கு ஆசிட் தீர்வல்ல என்பதுதான் நியதியென்றாலும் கூட அந்தப் பெண்ணின் வலியை நமக்கு உணர்த்துவதற்காக இந்த முடிவை இயக்குநர் பாலாஜி சக்திவேல் அமைத்திருக்கலாம்.  இதுபோன்று, தன் மீது விழுந்த ஆசிட் அபிசேகத்தால் சாவின் விளிம்பு தொட்டுத் திரும்பியவள், சற்றும் துவண்டுவிடாமல் தன் போன்ற பெண்களுக்கான விடியலுக்கு துவக்கவுரை எழுதியிருக்கிறாள் ஒரு பெண். இல்லையில்லை, ஒரு குழந்தை. 17.11.1994 அரபிக் கடலோரம் மும்பையில் அந்த அழகுப்  பிஞ்சு இப்பூமிக்கு வந்தநாள். அன்மோல் ரோட்ரிக்ஸ் என்ற பெயருடன். இந்தக் கொடூர உலகையும், மனிதர்களையும் அறியாத, பிறந்து 60 நாட்களேயான அக் குழந்தை பெருஞ்சிரிப்புடன் தாயின் மார்புகளில் புதைந்து தன் பசி தீர்த்துக் பொண்டிருந்தது. பெற்ற தகப்பனே தன்னை கொல்லத் துணிவான்  என அந்த குழந்தைக்குத்  தெரியவில்லை பாவம். தன் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்பதற்கு தன்னுடைய குரோமோசோம்களே காரணம் என்பதை அறியாது மனைவிகளைக் குற்றவாளியாக்கும்  இலட்சக்கணக்கானோரில் ஒருவன் அக் குழந்தையின் தகப்பன். தான் விரும்பாத  பெண்குழந்தையை, தாயுடன் சேர்த்துக் கொன்றுவிடும் நோக்கில், ஒரு கேன் ஆசிட்டுடன் வந்தான். வந்த வேலையை முடித்தான். சலனமின்றித் திரும்பி நடந்தான்.  பச்சிளம் குழந்தை துடியாய்த் துடித்தது. தாய்க்கு முகம், உடலெங்கும் எரிந்து, சிதைந்தது. அன்மோலின் ஒரு கண் சிதைய முகம், உடலைங்கும் கொடூரக் காயங்கள். முழுவதும் சிதைந்த தாய் மரணிக்க, தந்தை சிறைக்குச் செல்ல குழந்தை உடல் முழுக்கக் காயங்களுடன், ஒரு கண்ணை இழந்து உயிர்பிழைத்தது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியவில்லை.  அடுத்த ஐந்து வருடங்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்  அக் குழந்தையைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டனர். பற்பல அறுவை சிகிச்சைகள், பராமரிப்பு என அத்தனை செலவுகளையும் ஏற்று அந்தப் பூவைத் தாங்கிக் கொண்டனர். தன் கோர முகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாததால்  அன்மோல் இயல்பாகவே வளர்ந்தாள். சிகிச்சைகளின் வலியைத் தாங்கிக் கொண்டாள். ஐந்து வயதான அன்மோலை ஸ்ரீ மானவ் சேவா சங் என்ற ஆதரவற்றோர் மையத்தில்  சேர்ப்பித்தனர்.  அங்கும் அன்பும், கவனிப்பும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், இவரது தழும்பேறிய முகம் கண்டு பயந்த  பிற குழந்தைகள் மற்றும் மும்பை SNDT பல்கலைக் கழகத்தில் சந்தித்த விரும்பத்தகாத பார்வைகளைப் புன்னகையுடன் எதிர்கொண்டே, கடினமான பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களைக் கடக்க நேரிட்டது. சாப்ட்வேர் டெவலப்பராக முதன் முதலில் பணியேற்றபோது, வாழ்வை வென்றுவிட்டதாகவே அவருக்குத் தோன்றியது. ஆனால் அழகை முகத்திலும் நிறத்திலும் உடல் அளவுகளிலும் தேடிக் கொண்டிருக்கும் சமூகம்,   அவரின்  சிதைந்த முகத்துடன் தினம் தினம் பயணிக்க விரும்பாததை உணர்ந்து பணியை உதறினார்.  வேலை தேடிச் செல்லுமிடமெங்கும்  நிராகரிப்பே பரிசாகக் கிடைத்தது.  ஆனாலும் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை. சக ஊழியர்கள் வெறுத்த, அருவெறுத்த தன் முகத்தை உலகுக்குக் காட்ட விரும்பியவர், நிதானமாக யோசித்தார். இந்த முகம்தான் என் அடையாளம், இந்தச் சிதைந்த முகத்துடன் உலகை எதிர்கொள்வேன் என உறுதி எடுத்தார். அவரது தன்னம்பிக்கை   தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவியது. இயல்பிலேயே அழகாக உடுத்துவதும் புதுப்புது நாகரிக அணிகலன்கள் அணிவதும் அன்மோலுக்கு  விருப்பமான ஒன்று. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இவரது ஸ்டைலும்  தன்னை நேர்த்தியாகக் காட்டிக் கொள்வதில் காட்டிய அக்கறையும் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்திருந்தது.  எனவே ஃபேஸ்புக்கில் தன்னுடைய படங்களைத் தொடர்ந்து  பதிவிட, அவருடைய நேர்மறையான  குணங்களும் தன்னம்பிக்கையும் நேர்த்தியான உடையலங்காரமும் நவீன பேஷன்  குறித்த ஆர்வமும் அனைவரையும் கவர்ந்தது. அவரை நோக்கி புகைப்படக்காரர்கள் படையெடுக்க, மிக உற்சாகமாக இன்ஸ்டாகிராம் நோக்கி நகர்ந்தார். இப்போது பாராட்டுகளுடன் ஆடையலங்கார வல்லுநர்களும் பெரிய பெரிய கம்பெனிகளும் இவரைக் கவனிக்கத் துவங்கினர்.  கோடக் மகேந்திரா ஈவன்ட்டில் ரன்வீர் சிங்குடனான ஓர் உரையாடலுக்குப் பிறகு,  நூற்றுக்கணக்கான மாடலிங் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இன்ஸ்டாகிராமில் 232000 பேர் இவரைப் பின் தொடர, சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்கிறார்.  நூற்றுக்கணக்கான பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறார்.  ஷப்னா ஆஸ்மியுடன் இணைந்து ஆன்டி ஜி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலமாக, நடிகையாகப் புதுப் பரிமாணம் எடுத்துள்ளதோடு அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் கேஸ்ட்ரி திரைப்பட விழாவில் 2018-ல்  பெற்றுள்ளார். தன்னை வெறுத்தவர்களை, ஒதுக்கியவர்களைக் கண்டு மூலையில் அமர்ந்து விடாமல், தனக்குப் பிடித்த துறையில் புயலாய் நுழைந்து, தனக்கென ஒரு அடையாளத்தைப்  பதிவு செய்துள்ள அன்மோல், பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்து வாழும், ஆசிட்டால் முகம் சிதைந்த பெண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கிறார்.   தான் உயர்ந்ததோடு மட்டுமல்ல, தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ‘ஆசிட் சர்வைவர் சகாஸ் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் வாயிலாக,  உளவியல் ஆலோசனைகளும் வாழ்வியலுக்கான உதவிகளும் செய்து  வருகிறார். அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதையே  இந்நிறுவனம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 20 பெண்களுக்குப் புது வாழ்வை அளித்திருக்கிறார். தூக்கியெறியப்படும் தருணங்களில்தான் பெண்கள் தங்கள் சிறகுகளை விரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆம், பெண் குழந்தை வேண்டாம் என  பெற்ற தகப்பனால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்ட அன்மோல், வெளித்தோற்றம் கண்டு சமூகத்தால் வெறுத்து  ஒதுக்கப்பட்ட அன்மோல் இன்று பேஷனுக்கான  குறியீடாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டுள்ளார்.  “வாழ்க்கை என்பது ஆசிட்டுடன் முடிந்து விடுவதில்லை. அமிலம் எங்களின் முகத்தை மாற்றலாம். ஆனால் எங்களது  ஆன்மாவை அழிக்க முடியாது. உங்களது அநுதாபமும் பச்சாதாபமும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை எங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே நீங்கள் எங்களுக்குச் செய்யும் உதவி” எனக் கூறும் அன்மோல், இன்று உலகெங்கும்  வாழும் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் மீட்பராக இருக்கிறார். பெண்ணை அழகுசார் அடையாளமாகவே பார்க்கிறது இச்சமூகம். அழகியல் சார்ந்த விஷயங்களால் அவளை ஆராதித்து, அழகு நோக்கியே வழிநடத்தி, வேறு எச்சிந்தனையுமின்றி பெண்ணை எளிதாய் வீழ்த்த  எத்தனிக்கிறது. நீண்ட முடியழகு, சிவந்த நிறமழகு, வடுக்களில்லா முகமழகு, எல்லாவற்றிற்கும் மேலாக மென்மையே பெண்மைக்கழகு என்று நம்ப வைக்கிறது.     அழகோடிருந்தால் மட்டுமே நீ ஜெயிக்க முடியும், முகத்தில் பருக்களுடைய பெண்ணோ, கருமை நிறமுடைய பெண்ணோ தங்கள் நிறுவன முகப் பூச்சுகளின்றி வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது என்று விளம்பரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களும் மூளைச் சலவை செய்துகொண்டிருக்க, உடல் முழுக்க வடுக்களுடன் ஒரு கண் பார்வையின்றி தன் தன்னம்பிக்கையின் மூலம்  வாழ்வை வென்றிருக்கும் அன்மோல், பெரும் சமுதாய மாற்றத்திற்கான முதல் விடியல். பார்வையைச் செலுத்துவோம் வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து 

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து