புரட்சியின் தரிசனம்

புரட்சியின் தரிசனம்

நூல் அறிமுகம் நீலகண்ட பிரம்மச்சாரி – ஒரு புரட்சிக்காரரின் வாழ்க்கை வரலாறு எனும் நாடக நூலினை வாசிக்கும் பேறு பெற்றேன். இரா.கோமதி சங்கர் அவர்கள் ஆக்கி அளித்துள்ள இந்த நாடகம், மனத்திரையில் அரங்கேறிய ஒவ்வொரு தருணமும் வியப்பும் பெருமிதமும் சிலிர்ப்பும் மேலோங்கி எழுந்ததை உணர்ந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி 1889ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, சீர்காழியை அடுத்த எருக்கூர் எனும் கிராமத்தில் பிறந்து, முதல் 44 ஆண்டுகள் புரட்சிக்காரராகவும், அடுத்த 44 ஆண்டுகள் தவ வாழ்க்கையும் வாழ்ந்து 1978ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். புரட்சிக்காரராய் அவர் வாழ்ந்த வாழ்வையும் அதிகம் அறியப்படாத அவருடைய தவ வாழ்க்கையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதாய் நாடகம் அமைந்துள்ளது. மேடை நாடகமாக அரங்குகளில் நடிக்கத்தக்க வகையில் விறுவிறுப்புடன், பல புதிர்களுக்கு விடையளிக்கும் தகவல் செறிவுடன், உணர்ச்சி பொங்கும் காட்சி அமைப்புகளுடன் மிக அருமையாக எழுதப்பட்டுள்ளது. கதை நாயகரின் வரலாற்றினை இயற்றமிழில் இல்லாமல், நாடகத் தமிழில் ஆக்கி அளித்திடல் வேண்டும் என்ற நூலாசிரியரின் உத்தி பாராட்டத்தக்கது. சங்கர கிருஷ்ணன் என்ற பத்திரிகையாளர் சென்னையிலிருந்து வந்து மைசூர் நந்தி மலை அடிவாரத்தில் ‘சத்குரு ஒம்கார் ஆசிரமம்’ என்ற பெயரில் ஆசிரமம் அமைத்துத் தவ வாழ்வு மேற்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் நீலகண்ட பிரம்மச்சாரி ஸ்வாமியைச் சந்தித்து அவரை நேர்காணல் செய்து நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக நாடகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1921ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பாரதியார் வீட்டில் நாடகத்தின் முதற்காட்சி தொடங்குகிறது. ஆஷ் கொலை வழக்கின் முதற் குற்றவாளியாகக் கூண்டிலேற்றப்பட்டு, வழக்கின் முடிவில் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு, தண்டனை முடித்து வந்த நீலகண்டர் பழைய நட்பின் தொடர்ச்சியாக பாரதியார் வீட்டிற்கு வருகைபுரியும் காட்சியுடன் நாடகம் தொடங்குகிறது. அடுத்து வரும் இருபத்து மூன்று காட்சிகளிலும் வீர சுதந்திரம் வேண்டி எழுச்சித் திட்டங்கள் தீட்டி, புரட்சி இயக்கங்களைக் கட்டமைத்து, பிரிட்டிஷ் அரசுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய வ.உ.சி., நீலகண்டர், வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், சுப்பிரமணிய சிவா, திருவனந்தபுரம் பத்மநாப அய்யங்கார், ஓட்டப்பிடாரம் மாடசாமி, மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, வ.ரா., சிங்கார வேலர் என, அத்தனை தேச பக்தச் செம்மல்களையும் நாம் சந்திக்கிறோம். மட்டுமின்றி, பின்னாளில் நந்தி மலை அடிவாரத்தில் அமைந்திருந்த ஓம்கார் ஆஸ்ரமத்துக்கு வருகை புரிந்த காந்தி அடிகளையும், அவருடைய சீடர் ஜே.ஸி. குமரப்பாவினையும் சந்திக்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சி, தேச பக்தர்களின் மனப் போராட்டங்கள், சிறைக் கொடுமைகள், போராட்டத்தின் விளைவாகத் தியாகிகள் சந்தித்த வறுமை நிறைந்த குடும்பச் சூழல், தலைமறைவு வாழ்க்கை எனப் பல நிலைகளையும் நாடகம் உணர்த்தி நிற்கிறது. நாடகம் முழுவதும் உரையாடல்கள் நறுக்குத் தெரித்தாற்போலும் கருத்துவளம் மிக்கவையாவும் இருந்தாலும் எடுத்துக்காட்டாகச் சில காட்சிகள்: காட்சி 2இல், ஓம்கார் சுவாமியாகிய நீலகண்டர் கூற்றான, ‘நாங்க ஆரம்பிச்சு வச்சோம்; காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா ஜனங்க எங்க பின்னால வந்துடுவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா ஜனங்களைத் தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலை எல்லாம் செஞ்சார்.’ காட்சி 6இல், வ.உ.சி. நீலகண்டர் உரையாடலில் வ.உ.சி.யின் கூற்றாக வரும், ‘தேச பக்தின்னா என்ன? மக்களோட பிரச்சினையைப் பேசறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமனே தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனக்கிறீரா நீலகண்டர்? இந்தப் பாடம் யாரு சொன்னது?’ காட்சி 3இல், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமியான நீலகண்டரிடம், ‘அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல இது (சந்நியாச வாழ்க்கை) தப்பித்தலோ என்று தோன்றுகிறது சுவாமி’ என்று உசுப்பியதும் ஓம்கார் சொல்லும் பதிலில், புரட்சிக்காரர் தொண்டுகள் ஆற்றும் தவ வாழ்க்கைக்கு மாறி வந்ததின் சூட்சுமம் வெளிப்படுகிறது. காட்சி 19இல், ஓம்கார் சுவாமிகள் பத்திரிகையாளர் சங்கரகிருஷ்ணன் உரையாடலில் ஓம்கார் சுவாமிகளின் கூற்றாக வரும், ‘தேசத் தொண்டு என்பது தேச மக்களுக்காக நாம் செய்வதுதான் என்பதை எனக்குப் போதித்தவர்கள் சிதம்பரம் பிள்ளையும் சிங்கார வேலரும்தான்’ என்ற வரிகள் புரட்சிக்காரர் தொண்டுகள் புரியும் தவ வாழ்க்கைக்குத் திரும்பிய புதிரை அவிழ்ப்பதாய் அமைகின்றன. மேலும் அதே காட்சியில், 1922 ஜூலையில் கயாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘பூரண சுயராஜ்யம்’ தீர்மானத்தைக் கொண்டு வந்தது சிங்கார வேலர்தான் என்பதை ஓம்கார் சுவாமிகள் தெரிவிப்பதும் நினைவில் கொள்ள வேண்டியவை. காட்சி 18இல், 1921ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் சிங்கார வேலர் இல்லத்தில், அவருக்கும் நீலகண்டருக்கும் இடையே நடக்கும் உரையாடலில், நீலகண்டரின் கூற்றான, ‘தேச விடுதலை என்பது தொழிலாளர்கள், விவசாயிகள், கற்றவர்கள், பாமரர்கள், ஆண்கள், பெண்கள், எல்லாருடைய ஐக்கியமான போராட்டத்தில் உருவாக வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வருகிறேன்‘ என்ற வரிகள் சிங்கார வேலருடன் இணைந்து பணியாற்றியதில் பெற்ற தெளிவு என்று நீலகண்டர் வெளியிடுவதும் அதே காட்சியில் சிங்கார வேலர், காந்தி அடிகள் சுதந்திரப் போராட்டத்தில் கொண்டு வந்த மாற்றத்தைக் கூறி, ‘இந்த நாட்டில் இப்போது தேவைப்படும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை, சாதி பேதம் கடந்த மக்களின் ஐக்கியம், தீண்டாமைக் கொடுமையை ஒழிப்பது என்று பல்வேறு பிரச்சினைகளைக் கையாள்கிற சக்தியும் அவரிடம்தான் (காந்திஅடிகளிடம்) இருப்பதாகக் காங்கிரஸில் பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது’  என்ற வரிகள் நமது மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய கொள்கைகளின் தொன்மத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. நூலாசிரியர் நீலகண்டரின் வரலாற்றை நாடகமாகக் கருக்கொண்டு, வளமான உரையாடல்களுடன், மேடை நாடகமாக அரங்கேற்ற வசதியாக செட் சிக்கனத்தை மனதில் கொண்டு, ஒலி-ஒளி தொடர்பான காட்சி அமைப்புக் குறிப்புகளையும் வழங்கியிருப்பது அவருடைய கலைப்புலம் சார்ந்த திறமைக்குச் சான்று. இந்நூல் தமிழ் நாடக உலகிற்குக் கிடைத்துள்ள சற்று வித்தியாசமான படைப்பு. வாசிப்பதற்கு மிக உகந்தது ஆயினும் இதன் நாடக அரங்கேற்றம் நூல் ஆக்கப்பட்டதின் முழுப் பயனையும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்குவதாய் அமையும். பாராட்டுகளும் வாழ்த்துகளும். சுவடு இணைய இதழில் தோழர் கோமதி சங்கர் ஆக்கத்தில் தொடராக வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றதுடன், சுவடு வெளியீடாக நூலாக்கம் பெற்று விடுதலைப் போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணு அவர்களால் வெளியிடப்பட்ட ‘நீலகண்ட பிரம்மச்சாரி’ நாடக நூலுக்கான முதல் மதிப்புரையை அதிவிரைவில் வழங்கியுள்ள தோழர் பாப்பையா அவர்களுக்கு சுவடு பதிப்பகம் சார்பிலும் சுவடு இணைய இதழ் சார்பிலும் நாடக ஆசிரியர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆ-ர்

விடுதலையின் வரலாறுகள்

விடுதலையின் வரலாறுகள்

நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல் – என்பது வள்ளுவர் வாக்கு. வாசிப்புப் பழக்கம் உள்ள எல்லாரும், ஏதோ ஒரு நாளில் எழுதவேண்டும் என்றுதான் நினைக்கிறோம். சில சமயம் அதை வெளியே சொல்வதும் உண்டு. சொல்பவர்கள் எல்லாரும் செயல்படுத்திவிடுகிறோமா என்ன? கடந்த ஜூலை 2 அன்று, தாம்பரத்தில் நடைபெற்ற சென்னை வாசிப்பாளர்கள் சந்திப்பில், தான் ஒரு நாடகத்தை எழுதவிருப்பதாக அறிவித்தார் தோழர் கோமதிசங்கர். யாரைப்பற்றி, எந்தக் கருவை மையமாகக் கொண்டு அந்த நாடகம் அமையப்போகிறது என்கிற எந்த விவரமும் அன்று அவர் குறிப்பிடவில்லை. இன்று, அக்டோபர் 2. மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள். சிறப்புமிக்க இன்றைய தினத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், கோமதிசங்கர் தோழர் எழுதிய நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழா சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று கூறியது போலவே, ஆகஸ்டு 15, இந்திய சுதந்திர தினத்தன்று நீலகண்ட பிரம்மச்சாரி பற்றிய வரலாற்றுத் துளிகளை, நாடக வடிவில் தினசரித் தொடராக நமது சுவடு வலைத்தளத்தில் எழுதத் தொடங்கினார். 24 காட்சிகளாக, நாள் தவறாது சுவடு இணைய இதழில் வெளிவந்தது. வெளிவரும் நாட்களிலே நாடகத்திற்குப் பரவலான வரவேற்பு இருந்தது என்பதை சுவடு வாசகர்கள் நன்கறிவர். அறிவிப்பு வெளியான நாளிலிருந்து மிகச் சரியாக 90 நாட்களில் இந்த நாடகம் நூலாக்கம் பெற்று சுவடு பதிப்பக வெளியீடாக வந்துவிட்டது. இன்று, காலை 10 மணியளவில் சென்னை தியாகராயநகரில் அமைந்துள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்தில், புத்தகத்தின் வெளியீட்டு விழா மிக விமர்சையாக, நூற்றுக்கணக்கான தோழர்கள் மற்றும் வாசகர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு அவர்கள் நூலை வெளியிட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்கள் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர். மு.வீரபாண்டியன் மற்றும் தோழர். ஜீவபாரதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர் கணபதி இளங்கோ அனைவரையும் வரவேற்றார். நூலைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கிய தோழர் முத்தரசன், பெயரே தெரியாத, தமிழகத்தின் ஏதோ ஒரு கடைக்கோடியில் வாழ்ந்த ஒரு சவரத் தொழிலாளியின் தேசப்பற்றையும் தன்மானத்தையும் பறைசாற்றும் செயலை மிகச் சுருக்கமாகவும் அவரின் எளிமையான கம்யூனிச சித்தாந்தத்தையும் எடுத்துரைத்தார். இந்த நாடகம் தமிழ்நாடு முழுவதும்  நிகழ்த்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார். தோழர் ஜீவபாரதி அவர்கள் தனது தலைமை உரையில், விடுதலைப் போராளியை அவமதிக்கும்விதமாக, ஆங்கிலேய அதிகாரி அவருக்கு மொட்டை அடிக்கச் சொன்னபோது, தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு முடி திருத்துநரின் தியாகத்தைக் குறிப்பிட்டுப் பேசினார். தோழர் வீரபாண்டியன் அவர்களுடைய உரையில், இந்த நூல் குறித்து முழுமையானதொரு ஆய்வரங்கம் இதே அரங்கில் நிகழ்த்தப்பட வேண்டும் என்றார். அவரைத் தொடர்ந்து இந்த நாடகப் பனுவலை முன்வைத்து உரையாற்றிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தோழர். ஆ. பாஸ்கர் அவர்கள் தனது மதிப்பீட்டு உரையைச் சிறப்பாக முன்வைத்தார். நாடக வடிவத்தின் தாக்கம் குறித்துத் தொடங்கிய அவர், புத்தகத்தின் சாராம்சத்தையும் அதன் உள்ளடக்கத்தையும் மிகச்சிறப்பாகவும் சற்று விரிவாகவே கூறியதுடன், இந்த நாடகத்தை மேடையேற்ற வேண்டும் என்று கூறி முடித்தார். அடுத்ததாக புத்தகத்தின் ஆசிரியர் தோழர் கோமதிசங்கர், தனது ஏற்புரையை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார். ஏன், எதனால், எதன்பால் இந்த நாடகம் தொடங்கப்பட்டு இவ்வளவு விரைவாகப் புத்தகமாகப் வெளியிடப்பட்டது என்ற விவரங்களோடு, நூலில் இடம்பெற்றுள்ள தரவுகளுக்கு உதவிய நண்பர்களுக்கு நன்றியுரைத்து தனது ஏற்புரையை நிறைவு செய்தார். இறுதியாக சுவடு பதிப்பாசிரியர் தோழர் நல்லு இரா. லிங்கம் ரத்தினத்தைவிடச் சுருக்கமாக நன்றியுரை நல்கினார். இன்றைய நாளின் அதிசிறப்பு, ஒரு விடுதலைப்போராட்ட வீரரின் வரலாற்றுப் பக்கங்களை வாழும் விடுதலைப் போர் வீரர் தோழர் நல்லகண்ணு அவர்கள் வெளியிட்டதுதான். தனது 98 ஆம் அகவையிலும் காந்தி பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் கட்சிக் கூட்டத்திற்கும் பதிப்பகத்தார் மற்றும் ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க நீலகண்ட பிரம்மச்சாரி நூல் வெளியீட்டு விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்த அவருக்கு நன்றி என்ற ஒரு சொல் காணாது. நூலைப்பற்றியும் நூலாசிரியர் பற்றியும் வயது மூப்பு காரணத்தால் பேசமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்த அந்த உள்ளத்தை என்னவென்று சொல்ல! அவரைப் பார்த்ததே பேறு என்று உணர்கையில், நூலாசிரியருக்கோ அது வாழ்நாளுக்கான வரலாறு அல்லவா?!

நீலகண்ட பிரம்மச்சாரி – 24

நீலகண்ட பிரம்மச்சாரி – 24

காட்சி 24 காலமும் இடமும் பாத்திரங்களும் : முந்தைய காட்சியின் தொடர்ச்சி (ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் உரையாடலைத் தொடர்கிறார்கள்) ஓம்கார் சுவாமிகள் : குமரப்பா விருந்தினர் விடுதிக்குப் போனதும் சர்தார் பட்டேலிடமும் மகாதேவ தேசாயிடமும் என்னைப்பற்றிச் சொல்லிவிட்டு, ‘நீங்கள் இவரைச் சந்திக்க வேண்டும். தவறினால் நீங்கள் வருத்தமடைவீர்கள்’ என்று சொல்ல, ஆர்வம் கொண்ட அவர்கள் என்னை வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போனார்கள். என் சந்திப்பு பற்றிய விவரம் காந்தியடிகளிடம் சொல்லப்பட்டது. காந்திஜி என்னைப்பற்றி முன்னமே கேள்விப்பட்டிருந்தார். ஆகவே, என்னைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அவரது உடல் நலம் கருதி, அவரை நானே பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு, காந்தியடிகளை நான் சென்று சந்தித்தேன். காந்தியடிகளின் சந்திப்பு எனக்கும் அவருக்குமே மன நிறைவாக இருந்தது. நாங்கள் அரசியல் ஏதும் பேசவில்லை. அவர் எனது ஆன்ம சோதனைகள் பற்றியே அதிகம் விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரம் பேசிவிட்டு விடைபெற்று வந்தேன். சங்கர கிருஷ்ணன் : சுவாமி.. நான் இங்கிருந்த சில நாட்களில், இந்த ஆசிரமத்தில் நான் கண்ட காட்சிகளும் உங்களைப் பற்றி நீங்கள் சொன்ன செய்திகளும் மிகுந்த வியப்பையும் பிரமிப்பையும் தந்தன. ஆனால் தன்னடக்கம் கருதியோ அல்லது வேறெந்தக் காரணத்தினாலோ நீங்கள் சொல்லாத செய்திகளையும் நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவை உங்கள் மேல் நான் கொண்டிருக்கும் மரியாதையை இன்னும் உயர்த்தி வைக்கின்றன. ஓம்கார் சுவாமிகள் : அப்படி என்ன கேள்விப்பட்டீர்கள் இந்த சாமியாரைப்பற்றி? சங்கர கிருஷ்ணன் : உங்கள் மாசு மருவற்ற நல்லொழுக்கம் பற்றி, எந்தப் பொருளையும் உரிமை கொள்ளாது ஆசிரமவாசிகளிடமும் மக்களிடமும் பகிர்ந்துகொள்வது பற்றி, ஏழைகளின் மீது நீங்கள் கொண்டுள்ள பரிவையும் கருணையையும் பற்றி, உங்கள் பிரசங்கங்கள் பற்றி, பள்ளிக் குழந்தைகளின் மீது அக்கறை கொண்டு அவர்களுக்குச் செய்யும் உதவிகள் பற்றி, பலப்பல செய்திகளை ஆசிரமத்திலும் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கேட்க முடிந்தது சுவாமி. ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) இதெல்லாம்தான் துறவியின் குணங்கள். (மீண்டும் சிரித்துவிட்டு) நான் நல்ல சாமியார்தான் அல்லவா? சங்கர கிருஷ்ணன் : (தானும் சேர்ந்து சிரித்துவிட்டு) கணக்கு எழுதுபவர், சரக்கு பிடிக்கும் ஏஜெண்ட், பத்திரிகைக்காரர், பிரசங்கி, புரட்சிக்காரர், எழுத்தாளர் என்ற பல முகங்களைக் கொண்ட நீங்கள், துறவியாக மாறிவிட்டபோதிலும் உங்களைப் பற்றிய புரட்சி முகமே எனக்குப் பிடிக்கிறது. ஏனெனில், ஒரு துறவிக்கு வேண்டிய தன்னலம் கருதாமை என்ற பண்பு நலன் உங்களிடத்தில் நிறைந்திருப்பதை, பழைய புரட்சிகரப் பாத்திரத்தின் தொடர்ச்சியாகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் வரலாற்றில் வந்து போனவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கும் சித்திரங்கள் மிகச் சொற்பமானவை என்பதுதான் மிகப் பெரிய விசித்திரம். இன்று நான் விடைபெற்றுக் கொள்கிறேன் சுவாமி. இந்த ஆசிரமவாசிகளின் உபசரிப்பையும் உங்கள் அன்பையும் என்றும் நினைவில் வைத்திருப்பேன். மீண்டும் ஒரு நாள் வாய்த்தால் உங்களைக் காண வருவேன். ஓம்கார் சுவாமிகள் : நீங்கள் வரும்போது உங்களை உபசரிக்க நான் இருப்பேனா என்று தெரியாது தம்பி. என் ஞாபகமாக நான் எழுதியிருக்கும் புத்தகத்தைத் தருகின்றேன். பெற்றுக்கொள்ள வேண்டும்.(சொல்லிவிட்டு, தயாராக எடுத்து வைத்திருக்கும் புத்தகத்தைதின் தலைப்பை வாசித்துவிட்டுத் தருகிறார்.) Confessions, Upadesh and Talks – இது நான் எழுதிய மூன்று நூல்களின் தொகுப்பு. Confessions on the way towards Peace – சாந்தியின் மார்க்கத்தில் மெய்ஒப்புதல் என்ற தலைப்பில் எனது புரட்சிக் காலத்திய நினைவுகளை எழுதியிருந்தேன். இதற்கு அரவிந்தர் முன்னுரை எழுதியிருக்கிறார். இந்தப் பழைய நினைவுகள், நான் துறவியாவதற்கு முன் எழுதியவை. துறவியானபின் இந்நூலை வெளியிட என் மனம் ஒப்பவில்லை. உங்களிடம் தந்த புத்தகத்தில் Confessions என்ற பகுதி அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அன்பர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மட்டுமே. Upadesh – உபதேஷ், என் ஆன்மீக சாதனங்களைப் பற்றியது. 1946இல் வெளியானது. Talks – பொறுக்கியெடுக்கப்பட்ட உரைகள் என்ற என் சொற்பொழிவுகளின் தொகுப்பு 1971இல் வெளியானது. சங்கர கிருஷ்ணன் : வந்தனம் சுவாமி.. வருகிறேன். (கும்பிட்டு விடைபெறுகிறார்) (திரை விழுகிறது. பின்னணியில் குரல் ஒலிக்கிறது) குரல் : நூறாண்டுக்கு முன்பு ‘தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறி, கெட்டுப் பாழ்பட்டு’ நின்ற இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் வந்தவர்களின் வழிமுறைகளும் சுயநலமில்லாத செயல்பாடுகளும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கின்றன. சுதேசி இயக்கத்தில் ஈடுபட்டுத் தண்டனை பெற்றவர்கள், பொது வாழ்க்கையில் தங்கள் இருப்பினைத் தொடர, ஒவ்வொருவராக ஆன்மீகத்தில் சென்று ஆசிரம வாழ்க்கையை ஒரு மாற்றாகக் கொண்டிருக்கின்றனர். அரவிந்தர், வ.வே.சு.அய்யர், சுப்பிரமணிய சிவா ஆகியோர் இந்த வரிசையில் வந்தனர். பாரதி மறைந்தபோது, அவர் தீவிர அரசியலில் இல்லை. வ.உ.சி.யின் கடைசி நாட்கள் எவ்வாறு இருந்தன என்பதை அறிவோம். ஆனால் 16 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்தபின், துறவியான நீலகண்டர் பற்றி, அவர் காலத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள் சொல்லும் குறிப்புகள், அவர் மீதான ஏதோ ஒரு வெறுப்பு தடவிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டிலிருந்து பல மைல்கள் தாண்டித் தனது துறவு வாழ்க்கையை அவர் வைத்துக்கொண்டதைப் பார்த்தால், அவரும் அதை உணர்ந்திருந்தாரோ என்று தோன்றுகிறது. அவரது ஆசிரம வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டின் முதல் புரட்சிக்காரன் என்று சொல்லுக்குத் தகுதியான நீலகண்ட பிரமச்சாரியிடமிருந்தும் மக்கள் தொண்டுக்காகத் தனது ஆசிரம வாழ்க்கையை விதித்துக்கொண்ட ஓம்கார் சுவாமிகளிடமிருந்தும் நாம் விடைபெற்றுக்கொள்வோம். தியாகமும் தொண்டும் எந்தக் காலத்திலும் நினைவு கூரப்படும். வணக்கம். (நிறைவு) நிறைவும் நன்றியும் சுவடு நேயர்களுக்கு வணக்கம். 24 காட்சிகளாக தினமும் நான் எழுதிய நாடகத்தில், உடன் பயணம் செய்து உற்சாகப்படுத்திய வாசக நண்பர்களுக்கு நன்றி நவிலும் தருணம் இது. பாரதி ஆய்வாளர் ரா.ஆ. பத்மநாபன் அவர்கள் எழுதிய சித்திர பாரதி படித்தபோது, நீலகண்ட பிரம்மச்சாரி பற்றி அதில் அவர் எழுதியிருந்த ஒருபக்கக் கட்டுரைதான் எனது நாடகத்தின் ஆரம்பம் என்று சொல்வேன். அதிலிருந்து, இந்தப் புரட்சிக்கார நீலகண்டர் பற்றிய குறிப்புகளைப் பல நூல்களில் தொடர்ந்து வந்தேன். சிறு துளிகளாகக் கிடைத்த அவற்றைக் கோர்த்து இந்த நாடகத்தை உருவாக்கி முடித்தேன். இதை உருவாக்கும் முன் எனக்குச் சில யோசனைகளை வழங்கிய பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு என் முதல் நன்றி. வ.உ.சி. ஆய்வாளர் ரெங்கையா முருகன் மற்றும் அவரிடம் என்னை ஆற்றுப்படுத்திய நெல்லை ஓவியர் வள்ளிநாயகம் ஆகியோருக்கும் எனது நன்றி. AITUC தமிழ் மாநிலத் தலைவர் தோழர் காசிவிசுவநாதன் நிறைய தகவல்களைத் தந்துதவினார். அவருக்கு எனது நன்றி. நாடகம் வளர்ந்துகொண்டிருந்தபோது சில தகவல்களை பகிர்ந்துகொண்ட கோவை வழக்கறிஞர், தோழர் ஞானபாரதி அவர்களுக்கும் எனது நன்றி. எப்போதும் என்னுடன் இருந்து, நாடக உருவாக்கத்தில் பயணித்த என் அன்புத் தோழன் கோவை பிரசன்னாவுக்கும் நாடக ஆக்கத்தில் தொடர்ந்து ஊக்கப்படுத்திய சுவடு ஆசிரியர் நல்லுவுக்கும் என் நன்றி. நாடகப் பக்கத்தின் முகப்புப் படத்தைத் வடிவமைத்துத் தந்த வாலறிவன் பதிப்பக நண்பர் கார்த்தி அவர்களுக்கு மிக்க நன்றி. நாடகத்தைத் தினந்தோறும் வாசித்தும் பகிர்ந்தும் நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டியும் என்னை உற்சாகப்படுத்திய சுவடு வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிகள் பல. நாடகம் உருவாகத் துணைபுரிந்த நூற்பட்டியல் :

நீலகண்ட பிரம்மச்சாரி – 22

நீலகண்ட பிரம்மச்சாரி – 22

காட்சி 22 இடம் : ஓம்கார் ஆசிரமம், நந்தி மலை.பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : இந்த நந்திமலை வனத்திற்குள் ஒரு சுனை இருக்கிறது சங்கர கிருஷ்ணன். தட்சிணப் பிநாகினி இங்கிருந்து கிளம்பி ஓடுகிறாள். இவள் தமிழ்நாட்டுத் தென்பெண்ணை. இங்கிருந்து கிளம்பித் தமிழ்நாட்டுக்குப் போகிறாள். நான் தமிழ்நாட்டிலிருந்து கிளம்பி இவள் மடிக்கு வந்து சேர்ந்தேன்.இந்த நதி கடலில் சேரும் இடத்திற்கும் எனது சொந்த ஊரான எருக்கூருக்கும் சுமார் நாற்பது மைல்கள் இருக்கலாம். ஏதோ ஒரு தொந்தம்போல, நான் பிறந்த இடத்துக்கு அருகே பாயும் பெண்ணை நதியின் உற்பத்தி ஸ்தானத்தில் என் வாழ்க்கை நிலைபெற்றது. இன்னும் கொஞ்ச காலத்தில் இவள் மடியிலேயே என் வாழ்க்கையும் முடிந்து போகலாம். (சற்று அமைதிகொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : (சில கணங்கள் காத்திருந்து) சுவாமி.. ஓம்கார் சுவாமிகள் : நான் சென்னையிலிருந்து கிளம்பிய பிறகு, இந்த நாட்டின் பல பிரதேசங்களில் அலைந்து திரிந்தபின் இந்த நந்தி மலைக்கு 1933இல் வந்து சேர்ந்தேன். சங்கர கிருஷ்ணன் : அப்போ இரண்டு வருடமாக அலைச்சல்தானா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : இங்கு வரும் முன்பு, ஆனகுந்தி சமஸ்தானத்தில் சிலநாட்கள் இருந்தேன். துறவியாக மாறி நிலைகொள்ளத் தொடங்கிய இடம் அது. சென்னையை விட்டுக் கிளம்பிய நான், மத்திய பாரதம் வரை பல ஊர்களில் பரதேசியாகத் திரிந்தேன். கன்னட தேசத்தின் துங்கபத்ரா நதிக்கரையோரம் சிலநாள் சாதுவாக அலைந்துகொண்டிருந்தபோது அங்கு வந்தார் ஆனகுந்தி சமஸ்தானத்தின் ராணி குப்பம்மா. சங்கர கிருஷ்ணன் : ராணி குப்பம்மாவா? ஓம்கார் சுவாமிகள் : விஜயநகர அரசின் கடைசிக் கிளை வழியில் வந்தவர் அவர். அந்த சமஸ்தானத்தின் சிவன் கோவிலில் பூஜகராக இருக்குமாறு என்னை அழைத்தார்.அவருடைய வலிந்த அழைப்பைத் தட்டமுடியாமல் அங்கு சிலகாலம் ஒரு குடிலில் எனது ஆசிரமத்தை அமைத்தேன். அது சிந்தாமணி ஆசிரமம். (மேடை அமைப்பு மாறுகிறது) காலம் : 1932ஆம் வருடம் செப்டம்பர் மாதத்தில் ஒருநாள்இடம் : துங்கபத்திரை நதிக்கரை ஆசிரமக் குடில்பாத்திரங்கள் : ராணி குப்பம்மா, நீலகண்ட பிரம்மச்சாரி (கன்னடத்தில் உரையாடுகிறார்கள்) ராணி குப்பம்மா : சுவாமி, நீங்கள் இங்கு வந்த பிறகு நானும் இந்தப் பிரதேசத்து மக்களும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீலகண்ட பிரம்மச்சாரி : ஆனால் நான் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. இப்படிச் சொன்னதற்கு மன்னிக்க வேண்டும் மகாராணி. இந்த ஆசிரமத்தில் இப்போது மக்கள் கூட்டம் அதிகமாகி விட்டது. நான் தனிமையை விரும்புகிறேன். அது இப்போது கிடைப்பதே இல்லை. ராணி குப்பம்மா : மன்னிக்க வேண்டும் சுவாமி, பக்தர்கள் உங்களைச் சந்திப்பதில் காட்டும் ஆர்வத்திற்கு எங்களால் அணை போட முடியவில்லை. இப்போது உங்களிடம் ஒரு உதவி கோரி வந்துள்ளேன். நீலகண்ட பிரம்மச்சாரி : சொல்லுங்கள் மகாராணி.. ராணி குப்பம்மா : பக்கத்து சமஸ்தானத்து ராஜகுமாரியின் பெயர் லால்குமாரி. அவரது குடும்பத்தினரும் உங்கள் பக்தர்கள்தான். அவரை எங்கள் குடும்பத்திற்கு மணம் பேச விரும்புகிறோம். ஏனோ அவர்கள் தரப்பில் தயக்கம் காட்டுகிறார்கள். நீங்கள் சென்று பேசினால் நடக்கும். தாங்கள் இந்த உதவியைச் செய்ய வேண்டும். நீலகண்ட பிரம்மச்சாரி : தாயே, நான் துறவி. என்னிடம் இந்த வேலைகளைச் செய்யச் சொல்வது சரியல்ல. மன்னிக்க வேண்டும். ராஜகுமாரி குடும்பத்தார் என்னிடம் வைத்திருக்கும் மரியாதைக்காக நான் தலையிட்டு இப்படிச் சம்பந்தம் பேசுவதெல்லாம் தவறாகப் போய்விடும். இது என் வேலையல்ல. ராணி குப்பம்மா : கொஞ்சம் யோசியுங்கள் சுவாமி. நீங்கள் சென்றால் இரண்டு சமஸ்தானங்களும் நன்மை பெறும். நீலகண்ட பிரம்மச்சாரி : நீங்கள் கிளம்புங்கள் மகாராணி. இது என்னால் முடியாது. (ராணி கிளம்புகிறார். மேடை அமைப்பு மீண்டும் மாறுகிறது) ஓம்கார் சுவாமிகள் : அப்போது நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் தேடி வந்த ஆத்மானுபவம் எங்கே? ஆனால் நான் எங்கு வந்து நிற்கிறேன்?! இந்தத் தொந்தரவுகள் என்னை எங்கே கொண்டு சேர்க்கும் என்றெல்லாம் நீண்ட நேரம் யோசித்தேன். அன்று இரவே வெளியேறினேன். 1933ஆம் வருடம் டிசம்பர் மாதம் இந்த நந்தி மலை அடிவாரத்தில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் படுத்துக்கொண்டேன். அந்தத் தனிமை எனக்கு பிடித்துப் போனது. அந்த மண்டபமே எனது எளிய ஆசிரமம் ஆனது. காய் கிழங்குகளையும் இந்த நதி நீரையும் ஆகாரமாகக் கொண்டு அந்த மண்டபத்திலேயே தவசியாக வசிக்கத் தொடங்கினேன். சங்கர கிருஷ்ணன் : அந்த மண்டபம் எது சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : கீழே ஒரு கோவில் இருக்கிறதல்லவா? சிவன் கோவில். இந்த ஆசிரமம் அந்தக் கோவிலை மையமாக வைத்தே நடக்கிறது தம்பி. அந்தக் கோவில்தான் 1933இல் பாழடைந்த மண்டப மாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : இப்போது நான் சொல்லப் போவதை நம்புவீர்களா என்று தெரியாது. அந்த மண்டபத்தின் பக்கத்தில் ஒரு புற்று இருந்தது. பெரிய கரையான் புற்று. இங்குள்ள மக்களுக்கோ எனக்கோ அதனால் எந்தத் தொந்தரவும் இல்லை. ஆனாலும் அந்தப் புற்று என்னை ஏனோ உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்குள் இருந்து என்னை யாரோ அழைப்பது போல. அது 1934ஆம் வருடம். அந்த வருடத்துப் பருவ மழை இந்தப் பிராந்தியத்தில் அடித்துப் பெய்தது. தென்பெண்ணை பிரவாகத்தில் இந்தப் பக்கமெல்லாம் ஒரே வெள்ளக் காடு. ஒரு வார காலம் வானம் உடைத்துக்கொண்ட பிறகு நிர்மலமானது. உயிர்கள் நிம்மதி கொண்டன. வெள்ளமும் வந்த வேகத்தில் வடிந்து போனது. போகும்போது புற்றையும் சேதப்படுத்திவிட்டுப் போனது. சற்றே சிதைந்திருந்த புற்றில் சிவலிங்கம் ஒன்று எட்டிப் பார்த்து அந்த மழைக்காலச் சூரிய ஒளியில் மின்னியது. நான் இங்குள்ள குடிகளோடு சேர்ந்து சிவலிங்கத்தை புற்றிலிருந்து வெளியேற்றி மண்டபத்தில் கொண்டு வைத்துப் பிரதிஷ்டை செய்தேன். அவருக்கு ஓம்காரேஸ்வரர் என்று நாமம் சூட்டினேன். அவர் பெயரையே எனக்கும் சூட்டிக்கொண்டேன். 1934ஆம் வருடம் ஜூலை மாதம் இந்த ஆசிரமம் கோவில் பக்கத்தில் உருவானது. இந்த வருடத்தோடு நாற்பது ஆண்டுகள் முடிந்துபோய்விட்டன. (கண்களை மூடிக்கொண்டு ஏதோ யோசிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : ஆசிரமத்தில் என்னவெல்லாம் செய்து வருகிறீர்கள் சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : பார்த்திருப்பீர்களே.. கூட்டுப் பிரார்த்தனை மற்றும் ஆன்மீகப் பிரசங்கங்கள், ஆத்ம சோதனைகள் இதெல்லாம் பிரதானமானவை. தவிர, பக்தர்களும் தரும சிந்தனை உள்ள தனவான்களும் கனவான்களும் தரும் பொருளுதவி கொண்டு மக்களுக்கு எளிய தொண்டுகள் செய்து வருகிறோம். எளிய கைத்தொழில்களில் இங்குள்ள பெண்களை ஈடுபடுத்தி, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை ஆசிரமத்தின் மூலமாகவே விற்பனை செய்து உதவுகிறோம். ஆசிரமவாசிகள் கதரைத்தான் இப்போது வரை அணிகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாங்களே நூற்கவும் செய்தோம். மலைக் குடிகளுக்குச் சட்டபூர்வ உதவிகள் செய்வது, மருத்துவ உதவி செய்வது, பசித்து வரும் ஏழைகளுக்கும் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கும் ஆசிரமத்தில் மதிய உணவு தருவது..ஒன்று தெரியுமா? நான் இதைச் சிங்காரவேலர் நினைவாகச் செய்து வருகிறேன். ஏனெனில், ஏழைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு தரவேண்டும் என்பது அவர் விருப்பமாக இருந்தது. அவர் சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தபோது 1925இலேயே இதைச் செய்திருக்கிறார் என்று நான் சிறையில் இருந்தபோது பத்திரிகை வாயிலாகத் தெரிந்து வைத்திருந்தேன். ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – இங்குவாழும் மனிதருக்கெல்லாம்பயிற்றிப் பல கல்வி தந்து – இந்தப்பாரை உயர்த்திட வேண்டும்‘ என்று பாரதியார் சொன்னாரல்லவா தம்பி? சங்கர கிருஷ்ணன் : ஆசிரமத்திற்கு காந்தியடிகள் வந்தாரென்று சொன்னீர்களே.. அது எப்போது சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : சொல்கிறேன், ஆசிரமத்துக்கு வரவில்லை. இந்த நந்திமலை அடிவாரத்து விருந்தினர் விடுதிக்கு வந்திருந்தார். என்னைப் பார்க்க விரும்பிய அவரை நான் சென்று தரிசித்தேன். அதற்கு முன்பு ஜே.சி. குமரப்பா வந்ததைச் சொல்ல வேண்டும். அவர்தான் காந்திஜி வருகைக்குக் கட்டியம் கூறுவதுபோல ஆசிரமத்திற்கு வந்தார். வாருங்கள் ஆகாரம் முடித்த பிறகு பேசலாம். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி -14

நீலகண்ட பிரம்மச்சாரி -14

காட்சி 14 காலம் : 1921ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள்இடம் : திருவல்லிக்கேணி கடற்கரைபாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். (பாரதியாரும் நீலகண்டரும் கடற்கரையில் அமர்ந்திருக்கின்றனர். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதையை பாரதியார் படித்துக் காட்டுகிறார்.) பாரதியார் : கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடையாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான்.மலைவு செய்யாமை; மனப்பகை யின்மை ;நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை ;தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை;ஆச்சரியப்பட உரைத்தனன் -அவையெலாம்.வருக காந்தி ! ஆசியா வாழ்வே !தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்.ஆன்மா அதனால் ஜீவனை யாண்டுமேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்.. நீலகண்டர் : (குறுக்கிட்டு) அண்ணா நிறுத்துங்கள். பாரதியார் : என்ன பாண்டியா? நீலகண்டர் : என்ன பாட்டு இது..? பொருள் தெரிகிறது. காந்தி மகான் தோன்றியதை பாரத மாதா சொல்வது போல அமைத்திருக்கிறீர்கள். ஆனால் சந்தக் கட்டு ஏதும் இல்லாமல் வழக்கமான உங்கள் நயம் எதுவுமில்லாமல் இருக்கிறதே..! பாரதியார் : (சிரிக்கிறார்) பலே.. சரியாகத்தான் சொன்னீர் நீலகண்டர். இது என் பாட்டு இல்லை. அமெரிக்கா தேசத்தில் வாழ்ந்து வரும் ஸ்ரீமதி மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற மாது எழுதிய ஆங்கிலக் கவிதை. தமிழில் மொழிபெயர்த்து எழுதினேன். சுதேசமித்திரனுக்கு போகப் போகிறது. நீலகண்டர் : அண்ணா, சாகாவரம் பெற்ற பாடல்களை வடித்தவர் நீங்கள். ஆனால் உங்கள் கற்பனை சௌந்தர்யம் இந்த மொழிபெயர்ப்பில் வரவில்லையே.. சுதேந்திரநாத் ஆர்யா : (சிங்காரவேலருடன் வந்துகொண்டே) அது எப்படி அமையும் நீலகண்டரே.. மூலத்தின் ஜீவன் எத்தகையதோ, அதுதான் மொழிபெயர்ப்பிலும் வரும். இதே காந்தியைப் பற்றி ‘வாழ்க நீ எம்மான்‘ என்று பாரதி பாடியது எத்தனை ஜீவன் ததும்பியதாக இருந்தது..? பாரதியார் : ஏதேது, நீங்கள் இருவரும் எனக்கு மொழிபெயர்க்கவே வராது என்று சொல்வது போல இருக்கிறது.. (எல்லாரும் சிரிக்கிறார்கள்) ஆர்யா : ‘வந்தேமாதரம்’ மொழிபெயர்ப்பு ஒன்று போதுமே, பாரதி பெயரைச் சொல்வதற்கு..பாரதி, உன்னைக் கேலி செய்து எவ்வளவு நாள் ஆச்சு?! கோபம் இல்லையே..? சிங்காரவேலர் : ஆர்யா, இந்தக் கவிதையின் கூர்மையைக் கவனியுங்கள். இதில் பாரதி, காந்தியின் அரசியல் பாதையைச் சுட்டிக் காட்டுகிறார். வெளிநாட்டார் வியாக்கியான உலகம், காந்தியின் வருகையை ஆசியாவின் எழுச்சியாகப் பார்ப்பதைக் கவனியுங்கள். காந்தியின் வழியை திலகர் வழி வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன பாரதி சரிதானே..? பாரதியார் : நாட்டின் வருங்கால அரசியலில் காந்தியின் பாத்திரம் தவிர்க்க முடியாதது சிங்காரவேலரே.. கவிதையை நீங்கள் யோசிக்கும் விதத்தை வியக்கிறேன். அது போகட்டும் ஆர்யா. நீலகண்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாயே.. ஆர்யா : ஆமாம் பாரதி.. நீலகண்டரே நீர் வந்திருப்பதை பாரதி சொன்னார். சிறைவாசம் முடிந்து எத்தனை நாள் ஆயிற்று..? நீலகண்டர் : இரண்டாண்டுகள் ஆயிற்று. பல இடங்கள் அலைந்து திரிந்தேன். சென்னைக்கு வந்தும் நாலைந்து நாட்கள் திக்குத் தெரியாது அலைந்தேன். சாப்பாட்டுக்கு வழியில்லை. கோயிலில் பிரசாதம் வாங்கிப் பசி ஆறினேன். வெட்கத்தைவிட்டு யாசகமும் பெற்றேன். ரயிலடியிலும் கடற்கரையிலும் கோயில் மண்டபங்களிலும் படுத்துக்கொண்டேன். சிலநாள் முன்புதான் பாரதி அண்ணா வீட்டைக் கண்டுபிடித்தேன். பாரதியார் : பார் ஆர்யா, இவர் ஒரு சிம்மம். ஒரு தடவை இயக்கத்திற்கு நன்கொடை தருவேன் என்று இவரை அலையவைத்த ஒரு பெரிய மனிதரைத் துப்பாக்கியைக் காட்டிப் பணியவைத்தவர். பெரிய விவேகி.. அப்படிப்பட்டவர் பட்டினியாய் அலைந்திருக்கிறார் பார்.. சிங்காரவேலர் : அதற்கும், காலத்தை வென்று நிற்கப் போகிற நவ கவிதை ஒன்று உம்மிடம் பிறந்து வந்ததே.. நீலகண்டர் : அண்ணா, இவர் யார்..? இதற்கு முன்பு நான் பார்த்ததில்லையே.. இவர் என்ன சொல்கிறார்..? நான் பட்டினியாய் அலைந்ததில் கவிதை வந்ததா..? எப்படி…? பாரதியார் : இவர் சிங்காரவேலர்.. பெரிய மேதை.. தொழிலாளர் மேன்மைக்காக உழைத்து வருகிறார். அவர்களை ஐக்கியப்படுத்தி வருகிறார். ருஷ்யாவின் போல்ஸ்விக் கட்சியைப் போல் நமது நாட்டிலும் சமதர்மக் கட்சியொன்றை ஏற்படுத்த முயன்று வருகிறவர்களில் இவரும் ஒருவர்.நீர் பட்டினியாய் என் வீட்டுக்கு வந்த அன்று ஒரு பாட்டு வந்தது. அதைக் கடற்கரைக் கூட்டத்தில் பாடினேன். சிங்காரவேலர் அந்த விருத்தாந்தத்தை அறிந்தவர்..அதைத்தான் சொன்னார். (சிங்காரவேலரைப் பார்த்து) இவர்தான் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி. உமது தொழிலாளர் சங்கங்களில் வேலை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர். தொண்டால் சிறை அளந்து வந்திருக்கிறார். சிங்காரவேலர் : பாரதியிடம் இத்தனை புகழ்ச் சொல் பெறுவது கடினம் தம்பி.. நீ விரும்பினால் என்னுடன் வந்து உதவி செய்யலாம். நீலகண்டர் : அண்ணா, இப்படித்தான் சிதம்பரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் நான் தேறவில்லை. இப்போது உங்களுடன் அனுப்புகிறார். சிங்காரவேலர் : ஆஷ் கொலை வழக்கில் அதிக நாள் தண்டனை பெற்றவர் நீர்தான் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம், சதிக் குழுவை உருவாக்கியவன், சதியைத் திட்டமிட்டவன் என்றெல்லாம் சொல்லிக் குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள். ஆனால் இந்தத் திட்டத்தில் நான் இல்லவே இல்லை. ஆர்யா : நீர் சரணடைந்தபோது இதைக் குறிப்பிட்டிருந்தீர் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம்.. பத்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதத்தில்தான் கல்கத்தாவில் நானாக முன்வந்து சரணடைந்தேன்; வாக்குமூலமும் கொடுத்தேன். 1911ஆம் வருடம் ஜூலை 11ஆம் தேதி திருநெல்வேலிக்குக் கொண்டுவந்தார்கள். (மேடை இருளில் போய் ஒளியில் வரும்போது ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : ஆஷ் கொலையின்போது காசியில் இருந்தேன் என்று சொன்னீர்களே.. கல்கத்தாவுக்கு எப்போது போனீர்கள்.? ஓம்கார் : சொல்கிறேன். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

காட்சி 13 காலம் : 1911 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்இடம் : பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் வெள்ளவாரி ஓடைபாத்திரங்கள் : நாகசாமி, கண்ணுப்பிள்ளை, வாஞ்சிநாதன்.(நாகசாமி, வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடப் பயிற்சி தருகிறார்) நாகசாமி : வாஞ்சி, உமக்குத் துப்பாக்கிச் சுடுவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கையில் நடுக்கம் குறைந்துவிட்டது. குறி வைப்பதிலும் நல்ல தேர்ச்சி வந்துவிட்டது. இன்னும் சிலநாள் பயிற்சி போதும். இலக்கைத் தவறவிடமாட்டாய். வாஞ்சிநாதன் : வந்தனம் ஐயா. நாகசாமி : உமது இலக்கு 6 அடி முதல் 10 அடிக்குள் இருக்குமாறு உமக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது. எதிரி இந்த இலக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டு நீர் துப்பாக்கியை இயக்க வேண்டும். எதிரியின் மார்புதான் சரியான இலக்கு. அப்படியான இலக்கு எல்லைக்குள் எதிரி இருக்கும்போது துப்பாக்கி வெடிக்க வேண்டும். கொஞ்சம் குறி விலகினாலும் தோட்டா பிசகிப் பாய்ந்து எதிரி தப்பித்துவிட அதிகம் வாய்ப்பு உண்டு. வாஞ்சிநாதன் : நல்லது ஐயா. நாகசாமி : வாஞ்சி ஐயர், உம்மை நினைத்து மிகுந்த பெருமை கொள்கிறேன். தென் தமிழ்நாட்டு விடுதலைப் போர்ச் சரித்திரத்தில் உமக்கு அழியாத பெயரும் கீர்த்தியும் உருவாகப் போகிறது. உமது தியாகத்திற்கு இணை சொல்ல வேறு யாரும் இல்லை. வாஞ்சிநாதன் : நானும் கர்வமாகவே இருக்கிறேன் அண்ணா. இந்தக் கடமையை என்னை நம்பி ஒப்படைத்தீர்களே..! உங்களுக்கும் ஐயருக்கும் எத்தகைய நன்றி சொன்னாலும் தகும். நாகசாமி : உண்மையில் நீர் முதலில் இங்கு வந்தபோது எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை. அய்யர்தான் உன்மேல் பெரிய நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பணியைத் தந்துள்ளார். வாஞ்சிநாதன் : பாரத மாதாவுக்கு என் கடமையை நிச்சயம் செய்து முடிப்பேன். கண்ணுப்பிள்ளை : வாஞ்சி அண்ணா, அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நாகசாமி : அநேகமாக பிரான்ஸ் தேசத்திலிருந்து துப்பாக்கி இந்த வாரத்தில் வந்துவிடும். வந்ததும் திட்டத்திற்குத் தயாராகிவிடலாம். வாஞ்சிநாதன் : ஆனா, நீலகண்டர் எங்கே போனார் என்ன ஆனாருன்னு தெரியவில்லையே அண்ணா? (மேடையில் இருள் பரவி ஒளி வரும்போது ஓம்காரின் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்கள் வாஞ்சியின் பயிற்சியின்போது எங்குதான் இருந்தீர்கள்..? ஓம்கார் : பாண்டிச்சேரியை விட்டு வெளியேறிய சில நாட்களில் காசிக்குச் சென்றுவிட்டேன். ஆஷ் கொலைச் சதியில் என்னையும் சேர்க்கப்பட்டிருந்ததை காசியில் பத்திரிகைச் செய்தியாகத்தான் நான் தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : நாகசாமி சொன்னதுபோல வாஞ்சிநாதனின் பெயர் தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில் நிலைகொண்டுவிட்டது அல்லவா..? ஓம்கார் : ஆமாம், வாஞ்சி அந்தக் கொலைக்குத் தயாரானதைவிட, தற்கொலைக்குத் தயாரானதுதான் பெரிய சவால். புரட்சிக்குத் தயார் ஆகிறவன் மரணத்திற்கும் சேர்ந்தேதான் தயார் ஆகிறான். ஆனால், அந்த மரணம் சமரில் அமைய வேணடும்; அல்லது அந்த மரணம் தொடர்ந்து புரட்சிக்குப் பலம் சேர்க்கவேண்டும் அல்லவா..? வாஞ்சியின் தியாகம் மகத்தானது. ஆனால் அவர் செயலும் தியாகமும் புரட்சியைத் துடைத்துப் போட்டுவிட்டது. வாஞ்சியின் மரணத்தோடு தமிழ்நாட்டு புரட்சிப் இயக்கமும் தனது இறுதி மூச்சை விட்டது. ஆகவேதான் அவரது தியாகம் அர்த்தமில்லாது போய்விட்டது. (மேடை இருளில் போகிறது. ஒளி வரும்போது தர்மாலயம் இல்லத்தின் அறை) காலம் : 1911ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஒருநாள் முன்னிரவு.பாத்திரங்கள் : வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், கண்ணுப்பிள்ளை, நாகசாமி வ.வே.சு.அய்யர் : துப்பாக்கி வந்துவிட்டது (துப்பாக்கியை எடுத்துக் காட்டுகிறார்) மேடம் காமாவின் முயற்சியினால் பிரான்ஸ் தேசத்திலிருந்து வந்த துப்பாக்கி இது. இதில் இரண்டு குண்டுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. ஒன்று ஆஷ் கலெக்டர் மார்பைத் துளைக்க வேண்டும். இன்னொன்று உனக்கானது; தியாக வேள்வியின் ஆகுதிக்கானது. நீர் உமது வேலையை எப்போது ராஜினாமா செய்யப்போகிறீர்? வாஞ்சிநாதன் : ஊருக்குப் போனதும் செய்துவிடுவேன் ஐயா. வ.வே.சு.அய்யர் : நல்லது.. நீர் செய்யப் போகும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதை இங்கே திட்டமிட முடியாது. அதை நீங்கள் உங்கள் ஊரில் சென்றுதான் முடிவு செய்ய வேண்டும். உமக்கும் புதுச்சேரியில் உள்ள எங்களுக்குமான தொடர்பு இன்றுடன் முடிகிறது. இனிமேல் இந்தப் பணி திருநெல்வேலியின் பணி. ஜாக்கிரதை.!பராசக்தி உமக்குத் துணையிருப்பாள். பாரத மாதாவின் பரிபூரண ஆசிகள் உம்முடன் இருக்கும். சென்று வாருங்கள். நாகசாமியும் கண்ணுப்பிள்ளையும் உம்மைப் புதுச்சேரி எல்லையைக் கடந்து விட்டு வருவார்கள்.(நாகசாமியைப் பார்த்து), எப்படி அழைத்துப் போகப்போகிறீர்கள்..? நாகசாமி : இன்னைக்கு இராத்திரி 11 மணிக்குக் கிளம்புகிறோம். வில்லியனூர் போய், அங்கிருந்து பாகூர் சென்று ஆற்றுக்கு அக்கரை போய் திருப்பாப் புலியூரில் ரயிலேற்றி விட்டுவிட்டு வருவோம். வ.வே.சு. அய்யர் : நல்லது.. பத்திரமாக அனுப்பிவிட்டு வாருங்கள். காரியம் ஜெயம் ஆகட்டும். (வாஞ்சிநாதன் வணங்கிக் கொள்கிறார். வ.வே.சு. அய்யர் விடைபெற்றுச் செல்கிறார்) (மேடையில் காட்சி மாறுகிறது. மீண்டும் ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமி, காரியம் ஜெயம் ஆனது அல்லவா..? ஓம்கார் : காரியம் ஜெயம்தான். புரட்சி இயக்கத்திற்கு ஜெயம் இல்லையே. தன் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்றுதானே வாஞ்சி தன்னைச் சுட்டுக்கொண்டார்? அப்படியானால் அவர் தன் பெயரையும் ஊரையும் எழுதிக்கொண்டது தவறல்லவா? சங்கர கிருஷ்ணன் : கொலைக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வதற்குத்தானே அந்தக் கடிதத்தை அவர் வைத்துக்கொண்டார்? ஓம்கார் : அந்த வேலையை இயக்கம் செய்ததாக இருக்க வேண்டும். தன் பெயரையும் ஊரையும் எழுதி வைத்தது, தன் முனைப்பால் வந்த அறிவு மயக்கம், ஒரு புரட்சிக்காரனுக்கு வரக்கூடாதது. அவரை அடையாளம் காட்டிய கடிதத்தை வைத்தது மட்டுமின்றி அவர் வீட்டிலும் தன் சகாக்களின் கடிதங்களை அழிக்காமல் வைத்திருந்து, எல்லாரையும் அவரே காட்டிக் கொடுத்தவரானார். இது மிகப் பரிதாபம். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு..? ஆஷ் கொலைச் சதியில் தம்மைச் சேர்த்துவிடுவார்களோ என்றும் செய்த சத்தியத்தை மீறி இயக்கத்தைக் காட்டிக்கொடுக்க வேண்டி வந்துவிடுமோ என்றும் நினைத்து இன்னும் இருவர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒருவர் செங்கோட்டையைச் சேர்ந்த தர்மராஜ ஐயர்; வாஞ்சிநாதனுக்கு நெருங்கிய நண்பர். இயக்கத்தின் சார்பில் எனக்கு மணியார்டர் அனுப்பி வந்தவர். அவர் பாதரச நஞ்சை உட்கொண்டு மரணமடைந்தார். இன்னொருவர் வெங்கடேச அய்யர்; புனலூர்க் காரர். இவர் கத்தியால் தொண்டையில் குத்திக்கொண்டு சாவை வரவேற்றார். இவர்களின் மரணத்தை நீங்கள் வீரச் சாவில் சேர்க்கமாட்டீர்கள் அல்லவா? ஏனெனில் இவர்கள் ஆஷைக் கொல்லவில்லை. வெறும் பயத்தில் உயிரைவிட்டார்கள் என்பதால்தானே? தனிநபர்க் கொலைச் சதிக்கான தண்டனையையோ, போலீஸ் சித்திரவதையையோ ஏற்றுக்கொள்ளத் தேவையான மனோதிடத்தை, இவர்களுக்குப் புரட்சியைப் போதித்த தலைவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை அல்லவா? சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்களும் புரட்சியைப் போதித்தவர் அல்லவா? நீங்கள் இல்லாத இடத்தை வேறொருவர் நிரப்பிக்கொள்ளும் வகையில் உங்கள் போதனை பலவீனமானதாய் இருந்ததாகச் சொல்லலாமா? ஓம்கார் : எனது தோல்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் உடனடிச் செயலை அவர்கள் மனம் விருப்பத்துடன் நாடியது. தகுந்த தருணத்திற்காக அவர்கள் காத்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

காட்சி 12 காலம் : ஓம்கார் ஆசிரமத்தில் சங்கர கிருஷ்ணன் வந்த மூன்றாம் நாள்பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : தம்பி, நேற்று மாலை மலை ஏறிப்போய் வந்தீர்கள் போல.. எப்படி இருந்தது..? சங்கர கிருஷ்ணன்: அருமையான அனுபவமாக இருந்தது சுவாமி. நீங்கள் கொஞ்சகாலம் முன்பு வரை மலை மேலேதான் இருந்தீர்களாமே..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கீழே என்னை அவதாரம் போல மக்கள் நினைக்க ஆரம்பித்துப் பல இடங்களில் இருந்தெல்லாம் கூட்டமாக வந்தார்கள். இங்கே வந்து சில ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்குப் பல காரணங்களாக பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது. நான் தொந்தரவுக்கு உள்ளானேன். தனிமையை விரும்பிய நான் கூட்டத்தின் போதைக்குள் சிக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஆகவே மலை மேலே போய் இருந்துகொண்டேன். அந்தக் காலத்தில்தான் காந்தியடிகள் வந்திருந்தார். முதலில் அவரது பிரதம சீடர் குமரப்பா மலை ஏறி வந்து என்னைப் பார்த்தார். அவர் சொல்லி, காந்திஜி என்னைப் பார்க்க விரும்பினார். அவர் என்னைப் பார்க்க மேலேறி வருவது சரியாக இருக்காது என்று கருதி நான் கீழிறங்கி வந்து பார்த்தேன். சங்கர கிருஷ்ணன்: ஆஹா.. இங்கே காந்தியடிகள் வந்திருக்கிறாரா..? நேற்று பாரதியின் இறுதிச் சடங்கை செய்ய உங்களை அழைத்தார்கள் என்று சொன்னீர்கள். இன்று காந்தியடிகள் இங்கே வந்திருக்கிறார் என்கிறீர்கள். ஒரு பக்கம் வாஞ்சிநாதன் கதை போய்க்கொண்டிருக்கிறது. நான் எதை முதலில் கேட்கட்டும் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக் கொண்டே) எதைக் கேட்டால் என்ன..? பேச்சின் போக்கில் போவோம்.. தானாக எல்லாம் வரும். சங்கர கிருஷ்ணன்: ஆசிரமத்தில் உங்களிடம் சிலர் வைத்தியத்துக்கு வருவதைப் பார்க்க முடிந்தது.. அது எப்படி சுவாமி..? வைத்தியம் தெரியுமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமம் மேலே போனதற்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு சித்த வைத்தியத்தில் ஏதோ கொஞ்சம் தெரியும். இங்கே இருக்கும் குடிகளுக்கும் வருகிற பக்தர்களுக்கு அவசரக் காலத்திலும் மருத்துவ யோசனைகள் சொல்லி வந்திருக்கிறேன். (சிரிக்கிறார்) அவை அதிசயமாகப் பலிக்கத் தொடங்கின தம்பி. மக்கள் ரொம்பவும் நம்பிவிட்டார்கள். (மீண்டும் சிரிக்கிறார்) சாமியாரின் மருத்துவம் வேறு பலனைத் தருவதற்கு முன்பு ஆசிரமத்தை மேலே கொண்டுபோவதுதான் சரியென்று போனேன். என்னைக் கேட்காமல் யாரும் வரக்கூடாது என்று திட்டம் சொல்லி இருந்தேன். நல்ல மக்கள்..! என் பேச்சை மீறவில்லை.அவர்களும் எனக்கு உத்தரவு போடுவார்கள்; நானும் சிலவற்றைக் கேட்டுக்கொள்வேன். அப்படி ஒரு உத்தரவு, ‘சாமியாருக்கு வயதாகி விட்டது.. மேலே தங்கக்கூடாது. கீழே தங்கள் பார்வையில் இருக்க வேண்டும்’ என்று. சங்கர கிருஷ்ணன்: நல்லது சுவாமிஜி, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : மீதிக்கதை வேகம் நிறைந்தது. வாஞ்சிநாதனை தர்ம இல்லம் தயார்படுத்தியது. தினமும் காலை வேளையில் வ.வே.சு. அய்யரின் போதனைகள்; மாலையில் கிளர்ச்சியூட்டும் உடற்பயிற்சிகள்; சிலம்ப வித்தைகள். அதன் மூலம் வீர சாகச உணர்வுகளால் மனத்தில் போதையூட்டுவது; பாரத இராமாயண யுத்தக் கதைகள் மூலமாக வன்முறையை மிகச் சாதாரணமானதாக இரத்தத்தில் ஏற்றுவது; தனிநபர்க் கொலைகளை வீரம் என்று நம்பச் செய்வது.. இப்படி நெஞ்சில் வேண்டிய உரம் ஏறின பிறகு வாஞ்சிநாதன் சில இயக்கப் பிரசாரப் பிரசுரங்களோடு செங்கோட்டை வந்து சேர்ந்தார். அவர் தனது இறுதியான வேலையைச் செய்வதற்கான பிரயத்தனங்களைச் செய்தார். மீண்டும் அவர்கள் ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டிலும் புனலூரிலும் கூடியதாகத் தெரிகிறது. சங்கர கிருஷ்ணன்: (சிரித்துவிடுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : ஏன் சிரிப்பு தம்பி..? சங்கர கிருஷ்ணன்: மன்னிக்க வேண்டும் சுவாமி, நீங்கள் தயார் செய்த நண்பர்களை, ‘அவர்கள்’ என்று குறிப்பிட்டுவிட்டீர்களே..? ஓம்கார் சுவாமிகள் : அது அப்படித்தானே ஆயிற்று தம்பி.. என் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லையே.. சங்கர கிருஷ்ணன்: சரி சுவாமிஜி, ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்ததைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : அவை எல்லாமே நான் இல்லாத நிகழ்வுகள்.. கேட்டவற்றிலிருந்தே சொல்கிறேன்.. ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்த கூட்டத்தில்தான் வாஞ்சிநாதன் இந்த செயலைச் செய்யப்போகிறார் என்று மற்றவர்களுக்கு தெரியவந்தது.கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டுத் தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. கற்பனை செய்து பார்த்தால் வாஞ்சிநாதன் திட்டங்களை அவர்கள் எதிர்பார்த்திராததால் அதிர்ச்சிதான் அடைந்திருப்பார்கள். (மேடையில் ஒளி மங்கி மாடசாமி வீடாக ஒளி விரிகிறது) காலம் : 1911ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒருநாள் பகல் வேளை.இடம் : மாடசாமி வீடு, ஓட்டப்பிடாரம்.பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், மாடசாமி, சங்கரகிருஷ்ணய்யர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை மற்றும் சிலர். வாஞ்சிநாதன் : (தான் கொண்டுவந்த பிரசுரங்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு) ‘ஆரியர்களுக்கு ஒரு ஆப்த வாக்கியம்’ (என்ற பிரசுரத் தலைப்பை வாசித்துவிட்டு) எல்லோரும் இந்தப் பிரசுரத்தைப் படிக்க வேண்டும். நமது நாட்டின் கீழ்மைகளுக்கெல்லாம் காரணங்களைத் தெரியப்படுத்தியிருக்கிறோம். பரங்கியரின் அக்கிரமங்களையும் நமது நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதையும் பஞ்சத்திலும் நோயிலும் நமது ஜனங்கள் மடிந்துகொண்டிருப்பதையும் வெள்ளையர்கள் உல்லாசமாகத் திரிந்துகொண்டு தேசபக்தர்களை ஒடுக்கி வைப்பதையும் மக்களுக்குப் புரியும் விதமாகக் குறித்திருக்கிறோம். மாடசாமி : இந்தப் பிரசுரங்களை என்ன செய்ய வேண்டும்..? வாஞ்சிநாதன் : மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். நமது இயக்கத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். சங்கரகிருஷ்ணய்யர் : அது சரி, நமது அடுத்த திட்டம் என்ன..? நீலகண்டரைப் பார்த்தீர்களா.? வாஞ்சிநாதன் : நீலகண்டர் பாண்டிச்சேரியில் இல்லை; எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. வ.வே.சு. அய்யர்தான் பாண்டிச்சேரியில் இப்போது இயக்கத்தை நடத்துகிறார். புதிய பரங்கி அரசன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் முடிசூடப் போகிறானாம். நமது நாட்டிலும் வந்து அந்த வைபவத்தைச் செய்யப் போகிறானாம். அவன் இந்தியாவில் காலை வைக்கும் நாளில், பரங்கியர் எதிர்ப்பைக் காட்டுவதற்கு நாடெங்கிலும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றனவாம். நமது கடமையாக நமது ஜில்லாவில் நாம் கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும். அந்த வேலையை எனக்குத் தந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.(வாஞ்சிநாதன் நிறுத்துகிறார். எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். பல கணங்கள் கனமாக நகர்கின்றன) சங்கரகிருஷ்ணய்யர் : அபாயமான திட்டம். இது நீலகண்டருக்குத் தெரியாது என்பது தெரிகிறது; நீ தயார் நிலையில் வந்திருப்பதும் தெரிகிறது. இன்றைய தேதியில், இந்த ஜில்லாவின் பெரிய மனிதர்கள், கனவான்கள், தனவான்கள் எல்லாரையும் கலெக்டர் ஆஷ் பயத்தாலும் நயத்தாலும் தன் வசப்படுத்தி இருக்கிறான். கொஞ்சகாலம் முன்பு பெரிய கூட்டத்தின் நடுவில் மாலையும் கழுத்துமாக அவன் வீற்றிருக்கிற படத்தைப் பார்த்தேன். நீ செய்யப்போகிற காரியத்திற்குப் பிறகு நமக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாம் தலைமறைவாகவே வாழ வேண்டியிருக்கும். வாஞ்சிநாதன் : இது தெரிந்ததுதானே.. நாம் எல்லாரும் இரத்தத்தில் சங்கல்பம் செய்திருப்பது மறந்துவிட்டதா..? காரியத்திற்குத் தயாராகும்போது தயக்கமோ பயமோ நமக்குள் வரலாமா..? சிதம்பரம் பிள்ளை சிறையில் துன்பப்பட்டதைக் கேட்டு நமக்கு எத்தனை கோபம் வந்தது..? அதுவெல்லாம் ஆறிப்போனதா..? சொல்லுங்கள்.. மாடசாமி : சகோதரா, நான் துணிந்துவிட்டேன். உன் மகத்தான தியாகத்தை ஆசீர்வதிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறேன். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : சரி, நானும் சம்மதிக்கிறேன். சங்கர கிருஷ்ணய்யர் : நானும் துணிகிறேன். மற்றவர்கள் : நாங்களும் சம்மதிக்கிறோம்.. (மீண்டும் எல்லோரும் சேர்ந்து இந்த இரகசியத்தைக் காப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள்) வாஞ்சிநாதன் : இன்னும் சில வேலைகள் பாண்டிச்சேரியில் பாக்கி இருக்கின்றன. முக்கியமானது, துப்பாக்கியும் அதற்கான பயிற்சியும். அதற்காக நான் மீண்டும் எனது விடுப்பை நீட்டித்துக்கொண்டு பாண்டிச்சேரி போகிறேன். நான் திரும்பியதும் நம் செயலைத் திட்டமிட்டு நிறைவேற்றுவோம். பாரதமாதாவுக்கு நம்மை அர்ப்பணிப்போம். அன்னை நம்மை ஆசீர்வதிப்பாள். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 8

நீலகண்ட பிரம்மச்சாரி – 8

காட்சி 8 காலம் : 1910ஆம் வருடம் கோடைக்காலத்தில் ஒருநாள்இடம் : தென்காசியில் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீடுபாத்திரங்கள் : நீலகண்டர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, சங்கர கிருஷ்ணன், வாஞ்சிநாதன், இன்னும் சில இளைஞர்கள் (காளி படம் ஒன்றுக்கு மாலை போட்டு வைத்திருக்க, பொரியும் கடலையும் படைக்கப்பட்டிருக்கிறது.. சிறிய செம்பு ஒன்றில் தண்ணீரும் பக்கத்தில் செப்பு ஒன்றில் குங்குமமும் இருக்கிறது) நீலகண்டர் : என்ன சிதம்பரம் பிள்ளை.. எல்லாரும் வந்தாச்சா..? மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : ஓட்டப் பிடாரம் மாடசாமியும் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளையும் வரணும். இப்போ ரயில் வர நேரம்தான். தென்காசி ரயிலடி பக்கம்தான..(அப்போது ரயில் ஊதல் கேட்கிறது) நீலகண்டர் : சரி அவர்களும் வந்துரட்டும்.. (வாஞ்சிநாதனைக் காட்டி) இது யாரு? புதுசா இருக்காரே.. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : இவரைப் புனலூர் சங்கர கிருஷ்ணய்யர் அழைச்சுட்டு வந்திருக்கார்.. (நீலகண்டர் சங்கர கிருஷ்ணய்யரைப் பார்க்கிறார்) புனலூர் சங்கர கிருஷ்ணன் : இவர் வாஞ்சி ஐயர்.. ஊர் செங்கோட்டை.. நம்ம வேலை பற்றிச் சொல்லியிருக்கேன். (கதவு தட்டும் சத்தம் கேட்க, சிதம்பரம் பிள்ளை கதவைத் திறக்க இரண்டு நபர்கள் உள்ளே வரவும் கதவை மறுபடியும் சாத்துகிறார் சிதம்பரம் பிள்ளை) நீலகண்டர் : வாங்கோ ஆறுமுகம் பிள்ளை, வாரும் மாடசாமி.. சிதம்பரம் பிள்ளைவாள் சேதி ஏதாச்சும் தெரியுமா..?(வ.உ.சி.யின் பெயரைக் கேட்டதுமே எல்லாரும் கண் கலங்குகிறார்கள்)மாடசாமி : (குரல் தழுதழுக்க) கோயம்புத்தூர்ல போட்டுருக்கான்.. பாவம் எப்படி இருக்காரோ.. பரலிக்கோட்டை நெல்லையப்பர் போன வாரம் பார்க்கப் போனாரு.. அவரு வந்தாத்தான் ஐயா எப்படி இருக்காருன்னு தெரியும்..(சில கணங்கள் கனத்த மவுனமாகக் கழிகிறது) நீலகண்டர் : சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்..எல்லாரும் நம்ம வழக்கம்போல காளி முன்னால சங்கல்பம் செஞ்சுக்குவோம்.. சங்கர கிருஷ்ணன், இன்னைக்கு நீர் சங்கல்பம் செஞ்சு வையும். சங்கர கிருஷ்ணன் : மகா காளி, உன் பெயரால் உறுதிகொள்கிறோம். எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேச சேவைக்கு அர்ப்பணம் செய்கிறோம். பாரத மாதா சங்கத்தின் வேலைகளையும் திட்டங்களையும் இரகசியமாக வைத்துக்கொள்வோம். எங்களில் இரகசியத்தை வெளியிடுவோன் யாராயினும் அவன் நரகத்திற்கே போவான். இரகசியத்தை வெளியிடுவோன் சுட்டுக் கொல்லப்படுவான். திட்டமிட்ட ஒருநாளில் தேசம் முழுவதிலும் உள்ள வெள்ளையர்களைக் கொல்லும் பணிக்கு, எப்போதும் ஆயத்தமாயிருந்து காத்திருப்போம். கட்டளை வந்தவுடன் அர்ச்சுனன் போலக் காரியம் ஆற்றுவோம்.. இது சத்தியம். மற்றவர்கள் : ஆம்.. இது சத்தியம். (நீலகண்டர் காளியின் படத்தின் முன்பு இருந்த செம்புத் தண்ணீரில் குங்குமத்தை எடுத்துக் கலக்குகிறார்) நீலகண்டர் : சகோதரர்களே, ஆங்கிலேயர்கள் பாம்புகள். கண்ட இடத்தில் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். நாம் தனித்தனியாகச் செய்வோமென்றால் சூரனைப்போல முளைத்துக்கொண்டு வருவார்கள். நமது பாரத மாதா சங்கம் கல்கத்தாவிலிருந்து சொல்லும் ஒருநாளில் நாம் ஒன்றாய்த் திரண்டு யுத்தம் செய்து வெள்ளைப் பூண்டுகளைக் கொல்வோம்.நான் தமிழ்நாடெங்கிலும் சுற்றிவந்து ஆட்களைத் தயார்செய்து வந்திருக்கிறேன்.திருநெல்வேலி ஜில்லாவில் 3000 மறவர்களையும் 20000 கம்பளத்து நாயக்கர்களையும் நமது திட்டத்திற்குத் தருவதாக மறவர் தலைவர்களும் நாயக்கர் தலைவர்களும் சம்மதித்திருக்கின்றனர். ஜெர்மனியிலிருந்து நமக்கு ஆயுதங்கள் வருவதற்கு ஏற்பாடு ஆகியிருக்கிறது. எல்லாம் கூடிவரும்போது நாம் நமது மாதாவின் சேவையைப் பூர்த்தி செய்வோம்.சகோதரர்களே, பாரத மாதாவின் பெயரால் ஆணை.. இந்தக் குங்குமத் தீர்த்தத்தைப் பரங்கியரின் இரத்தமாக எண்ணிப் பருகுவோம். இது நமது கடமையின் சின்னமாக இருக்கட்டும். வாழ்க அன்னை.. வந்தே மாதரம்..! (நீரைத் தீர்த்தம்போல அனைவருக்கும் கொடுத்துவிட்டு, கடைசியில் தானும் அருந்துகிறார்) நீலகண்டர் : சகோதரர்களே, இனி நாம் நமது சொந்தப் பெயர்களில் இயங்கக்கூடாது. புனைப்பெயரை வைத்துக்கொள்ள வேண்டும்.. இன்றிலிருந்து எனது பெயர் பிரம்மச்சாரி. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை இனிமேல் கோவிந்தன். வாஞ்சி அய்யர் இன்று முதல் ஹரி.. (தொடர்ந்து பெயர் சூட்டும் படலம் நடந்து முடிகிறது) நீலகண்டர் : சகோதரர்களே, நமது இயக்கத்தின் செய்திகளை நாம் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக, பாண்டிச்சேரியிலிருந்து நாம் வெளியிடும் ‘சூரியோதயம்‘ என்ற பத்திரிகைக்கு சந்தா சேகரிக்க உங்களையெல்லாம் கேட்டிருந்தேன். நீங்களும் சேகரித்துக் கொடுத்தீர்கள். இப்போது நூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். சந்தா தந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். மீதியைக் கொடுத்து இன்னும் நிறைய சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நம் செய்திகள் பரவலாகத் தமிழ்நாடெங்கும் சென்று சேர வேண்டும். நான் பாண்டிச்சேரிக்குச் செல்கிறேன். திரும்ப வர சிலகாலம் ஆகலாம். எல்லாம் கூடிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம். வந்தே மாதரம்..! அனைவரும் : வந்தே மாதரம்..! (மேடையில் மெதுவாக இருள் பரவுகிறது. மீண்டும் ஒளி பரவ, ஆசிரம அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் இருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, இவ்வளவு ரகசியங்களும் எப்படி வெளியாகின..? ஓம்கார் சுவாமிகள் : அந்த வாஞ்சி அய்யர், ‘நான்தான் கொன்னேன் பாத்துக்கோ’ என்கிற மாதிரி, தன் பெயரையும் ஊரையும் எழுதிச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அல்லவா தன்னைச் சுட்டுக்கொண்டார்..?! அந்தக் கடுதாசியிலிருந்துதான் நூல் பிடித்தார்கள்..! சங்கர கிருஷ்ணன் : அந்த வீரச் சாவை நாங்களெல்லாம் எப்படிப் போற்றிக்கொண்டிருக்கிறோம்..! நீங்கள் அதை ஏதோ முட்டாள்தனம் போலக் குறிப்பிடுகிறீர்களே சுவாமி?! ஓம்கார் சுவாமிகள் : அவசரக்குடுக்கைத்தனம் என்றும் சொல்ல வேண்டும்.. பாண்டிச்சேரியில் வ.வே.சு.அய்யர் செய்து முடித்த சூழ்ச்சியின் விளைவு அது. சங்கர கிருஷ்ணன் : பாண்டிச்சேரியில் என்னதான் நடந்தது சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : நான் இல்லாதபோது நடந்த விஷயங்கள் அவை. என்னைத் தேடிப் பாண்டிச்சேரிக்கு வாஞ்சிநாதன் வந்திருந்தார். நான் அப்போது அங்கே இல்லை. மீண்டும் நான் வந்தபிறகு தெரிந்துகொண்டதைத்தான் சொல்ல வேண்டும். சொல்கிறேன்.. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

காட்சி 7 இடம் : ஓம்கார் ஆசிரமம்காலம் : மறுநாள் காலை 10 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : நேற்று ராவுல நல்லா தூங்கினீங்களா..? சங்கர கிருஷ்ணன் : நல்லா தூங்கினேன் சுவாமிஜி. காலை வேளையில் இந்த மலைச் சாரல் மிக ரம்மியமாக இருக்கிறது. அதிலும் தெளிந்த கண்ணாடி போன்ற நதியின் பிரவாகத்தில் என்னை மறந்து போனேன். ஓம்கார் சுவாமிகள் : இந்த நதியை இங்கே ‘தட்சிணப் பிநாகினி’ என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆறாக ஓடுகிறாள். இந்த நதி வனத்திற்குள் ஒரு சுனையில் பிறந்து வருகிறது. இந்த ஆசிரமத்தைத் தொடங்கிய சில நாட்களில் அந்தச் சுனையைக் கண்டுபிடித்து, இந்தப் பகுதி மலைக் குடிகளின் உதவியோடு அந்தப் பாதையைச் சீர் செய்தேன். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! இது தென்பெண்ணை நதியா..!நல்லது சுவாமிஜி. நேற்று வ.உ.சி. வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னபோது, காந்திஜி பத்திப் பேச்சு வந்ததே.. அவரு அப்பவே பிரபலமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா, அப்ப அவரு தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகச் சோதனைகளைச் செய்து வந்தார். அவர் இந்தியாவுக்குள்ள கொஞ்சம் முன்னால வந்திருந்தா, என் சரித்திரம் இப்படி இருந்திருக்குமா..? (சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : காந்தியடிகளைச் சந்தித்திருந்தால் உங்கள் மனம் மாறியிருக்குமுன்னு சொல்றீங்களா..? ஓம்கார் சுவாமிகள் : அப்படிச் சொல்ல வரவில்லை. அவரால் நாட்டின் அரசியல் போக்கு மாறிப்போனதைச் சொன்னேன். அதனால் என் போன்றவர்களின் அரசியல் வழிகளில் மாற்றம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். தேசத்தின் சரித்திரத்தை, மக்கள் என்ற மகாசமுத்திரத்தின் சக்தியை முன்னிறுத்தி மாற்றிய போக்கு அல்லவா அது..! பின்னாளில் அவரைச் சந்தித்தபோதும் எனக்கு இது தோன்றியது. சங்கர கிருஷ்ணன் : ஆஹா.. அதையும் கேட்க வேண்டும். பிறகு கேட்கிறேன்.சுவாமிஜி, பரோடா மகராஜான்னு மாடசாமிக்கிட்டே சொன்னீங்களே.. அவரு யாரு..? ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. அதை லண்டன்ல இருந்த இந்தியா விடுதியில் இருந்து சொல்லணும். சிதம்பரம் பிள்ளை கேட்டாருல்ல.. ‘உனக்கு தேசபக்திப் பாடம் யாரு போதிச்சது’ன்னு.. அந்த மகானுபவர்களின் நண்பர்கள் எல்லாம் அங்கேதான் இருந்தாங்க. அவங்க ஆரம்பிச்ச இயக்கத்திற்குப் பெயர் ‘அபிநவ் பாரத் சமிதி‘. சியாம்ஜி கிருஷ்ண வர்மான்னு ஒரு தேசபக்தக் கனவான் இருந்தாரு. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கில அரசில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அபாயகரமான மனிதர் என்ற பிரசித்தியுடன் ஆங்கில அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் மீண்டும் லண்டன் வந்து, இந்தியாவிலிருந்து அங்கே படிக்கப் போனவங்களுக்கு நிதி உதவி செய்றதுக்கு ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செஞ்சு, அதைக் கவனித்து வந்தார். இந்த உதவியில் படித்தவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை செய்யக் கூடாதுன்னும் தேச விடுதலைக்கு உழைக்கணும் என்ற நிபந்தனையுடன் அதைச் செஞ்சார். அப்படி திலகர் சிபாரிசுல படிக்க வந்தவருதான் விநாயக தாமோதர் சாவர்க்கர். திலகர் இவரை அனுப்பிய உண்மையான நோக்கம், பலாத்காரப் புரட்சிக்குத் திட்டமிடுவது குறித்தும் வெளிநாட்டில் இருந்துகொண்டு புரட்சியை நடத்த ஆட்களைத் தேர்ந்து, வழிநடத்தி, தயார் செய்வதற்கும்தான். சாவர்க்கர் அந்த வேலையில் வெகு கெட்டிக்காரர். வ.வே.சு. அய்யரும் லண்டனில் படிக்க வந்தார். இவங்கல்லாம் இந்தியா ஹவுஸ்ல இருந்து அந்த இயக்கத்த நடத்திக்கிட்டு இருந்தாங்க. பாரிஸ் நகரத்திலேயும் அந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. சியாம்ஜி கிருஷ்ண வர்மா பேரில் இங்கிலாந்து உளவுத்துறைக்கு ஐயம் தோன்ற, அவர் பாரிஸ் சென்றுவிட்டார். சாவர்க்கரும் அய்யரும் விடுதியைக் கவனித்து வந்தார்கள். இந்தியாவுல இவங்க இயக்கத்திற்கு லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர்-ன்னு செல்வாக்கு இருந்தது. 1857 போல சிப்பாய்ப் புரட்சி ஒன்னு நடத்தணுமின்னு அவங்க எண்ணம். அதுல சில இந்து ராஜாக்களும் இருந்தாங்க. அவங்கள்ள ஒருத்தருதான் பரோடா மகராஜா ஸாயாஜிராவ். சங்கர கிருஷ்ணன் : லால் பால் பால் அப்படின்னு சொல்வாங்களே.. அது இவங்க மூனு பேரைத்தானே சுவாமிஜி..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, அரவிந்தரும் உண்டு. அப்போ லண்டன்ல ஒரு கொலை நடந்தது.. 1909ஆம் வருசம் மதன்லால் திங்கரான்னு ஒரு சுதேசி இளைஞன், கர்சான் வைலி என்ற வெள்ளைக்கார அதிகாரி ஒருத்தன சுட்டுக் கொலை பண்ணினான். கொலையில் இந்தியா ஹவுஸ் ஆட்களுக்குத் தொடர்பு இருந்ததுன்னு மோப்பம் பிடிச்சு சாவர்க்கரை பிடிச்சுக்கிட்டு போச்சு பிரிட்டிஷ் அரசு. அவரை அந்தமான்ல கொண்டு போட்டாங்க. வ.வே.சு. அய்யர் பலே கில்லாடி. தப்பிச்சுப் போயிட்டாரு. 1910ஆம் வருசம் பாண்டிச்சேரிக்கு வந்து என் தலையெழுத்தை அவருதான் எழுதினாரு. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, சாவர்க்கர்ன்னு சொன்னீங்களே.. காந்தி அடிகள் கொலைச் சதியில் சேர்க்கப்பட்டிருந்தாரே அந்த சாவர்க்கரா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா அவருதான்.. (சிரிக்கிறார்) காலம் எப்படில்லாம் மாறிடுச்சு பாருங்க.. நான் சாமியாராகி இருக்கேன்.. அரவிந்தர் வேதாந்தியாப் போய் ஆசிரமம் நடத்துனாரு.. வ.வே.சு. அய்யர் காந்திஜி தயவால பிரிட்டிஷ் அரசின் பொதுமன்னிப்ப வாங்கிட்டு ஆசிரமம் நடத்துனாரு. சாவர்க்கர் அந்தமான் சிறைக்கொடுமை தாங்காம மன்னிப்புக் கடிதங்கள் போட்டு வெளியே வந்தாரு. கடைசியிலே காந்திஜி கொலைச் சதியில் சேர்க்கப்பட்டு நிரூபணம் ஆகாம விடுதலையானாரு. சங்கர கிருஷ்ணன் : நீங்க மட்டும்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கிட்ட எந்த விதத்திலேயும் சரணடையாம, ரொம்ப காலம் ஜெயில்ல இருந்தவரு.. இல்லையா சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) அதுதான் தம்பி வேடிக்கை. இரண்டு தடவை நான் ஜெயிலுக்குப் போனபோதும் வெறும் சதிக் குற்றம்தான். ஆஷ் கொலையை நான் திட்டமிடாமலே முதல் குற்றவாளி. ஏழரை வருடம் சிறை. இரண்டாம் தடவை கம்யூனிஸ்ட் பிரச்சார நோட்டீஸ் கொடுத்தேன்.. இன்னொரு எட்டு வருசம் சிறை. இது பெரிய குற்றமில்லியா? இந்தியாவுக்கு வெளியே ரங்கூன்ல கொண்டு போட்டான்..(சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : நேற்று தூத்துக்குடிச் சம்பவங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. 1908 பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடிக்கு ஒரு பெரிய புயல் வந்தது. அதோட பேரு சுப்பிரமணிய சிவா. அப்போ தூத்துக்குடி தேசபக்த வெறி பிடிச்சுக் கிடந்தது. பிப்ரவரி 27ஆம் தேதி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பண்ணினாங்க. நான் திருநெல்வேலி வந்து கூட்டங்களில் பேசிக்கிட்டிருந்தேன். மார்ச் மூனாம் தேதி வேலை நிறுத்தம் ஜெயிச்சது. 50 சதமானம் சம்பளம் ஒசத்துனாங்க. வார விடுமுறையும் கொடுத்தாங்க. சம்பளம் இல்லாம விடுப்பு எடுத்துக்கிடலாம். நெனச்சுப் பாரு தம்பி, 66 வருசத்திற்கு முன்னே இத நடத்துனாரு பிள்ளைவாள்.. சங்கர கிருஷ்ணன் : உண்மையில் இது பெரிய சாதனைதான் சுவாமிஜி.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, ஏகாதிபத்தியத்தின் முதுகில் விழுந்த அடி இது. அப்புறம் பாலர் விடுதலையைத் தூத்துக்குடியில் கொண்டாடத் திட்டம் போட்டார் பிள்ளைவாள். இது பெரிய மக்கள் எழுச்சி ஆகிவிடும் என்று திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் பயந்தான். தூத்துக்குடியில் சப் கலெக்டரா இருந்த ஆஷ் அதிகார ஆணவம் கொண்ட இன வெறியன். கூடவே சிதம்பரம் பிள்ளை நடத்திய தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க நினைத்தும் முடியாத தோல்வியில் குரோதம் கொண்டு இருந்தான். கலெக்டர் விஞ்ச், பாலர் விடுதலைக் கொண்டாட்டத்திற்குத் தடை போட்டான். வ.உ.சி.யும் சிவாவும் அய்யங்காரும் தடையை மீறி பாலர் விழாவை நெல்லையில் கொண்டாடினார்கள். மூனு பேரையும் கைது பண்ணினாங்க. திருநெல்வேலியிலேயும் தூத்துக்குடியிலேயும் பெரிய எழுச்சி நடந்தது. விஞ்ச்சும் ஆஷூம் இந்த ரெண்டு ஊரையும் ரணகளமாக்கி, பேயாட்டம் ஆடினாங்க.என் இயக்கத்தை நடத்த வேண்டியிருந்ததால நான் கடையநல்லூருக்குப் போய் இருந்துகிட்டேன். பிறகு சென்னைக்கு வந்து, இந்தியா பத்திரிகையில் வேலை பார்த்தேன். பாரதியார் பாண்டிச்சேரி போனப்போ, இரண்டு வாரம் நான்தான் இந்தியாவைக் கொண்டு வந்தேன். அப்புறம் இந்தியா பாண்டிச்சேரியிலிருந்து வந்தது. அவ்வளவுதான்.. ஒரு இரண்டரை வருசம் பேயா அலைஞ்சு ஆள் புடிச்சேன். 1910ஆம் வருசம் வந்தது; சித்திரையா வைகாசியா.. சரியா ஞாபகமில்லை. அப்போ.. (மேடையில் ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை தொடரும்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

காட்சி 6 காலம் : 1908ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒருநாள்இடம் : தூத்துக்குடியில் வ.உ.சி.யின் வீடுபாத்திரங்கள் : வ.உ.சி., நீலகண்டர், பத்மநாப அய்யங்கார் மற்றும் ஓட்டப்பிடாரம் மாடசாமி(வ.உ.சி.யும் பத்மநாப அய்யங்காரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீலகண்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார்) பத்மநாப அய்யங்கார் : சூரத் காங்கிரஸ் நல்லபடியா முடிஞ்சதோல்லியோ.. தூத்துக்குடியில் புதிய கட்சி வேலையும் பிரமாதமா நடந்துண்டிருக்கு. நீலகண்டர் : இல்லையா பின்னே.. திலகர் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பிள்ளைவாள்தான தலைவர்?! அப்புறம் தூத்துக்குடியில் உற்சாகத்திற்குக் கேக்கணுமா என்ன? பத்மநாப அய்யங்கார் : ஆஹா! பிள்ளைவாள்.. இவர் யார்..? இந்தப் போடு போடுறாரே! வ.உ.சி. : அய்யங்கார்.. இவர் பெயர் நீலகண்டன். நம்ம வேலைக்கு உதவி செய்ய பாரதியார் அனுப்பி வச்சிருக்கார். தீவிர தேச பக்தர். பத்மநாப அய்யங்கார் : பேஷ்.. பேஷ்..! (இளைஞர் ஒருவர் கும்பிட்டுக்கொண்டே வருகிறார். கண்களில் பதட்டம் தெரிகிறது) வ.உ.சி. : வா, மாடசாமி.. என்ன ஆச்சு? ஏன் பதட்டமா வர்ற..? மாடசாமி : வணக்கம் வக்கீலய்யா.. வணக்கம் சாமி.. நேத்து மில் தொழிலாளர் கூட்டம் நடந்துச்சுல்லங்க ஐயா.. அதுக்கு வந்த தொழிலாளிங்கள எல்லாம் மிரட்டிருக்காங்க. ‘சிதம்பரம் பிள்ளை ராஜ துரோகம் பேசுறவரு.. அவரு கூட்டத்துக்குப் போனா வேலை கிடையாது’ன்னு மிரட்டிருக்காங்க ஐயா. பத்மநாப அய்யங்கார் : அதுக்கு ஏன் பதட்டம்? இது எதிர்பார்த்ததுதான..?(மௌனமாக இருக்கும் வ.உ.சி.யைப் பார்த்து) பிள்ளைவாள்.. என்ன யோசனை.? வ.உ.சி. : அதிகாரிங்க என்ன மிரட்டுறது..? போராட்டம் தீவிரமாகும்போது, வேலைக்கு வரமாட்டேன்னு தொழிலாளி அதிகாரிகளை மிரட்டுற நாளும் வரும். அந்தச் சூழ்நிலையில், தொழிலாளர்களும் அவங்க குடும்பமும் வயிறு காயாம இருக்க நாம ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். பத்மநாப அய்யங்கார் : அவ்வளவு தூரம் போகுமா..? வ.உ.சி. : அதுக்கும் மேலேயே நடக்கும். இந்தத் தொழிலாளிங்களோட கஷ்டங்களை நாம இப்போ வெளிப்படுத்துறோம். விடிஞ்சு போனா அடைஞ்சு வாராங்க; நேரக் கட்டுப்பாடில்லாத வேலைக்கு ரொம்ப மோசமான கூலி. வார ஓய்வு கிடையாது; விடுப்பு எடுக்க முடியாது. இதெல்லாத்தையும் வாங்கணுமின்னா தொழிலாளிங்க ஒற்றுமையாலும் வேலையை நிறுத்தியும்தான் முடியும். நீலகண்டர் (குறுக்கிட்டு) : பிள்ளைவாள்.. நாம தேச சேவையில் மட்டும் கவனம் செலுத்தலாமே..வ.உ.சி. : (மெல்லச் சிரித்து) தேச சேவைன்னா என்ன..? தேச பக்தின்னா என்ன..?மக்களோட பிரச்சினையைப் பேசுறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமன தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனைக்கிறீரா நீலகண்டர்..? இந்தப் பாடம் யாரு சொன்னது? நீலகண்டன் : மன்னிக்கணும்.. நம்மளோட ஆற்றல் வீணாப் போகுதேன்னுதான் கவலை.. எவ்வளவு நாள்தான் வெள்ளைக்காரங்க அக்கிரமத்தைப் பொறுத்துக்கறது? வெள்ளை அதிகாரிகள இன்னமும் ஏன் விட்டு வைக்கணும்..? வ.உ.சி. : என்ன செய்யலாம்? நாம நாலு பேரு சேர்ந்து வெள்ளைக்கார துரைகளைக் கொன்னுட்டா சுதந்திரம் வந்துருமா..? ஒரு துரை போனா இன்னொருத்தன் வருவான். நாம் மக்களைத் திரட்டிப் போராடித்தான் ஜெயிக்கணும். உமக்கு தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால்ஸ் மாகாணத்துல நடந்த சேதி தெரியுமோ..? பத்மநாப அய்யங்கார் : அது ஒரு பாடம்.. விவரமாச் சொல்லுங்க பிள்ளைவாள். வ.உ.சி. : தென்னாப்பிரிக்காவுல வாழுற ஆசியா மக்கள் எல்லாரையும் பதிவு செய்யச் சொல்ற சட்டம்.. அதன்மூலம் ஆசிய மக்களைக் கட்டுப்படுத்தும் சட்டம்.. இதை ஆசிய மக்கள், குறிப்பா நம்ம இந்தியர்கள் எதிர்த்து ரெண்டு வருசமா போராடினாங்க. அதிலேயும் தமிழர்கள்தான் முன்னால நின்னாங்க. இப்போ போன மாசம்தான் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு போராட்டத்துக்குப் பணிஞ்சு, ஒரு சமாதான பேரத்திற்கு வந்திருக்கிறது. இந்த வெற்றி அந்த மக்களை இன்னும் உற்சாகப்படுத்தும். இன்னும் ஒன்னா இணைக்கும். இந்த உலகத்துல அடிமைத்தனம் எந்த வடிவத்தில் இருந்தாலும் மக்களைத் திரட்டித்தான் எதிர்த்துப் போராடணும். பத்மநாப அய்யங்கார் : இந்த வேலையைச் செய்ததும் நம்ம பிள்ளைவாள்போல இளம் வக்கீல் ஒருத்தர்தான். அவரு பேரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வ.உ.சி. : சரி, இன்னைக்கு சாயுங்காலம் கடற்கரையில் கோரல் மில் தொழிலாளிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கேன்.. எல்லாரும் வந்துருங்க. (நீலகண்டர் மாடசாமியின் தோள்களில் கை போட்டுக்கொண்டு வெளியில் வருகிறார்) நீலகண்டர் : என்ன மாடசாமி.. பிள்ளைவாள் பேச்சுல அப்படி பிரமிச்சுப் போயிட்டீர் போல.. இப்படிக் கூடறதும் பேசுறதும் எத்தனை நாளைக்கு..? ஒரே நாள்ல நாடு முழுவதும் இருக்கிற வெள்ளைக்காரங்கள கொன்னு போடணும்.. யுத்தம் பண்ணணும். மாடசாமி.. வாய் யுத்தமில்ல. ஆய்தம் தாங்கி, துப்பாக்கி ஏந்தி யுத்தம் பண்ணணும்.. மாடசாமி : இதெல்லாம் நடக்குமா..? ஆயுதம் வாங்கணுமே..! பணம் வேணுமே..! பெரிய ஆட்கள் துணை வேணுமே..! அப்புறம், துப்பாக்கி சுடத் தெரியணுமே..! நீலகண்டன் : எல்லாம் நடக்கும் மாடசாமி.. பரோடா மகராஜா போன்ற சுதேசி ராஜாக்களெல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் போட்டுருக்காங்க.. விவரமாச் சொல்றேன் வாரும்.. (ஒளி மங்கி மேடை இருள்கிறது.. ஒளி விரியும்போது ஓம்கார் சுவாமிகளின் அறையாக இருக்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இந்த மாடசாமி பெரிய சாகசக்காரர் என்கிறார்களே.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், ரொம்பக் கெட்டிக்காரர், தீரர். ஓட்டப்பிடாரம் இவரது ஊர். சிதம்பரம் பிள்ளையோட தீவிர விசுவாசி. ஆஷ் கொலை வழக்கில் இவர் பெயர் அடிபட்டாலும் கடைசிவரை இவர் பிடிபடவே இல்லை. இவரை என் கட்சிக்குக் கொண்டுவர எத்தனை பேசியிருப்பேன்..? (சிறிய சிந்தனைக்குப் பிறகு)ஆஷ் கொலைக்குப் பின் அவர் தலை மறைவானதால் அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துவிட்டது. அவரது குடும்பம் நிராதரவானது. பாவம்.. இப்படி எத்தனைப் பேரின் கண்ணீரில் உருவானது இந்த சுதந்திர தேசம்.. (கண் கலங்குகிறார்) சீடர் : (உள்ளே வந்து) சுவாமி ஆகாரம் தயார் ஆகிவிட்டது. ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள் சாப்பிடலாம் (திரை விழுகிறது) (நாளை பார்க்கலாம்)

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

காட்சி 5 களமும் காலமும் : அதே களம், அதே காலம் பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள் மற்றும் சங்கர கிருஷ்ணன் (பூஜை முடித்து வந்த ஓம்கார் சுவாமிகள் தம் இடத்தில் அமர்ந்துகொள்கிறார். கூடவே வந்த சங்கர கிருஷ்ணன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பாயில் அமர்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இங்கே மாலை ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருண்டு விடுகிறதே?! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, மழைக்காலத்தில் இன்னும் சீக்கிரமாகவே இருண்டுவிடும். சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. வ.உ.சி.யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.. பிள்ளைவாள் திருநெல்வேலியில் கைதாகும் வரை நான் அவருடன் பட்டும் படாமலும்தான் இருந்தேன். பிள்ளைவாளுடன் நான் இருந்த சொற்பக் காலம் மிக வேகமாக ஓடியது. என் பாதை வேறு, பிள்ளையின் பாதை வேறு என்பதை நான் அவரோடு சேர்ந்த கொஞ்சநாளிலேயே தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : அதைத் தெரிந்துகொள்ள காலத்தில் கொஞ்சம் பின்னால் போக வேண்டும். பாரதி சொன்னாரல்லவா? பாலர் பற்றி.. பாலரை நேரில் சந்தித்தேன். அப்புறம் அவரது செயலாளராக இருந்த குஞ்சு பானர்ஜி என்பவரைச் சந்தித்திருந்தேன். அவர்கள் மூலம் வங்கத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் ரகசிய வேலைகளைச் செய்துவந்த, தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்துகொண்டேன். அவர்கள் என்னைத் தமிழ்நாட்டில் இந்த பலாத்கார இயக்கத்திற்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்யப் பணித்தார்கள். நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். இந்த விஷயம் பாரதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் தெரியாது. என் ஆள் சேர்க்கும் பணிக்குப் பிள்ளைவாளோடு போவது பயனளிக்கும் என்றுதான் போனேன். ஆனால் சிதம்பரம் பிள்ளையின் தேசப் பணி வேறு; என் பாதை வேறாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : வ. உ. சி.க்கோ பாரதிக்கோ அல்லது திலகருக்கோ பலாத்கார வேலைகளில் நம்பிக்கை கிடையாதா..? ஓம்கார் சுவாமிகள் : இருந்தது என்றுதான் நம்புகிறேன். ஆனால் அதற்குக் காலம் கனியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.‘நேரடி பலாத்கார வேலைகளைவிட, தேசபக்தியைப் பரப்புவதே உமது பணியாக இருக்கட்டும்‘ என்று, சகோதரி நிவேதிதா தமக்குக் கட்டளை இட்டதாக, பாரதியார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.அதுபோக, பாரதியும் பிள்ளைவாளும் தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் பழக்கம் உடையவர்கள். பலாத்கார இரகசிய நடவடிக்கைகள், தமிழ் அரசியல் நெறிக்குப் பொருந்தி வரவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.(கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சிதம்பரம் பிள்ளையிடம் எவ்வளவு நாள் இருந்தீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : மிகக் கொஞ்சமாத்தான். சென்னையிலும் தூத்துக்குடியிலுமாக ஒரு மூனு மாசமிருக்கலாம். ஆனா அவரு கூட இருந்ததனால, பின்னால திருநெல்வேலி ஜில்லாவுல எனக்கு நெறைய தொடர்பு கெடச்சுது. அவர் வக்கீலாக இருந்தார். நிறைய பேருக்கு உதவி செய்துவந்தார். சுதேசிப் பிரசாரம், பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டங்கள், சுதேசி பண்டகசாலைன்னு நிறைய பணிகளைச் செஞ்சு வந்தார். சுதேசிக் கப்பல் விட்டது பெரிய வேலை. இப்படியொரு யோசனை சிதம்பரம் பிள்ளைக்கு எப்படி வந்திருக்கும் என்பது அந்தக் காலத்தில் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது தம்பி. அதை எப்படி வெள்ளைக்காரன் பொறுத்துக்கொள்வான்? அதுதான் அவரு மேல வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப் பகையைக் கொண்டுவந்தது. அப்புறம் அவரு நடத்துன மில் போராட்டம், வெள்ளைக்காரனுக்குப் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்குனது போல ஆச்சுது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்காரங்களும் கோரல் மில் டைரக்டர்களும் உடன் பிறந்தவங்க மாதிரிதான். சிதம்பரம் பிள்ளை ரெண்டு பக்கமும் வந்தாரு. வணிகம், அரசியல்-ன்னு இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியோட சிதம்பரம் பிள்ளையை வெள்ளை நிர்வாகம் பார்த்தது தம்பி. தொழிலாளிங்கன்னு ஒரு சக்தியை முதன்முதலா இந்தத் தமிழ்நாடு அப்போதுதான் கண்டது தம்பி. படிச்சவங்களே இருந்த அரசியல்ல, படிக்காத ஜனங்கல்லாம் அணி அணியா வந்ததைப் பார்த்து வெள்ளை அதிகாரம், வெலவெலத்துப் போனது. மில் தொழிலாளிகள் கூலியும் கேட்டார்கள். வந்தேமாதரமும் முழங்கினார்கள். இது 1908இல் மிகப்பெரிய அதிசயம் தம்பி. (மீண்டும் சிறிய சிந்தனைக்குப் பிறகு தொடர்கிறார்) ஆனா, பிள்ளை வேலைகள்ள இருந்த சூட்சும அரசியல் அப்போ எனக்குப் புரியல; பின்னாலதான் புரிஞ்சுது. அந்த அரசியலின் எதிர்வினை ரொம்ப நாள் மறையவே இல்லை. சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் எதிர்விளைவு, மூன்றாண்டுகள் கழித்து மணியாச்சியில் வெடித்தது. ஆகவே, என் வாழ்க்கையில் நான் நேரடியாக ஈடுபடாத ஆஷ் கொலையில் சிதம்பரம் பிள்ளையின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பின்னணி இருந்தது. 1908இல் பிள்ளை செய்த வேலைகளுக்கும் எங்களோட பலாத்கார வழிமுறைகளுக்கும் இடைவெளி நெறைய. அதனால நான் சிதம்பரம் பிள்ளைக்கு வேலை செஞ்ச கையோடே, தனியா ரகசிய இயக்கத்திற்கும் திருநெல்வேலி ஜில்லா முழுசும் அலைஞ்சு ஆள் சேர்த்து வந்தேன். சிதம்பரம் பிள்ளையோட சுதேசி இயக்கத்துல வேலை செஞ்சவங்கள்ள இருந்து சில பேரை எங்க இயக்கத்திற்கும் சேர்த்துகிட்டேன். சங்கர கிருஷ்ணன் : வ.உ.சி. கைதானவுடன் நடந்த எழுச்சிகளில் உங்கள் நடவடிக்கைகள் ஏதுமில்லையே! அப்போது நீங்கள் திருநெல்வேலியில இல்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : ‘ சொல்றேன். 1908 புது வருஷம் பிறந்தபோது, சூரத் காங்கிரஸ் முடிஞ்சு சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி வந்தப்போ, அவருகூட நானும் வந்தேன். அப்போது, தூத்துக்குடி சுதேசி இயக்கச் சூட்டில் பொங்கிக்கொண்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பத்மநாப அய்யங்கார் வந்திருந்து, தூத்துக்குடியில் பிரசங்கங்கள் செய்தார். தூத்துக்குடி எங்கிலும் பெரிய கிளர்ச்சி நிலை சூழ்ந்திருந்தது. அப்போ… (மேடையில் ஒளி மங்கி இருளாகித் திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

காட்சி 4 (மேடையில் முந்தைய காட்சியில் ஓம்கார் சுவாமிகள் பேசிக்கொண்டிருந்த இடம் இருட்டாகவும் இன்னொரு பகுதி ஒளியிலும் இருக்க வேண்டும். ஒளி விழும் பகுதியில் காட்சிகள் விரிகின்றன) காலம் : 1907ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள் முற்பகல் வேளைகளம் : சென்னையில் இந்தியா பத்திரிகை அலுவலகம்பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை (பாரதியார் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். நீலகண்டர் படித்துக்கொண்டிருக்கிறார். வ.உ.சி. உள்ளே வருகிறார்) வ.உ.சி : வணக்கம் மாமா..! பாரதி : வாரும் மாப்பிள்ளை.. பட்டனத்திற்கு எப்போ வந்தீர்..? வ.உ.சி : இன்னைக்குக் காலையிலேதான் மாமா.. பாரதி : சுதேசிக் கப்பல் ஓட்டமெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது..? வ.உ.சி. : வழக்கம்போல நெருக்கடிதான். இருந்துமென்ன? தூத்துக்குடி வர்த்தகப் பெரியவர்களும் மக்களும் தரும் பேராதரவில் சுதேசிக் கம்பெனி நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது மாமா. அது விஷயமாகவும் உங்களைப் பார்க்க வந்தேன். பாரதி : ‘சொல்லுங்க பிள்ளைவாள்.. வ.உ.சி. : கம்பெனிக்கு இன்னும் பங்குகள் சேகரிக்க வேண்டும். தேசபக்தியும் வர்த்தக நிபுணத்துவமும் தெரிந்த இளைஞர் ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் மாமா. பாரதி : கிடைச்சாச்சுன்னு வச்சுக்குங்க மாப்ளே.. (நீலகண்டரைப் பார்த்து) தம்பி.. இங்கே கொஞ்சம் வாரும். சிதம்பரம் பிள்ளையைத் தெரியுமல்லவா..? நீலகண்டன் : பிள்ளைவாளைத் தெரியாமலா..? (வ. உ. சி. யைப் பார்த்து) “வணக்கம் அண்ணா.. பாரதி : (வ.உ.சி.யிடம்) இவர் நீலகண்டன். இங்கிருக்கும் பிரசித்தி பெற்ற வர்த்தகக் கம்பெனி ஒன்றில் கணக்கராகவும் சரக்குப் பிடிக்கிறவராகவும் வேலை பார்க்கிறார். விபின் சந்திரபாலர் இங்கே வந்தபோது, அவரது பேச்சினால் தேசபக்தராகி இந்தியாவுக்கும் வேலை பார்க்கிறார். இப்போ பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழுமையாக தேச வேலைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான்தான் நேரம் வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். வ.உ.சி. : ஆஹா..! சந்தோஷம். பாலரைக் கேட்ட பிறகும் ‘இந்தியாவுக்கு‘ வேலை செய்யாமல் போவாரா..? பாரதி : (வ.உ.சி.யின் சிலேடையைக் குறித்து) சபாஷ்.. (நீலகண்டனைப் பார்த்து) இனிமேல் பிள்ளைவாளிடம் நீ வேலை பார்க்கலாம். சுதேசிக் கம்பெனிக்கு பங்குகளைச் சேகரித்துக் கொடுக்கவேண்டும். அப்படியே பிள்ளைவாளுக்குத் துணையாக தேச சேவையும் செய்யலாம். என்ன சொல்கிறாய் தம்பி..? நீலகண்டன் : அண்ணா பேச்சுக்கு அட்டியேது..? இன்னைக்கே பிள்ளைவாளுடன் சேர்ந்துடறேன். வ.உ.சி. : இப்போது வேண்டாம் நீலகண்டன். நான் சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் சேர்த்து அழைத்துப் போக வந்திருக்கிறேன். மாமாவைப் பார்க்க வந்த முக்கிய வேலையே அதுதான். நான் தூத்துக்குடி சென்றபிறகு ஒருநாள் அழைக்கிறேன். வந்து விடுங்கள். நீலகண்டன் : சரி அண்ணா.. வ.உ.சி. : (நீலகண்டனைப் பார்த்து) பாலரின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள்.. எப்படி இருந்தது..? நீலகண்டன் : ஒரே நேரத்தில் வெயிலும் சாரலும் சேர்ந்ததுபோல.. ஒரே நேரத்தில் கள்ளும் தேனும் அருந்தியதுபோல.. ஒரே நேரத்தில் பிள்ளைவாளையும் பாரதியாரையும் கேட்பதுபோல.. வ.உ.சி. : பலே பலே.. மாமா.. தம்பிக்குக் கவிதையும் வரும்போல.. சகவாச வரமா..? பாரதி : இவன் சிங்கம்.. உங்களிடம் சேர்ந்தால் தங்கமாகவும் மின்னுவான்.. பராசக்தி அருள் பொழிவாள்..! வ.உ.சி. : கவி வாக்கு பலிக்க வேண்டும். இப்போ சூரத் காங்கிரஸ் வேலைகள் பற்றிப் பேசலாமா மாமா..? (மேடையில் மூவரும் இருக்கும் பகுதியில் ஒளி மங்கி, ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்த பகுதியில் ஒளி பரவுகிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. கவி வாக்கு பலித்ததா..? ஓம்கார் சுவாமிகள் : ஆஹா..! பாதி பலித்தது.. பாதி பலிக்கவில்லை தம்பி. சங்கர கிருஷ்ணன் : அது எப்படி சுவாமிஜி? ஓம்கார் சுவாமிகள் : சிதம்பரம் பிள்ளையே பெரிய சிங்கம். நான் அவர் பக்கத்தில் மின்னுவதெப்படி..? ஆகவே பாரதியார் சொன்ன நீலகண்ட சிங்கம், வேறு தங்கங்களைத் தயார் செய்யப் போய்விட்டது. அதற்கும் பிள்ளைவாள் பாசறையில் கற்றதுதான் காரணம் தம்பி. அதுதான் பாதி பலித்தது என்றேன். சிதம்பரம் பிள்ளை ஒரு வசீகரமான தலைவர். கனவான்கள், தொழிலாளிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என்று, எல்லாத் தரப்பாளர்களிடமும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. சுருக்கமாச் சொன்னால், அவர் பின்னால் தூத்துக்குடி நகரமே இருந்தது. அது மட்டுமல்ல; சூரத் காங்கிரசுக்குப் போய்விட்டு வந்தபிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைவருமாகிவிட்டார். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! சுவாமிஜி, வ.உ.சி.யின் ஆளுமையை எத்தனை உணர்ச்சி பொங்க வர்ணிக்கிறீர்கள்..! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, பிள்ளைவாளின் ஆதர்சம் அப்படி.(கொஞ்சம் நிறுத்துகிறார்)சங்கர கிருஷ்ணன் : என்ன சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (குரல் தழுதழுக்க) பாரதியார் சொன்னாரே.. “வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார் மன்னனென மீள்வான்” என்று. அந்த வாக்கு, சிதம்பரம் பிள்ளைக்குப் பலித்திருக்க வேண்டும் தம்பி.. (சீடர் உள்ளே வருகிறார்) சீடர் : சுவாமி.. கோவில் பூஜைக்கு நேரமாகிறது. ஓம்கார் சுவாமிகள் : பூஜை முடித்து வந்தபிறகு பேசலாம் தம்பி.. (ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை பேசுவோம்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

காட்சி 3 காலமும் களமும் : அதே நாள்; அதே இடம். பாத்திரங்கள்: சங்கர கிருஷ்ணன் மற்றும் சீடர். (மேடையின் ஒருபகுதி இருளாகவும் மறுபகுதி ஒளியிலும் இருக்கிறது. இருளான பகுதியில் ஓம்காரின் அறை உள்ளது. ஒளிவிழும் பகுதியில் சங்கர கிருஷ்ணன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : “ஐயா, ஆசிரமம் எவ்வாறு நடக்கிறது? பொருள் உதவி யார் செய்கிறார்கள்.?” சீடர் : “சுவாமிஜியைத் தெரிந்த வடநாட்டு நண்பர்களும் இங்கேயே இருக்கும் சில பெரிய மனிதர்களும் தனவந்தர்களும் உதவி செய்கிறார்கள். சுவாமிஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும் பொது ஜனங்களும் உதவுகிறார்கள். இந்தப்பக்கம் உள்ள ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் உதவி பண்றாங்க..” சங்கர கிருஷ்ணன் : “நல்லது ஐயா, சுவாமிஜி பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்களேன்..” சீடர் : “ஐயா, நான் இங்கு வந்து சிலகாலம்தான் ஆகிறது. எனக்கு சீர்காழி. சுவாமிகளின் ஊர்க்காரன்தான். சுவாமிஜியின் பிரசங்கங்கள் இங்கு வெகு சகஜம். வடநாட்டு பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் இவரைப் பத்தியும் இவரோட பிரசங்கங்களையும் போட்டிருக்கிறார்கள். இவர் பெரிய புரட்சிக்காரர் என்பதெல்லாம் இங்கே உள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது. இவரும், தனது பழைய செய்திகளை யாருக்கும் சொல்வதும் இல்லை. எனக்குக்கூட கொஞ்சமாகத்தான் தெரியும்..” (சங்கர கிருஷ்ணன் சாப்பிட்டு முடிக்கிறார்) சீடர் : “தட்டத்திலேயே கை அலம்பிக்கொள்ளுங்கள். ஓய்வறை இருக்கிறது. சற்று ஓய்வெடுங்கள். சுவாமிஜியை மாலை சந்திக்கலாம். நான் வந்து அழைத்துக்கொள்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “ஓய்வு தேவையில்லை. ஆசிரமப் பணிகளைப் பார்க்கிறேனே..” சீடர் : சரி, வாருங்கள், சுற்றிக் காட்டுகிறேன். (இருவரும் அறையிலிருந்து வெளியேறுகிறார்கள். சாப்பாட்டு அறையில் ஒளி மறைந்து ஓம்கார் சுவாமிகளின் அறைப் பகுதியில் ஒளி வருகிறது. ஓம்கார் சுவாமிகள் அமர்ந்திருக்கிறார். சங்கர கிருஷ்ணன் உள்ளே வருகிறார்) நேரம் : மாலை 4 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : “வாரும் சங்கர கிருஷ்ணன். அமருங்கள். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தீங்களா?” சங்கர கிருஷ்ணன் : “ஆமாம் சுவாமி.. கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது.” ஓம்கார் சுவாமிகள் : “என்ன ஆச்சர்யம் தம்பி?” சங்கர கிருஷ்ணன் : “இந்த 85 வயசிலேயும் ஆசிரம வேலைகளை நீங்களும் செய்றீங்க.. அப்புறம்…” ஓம்கார் சுவாமிகள் : “அப்புறம் என்ன? சொல்லுங்கள்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமணர் என்பதால் ஆசிரமத்தில் எல்லாரும் பிராமணர்களாக இருப்பாங்களோன்னு நெனைச்சுட்டேன். ஆனா ஹரிஜன்கள் தொண்டர்களா இருக்காங்க. சமையல் வரைக்கும் அவங்க இருக்கறதும் ஆசிரமக் கோவில் பணிகள்ளே அவங்க சுதந்திரமா வேலை செய்யறதும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது..” ஓம்கார் சுவாமிகள் : “ஆமாம் ஒரு பன்னிரண்டு தாழ்த்தப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவங்க இந்த ஆசிரமப் பணிகள்ள இருக்காங்க. எல்லா சாதிக்காரங்களும் இங்கே வந்து வேலை செய்யலாம். ஆசிரமத்துல சாதி வித்தியாசமே தெரியாது. இப்ப உங்க கண்ணுல பட்டுருக்கு. கண்ணுலயா.. காதுலயா.?” (கேட்டுவிட்டுக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி, நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களிடம் சந்தேகம் ஒன்று கேட்கலாமா?” ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக்கொண்டே) “இந்தப் பீடிகையிலேயே நீங்கள் கேட்கப் போவதென்ன என்று தெரிகிறது. கேளுங்கோ..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமண பாஷையை விலக்கிப் பேசுவது வியப்பளிக்கிறது..” ஓம்கார் சுவாமிகள் : (மீண்டும் வெடிச் சிரிப்புடன்) “40 வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். நான் இப்போது பிரசங்கி அல்லவா? தமிழில் பேசுகையில் இன்னும் முழுதாக மாறிவிட்டதுன்னு சொல்லமுடியாது சங்கர கிருஷ்ணன். நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கோ.” சங்கர கிருஷ்ணன் : “அறுபது வருசத்திற்கு முன்னே நீங்கள் பெரிய புரட்சிக்காரர். இப்போ சாது. இந்த சந்நியாச வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்திப் போனீர்கள்..?” ஓம்கார் சுவாமிகள் : “இது உங்கள் கேள்வியாக இருக்கமுடியாது. கேட்க வந்ததை நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.” சங்கர கிருஷ்ணன் : “அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல, இது தப்பித்தலா என்று தோன்றுகிறது சுவாமிஜி..” (ஓம்கார் சுவாமிகள் மௌனமாகிறார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதை அடக்கிக்கொள்வது போன்ற மௌனம்) ஓம்கார் சுவாமிகள் : (கொஞ்சம் உஷ்ணமாகவே) “என்ன சொன்னீர்? கோழைத்தனம் என்றா? தப்பித்தல் என்றா? நான் கோழையில்லை தம்பி; தப்பிக்கவும் இல்லை. நான் அதிபயங்கரவாதியெல்லாம் கிடையாது. அந்த வார்த்தையே தப்பு. என்னால் தொண்டு செய்யாமல் சோம்பி இருக்க முடியாது. இளமையில் குடும்பம், கல்யாணம், சம்பாத்தியம் எல்லாமே விட்டுட்டு வந்தது நாட்டுத் தொண்டுக்காகத்தான்.” (சற்றே நிதானிக்கிறார். இப்போது குரல் சாந்தமடைகிறது) “தம்பி, என் இருத்தல் அவசியமல்லவா? 1930இல் விடுதலையானேன். நாடு மாறியிருந்தது. வெளியே வந்தபோது உப்புச் சத்தியாக்கிரகம் உச்சத்தில் இருந்தது. தேசபக்தி என்பது மாறியிருந்தது. போர்க்களம் மாறியிருந்தது. புதிய களத்தில், புதிய பாதையில், நான் பொருந்திப் போகவில்லை. நான் அறிந்திராத புதிய தேசத் தொண்டர்களோடு என் சேர்க்கை அமையமுடியாது என்ற நிலை. அதுபோக, இந்தச் சாது மனோநிலைக்கு நான் சிறையிலேயே வந்திருந்தேன். அதனால் என் இருப்புக்கும் நாட்டுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் இந்தப் புதிய பிறப்பைத் தேர்ந்தெடுத்தேன். பலாத்காரப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தவனாக என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் வங்கப் புரட்சியாளர்கள் இருந்தார்கள்.. பாரதியார் இருந்தார்.. சிதம்பரம் பிள்ளை இருந்தார்.. அரவிந்தர் இருந்தார்.. வ.வே.சு.அய்யர் இருந்தார்.. சிங்காரவேலர் இருந்தார்.. கம்யூனிஸ்ட் பிரசாரகனாகவும் சிலநாட்கள் இருந்தேன். நான் ஒரு கலவை மனிதன். இந்தச் சாது வாழ்க்கைகூட முழுமையில்லை என்றே உணர்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “மன்னிக்க வேண்டும் சுவாமிஜி.. உங்களை சினப்படுத்திவிட்டேன்..” ஓம்கார் சுவாமிகள் : “பரவாயில்லை தம்பி.. இப்பவும், என் பழைய தோழன் சங்கர கிருஷ்ணன் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்..” சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி.. காலையில் ஆஷ் கலெக்டர் கொலை பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள்.. தொடர்ந்து சொல்லவேணும்..” ஓம்கார் சுவாமிகள் : “ஆஷ் கொலை.. அது ஒரு குறைப் பிரசவம்.. ஆனாலும் அது, வெள்ளைக்காரர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. இந்தியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்தில்கூட அதன் எதிரொலிகள் இருந்தன. அந்தக் கொலையை வாஞ்சி ஐயர் செய்தபோது நான் காசியில் இருந்தேன் தெரியுமா தம்பி..? ஆனால், என்னைத்தான் முதல் குற்றவாளியா ஆக்கினாங்க.” சங்கர கிருஷ்ணன் : ‘தெரிந்திருக்கிறேன் சுவாமிஜி.. ஆனால் உங்கள் வாக்கு மூலத்தில் நீங்கள் யாரையும் விட்டுக் கொடுக்கவில்லை.. குற்றத்தின் மோடிவிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முயலவில்லை..’ ஓம்கார் சுவாமிகள் : ‘அது எப்படிச் செய்வேன்.. அந்த செயலின் சூத்திரதாரி நானில்லை.. அது வ.வே.சு.ஐயர்.. ஆனால் அந்தத் தோழர்கள் என் வார்ப்புகள்.. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டார்கள்.. அவர்கள் அவசரத்தின் காரணம் சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கலெக்டர் இழைத்த கொடுமைகள்தான்.. சங்கர கிருஷ்ணன் : “விவரமாகச் சொல்ல வேண்டும்.” ஓம்கார் சுவாமிகள் : “சொல்கிறேன். அதைச் சிதம்பரம்பிள்ளையிடம் இருந்து தொடங்கவேண்டும். அப்போது, நான் பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பாரதியாரைப் பார்க்க வந்த சிதம்பரம்பிள்ளையிடம் பாரதியார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அது 1907ஆம் வருசமாயிருக்கும். (சுவாமிகள் கண்களை மூடி நினைவுகளில் மூழ்குகிறார். ஒளி மங்கித் திரை விழுகிறது.)

நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரி

நாடகம் காட்சி 1 காலம்: 1921ஆம் ஆண்டில் ஒருநாள் காலைகளம்: திருவல்லிக்கேணி – பாரதியார் வீடுபாத்திரங்கள்: நீலகண்டர், சகுந்தலா பாரதி, செல்லம்மா பாரதி மற்றும் பாரதியார் வீட்டு முற்றத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் சத்தமாகத் ‘திருக்குறள்’ படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் பாரதியாரின் இரண்டாவது புதல்வி சகுந்தலா. “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் யாசகம் பெற்றுத்தான் உயிர் தரிக்க வேண்டியவாறு இந்த உலக மக்களுக்கு இழிவு இருக்குமானால், இந்த உலகத்தைப் படைத்தவனும் கெட்டு ஒழியட்டும்.” (வாசலில் குரல் கேட்கிறது) குரல்: “அண்ணா.. பாரதி அண்ணா..” சகுந்தலா எழுந்து வாசலுக்கு வருகிறாள். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நிற்கிறார். தாடி அடர்ந்த முகம், அழுக்கான ஆடை, ஆங்காங்கே சில கந்தல்கள். கண்களில் சகுந்தலாவைத் தெரிந்துகொண்டதன் காரணமாக அன்பு கனிந்து நிற்கிறது. சகுந்தலா: “அப்பா இல்லையே.. வெளியே போயிருக்கிறார்..” வாசலில் நிற்கும் மனிதர்: “பாப்பா.. நீ சகுந்தலாதானே?! என்னைத் தெரியவில்லையா..? நான் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. பாண்டிச்சேரியில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறேன்.” சகுந்தலா: “சரியாக நினைவுக்கு வரவில்லை மாமா.. உள்ளே வாருங்கள். அம்மாவைக் கூப்பிடுகிறேன். அம்மா.. அம்மா..” நீலகண்டர் உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளிருந்து பாரதியாரின் மனைவி செல்லம்மா வருகிறார். நீலகண்டர்: “நமஸ்காரம் மன்னி.. நான் நீலகண்டன்.. தெரியறதா..?” செல்லம்மா: “ஏன் தெரியவில்லை..? வாருங்கோ நீலகண்டன்.. இந்த நாற்காலியில் சித்த உட்காருங்கோ.. உங்கள் அண்ணா வெளியில் போயிருக்கிறார்.. இருங்கோ.. வந்துவிடுவார்.. குடிக்க ஜலம் கொண்டு வருகிறேன்.” சமையல் உள்ளுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் செல்லம்மா. நீலகண்டர் குடித்து முடிக்கிறார். செல்லம்மா: “மிகவும் இளைத்துவிட்டாற்போல் காண்கிறது..” நீலகண்டர்: “கொஞ்சம் அலைச்சல்..” செல்லம்மா: “ஜெயிலில் இருந்து எப்போ வெளியே வந்தேள்..?” நீலகண்டர்: “இரண்டு வருசம் ஆச்சு..” செல்லம்மா: “இந்த ஊருக்கு எப்போ வந்தேள்..?” நீலகண்டர்: “ஒரு கெழமை இருக்கும்.. இன்னைக்குத்தான் அண்ணா வீட்ட கண்டுபிடிச்சேன்.. பாப்பாவுக்கு என்னை ஞாபகம் வரலை போல..” செல்லம்மா: “அப்போ அவ சின்ன பொண்ணு. அதனால ஞாபகம் இருக்காது..” (சகுந்தலாவைப் பார்த்து) “சகுந்தலா, இவர் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. தீவிர தேசபக்தர்.. அப்பாவோட சிநேகிதர்.. பத்து வருசத்திற்கு முன்னே நாம பாண்டிச்சேரில இருக்கச்சே, திருநெல்வேலி ஆஷ் கலெக்டர் கொலை நடந்த வழக்கிலே எட்டு வருசம் ஜெயில்ல இருந்தவர்..” (வாசலில் சத்தம் கேட்கிறது. பாரதியார் பாட்டொன்றைப் பாடியவாறே உள்ளே வருகிறார்) பாரதியார்: “பாரத சமுதாயம் வாழ்கவே.. ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே..” நீலகண்டர்: (எழுந்தவாறே) “அண்ணா..” பாரதியார்: “யார்..?” நீலகண்டர்: “நீலகண்டன் அண்ணா.. என்னைத் தெரியலையா..?” பாரதியார்: “ஆஹா..! வாரும் நீலகண்டன்.. எப்போ வந்தீர்..?” நீலகண்டர்: “சித்த நேரம் முன்னேதான்..” பாரதியார் : “ஜெயில்ல ரொம்ப சிரமப்படட்டீர் போல.. உடம்பு துரும்பாயிட்டுதே ஓய்..” நீலகண்டர் : “கொஞ்சம் படுத்தினார்கள்தான்.. நானும் விட்டதில்லை. அரசியல் கைதிகளுக்குண்டான மரியாதையை ஜெயில்ல தொடர்ந்து கேட்டதினால, என்னைக் கலகக்காரனாவே நடத்துனாங்க..” பாரதியார் : “அதல்லவோ உம்மோட பெருமை.. நீலகண்டன்னாலே சிம்மம் அல்லவா..?”(செல்லம்மாவைப் பார்த்து) “செல்லம்மா.. சாப்பாடு தயார்தானே?” (கனவில் இருப்பவர் போன்ற தோற்றத்தில் கண்களை அகல விரித்து, நீலகண்டரிடம்) “ஓய் நீலகண்டன்.. ருசிய தேசத்து சேதி ஒன்னு தெரியுமோ..? அங்கே போல்ஸ்விக்-ன்னு ஒரு கட்சியாம். மக்கள் ராஜ்ஜியம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அங்கே இனிமேல் பசி, பட்டினி எதுவுமிராதாம்.. அதுபோல சமுதாயம் இந்தப் புராதன பாரத தேசத்திற்கு வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?” நீலகண்டன் (குறுக்கிட்டு): “அண்ணா.. ஒரு நாலணா வேண்டும்..” பாரதியார்: “ஏன்..?” நீலகண்டன்: “சாப்பிட்டு முழுதாக ஒன்றரை நாள் ஆச்சு.. பசியில் நீங்கள் பேசுவதுகூட சரியாகக் காதில் விழவில்லை அண்ணா. நாலணா தந்தீர்கள் என்றால் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவேன்..” பாரதியார்: “பாண்டியா.. இதென்ன கொடுமை..!! செல்லம்மா.. நம்ம வீட்டில் ஆகாரம் ஏதேனும்..?” செல்லம்மா மௌனமாக உள்ளே சென்று திரும்பி வந்து, நீலகண்டரிடம் செல்லம்மா: “இந்தாருங்கள்.. போய் ஏதேனும் ஆகாரம் முடித்து வாருங்கள்..” நீலகண்டர்: “வந்தனம் மன்னி..” (நீலகண்டர் வெளியே நடக்கிறார்) பாரதியார்: “அம்மா.. காளி.. உன் பக்தர்கள் நிலையைப் பார்.. இந்த நாட்டில் பெரிய புரட்சியைக் கொண்டுவருவதற்காக சிறையேற்ற மனிதர், பட்டினியில் அலைவதென்றால் நீ இருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது..?”(பாடுகிறார்) “இனியொரு விதிசெய்வோம் – அதைஎந்த நாளும் காப்போம்தனியொருவனுக் குணவிலையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்” (திரை விழுகிறது) (நாளை தொடரும்)