Shipping Policy

At present www.naarkaram.com does not accept International orders.​ For domestic buyers, orders are shipped through registered domestic courier companies and /or speed post only. Orders are shipped within 3-5 working days except Saturday, Sunday, or all Holidays declared by the Tamilnadu State Government and Government of India or as per the delivery of the shipment subject to Courier Company/post office norms. www.naarkaram.com is not liable for any delay in delivery by the courier company / postal authorities and only guarantees to hand over the consignment to the courier company or postal authorities within 3-5 Days from the date of the order and payment confirmation. Delivery of all orders will be to the address provided by the buyer.  For any issues in utilizing our services, you may contact our helpdesk at +91 9551065500 or hexagonmediahouse@outlook.com

பிர்ச்மரக் காடுகள்

பிர்ச்மரக் காடுகள்

குளிர்காலச் சிறுவெயிலின் கதகதப்பான காலையில் நீயும் நானுமாய் கைகோர்த்துச் செல்லும் நடைகளிலே பேசித்தீர்க்கும் கணங்களும்  பின் மௌனமாய் உன் தோள் சாய்ந்து நடக்கும்  அழகான நேரங்களும்  நமது பாதையை நீளச்செய்ய இதோ இங்கே வலிமையாய் உயர்ந்திருப்பவை  பிர்ச் மரங்கள் மட்டுமல்ல – வலுவாய்நம் நேசமும்தான்…! கவிதை & ஓவியம்: அனிதாராஜ்

ஷாம் சிங்கா ராய்

ஷாம் சிங்கா ராய்

திரை விமர்சனம் சமீப காலங்களில் திரையுலகம் சமூக இழிவுகளை, மனித அவலங்களைத் துணிச்சலுடன் திரும்பிப் பார்க்க விழைந்துள்ளதும் சராசரி ரசிகர்களையும் அக்கறையுடன் அவற்றைக் கவனிக்கச் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது, பாராட்டவும் தக்கது. அந்த வகையில், ஜங்கா சத்யதேவ் கதைக்கு, ராகுல் சாங்கிருத்தியன் அருமையாக திரைக்கதை எழுதி இயக்கி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உடன் இரட்டைவேடங்களில் நானி  நாயகனாக நடித்து, தெலுங்கில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘ஷாம் சிங்கா ராய்’. தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு. அறிமுக இயக்குனர் வாசுதேவ் கந்தா (நானி) மீது கதைத் திருட்டு வழக்காகத் துவங்கி, அந்தக் குற்றச்சாட்டை அறவே மறுக்கும் அவன், அதிலிருந்து மீண்டு வர  மேற்கொள்ளும் முயற்சிகளாக விரிந்து, எதிர்பாராத முடிவாக முடிவது, அவனுக்கு மட்டுமல்ல; ரசிகர்களுக்கும் கூடத்தான். “நாங்க கேணிகிட்ட போ கூடாதுங்கய்யா” – “அப்படின்னு கேணி சொல்லுச்சா? உன் குடம் நிறையனும்னா உடனே மழை வரணும்; இல்லன்னா உனக்குள்ள தைரியம் வரணும்”,  “அவங்கள்லாம் தாழ்த்தப்பட்டவங்க” – “அதுக்காக தாகமும் தாழ்ந்து போயிடுமா? அவன் தீண்டத்தகாதவன்னா, அவன் நடந்து போற பாதையில நீங்க ஏன் நடந்து போறீங்க? அவன்  சுவாசிச்சு விடற காத்த நீங்க ஏன் சுவாசிக்கிறீங்க? நிறுத்திக்க வேண்டியதானே? காற்றுக்கும் நீருக்கும் நிலத்துக்கும் காப்பாற்றுகிற குணம் இருக்குமே தவிர, காவு வாங்கற குணம் இருக்காது. இது குலத்தோட காலைப்பிடித்துத் தொங்கிட்டு இருக்கறதுக்கு ரிக்வேதம் காலம் கிடையாது, சுதந்திர பாரதம்”, “இப்போ இந்தக் கேணியும் தாழ்த்தப்பட்டதுதான், அவனுக்கே சொந்தம். தாகம் இருக்கிறவங்க மொண்டு குடிங்க, சாதி இருக்குங்கிறவன் நாவறண்டு சாவுங்க. அவன் குடிசையை எரிக்கப் போனீன்னா, உன் வீடு எங்கிருக்குன்னு ஷாம் சிங்கா ராய்க்கு நல்லாத் தெரியும்” “மனுஷன மனுஷனா பார்க்காதவன் ஊரா இருந்தா என்ன, வீடா இருந்தா என்ன, என்னால இருக்க முடியாது”, ” சமுதாயத்தை மாத்தற சக்தி எழுத்தாளனுக்கு மட்டும்தான் உண்டு, நான் போகணும், நான் எழுதணும்”, “பண்டிகை ஒவ்வொரு வருஷமும் வரும், என் காலம் போனால் திரும்பி வராது” போன்ற அர்த்தபூர்வமான காட்சிகளும் வசனங்களும் அசத்தல். “இந்த உலகத்ல ஒவ்வொரு வேலையையும் ரெண்டு விதமா செய்யலாம். ஒண்ணு பயத்தோட, இன்னொன்னு காதலோட”,  “தெய்வத்தின் துரோகத்தால் தேகமெங்கும் முள்ளாகி, மனமெல்லாம் தெய்வீகம் நிரம்பிய ரோஜாமலர்”, “பெண் யாருக்கும் தாசி இல்லை; தனக்குத் தாசி வேணும்னு  நெனக்கிறவன் கடவுளே கிடையாது”, “ஆத்ம அபிமானத்தவிட, எந்த ஆகமும் தப்பு கிடையாது. தப்புன்னு தெரிஞ்சா கடவுளே ஆனாலும் எதிர்க்கறதுல தப்பே கெடையாது. பயந்தவங்கதான் கர்மா சித்தாந்தம் பேசுவாங்க”, “எம்.எஸ். சுப்புலட்சுமி பேரை கேள்விபட்டிருக்கியா, ஒரு காலத்தில் தேவதாசி, இப்ப பத்மபூஷன் அவார்டு வாங்கி இருக்காங்க. பரதநாட்டியத்தில் பாரத தேசத்தில் மிகப் பெரிய டான்சர் பாலசரஸ்வதி, தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்”,“பெண் யாருக்கும் தாசி அல்ல; அந்தக் கடவுளுக்கும் கூட” எந்த ஒரு சமூகத்திலே தன் பசியைப் போக்கிக்கறதுக்கு ஒரு பெண் மேலேயும் கீழேயும் இருக்கற அவயங்கள விற்கிறாளோ, அந்தச் சமூகத்தில இருக்கிற ஆம்பளைங்க, ஆம்பளைங்களே கிடையாது, பெண்கள் விற்பனைப் பொருள்கள் அல்ல” இப்படி மனதை வருடும், சிந்தையில் அறையும் வசனங்கள் படமெங்கும். காளி கோவிலில் உள்ள தேவதாசிகளில் தினமொருவளை சுகித்து வரும் தலைமை அர்ச்சகர் மஹந்தாவிடம், “யார் வேணா தொட்டுப் பார்க்கறதுக்கு நாங்க கோயில்ல உள்ள தூண்கள் கெடயாது, மானமுள்ள மனுஷிங்க. எங்க மேல யாருக்கும் உரிமை கெடயாது, அந்த தெய்வத்துக்கும் கூட” என்று ரோஸி சொல்ல, “நீ கடவுளுக்குத் தாசி கிடையாது; எனக்குதான் தாசி” என்று சொல்லி, ரோஸியைப் பல பெண்களுக்கு மத்தியில் கடுமையாகத் தாக்கி, மனுசாஸ்திரம் பாதுகாப்பில் பூணூலைக் காதிலே சுற்றி, அவள்மீது சிறுநீர் கழித்து அவமதித்த மகாதேவ் மஹந்தாவின் ஆணுறுப்பை, காளி சிலை கையில் இருந்த அரிவாளைக் கொண்டு அறுத்தெறிந்து, அவனை நெருப்புச் சட்டியில் ஷாம் சிங்கா ராய் எறியும் காட்சி புல்லரிக்கச் செய்கிறது. வித்தியாசமான உருவ அமைப்பில்,  உடல் மொழியில், இருவேடங்களில் நானியும், வயது வித்தியாசங்களில் சாய்பல்லவியும், பக்குவப்பட்ட சிறப்புக்குரிய நடிப்பை வழங்கியுள்ளது அருமை. இருவருக்குமே திரை வாழ்க்கையில் இப்படம், குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமையலாம். க்ருத்தி ஷெட்டி (காதலி கீர்த்தி), மடோனா செபாஸ்டியன் (லாயர் பத்மாவதி), நண்பன் பிரமோத் (அபிநவ் கோமடம்), உளவியல் நிபுணர் (லீலா சாம்சன்), ஜிசு சென்குப்தா (தேபேந்திர சிங்கா ராய்), ராகுல் ரவீந்திரன் (மனோஜ் சிங்கா ராய்), முரளி சர்மா (அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி), மனீஷ் வத்வா (மகாதேவ் மஹந்த்), சுபலேகா சுதாகர் (நீதிபதி) ஆகிய கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே செய்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக, சாய் பல்லவி நடனக் காட்சிகள், நானியின் சண்டைக் காட்சிகள்,  பரந்த கங்கை நீர் நிலை, கொல்கத்தா காளிகாட் (செட்) நகரம். மிக்கி ஜே மேயரின் பின்னி எடுக்கும் பின்னணி இசையும், ஈர்க்கும் பாடல்களும் சிறப்பு. பழுதில்லாத படத்தொகுப்பு, நவீன் நூலி. கதைத் திருட்டு புகாரின்பேரில் கைது செய்வது எல்லாம், சற்று அதீதம். அறிவியல் ரீதியான பாலி கிராப் முறையை ஏற்கும் சாட்சிகள் சட்டம், அதே ரீதியிலான உளவியல் நிபுணரின் ஹிப்னாஸிஸ் அறிக்கையை ஏற்காதது, வினோதம். ரோஸி குழந்தை பெற வாய்ப்பில்லை என  போகிற போக்கில் மருத்துவர் சொல்வதுபோல் சொல்வது, தெளிவில்லை. மறு ஜென்மத்திற்கு அறிவியல் ரீதியான சாட்சி இல்லை என்கிற வாதத்தை மறுப்பதற்கு, விஷ்ணு மறு ஜென்மத்தில் ராமராக வந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ( ! )  மேற்கோள்காட்டி நிறுவ முற்படுவது, அபத்தமானது; கதைக் கருவுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கக் கூடியது. நல்லவேளை, இந்த நீதிமன்றம் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்காதது! திரை உத்திக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்பட்ட, படத்தில் அறிவியலுக்குப் புறம்பான சிலவற்றை, சினிமா லாஜிக்,  லிபர்டி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப,  ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதாகவோ இருந்தாலும் அதையும் தாண்டி புரிய வேண்டியவர்களுக்கு, அவரவர்களுக்குப் புரிகிற மொழியில், உத்தியில் கதைக்கருவும் வசன – காட்சி அமைப்புகளால் அதனை அழுத்தம் திருத்தமாக மனதில் உறைக்கும்படியும் பதியும்படியும் கட்டமைத்தும் வழங்கப்பட்டிருப்பதில் இயக்குனரின் திறமையையும் நேர்த்தியையும் பாராட்டித்தான் ஆகவேண்டும். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

நவரசா ~ இன்மை

நவரசா ~ இன்மை

திரை விமர்சனம் நவரசா இணையத் தொடரில் முத்தாய்ப்பாக அமைந்து, ‘பயம்’ எனும் ரசத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முழுமையான திரை வடிவமாகத் திகழும் படம்தான், ரவீந்திரன் ஆர் பிரசாத் எழுதி இயக்கியுள்ள ‘இன்மை’. இஸ்லாமிய கதைப் பின்னணி. என்றாலும், எந்த மதப் பின்னணிக்கும் பொருந்துகின்ற கதைதான். ஒரு செல்வந்த மரைக்காயரின் (ஷிமூர் ரூஸ்வெல்ட்) சொத்துகளை அடையும் பொருட்டுத் திட்டமிட்டு,  இளம்பெண் வஹிதா (முற்பகுதியில் அம்மு அபிராமி பிறகு, பார்வதி திருவோத்து) மூளைக் கட்டியுடன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் உள்ள ஒருவரை, காதலன் அன்வரின் (பாவெல் நவகீதன்) நிர்பந்தத்தால் மணந்து கொள்கிறாள். எதிர்பார்த்தபடி மரணம் அவரை நெருங்காத நிலையில், உசைன் ஹோஜா (ராஜேஷ் பாலச்சந்திரன்) என்கிற, ‘ஜின்’னை (குட்டிச்சாத்தான்) ஏவும் ஒரு மந்திரவாதியின் உதவியை நாடுகின்றனர்.  அதன் பிறகு, தற்போது புதுச்சேரியில் புத்துணர்வு பெற்று மலரும் வஹிதாவின் வாழ்க்கையில், ஃபாரூக் (சித்தார்த்) வர, அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்தான் ‘இன்மை’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை. பிளாஷ்பேக்கில் கதை சொல்வது என்பது புதிதில்லை என்றாலும், நிகழ்கால சம்பவ ஓட்டத்திற்கு  இடையூறு இல்லாமல், சுவாரஸ்யம் கெடாமல் முடிச்சுகளை ஒவ்வொரு கட்டமாக அவிழ்த்து, கதைக்குள் இறுதிவரை ரசிகர்களை ஈர்த்து உட்கார வைத்துவிடும் இயக்குனரின் உத்தியும், சாமர்த்தியமும் அசாதாரணமானது, அசத்தலுமானது. காலிக்ராபி, டீ கப் பயன்பாடு, ப்ளேசிபா எபெக்ட் போன்றவற்றைப் பொருத்தமாகக் கதையில் இடம்பெறச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஆதார ஸ்ருதியே திரைக்கதையும் நடிப்பில் பார்வதி திருவோத்து, சித்தார்த்தின் அற்புதமான பங்களிப்பும்தான். வசனங்கள்,  காட்சிகள் யாவும் கனகச்சிதம்.  ஃபாருக்கை வஹிதா புரிந்துகொண்ட விதத்தில், பயத்தில் உறைந்து, அவனிடம் பேசும், கெஞ்சும், ஏன் கதறும் ஒவ்வொரு பிரேமிலும் படு அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார் பார்வதி திருவோத்து. அலட்டலில்லாத அழுத்தமான முகபாவங்களை வெளிப்படுத்தி உள்ளார், சித்தார்த். மரைக்காயருக்கு அடுத்துப் பயம் வஹிதாவுக்குத்தானே தவிர, ரசிகர்களுக்கு இல்லாத நிலையில், ஃபாரூக் அவள் பேசப் பேச மந்திர உச்சாடனம் செய்வதுபோல முணுமுணுப்பது, ஏனோ? முற்பகுதியில் உள்ள முகமது ஃபாருக் ஜாபராகவும் பிற்பகுதியில் வஹிதா முன் நிற்கும் ஃபாருக்காகவும் சித்தார்த்தே இருக்கும் போதும்,  மிக நீண்ட கால இடைவெளி இல்லாத நிலையிலும் வஹிதாவிற்கு மட்டும் இரு வேறு நடிகைகள் ஏனோ? போகட்டும், உருவத்தில் ‘கண்டினியூட்டி’யே அவசியம் இல்லாத நிலையில், அம்மு அபிராமிக்கும் பார்வதிக்கும் இடது கண் புருவத்தில் சிறுவெட்டு ஏனோ? விராஜ் சிங் கோஹில்லின் கண்ணைப் பறிக்கும் ஒளிப்பதிவும் விஷால் பரத்வாஜின் மனதை ஈர்க்கும் இசையும் ஆனந்த் ஜெரால்டின் நறுக்குத் தெரித்தாற்போல் அமைந்த படத்தொகுப்பும் ஏ. ஆர். மோகனின் அழகுற அமைந்த கலை இயக்கமும் இயக்குனர் ரவீந்திரன் ஆர். பிரசாத்தின் பக்கபலம். வெறும் 30 நிமிடங்களே ஓடும் இக்கதை, முழுநீளத் திரைப்படமாக விரிந்திருக்க வாய்ப்புள்ளது. என்றாலும், நிர்ணயித்த வரம்புக்குள் அர்ப்பணிப்பு உணர்வுடன், தொழில் பயத்துடன் அல்ல, அக்கறையுடன் நிறைவாகத் தந்துள்ள ‘இன்மை’ குழுவினர் பாராட்டுக்குரியவர்களே. மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

அறம் காக்கும் விருந்தோம்பல் தூதுவர்கள்

அறம் காக்கும் விருந்தோம்பல் தூதுவர்கள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. தனக்கு கிடைத்த பொருட்களைப் பகிர்ந்து கொடுத்து, தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்கிறது வள்ளுவரின் வாக்கு. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவத் தொடங்கியபோது, ஒருபுறம் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட, மனித சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்று  கிட்டத்தட்ட 90 நாட்களுக்கும் மேலாக இரவு பகல் உறக்கம் இன்றி பம்பரமாகச் சுழன்று வருகின்றனர் சென்னையின் சமூக ஆர்வலர்கள் சிலர். அவர்களில் சிலருடன் உரையாடினோம்.  லயோலா மணி:- “கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப் பட்ட முதல் நாளிலிருந்து சென்னை யின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் பொருளாதாரம் சார்ந்த உதவிகளை செய்து வருகின்றேன். ஒருநாள் சாலையோர மக்களுக்கு உணவு கொடுத்து விட்டுத்  திரும்பி வரும் வழியில் பல்லவன் இல்லம் அருகில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலுக்கு முன்னதாக உள்ள மேம்பாலத்தின் சுவற்றில் முதியவர் ஒருவர் பரிதாபமான நிலையில் நின்றிருந்தார். அவர் அருகில் சென்று “ஐயா, சாப்பாடு எதும் வேணுமா?”என்று கேட்டேன். ஒரு கணம் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், திடீரென எனது காலில் விழுந்து விட்டார். ஒருகணம் திகைத்துப் போய்விட்டேன் நான்! ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி என்னிடமிருந்த உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தபோது “கடந்த 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை, தற்போது கூட பாலத்தில் இருந்து கீழே குதித்து இறந்து விடலாம் என்ற எண்ணத்தில்தான் இங்கே நின்றிருந்தேன். கடவுள் போல நீங்க வந்திருக்கிங்க” என்று அவர் சொன்னபோது எனது கண்கள் கலங்கி விட்டன. ஈரோட்டைச் சேர்ந்த அவர் அடையாறில் உள்ள ஒரு வீட்டில் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இரண்டு மகன்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப் போனதால் தினசரி அவர்கள் தரும் தொல்லைகளைத் தாங்க முடியாமல் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு சென்னைக்கு வந்துவிட்டார். இவர் வேலை பார்த்து வந்த வீட்டு உரிமையாளர் தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட, கையில் காசு இல்லாத இவர் என்ன செய்வது என்று தெரியாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்தை மூன்று நாட்கள் சுற்றி வந்துள்ளார். மற்றவர்களிடம் உதவி கேட்கக் கூச்சப்பட்டு, தண்ணீரை மட்டுமே குடித்து வந்துள்ளார். தற்செயலாக அன்று நான் அவரைச் சந்தித்து அந்த உணவுப் பொட்டலங்களைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தபின்னர், அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றித் தவித்தேன். இது ஒரு உதாரணம் தான். கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை, பொருளா தாரத்தை இழந்த பலரைச் சந்தித்து வருகிறேன். இந்த நிலை மாறவேண்டும், மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று கூறுகிறார் லயோலா மணி. காக்கை மணிகண்டன்:- “சென்னை J4 காவல்நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கொத்தனார் அப்துல்லா. சுமார் 28 வயதுடைய இவரின் பூர்வீகம் கொல்கத்தா.  அவரை இங்கு வேலைக்கு அழைத்து வந்த முகவர், அவரின்  சம்பளப் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விட, இரண்டு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காததால் வீட்டு உரிமையாளர் இவரை வெளியே அனுப்பி விட்டார்.  J4 காவல்நிலை யத்தின் ஆய்வாளர், நமது காக்கை அறக்கட்டளை யிடம் உதவி செய்யக் கேட்க நாமும் களத்தில் இறங்கி “நல்ல உணவு” அறக்கட்டளையின் தலைவர் வேதன் சிவக்குமார் அவர்களின் இல்லத்தில் தங்க வைத்துவிட்டு மீண்டும் திருவான்மியூர் நோக்கி பயணப்பட்டபோது, அந்த வட மாநில இளைஞர் அப்துல்லா ஓடி வந்து என்னை கட்டிப் பிடித்து தனது அன்பைப் பறிமாறியது இன்னமும் நினைவில் உள்ளது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி 5 முறை அறுவைசிகிச்சை செய்து கொண்டவர். இவரது மகளுக்கும் கேன்சர். இவரது மகனோ விபத்தொன்றில் சிக்கி 2 கண்களிலும் பார்வையிழந்த பரிதாப நிலை. இவர்கள் சாப்பிட்டு 3 நாள்கள் ஆகின்றன என்று காக்கை அறக் கட்டளைக்கு அழைப்பு வர. அடுத்த 1 மணி நேரத்திற்குள் 2 மாதங்களுக்குத் தேவையான மளிகை மற்றும் அரிசி ஆகியவற்றை வழங்கினோம். அவருக்கு ஸ்கேன் செய்ய வேண்டிய அவசர நிலையைக் கருத்தில் கொண்டு, எங்களது கையில் இருந்த கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு வந்தோம். கடந்த 4 மாதங்களில் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, வருத்தம், சோகம் என அனைத் தையும் ஒருசேர நமக்குச் சொல்லி வருகிறது மக்களின் அன்றாட வாழ்க்கை” என்று தான் கண்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை விளக்குகிறார் மணிகண்டன். சுந்தரபாண்டியன் :- “இராமநாதபுரத்திலிருந்து ஒரு பெண்ணும் அவர் கணவரும் கடந்த மார்ச் 21ம் தேதி சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மருக்கு  வந்துள்ளனர்.  ஊரடங்கில் சிக்கிய அவர்கள் இப்பொழுது விழுப்புரத்தில் இருக்கிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் விழுப்புரம் வரை வந்தவர்களுக்கு அதற்குமேல் பேருந்துப் பயணம் முடக்கப்பட்டதால், கடந்த மூன்று மாதங்களாக விழுப்புரம் பேருந்து நிலையம் அருகிலேயே தங்கி உள்ளனர்.  அவர்களிடம் விசாரித்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. கடந்த இருபது நாள்களாக அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி வருகிறோம். 20 நாட்களுக்கும் மேலாக ஒரே சேலையை அணிந்து உள்ளதாகவும், மாற்றுத் துணியாக ஒரு நைட்டி வாங்கித்தர முடியுமா என அந்தப் பெண்மணி கேட்க, அங்கே இங்கே விசாரித்து, வீடு வீடாக துணிமணிகள் விற்கும் ஒருவரைக் கண்டறிந்து ஒரு நைட்டி வாங்கிக் கொடுத்தோம். இரவு வேலை முடித்துவிட்டு விழுப்புரம் சிக்னல் அருகேயுள்ள டீக்கடையில் நண்பர் களுடன் அரட்டையடிப்பது, புதிய பேருந்து நிலையம் வரை நடந்தே சென்று அங்கிருக்கும் ஆவின் கடையில் பாலும் பன்னும் சாப்பிடுவது, ரயில் நிலையம், மீன் மார்க்கெட் என விழுப்புரத்தில் பகலைவிட இரவில் குறுக்கும் நெடுக்குமாய் அலைந்திருக்கிறேன். மேற்சொன்ன எல்லா இடங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆங்காங்கு கண்ணில் படுவதுண்டு. அவர்களை அநேக நேரம் அவதானித்திருக்கிறேன். பசிக்கிது, ஏதாவது சாப்பிடக் குடு என்று வாயைத் திறந்து பசியுணர்வை வெளிப்படுத்த இயலாது டீக்கடையின் முன் நிற்பார்கள். அவர்களின் உணர்வைப் புரிந்து கொண்டு டீக்கடைக்காரரோ அல்லது அங்கிருக்கும் வாடிக்கையாளரோ தாமாக முன்வந்து அவர்களுக்கு ஏதாவது வழங்கினால்தான் உண்பார்கள். ஏதும் கிடைக்காத பட்சத்தில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாது அங்கிருந்து நகர்ந்து விடுவர். கண்ணில் படும் அனைவரிடமும் அவர்கள் கையேந்துவதில்லை. அவர்களுக்குப் பசிக்கும்போது கண் எதிரே யார் இருக்கிறார்களோ அவர்கள் முன் நிற்பார்கள். அவ்வளவே. ஊரடங்கில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் யாரெனில் சாலையோர மனநலம் பாதிக்கப் பட்டவர்கள்தான். இதில் கொடுமை என் வெனில், எதனால் ஊரடங்கு? டீக்கடை ஏன் மூடியுள்ளது? டீக்கடைக்காரர் ஏன் வரவில்லை? மக்கள் நடமாட்டம் ஏன் குறைந்துள்ளது? என்பதை உணர இயலாத மனநிலையில் அவர்கள் இருப்பதுதான். இதுபோன்ற சூழலில் இவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமையல்லவா? என்று கேள்வியெழுப்பு பவர்களைப் பார்த்து ‘அடேய்! பைத்தியக்காரா’ என்றுதான் அழைக்கத் தோன்றுகிறது. இயல்பு வாழ்க்கையின்போதே சாலையோர மனிதர்கள் குறித்துக் கவலைப்படாத அரசு, ஊரடங்கிலா அக்கறை கொள்ளப் போகிறது? பொது அமைதிக்கும், பொதுவெளியிலும் குந்தகம் விளைவிக்காமல் கிடைத்ததை உண்டு, கண்ணில் கண்டதையெல்லாம் பார்த்து, மகிழ்ந்து, சிரித்து தன் போக்கில் ஆனந்தமாய்த் திரியும் அவர்களை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களிடம் உரையாடுவது எனக்கு விருப்பமானதாக இருக்கிறது. அவர்களுக்கு என்னால் ஆன உதவிகளை எல்லா நேரத்திலும் செய்திருக்கிறேன். அதைத்தான் இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறேன். முதல் இரண்டு நாள்கள் தனிப்பட்ட முறையில் உணவளித்த எனக்கு அடுத்தடுத்த நாள்களில் உறுதுணையாக, உழைப்பையும் உதவியையும் சில நல்லுள்ளங்கள் தாமே முன்வந்து அளித்தனர். மனநலம் பாதிக்கப் பட்டோருக்கு உதவும் சூழல் என்னைத் தேடி வரும்போது, அதற்கு ஒத்துழைக்க நண்பர்களும் முன்வரும்போது அதைத் தட்டிக் கழிக்க விரும்பாமல் இதைத் தொடர்கிறேன். இந்த ஊரடங்கு சூழலில் நீங்கள் அத்தியாவசியத் தேவையை முன்னிட்டு வெளியே வரும்போது ஓரிரு பாட்டில்களில் நீரும், சிறிது உணவும், குறைந்தபட்சம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டாவது எடுத்து வந்து சாலையோர மனநலம் பாதிக்கப்பட்டோரின் அருகே வைத்து வாருங்கள். கசக்கி எறியப்பட்ட ஒரு மலரின் மனதுக்குள் புன்னகை பூக்கும். ஒரு ஞானியையொத்த அவர்களுடைய மனம் தேவைக்கு மேல் எதையும் விரும்பாது” என்று கூறுகிறார் திரு சுந்தரபாண்டியன். நசிந்து சிதைவுற்று வரும் விருந்தோம்பல் பாதையில் மனிதத்தின் தேடல் தொடர்கிறது.