கொரோனா அயலகத் தமிழர்கள் எதிர்கொண்டது எப்படி?
தமிழகத்தில் இருந்து சென்று பல்வேறு உலக நாடுகளிலும் பணியில் இருப்பவர்கள் அந்தந்த நாடுகளில் அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளின் தொடர்ச்சி…
ஸ்பெயின்: சீனாவுக்கு அடுத்ததாக, மார்ச் மாதத்தில் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகள். கோபிசெட்டிப்பாளையம் அருகில் உள்ள கோபிப்பாளையத்தைச் சேர்ந்த முனைவர் குமார் பழனிசாமி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையின் தலைவராகப் பணிபுரிந்து வருகிறார். அங்கிருந்து அவர் ஸ்பெயின் நாட்டின் கொரோனா தொற்று நிலைமையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

ஸ்பெயினில் முதல் கொரோனோ தொற்று ஜனவரி 29-ல் கண்டறியப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்டோர் அதிகமான நோய்த் தாக்குதலுக்கும் இறப்பிற்கும் ஆளாகியுள்ளனர். மார்ச் துவக்கத்தில் 7000க்கும் அதிகமானோர் பாதிக்கப் பட்டதை அடுத் அரசு அவசர நிலையை அறிவித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு, பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தடுப்பது, உணவுப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள், வாகன எரி பொருள்கள் போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு வராமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. பல லட்சம் சோதனைக் கருவிகளைக் கொள்முதல், தானியங்கிக் கருவிகள் (Robots), மாபெரும் தற்காலிக மருத்துவமனை, மற்றும் அவசரநிலையைக் கண்டிப்புடன் செயல்படுத்தி யதால் தற்போது வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்பிவிடும் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது.
அவசரநிலை பிறப்பித்த முதல் சில நாட்களுக்கு மக்கள் பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. தற்போது விளைவுகளை உணர்ந்து, பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கடைபிடிக்கிறார்கள்.
பொருளாதார பாதிப்பினைச் சமாளிக்க, உடனடி யாக 200 பில்லியன் யூரோவை சிறப்பு நிவாரணத் தொகுப்பாக அரசு அறிவித்தது. முக்கியமாக, கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் ஆராய்ச்சிக்காக 30 மில்லியன் யூரோ ஒதுக்கப் பட்டுள்ளது.
துவக்கத்தில் முகக்கவசம், கையுறை, சோதனைக் கருவிகள், சுவாசக்கருவிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் 420 மில்லியன் யூரோ மதிப்பில் (சுமார் 3500 கோடி ரூபாய்) மருத்துவக் கருவிகள் வாங்க அரசு ஏற்பாடு செய்தது. இங்கும் ரேப்பிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யாததால் திருப்பி அனுப்பப்பட்டன. எனவே PCR சோதனை முறையே தொடர்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் ஆகியோர் நோய்த்தொற்று அடைந்தோர், இறந்த வர்கள், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, அரசின் நடவடிக்கைகளைப்பற்றி விளக்கினர்.
மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே, அதிக அழுத்தத்துடன் நீண்டநேரம் வேலை செய்தனர். முதல் இரு வாரங்கள் எவ்வித பாதுகாப்புக் கேடயங்களும் இன்றி மக்கள் நலனுக்காக சேவை செய்தனர். அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நாட்டின் மதிப்புமிக்க “ஆஸ்டூரியாஸ் இளவரசி-2020” எனும் விருதினை அறிவித்து கவுரவப்படுத்தி யுள்ளனர்.
கொரோனாவால் ஸ்பெயின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சி கண்டு வருகிறது. சுற்றுலாத்துறையின் வருவாய் இழப்பு மட்டும் சுமார் 92.5 பில்லியன் யூரோ. பொதுமுடக்கக் காலத்தில் வேலை பறிபோவதைத் தடுக்க, தற்காலிக வேலைவாய்ப்பு ஒழுங்குமுறைத் திட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. வேலை இழந்தவர்களுக்கு 4 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சம்பளத்தில் 70-50% வரை வழங்கப்படும். சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புத் தொகையினை அரசே செலுத்துகிறது. மேலும் மானியத்துடன் கூடிய பொருளாதார உதவிகளையும் அரசு வழங்குகிறது.
நோய்த்தாக்குதல் மற்றும் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை எங்களுக்கு அச்சமூட்டியது. பெற்றோர்கள் எங்களின் நிலை குறித்து மிகுந்த கவலை கொண்டனர். அரசின் நடவடிக்கைகள், பணிபுரியும் நிறுவனத்தின் ஒத்துழைப்பு, பெற்றோர், உறவினர்களின் புரிதல், நண்பர்களின் ஆறுதல்கள் போன்றவற்றால் மனஇறுக்கம் குறைந்தது. தற்போது அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முககவசம் அணிவது, சமூக விலகலைக் கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொரடப்படும். சமூகப் பொறுப்புடன் அலட்சியம் தவிர்த்து, அரசாங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி இந்தக் கொரோனா நோய்ப் பரவலைத் தடுத்து, மானுட வாழ்வியலைப் புதியபாதையில் கொண்டு செல்வது நம் அனைவரின் தலையாய கடமை” என முடிக்கிறார் குமார்.
இங்கிலாந்து: கோயம்புத்தூரைச் சேர்ந்த கஸ்தூரி ராஜி சுப்பிரமணியம். இங்கிலாந்தில் பெர்க் ஷயர் நகரில் வசிக்கும் அவர் டேட்டா சயின்டிஸ்டாகப் பணிபுரிகிறார்.

“இங்கிலாந்தில் பிப்ரவரி முதல் வாரத்தில் கொரோனா நுழைந்தது. விடுமுறைக்கு இத்தாலிக்குச் சென்றவர்கள் திரும்பி வந்த இருவாரத்தில், நூற்றுக்கும் மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போது விமான நிலையங்களில் எவ்வித பரிசோதனையும் இல்லை. கொரோனாவை எதிர்க்க ‘Herd Immunity’ வழிமுறையைப் பின்பற்றி, வயதான வர்கள் மற்றும் பிற நோயாளிகளைப் பாதுகாத்துக்கொண்டு, ஏனையோர் வியாதிக்கு உள்ளாகும் பட்சத்தில் சிகிச்சை அளிக்க முடிவானது. அத்தியாவசியப் பணியில் உள்ள KEY WORKERS தவிர மற்றவர்கள் வீட்டிலிருந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டது. இங்கு 95% அரசு மருத்துவமனைகள்தான். அனைத்து சிகிச்சையும் இலவசம். 17000 படுக்கைகள் கொண்ட அவசரகால ICU மருத்துவமனை ஒன்றை உருவாக்கினார்கள். அவசரத்தேவையற்ற மற்ற சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அறுபது வயதிற்கும் மூத்தவர்களின் இறப்பு விகிதம் அதிகம். இப்பொழுது இறப்புகள் 41,000-ஐக் கடந்து விட்டது. மே இரண்டாம் வாரத்திலிருந்து தொற்று குறைந்து வருகிறது. ஜூன்-1 முதல் லாக்-டவுனில் சிறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆண்டின் மொத்த பட்ஜெட்டையும் கோவிட்-19க்காக நிதியமைச்சர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பணி நீக்கத் தடை, 80% சம்பளத்தை (£2500 வரை) அரசே வழங்குவது, வரிகள் நிறுத்தி வைப்பு, தொழில் முனைவோர் உதவித்தொகை, வீட்டு வாடகை, வீட்டுக்கடன் கட்ட மூன்று மாதம் அவகாசம் போன்ற பயன்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது மக்களின் இயல்பு வாழ்வில் இடர்ப்பாடுகள் அதிகம் இல்லை. ஒன்றிரண்டு விதிமீறல்கள் இருந்தன. அவற்றைக் காவல்துறையினர் கண்காணித்து அபராதம் விதித்தனர்.
பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் தொலைக்காட்சி மூலம், புள்ளி விவரங்களுடன் உரையாற்றிவிட்டு, பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள். எங்களின் நிலையை எண்ணி இந்தியாவில் சொந்தங்கள் கவலை கொண்டனர். ஆனால், இங்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் அவர்கள் ஆறுதலடைந் தார்கள். ஆனால், அங்கு லாக்-டவுன் முதல் துறைகளை ஒழுங்குபடுத்துவது வரை பல வேறுபாடுகளைப் பார்த்தபோது மனம் சஞ்சலமானது. மக்கள் சாரை சாரையாக சாலைகளில் நடப்பதும், சிறு குறு தொழில்களுக்கு அரசு உதவிகள் எதுவும் வழங்காதததும், பிரதமர் இந்தப் பேரிடரில்கூட பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து மக்களுக்கு விளக்கமளிக்காததும் ஏமாற்றம் அளித்தது. ஒரு நாட்டின் தலைமையால் அந்த நாட்டு மக்களைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். அனைவரும் கவனமாக இருப்போம், நம்மை நாமே காத்துக்கொள்ள உரிய முயற்சிகளை மேற்கொள்வோம்” என்கிறார் கஸ்தூரி.
ஆஸ்திரேலியா: தீவுக் கண்டமான ஆஸ்திரேலியா, துவக்கம் முதலே கொரோனா தொற்று அதிகம் இல்லாமல் ஓரளவு பாது காப்பாகவே இருந்துவருகிறது. இது எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்து, ஆஸ்திரேலி யாவின் டார்வின் நகரில், ராயல் டார்வின் மருத்துவமனையில் நிர்வாக அலுவலராகப் பணிபுரியும், குமரி மாவட்டம் திருஞானபுரத்தைச் சேர்ந்த மோசஸ் மனோகர் பல செய்திகளை நம்மோடு பகிர்ந்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட ஜனவரி 22 முதலே வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவித்து விட்டது. தொற்று எண்ணிக்கை 200-ஐ எட்டிய போது பேரங்காடிகள், திரையரங்குகள், மதுக்கடைகள், பார்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பேருந்து, தொடரி, விமானம், லிப்ட் அனைத்திலும் சமுதாய இடைவெளி கடைபிடிக்கப்பட்டது.
உணவுப் பொருட்கள் உட்பட எல்லா அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடை யில்லாமல் மக்களுக்கு கிடைக்க அரசு ஆவன செய்தது. சிறு அறிகுறி என்றாலும் மக்கள் பரிசோதனை மையங்களுக்குச் சென்று தங்களை பரிசோதித்துக் கொண்டார்கள்.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்த போது வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்படாமல் இராணுவப் பாதுகாப்போடு நட்சத்திர விடுதிகளில் தனிமைப் படுத்தப்பட்டார்கள். மருத்துவர்களும் செவிலியர் களும் அவர்களை விடுதி களுக்கே சென்று பரிசோதித் தார்கள்.
தற்போது ஐந்து மாநிலங்கள் கோரோனா இல்லாத மாநிலங்களாகி விட்டன. சுமார் 400 பேர் மட்டுமே பாதிப்பில் உள்ளார்கள். தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கம் தாண்டுவதில்லை. விரைவில் இதையும் தடுக்க மருத்துவத் துறை கடுமையாய்ப் போராடுகிறது. ஆஸ்திரேலியாவில் இதுவரை 102 பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந் திருக்கிறார்கள். இப்போது இயல்பு வாழ்க்கை ஓரளவிற்குத் திரும்பி விட்டது. திரையரங்குகள் மட்டுமே இன்னும் திறக்கப்பட வில்லை.
எப்போதும்போல் மக்கள் இப்போதும் அரசு விதிகளை மதித்து நடந்து கொண்டார்கள். ‘பிரதமர் அல்லது முதல்வர் சொல்லி நான் ஏன் கேட்க வேண்டும்?’ என யாரும் நினைக்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்பிற்குத் துணை நிற்கிறார்கள். விரைவில் கொரோனா இல்லாத நாடாக ஆஸ்திரேலியா மாறிவிடும் என்கிறார் மோசஸ்.
கனடா: கனடாவின் வான் கூவர் நகரில் Supply Chain Analyst ஆகப் பணிபுரியும் மதுரையைச் சேர்ந்த அஸ்வின் குமார் ராமசுப்பு கனடா நாட்டின் கொரோனா சூழலை விவரிக்கிறார்.

மார்ச் மாத முதற்பாதி வரை கனடாவில் கொரோனா பரவல் துவங்காததால், அதுவரை வெளிநாட்டுப் பயணிகளை பரிசோதனையின்றி அனுமதித்து வந்தது. தொற்றுப் பரவல் அதிகாரத்த முதல் இரு மாதங்கள் நிலைமீறி சென்றுகொண்டிருந்த நிலையில், பொதுமுடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது மெதுவாகப் பலனளிக்கத் துவங்கிவிட்டது.
முடக்கம் அறிவித்த முதல் வாரமே, வேலை இழந்த அனைவருக்கும் மாதம் 2000$ (ரூ.1,10,000) என நான்கு மாதங்களுக்கு நிவாரண தொகை அறிவித்தார் பிரதமர். விண்ணப்பித்த அனைவருக்கும் மறுவாரமே உதவித்தொகை அவரவர் வாங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. பாதிப்புக்குள்ளான தொழில்களுக்குப் பல்வேறு உதவிகள் அறிவிக்கப்பட்டது. ஊதியம் வழங்கமுடியாத நிறுவனங்களுக்கு ஊதிய தொகையில் 75% அரசு ஏற்பதாக அறிவித்தது. முதற்கட்ட உதவித்தொகைக்கு உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5% ஐ அரசு ஒதுக்கியது.
மருத்துவ முறை, பரவல் தடுப்பு விதிகள், மருத்துவ வசதிகளுக்கான ஒதுக்கீடு, கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மாகாணங்களே தீர்மானித்தன. பொருளாதார உதவிகள், வழிகாட்டுதல், கொள்கை முடிவு, மற்றும் வெளியுறவுத் தொடர்புகளில் மட்டுமே மத்திய அரசு முடிவெடுத்தது. பிரதமர் மனைவியும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். எனினும் தினமும் வீட்டுக்கு வெளியே வந்து அறிவிப்புகளை வெளியிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கனடாவில் ஒவ்வொரு மாகாணமும் குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. பெரும்பாலும் காப்பீடு இலவசம் அல்லது மிகக் குறைந்த மாதத்தொகை கட்டினால் போதும். அதன்கீழ் அடிப்படை மருத்துவம் இலவசம். தனியார் மருத்துவமனைகளும் அரசின் பார்வையில் வருகிறது. ஆகவே, நோய் குறித்த அச்சம் காட்டி பணம் பறிக்கும் நிகழ்வுகள் நடப்பதில்லை என்கிறார் அஸ்வின்.
வளைகுடா நாடுகள்:
கத்தார்: வளைகுடா நாடான கத்தாரில் பணிபுரியும் கோவில்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி அங்குள்ள கொரோனா பாதிப்பு சூழல் குறித்து விவரிக்கிறார்.

இங்கே வைரஸ் பரவல் துவங்கியவுடனேயே முகக்கவசம் அணிவது, எல்லா இடங்களிலும் சானிடைசர் பயன்பாடு, தனிமனித இடைவெளி ஆகிய கட்டுப்பாடுகளை விதித்துவிட்டார்கள். நோய்த் தொற்று கண்டறியப்பட்ட சில சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் தவிர மற்ற வணிக நிறுவனங்கள் அனைத்தும் கட்டுப் பாடுகளோடு செயல்பட அனுமதிக்கப்பட்டன. ஆரம்பத்தில் தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் பரவல் அதிகரித்தபின்னர், முதியவர்கள், தீவிர பாதிப்புக்கு ஆளானவர்கள் தவிர மற்றவர்கள் வீட்டிலேயே தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் உள்ளதாலும், லாக் டவுன் எதுவும் அறிவிக்கப்படாததாலும், இயல்பு வாழ்வில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்கிறார்.
பஹ்ரைன்: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெர்லின் ஜோஸ் பஹ்ரைனில் பணியாற்றுகிறார். இவரது மனைவிஅங்கே செவிலியராகப் பணியாற்றுகிறார். ஜோஸ் மற்றும் அவரது மனைவி மட்டுமல்லாது, ஐந்து வயதுக் குழந்தையும் சேர்த்தே தொற்றுக்கு ஆளாகி மீண்டிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பின் தன்மைகளையும் தான் எடுத்துக் கொண்ட சிகிச்சைகளையும் அவர் நமக்கு விளக்கினார்.
இந்த மாதம் 2-ம் தேதி பயங்கரமாக உடம்பெல்லாம் வலி. கூடவே பயங்கர இருமலும் சேர்ந்துகொண்டது. இங்கே உள்ள ஹெல்த் சென்டர் சென்று உடல் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவர்கள் இருமலுக்கு மருந்தும் உடம்பு வலிக்கு மாத்திரையும் கொடுத்து 5 நாட்கள் தனித்து இருக்கச் சொன்னார் கள்.
வீட்டிற்கு வந்து நானும் தனித்து இருந்தேன். இரண்டு நாட்கள் கடந்த நிலையில் உணவில் கொஞ்சமும் சுவை தெரியவில்லை. என் மனைவி ஒரு செவிலியர். மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணி புரிவதால் இந்த அறிகுறிகள் குறித்து நன்கு அறிந்திருந்தேன். சந்தேகத்தைப் போக்கிக்கொள்ள பரிசோதனை செய்தபோது கொரோனா பாஸிடிவ் என முடிவு வந்தது.
அன்றே நான் பஹ்ரைன் அரசு குவாரன் டைனில் இருந்துகொண்டேன். 5 நாட்கள் அங்கே இருந்தேன். இதற்கு என்று மருந்து எதுவும் இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். அதனால் காலை மதியம் இரவு என்று மூன்று வேளையும் இஞ்சி, மிளகு போட்ட தண்ணீரை சூடாக்கி ஆவி பிடிப்பதும் இஞ்சி, நல்லமிளகு, எலுமிச்சம்பழம் ஒரு துண்டு போட்டு கொதிக்கவைத்த தண்ணீரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்துக் கொண்டும் இருந்தேன்.
குவாரண்டைனில் ஐந்தாவது நாள் மீண்டும் ஸ்வாப் பரிசோதனை எடுத்தபோது நெகட்டிவ் என்று முடிவு வந்தது. நோய்த் தொற்று ஏற்பட்டால் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம். பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பயப்படும் ஒவ்வொரு நேரமும் அதனுடைய தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
குவாரண்டைன் முடிந்து நான் வீட்டுக்கு வரும்போது மனைவிக்கும் மகனுக்கும் கொரோனா பாஸிட்டிவ் என உறுதியாகி அரசு குவாரண்டைன் சென்றார்கள். அந்த நேரமும் நான் வருத்தபடவில்லை அடுத்த பரிசோதனையில் மனைவிக்கு நெகட்டிவ், ஆனால் மகனுக்கு பாஸிட்டிவ் என்று வந்தது. அப்போதுதான் நான் உடைந்து போனேன். அதன் பிறகு மீண்டும் இரண்டு நாள் கடந்து நடந்த பரிசோதனையில் மகனுக்கும் நெகட்டிவ் என்று வந்தது. அப்போதுதான் மனம் அமைதி யானது. தற்போது நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம்.
கொரோனா வந்தால் டென்சனாக வேண்டிய அவசியம் இல்லை. இனி வரும் காலங்களில் அதனுடன் சேர்ந்துதான் நம் பயணங்கள் தொடரும். ஒவ்வொருவருக்கும் அது தான் நிலைமை. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு என் மனைவியின் வேலை கொரோனா வார்டில்தான். கொரோனாவை வெல்ல தற்போது நம்மிடம் உள்ள ஒரே மருந்து மன உறுதி மட்டுமே என்கிறார் இவர்.
கொரோனாவுக்கான மருந்தும், தடுப்பு மருந்தும் கண்டுபிடித்துப் பயன்பாட்டுக்கு வர இன்னும் சில மாதங்களோ சில ஆண்டுகளோகூட ஆகலாம். அதுவரை பெர்லின் ஜோஸ் சொன்னதைப்போல, மன உறுதியோடு இந்த வைரசை எதிர் கொள்வதுதான் கொரோனாவை வெல்ல நம் முன்னே உள்ள ஒரே தீர்வு.
இந்தச் செய்திகள் அனைத்தும் நமக்கு உணர்த்துவது, நோய்த் தடுப்பிற்கு மக்களின் ஒத்துழைப்பும், பொருளாதார இழப்புகளுக்கு அரசின் உதவியும் இருந்தால் கொரோனா மட்டுமல்ல, வேறு எந்தத் தாக்குதலையும் எந்த நாடும் எளிதில் வென்றுவிடும் என்பதுதான்.
Comments (0)