அழகு எங்கள் அடையளமல்ல

அழகு எங்கள் அடையளமல்ல

வேர்களாகும் விழுதுகள் 2 “டீச்சர்… டீச்சர்… இனிமேல் இவ  வீட்டுக்கு  ஓடி வந்தா மூஞ்சிலேயே ஆசிட்ட ஊத்துங்க” என்ற குரல் கேட்டு, குனிந்து எழுதிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். ஐந்து வயதுப் பெண்ணைப் பிடித்து தர தரவென இழுத்து வந்த அந்த இளம் தாய்க்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து  வயதுக்குள்  தானிருக்கும். அந்தத் துறு துறு குட்டிப்பெண் என் வகுப்பு இல்லையென்றாலும், அரசுப் பள்ளிகளில் ஒரு வசதி உண்டு. பள்ளிக்கு ‘செட்’ ஆகும் வரை பிடிச்ச டீச்சர்களிடம் இருக்க ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதுண்டு. அப்படி என்னிடம் வந்த வாண்டு  அது. கிடைக்கும் இடைவேளைகளிலெல்லாம் வீட்டுக்கு ஓடி ஓடிப் போவதால், தன் தீப்பெட்டி ஒட்டும்  வேலை கெடுகிறதே என்ற கவலை தாய்க்கு. அது மட்டுமல்ல, “தலைச்சான் ஆம்பளப்புள்ள பொறந்தா நீ அமோகமா வருவ” என்று குறி கேட்டு வந்ததற்கு மாறாக, பெண்குழந்தை பிறந்ததால், தாய்க்கும் தகப்பனுக்கும் அந்தக் குழந்தை மேல் கோபம். அதை அவ்வப்போது வெளிப்படையாய்க் காட்டுவதுண்டு. ‘அதற்காக இப்படியெல்லாமா ஐந்து வயதுக் குழந்தையைத் திட்டுவார்கள்?’ ஆச்சர்யமாக இருந்தது.   உடலையும் மனதையும் சிதைக்கும் ஆசிட் கொடூரம் பற்றி இந்தப் பெண்ணுக்கு என்ன தெரியும்? திருமணமான இரண்டு வாரத்தில் ஓடும் இரயிலில் ஆசிட் அடிக்கப்பட்ட பிரயாக் சிங், சொந்த சகோதிரியால் ஆசிட் வீசப்பட்ட தௌலத்,வேலூர் குரிசிலாபட்டி பெண் காவலர் லட்சுமி அகர்வால், பெங்களூர் ஹசீனா இவர்களெல்லாம் ஆசிட்டின் தழும்புகளைத் தாங்கி துயரம் சுமப்பவர்கள். உயிரிழந்தவர்கள் பட்டியல் தனி. அவ்வளவு ஏன்? அரசியல் காரணங்களுக்காக பெண் ஐ.ஏ.எஸ். ஆட்சியர் மீதே ஆசிட் அடித்து  சாதனை படைத்ததுதானே தமிழகம்? அந்தக் கொடூரத்தை அனுபவித்தவர்கள் சொல்வார்கள், ஆசிட் தங்கள் கனவுகளை, தங்கள் மகிழ்ச்சியை எப்படி சிதைத்ததென்று?  இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 250 முதல் 300 அமில வீச்சுகள் என்ற பதிவு செய்யப்பட்ட  தரவுகளோடு, உலகின் முதலிடத்தில் நிற்கிறது இந்தியா. ஆனால் உண்மையில் நிகழ்வுகள் ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்கிறது ஆசிட் சர்வைவர்ஸ் ட்ரஸ்ட் இன்டர்நேசனல் எனும் அமைப்பு. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட அமில வீச்சுகளுக்கான காரணம் காதலும் குடும்ப வன்முறையாகவுமே இருக்கும் அதே சமயத்தில், உலகெங்கிலும் ஆசிட் வீச்சால் பாதிக்கப் படுவோரில் 80 சதவீதம் பெண்களே என்பதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை. இரு ஆண்களுக்கிடையே பிரச்சினை என்றாலும்கூட எங்கும்  அந்த வீட்டுப்  பெண்தானே  பழிவாங்கப்படுகிறாள்? ஆசிட் வீச்சுக்கு 10 வருடங்கள் வரை  சிறைத்தண்டனை உண்டு என்பதெல்லாம் இவர்களுக்கு பயத்தைத் தருவதில்லை. “எனக்கு கிடைக்கலேன்னா யாருக்கும் கிடைக்கக் கூடாது’   என்ற ஆணாதிக்க சிந்தனையின் பொருட்டே, தன் காதல் மறுக்கப்படும்போது, எந்த அழகால் ஈர்க்கப்பட்டானோ அந்த  அழகை அழிப்பதன் மூலம் தன் ஆண்மையை நிறுவ முயற்சிக்கிறான் ஆண்.   பெண்களைச்சிதைக்கும் குற்றவாளிகளின்  வாழ்க்கை சில வருட  சிறைத்தண்டனைக்குப் பிறகு இயல்பு வாழ்விற்கு திரும்பிவிட, அமில வீச்சுகளுக்கு ஆளாகும் பெண்கள்,  வாழ்க்கை முழுவதும் வலிகளுடன்   வடுக்களையும் அவமானங்களையும் சுமந்து கொண்டே வாழ்வை நகர்த்த வேண்டியுள்ளது.   தமிழில் வெளிவந்த வழக்கு எண் 18/9 என்ற திரைப்படம் ஆசிட் வீச்சால் ஒரு பெண் படும் துயரை, வலியை மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருந்தது. வழக்கம்போல பணக்காரக் குற்றவாளியை மறைக்க, ஒரு ஏழைப் பையனை பகடைக்காயாக்கி செய்யும் சித்தரவதையையும்  பாதிக்கப்பட்ட பெண்ணிற்கான நீதி மறுக்கப்படுவதையும் அழுத்தமாகக் காட்டியது. இறுதிக்காட்சியில் அதுவரை  தழும்புகளை மறைத்து வந்த பெண்,  தன் முகம் காட்டி தனக்கு அநீதி இழைத்த காவலர் மீது அதே ஆசிட் ஊற்றுவதாக முடிவடையும். ஆனால் ஆசிட்டுக்கு ஆசிட் தீர்வல்ல என்பதுதான் நியதியென்றாலும் கூட அந்தப் பெண்ணின் வலியை நமக்கு உணர்த்துவதற்காக இந்த முடிவை இயக்குநர் பாலாஜி சக்திவேல் அமைத்திருக்கலாம்.  இதுபோன்று, தன் மீது விழுந்த ஆசிட் அபிசேகத்தால் சாவின் விளிம்பு தொட்டுத் திரும்பியவள், சற்றும் துவண்டுவிடாமல் தன் போன்ற பெண்களுக்கான விடியலுக்கு துவக்கவுரை எழுதியிருக்கிறாள் ஒரு பெண். இல்லையில்லை, ஒரு குழந்தை. 17.11.1994 அரபிக் கடலோரம் மும்பையில் அந்த அழகுப்  பிஞ்சு இப்பூமிக்கு வந்தநாள். அன்மோல் ரோட்ரிக்ஸ் என்ற பெயருடன். இந்தக் கொடூர உலகையும், மனிதர்களையும் அறியாத, பிறந்து 60 நாட்களேயான அக் குழந்தை பெருஞ்சிரிப்புடன் தாயின் மார்புகளில் புதைந்து தன் பசி தீர்த்துக் பொண்டிருந்தது. பெற்ற தகப்பனே தன்னை கொல்லத் துணிவான்  என அந்த குழந்தைக்குத்  தெரியவில்லை பாவம். தன் குழந்தை ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்பதற்கு தன்னுடைய குரோமோசோம்களே காரணம் என்பதை அறியாது மனைவிகளைக் குற்றவாளியாக்கும்  இலட்சக்கணக்கானோரில் ஒருவன் அக் குழந்தையின் தகப்பன். தான் விரும்பாத  பெண்குழந்தையை, தாயுடன் சேர்த்துக் கொன்றுவிடும் நோக்கில், ஒரு கேன் ஆசிட்டுடன் வந்தான். வந்த வேலையை முடித்தான். சலனமின்றித் திரும்பி நடந்தான்.  பச்சிளம் குழந்தை துடியாய்த் துடித்தது. தாய்க்கு முகம், உடலெங்கும் எரிந்து, சிதைந்தது. அன்மோலின் ஒரு கண் சிதைய முகம், உடலைங்கும் கொடூரக் காயங்கள். முழுவதும் சிதைந்த தாய் மரணிக்க, தந்தை சிறைக்குச் செல்ல குழந்தை உடல் முழுக்கக் காயங்களுடன், ஒரு கண்ணை இழந்து உயிர்பிழைத்தது அதிர்ஷ்டமா துரதிர்ஷ்டமா தெரியவில்லை.  அடுத்த ஐந்து வருடங்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்  அக் குழந்தையைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டனர். பற்பல அறுவை சிகிச்சைகள், பராமரிப்பு என அத்தனை செலவுகளையும் ஏற்று அந்தப் பூவைத் தாங்கிக் கொண்டனர். தன் கோர முகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லாததால்  அன்மோல் இயல்பாகவே வளர்ந்தாள். சிகிச்சைகளின் வலியைத் தாங்கிக் கொண்டாள். ஐந்து வயதான அன்மோலை ஸ்ரீ மானவ் சேவா சங் என்ற ஆதரவற்றோர் மையத்தில்  சேர்ப்பித்தனர்.  அங்கும் அன்பும், கவனிப்பும் அதிகமாகவே கிடைத்தது. ஆனால், இவரது தழும்பேறிய முகம் கண்டு பயந்த  பிற குழந்தைகள் மற்றும் மும்பை SNDT பல்கலைக் கழகத்தில் சந்தித்த விரும்பத்தகாத பார்வைகளைப் புன்னகையுடன் எதிர்கொண்டே, கடினமான பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களைக் கடக்க நேரிட்டது. சாப்ட்வேர் டெவலப்பராக முதன் முதலில் பணியேற்றபோது, வாழ்வை வென்றுவிட்டதாகவே அவருக்குத் தோன்றியது. ஆனால் அழகை முகத்திலும் நிறத்திலும் உடல் அளவுகளிலும் தேடிக் கொண்டிருக்கும் சமூகம்,   அவரின்  சிதைந்த முகத்துடன் தினம் தினம் பயணிக்க விரும்பாததை உணர்ந்து பணியை உதறினார்.  வேலை தேடிச் செல்லுமிடமெங்கும்  நிராகரிப்பே பரிசாகக் கிடைத்தது.  ஆனாலும் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை. சக ஊழியர்கள் வெறுத்த, அருவெறுத்த தன் முகத்தை உலகுக்குக் காட்ட விரும்பியவர், நிதானமாக யோசித்தார். இந்த முகம்தான் என் அடையாளம், இந்தச் சிதைந்த முகத்துடன் உலகை எதிர்கொள்வேன் என உறுதி எடுத்தார். அவரது தன்னம்பிக்கை   தனக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவியது. இயல்பிலேயே அழகாக உடுத்துவதும் புதுப்புது நாகரிக அணிகலன்கள் அணிவதும் அன்மோலுக்கு  விருப்பமான ஒன்று. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இவரது ஸ்டைலும்  தன்னை நேர்த்தியாகக் காட்டிக் கொள்வதில் காட்டிய அக்கறையும் பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்திருந்தது.  எனவே ஃபேஸ்புக்கில் தன்னுடைய படங்களைத் தொடர்ந்து  பதிவிட, அவருடைய நேர்மறையான  குணங்களும் தன்னம்பிக்கையும் நேர்த்தியான உடையலங்காரமும் நவீன பேஷன்  குறித்த ஆர்வமும் அனைவரையும் கவர்ந்தது. அவரை நோக்கி புகைப்படக்காரர்கள் படையெடுக்க, மிக உற்சாகமாக இன்ஸ்டாகிராம் நோக்கி நகர்ந்தார். இப்போது பாராட்டுகளுடன் ஆடையலங்கார வல்லுநர்களும் பெரிய பெரிய கம்பெனிகளும் இவரைக் கவனிக்கத் துவங்கினர்.  கோடக் மகேந்திரா ஈவன்ட்டில் ரன்வீர் சிங்குடனான ஓர் உரையாடலுக்குப் பிறகு,  நூற்றுக்கணக்கான மாடலிங் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  இன்ஸ்டாகிராமில் 232000 பேர் இவரைப் பின் தொடர, சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிகுந்தவராகத் திகழ்கிறார்.  நூற்றுக்கணக்கான பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறார்.  ஷப்னா ஆஸ்மியுடன் இணைந்து ஆன்டி ஜி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலமாக, நடிகையாகப் புதுப் பரிமாணம் எடுத்துள்ளதோடு அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் கேஸ்ட்ரி திரைப்பட விழாவில் 2018-ல்  பெற்றுள்ளார். தன்னை வெறுத்தவர்களை, ஒதுக்கியவர்களைக் கண்டு மூலையில் அமர்ந்து விடாமல், தனக்குப் பிடித்த துறையில் புயலாய் நுழைந்து, தனக்கென ஒரு அடையாளத்தைப்  பதிவு செய்துள்ள அன்மோல், பொது வாழ்க்கையிலிருந்து தன்னை மறைத்து வாழும், ஆசிட்டால் முகம் சிதைந்த பெண்களுக்கு மத்தியில் தன்னம்பிக்கையோடு தலை நிமிர்ந்து நிற்கிறார்.   தான் உயர்ந்ததோடு மட்டுமல்ல, தன்னைப்போன்ற பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு ‘ஆசிட் சர்வைவர் சகாஸ் பவுண்டேசன்’ என்ற தொண்டு நிறுவனம் வாயிலாக,  உளவியல் ஆலோசனைகளும் வாழ்வியலுக்கான உதவிகளும் செய்து  வருகிறார். அவர்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வதையே  இந்நிறுவனம்  நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 20 பெண்களுக்குப் புது வாழ்வை அளித்திருக்கிறார். தூக்கியெறியப்படும் தருணங்களில்தான் பெண்கள் தங்கள் சிறகுகளை விரிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆம், பெண் குழந்தை வேண்டாம் என  பெற்ற தகப்பனால் சாவின் விளிம்பைத் தொட்டு மீண்ட அன்மோல், வெளித்தோற்றம் கண்டு சமூகத்தால் வெறுத்து  ஒதுக்கப்பட்ட அன்மோல் இன்று பேஷனுக்கான  குறியீடாகத் தன்னைச் செதுக்கிக் கொண்டுள்ளார்.  “வாழ்க்கை என்பது ஆசிட்டுடன் முடிந்து விடுவதில்லை. அமிலம் எங்களின் முகத்தை மாற்றலாம். ஆனால் எங்களது  ஆன்மாவை அழிக்க முடியாது. உங்களது அநுதாபமும் பச்சாதாபமும் எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை எங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமே நீங்கள் எங்களுக்குச் செய்யும் உதவி” எனக் கூறும் அன்மோல், இன்று உலகெங்கும்  வாழும் பெண்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.  தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் மீட்பராக இருக்கிறார். பெண்ணை அழகுசார் அடையாளமாகவே பார்க்கிறது இச்சமூகம். அழகியல் சார்ந்த விஷயங்களால் அவளை ஆராதித்து, அழகு நோக்கியே வழிநடத்தி, வேறு எச்சிந்தனையுமின்றி பெண்ணை எளிதாய் வீழ்த்த  எத்தனிக்கிறது. நீண்ட முடியழகு, சிவந்த நிறமழகு, வடுக்களில்லா முகமழகு, எல்லாவற்றிற்கும் மேலாக மென்மையே பெண்மைக்கழகு என்று நம்ப வைக்கிறது.     அழகோடிருந்தால் மட்டுமே நீ ஜெயிக்க முடியும், முகத்தில் பருக்களுடைய பெண்ணோ, கருமை நிறமுடைய பெண்ணோ தங்கள் நிறுவன முகப் பூச்சுகளின்றி வாழ்வில் வெற்றி கொள்ள முடியாது என்று விளம்பரங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்களும் மூளைச் சலவை செய்துகொண்டிருக்க, உடல் முழுக்க வடுக்களுடன் ஒரு கண் பார்வையின்றி தன் தன்னம்பிக்கையின் மூலம்  வாழ்வை வென்றிருக்கும் அன்மோல், பெரும் சமுதாய மாற்றத்திற்கான முதல் விடியல். பார்வையைச் செலுத்துவோம் வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து 

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

நடக்கலாம் வாங்க – பகுதி 4 சுவாரஸ்யங்களுடன்தான் நடக்கிறீர்களா?  நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் அதில் ஒன்ற முடியாது. நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள். சுவாரஸ்யங்களை எப்படியெல்லாம் புகுத்தலாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். சுவாரஸ்யங்களுக்கு  நீங்களே சில கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு,  * நடப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? * வாக்கிங் நேரத்திற்கு என்று உங்களது தனிமையையோ அல்லது உடன் நடப்பதற்கென்று சில நடக்கும் நண்பர்களையோ வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் நடப்பதன் காரணத்தை அறிந்திருக்கிறீர்களா? * அப்படி அறிந்திருந்தால் அந்தக் காரணத்தை நோக்கி நீங்கள் எவ்வளவு நகர்ந்திருக்கிறீர்கள் என்று கவனிக்கிறீர்களா? *உங்களுடைய நடையின் வேகம், நடக்கும் தூரம் இவற்றைக் கணித்து வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய உச்சபட்ச வேகம் எது, அதிகபட்ச தூரம் எது  என்று கணக்கிட்டிருக்கிறீர்களா? * நீங்கள் நடக்கும் வேகம், தூரம் இவற்றிற்கும் உங்கள் உடல் நலத்திற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா என்று கவனித்திருக்கிறீர்களா? அதாவது, உங்கள் உடல் நலனுக்குத் தேவையான அளவு கலோரிகள் சரியான முறையில் எரிக்கப்படுகிறதா? அல்லது அது உங்களது comfort zone க்கு வெளியே இருக்கிறதா? *நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நடையை முடிக்கும் நேரம் இவற்றுடன் உங்களது வேகத்தை ஒப்பிட்டு எத்தனை அடிகள் நடந்திருப்பீர்கள் என்று கணிக்க முடிகிறதா? * ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சி முடிவில் உங்கள் உடலில் ஏற்படும் புத்துணர்வுகளையோ அல்லது அயற்சிகளையோ பிரித்தறிய முடிகிறதா? * நீங்கள் புதிதாக நடக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்த தூர – நேர விகிதத்திற்கும் ,நடக்க ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருக்கும் தூர நேர விகிதத்திற்கும் வேறுபாடு உள்ளதா?  * நீங்கள் நடந்த தூரத்தையும் வேகத்தையும் உங்களுடன் நடப்பவர்களுடனோ, நடைப்பயிற்சி செய்யும் மற்றவர்களுடனோ கலந்துரையாடி அவர்களது தூரத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டு அறிந்திருக்கிறீர்களா?  * உங்கள் உடல் எடையை எவ்வளவு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு, நீங்கள் நடக்கும் வேகம் ஒத்துப்போகிறதா? இது போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.  நான் நடக்கும் வாக்கர்ஸ் க்ளப்பில் நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அவரால் ஒரு அடியை எடுத்து வைக்கவே அவரது கணவரோ அல்லது அவரது மகனோ உடன் இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் சுற்றி வர அவருக்கு ஒரு மணி நேரம்கூட ஆகும். ஆனால், அவர் தளராமல் தினம் நடந்தார். ஒரு மாதத்தில் தனியாக நடந்தார். அடுத்த மாதத்தில் அவரது வேகம் கூடியது. ஒரு வருடத்தில் அவர் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். அவரது உடல்நிலையால் எவ்வளவு முடியும் என்று அவரோ அவரது மருத்துவரோ கணித்து அதை நோக்கி நகர்கிறார். ‘நடந்தாக வேண்டும்’ என்ற கட்டாயம் வரும்பொழுது அவர் அதைச் செய்கிறார்.  இங்கு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், இலக்கு உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்.  இத்தனைக் கேள்விகள் கேட்கவேண்டுமா? இப்படித்தான் சுவாரஸ்யங்கள் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்தானே? எனக்குத் தெரிந்த ஓர் உறவினர் சங்கரன் கோவிலில் உண்டு. வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. “எடை கூடுது மாப்ள. வயிறு எனக்கு முன்னாடி போய்க்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார். அவரது மன நிலைக்கு, நேரடியாக டயட் என்றால் தெறித்துவிடுவார் என்பதால் மெதுவாக “வாக்கிங் போறீங்களா?” என்றேன்.  “எப்பவாவது போவேன்” என்றார். “தினமும் போங்க” என்றேன்.  அதற்குச் சொன்னார், “மாப்ள, சங்கரன் கோயில்ல தண்ணி எப்ப விடுறான்னே தெரியாது. சமயத்துல பத்து நாளைக்கு ஒருவாட்டிதான் தண்ணி விடுவான். அப்ப ஆபிஸ்க்கு லீவு போட்டுலாம் தண்ணி எடுப்பாய்ங்க. வீட்ல தண்ணி வரப்ப லீவு போடலாட்டி டைவர்ஸ் வரக்கூட போயிரும் தம்பி. அப்ப எப்டி வாக்கிங் போறது?” என்றார்.  உங்களுக்கு உங்கள் comfort zone க்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஊதவும் கூடாது. சிக்ஸ் பேக் வச்ச  சல்மான் கான் மாதிரி இருக்க வேண்டும் போன்ற மந்திரத்தில் மாங்காய் விழ வைக்கும் ஆசைகள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அற்புத விளக்கே கிடைத்தாலும் நீங்கள் அதைத் தேய்க்க வேண்டும்.  அது சரி, இத்தனை சுவாரஸ்யங்களைச் சொன்னால், ‘எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?’ என்று புதிதாய் நடக்க இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா? யோசித்தபடியே நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து

வேர்களாகும் விழுதுகள்

வேர்களாகும் விழுதுகள்

டிங்டிங் டிங்டிங் டிங்டிங் மதிய உணவுக்கு மணியடித்த இரண்டாம் நிமிடம் பள்ளிக்கு வெகு அருகில் இருந்த ஆலமர விழுதில் தூரி ஆடிக்கொண்டிருந்தாள் என் மாணவி போதும் பொண்ணு. பெயரே அதுதான். நான்கு பெண் குழந்தைகளுக்குப்பின் ஐந்தாவதும் பெண்ணாக இவள் பிறக்க, அடுத்ததாவது ஆண் குழந்தை பிறக்கட்டும் என வைக்கப்பட்ட பெயர் ‘ போதும் பொண்ணு’. உலகை வென்ற மகிழ்ச்சியுடன் வேகவேகமாக சிரித்த முகத்துடன் அவள் தூரி ஆடுவதைப் பார்த்தபோது வறுமையால் குழந்தைத் தொழிலாளியான  கிராமத்து சிறுமி ஒருத்தி    “ஆலமர விழுதில நான்  தூளி கட்டி ஆடனும்” என  அவளது கனவுகளை வரிசைப்படுத்தும் பாடலொன்று நினைவிற்கு வந்தது. எனக்கும் அது போல விழுதைப் பிடித்துத் தொங்கவேண்டுமென்ற  நிறைவேறாத ஆசையொன்று இருக்கிறது. என் வகுப்பறையிலிருந்து பார்த்தால் ஐம்பதடி தூரத்தில் இருக்கிறது பரந்து விரிந்து இளம் மங்கைபோல் மலர்ந்திருக்கும் அந்த  ஆலமரம்.  மரங்களில் ஆலமரம் எப்போதுமே வசீகரிக்கும் தன்மை கொண்டது. வேர் போலவே தொங்கும் விழுதுகள் கொள்ளை அழகு. விழுதுகள் தாங்கிய ஆலமரத்தை எத்தனை பெரிய புயலும் எளிதாகச் சாய்த்து விட முடியாது என்பதால்தான்  இதில் பல  இனப் பறவைகளும் தஞ்சம் புக விரும்புகின்றன. இந்த மரத்தைப் பார்க்கும் போதெல்லாம், தமிழ்ப்பட நாட்டாமைக் காட்சிகள் நினைவில் வந்து போகும்.  ஆலமர நிழலில் அமரும் மக்கள் உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள் என்று கூறப்படுவதால் பஞ்சாயத்துகளின் மேடையாக ஆலமரத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.  குருசேத்திரம் சென்ற போது கண்ணன் இந்த மரத்தடியில்தான் பகவத் கீதை உபதேசம் செய்ததாகக் கூறி ஒரு ஆலமரத்தைக் காட்டினர். புனிதம் கருதி மர இலைகள் கூட கீழே விழாதவாறு வலை கட்டி வைத்திருந்ததைப் பார்த்து, “இந்த மரத்திற்கு வயது 5000 ஆண்டுகளா?” என வாய் பிளந்தேன். மகாபாரதம் உண்மையா? புனைவா? உண்மையில் மகாபாரதப் போர் நடந்திருக்குமா?  கிருஷ்ணனும் அர்ஜூனனும் இங்கே நின்றிருந்தார்களா? ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான போர்வீர்ர்கள் பாதம் பதிந்த மண்ணா இது? அன்று எப்படி இருந்திருக்கும் இந்த இடம்? அடர்வனமாகத்தானே இருந்திருக்கும்! அம்மக்கள் என்ன மொழி பேசியிருப்பார்கள்? என்ன சாப்பிட்டிருப்பார்கள்? தனிப்பட்ட மனிதர்களுக்காகத் துவங்கிய போர், எத்தனை அப்பாவி உயிர்களைப் பலி வாங்கியிருக்கும்? இந்த மண்ணில் எத்தனை இரத்தம் ஓடியிருக்கும்? கற்பனையில் குருசேத்திரப் போர் நிகழ்வு ஓடியது. பலரது நம்பிக்கையின்  சான்றாய் நிற்கும் அம்மரம் கொள்ளுப் பெயர்த்திகள், எள்ளுப் பெயரன்கள்  கண்டு கனிந்து நிற்கும் கிழத்தியாய்த் தோன்றியது.     தனிமரம் தோப்பாகிய அதிசயத்தை  அடையாரில் பார்த்து வியந்திருக்கிறேன். தன்னம்பிக்கை நிறைந்த பெண்ணாய், சற்றே ஞானச் செருக்குடன் நிமிர்ந்து நிற்கும் பெண்ணாய்த் தோன்றியது. அன்னிபெசன்ட் அம்மையார் சுதந்திரத்திற்கு முன் இங்கு அமர்ந்து வீர உரையாற்ற, தமிழ்த்தென்றல் திரு.வி.க அமர்ந்து ஆர்வமாய்க் கேட்டிருக்கிறார். 450 வருடங்கள் பழமையான இந்த மரம்  59500 சதுர அடி பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இம் மாபெரும் மரத்தின் முதல் முதலில் கால் ஊன்றிய விழுது (வேர்) எது?  இதுவோ! அதுவோ! என ஒவ்வொரு விழுதாய் தடவிப் பார்த்திருக்கிறேன்.  ஆதி  கால விழுதுகள், தலைமுறை தாண்டிய விழுதுகளைத் தேடி, இதுதான் முதல் விழுதாய் இருக்கக் கூடும் என நானாகவே யூகித்து  வேரான ஓர் விழுதை அடையாளம் கண்டு அணைத்திருக்கிறேன்.  இது போன்றே,   ஆலமரங்களை எங்கு கண்டாலும் ஒரு பெண்ணாகவே உருவகப்படுத்த முடிகிறது என்னால். உயர்ந்து வளரும் ஆலமரத்தின் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறுவதால், அடிமரம் அரிக்கப் பட்டாலும் விழுதுகள் கிளைகளைத் தாங்கிக் கொள்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போது, விழுதுகள்  மரத்திற்கு பாரமாய் தொங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் கிளைகளைத் தாங்கி நிற்கும் விழுதுகள்தான்   பின்னர் மரத்திற்கே வேர்களாய் மாறுகின்றன இதே நிலைதான் பெண்ணிற்கும். குடும்பத்திற்கு பாரமாய் இருப்பது போல இச்சமூகத்தால் கட்டமைக்கப்பட்டாலும்கூட, குடும்பத்தின் வேர்களாய் மாறி, முழு குடும்பத்தையும் தாங்கி நிற்கும் பெண்களை எங்கும் காணமுடிகிறது.  “துரங்குகிற வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் வையவதன் உட்பிறந்த வீரர் தாங்கல் கடனாகும்” எனக் கூறும் சீவக சிந்தாமணியும் கூட, ‘வௌவால்கள் தொங்கி வாழ்கின்ற முதிய ஆலமரங்களை விழுதுகள் காப்பதுபோல குலம் நையுமாயின் அக்குலத்தில் பிறந்த மற மைந்தர்கள் தங்குலத்தை தாங்கிக்காத்தல் கடமையாகும்’ என்று ஆண்களையே குடும்பத்தைத் தாங்கும் விழுதுகளாகச் சித்தரிக்கிறது. ஆனால் உண்மையில் எத்தனையோ குடும்பங்களை பெண்கள் விழுதுகளாய், வேர்களாய்த் தாங்குவதை வரலாறு  பதிவு செய்ததேயில்லை.   ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவும், ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினியும் இது போன்ற பெண்களுக்கான செல்லுலாயிட் உதாரணங்கள். பிரச்சினையால் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் மொத்த வடத்தையும் தனிஒருத்தியாய் இழுத்துப் பிடித்து, குடும்பத்தேரை நிலைநிறுத்தப் போராடுவாள் அவள் ஒரு தொடர்கதை நாயகி. தமிழ் சினிமாவில் காட்டப்படும் பெண் சுதந்திரம், முன்னேற்றம், சிந்தனைப் புரட்சி அனைத்திற்கும் கவிதா (சுஜாதா)தான் ஆரம்பப் புள்ளி.  அதனைத் தொடர்ந்து அதே இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ நாயகி நந்தினி, போராட்டங்களே வாழ்க்கையாகிப் போக, மாறாப் புன்னகையுடன்  வாழ்வை எதிர்கொள்வாள். இவர்கள் இருவரும்தான்  சுயசிந்தனை கொண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு முதன்முதலில் திரையில் இராஜபாட்டை அமைத்துக் கொடுத்தனர்.   ஆனால் இலக்கிய உலகில்  ஆண் சாதனையாளர்களின்  புத்தகங்களும், ஆண்களின்  சுயசரிதைகளும் நிரம்பிக்கிடக்க, பெண்களின் சரிதைகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் தான் இருக்கின்றன.      ஆணின் நிழலிலேயே பெண் இருக்க வைக்கப்பட்டதால், அவளுக்கென்று தனி வரலாறு தேவை இல்லை என்றே சமூகம் முடிவு செய்தது.  உலக வரலாறோ, உள்ளூர் வரலாறோ,  பெண்கள் பற்றிய செய்திகள் எடிட்டிங்கில்  தூர வீசப்பட்டன. வீட்டிற்குள் அடைக்கப்பட்டவளின் வாழ்க்கை, வரலாறாவதற்கு ஒன்றுமில்லை என நினைத்திருக்கலாம்.  ஆனால் பெண் சாதுர்யமானவள். இந்த உலகம் தன்னை நிராகரிப்பதை உணரும்போதெல்லாம், தன்னுடைய வரலாற்றையும் தன்னை பாதித்த வரலாற்றையும்  கதைகளாக மாற்றி உலவவிட்டாள். இயல்பாய் அவளுக்குள்ளிருக்கும் மொழியாற்றலால், செவிவழிக் கதைகளும், நாட்டுப்புறக் கதைகளும், பாரம்பரியக் கதைகளும், கட்டுக்கதைகளும் அவளால்  கட்டப்பட்டன.  பாட்டிகள்மூலம் வழிவழியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டன. சோகக் கதைகளும்  நாட்டார் கதைகளும், சாமி கதைகளும், வீரப் பெண்கள் கதைகளும் பரப்பப்பட்டன. இப்படித்தான் புலியை முறத்தால் விரட்டிய தமிழச்சியும், வறுமையில் உழன்ற நல்லதங்காளும் பரப்பப்பட்டனர்.  குலதெய்வமாகிய முன்னோர்களின் கதைகள் விவரிக்கப்பட்டன. என் சிறு வயதில் குலதெய்வ வழிபாடன்று 10, 12 வயது பெண் குழந்தைகளை இருட்டறையில் வைத்து ஒரு பாட்டி,   குலதெய்வமாய் வழிபடப்படும்  பெண் குறித்த கதைகளைக் கூறுவது ஒரு சடங்காகவே பின்பற்றப் பட்டது. கன்னி தெய்வங்களாய் அவர்கள் மாறிய வரலாறு, அவர்களின் வாழ்வியல் போராட்டங்களாகவோ, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றக் காவு கொடுக்கப்பட்ட நிகழ்வுகளாகவோ இருக்கும்.     .      ஆனால் கடுமையான எதிர்வினையுடன் கையில் பிரம்பேந்தி, சட்டாம்பிள்ளையாய்க் காத்திருக்கும் வாழ்வை இலாவகமாகக் கையாளத் தெரிந்தவள் பெண். எந்தத் துயரையும் தின்று செரித்து மீண்டெழக் கற்றவள் பெண். வேர்கள் இடையறாது தன் தேவைக்கான தேடலைத் தொடர்வதால், வெட்ட வெட்டத் துளிர்க்கும் மரம் போல, பெண்ணும் நம்பிக்கையையும்  துணிவையும் ஆணிவேராகக்  கொண்டு ஒடிக்க ஒடிக்க துளிர்க்கிறாள்; வெட்ட வெட்ட வளர்கிறாள். நொறுக்க நொறுக்கப் படர்கிறாள். வேரோடு பிடுங்கி நட்டாலும் புதுமண் பற்றி உயர்ந்து செழிக்கிறாள். பரந்து விரிந்து  நிற்கும் கிளைகளின் உயரத்தை உலகமே வியந்து பார்க்க முடியும். ஆனால் மண்ணுக்குள் அடக்கமாய்ப் புதையுண்டிருக்கும், கண்களுக்குப் புலப்படாத வேர்களின் ஆழத்தை எவரும் அறிந்ததில்லை.   சமூகத்தால், குடும்பத்தால் அடித்து வீழ்த்தப்படும் பெண்கள், தங்கள் வாழ்வின் கடைசி நம்பிக்கையும் அற்றுப்போய் வீழ்ந்த பெண்கள், சாம்பலிலிருந்து மீண்டெழுந்த  பீனிக்ஸ் பறவைகளாய் தங்கள் துயரிலிருந்து மீண்டு,  குடும்ப வேர்களாய், சமுதாய வேர்களாய்  மாறிய நிகழ்வுகள்  குறித்தே பேசப் போகிறோம்.  ‘போதும்   பொண்ணு’ என பெண்ணை வெறுத்த இச்சமூகத்தில் வரலாறாய் மாறிய பெண்களைப் பற்றிப் பேசப் போகிறோம்.  வாழ்க்கை அவ்வளவுதான் என்றெண்ணிய பெண்களும், வாழ்வில் எதையேனும் சாதித்தே ஆக வேண்டும் என்றென்னும் பெண்களுமாய், என்னைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்து நான் கவனித்ததையும் கற்றதையும் எழுத்துக்களாக்கியுள்ளேன்.  பெண் என்பவள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறாள் என்கிறது பிரெஞ்சுப் பழமொழி. ஆம், சமூகத்தின் சாட்டையடிகள் அவள் மன உறுதியை மேலும்   இறுக்குகின்றன. உளிகளின் வலிகள் அவளை சிற்பமாக்குகிறது. நெருப்பின் வெப்பம் தங்கமாய் ஜொலிக்க வைக்கிறது. தீட்டத் தீட்ட வைரமாய் மின்னுகிறாள். அவளைப் புனிதப்படுத்தியதிலும், அந்நியப்படுத்தியதிலும் எவ்வாறு சமூகம் முக்கியப் பங்கு வகித்ததோ, அதேபோல் அவள்  வீறு கொண்டெழவும் சமூகமே முக்கியக் காரணியாகிறது. சமூகம் தனக்குக் கொடுத்ததை, தன் எழுச்சியின் மூலம் மௌனமாய் திருப்பித் தருகிறாள். வலி நிரம்பிய பக்கங்களால் நிரப்பப்பட்ட தன் வாழ்வை, வரலாற்றுப் பக்கங்களாய் மாற்றுவதற்குப் போராடிய பெண்கள் இவர்கள். ஏற்கனவே சமகாலத்தில்  ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டு விட்ட சாதனைப் பெண்களை விடுத்து, எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், தன்னுடைய முயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் தடைகளை உடைத்து வாழ்வை வென்ற, மாறுபட்டு சிந்தித்த,  மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்த, சாமான்யப் பெண்களைக் குறித்தே பேசப்போகிறோம். இந்த சாமான்யப் பெண்கள் நம்மை தினமும் கடந்து செல்பவர்களாக இருக்கலாம். நீங்களும் நானும் பார்த்து வியக்கும் அக்காக்களாக,  அம்மாக்களாக, அத்தைகளாக இருக்கலாம். வாழ்க்கை சேற்றில் உழன்று கடும் முயற்சிக்குப்பின் காலூன்றி நிற்கும் தங்கைகளாக, பிள்ளைகளாக  இருக்கலாம். அகவாழ்க்கைக் கனவுகள் கசந்து போக, சாவின் விளிம்பை ருசித்து மீண்ட உங்கள் வீட்டு, நம்வீட்டுப் பெண்களாக இருக்கலாம். பார்வையைத் திருப்புவோம், வேர்களை நோக்கி. கட்டுரையாளர்: ரமாதேவி இரத்தினசாமி படங்கள்: இணையத்திலிருந்து

WHERE ARE WE?

WHERE ARE WE?

நடக்கலாம் வாங்க – பகுதி 3 உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை எவை என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். கட்டுரைக்குள் செல்லும் முன்பாக அவற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * நடக்கும் நேரத்தில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?   *  நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இத்தனைக் கெடுபிடிகளுடன் அல்லது கணக்குகளுடன் நடக்க வேண்டுமா என்றால் ஆம், அப்படித்தான். எல்லாமே அப்படித்தான்.  ஒரு தங்க நகை வாங்கச் செல்கிறீர்கள். மில்லிகிராம் கூட அங்கு காசுதான். கடைக்காரர் பணம் வாங்கிவிட்டு, நகையைக் கையில் தரும்பொழுது மூன்று மில்லி கிராம் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்வோமா?  மாட்டோம் அல்லவா? அதைப்போல எல்லாமே ஒரு கணக்குத்தான்.  உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில், தான் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ளவேண்டும். தாங்கள் நடக்கும் தூரத்தைக் கணக்கில் வைத்தால்தான் ‘சரியான அளவில் நடக்கிறோமா’ என்று தெரியும்.  உதாரணத்திற்கு நீங்கள் தினமும் நடைப்பயிற்சி என்ற பெயரில் நடப்பது, உங்கள் வீட்டிலிருந்து  தெரு முனை வரை என்று எடுத்துகொள்வோம். அதன் தொலைவு 100 மீ என்றால், போக வர 200 மீட்டர். இதைத்தான் வழக்கமாகச் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். இதை எப்படி அதிகப்படுத்தலாம் என்று யோசிக்கவேண்டும். ஒரு தெருவினுள் நுழைந்து அடுத்த தெருவின் வழியாக வந்து பார்த்து தூரத்தை அதிகப்படுத்தலாம்.  அடுத்ததாக நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு. அதாவது, நீங்கள் வீட்டிலிருந்து தெருமுனை வரைதான் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் திரும்பவும் வீடு திரும்பும் வரையான நேர அளவு கண்காணிக்கப்படவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஊர்ந்து செல்கிறீர்கள் என்றால் முந்தைய பகுதியில் சொன்னது போல் அதற்குப் பெயர் ‘உல்லாச உலா’. உதாரணத்திற்கு 200 மீ சென்று திரும்ப பத்து நிமிடங்கள் ஆகிறதென்றால் அது மோசமான நடை. உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்படவேண்டும். அதற்கேற்றபடி நடக்க வேண்டும். உங்களது வேகம் துரிதப்படுத்தப்படவேண்டும்.  இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொன்று, நம் உடலில் ஏற்படும் மாற்றம். சிலருக்கு நடக்கையில் மூச்சு வாங்கலாம். சிலருக்கு நீரிழப்பு ஏற்பட்டு தாகம் ஏற்படலாம். சிலருக்கு முழங்கால் வலி வரலாம். ஒருவேளை நடக்க முடியாத அளவிற்கு உடல் தொந்தரவு செய்யும் என்றால் அன்றைய பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு தக்க ஆலோசனைகளுடன் மறு நாள் நடக்கலாமே தவிர, எதற்காகவும் பயிற்சியை நிறுத்தக்கூடாது.  ஆதலால், நம் உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றைக் கவனிக்கவேண்டும்.  உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டு யாரும் கம்பெனியின் கேட்டை ஆட்டவேண்டாம். அது வேறு டிபார்ட்மெண்ட்.  இவற்றையெல்லாம் கவனித்து ஒருவாரம் நடக்கிறீர்கள் என்றால், அடுத்து நீங்கள் உங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் நடக்கும் அடிகளைக் கணக்கிட வேண்டும். அதன் மூலம் ஒரு இலக்கு வைத்துக்கொண்டு அதனை அடைய முயற்சி செய்யவேண்டும்.  நடக்க ஆரம்பிக்கும் புதிதில் 5000 அடிகள் என்று இலக்கு வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுதுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடைப்பயிற்சியின் நேரத்திலோ அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் தூரத்தை உத்தேசமாகக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். (இந்த விசயத்தில் என்னைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு அடியையும் எண்ணியிருக்கிறேன். நடப்பதில் தீவிரவாதம் வகை) ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நடக்கும் தூரத்தை, நேரத்தை, அடிகளை மறு பரிசீலனை செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களது தெருமுனை வரைதான் செல்கிறீர்கள் என்றால், 200 மீட்டர் தூரத்தை அடுத்த தெருவின் வழியாகச் சென்று திரும்புவதன் மூலம் 200 மீட்டரை 400 மீட்டராக உயர்த்தலாம். பத்து நிமிடத்தில் 200 மீட்டர் என்பதை பத்து நிமிடத்தில் 300 மீட்டராகவோ அல்லது 400 மீட்டராகவோ மாற்றலாம். நடக்கும் அடிகளை இன்னும் உயர்த்துவதன் மூலம் உங்களது உடல் உழைப்பு அதிகரித்து அதிகமான கலோரிகள் எரிக்கப்பெறும். இதன் மூலமாக உடல் எடை குறையவோ இலகுவாக மாறவோ செய்யலாம். உங்களது நடைப்பயிற்சியை இப்படி கவனிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை பற்றியும் கவனம் கொள்கிறீர்கள்.  இதில் அனைவருக்கும் வரும் ஒரு சந்தேகம், எந்த நிலையில் நான் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது எந்த நிலையில் என் தூரத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது. நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் உங்களால் அதில் ஒன்ற முடியாது.  நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள்.  சொல்வது எல்லாம் சரி, அதை எப்படிச் செய்வது என்று சிலர் யோசிக்கலாம். சிலருக்கு அந்த யோசனையே இல்லாமல் செய்ததையே செய்துகொண்டிருப்பார்கள். செக்கில் மாடுகளைக் கட்டி ஆட்டுவார்கள். மாட்டை அங்கு நிறுத்திவிட்டால் போதும் அது சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய் வருகிறதா இல்லையா என்ற கவலை மாட்டிற்கு இருக்காது. அதைத்தான் ‘செக்கு மாடு கணக்கா’ என்பார்கள். ஒரே விசயத்தை எந்தப் பலனையும் ஆராய்ந்து பார்க்காமல் செய்துகொண்டிருந்தால் நேர விரயம்தான் ஆகுமே தவிர பலன் கிடைக்காது. அவ்வப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் [ WHERE ARE WE ]என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும்.  அதை நீங்கள் நடந்து காட்டுவதிலும் சரி, வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதிலும் சரி. யோசியுங்கள் WHERE ARE WE? இப்போதைக்குத் தொடர்ந்து நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

நடக்கலாம் வாங்க : பகுதி 2 ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா? என்று நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. அதே நேரத்தில், நாம் நினைக்கும் அளவிற்கு மிக மிக எளிதானதும் அல்ல. கமலஹாசன் ட்வீட் போல் இருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம்.  இரண்டு நாட்கள் கூட போதும் ஒரு கிலோ எடை கூட. ஆனால் ஏறும் எடையைக் குறைக்க கண்டிப்பாக மெனக்கெடவேண்டும். இந்தச் சொற்றொடரை நம்மில் பலரும் சொல்லியிருப்போம் அல்லது யாராவது சொல்லிக் கேட்டிருப்போம். அது உண்மையும் கூட.  உடல் எடைக் குறைப்பிற்கு நடைப்பயிற்சி உதவி செய்யுமா என்றால் உதவி செய்யும். ஆனால் உடல் எடை குறைப்பிற்கு நீ என்ன செய்கிறாய் என்று யாரேனும் கேட்டால் வெறுமனே நடக்கிறேன் என்று நீங்கள் முடிவு எடுத்திருந்தால் உடல் எடை குறையாது. மறுபடியும் கமலஹாசனின் ட்வீட்டை ஞாபகப்படுத்த விரும்பவில்லை. நேராக விசயத்திற்கு வருவோம். நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று. ஆனால் அதற்கான சில முக்கிய முயற்சிகள் உண்டு.  உதாரணத்திற்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குள் நுழைய பெரிய வரிசை காத்திருக்கும். சன்னதிக்குள் இருந்து நீளும் அந்த வரிசை இட வசதிக்காக சன்னதியைச் சுற்றிச் சுற்றியே இரண்டு மூன்று வரிசைகள் செல்லும். வரிசை மெதுவாக நகரும்படி மேலாண்மை செய்வார்கள். இந்த இடத்தில் திருப்பதி கோயிலை நான் மேற்கோள் காட்டவில்லை. ஏனெனில், அங்கு சில சமயம் ரஜினி படத்திற்குத் திறந்துவிட்டது போல் எல்லோரும் ஓடுவதைக் கண்டிருக்கிறேன். மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி அல்ல. ஊர்ந்து ஊர்ந்து செல்வார்கள். அதைப்போலவே சிலர் வாக்கிங் வருவார்கள். அதற்குப் பெயர் நடைப்பயிற்சி அல்ல, ‘உல்லாச உலா’.  எந்த வேலையும் இல்லாத போது உங்கள் வீட்டின் சமையலறையிலிருந்து படுக்கை அறைக்குச் செல்லும் தொனியில் செல்வது எல்லாம் நடைப்பயிற்சியில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வேகமாக நடப்பது என்பது வேறு, நடப்பது என்பது வேறு. ஊர்வது என்பது வேறு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும்.  அப்படி நடப்பவர்கள், ஊரும் வேகத்தில்  ஒரு இருபது நிமிடம் நடப்பார்கள். இப்படி ஒரு வாரம் நடந்துவிட்டு, உடல் எடையைச் சோதிப்பார்கள். “ஒரு வாரம் நடந்திருக்கேன். எடை குறையவில்லை. நடந்தா எடை குறையாது போல” என நடப்பதை நிறுத்திவிடும் ஆட்களும் உண்டு.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். உடல் எடை கூடிவிட்டதென நடக்க ஆரம்பித்தார். முதல் நாளே என்னைப் பார்த்து அதைச் சொன்னார். அவரது நடையின் வேகத்தைக் கணித்து அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. சரியாக 2 கிமீ நடப்பார். முடிந்ததும் அமர்ந்துவிடுவார். நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நடந்த நேரத்தை விட அரட்டையின் நேரம் கூடுதலாக இருக்கும். சரியாக ஐந்து நாட்கள் கழித்து உடல் எடையைச் சோதித்திருக்கிறார். அன்றைய தினம் அவரது விதி என்னுடன் நடக்க விதித்திருந்தது. உடல் எடை குறையவில்லை. “நடந்தாலும் என் உடம்பு குறையாதாம்” என்றார். “ஏன்?” என்றேன். “என் உடம்பில் கொழுப்பு எல்லாம் கெட்டியாய் மாறிவிட்டதாம். அது இனி குறையாதாம். நடப்பது வீணாம்” என்றார். “உங்களுக்கு இதை யார் சொன்னா?” என்று கேட்டேன். இவருடைய நண்பர், இவரை விட எடை கூடுதலான ஒருவர். அவர் இவருடன் நடக்க துணைக்கு இவர் அழைத்து வந்தவர். இவர் 2 கி மீ நடப்பவர். அவர் ஒரு கி.மீ மட்டுமே நடப்பவர். இவர் நடந்து முடிக்கும் வரை காத்திருந்து இவருடன் வீடு திரும்புபவர். இது தான் சேதி. நடக்க விருப்பம் இல்லாத ஒருவர் நடப்பவருடன் இருந்தால் இது தான் கதி. இதில் ட்விஸ்ட்டே, ‘உடம்பில் கொழுப்பு எல்லாம் கட்டியாகி விட்டது. இனி கரையாது. நடக்குறது வேஸ்ட்டு” என அள்ளிப்போட்டதுதான்.  அந்த ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட வியர்த்தது இல்லை என்று என்னுடன் 1.7 கிமீ நடந்து முடித்ததும் கூறியவருக்கு உடல் முழுக்க வியர்வை. நீங்க வந்தது உலா இல்லண்ணே. நடக்கனும்னா இப்படி நடங்க, இல்லாட்டி கொழுப்பு குறையாது என்றேன்.  உண்மையில், நீங்கள் நடக்க வேண்டும் அதன் மூலம் நல்ல உடல் நிலையைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தீர்கள் என்றால் முதலில் நீங்கள் தூக்கி எறியவேண்டியது உங்கள் பழைய டீ ஷர்ட், ஷூ, பிஞ்ச செருப்பு இவையெல்லாம் இல்லை. உங்களை நடக்க விடாமல் தடுக்கும் எதிர்மறை எண்ணங்களையும் நண்பர்களையும்தான்.  உடல் வியர்க்கும் அளவிற்கு நடக்க வேண்டும், உடலுக்கு உடல் வியர்க்கும் அளவு மாறுபடும். அறிவியல் ரீதியாகச் சொல்லவேண்டுமானால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் வண்ணம், உங்கள் உடல் தசைகள் அனைத்தும் செயல்படும் விதம் நீங்கள் நடக்கலாம். வேகமாக, வேகமாக என்று நினைத்தபடி நடக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகம் வேண்டும். சிலரது உடல் நிலையை மனதில் வைத்து அதற்கேற்றபடி உங்கள் வேகத்தை டிசைன் செய்துகொள்ளலாம்.  உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * உங்கள் நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * உங்கள் நடக்கும் அளவில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றம் என்னென்ன?   * உங்கள் நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இது தவிர அவரவர் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் ஓர் ஆலோசனை, முடிந்தால் இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்ற சோதனைகள் செய்து பார்த்தீர்கள் என்றால் அதற்கேற்றபடி வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், ஆரோக்கியம் என்று கருத்தில் கொண்டால் அதையும் செய்து பார்ப்பதுதான் நல்லது.  இதை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். புதிதாய் நடக்க ஆரம்பித்தவர்களுக்கு உடல் அசதியும், சோம்பேறித்தனமும், நடக்க விரும்பாத நண்பர்களின் ஏளனமும், தூக்கச் சுகமும் உங்களை நடக்க விடாமல் தடுக்க முற்படும். அவர்கள் எல்லாம் மேற்சொன்ன விசயங்களில் கவனம் செலுத்தும்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் நடையில் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள்.  சரி, இதை எல்லாம் கணக்கு செய்துதான் நடக்க வேண்டுமா என்று ஏளனம் செய்வீர்கள்தானே? என்னையும் பார்த்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.  ஒரு விசயம் தான். முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள். நடக்க வந்தால் நடந்து காட்டுங்கள்.  வாங்க நடக்கலாம்.  கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

இன்றைய சூழலில் கல்வி – 2

இன்றைய சூழலில் கல்வி – 2

ஆசிரியர்களே தேவையில்லை என்கிறார் ரூசோ, பள்ளிக்கூடமே அவசியமில்லை என்கிறார் ஜான்ஹோல்ட். நோய்த்தொற்றின் அச்சுறுத்தலும் ஊரடங்குச் சூழலும் இவர்கள் கூற்றை உண்மையாக்கியிருப்பது யதார்த்தம். குழந்தைகளுக்கான மூன்றாவது இடத்தைச் சிந்திப்பது குறித்து  சென்ற இதழில் பேசினோம். ஆனால் இன்று வேறொரு பிரச்சனை நம்மைத் திசை திருப்பி யுள்ளது. ஆம், நமது கல்வி முறையில் பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்புகளாக  அமைந்துள்ள 11 , 12 ஆம் வகுப்புகளின் சேர்க்கையில் இந்தக் கல்வியாண்டு முதல் கொண்டு வந்துள்ள மாற்றம்தான் அந்தப் பிரச்சனை. மேல்நிலைக் கல்விப் பிரிவுகள்குழப்பத்திற்கு வழி வகுக்கின்றனவா? தற்போதைய மேல்நிலைக் கல்விப் பாட அமைப்புகள் புதியதாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளன. இவை உயர் கல்வி வாய்ப்புகளில் சிக்கல்களை விளைவிக்கும் வகையில் உள்ளன. கோத்தாரி கல்விக் குழுவின் பரிந்துரையின் பேரில் நம் தமிழகப் பள்ளிக் கல்வியில் 1977- 1978 கல்வியாண்டு முதல் 10+2 என்ற முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. மேல்நிலைக் கல்வியில் பகுதி ஒன்று மற்றும் இரண்டில் மொழிப் பாடங்கள் தரப்பட்டிருக்கும். இவை தவிர பகுதி மூன்றில் சிறப்புப் பாடங் களாக கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கணக்குப் பதிவியல், விவசாயம், மனையியல், பொருளியல், வணிகவியல், அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல்… இப்படி ஏறத்தாழ  30 பாடங்கள் உருவாக்கப்பட்டன.  பகுதி மூன்றில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் நான்கு பாடங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். மொழிப் பாடங்களுடன் சேர்த்து அவர்கள் படிக்க வேண்டியது மொத்தம் 6 பாடங்கள், 1200 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்களின் சுமையைக் குறைக்க கடந்த 2017-18 கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் நூறு மதிப்பெண் களுக்கு மட்டுமே தேர்வு என்ற அடிப்படையில் மொத்த மதிப்பெண் கள் 600 ஆகக் குறைக்கப் பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டே கல்லூரி களில் உயர்கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் பெறும் நடைமுறை இருந்து வருகிறது. தமிழகத்தின் இந்த மேல்நிலைக் கல்வி முறை இந்திய மாநிலங்களிலேயே தனித்தன்மையுடன் திகழ்ந்து வருவதாகவும் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. ஏனெனில் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை இந்த பாடப் பிரிவுகள் உயர்கல்வியில் வழங்கி வந்தன. புதிய அரசாணை 166 கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு புதிதாக அரசாணை ஒன்றை வெளி யிட்டது. பள்ளிக் கல்வித் துறை அரசாணை 166, 18.09.2019-ன் படி பகுதி 3 -இல் புதிய முறையை அறிமுகம்செய்தது. அதன்படி ஏற்கனவே ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஃபர்ஸ்ட் குரூப், செகன்ட் குரூப் என்ற வகையில்  நான்கு பாடங்களைப் படிக்கும் மாணவன் இந்தப் புதிய முறையில் மூன்று பாடங்களை மட்டும் படித்தால் போதுமானது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பொருட்டும், உயர் கல்வி வேலை வாய்ப்புகளை அதிகமாக்கும் வகையிலும் இந்தப் புதிய முறை மேம்படுத்தப் பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மாணவர்  விருப்பப்பட்டால் மூன்று பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது பழைய முறையான நான்கு பாடங் களுக்கான முறையையும் தேர்வு செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை நடப்புக் கல்வியாண்டி லிருந்து பின்பற்ற வழிகாட்டப் பட்டுள்ளது. இதன்படி 3 பாடங்களைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டிய மொத்தப் பாடங்கள் 5 மட்டுமே. இதில் 500 மதிப்பெண் களுக்கு தேர்வுகள் நடைபெறும். அல்லது மாணவன் 4 பாட முறையைத் தேர்வு செய்தால் படிக்க வேண்டியது 6 பாடங்கள், மொத்த மதிப்பெண்கள் 600. உண்மையில் என்ன நடக்கிறது? இந்தக் கல்வி ஆண்டில் கோவிட் 19 பொது முடக்கத்தால் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகி விட்டது என்பதை நாம் அறிவோம். தேர்ச்சி முடிவுகள் அரசின் வழிகாட்டலால் கிரேடு முறையில் தரப்படும் என்பதை விரைவில் எதிர் பார்க்கலாம். ஏற்கனவே தனியார் பள்ளிகள் + 1 சேர்க்கையைத் தங்கள் வழியில் துவங்கிவிட்டன. அரசுப் பள்ளிகளில் அரசின் முறையான வழிகாட்டலுக்காகத் தலைமை ஆசிரியர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து விபரம் கேட்டு வரும் பெற்றோர்களுக்கு இந்தப் புதிய முறை குறித்த விளக்கங்களையும் அளித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர்களிடம் பேசும்போது, பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் புதிய 5 பாட முறைகளைக் குறித்தே விளக்கி வருவதாகவும், அதை அடிப்படை யாகக் கொண்டு தான் சேர்க்கை நடை பெறும் என்றும் பரவலாகக் கூறுகின்றனர். அதற்கு நியாயமான காரணங்களையும்  அவர்கள் முன் வைக்கின்றனர். அருகாமைப் பள்ளிகளில் ஒரு பள்ளியில் 5 பாடங்கள் இருந்து மற்றொரு பள்ளியில் 6 பாடங்கள் இருந்தால் குறைவாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்கள் 5 பாடமுறை உள்ள பள்ளிக்கே செல்கின்றனர். ஆகவே மாணவர் சேர்க்கை குறைவதால் நாங்களும் 5 பாடங்களைக் கொண்ட பாடப் பிரிவையே அறிமுகப்படுத்துகிறோம் என்கின்றனர். அதே போல 6 பாடங்களைத் தேர்வு செய்யும் மாணவர்கள் இருந்தாலும் குறைந்த அளவில் மட்டுமே மாணவர் இருந்தால் அந்தப் பாடப் பிரிவை நடத்த பள்ளிகளால் இயலாது. எனவே நம் கண் முன்னாலேயே பாடப்பிரிவுகளும் பள்ளிகளும் காலாவதி யாவதை விரைவில் காணப்போகிறோம். உயர்கல்வி வாய்ப்பின் பல வழிகளை அடைக்கும் புதிய முறை நான்கு பாடங்களை உள்ளடக்கிய  முறையில் உதாரணமாக கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் எனப் படிக்கும் போது ஒரு மாணவனுக்கு பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உயர் கல்வியில்  வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தற்போது உயிரியல் பாடத்தை நீக்கி அது மூன்று பாடமாகக் குறையும் போது பொறியியல் துறை மட்டுமே படிக்க இயலும். மருத்துவம் சார்ந்த உயிரியல் பாடப் பிரிவை நீக்கி, வழிகளை அடைத்து ஒரு வழிப் பாதையாக மாற்றும்போது அங்கும் மாணவர்கள் தன் வாய்ப்புகளை இழக்கிறார்கள். நீட் தேர்வில்  CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாக்கள் இடம்பெறுகின்றன. தற்போது நடைமுறையில் உள்ள இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் பாடங்கள் கொண்ட முழு அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, பத்தாம் வகுப்புக்குப் பிறகு கணிதத்தோடு தொடர்பே இல்லாததால் இயற்பியல், வேதியியல் பாடங்களில் இடம்பெறும் கணக்குகளைத் தீர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. அதற்கே இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், மேலும் ஒரு பாடத்தைக் குறைப்பது என்பது, நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களை மேலும் பின்தங்கிவிடச் செய்யும். எனவே, தனியார் பள்ளி மாணவர்களுக்காகவே இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. போலவே, புதிய முறையில், கணக்கு, இயற்பியல் பாடத்துடன் மட்டுமே கணினி அறிவியல் பாடம் இடம்பெறுகிறது. இந்தப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே இனி கணினி சார் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடியும். கலைப்பிரிவில் (ஆர்ட்ஸ் குரூப் ) Typography and Computer Application என்றொரு பாடத்தை ஒப்புக்காக இடம்பெறச் செய்கிறார்கள். கணினி அறிவியல் பாடம் இல்லை எனில் ஆர்ட்ஸ் குரூப் தேர்வு செய்யும் மாணவர்கள் கணினி சார்ந்த உயர் கல்வியைப் பெற முடியாமல் போய்விடும். அதேபோல, கணினி அறிவியலுடன் கணக்கு, இயற்பியல் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வியில் பொறியியல், கணினித் துறைகள் மட்டுமே படிப்பதற்கு வாய்ப்பு உண்டு. வேதியியல் தொடர்பான எந்த மேற்படிப்பையும் இவர்கள் படிக்க முடியாது. இவ்வாறு பல குழப்பங்களை இப்புதிய முறை விளைவிப்பதோடு உயர்கல்வியில் மாணவர்களுக்கான எல்லா வழிகளையும் அடைப்பதற்கான ஆபத்துகளைத் தருகிறது. தொடர்ந்து உரையாடுவோம்!

முகிலோடும் முகடோடு…

முகிலோடும் முகடோடு…

இந்தப் புவியின் ஒட்டுமொத்த இயற்கை அழகையும் ரசித்து முடிக்க ஒரு பிறவி போதாது. உலகம் முழுக்க புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள் பல இருந்தாலும் இந்தியாவுக்குள்ளேயே நாம் இதுவரை கண்டிராத பேரழகு கொட்டிக் கிடக்கிறது. அதிலும், ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் உலகிலேயே வேறெங்கும் காணக்கிடைக்காத  அற்புதங்கள் ஏராளம்… ஏராளம்…! அந்த அற்புதக் காட்சிகளைக் கண்கள் குளிரக் கண்டு, உள்ளம் குளிர உலா வந்தது எங்களுக்கு அமைந்த நல்வாய்ப்பு. ஏழு சகோதரிகள் (Seven Sisters) என அழைக்கப்படும் மாநிலங்கள் அசாம், அருணாச் சலப் பிரதேசம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகியவை. 2016 நவம்பர் 10ஆம் தேதி முதல் 17 நாட்கள், என் இரு மகன்களுடன், என் தங்கையும் நானும் சென்று வந்த மறக்க முடியாத பயண அனுபவங்களைச் சுவடு வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. மகன்களின் புவியியல் அறிவும், இயற்கையின் மேல் அவர்கள் கொண்ட காதலும், என் கணவர் வர இயலாத சூழலிலும் எங்கள் பயணத்தை மிக அழகாக்கியது. நவம்பர் 10 அன்று காலை சென்னையிலிருந்து எங்கள் பயணம் துவங்கவிருந்த நிலையில் எட்டாம் தேதி இரவு அறிவிக்கப்பட்ட திடீர் பண மதிப்பிழப்பையும் மகன்களின் திறமையால் சமாளித்து, திட்டமிட்டபடி பயணத்தைத் துவக்கினோம். அசாம் மாநிலம் பர்மா மற்றும் பூட்டானுடனும்,  திரிபுரா, நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் பர்மாவுடனும், மேகாலயா பங்காளாதேசுடனும், அருணாச்சலப் பிரதேசம் சீனாவுடனும் தங்கள் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன. மிக அதிக அளவு மழை, மிதமான குளிர், கோடையில் வெப்பம், சில இடங்களில் கடும் பனி என அனைத்து வகையான தட்பவெப்ப நிலை, ஆணிவேரிலிருந்து பிரியும் கிளை வேர்களைப்போல பிரம்மபுத்திரா  நதியிலிருந்து பிரிந்து மலைகளினூடே வளைந்து நெளிந்து ஓடும் கிளை நதிகள் என, ஓடி ஓடி உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை வழங்கவும், இயந்திர வாழ்விலிருந்து விடுபட்டு சற்றே இளைப்பாறவும் இங்கே இயற்கை அன்னை தன் மடியில் நமக்கு இடமளிக்கிறாள். அசாமின் பெரிய நகரமான கவுஹாத்தியில் செல்ப் டிரைவிங் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, திகட்ட திகட்ட காரிலேயே மலையெங்கும் சுற்றியது, அருணாச்சல பிரதேசத்தில் 13,700 அடி உயரத்தில் சீன எல்லையில் இருக்கும் ‘தவாங்’ என்னும் கடுங்குளிர் இடத்துக்கு சென்றது, மலையெல்லாம் மஞ்சள் மலராய் எங்களை வரவேற்ற கோஹிமா – இம்பால் மலைப்பகுதியில் உலவியது, இம்பாலில் முழுப் புல்வெளியும் தண்ணீரில் மிதக்கும் அதிசயத்தைக் கண்டது, அங்கே பெண்களே நடத்தும் உலகில் பெரிய ‘இம்மா’ மார்க்கெட்டில் வலம் வந்தது, க்ரங்சூரி, தவ்கி ஆறு, சிரபுஞ்சி, உலகின் சுத்தமான கிராமம், வேர்ப் பாலம் என மேகாலயாவின் அழகை அத்தனை எளிதாக எழுத்தில் வடித்துவிட முடியாது. திரிபுராவுக்கு 12 மணி நேரம் இயற்கையோடு இணைந்த ரயில் பயணமும், உன்னக்கோட்டியின் மலை சிற்பமும், காசிரங்காவின் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களும் தவாங் போகும் போது கடந்த “செலா பாஸும்” என காணுமிடமெல்லாம் பரந்துகிடக்கும் பேரழகில் எதைச் சொல்ல? எதை விட? பயணத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், பாஸ்போர்ட் விசா தேவையின்றி உலகின் பேரழகைத் தரிசிக்க விரும்புவோருக்கும், இயற்கையோடு சில நாட்கள் இன்புற்று வாழ நினைப்போருக்கும் எங்கள் பயண அனுபவம் சிறிதேனும் பயன்படக்கூடும். வாருங்கள், ஏழு சகோதரிகளை இனி வரும் ஏடுகளில் சந்திப்போம். தொடரும்…

கொரோனா அயலகத் தமிழர்கள்  எதிர்கொண்டது எப்படி?

கொரோனா அயலகத் தமிழர்கள் எதிர்கொண்டது எப்படி?

தமிழகத்தில் இருந்து சென்று பல்வேறு உலக நாடுகளிலும் பணியில் இருப்பவர்கள் அந்தந்த நாடுகளில் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளின் தொடர்ச்சி…  ஸ்பெயின்:  சீனாவுக்கு அடுத்ததாக, மார்ச் மாதத்தில் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள். கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள கோபிப்பாளையத்தைச் சேர்ந்த முனைவர் குமார் பழனிசாமி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். அங்கிருந்து அவர் ஸ்பெயின் நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஸ்பெயினில் முதல் கொரோனோ தொற்று ஜனவரி 29-ல் கண்டறியப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமான நோய்த் தாக்குதலுக்கும் இறப்பிற்கும் ஆளாகியுள்ளனர். மார்ச் துவக்கத்தில் 7000க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டதை அடுத் அரசு அவசர நிலையை அறிவித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு, பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தடுப்பது, உணவுப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், வாகன எரி பொருள்கள் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு வராமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. பல லட்சம் சோதனைக் கருவிகளைக் கொள்முதல், தானியங்கிக் கருவிகள் (Robots), மாபெரும் தற்காலிக மருத்துவமனை, மற்றும் அவசரநிலையைக் கண்டிப்புடன் செயல்படுத்தி யதால் தற்போது வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பிவிடும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது. அவசரநிலை பிறப்பித்த முதல் சில நாட்களுக்கு மக்கள் பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. தற்போது விளைவுகளை உணர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்கள். பொருளாதார பாதிப்பினைச் சமாளிக்க, உடனடி யாக 200  பில்லியன் யூரோவை சிறப்பு நிவாரணத் தொகுப்பாக அரசு அறிவித்தது. முக்கியமாக, கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிக்காக 30 மில்லியன் யூரோ ஒதுக்கப் பட்டுள்ளது. துவக்கத்தில் முகக்கவசம், கையுறை, சோதனைக் கருவிகள், சுவாசக்கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் 420 மில்லியன் யூரோ மதிப்பில் (சுமார் 3500 கோடி ரூபாய்)  மருத்துவக் கருவிகள் வாங்க அரசு ஏற்பாடு செய்தது. இங்கும் ரேப்பிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யாததால் திருப்பி அனுப்பப்பட்டன. எனவே PCR சோதனை முறையே தொடர்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் ஆகியோர் நோய்த்தொற்று அடைந்தோர், இறந்த வர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, அரசின் நடவடிக்கைகளைப்பற்றி விளக்கினர். மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே, அதிக அழுத்தத்துடன் நீண்டநேரம் வேலை செய்தனர். முதல் இரு வாரங்கள் எவ்வித பாதுகாப்புக் கேடயங்களும் இன்றி மக்கள் நலனுக்காக சேவை செய்தனர். அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நாட்டின் மதிப்புமிக்க “ஆஸ்டூரியாஸ் இளவரசி-2020” எனும் விருதினை அறிவித்து கவுரவப்படுத்தி யுள்ளனர். கொரோனாவால் ஸ்பெயின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டு வருகிறது. சுற்றுலாத்துறையின் வருவாய் இழப்பு மட்டும் சுமார் 92.5 பில்லியன் யூரோ. பொதுமுடக்கக் காலத்தில் வேலை பறிபோவதைத் தடுக்க, தற்காலிக வேலைவாய்ப்பு ஒழுங்குமுறைத் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு 4 மாதம் முதல் 2  ஆண்டுகள் வரை சம்பளத்தில் 70-50% வரை வழங்கப்படும். சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புத் தொகையினை அரசே செலுத்துகிறது. மேலும் மானியத்துடன் கூடிய பொருளாதார உதவிகளையும் அரசு வழங்குகிறது. நோய்த்தாக்குதல் மற்றும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை எங்களுக்கு அச்சமூட்டியது. பெற்றோர்கள் எங்களின் நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டனர். அரசின் நடவடிக்கைகள், பணிபுரியும் நிறுவனத்தின் ஒத்துழைப்பு, பெற்றோர், உறவினர்களின் புரிதல், நண்பர்களின் ஆறுதல்கள் போன்றவற்றால் மனஇறுக்கம் குறைந்தது. தற்போது அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முககவசம் அணிவது, சமூக விலகலைக் கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொரடப்படும். சமூகப் பொறுப்புடன் அலட்சியம் தவிர்த்து, அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி இந்தக் கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து, மானுட வாழ்வியலைப் புதியபாதையில் கொண்டு செல்வது நம் அனைவரின் தலையாய கடமை” என முடிக்கிறார் குமார்.  இங்கிலாந்து:  கோயம்புத்தூரைச் சேர்ந்த கஸ்தூரி ராஜி சுப்பிரமணியம். இங்கிலாந்தில் பெர்க் ஷயர் நகரில் வசிக்கும் அவர் டேட்டா சயின்டிஸ்டாகப் பணிபுரிகிறார். “இங்கிலாந்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா நுழைந்தது. விடுமுறைக்கு இத்தாலிக்குச் சென்றவர்கள் திரும்பி வந்த இருவாரத்தில், நூற்றுக்கும் மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போது விமான நிலையங்களில் எவ்வித பரிசோதனையும் இல்லை. கொரோனாவை எதிர்க்க ‘Herd Immunity’ வழிமுறையைப் பின்பற்றி, வயதான வர்கள் மற்றும் பிற நோயாளிகளைப் பாதுகாத்துக்கொண்டு, ஏனையோர் வியாதிக்கு உள்ளாகும் பட்சத்தில் சிகிச்சை அளிக்க முடிவானது. அத்தியாவசியப் பணியில் உள்ள KEY WORKERS தவிர மற்றவர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டது. இங்கு 95% அரசு மருத்துவமனைகள்தான். அனைத்து சிகிச்சையும் இலவசம். 17000 படுக்கைகள் கொண்ட அவசரகால ICU மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார்கள். அவசரத்தேவையற்ற மற்ற சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அறுபது வயதிற்கும் மூத்தவர்களின் இறப்பு விகிதம் அதிகம். இப்பொழுது இறப்புகள்  41,000-ஐக் கடந்து விட்டது. மே இரண்டாம் வாரத்திலிருந்து தொற்று குறைந்து வருகிறது. ஜூன்-1 முதல் லாக்-டவுனில் சிறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆண்டின் மொத்த பட்ஜெட்டையும் கோவிட்-19க்காக நிதியமைச்சர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பணி நீக்கத் தடை, 80% சம்பளத்தை (£2500 வரை)  அரசே வழங்குவது, வரிகள் நிறுத்தி வைப்பு, தொழில் முனைவோர் உதவித்தொகை, வீட்டு வாடகை, வீட்டுக்கடன் கட்ட மூன்று மாதம் அவகாசம் போன்ற பயன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்வில் இடர்ப்பாடுகள் அதிகம் இல்லை. ஒன்றிரண்டு விதிமீறல்கள் இருந்தன. அவற்றைக் காவல்துறையினர் கண்காணித்து அபராதம் விதித்தனர். பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள்  தொலைக்காட்சி மூலம், புள்ளி விவரங்களுடன் உரையாற்றிவிட்டு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள். எங்களின் நிலையை எண்ணி  இந்தியாவில் சொந்தங்கள் கவலை கொண்டனர். ஆனால், இங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் அவர்கள் ஆறுதலடைந் தார்கள். ஆனால், அங்கு லாக்-டவுன் முதல் துறைகளை ஒழுங்குபடுத்துவது வரை பல வேறுபாடுகளைப் பார்த்தபோது மனம் சஞ்சலமானது. மக்கள் சாரை சாரையாக சாலைகளில் நடப்பதும், சிறு குறு தொழில்களுக்கு அரசு உதவிகள் எதுவும் வழங்காதததும், பிரதமர் இந்தப் பேரிடரில்கூட பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து மக்களுக்கு விளக்கமளிக்காததும் ஏமாற்றம் அளித்தது. ஒரு நாட்டின் தலைமையால் அந்த நாட்டு மக்களைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அனைவரும் கவனமாக இருப்போம், நம்மை நாமே காத்துக்கொள்ள உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறார் கஸ்தூரி.  ஆஸ்திரேலியா:  தீவுக் கண்டமான ஆஸ்திரேலியா, துவக்கம் முதலே கொரோனா தொற்று அதிகம் இல்லாமல் ஓரளவு பாது காப்பாகவே இருந்துவருகிறது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து, ஆஸ்திரேலி யாவின் டார்வின் நகரில், ராயல் டார்வின் மருத்துவமனையில் நிர்வாக அலுவலராகப் பணிபுரியும், குமரி மாவட்டம் திருஞானபுரத்தைச் சேர்ந்த மோசஸ் மனோகர் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார். ஆஸ்திரேலியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஜனவரி 22 முதலே வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவித்து விட்டது. தொற்று எண்ணிக்கை 200-ஐ எட்டிய போது பேரங்காடிகள், திரையரங்குகள், மதுக்கடைகள், பார்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பேருந்து, தொடரி, விமானம், லிப்ட் அனைத்திலும்  சமுதாய இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. உணவுப் பொருட்கள் உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடை யில்லாமல் மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்தது. சிறு அறிகுறி என்றாலும் மக்கள் பரிசோதனை மையங்களுக்குச் சென்று தங்களை பரிசோதித்துக் கொண்டார்கள். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்த போது வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்படாமல் இராணுவப் பாதுகாப்போடு நட்சத்திர விடுதிகளில் தனிமைப் படுத்தப்பட்டார்கள். மருத்துவர்களும் செவிலியர் களும் அவர்களை விடுதி களுக்கே சென்று பரிசோதித் தார்கள். தற்போது ஐந்து மாநிலங்கள் கோரோனா இல்லாத மாநிலங்களாகி விட்டன. சுமார் 400 பேர் மட்டுமே பாதிப்பில் உள்ளார்கள். தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கம் தாண்டுவதில்லை. விரைவில் இதையும் தடுக்க மருத்துவத் துறை கடுமையாய்ப் போராடுகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 102 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந் திருக்கிறார்கள். இப்போது இயல்பு வாழ்க்கை ஓரளவிற்குத் திரும்பி விட்டது. திரையரங்குகள் மட்டுமே இன்னும் திறக்கப்பட வில்லை. எப்போதும்போல் மக்கள் இப்போதும் அரசு விதிகளை மதித்து நடந்து கொண்டார்கள். ‘பிரதமர் அல்லது முதல்வர் சொல்லி நான் ஏன் கேட்க வேண்டும்?’ என யாரும் நினைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பிற்குத் துணை நிற்கிறார்கள். விரைவில் கொரோனா இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறிவிடும் என்கிறார் மோசஸ்.  கனடா:  கனடாவின் வான் கூவர் நகரில் Supply Chain Analyst ஆகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த அஸ்வின் குமார் ராமசுப்பு கனடா நாட்டின் கொரோனா சூழலை விவரிக்கிறார். மார்ச் மாத முதற்பாதி வரை கனடாவில் கொரோனா பரவல் துவங்காததால், அதுவரை வெளிநாட்டுப் பயணிகளை பரிசோதனையின்றி அனுமதித்து வந்தது. தொற்றுப் பரவல் அதிகாரத்த முதல் இரு மாதங்கள் நிலைமீறி சென்றுகொண்டிருந்த நிலையில், பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது மெதுவாகப் பலனளிக்கத் துவங்கிவிட்டது. முடக்கம் அறிவித்த முதல் வாரமே, வேலை இழந்த அனைவருக்கும் மாதம் 2000$ (ரூ.1,10,000) என நான்கு மாதங்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார் பிரதமர். விண்ணப்பித்த அனைவருக்கும் மறுவாரமே உதவித்தொகை அவரவர் வாங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. பாதிப்புக்குள்ளான தொழில்களுக்குப் பல்வேறு உதவிகள் அறிவிக்கப்பட்டது. ஊதியம் வழங்கமுடியாத நிறுவனங்களுக்கு ஊதிய தொகையில் 75% அரசு ஏற்பதாக அறிவித்தது. முதற்கட்ட உதவித்தொகைக்கு உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% ஐ அரசு ஒதுக்கியது. மருத்துவ முறை, பரவல் தடுப்பு விதிகள், மருத்துவ வசதிகளுக்கான ஒதுக்கீடு, கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மாகாணங்களே தீர்மானித்தன. பொருளாதார உதவிகள், வழிகாட்டுதல், கொள்கை முடிவு, மற்றும் வெளியுறவுத் தொடர்புகளில் மட்டுமே மத்திய அரசு முடிவெடுத்தது. பிரதமர் மனைவியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். எனினும் தினமும் வீட்டுக்கு வெளியே வந்து அறிவிப்புகளை வெளியிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார். கனடாவில் ஒவ்வொரு மாகாணமும் குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. பெரும்பாலும் காப்பீடு இலவசம் அல்லது மிகக் குறைந்த மாதத்தொகை கட்டினால் போதும். அதன்கீழ்