முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

நடக்கலாம் வாங்க : பகுதி 2

ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா? என்று நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. அதே நேரத்தில், நாம் நினைக்கும் அளவிற்கு மிக மிக எளிதானதும் அல்ல. கமலஹாசன் ட்வீட் போல் இருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம். 

இரண்டு நாட்கள் கூட போதும் ஒரு கிலோ எடை கூட. ஆனால் ஏறும் எடையைக் குறைக்க கண்டிப்பாக மெனக்கெடவேண்டும். இந்தச் சொற்றொடரை நம்மில் பலரும் சொல்லியிருப்போம் அல்லது யாராவது சொல்லிக் கேட்டிருப்போம். அது உண்மையும் கூட. 

உடல் எடைக் குறைப்பிற்கு நடைப்பயிற்சி உதவி செய்யுமா என்றால் உதவி செய்யும். ஆனால் உடல் எடை குறைப்பிற்கு நீ என்ன செய்கிறாய் என்று யாரேனும் கேட்டால் வெறுமனே நடக்கிறேன் என்று நீங்கள் முடிவு எடுத்திருந்தால் உடல் எடை குறையாது. மறுபடியும் கமலஹாசனின் ட்வீட்டை ஞாபகப்படுத்த விரும்பவில்லை. நேராக விசயத்திற்கு வருவோம். நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று. ஆனால் அதற்கான சில முக்கிய முயற்சிகள் உண்டு. 

உதாரணத்திற்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குள் நுழைய பெரிய வரிசை காத்திருக்கும். சன்னதிக்குள் இருந்து நீளும் அந்த வரிசை இட வசதிக்காக சன்னதியைச் சுற்றிச் சுற்றியே இரண்டு மூன்று வரிசைகள் செல்லும். வரிசை மெதுவாக நகரும்படி மேலாண்மை செய்வார்கள். இந்த இடத்தில் திருப்பதி கோயிலை நான் மேற்கோள் காட்டவில்லை. ஏனெனில், அங்கு சில சமயம் ரஜினி படத்திற்குத் திறந்துவிட்டது போல் எல்லோரும் ஓடுவதைக் கண்டிருக்கிறேன். மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி அல்ல. ஊர்ந்து ஊர்ந்து செல்வார்கள். அதைப்போலவே சிலர் வாக்கிங் வருவார்கள். அதற்குப் பெயர் நடைப்பயிற்சி அல்ல, ‘உல்லாச உலா’. 

எந்த வேலையும் இல்லாத போது உங்கள் வீட்டின் சமையலறையிலிருந்து படுக்கை அறைக்குச் செல்லும் தொனியில் செல்வது எல்லாம் நடைப்பயிற்சியில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வேகமாக நடப்பது என்பது வேறு, நடப்பது என்பது வேறு. ஊர்வது என்பது வேறு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும். 

அப்படி நடப்பவர்கள், ஊரும் வேகத்தில்  ஒரு இருபது நிமிடம் நடப்பார்கள். இப்படி ஒரு வாரம் நடந்துவிட்டு, உடல் எடையைச் சோதிப்பார்கள். “ஒரு வாரம் நடந்திருக்கேன். எடை குறையவில்லை. நடந்தா எடை குறையாது போல” என நடப்பதை நிறுத்திவிடும் ஆட்களும் உண்டு. 

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். உடல் எடை கூடிவிட்டதென நடக்க ஆரம்பித்தார். முதல் நாளே என்னைப் பார்த்து அதைச் சொன்னார். அவரது நடையின் வேகத்தைக் கணித்து அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. சரியாக 2 கிமீ நடப்பார். முடிந்ததும் அமர்ந்துவிடுவார். நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நடந்த நேரத்தை விட அரட்டையின் நேரம் கூடுதலாக இருக்கும். சரியாக ஐந்து நாட்கள் கழித்து உடல் எடையைச் சோதித்திருக்கிறார். அன்றைய தினம் அவரது விதி என்னுடன் நடக்க விதித்திருந்தது. உடல் எடை குறையவில்லை. “நடந்தாலும் என் உடம்பு குறையாதாம்” என்றார். “ஏன்?” என்றேன். “என் உடம்பில் கொழுப்பு எல்லாம் கெட்டியாய் மாறிவிட்டதாம். அது இனி குறையாதாம். நடப்பது வீணாம்” என்றார்.

“உங்களுக்கு இதை யார் சொன்னா?” என்று கேட்டேன். இவருடைய நண்பர், இவரை விட எடை கூடுதலான ஒருவர். அவர் இவருடன் நடக்க துணைக்கு இவர் அழைத்து வந்தவர். இவர் 2 கி மீ நடப்பவர். அவர் ஒரு கி.மீ மட்டுமே நடப்பவர். இவர் நடந்து முடிக்கும் வரை காத்திருந்து இவருடன் வீடு திரும்புபவர். இது தான் சேதி. நடக்க விருப்பம் இல்லாத ஒருவர் நடப்பவருடன் இருந்தால் இது தான் கதி. இதில் ட்விஸ்ட்டே, ‘உடம்பில் கொழுப்பு எல்லாம் கட்டியாகி விட்டது. இனி கரையாது. நடக்குறது வேஸ்ட்டு” என அள்ளிப்போட்டதுதான். 

அந்த ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட வியர்த்தது இல்லை என்று என்னுடன் 1.7 கிமீ நடந்து முடித்ததும் கூறியவருக்கு உடல் முழுக்க வியர்வை. நீங்க வந்தது உலா இல்லண்ணே. நடக்கனும்னா இப்படி நடங்க, இல்லாட்டி கொழுப்பு குறையாது என்றேன். 

உண்மையில், நீங்கள் நடக்க வேண்டும் அதன் மூலம் நல்ல உடல் நிலையைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தீர்கள் என்றால் முதலில் நீங்கள் தூக்கி எறியவேண்டியது உங்கள் பழைய டீ ஷர்ட், ஷூ, பிஞ்ச செருப்பு இவையெல்லாம் இல்லை. உங்களை நடக்க விடாமல் தடுக்கும் எதிர்மறை எண்ணங்களையும் நண்பர்களையும்தான். 

உடல் வியர்க்கும் அளவிற்கு நடக்க வேண்டும், உடலுக்கு உடல் வியர்க்கும் அளவு மாறுபடும். அறிவியல் ரீதியாகச் சொல்லவேண்டுமானால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் வண்ணம், உங்கள் உடல் தசைகள் அனைத்தும் செயல்படும் விதம் நீங்கள் நடக்கலாம். வேகமாக, வேகமாக என்று நினைத்தபடி நடக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகம் வேண்டும். சிலரது உடல் நிலையை மனதில் வைத்து அதற்கேற்றபடி உங்கள் வேகத்தை டிசைன் செய்துகொள்ளலாம். 

உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை. 

  * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?

  * உங்கள் நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?

  * உங்கள் நடக்கும் அளவில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றம் என்னென்ன? 

 * உங்கள் நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு?

இது தவிர அவரவர் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் ஓர் ஆலோசனை, முடிந்தால் இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்ற சோதனைகள் செய்து பார்த்தீர்கள் என்றால் அதற்கேற்றபடி வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், ஆரோக்கியம் என்று கருத்தில் கொண்டால் அதையும் செய்து பார்ப்பதுதான் நல்லது. 

இதை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். புதிதாய் நடக்க ஆரம்பித்தவர்களுக்கு உடல் அசதியும், சோம்பேறித்தனமும், நடக்க விரும்பாத நண்பர்களின் ஏளனமும், தூக்கச் சுகமும் உங்களை நடக்க விடாமல் தடுக்க முற்படும். அவர்கள் எல்லாம் மேற்சொன்ன விசயங்களில் கவனம் செலுத்தும்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் நடையில் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள். 

சரி, இதை எல்லாம் கணக்கு செய்துதான் நடக்க வேண்டுமா என்று ஏளனம் செய்வீர்கள்தானே? என்னையும் பார்த்து ஏளனம் செய்திருக்கிறார்கள். 

ஒரு விசயம் தான். முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள். நடக்க வந்தால் நடந்து காட்டுங்கள். 

வாங்க நடக்கலாம். 

கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை.

படங்கள்: இணையத்திலிருந்து 


Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *