யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

யோகக் கலை ஆரோக்கியமா? ஆன்மீகமா?

இன்று சர்வதேச யோகா தினம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, மதங்கள் ஏதுமற்ற பண்டைய இந்தியாவில் தோன்றிய யோகக் கலை, உடல் ஆரோக்கியத்திற்கான கருவியாகப் பயன்பட்டு வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட அந்தக் கலையை, பின்னாட்களில் வேத மதத்தினர் தங்களதாக்கிக்கொண்டதால், பிற மதத்தினர் அக்கலையை மதச்சார்பு கொண்டதாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இறை மறுப்பாளர்களும்கூட தங்கள் உடல்நலம் பேண யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யோகப் பயிற்சிகள் செய்யும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்தச் சூழ்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபையால் அறிவிக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய பிரதமரின் முன்னெடுப்பு இதில் உள்ளது என்பதாலேயே முற்போக்காளர்களாகக் காட்டிக்கொள்வோரின் ஏளனத்திற்கு யோகக் கலை ஆளாகியுள்ளது. இதற்கிடையே யோகக்கலை தமிழர்களின் சொத்து என்று வாதிடுவோரும் உண்டு. யோகக் கலை மதச் சார்பு கொண்டதா, குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே  அது சொந்தமானதா, பிற மதத்தினர் யோகப் பயிற்சிகள் செய்ய மத ரீதியான தடைகள் உண்டா, யோகக் கலையின் பின்னணி என்ன போன்ற பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சென்னை புழல் அருகிலுள்ள விநாயகபுரத்தில் யோகப் பயிற்சி மையம் நடத்திவரும் யோக ரத்னா சி. முத்துசாமி. அரியலூர் மாவட்டம் இலந்தங்குழி கிராமத்தில் பிறந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகச் சென்னைக்கு வந்த இவர், கடந்த 18 ஆண்டுகளாக சென்னையின் புறநகர்ப் பகுதியான விநாயகபுரம் VMK நகரில் M. P. யோகா மையம் என்ற யோகப் பயிற்சி மையத்தை நிறுவி யோகக்கலை பயிற்றுவித்து வருகிறார். யோகக் கலையில் முதுநிலை அறிவியல் பட்டமும் யோகா சிகிச்சை முறையில் முதுநிலைப் பட்டயமும் பெற்றுள்ளார். இவர் மட்டுமல்லாது இவரது இணையர் பொற்கொடி, மகன்கள் அருண் ராஜா, அசோக் ராஜா ஆகியோரும் யோகக் கலையை முறையாகப் பயின்று மக்களுக்கும் பயிற்றுவித்து வருகின்றனர். இனி, யோகக் கலை குறித்த நம் கேள்விகளும் யோக ரத்னா முத்துசாமி அவர்களின் பதில்களும்: யோகக் கலை எப்போது தோன்றியது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? யோகக் கலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழமையான கலையாகும். பதஞ்சலி முனிவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த யோகக் கலை, தமிழகத்தில் சிறந்து விளங்கிய 18 சித்தர்களில் ஒருவரான திருமூலர் எழுதிய திருமூலம் என்ற நூல் வழியாக நாம் அறியக் கிடைக்கிறது. அஷ்டாங்க யோகம் ஆரோக்கிய வாழ்விற்குச் சிறந்ததாக பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் உள்ளது. அதையே நாங்கள் எங்கள் பயிற்சி மையத்தில் பின்பற்றி வருகிறோம். யோகத்திற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு உண்டா? யோகா மதம் சார்ந்ததா? உடலினை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் இந்தக் கலை. முந்தைய காலங்களில் ஆன்மிகம் மற்றும் மதச்சார்புகள் இந்தக் கலையோடு இணைந்திருந்தது. நாங்கள் கற்றுக்கொண்ட காலத்திலும்கூட அது இருந்தது. ஆனால் தற்காலத்தில் அவை பெரும்பாலும் களையப்பட்டுவிட்டன. பல்கலைக்கழகங்களிலேயே யோகக் கலைக்கான படிப்புகள் வந்துவிட்டன. எங்கள் பயிற்சி மையத்தில் அத்தகைய சார்பு நிலைகள் எதுவும் கிடையாது. எந்தப் பாகுபாடுமின்றி மக்கள் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். யோகா கற்றுக்கொள்ள உணவுக் கட்டுப்பாடுகள் ஏதும் உண்டா? குறிப்பாக புலால் உணவுக்குத் தடை உள்ளதா? எந்தவிதமான உணவுக்கும் தடை இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிரதமும் நஞ்சு. எனவே எந்த உணவாக இருந்தாலும் அளவோடும் சரியான நேரத்துக்கும் எடுத்துக்கொள்ளும்படி மட்டுமே நாங்கள் வலியுறுத்துகிறோம். சூரிய நமஸ்காரம் போன்றவை வழிபாட்டு முறைகள்தானே? அதிகாலைப் பயிற்சி உடலுக்குப் புத்துணர்ச்சி தரும் என்பதால், பண்டைக் காலத்தில் சூரியன் உதிக்கும் நேரத்தை வைத்துப் பயிற்சியை உருவாக்கி இருக்கலாம். பிற்காலத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது மந்திரங்களையும் சிலர் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் எங்கள் பயிற்சி மையத்தில் மந்திரம் சொல்லித் தருவதுமில்லை. அது அவசியமும் இல்லை. 12 நிலைகளையும் எண்களில் குறிப்பிட்டு அந்தந்த நிலைக்கான பயன்களைச் சொல்லியே கற்றுத் தருகிறோம். நீங்கள் யோகா மையம் தொடங்க குறிப்பிட்ட காரணம் ஏதாவது உண்டா? ஆம். நான் லாரி ட்ராஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்துவந்தேன். மூட்டு வலி காரணமாக வண்டி மேலே ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். பல்வேறு சிகிச்சைகள் செய்தும் எதுவும் நிரந்தரத் தீர்வாக அமையவில்லை. வேலை போய்விடும் என்ற நிலையில் என் உடல்நிலை இருந்தது. அந்த நேரத்தில்தான் எனது ஆசான் முனைவர் ஆசன ஆண்டியப்பன் அவர்களின் விளம்பரத்தைப் பத்திரிகையில் பார்த்தேன். யோகாவில் மூட்டு வலி நிரந்தரமாக குணமாகும் என்று இருந்தது. தொடக்கத்தில் யோகப் பயிற்சிக்குப் போகும்போது படி ஏற முடியாமல் சிரமப்பட்ட நான், இரண்டே மாதத்தில் வலி குறைந்து உற்சாகமாக ஆகிவிட்டேன். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எனக்குக் கிடைத்த நிம்மதி எல்லாருக்கும் கிடைக்கவேண்டும் என்று எனக்குள் எழுந்த சிந்தனையின் விளைவுதான் இந்த மையம். எத்தனை ஆண்டுகளாக யோகா செய்கிறீர்கள்? இந்த மையத்தை எப்போது தொடங்கினீர்கள்? 2000-ஆவது ஆண்டில் யோகா கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் யோகக்கலையில் டிப்ளமோ முடித்தேன். அதைத் தொடர்ந்து நானும் என் மனைவியும் பட்டப் படிப்பை முடித்து 2005இல் மையம் தொடங்கினோம். எங்கள் மகன்களும் எங்களோடு இணைந்துகொண்டார்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இதில் ஆர்வம் வந்தது எப்படி? நான் மூட்டு வலியில் கஷ்டப்பட்டதையும் யோகா கற்றுக்கொண்டு அதைத் தொடர்ந்து பின்பற்றும்போது நான் சரியாகி ஆரோக்கியமாக இருப்பதையும் பார்த்து, அவர்களும் ஆர்வத்தோடு இணைந்து கற்றுக்கொண்டார்கள். எந்த ஒரு நடைமுறையைத் தொடங்கினாலும் ஏதாவது ஒரு தடங்கல் வரும். உங்களுக்கு ஏதேனும் தடங்கல் வந்ததா? எங்களுக்கு அதைப்போல எந்தத் தடையும் வரவில்லை. மக்கள் ஆர்வத்தோடுதான் வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அழைத்து வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. உங்கள் பயிற்சி அனுபவத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வு ஏதாவது? நிறைய உள்ளது. 2007இல் ஒரு ஆசிரியை மெனோபாஸ் பிரச்சனையால் அதிகமான உதிரப்போக்கின் காரணமாக வகுப்பில் நின்று பாடம் எடுக்க முடியாத நிலையில் பயிற்சிக்கு வந்தார். முறையாகப் பயிற்சி செய்யத் தொடங்கிய நான்கு ஐந்து மாதங்களில் பிரச்சினை நீங்கியது. ‘நீங்கதான் என் தெய்வம்’ என்று அவர் நெகிழ்ச்சியாகச் சொன்னபோதுதான் நான் யோகா பயிற்றுவித்ததின் முழுமையை நானே உணர்ந்தேன். அடுத்து, தைராய்டு பிரச்சினை காரணமாக உடல் பருமனால் அவதிப்பட்ட ஒரு இளம்பெண் பயிற்சியில் சேர்ந்தார். தொடர் பயிற்சிக்குப் பிறகு தைராய்டு பிரச்சினை நீங்கி திருமணமும் முடிந்தது. சாதாரண பிரசவத்தில் குழந்தை பிறந்தவுடன் மருத்துவமனையிலிருந்து அவர் அழைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதும் மறக்க முடியாதது. உங்களின் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் ஆரோக்கியத்தைத் தேடி ஆண்கள் அதிகம் வருகிறார்களா அல்லது பெண்கள் அதிகம் வருகிறார்களா? தொடர்ச்சியான வருகையில் யார் அதிகம்? இங்கே பெண்கள்தான் அதிகளவில் வருகிறார்கள். தொடர்ந்து வருவதும் அவர்கள்தான். வெளியிடங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளீர்களா? ஆரம்பத்தில் அப்படிக் கலந்துகொண்டோம். ஆனால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை. எங்கள் நிறைவு பிறர் எங்களால் நன்மை அடையும்போதுதான் என்று புரிந்துகொண்டு போட்டிகளில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டோம். அதேபோல எங்களின் இரண்டு மகன்களும் கல்வி பயின்ற பள்ளிக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற தூண்டுதல் எங்களுக்கு உருவானது. எனவே நாங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஓராண்டுக்கு இலவசமாக யோகா பயிற்சி வழங்கியுள்ளோம். யோகா முறைகளில் ஏதேனும் புதுமைகள் புகுத்தியிருக்கிறீர்களா? அல்லது பாரம்பரிய முறையிலேயே தொடர்கிறீர்களா? பயிற்சிகளில் நாங்கள் ஆராய்ச்சிகள் நடத்தியிருக்கிறோம். முன்பு இருந்ததோடு சேர்த்து அவரவர் உடல்நிலைக்குத் தகுந்த பயிற்சிகள் வழங்குகிறோம். எங்களுடைய அனுபவங்களோடு வேறு பல யோகா சார்ந்த தரவுகளின் உதவியுடன் யோகா எனும் அற்புத சக்தி என்ற புத்தகத்தைக் கடந்த ஆண்டில் வெளியிட்டுள்ளோம். யோகா செய்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டாகுமா? பயிற்சியைப் பாதியில் நிறுத்திவிட்டால் பக்கவிளைவுகள் ஏதேனும் வருமா? அதைப்போல எந்தவிதமான பக்கவிளைவுகளும் யோகாவில் கிடையாது. தொடர்ந்து யோகா செய்ய முடியாதவர்களுக்கு ஏதேனும் எளிய வழிமுறைகள் உண்டா? தொடர்ந்து மூச்சுப் பயிற்சி மட்டுமாவது மூன்று வேளையும் செய்து வந்தாலே ஓரளவு ஆரோக்கியமாக இருக்கலாம். உங்களுடைய பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுருக்கமாக.. எங்களுக்குப் பணம் நோக்கமில்லை. வசதியற்ற சிலருக்கு நாங்கள் கட்டணம் இல்லாமலும் கற்றுத் தந்திருக்கிறோம். பல அரசுப் பள்ளிகளிலும் கட்டனமில்லா வகுப்புகள் எடுத்திருக்கிறோம். ‘ஒரு தெருவில் குறைந்தது நான்கு யோகா பயிற்சி மையங்கள் வரவேண்டும். அப்போதுதான் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்’ என்று எங்கள் ஆசான் சொல்வார். அதேபோல ஒருநாள் கூட விடுமுறை விடக்கூடாது என்றும் சொல்வார். அதை இன்றுவரை நாங்கள் கடைபிடித்து வருகிறோம். எங்கள் மூச்சு நிற்கும்போதுதான் இங்கே வகுப்புகள் நிற்கும். உடல் ஆரோக்கியத்துடன் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுதற்கும் வளரும் பிள்ளைகளிடம் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியிலும் இங்கே வரும் மாணவர்களுக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது புத்தகங்கள் பரிசளிக்கிறோம். இளம் பேச்சாளர்களுக்கான மேடையாக திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கதின் 31ஆவது கிளையைத் தொடங்கியுள்ளோம். அதன் மூலம் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை அவர்களுக்கே அறிமுகம் செய்கிறோம். உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள்? வலிகளைச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருக்காமல் வாழும் வழிகளைச் சொல்லி நெறிப்படுத்துவது, எண்ணிக்கையைப் பார்க்காமல் எண்ணங்களால் மேம்பட்டவர்களோடு இணைந்து பயணிப்பது, தேகநலன் காத்தலில் உள்ளடங்கியதே சமூகநலன் என்பதை உணர்த்திக்கொண்டே இருப்பது ஆகியவற்றோடு ஆரோக்கியமாக இருப்பவனே உலகின் மிகப்பெரிய பணக்காரன் என்பதை உர(ரை)க்கச் சொல்வதும்.

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. எல்லாம் சரி, தமிழக அரசின் பார்வையில் போதைப்பொருள் என்பது குட்கா, கஞ்சா, ஹெராயின், அபின் போன்றவையாகத்தான் இருக்கிறது. அரசால் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், போதைப்பொருட்களின் கணக்கில் வராதது, வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.  மதுபானங்கள்தான் தற்போது மிக மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக, அரசின் அனுமதியுடன் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய போதைப்பொருட்களாக இருக்கின்றன. அதேபோல, தினசரிச் செய்தித்தாள்களைத் திறந்து, கொலை, கொள்ளை, வன்புணர்வு, தற்கொலை எனப் பத்து செய்திகளை வாசித்தோமானால், அவற்றில் ஏழெட்டு சம்பவங்களுக்கு அடிப்படையாகவோ, பின்புலமாகவோ மதுப்பழக்கம் இருக்கும். மது போதையில் வன்புணர்வு, மதுப் பழக்கத்தால் கணவன் மனைவி இடையே தகராறு, மதுப் பழக்கத்தால் கடனாளியாகித் தற்கொலை, மதுபானம் வாங்கப் பணம் தராததால் மனைவி அடித்துக் கொலை, இப்படியான செய்திகள் மிகச் சாதாரணமாகிவிட்டன. இவையொன்றும் அரசின் பார்வைக்குப் போகாத ரகசியச் செய்திகள் அல்ல. ஆனால், இவற்றையெல்லாம் இத்தனைக் காலமாக அரசாங்கங்கள் கண்டுங்காணாமல்தான் கடந்து வருகின்றன. மதுபான விற்பனையாலும், மதுப் பழக்கத்துக்குப் பலர் அடிமையாவதாலும் அரசுக்கும் அரசியலுக்கும் கிடைக்கும் பல்வேறு நன்மைகளே அதற்குக் காரணம். குடி நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, குடிநோயால் கணவன் உயிரிழந்ததால் இளம் விதவையான பெண்களின் எண்ணிக்கை, மது போதையால் நடக்கும் கொலை, கொள்ளை, வன்புணர்வு, விவாகரத்துகள் என அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரித்தால், தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகத்தீமையின் வீரியம் பளிச்சென அனைவருக்கும் புரியும். அவ்வளவு ஏன், ஒவ்வொருவரும் அவரவர் குடும்பம், உறவினர்கள் மட்டத்தில் தீவிர மதுப்பழக்கத்தில் சிக்கியவர்கள் குறித்துக் கணக்கெடுத்தாலே இதன் தீவிரத்தன்மை புரியும். இவற்றைத் தடுத்து நிறுத்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதலில், குடிப்பழக்கம் ஒரு சமூகக்கேடு என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாக்காச்சி போர்டில் எழுதிவைப்பதல்ல இது. தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகக்கேடுகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும். குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒருவர் மீதான மரியாதை எந்த அளவுக்கு இழிவு நிலைக்குச் செல்கிறது, குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பது குறித்த பிரச்சாரங்கள் திண்ணைப் பிரச்சாரம் போல முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சாரங்கள், நேரடியாக மக்கள் மத்தியிலும், அனைத்து ஊடகங்களின் வழியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சமூக அக்கறையுடனும் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதால் விளையும் தீமைகள் குறித்து ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படும். தீவிர மதுப்பழக்கம் தவறென்ற சிந்தனை பரவத் தொடங்கும். இதுதான் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சரியான முன்னெடுப்பாக இருக்கும். பொதுவாக, மதுபானக்கடைகளை ஒழித்துவிட்டால், மதுப்பழக்கத்தை ஒழித்துவிடலாம் என்ற சிந்தனை பலருக்கும் உண்டு. ஆனால், அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதற்குப் பல்லாண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் தொடரும் கள்ளச்சாராயச் சாவுகளும், அங்கே விற்பனையாகும் போலி மது பானங்களும், சாராயம் குறித்த புள்ளிவிவரங்களுமே சாட்சி. அதேவேளை, மதுபானக்கடைகளை முற்றாக மூடுவதற்குப் பதிலாக, எண்ணிக்கையை இஷ்டத்துக்கு அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது, சிறு கிராமத்திலும்கூட இரண்டு மூன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் மதுபானக்கடைகளும் ரெக்கரியேஷன் கிளப் என்ற பெயரில் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, ஊருக்கு வெளியே மதுபானக் கடைகளைக் கொண்டுசெல்ல வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் அருகிலுள்ள மதுபானக் கடைகளை ஒழிக்க வேண்டும். நம்மூரில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்க வேண்டிய கல்விக்கூடங்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தொலைவில் இருக்கின்றன. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டிய மதுபானக்கடைகள் குடியிருப்புப்பகுதியில் இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும். இறுதியாக, மது பானங்கள், போதைப்பொருட்கள் பயன்பாடென்பது, தமிழ்நாடு என்றில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சவாலான பிரச்சனையாக தற்போது உள்ளது. குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் கடந்த ஆண்டில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. அடுத்தடுத்து, அதே துறைமுகத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலும், 350 கோடி ரூபாய் மதிப்பிலுமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், குஜராத்திலுள்ள மற்ற துறைமுகங்களிலும் போதைப் பொருட்கள் பிடிபட்டன. அதாவது, மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலம்தான், போதைப்பொருட்களின் சர்வதேசச் சந்தையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது, போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் அங்குதான் அதிக அளவில் நடக்கிறது. குஜராத் மட்டுமல்லாது, இந்தியா முழுக்கவே போதைப்பொருட்கள் சப்ளை அதிதீவிரமாக நடக்கிறது. பெருமுதலாளிகளின் உலகமாக மாறிவரும் இன்றைய சூழலில், போதைப்பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதோடு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வைத் தீவிரமாக முன்னெடுப்பதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கக்கூடும். அந்த விழிப்புணர்வு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நம் எதிர்காலம் நம் கைகளில். வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்

கடந்த 15 மாதங்களில் என்னுடைய பயன்பாட்டுக்கென அதிகபட்சமாக 400 – 500 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் போட்டு ஈருருளி ஓட்டியது போக, மீதி அத்தனை தூரங்களையும் மிதிவண்டியிலேயே பயணிப்பதன் அனுபவக் குறிப்புகள்: அலுவலகம் சென்று வருவது, இடையில் தேநீர் பருக, மதிய உணவுக்குச் செல்வது, அஞ்சல்/தூது அஞ்சல் அனுப்பச் செல்வது என, ஒரு நாளைக்கு சராசரியாக 20 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே சென்று வருகிறேன். வெளியூர் பயணங்கள், நகர எல்லைக்குள் பிறருடன் செல்வது, குடும்பத்தினருடன் ஆங்காங்கே சென்று வருவது, பெட்டிகள், மூட்டைகளை எடுத்துச் செல்வது போன்றவற்றிற்கு மட்டுமே மகிழுந்து. மற்ற நாட்களில் அதைத் தொடுவதே இல்லை. சில நாட்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு வேலைகள் இருந்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டிய அழுத்தம் இல்லாத நாட்களில், நகர எல்லைக்குள் 40 கிலோமீட்டர் கூட மிதிவண்டியில் பயணிப்பதுண்டு. எப்போதாவது கொஞ்சம் சோம்பலாக இருக்கும் நாட்களில் நகருக்குள் சென்றுவர, ஒரு வேலையை முடிக்க நேரம் குறைவாக இருக்கும்போது, கட்டுச்சிப்ப அலுவலகங்கள் சென்றுவர, மகிழுந்து பராமரிப்புக்கு விட்டிருக்கும்போது என அரிதிலும் அரிதாக மட்டுமே ஈருருளியை எடுப்பதுண்டு. 2009-இல் வாங்கிய BSA SLR Photon Freedom மிதிவண்டிதான். சன்னமான சுமைதாங்கி உண்டு. கியர் கிடையாது. Ralco, Bedrock, Hartex போன்றவற்றில் டயர் போட்டாலும் நைலான் டயர் விரைவில் தேய்ந்து விடுவதோடு எதிர்பாராத நேரத்தில் ஓட்டையாகி விடுவதால் இரப்பர் டயரே சிறந்தது என்று தோன்றுகிறது. கடந்த ஒரு வருடத்தில் கோயமுத்தூர் நகர எல்லைக்குள், தோராயமாக 2500 – 3000 கிலோமீட்டர் மிதிவண்டியில் ஓட்டியிருந்தாலும், பயணத்தொலைவு, கலோரிகளை அளப்பதற்குச் செயலி எதுவும் பயன்படுத்தவில்லை; திறன்மிகு கைக்கடிகாரமும் (ஸ்மார்ட் வாட்ச்) பயன்படுத்துவதில்லை. எப்போதுமே ஒரு லிட்டர் தண்ணீர் புட்டியை சுமைதாங்கியில் வைத்திருப்பதுண்டு. நிதானமாக அளவான வேகத்தில் செல்வதால் கபால கவசம் அணிவதில்லை. எப்போதாவது வெயிலுக்குத் தொப்பி அணிவதுண்டு. இதுவரைக்கும் மற்ற வண்டிகள் இடித்து விழுந்தது, சறுக்கியது, நாய்கள் துரத்தியது என்று எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி, மகிழுந்து என எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நம் மீது மோதக்கூடிய எதிர்பாராத விபத்தைத் தடுக்க வேண்டுமெனில் Be visible என்ற அடிப்படையை மறக்கக்கூடாது. ஒரு விநாடி யாரோ ஒரு ஓட்டுநர் கவனிக்கத் தவறுவதாலேயே விபத்து ஏற்படுகிறது. சைக்கிளை பைக் என்று விளிக்கும் நவயுக மிதிவண்டி வெறியர்கள், ஈருருளி ஓட்டுபவர்கள், மகிழுந்து ஓட்டுநர்கள் என எல்லோருமே மிகவும் அலட்சியமாக இருப்பது வாகனத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் எதிரொளிப்பான் (Retro Refelective Strip/Sticker) விசயத்தில்தான். இரவு நேரங்களில் be visible என்பது மிக முக்கியம். பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி ஓட்டி வரும் ஒரு நபரை நான்கு சக்கர வாகனங்களில் உள்ள A piller ஓரிரு நொடிகள் மறைத்து blindspot-ஐ ஓட்டுநருக்கு உண்டாக்கக் கூடியது. கணிசமான ஓட்டுநர்கள் அலைபேசியில் பேசுவது, உடனிருப்பவர்களுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபடுவது என வருகிறார்கள். குடிகார நாய்கள் வண்டி ஓட்டி வருவதும் நம் ஊரில் இயல்பானதாகிவிட்டது. இத்தகைய ஆபத்தான ஓட்டுநர்கள் தூரத்தில் உள்ள சின்னச்சின்ன அசைவுகளை எல்லாம் கவனித்து முகப்பு விளக்கின் dim, bright-ஐ மாற்றி மாற்றி அடித்துப் பார்த்தெல்லாம் வண்டி ஓட்டுவதில்லை. குத்து மதிப்பாக பிரேக்கையும், ஆக்சிலரேட்டரையும் மிதித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக நாம் அன்றாடம் reflective jacket போட்டும் வாகனம் ஓட்ட முடியாது. தினமும் இரவு வீடு திரும்புவபவர்களுக்கு மிதிவண்டியுடன் வரும் எதிரொளிப்பான் போதாது. நாமே சிவப்பு நிற 3M எதிரொளிப்பான் ஸ்டிக்கரை முன்னும் பின்னும் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டியதுதான் (முறைப்படி பார்த்தால் முன்புறம் வெள்ளை நிற எதிரொளிப்பான் மட்டுமே இருக்க வேண்டும். இருந்தாலும் சிவப்பு அல்லது மஞ்சள் பட்டையை ஒட்டுவதில் தவறில்லை). இரு சக்கரங்களுக்கும் முழுமையான Mud guard இல்லாத மிதிவண்டிகளை அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் பயன்படுத்தவே முடியாது. சாலைகளில் திடீரென சாக்கடை ஓடும், மழை பெய்த பின் மணிக்கணக்கில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும், வண்டியில் அடிபட்ட நாய் அல்லது பூனையின் உடல் சாலை முழுவதும் ஒட்டியிருக்கும். கண்ட இடத்தில் எச்சில் துப்பி வைத்திருப்பார்கள்; சில இடங்களில் வாந்தி எடுத்து வைத்திருப்பார்கள். எவ்வளவு பார்த்துப் பார்த்து ஓட்டினாலும் சில இடங்களில் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் காலை இரண்டையும் தூக்கிக்கொண்டு நேராக விட வேண்டியதுதான். அப்போதுதான் இரும்பு mud guard-இன் அருமை புரியும். காற்றில் ஆடிக்கொண்டே வரும் பிளாஸ்டிக் mud guard இருக்கும் மிதிவண்டிகளில் அவ்வப்போது எதிரொளிப்பானை mud guard மறைத்து விடுகிறது. இதை அறியாமல், ஆபத்தை உணராமல் பலர் இரவு நேரங்களில் செல்கின்றனர். சக்கரத்தின் கம்பியில் மாட்டியிருக்கும் ஆரஞ்சு வண்ண எதிரொளிப்பான் வில்லைகள் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டவை. அதன் முக்கியத்துவம் தெரியாத பலர் அவற்றைத் துடைப்பதே இல்லை; உடைந்துவிட்டால் புதியது மாட்டுவதும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அவற்றை கழட்டிவிட்டு புதியது மாட்டுவது அவசியம். சுமைதாங்கியும், இரும்பு mud guard-உம் இல்லாத நவயுக மிதிவண்டிகளை அன்றாடப் பயன்பாட்டுக்கு வைத்திருப்பது சவாலான செயல். நமக்குப் பயன்பட வேண்டிய பொருளே நமக்கு சுமையாக மாறிவிடக்கூடாது என்பது என் கருத்து. Gear உடைய, suspension வைத்த மிதிவண்டிகளின் இயல்பான பயன்பாடு பற்றித் தெரியவில்லை. கோயமுத்தூர் போன்ற சமதளமான நகரத்தில் அவற்றால் என்ன பயன் என்று நானறியேன். பஞ்சாங்கத்தைப் பார்த்து செவ்வாய் கிரகத்துக்கு இராக்கெட் விடுவதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். Gym-க்கு car-இல் வந்து நின்றுகொண்டிருக்கும் cycle-ஐ ஓட்டி கலோரிகளை எண்ணுவதை ஜீரணிக்கவே முடிவதில்லை. பல இடங்களுக்கும் நான் மிதிவண்டியிலேயே செல்வதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர் மிதிவண்டிக்கு மாறினார்கள். ஆனால் ஓரிரு மாதங்களில் அதைக் கைவிட்டுவிட்டு பழையபடி ஈருருளிக்குத் திரும்பிவிட்டனர். தனிப்பட்ட விருப்பம், தன்னூக்கம், ஈடுபாடு என்பதைத் தாண்டி அதற்கான முக்கிய காரணம் அவர்களது மிதிவண்டி டயர். அன்றாடப் பயன்பாட்டுக்கான மிதிவண்டியில் டயர் சன்னமாக இருக்க வேண்டும். நம் மக்கள் பெரிய button கொண்ட MTB அல்லது மிக சன்னமான track டயர் உள்ள ஒன்றை எந்தவிதமான யோசனையும் இல்லாமல் வாங்குகின்றனர். காதணிபாடி மாட்டி பாட்டுக் கேட்டுக்கொண்டே ஒருநாளும் சாலைகளில் சென்றதில்லை. அவ்வாறு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடியது என்பதோடு இசையை அவமதிக்கும் செயல். வெளியூர் செல்லும்பொழுது மிதிவண்டியை பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள bike stand-களில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடுவதால் இப்போதெல்லாம் வீட்டிலிருந்து சென்று வரும் taxi செலவும் இல்லை. நாளொன்றுக்கு 20 ரூபாய் நிறுத்தக்கட்டணம் மட்டுமே. வெயில் நேரத்தில் செல்வது பழகிவிட்டால் ஒன்றுமே தெரியாது. வியர்வை வந்தாலும் அலுவலகம் சென்றவுடன் பத்து நிமிடங்களில் இயல்பாகி விடுகிறது. சட்டை அழுக்காவதும் இல்லை. மழை நின்ற அடுத்த சில நாட்கள் சாலைகளில் உள்ள சேறு, சகதி காய்ந்து புழுதியாக பறக்கும். அதுவும் முகக் கவசம் அணிவதால் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் தலை முடி முழுவதும் புழுதியாக இருக்கும். அப்படியே சீவினால் சீப்பு நிறம் மாறுவது தெரியும்! Traffic jam என்ற பிரச்சினை ஒருபோதும் மிதிவண்டிக்காரர்களுக்குக் கிடையாது. ஈருருளிகளே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து மொத்தமாக நின்றுவிட்டாலும் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்து சென்று பத்து மகிழுந்துகளைத் தாண்டிய பிறகு இறக்கி வைத்து எப்போதும் போல ஓட்டிச் செல்லலாம். இதைவிட இன்னும் குறைவான நுகர்வுடைய minimalist வாழ்க்கை முறைக்குச் செல்ல மூன்று கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தை நடந்து மட்டுமே செல்வது என்ற இலக்கை 2023-க்கு செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். ஆர். எஸ். பிரபு

புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

புத்தம் புதிதாய்ச் சந்திப்போம்

மிகுந்த படபடப்புடன் காணப்பட்டார், மகனால் மனநல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டிருந்த அந்த ஐம்பது வயதுப் பெண்மணி. உடல் முழுக்க வியர்த்துப் போயிருந்த அவரை ஆசுவாசப்படுத்தி அமரச்செய்து, பிரச்சினையை விசாரித்தேன். தனக்கு தூக்கம் பிடிக்கவில்லை, கைகள் நடுங்குகின்றன, தலை ஒரு பக்கமாக வலிக்கிறது, என்னாகுமோ ஏதாகுமோ என்று எப்பொழுதும் பயமாகவே இருக்கிறது. அதற்கெல்லாம் காரணம் தன்னுடைய இளைய மகளின் செயல்பாடுகள்தான் என்றார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் தன் மகள், தன் வயதுக்குரிய பக்குவம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும், காரணமில்லாமல் எரிச்சலும் கோபமும் கொள்வதாகவும், தான் நினைத்தது மட்டுமே சரி என்று பிடிவாதமாகத் தன்னிடம் சண்டையிடுவதாகவும் கூறினார். மகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் கூறிய அறிகுறிகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கு மனப் பதட்ட நோய் இருப்பதாக அறிய முடிந்தது. அவர் அதில் இருந்து குணமடையத் தேவையான மருந்துகளைப் பரிந்துரைத்தேன். மருமகளைக் குறை சொல்வதில் உண்மை இல்லாமல் இருக்கலாம், ஆனால் மகளைப் பற்றி ஒரு தாய், புதியவரிடம் குறை சொல்கிறார் என்றால் நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயமாகத்தான் இருக்கும் என்று அவர் மகளையும் ஒரு முறை ஆலோசனைக்கு அழைத்து வரச் சொன்னேன். பத்து நாட்கள் கழித்து தொடர் சிகிச்சைக்காக என்னைச் சந்திக்க வந்த அவர், தன் கணவருடன் வந்திருந்தார். தனக்கு இருந்த மனப் பதட்ட அறிகுறிகள் எல்லாம் சரியாகி, தற்போது நலமாக இருப்பதாகவும் தன் கணவர்தான் மிகவும் சோர்ந்து காணப்படுவதாகவும் கூறினார். அவர் கணவரிடம் ‘என்ன செய்கிறது?’ என்று நான் கேட்க, மிகவும் களைப்பாக சக்தியே இல்லாதது போல் உணர்வதாகவும், காலையில் எழுந்தவுடன் மனம் மிகுந்த இறுக்கமாக இருப்பதாகவும், எந்த விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும் கூறினார். மேலும் அவரும், தன்னுடைய பிரச்சினைகளுக்கு தன் மகள்தான் காரணம் என்று தன் மனைவியைப் போலவே கூறினார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக தன் மகள் இருப்பதாகவும், சிறிய பிரச்சினைகளைக் கூட மிகப் பெரியதாகப் பார்ப்பதாகவும் கூறி வருத்தப்பட்டார். ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகளை நோக்கி ஆனந்தமாகப் பாட வேண்டிய தந்தையே, மிகவும் மனம் நொந்து தன் மகளின் செயல்பாடுகள் பற்றி சொல்லி வருத்தப்பட்டது, உண்மையில் அவர் மகளுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியது. அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டிருப்பதைப் புரிய வைத்து, அதில் இருந்து மீண்டு வர சில மருந்துகளைப் பரிந்துரைத்து விட்டு, கண்டிப்பாக அவர்களின் மகளையும் சிகிச்சைக்கு அழைத்துவரும்படி கூறினேன். அவரிடம் சொல்லி அழைத்து வருவது மிகவும் கடினமான விஷயம் என்று கூறினார்கள் இருவரும். அவர்கள் சென்று சரியாக ஒரு வாரம் கழித்து, அவர்களின் மூத்த மகன், தன் இளைய சகோதரி தன்னுடன் தொடர்ந்து சண்டையிடுவதால் தன்னுடைய நிம்மதி எல்லாம் போய்விட்டது என்று சொல்லிக் கொண்டு வந்தார். வீட்டிலிருந்தபடி ஐ.டி.யில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறிய அவர் மிகுந்த மன அழுத்தத்துடன் காணப்பட்டார். அவருக்கான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, அவரிடமும் அவர் சகோதரியை ஒரு முறை என்னிடம் அழைத்து வரும்படி கூறி அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஒரு நாள் அவர், தன் சகோதரி திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துவிட்டு பின் மறுப்பதால் வீட்டில் உள்ள  அனைவரும் மிகக் குழப்பமான மனநிலையில் இருப்பதாக என்னிடம் வந்து கூறினார். வீட்டில் ஒருவருக்கு ஏற்பட்ட மனநலப் பிரச்சினை, எப்படி மற்ற மூவரின் மனநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது என்பதைத் தெளிவாகக் காண முடிந்தது. இதற்கெல்லாம் காரணமான அவரை,  ‘எனக்கே அவரைப் பார்க்கனும் போல் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவருடைய தங்கையை ஒரு வழியாகப் பேசி அழைத்து வந்து விட்டதாகவும், வெளியில் காத்திருப்பதாகவும் கூறினார். குடும்ப உறுப்பினர்கள் மூவர் மூலம் எதிர்மறையான குணங்களால் மட்டுமே அறியப்பட்ட ஒருவரை முதலில் சந்திக்கும் போது, நான் கேள்விப்பட்ட மோசமான சுபாவங்களுடன் கூடிய ஒரு  நபரைப் பார்க்கப் போவதாக நினைப்பது சரியாக இருக்காது. அவரைப் பற்றி என் மனதில் ஏற்பட்ட முன்முடிவுகளையும், தீர்மானங்களையும் முற்றிலும் ஒதுக்கி விட்டு, திறந்த மனதுடன் எந்த வித கண்டனம் செய்யும் மனப்பான்மையுமின்றி, குறை காணும் மனமற்று, புதியதொரு நபரைச் சந்திப்பது போல் சந்தித்தால் மட்டுமே அவர் பிரச்சினைகளை முழுவதுமாகப் புரிந்து கொண்டு அவருக்கு உதவி செய்ய முடியும். தன்னிடம் உள்ள குறைகளையெல்லாம் கண்டுபிடித்து அதை மாற்றிக் கொள்ள அறிவுரை சொல்வார்களோ என்ற பயத்துடன் வரும் அந்தப் பெண்ணை, சிறு புன்னகையுடன்  வரவேற்று அமரச் செய்து, அவரைப் பற்றிய எந்தவித முன் முடிவுகளும் எனக்கில்லை என்பதை முதலில்  அவருக்குப் புரிய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே, அவரும் தன் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் ஒரு இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று நம்பிக்கை கொண்டு தன் மனதினைத் திறப்பார். அந்த மனநிலையுடனே நான் அவரைச் சந்திக்க, அவரும் தன் பிரச்சினைகளை அழுதுகொண்டே சொல்லத் தொடங்கினார். தன் கல்லூரிக் காலத்தில் தனக்கு நேர்ந்த சில துயரமான சம்பவங்கள் தன் மனதை பாதித்தது முதல் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். முழுமையாக அவர் பிரச்சினைகளைக் கேட்டதில் அவருக்கு மாதவிடாய்க்கு முன் ஏற்படும் மனச்சோர்வு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அதில் இருந்து மீண்டு வருவதற்குத் தேவையான சிகிச்சை அளித்தேன். ‘நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு புத்தகமே. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நமக்கு ஏதாவது ஒரு விஷயம்  இருக்கும்’ என்று  மனநலப் பிரிவு பேராசியர் எனக்கு சொல்லிக் கொடுத்தது ஞாபகத்திற்கு வந்து சென்றது. முன்முடிவுகளின்றி புத்தம் புதிதாக ஒவ்வொருவரையும் சந்திப்பது மட்டுமே, அந்த மனிதரையும்  சூழலையும் முழுமையாக உணர்வதற்கு உதவும்  என்பதே அவரிடம் நான் கற்ற பாடம். நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை, அவர்கள் பற்றிய நம் கருத்துக்களுடனும், முன் முடிவுகளுடனும், அபிப்ராயத்துடனும் பார்க்கிறோம். உண்மையில் ஒரு மனிதனுடைய குணங்கள் என்பது நிலையானவை அல்ல. மாறாக, மாற்றம் என்ற ஒன்று மட்டுமே மாறாதது என்பது போல மனிதனின் குணாதிசயங்களும் பல மாற்றங்கள் கண்டு மாறிக் கொண்டேயிருக்கும் என்றுதான் அறிவியலும்  நமக்குச் சொல்கிறது. ஒரே நதியில் ஒருவர் இருமுறை கால் நனைத்திட முடியாது என்ற ஹெராக்லிடஸ் உடைய புகழ் பெற்ற சொற்றொடர் போல் நாமும், நாம் சந்திக்கும் மனிதர்களும் மாறிக்கொண்டேதான் இருக்கிறோம். ஒரு முறை நாம் சந்தித்த மனிதரை மீண்டும் மறுமுறை நாம் சந்திப்பதேயில்லை. நாமும் மாறியிருப்போம், மற்றவரும் மாறியிருப்பார். முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பிறர் பற்றிய நம் அபிப்ராயங்களை, முடிவுகளை, கருத்துக்களை முற்றிலும் மறந்துவிட்டு, நம் நண்பரோ, உறவினரோ யாராக இருந்தாலும் ஒவ்வொரு தடவையும் திறந்த மனதுடன் புத்தம் புதிதாய்ச் சந்திக்கும் வித்தையைக் கற்றுக் கொண்டால்,  நாம்  வாழும் சிறியதொரு வாழ்க்கை புதியதாகவும் மகிழ்ச்சியாகவும் மிக அழகானதாகவும் இருக்கும். இப்படித்தான் ஒரு முறை என் அருமை  நண்பர் ஒருவரிடம் புத்தம் புதிதாய்ச் சந்திப்பது பற்றிய என் புரிதலை, நுண்ணர்வைப்  பகிர்ந்து கொண்டேன். அதைக் கேட்டு நன்றாகப் புரிந்துகொண்ட அவர், அதற்கு முன்பாக  என்னிடம் வாங்கிய பழைய கடன்களை எல்லாம் முற்றிலும்  மறந்துவிட்டு, தினமும் திறந்த மனதுடன், புத்தம் புதிதாய் என்னை வந்து சந்தித்து புதியதாகக் கடன் கேட்கத் தொடங்கி விட்டார். 😃😃 கட்டுரையாளர்: Dr. ர. நிஷாந்த், D.P.M,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை,தொடர்புக்கு: 9486496169ravi.nishanth79@gmail.com படங்கள்: இணையத்திலிருந்து

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

பயந்த ராமனும் பறக்கும் முத்தமும்

 இயல்பாகவே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் ராமன். அதனால் நட்பு வட்டத்தில் அவனைச் செல்லமாக, ‘தெனாலி ராமன்’ என்றே அனைவரும் அழைத்தனர். யாராவது அவனிடம், “ஏன் ரொம்ப பயப்படுகிறாய்?” எனக் கேட்டால், பயப்படுவதற்குதான் நான் எப்போதும் பயப்படுவதேயில்லை என்று தெனாலி படத்தில் வரும் கமலின்  டயலாக்கைச் சொல்லுவான். வயதோ 28, பி.ஏ. பட்டதாரி. சொந்தமாக வீட்டிற்கு அருகிலேயே E- சேவை மையம் ஒன்றை நடத்தி வந்தான்.  சமீபத்தில்தான் அவனுக்கு காதலில் படுதோல்வி ஏற்பட்டது. ஆம், தான் காதலித்த பெண்ணையே மணம் முடிக்கும்படி ஆகிவிட்டது. மனைவி நிவேதா கல்லூரியில் அவன் கூடப் படித்தவள். அறிவானவள், துணிவானவள். ஒரு முறை அவனை நாய் ஒன்று  துரத்தியபோது, அவனை நாயிடம் இருந்து கடிபடாமல் அலேக்காகத் தூக்கி காப்பாற்றிய போதுதான், அவனுக்கு அவள்  அறிமுகமானாள். அவனை எப்படியாவது தைரியசாலியாக மாற்ற வேண்டும் என்று ராஜாதிராஜா பட நதியா போல் நிறைய அறிவுரைகளைக் கூறிக்கொண்டே இருப்பாள்.  “தைரியம்ங்கிறது பயம் இல்லாத மாதிரி நடிக்கிறதுதான்” என்று அவனிடம் அவள் சொல்ல, “அப்படின்னு சிக்மன்டு ஃப்ராய்டு சொன்னாரா?” என்று கேட்டான்.  “இல்லையில்லை, இதுவும் குருதிப்புனல் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் சொன்னதுதான்” என்றாள் அவள்.  தோழி ஒருத்தியின் ஆலோசனைப்படி அருகில் இருந்த மனநல மருத்துவரிடம் ஒரு நாள் அவனை அழைத்துச் சென்றாள்.  “எதற்கெல்லாம் பயம்?’”என்று அவர் அவனிடம் கேட்க, அவன் மனைவி நிவேதாவைப் பார்க்க, “மனைவிக்கு பயப்படுறதெல்லாம் நார்மல்தான்” என்றார் மருத்துவர். பின் அவன் சொன்ன  அவனுடைய பயங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவனுக்கு மனப்பதட்ட நோய் இருப்பதாகவும் அதற்கு மருந்துகள் பரிதுரைப்பதாகவும் கூற, மருந்து உட்கொள்ள பயந்து அதை எடுத்துக் கொள்ளாமல், அடுத்து அவரைப் பார்க்கச் செல்வதையும் தவிர்த்து விட்டான்.  கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. அப்போது தன் ஈ சேவை மையத்தையும் மூடிவிட்டு வீட்டிற்குள் முடங்கினான் ராமன்.  கொரோனா பரவும் வேகம் அதிகரிக்கவும், இவனுடைய பயமும் அதிகரித்தது. அனைத்து விஷயங்களிலும் முன்னெச்செரிக்கையுடன் நடக்கத் தொடங்கினான். குடும்ப வாழ்க்கையிலும்கூட  சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறவில்லை. மனைவிக்கு பறக்கும் முத்தம் மட்டும்தான்.   எப்பொழுதும்  கொரானா பற்றிய தகவல்களை மட்டுமே அலைபேசியில் தேடித் தேடி படித்தும் கொரோனா பற்றிய செய்திகளை யூ-டியூபில் பார்த்தும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.  இரவு தூங்கும்போதும்கூட முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான். மனைவி கேட்டதற்கு, முந்தைய நாள் இரவு தூங்கும்போது, தன் ஈ சேவை மையத்துக்கு முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக வாடிக்கையாளர்கள் வருவது போலவும் இவன் முகத்திற்கு நேராக வந்து  இருமுவது போலவும் தும்முவது போலவும் பயங்கரக் கனவு வந்ததாகவும், கனவிலும் பாதுகாப்பாக இருப்பதற்காக தூங்கும்போதும் அணிந்து கொள்வேன் என்று அடம்பிடித்து, N95 முகக் கவசத்தை எடுத்து அணிந்து கொண்டான்.  ஒரு ஞாயிற்றுக் கிழமை, கொரோனா முழு முடக்கம்  காரணமாக, கறிக்கடையெல்லாம் அடைத்திருக்கும் என்பதால் அதிகாலையில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு, கோழிக் கறிக்கடைக்காரர் வீட்டின் பின்புறம் சென்று ரகசியமாக பிளாக்கில் கோழிக்கறி வாங்கி வந்து மனைவியிடம் கொடுத்து பிரியாணி செய்யச் சொன்னான். வயிறு முட்ட முட்டையில் இருந்து வந்த கோழி பிரியாணியைச்  சாப்பிட்டுவிட்டு உறங்கிப் போனான்.  மாலை சுமார் 4 மணி இருக்கும், மாடியில் டமார் என்று ஏதோ சத்தம் கேட்க, திடீரென்று முழித்தான். உடல் முழுவதும் ஏதோ இனம் புரியாத கஷ்டத்தை உணர்ந்தான். காய்ச்சலாக இருக்குமோ என்று  வீட்டிலிருந்த தெர்மா மீட்டரை எடுத்து உடலின் வெப்ப நிலையைப் பரிசோதித்தான். 98.4 என்று காட்டியது.  மதியம் சாப்பிட்டது செரிமானம் ஆகாதது போன்ற உணர்வும் மார்பை ஏதோ  அழுத்துவது போன்ற உணர்வும் சேர, அவனுக்கு பயம் கூடியது. படபடப்புடன்  வேர்த்துக் கொட்டியது.  மூச்சு விடுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மூச்சு நின்று இறந்து விடுவோம்’ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்தது. வாங்கி வைத்திருந்த பல்ஸ் ஆக்ஸி மீட்டரை எடுத்து தன் ஆள் காட்டி விரலில் மாட்டி ஆக்ஸிஜன் அளவைப் பரிசோதித்தான். அதில் 94 என்று காட்டியது.  உறங்கிய மனைவியை அவசரமாக எழுப்பி விவரத்தைச் சொல்லி ஒருவேளை தனக்குக் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், அதனால்  உடனடியாகத் தன்னை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினான்.  மருத்துவமனையின் அவசரப் பிரிவை  அடைந்ததும், மருத்துவர் அவனுக்கு  முன்பாக இன்னொரு  நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்த நோயாளி தனக்குச் சாதாரண இருமல்தான் என்றும், தனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வேண்டாமென்றும் மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு மருத்துவர், “சாதாரண இருமலா அல்லது கொரோனா இருமலா என்று பரிசோத்தித்தால் மட்டுமே தெரியும். ஏதோ கொரோனா இருமலென்றால் ஸ்பெஷலாக ஏ.ஆர்.ரஹ்மான் பின்னனி இசையோடு தனியாகத் தெரியும் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறிக்கொண்டிருந்தார்.  அவசர வார்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. அதில் நாட்டில் நிலவும் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டவுடன், தனக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயமும் தொற்றிக்கொண்டது. அடுத்ததாகத் தன்னை அழைத்த டாக்டரிடம், “சார், ஆக்ஸிஜன் வைச்சிருக்கீங்களா? எனக்குக் கொடுத்து காப்பாத்திடுவீங்களா?” என்று பதட்டத்துடன் கேட்டான்.  அதைக் கேட்ட மருத்துவர், “இருக்கிற ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டுல, ஆக்ஸிஜன் கொடுத்து நோயாளியைக் காப்பாற்றுவதைவிட, நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜனைக் காப்பாற்றச் சொல்லிதான் எங்களுக்கு மேலிடத்துல இருந்து ஆர்டர்” என்றார்.   மிரட்சியுடன் அவன் டாக்டரைப் பார்க்க, அவர் “சும்மா விளையாட்டுக்குத்தான்  சொன்னேன்” என்றார். “உங்க பிரச்சினை என்னனு சொல்லுங்கள்” என்று கேட்டார். அவனுக்கு ஏற்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் அவன் பட்டியலிட பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டார். அவனுடைய முழுப் பிரச்சினையையும் கேட்டு விட்டு, O2 அளவு, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சுருள் படம் போன்ற பரிசோதனைகளைச் செய்துவிட்டு, அவனுக்கு உடம்பில் ஒரு கோளாரும் இல்லை, பேனிக் என்ற ஒரு வகை தீவிரமான மனப் பதட்ட நோய்தான் என்றும், பயப்பட ஒன்றுமில்லை என்றும் கூறினார்.  கொரோனா பற்றிய செய்திகளை அதிகம் பார்க்க வேண்டாம் என்றும் தைரியம் வருவதற்கு சில மருந்துகள் தருவதாகவும் அதனை  அவன் தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வர வேண்டும் என்றும் சொன்னார். அப்போது உடனே நாக்கின் அடியில் வைக்க ஒரு மாத்திரையும் கொடுத்தார். மாத்திரையை நாக்கின் அடியில் வைத்து சில நிமிடங்களில் அவனுடைய மனம் அமைதியானது. மருத்துவர் அவனுடைய வாழ்க்கையில் சில ஆரோக்யமான மாற்றங்களைக் கொண்டு வர அறிவுறுத்தினார்.  வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் தினமும் ஆறேழு முறை டீ குடிக்கும் பழக்கம் அவனுக்கு வந்து விட்டிருந்தது, அதைக் குறைத்துத் தினமும் இருமுறை மட்டும் என்று மாற்றிக் கொள்ளச் சொன்னார்.  “உடல் உழைப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்கிறீங்க. நீங்களே சொந்தமா உங்க பல்ல விளக்கிக்கிறீங்க. நீங்களே சொந்தமா சோப்பு போட்டு குளிச்சிக்கிறீங்க. நீங்க தூங்கும்போது நீங்களே சொந்தமா புரண்டு படுத்துக்கிறீங்க. அதெல்லாம் உடற்பயிற்சிதான் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். கட்டாயம் ஒரு முக்கால் மணி நேரமாவது நடைப் பயிற்சிக்குப் போங்க. லாக்டவுன் காலத்துல புது ஹோட்டல் திறக்கும்போது, ஐந்து புரோட்டா வாங்கினால் ஐந்து புரோட்டா இலவசம்னு கூவிக் கூவிக் கூப்பிடுறாங்க. அதெல்லாம் வாங்கிச்  சாப்பிட்டு உடம்பக் கெடுத்துக்காம ஒழுங்கா காய்கறிகள், பழங்கள்னு சாப்பிடுங்க. மொபைல் ஃபோனையே எப்பொழுதும்  நோண்டிக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலாக ஏதாவது புத்தகம் எடுத்துப் படிங்க”.  இப்படியாக மருத்துவர் சொன்ன அறிவுரைகளைச் சரியாக பின்பற்றியதாலும் மருந்துகளை சரியாகச் சாப்பிட்டு வந்ததினாலும் அவன் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல மன நலத்துடன்  எந்த பயமும் இல்லாமல் தைரியசாலி ராமனாக மாறிவிட்டான் தெனாலி ராமன். Dr. ர. நிஷாந்த்,மனநல மருத்துவர்,அருப்புக்கோட்டை. படங்கள்: இணையத்திலிருந்து

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

கம்பெனி டைரக்டரா? டிரில் மாஸ்டரா?

நடக்கலாம் வாங்க – பகுதி 5 ஒருவர் நடக்க ஆரம்பிக்கும்பொழுது நிறைய சுவாரஸ்யங்களை அடுக்கிக்கொண்டே போனால், அவர்களது கண்களுக்கு நாம் மை டியர் மார்த்தாண்டன் ஐடியா மணி, கவுண்டமணி போல் தெரிவோம். இங்கு சில பிரச்சினைகள் உள்ளன. அது போல் சில புரிதல்களும் தேவைப்படுகின்றன.  ஒரு பிரச்சினை குறித்து ஒரு அனுபவசாலியிடம் போய்க் கேட்கும்பொழுது, அவர் தன் அனுபவத்தின் வாயிலாகப் பாடம் நடத்துவார். அது பிரச்சினையோடு இருப்பவனுக்கு எட்டாத தூரம் ஆகிவிடும். அவரிடம் கேட்டதன் நோக்கம் என்ன? பிரச்சினை தீரவேண்டும் என்பதுதான். அப்படியென்றால் பிரச்சினை இருப்பவரின் பார்வையில் இருந்து பார்க்கவேண்டும்.  புதிதாக நடக்க இருப்பவர்களுக்கு எங்கெல்லாம் அலுப்பு ஏற்படலாம்? அதை எப்படிக் களையலாம்? என்று விவாதிப்பதே சுவாரஸ்யங்களை ஏற்படுத்த முதல் படி. காலையில் எழுவது சிலருக்கு முடியாத காரியமாக இருக்கலாம்.  உழைப்பாளி படத்தில் ரஜினி, “எனக்கு என் ட்ரஸ் வேணும்” என்று கடைக்காரரை பாடாய்ப் படுத்துவார். அதுபோல், காலையில் வேகமாக எழும்பினால்தான் நடப்பேன். இல்லாவிட்டால் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” என்று கன்னம் தெறிக்க பக்கோடா சாப்பிடும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். நடப்பது என்று முடிவாகிவிட்டால் காலை, மாலை, மதியம், இரவு என்று எந்த நேரத்திலும் நடக்கலாம்.  எனக்குத் தெரிந்த ஒரு மருத்துவர் இருக்கிறார். இரவு நோயாளிகளைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போக இரவு 12 ஆகிறதாம். காலை எழ எட்டு ஆகிறதாம். ஒன்பது மணிக்கு மறுபடியும் நோயாளிகளைப் பார்க்க வருகிறார். கையில் ஸ்மார்ட் வாட்ச்சை அவரது மருமகள் கட்டிவிட்டிருக்கிறார். ஸ்டெப்ஸ் கவனிக்க ஆரம்பித்த பிறகு, அவர் சொல்கிறார், ” பழனிக்குமார், நடக்குறதுக்குனு எனக்கு தனி டைம் இல்ல. ஸோ, நோயாளிகளைப் பார்க்குற நேரத்துல நான் உட்காருறதே இல்ல. தூரமா நோயாளிகளை உட்காரவச்சுட்டு நானே போய்ப் பாக்குறேன். எனக்கு அது வசதியா இருக்கு. மதியம் 2 மணிக்குள்ள 2000 ஸ்டெப்ஸை முடிச்சிடறேன்” என்றார்.  எனக்குத் தெரிந்த ஒரு பிசினஸ் மேன் இருக்கிறார். காலை ஏழு மணிக்கெல்லாம் கல்லாவில் உட்கார்ந்துவிடுவார். மதியம் மூன்று மணிக்கு, கடையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து வருகிறார். வண்டி இல்லாமல் இல்லை, நடப்பதற்காக. 15000 ஸ்டெப்ஸ் எட்டவில்லை என்று இரவு பதினோரு மணிக்கு தோழர் கிருத்திகா தரன் இலக்கை எட்டும் நோக்கில்  நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார். “மனசு இருந்தால் மார்க்கபந்து” என்று சொல்லிச் சென்றிருக்கிறார் தோழர் க்ரேஸி மோகனார்.  * கூட நடப்பவர் வேகமாக/ மெதுவாக நடக்கிறார். இது ஒரு தனிப் பிரச்சினை. குழுவாய் சேர்ந்து நடக்க ஆரம்பிப்பார்கள். அது ஒருவகையில் புது வகையான ஊக்கத்தைத் தரலாம். ஆனால், சமயத்தில் அதுவே கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். ‘நம்மால் வேகமாக நடக்க முடியவில்லை, நம்மால் இவர்களது வேகம் தடைபடுகிறதே, நம்மால் அவர்களுக்கு இவ்வளவு சுமை வேண்டுமா?’ என்று விக்கிரமன் படத்து ஹீரோ போல் ஏகப்பட்ட சென்டிமெண்ட் மூளைகளை வைத்துக்கொண்டு இருப்பதால் இப்படிலாம் யோசிப்பார்கள். நடைப் பயிற்சியில் ஒத்த சிந்தனையோடு நடக்கக்கூட ஆள் கிடைப்பார்கள், ஒத்த வேகத்தில் நடக்கும் ஆள் கிடைக்கமாட்டார்கள்.  எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு. வெளிநாட்டுக்காரன் சேர்ந்தே இருந்தா உருப்புடுவான். ஆனா பாரு டூர் ங்குற பேர்ல தனித்தனியா சுத்துவான். இந்தியாக்காரன் தனியா இருந்தாத்தான் உருப்புடுவான். ஆனா பாரு, உச்சா போகக் கூட ஆள் கூப்ட்டு திரியுறான்” என்பார்கள். அது தான் உண்மை. நடக்க ஆசைப்படுபவர்கள் உடன் நடந்து வருபவரின் வேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாவிட்டால் உங்கள் பயிற்சியை நிறுத்த முயலாதீர்கள். அவரவர்களின் வேகம், அவர்வர்களின் உடல் நிலையைப் பொறுத்தது. நீங்கள் உங்கள் உடல்நிலைக்கேற்றபடி வேகத்தை நிகழ்த்தலாம்.  * நடப்பதற்குத் தோதான இடம் இல்லை சின்னக் குழந்தைகளை முதல் நாள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச்செல்லும் சில காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அவர்களில் தர தரவென்று குழந்தைகளை இழுத்துச்செல்லும் பெற்றோர்களும் உண்டு. அப்படி மனதை நீங்கள் தயார்படுத்தி இழுத்துச்சென்றால் ஒழிய, இப்படி யோசிப்பவர்களால் நடக்க இயலாது.  ஒரு விசயம் தானாய் நடக்காது. நடத்தித்தான் ஆக வேண்டும் என்று எங்கள் துறையில் சொல்வார்கள். அதைத்தான் நடப்பதற்கும் சொல்கிறேன்.  இவை எல்லாம் பொதுப்புத்தியில் உள்ளுக்குள் இருக்கும் தடைகளாகச் சொல்கிறேன். இவற்றிலிருந்து வெளியே வந்தால்தான் நடப்பதில் சுவாரஸ்யங்களைக் கூட்டமுடியும். ‘முதலில் படுக்கையிலிருந்து வெளியே வா நண்பா, பிறகு நடக்க பாதை பிறக்கும்’ என்பது தான் ஸ்கெட்ச்சே. இப்பொழுது ஒரு வகையில் நடக்க சாலைக்கு வந்துவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இனி சுவாரஸ்யங்களை நீங்களே ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.  என்னுடைய அனுபவத்திலிருந்து அதைத் தொடர்கிறேன்.  11 வருடங்களுக்கு முன் என் கம்பெனியின் இயக்குனரிடம் முக்கியமான விசயங்கள் பேச அனுமதி கேட்டால், வேலை நேரத்தில் தொந்தரவு வேண்டாம் என்று காலையில் அவர் நடைப்பயிற்சி நேரத்தில் அழைப்பார். அவர் நடப்பார்.பல ஆண்டுகளாக வாக்கிங் செல்பவரின் வேகத்திற்கு என்னால் நடக்க முடியாது. கிட்டத்தட்ட அவருடன் நான் ஓடியிருக்கிறேன்.   “என்னங்க, நடக்க முடியலையா உங்க வயசுக்கு?” என்பார். ‘என்னடா, இந்த மனுஷன் இப்படி நடக்குறாரு!’ என்று வியந்திருக்கிறேன் . நான் ஆலோசனை செய்யப்போகும் விசயத்தைவிட அவருடன் ஓடுவதே எனக்குப் பெரும் சாதனையாய் இருந்தது. காலையில் மீட்டிங் என்ற பெயரில் டிஷ்கஷனா? இல்லை உடற்பயிற்சி ஆசிரியரின் ட்ரில்லா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் நான் நடைப் பயிற்சி செய்ய ஆசைப்பட்டபோது அதே இடத்தில் நடக்கச்செல்ல மனதில் ஒரு சங்கடம். ‘என் கூட நடக்க வா’ என்று அவர் அழைத்துவிட்டால், எப்படி அவர் வேகத்திற்கு ஈடுகொடுப்பது? என்று. அதற்காக சுவாரஸ்யமான ஒன்றைச் செய்தேன்.  சுவாரஸ்யங்களுக்காகக் காத்திருங்கள். இவை என் நடைக்குறிப்புகள். கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

அற்புத விளக்கே கிடைத்தாலும்…

நடக்கலாம் வாங்க – பகுதி 4 சுவாரஸ்யங்களுடன்தான் நடக்கிறீர்களா?  நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் அதில் ஒன்ற முடியாது. நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள். சுவாரஸ்யங்களை எப்படியெல்லாம் புகுத்தலாம் என்று நண்பர்கள் கேட்கிறார்கள். சுவாரஸ்யங்களுக்கு  நீங்களே சில கேள்விகளைக் கேட்கலாம். உதாரணத்திற்கு,  * நடப்பதற்காக ஒதுக்கும் நேரத்தில் நீங்கள் சுதந்திரமாக இருக்கிறீர்களா? * வாக்கிங் நேரத்திற்கு என்று உங்களது தனிமையையோ அல்லது உடன் நடப்பதற்கென்று சில நடக்கும் நண்பர்களையோ வைத்திருக்கிறீர்களா? * நீங்கள் நடப்பதன் காரணத்தை அறிந்திருக்கிறீர்களா? * அப்படி அறிந்திருந்தால் அந்தக் காரணத்தை நோக்கி நீங்கள் எவ்வளவு நகர்ந்திருக்கிறீர்கள் என்று கவனிக்கிறீர்களா? *உங்களுடைய நடையின் வேகம், நடக்கும் தூரம் இவற்றைக் கணித்து வாரத்திற்கு ஒரு முறை உங்களுடைய உச்சபட்ச வேகம் எது, அதிகபட்ச தூரம் எது  என்று கணக்கிட்டிருக்கிறீர்களா? * நீங்கள் நடக்கும் வேகம், தூரம் இவற்றிற்கும் உங்கள் உடல் நலத்திற்கும் நேரடித்தொடர்பு உள்ளதா என்று கவனித்திருக்கிறீர்களா? அதாவது, உங்கள் உடல் நலனுக்குத் தேவையான அளவு கலோரிகள் சரியான முறையில் எரிக்கப்படுகிறதா? அல்லது அது உங்களது comfort zone க்கு வெளியே இருக்கிறதா? *நீங்கள் நடக்க ஆரம்பிக்கும் நேரம் மற்றும் நடையை முடிக்கும் நேரம் இவற்றுடன் உங்களது வேகத்தை ஒப்பிட்டு எத்தனை அடிகள் நடந்திருப்பீர்கள் என்று கணிக்க முடிகிறதா? * ஒவ்வொருநாளும் நடைப்பயிற்சி முடிவில் உங்கள் உடலில் ஏற்படும் புத்துணர்வுகளையோ அல்லது அயற்சிகளையோ பிரித்தறிய முடிகிறதா? * நீங்கள் புதிதாக நடக்க ஆரம்பித்த நேரத்தில் இருந்த தூர – நேர விகிதத்திற்கும் ,நடக்க ஆரம்பித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இருக்கும் தூர நேர விகிதத்திற்கும் வேறுபாடு உள்ளதா?  * நீங்கள் நடந்த தூரத்தையும் வேகத்தையும் உங்களுடன் நடப்பவர்களுடனோ, நடைப்பயிற்சி செய்யும் மற்றவர்களுடனோ கலந்துரையாடி அவர்களது தூரத்தையும் வேகத்தையும் ஒப்பிட்டு அறிந்திருக்கிறீர்களா?  * உங்கள் உடல் எடையை எவ்வளவு குறைக்கவேண்டும் என்ற இலக்கோடு, நீங்கள் நடக்கும் வேகம் ஒத்துப்போகிறதா? இது போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.  நான் நடக்கும் வாக்கர்ஸ் க்ளப்பில் நரம்பியல் பாதிப்பிற்கு உள்ளான ஒரு பெண் வந்துகொண்டிருந்தார். அவரால் ஒரு அடியை எடுத்து வைக்கவே அவரது கணவரோ அல்லது அவரது மகனோ உடன் இருக்க வேண்டும். ஒரு கிலோமீட்டர் சுற்றி வர அவருக்கு ஒரு மணி நேரம்கூட ஆகும். ஆனால், அவர் தளராமல் தினம் நடந்தார். ஒரு மாதத்தில் தனியாக நடந்தார். அடுத்த மாதத்தில் அவரது வேகம் கூடியது. ஒரு வருடத்தில் அவர் தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்குகிறார். அவரது உடல்நிலையால் எவ்வளவு முடியும் என்று அவரோ அவரது மருத்துவரோ கணித்து அதை நோக்கி நகர்கிறார். ‘நடந்தாக வேண்டும்’ என்ற கட்டாயம் வரும்பொழுது அவர் அதைச் செய்கிறார்.  இங்கு யாரும் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், இலக்கு உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்.  இத்தனைக் கேள்விகள் கேட்கவேண்டுமா? இப்படித்தான் சுவாரஸ்யங்கள் பிறக்குமா என்று யோசிப்பீர்கள்தானே? எனக்குத் தெரிந்த ஓர் உறவினர் சங்கரன் கோவிலில் உண்டு. வயிறு பெரிதாகிக்கொண்டே போனது. “எடை கூடுது மாப்ள. வயிறு எனக்கு முன்னாடி போய்க்கிட்டு இருக்கு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார். அவரது மன நிலைக்கு, நேரடியாக டயட் என்றால் தெறித்துவிடுவார் என்பதால் மெதுவாக “வாக்கிங் போறீங்களா?” என்றேன்.  “எப்பவாவது போவேன்” என்றார். “தினமும் போங்க” என்றேன்.  அதற்குச் சொன்னார், “மாப்ள, சங்கரன் கோயில்ல தண்ணி எப்ப விடுறான்னே தெரியாது. சமயத்துல பத்து நாளைக்கு ஒருவாட்டிதான் தண்ணி விடுவான். அப்ப ஆபிஸ்க்கு லீவு போட்டுலாம் தண்ணி எடுப்பாய்ங்க. வீட்ல தண்ணி வரப்ப லீவு போடலாட்டி டைவர்ஸ் வரக்கூட போயிரும் தம்பி. அப்ப எப்டி வாக்கிங் போறது?” என்றார்.  உங்களுக்கு உங்கள் comfort zone க்கு உள்ளேயே இருக்க வேண்டும். ஆனால் உடல்நிலையும் நன்றாக இருக்க வேண்டும். ஊதவும் கூடாது. சிக்ஸ் பேக் வச்ச  சல்மான் கான் மாதிரி இருக்க வேண்டும் போன்ற மந்திரத்தில் மாங்காய் விழ வைக்கும் ஆசைகள் எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. அற்புத விளக்கே கிடைத்தாலும் நீங்கள் அதைத் தேய்க்க வேண்டும்.  அது சரி, இத்தனை சுவாரஸ்யங்களைச் சொன்னால், ‘எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்?’ என்று புதிதாய் நடக்க இருப்பவர்கள் யோசிக்க மாட்டார்களா? யோசித்தபடியே நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து

WHERE ARE WE?

WHERE ARE WE?

நடக்கலாம் வாங்க – பகுதி 3 உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை எவை என்பதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். கட்டுரைக்குள் செல்லும் முன்பாக அவற்றை மீண்டும் ஒருமுறை பார்ப்போம்.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * நடக்கும் நேரத்தில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?   *  நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இத்தனைக் கெடுபிடிகளுடன் அல்லது கணக்குகளுடன் நடக்க வேண்டுமா என்றால் ஆம், அப்படித்தான். எல்லாமே அப்படித்தான்.  ஒரு தங்க நகை வாங்கச் செல்கிறீர்கள். மில்லிகிராம் கூட அங்கு காசுதான். கடைக்காரர் பணம் வாங்கிவிட்டு, நகையைக் கையில் தரும்பொழுது மூன்று மில்லி கிராம் குறைந்திருக்கிறது என்று சொன்னால் ஒத்துக்கொள்வோமா?  மாட்டோம் அல்லவா? அதைப்போல எல்லாமே ஒரு கணக்குத்தான்.  உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் முதலில், தான் தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதைக் கணக்கில் வைத்துக்கொள்ளவேண்டும். தாங்கள் நடக்கும் தூரத்தைக் கணக்கில் வைத்தால்தான் ‘சரியான அளவில் நடக்கிறோமா’ என்று தெரியும்.  உதாரணத்திற்கு நீங்கள் தினமும் நடைப்பயிற்சி என்ற பெயரில் நடப்பது, உங்கள் வீட்டிலிருந்து  தெரு முனை வரை என்று எடுத்துகொள்வோம். அதன் தொலைவு 100 மீ என்றால், போக வர 200 மீட்டர். இதைத்தான் வழக்கமாகச் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். இதை எப்படி அதிகப்படுத்தலாம் என்று யோசிக்கவேண்டும். ஒரு தெருவினுள் நுழைந்து அடுத்த தெருவின் வழியாக வந்து பார்த்து தூரத்தை அதிகப்படுத்தலாம்.  அடுத்ததாக நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு. அதாவது, நீங்கள் வீட்டிலிருந்து தெருமுனை வரைதான் நடைப்பயிற்சி செய்கிறீர்கள் என்றால் திரும்பவும் வீடு திரும்பும் வரையான நேர அளவு கண்காணிக்கப்படவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஊர்ந்து செல்கிறீர்கள் என்றால் முந்தைய பகுதியில் சொன்னது போல் அதற்குப் பெயர் ‘உல்லாச உலா’. உதாரணத்திற்கு 200 மீ சென்று திரும்ப பத்து நிமிடங்கள் ஆகிறதென்றால் அது மோசமான நடை. உங்கள் இலக்கு உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிக்கப்படவேண்டும். அதற்கேற்றபடி நடக்க வேண்டும். உங்களது வேகம் துரிதப்படுத்தப்படவேண்டும்.  இதில் நாம் கவனிக்கவேண்டிய இன்னொன்று, நம் உடலில் ஏற்படும் மாற்றம். சிலருக்கு நடக்கையில் மூச்சு வாங்கலாம். சிலருக்கு நீரிழப்பு ஏற்பட்டு தாகம் ஏற்படலாம். சிலருக்கு முழங்கால் வலி வரலாம். ஒருவேளை நடக்க முடியாத அளவிற்கு உடல் தொந்தரவு செய்யும் என்றால் அன்றைய பயிற்சியை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துவிட்டு தக்க ஆலோசனைகளுடன் மறு நாள் நடக்கலாமே தவிர, எதற்காகவும் பயிற்சியை நிறுத்தக்கூடாது.  ஆதலால், நம் உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றைக் கவனிக்கவேண்டும்.  உடல் நமக்குத் தரும் சமிக்ஞைகளை எப்படிப் புரிந்துகொள்வது என்று கேட்டு யாரும் கம்பெனியின் கேட்டை ஆட்டவேண்டாம். அது வேறு டிபார்ட்மெண்ட்.  இவற்றையெல்லாம் கவனித்து ஒருவாரம் நடக்கிறீர்கள் என்றால், அடுத்து நீங்கள் உங்களது ஸ்மார்ட் ஃபோன் மூலம் நீங்கள் நடக்கும் அடிகளைக் கணக்கிட வேண்டும். அதன் மூலம் ஒரு இலக்கு வைத்துக்கொண்டு அதனை அடைய முயற்சி செய்யவேண்டும்.  நடக்க ஆரம்பிக்கும் புதிதில் 5000 அடிகள் என்று இலக்கு வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுதுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நடைப்பயிற்சியின் நேரத்திலோ அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள் தூரத்தை உத்தேசமாகக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். (இந்த விசயத்தில் என்னைச் சொல்லவேண்டும். ஒவ்வொரு அடியையும் எண்ணியிருக்கிறேன். நடப்பதில் தீவிரவாதம் வகை) ஒரு வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நடக்கும் தூரத்தை, நேரத்தை, அடிகளை மறு பரிசீலனை செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களது தெருமுனை வரைதான் செல்கிறீர்கள் என்றால், 200 மீட்டர் தூரத்தை அடுத்த தெருவின் வழியாகச் சென்று திரும்புவதன் மூலம் 200 மீட்டரை 400 மீட்டராக உயர்த்தலாம். பத்து நிமிடத்தில் 200 மீட்டர் என்பதை பத்து நிமிடத்தில் 300 மீட்டராகவோ அல்லது 400 மீட்டராகவோ மாற்றலாம். நடக்கும் அடிகளை இன்னும் உயர்த்துவதன் மூலம் உங்களது உடல் உழைப்பு அதிகரித்து அதிகமான கலோரிகள் எரிக்கப்பெறும். இதன் மூலமாக உடல் எடை குறையவோ இலகுவாக மாறவோ செய்யலாம். உங்களது நடைப்பயிற்சியை இப்படி கவனிப்பதன் மூலம் உங்கள் உடல் எடை பற்றியும் கவனம் கொள்கிறீர்கள்.  இதில் அனைவருக்கும் வரும் ஒரு சந்தேகம், எந்த நிலையில் நான் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது எந்த நிலையில் என் தூரத்தை அதிகப்படுத்தவேண்டும் என்பது. நீங்கள் செய்யும் நடைப்பயிற்சி அலுக்கும்படி இருக்குமேயானால் உங்களால் அதைத் தொடர்ந்து செய்யமுடியாது. எந்த வேலையையும் ஆர்வம் இல்லாமல் செய்தீர்கள் என்றால் உங்களால் அதில் ஒன்ற முடியாது.  நீங்கள் ஒரு வேலையில் ஒன்ற வேண்டும் என்றால் அதில் பல புதுமைகள் புகுத்தப்படவேண்டும். அதன் மூலம் நீங்களே சுவாரஸ்யங்களை ஏற்படுத்துவீர்கள். சுவாரஸ்யங்கள் இருக்குமேயானால் அங்கு ஆர்வம் ஏற்படும். உங்களது ஆரவம் உங்கள் நடைப்பயிற்சியில் இருக்க வேண்டுமேயானால், நீங்கள் மேற்கொள்ளும்  நடைப்பயிற்சியில் சுவாரஸ்யங்களைப் புகுத்துங்கள்.  சொல்வது எல்லாம் சரி, அதை எப்படிச் செய்வது என்று சிலர் யோசிக்கலாம். சிலருக்கு அந்த யோசனையே இல்லாமல் செய்ததையே செய்துகொண்டிருப்பார்கள். செக்கில் மாடுகளைக் கட்டி ஆட்டுவார்கள். மாட்டை அங்கு நிறுத்திவிட்டால் போதும் அது சுற்றிக்கொண்டே இருக்கும். எண்ணெய் வருகிறதா இல்லையா என்ற கவலை மாட்டிற்கு இருக்காது. அதைத்தான் ‘செக்கு மாடு கணக்கா’ என்பார்கள். ஒரே விசயத்தை எந்தப் பலனையும் ஆராய்ந்து பார்க்காமல் செய்துகொண்டிருந்தால் நேர விரயம்தான் ஆகுமே தவிர பலன் கிடைக்காது. அவ்வப்போது நாம் என்ன நிலையில் இருக்கிறோம் [ WHERE ARE WE ]என்பதை சுயபரிசோதனை செய்யவேண்டும்.  அதை நீங்கள் நடந்து காட்டுவதிலும் சரி, வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதிலும் சரி. யோசியுங்கள் WHERE ARE WE? இப்போதைக்குத் தொடர்ந்து நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள்

நடக்கலாம் வாங்க : பகுதி 2 ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா? என்று நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. உடல் எடை குறைப்பு என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. அதே நேரத்தில், நாம் நினைக்கும் அளவிற்கு மிக மிக எளிதானதும் அல்ல. கமலஹாசன் ட்வீட் போல் இருக்கிறது என்று யாரும் எண்ண வேண்டாம்.  இரண்டு நாட்கள் கூட போதும் ஒரு கிலோ எடை கூட. ஆனால் ஏறும் எடையைக் குறைக்க கண்டிப்பாக மெனக்கெடவேண்டும். இந்தச் சொற்றொடரை நம்மில் பலரும் சொல்லியிருப்போம் அல்லது யாராவது சொல்லிக் கேட்டிருப்போம். அது உண்மையும் கூட.  உடல் எடைக் குறைப்பிற்கு நடைப்பயிற்சி உதவி செய்யுமா என்றால் உதவி செய்யும். ஆனால் உடல் எடை குறைப்பிற்கு நீ என்ன செய்கிறாய் என்று யாரேனும் கேட்டால் வெறுமனே நடக்கிறேன் என்று நீங்கள் முடிவு எடுத்திருந்தால் உடல் எடை குறையாது. மறுபடியும் கமலஹாசனின் ட்வீட்டை ஞாபகப்படுத்த விரும்பவில்லை. நேராக விசயத்திற்கு வருவோம். நடைப்பயிற்சி உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று. ஆனால் அதற்கான சில முக்கிய முயற்சிகள் உண்டு.  உதாரணத்திற்கு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சன்னதிக்குள் நுழைய பெரிய வரிசை காத்திருக்கும். சன்னதிக்குள் இருந்து நீளும் அந்த வரிசை இட வசதிக்காக சன்னதியைச் சுற்றிச் சுற்றியே இரண்டு மூன்று வரிசைகள் செல்லும். வரிசை மெதுவாக நகரும்படி மேலாண்மை செய்வார்கள். இந்த இடத்தில் திருப்பதி கோயிலை நான் மேற்கோள் காட்டவில்லை. ஏனெனில், அங்கு சில சமயம் ரஜினி படத்திற்குத் திறந்துவிட்டது போல் எல்லோரும் ஓடுவதைக் கண்டிருக்கிறேன். மீனாட்சியம்மன் கோயிலில் அப்படி அல்ல. ஊர்ந்து ஊர்ந்து செல்வார்கள். அதைப்போலவே சிலர் வாக்கிங் வருவார்கள். அதற்குப் பெயர் நடைப்பயிற்சி அல்ல, ‘உல்லாச உலா’.  எந்த வேலையும் இல்லாத போது உங்கள் வீட்டின் சமையலறையிலிருந்து படுக்கை அறைக்குச் செல்லும் தொனியில் செல்வது எல்லாம் நடைப்பயிற்சியில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. வேகமாக நடப்பது என்பது வேறு, நடப்பது என்பது வேறு. ஊர்வது என்பது வேறு. எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதற்கேற்ற பலன்தான் கிடைக்கும்.  அப்படி நடப்பவர்கள், ஊரும் வேகத்தில்  ஒரு இருபது நிமிடம் நடப்பார்கள். இப்படி ஒரு வாரம் நடந்துவிட்டு, உடல் எடையைச் சோதிப்பார்கள். “ஒரு வாரம் நடந்திருக்கேன். எடை குறையவில்லை. நடந்தா எடை குறையாது போல” என நடப்பதை நிறுத்திவிடும் ஆட்களும் உண்டு.  எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் இருக்கிறார். உடல் எடை கூடிவிட்டதென நடக்க ஆரம்பித்தார். முதல் நாளே என்னைப் பார்த்து அதைச் சொன்னார். அவரது நடையின் வேகத்தைக் கணித்து அவரிடம் நான் எதுவும் சொல்லவில்லை. சரியாக 2 கிமீ நடப்பார். முடிந்ததும் அமர்ந்துவிடுவார். நண்பர்களுடன் அரட்டை அடிப்பார். நடந்த நேரத்தை விட அரட்டையின் நேரம் கூடுதலாக இருக்கும். சரியாக ஐந்து நாட்கள் கழித்து உடல் எடையைச் சோதித்திருக்கிறார். அன்றைய தினம் அவரது விதி என்னுடன் நடக்க விதித்திருந்தது. உடல் எடை குறையவில்லை. “நடந்தாலும் என் உடம்பு குறையாதாம்” என்றார். “ஏன்?” என்றேன். “என் உடம்பில் கொழுப்பு எல்லாம் கெட்டியாய் மாறிவிட்டதாம். அது இனி குறையாதாம். நடப்பது வீணாம்” என்றார். “உங்களுக்கு இதை யார் சொன்னா?” என்று கேட்டேன். இவருடைய நண்பர், இவரை விட எடை கூடுதலான ஒருவர். அவர் இவருடன் நடக்க துணைக்கு இவர் அழைத்து வந்தவர். இவர் 2 கி மீ நடப்பவர். அவர் ஒரு கி.மீ மட்டுமே நடப்பவர். இவர் நடந்து முடிக்கும் வரை காத்திருந்து இவருடன் வீடு திரும்புபவர். இது தான் சேதி. நடக்க விருப்பம் இல்லாத ஒருவர் நடப்பவருடன் இருந்தால் இது தான் கதி. இதில் ட்விஸ்ட்டே, ‘உடம்பில் கொழுப்பு எல்லாம் கட்டியாகி விட்டது. இனி கரையாது. நடக்குறது வேஸ்ட்டு” என அள்ளிப்போட்டதுதான்.  அந்த ஐந்து நாட்களில் ஒரு நாள் கூட வியர்த்தது இல்லை என்று என்னுடன் 1.7 கிமீ நடந்து முடித்ததும் கூறியவருக்கு உடல் முழுக்க வியர்வை. நீங்க வந்தது உலா இல்லண்ணே. நடக்கனும்னா இப்படி நடங்க, இல்லாட்டி கொழுப்பு குறையாது என்றேன்.  உண்மையில், நீங்கள் நடக்க வேண்டும் அதன் மூலம் நல்ல உடல் நிலையைப் பெறவேண்டும் என்று தீர்மானித்தீர்கள் என்றால் முதலில் நீங்கள் தூக்கி எறியவேண்டியது உங்கள் பழைய டீ ஷர்ட், ஷூ, பிஞ்ச செருப்பு இவையெல்லாம் இல்லை. உங்களை நடக்க விடாமல் தடுக்கும் எதிர்மறை எண்ணங்களையும் நண்பர்களையும்தான்.  உடல் வியர்க்கும் அளவிற்கு நடக்க வேண்டும், உடலுக்கு உடல் வியர்க்கும் அளவு மாறுபடும். அறிவியல் ரீதியாகச் சொல்லவேண்டுமானால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் வண்ணம், உங்கள் உடல் தசைகள் அனைத்தும் செயல்படும் விதம் நீங்கள் நடக்கலாம். வேகமாக, வேகமாக என்று நினைத்தபடி நடக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேகம் வேண்டும். சிலரது உடல் நிலையை மனதில் வைத்து அதற்கேற்றபடி உங்கள் வேகத்தை டிசைன் செய்துகொள்ளலாம்.  உடல் எடையைக் குறைக்க விரும்பி நடக்கிறீர்கள் என்றால் முதல் பத்து நாட்களில் நீங்கள் கவனிக்க வேண்டியவை.    * உங்கள் நடக்கும் தூரம் எவ்வளவு?   * உங்கள் நடக்கும் தூரத்திற்கானக் கால அளவு எவ்வளவு?   * உங்கள் நடக்கும் அளவில் உங்கள் உடல் அளவில் ஏற்படும் மாற்றம் என்னென்ன?   * உங்கள் நடக்கும் தூரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் காலடிகள் (ஸ்டெப்ஸ்) எவ்வளவு? இது தவிர அவரவர் தங்களது குடும்ப மருத்துவர்களிடம் ஓர் ஆலோசனை, முடிந்தால் இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு போன்ற சோதனைகள் செய்து பார்த்தீர்கள் என்றால் அதற்கேற்றபடி வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். இதைக் கண்டிப்பாகச் செய்யவேண்டுமா என்றால் தேவையில்லைதான். ஆனால், ஆரோக்கியம் என்று கருத்தில் கொண்டால் அதையும் செய்து பார்ப்பதுதான் நல்லது.  இதை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். புதிதாய் நடக்க ஆரம்பித்தவர்களுக்கு உடல் அசதியும், சோம்பேறித்தனமும், நடக்க விரும்பாத நண்பர்களின் ஏளனமும், தூக்கச் சுகமும் உங்களை நடக்க விடாமல் தடுக்க முற்படும். அவர்கள் எல்லாம் மேற்சொன்ன விசயங்களில் கவனம் செலுத்தும்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் நடையில் நீங்கள் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள்.  சரி, இதை எல்லாம் கணக்கு செய்துதான் நடக்க வேண்டுமா என்று ஏளனம் செய்வீர்கள்தானே? என்னையும் பார்த்து ஏளனம் செய்திருக்கிறார்கள்.  ஒரு விசயம் தான். முள்ளைப் பிடித்தாலும் முழுதாய்ப் பிடியுங்கள். நடக்க வந்தால் நடந்து காட்டுங்கள்.  வாங்க நடக்கலாம்.  கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை. படங்கள்: இணையத்திலிருந்து 

நடக்கலாம் வாங்க

நடக்கலாம் வாங்க

ஏன் நடக்க வேண்டும்? க்ளப் ஹவுஸ் செயலியின் ‘உணவும் உள்ளமும்’ ஹவுசில் கொரோனா தொற்று சமயத்தில் நோய்த்தொற்று சம்பந்தமாக சில சாமான்யர்கள் மருத்துவர்களிடம் நேரடியாக சந்தேகங்களைக் கேட்டனர். பிறகு தடுப்பூசி பற்றி கேட்டனர். நாளடைவில் உடல்நிலை சம்பந்தமாகவும் ஆரோக்கியமாகவும் பேச குழு உறுப்பினர்கள் சேர்ந்தனர். இதில் பலர் ‘நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது’ என்றும், சிலர் ‘நடைப்பயிற்சியை முறையாகத் தொடர முடியவில்லை’ என்றும் சிலர் ‘நடப்பதற்கு முன் என்ன செய்யவேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார்கள். இவற்றை எல்லாம் முன்வைத்து, எப்பொழுது எனக்கு வாக்கிங் போகும் பழக்கம் வந்தது என்பதை ஞாபகப்படுத்தவே ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை நடைப்பயிற்சி என்பது ஒரு கட்டத்தில் போதையாயிருந்தது. நடப்பது என்பது போதையாகவே தொடரவும் செய்கிறது. “உனக்கு மோசமான மன நிலை இருந்தால் ஒரு முறை நடந்து செல். இன்னும் மோசமான மனநிலை தொடர்கிறதா மறுபடியும் நடந்து கொண்டே இரு” என்பது ஹிப்போக்ரேட்ஸ் சொன்ன ஞாபகம். நான் வாக்கிங் செல்ல ஆரம்பித்த நான் எதிர்கொண்ட சவால்கள் என்று சில இருந்தன. அவை பொத்தாம் பொதுவாய் பலருக்கும் இருந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் நடைப்பயிற்சியைத் தொடரும்பொழுது ஏற்படும் அல்லது உணரும் உணர்வுகளையும் பல இடங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை ஒரு சேர மறுபடியும் எழுதிப்பார்க்க ஆசை. பொதுவாய் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் தங்களுக்கு நேரும் தடைகள் எனப் பட்டியலிடுபவை: என்னால் தினமும் எழ முடியவில்லை. என்னால் தினமும் நடக்க முடியவில்லை. அலுவலகத்திற்குக் கிளம்பவேண்டிய நேரம். அதனால் வாக்கிங் செல்ல நேரம் இல்லை. ஒரு நாள் நடந்தபின் அடுத்த நாள் கால் வலி. எழவே முடியவில்லை. எவ்வளவு தூரம் நடந்தாலும் உடல் எடை குறையவில்லை. பிறகு எதற்கு நடக்கவேண்டும்? அலுவலகத்தில் ஒரு இருக்கைக்கும் இன்னொரு இருக்கைக்கும் நடந்தே போகிறேன். (பிறகு ஹெலிகாப்டரிலா போவாங்க என்ற மைண்ட் வாய்சை கவுண்டமணி குரலில் படிக்கவும்) அலுவலகத்தில் ஃபோன் வந்தால் நடந்துகொண்டே பேசுவேன். இது தவிர எதற்காகத் தனியாக நடக்கவேண்டும்? என்ற எண்ணம். உலகில் நடப்பவர்கள் எல்லாம் சுகர் வந்தவர்கள் அல்லது ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் என்ற பார்வை. காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்பவர்கள் எல்லாம் பணக்காரர்கள். அவர்களுக்கு வேலை இல்லை. வேலை செய்வதற்கு ஆட்கள் இருப்பார்கள், இப்படியான கண்ணோட்டம். எனக்கு சுகர் இன்னும் வரவில்லை. நன்றாக இருக்கிறேன். எனக்கு டாக்டரிடம் போவதற்கு எந்த அவசியமும் இல்லை என்ற மனநிலை. என்னை வாக்கிங் போகச்சொல்லி எந்த மருத்துவரும் சொல்லவில்லை. பிறகு எதற்காகப் போகவேண்டும்? என்ற கேள்வி. ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருக்க இத்தனைக் காரணங்கள் இருக்கலாம். இதை விடக் கூடுதலாகவும் இருக்கலாம். ஜனவரி ஒன்றாம் தேதி பார்த்தால் புது வருட சபதம் எடுத்து நடக்க வருபவர்கள் வருவார்கள். மூன்றே நாளில் பாதி பேர் காணாமல் போவார்கள். மீதிக் கூட்டமும் பொங்கல் விடுமுறையில் காணாமல் போவார்கள். எங்கள் வாக்கர்ஸ் க்ளப்பில் ஜனவரி 1ம் தேதி இந்தச் சபத க்ரூப்களைத் தனியாக அடையாளம் காணுவோம். முதல் நாளே ஐந்து கி.மீ. பத்து கி.மீ. என நடந்து உடல் எடையைக் குறைத்துவிடுவோம் என்ற வெறியுடன் நடப்பார்கள். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பூமியை நிறுத்தி பிறகு எதிர்திசையில் சுற்றிவிடும் வெறி இருக்கும் அவர்களிடம். ஆனால் அவர்கள் தலை கீழாக நின்றாலும் வெறுமனே நடப்பதன் மூலமாக மட்டும் உடல் எடையைக் குறைக்கமுடியாது என்பது அவர்களுக்கு தாமதமாகத்தான் புரியும். இந்த யோசனைகள் எல்லாவற்றையும் தாண்டி, ‘ஏன் ஒருவர் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்? நடப்பதனால் ஆய பயன் என்ன?’ என்று பலர் கூகுளாண்டவரைத் துழாவி பார்த்திருப்பார்கள். அது போக, க்ளப் ஹவுஸ் போன்ற சமூக வலைதளங்களில் வெல்னெஸ் கோச், டாக்டர்கள் என எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்தும் நல்ல அறிவியல் பூர்வமான விசயங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். எனக்கும் உங்களுக்கும் தெரிந்ததுதான் மறுபடியும் மீள் பார்வையாக இங்கே. *நடப்பதனால் உங்களுக்கு உடல் எடை குறைய சில வாய்ப்புகள் உண்டு. ஆனால் முறையான பயிற்சியில் நீங்கள் உங்கள் எடை கூடுவதைத் தவிர்க்க நடக்கலாம். *தூக்கமின்மைக்குச் சில மருத்துவர்கள் நடக்கப் பரிந்துரை செய்கிறார்கள். உடனே ‘நடந்தால் தூக்கம் வருமா?’ என்று நீங்கள் வாங்கும் மிக்ஸி க்ரைண்டருக்கு கேரண்டி, வாரண்டி கார்ட் கேட்பது போலக் கேட்கக்கூடாது. உடல் தசைகள் முறையான இரத்தம் ஓட்டம் பெறும்பொழுது, மூளையும் முறையான இரத்த ஓட்டம் பெற்று தசைகள் சுருங்கி விரிந்து உங்களது உடல் ஓர் இறுக்கமற்ற சூழலை உணரும். அது பல வகைகளில் உங்களுக்கு உதவலாம். இரவு படுத்தால் அயர்ச்சியின் காரணமாகச் சிலர் உடனே உறங்கிவிடுவார்கள். அப்படியான அயர்ச்சியை நீங்கள் நடந்தே பெற்றுக்கொள்ளலாம். *காலையில் நடப்பது, சுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற காரணங்கள் தவிர்த்து, PRE OCCUPIED மன நிலையில் இருப்பவர்கள், தொடர் வேலை அழுத்தங்கள் இருப்பவர்கள், காலை எழுந்தால் ஏகப்பட்ட வேலைகள், எந்த வேலையை முதலில் செய்வது? என்று குழம்புவோர் இப்படியானவர்கள் அதிகாலை எழுந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு இருக்கும் அழுத்தச் சூழலிலிருந்து விடுபட வாய்ப்பு இருக்கிறது. தங்களின் வேலைகளை அதனதன் முக்கியத்துவம் கருதி நிரல்படுத்தி (PRIORITY) எதை முதலில் முடிக்கலாம் என்ற முடிவு எட்டுவது எளிதாக இருக்கலாம். நிதானமான முடிவுகளை எட்டுவதற்கு மூளை பழக்கப்படலாம். எனக்குத் தெரிந்த சில தொழில் முனைவர்கள் பல முக்கியமான முடிவுகளை எடுக்க யோசிப்பதற்காகவே காலையில் வாக்கிங் வருகிறார்கள். *உடல் தசைகளுக்கு முறையான இரத்தம் ஓட்டம் செல்லும்பொழுது அன்றைய நாள் முழுதும் புத்துணர்வோடு உடல் இயங்கவும் வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து அதிகாலை எழுவது பழக்கம் ஆவதால் மூளையும் புத்துணர்வு பெறுவதை காலப்போக்கில் உணரலாம். நண்பர்களில் சிலர் ஏன் நடக்கவில்லை என்பதற்கான காரணங்களும், நடப்பதனால் ஏற்படும் பயன்களில் சிலவற்றையும் பார்த்தோம். ‘ஒருவர் உடல் எடையைக் குறைக்க கண்டிப்பாக நடக்கவேண்டுமா? அல்லது நடந்தால் உடல் எடை குறையுமா?’ என்பது போன்ற கேள்விகளை என் நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு. ஒரு கட்டுரையாக எழுத எத்தனித்த இந்த விசயம், சற்றே நீளலாம். இந்தகே கட்டுரையைப் படித்தவர்கள், தங்களது நடைப்பயிற்சி பற்றிய அனுபவங்களையோ யோசனைகளையோ சொன்னால் கம்பெனி அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்று நடை பணிந்து சொல்லிக்கொள்கிறேன். தொடர்ந்து ‘நடைக் குறிப்புகளோடு’ நடக்கலாம் வாங்க. கட்டுரையாளர்: பழனிக்குமார், மதுரை படங்கள்: இணையத்திலிருந்து