சொன்னவண்ணம் செய்த பெருமாள்

சொன்னவண்ணம் செய்த பெருமாள்

தாய்மொழி தின நாடகம் காட்சி 1 காலம்: ஆறாம் நூற்றாண்டில் ஒரு மாசி மாதம்தினம்: மகம்இடம்: திருவெஃகா விண்ணகரம்நேரம்: காலைபாத்திரங்கள்: சீதையம்மை, திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன், கோயில் பட்டர் திருக்கோயிலைச் சுத்தம் செய்து வரும் சீதையம்மை அன்றும் சுத்தம் செய்து திரும்பிக்கொண்டிருக்கும் நேரம். எதிரே திருமழிசை ஆழ்வாரின் சீடன் வருகிறான். சீதையம்மை: வணக்கம் ஐயா. கணிகண்ணன்: வணக்கம் அம்மையே, ஏன் சோர்ந்தாற்போல் வருகிறீர்கள்? சீதையம்மை: வயதாகிவிட்டதல்லவா. இந்தப் பெருமாளுக்கு இன்னும் எத்தனை நாள் நான் சேவை செய்யக் கொடுத்துவைத்திருக்கிறேனோ. அவளின் கடைசி வாக்கியத்தைக் கேட்டவாறே வந்துகொண்டிருந்த ஆழ்வார் குறுக்கிட்டு, திருமழிசை ஆழ்வார்: வருந்த வேண்டாம் அம்மையே. நாராயணனிடம் சொல்லி வைக்கிறேன். அவன் அருள்புரிவான். திடமுடன் வாழ்வாய். கவலை வேண்டாம். கோயில் பட்டர் எதிரில் வந்தவாறே, பட்டர்: ஆஹா.. இன்று ஆழ்வாரின் திருநட்சத்திரம் ஆயிற்றே.. தெய்வத் தமிழ் அல்லவா அவர் வாக்கு! அப்படியே பலிக்கும். அம்மா சீதா, நீ கவலைப்படாதே. கணிகண்ணன்: குருநாதரின் ஜன்ம தினம் அல்லவா. இந்தப் பள்ளிகொண்ட பெருமாள், ஐயனின் தமிழுக்குத் தாசன் அல்லவா. அம்மையே, நீ யுவதி போல நிலைபெறுவாய். இந்தக் கச்சி மணிவண்ணன் கை கொடுப்பான். பாம்பணை மேல் பள்ளி கொண்டவனை திருமழிசை ஆழ்வார் தமிழால் பாடித் துதிக்க, எல்லாரும் கண்மூடிப் பெருமாளிடம் லயித்துக் கிடக்கின்றனர். காட்சி 2 நேரம்: முன்மதியம்இடம்: அரண்மனைபாத்திரங்கள்: பல்லவ அரசன், கணிகண்ணன் மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் கணிகண்ணன்: அரசே, வணங்குகிறேன். அழைத்தீர்களாமே.. பல்லவ அரசன்: ஆமாம், ஆழ்வாரின் சீடனே! எனது நீண்ட நாள் விருப்பம் ஒன்றுள்ளது. அதை நீர் ஆழ்வாரிடம் சொல்லி நிறைவேற்றித் தர வேண்டும். கணிகண்ணன்: சொல்லுங்கள் மன்னா. பல்லவ அரசன்: ஆழ்வாரின் தமிழால் என்னைப் பாட வேண்டும். ஒரு பாட்டு போதும்.. பணிந்து கேட்கின்றேன். நீர்தான் உமது குருவிடம் சொல்லி நிறைவேற்றி அருள வேண்டும். கணிகண்ணன்: இது நிறைவேறாது மன்னவா. எம் ஐயன் நாராயணனையன்றி மனிதரைப் பாடுவதில்லை. அவரிடம் இந்த விண்ணப்பத்தை என்னால் வைக்கலாகாது. அரசன்: நீர் இதை எப்படியும் செய்ய வேண்டும். இது அரச கட்டளை. கணிகண்ணன்: ஆண்டவன் கட்டளைக்கே அடி பணிவேன். அரசன்: என் விருப்பத்தை நிறைவேற்றாவிடில் உம்மை நாடு கடத்துவேன். நீர் இரவுக்குள் நகர் விட்டு வெளியேற வேண்டும். அமைச்சர் உள்பட அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்து நிற்க, கணிகண்ணன் செல்கின்றான். காட்சி 3 இடம்: திருக்கோயில்நேரம்: முன் மாலைபாத்திரங்கள்: கணிகண்ணன், திருமழிசை ஆழ்வார், பாம்பணைந்தோன் கோயிலில் மாலை பூஜை தொடங்கியதை அறிவிக்கும் மணியோசை கேட்கிறது. ஆழ்வார்: கணிகண்ணா, புறப்படு. பெருமாளை சேவித்துவிட்டு வரலாம். கணிகண்ணன்: குருநாதா, மன்னிக்க வேண்டும். நான் நகர் நீங்குகிறேன். இது அரசாணை. ஆழ்வார்: என்ன! அரசன் உன்னை நகர் நீங்கச் சொன்னாரா? ஏனப்பா? கணிகண்ணன்: ஐயனே, என் வாயால் எப்படிச் சொல்வேன்.. தாங்கள் அரசனைப் பாடவேண்டுமாம். அதை நானே உங்களிடம் விண்ணப்பிக்க வேண்டுமாம். நான் மறுத்தபடியினால் எனக்கு இந்தத் தண்டனை. ஆழ்வார்: வா, பெருமாளிடம் போவோம். பெருமாள் முன்பு பக்தர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர். ஆழ்வார் பாடுகிறார். “கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டா – துணிவுடையசெந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” ஆழ்வார் பாடிவிட்டு நடக்கிறார். கணிகண்ணனும் நடந்து போகிறான். பட்டர் பாம்பணைந்தோனை ஒருகணம் பார்க்கிறார். பெருமாளின் பாம்பணை அதிருவதாக அவருக்குப் பட்டது. அரசனுக்கு அங்கு நடந்ததை சொல்வதற்கு ஓடுகிறார். காட்சி 4 நேரம்: பின் மாலைஇடம்: அரண்மனைபாத்திரங்கள்: அரசன், பட்டர், அமைச்சர், காவலன், மக்கள் அமைச்சர்: அரசே! ஆழ்வாரின் சீடனை நகர் நீங்க உத்தரவிட்டது சரியாகத் தோன்றவில்லை. அரசன்: ஏன் அமைச்சரே? நான் பணிவாகத்தான் அவரிடம் வேண்டினேன். அரசன் என்ற மரியாதைக்காவது அவர் தனது குருவிடம் சொல்லுகிறேன் என்று போயிருக்கலாம். இவர் சொல்லி குரு மறுத்திருந்தால்கூடப் பரவாயில்லை. அமைச்சர்: இருப்பினும் நகர் நீங்க உத்தரவு போட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காவலன்: (வேகமாக வந்து) அரசே, வாயில் முன் மக்கள் பதற்றத்துடன் கூடி வருகின்றனர். அரசனும் அமைச்சரும் வெளியில் வரவும் எதிரில் கோயில் பட்டர் வந்துகொண்டே, பட்டர்: அரசே, அபச்சாரம் நடந்துவிட்டது. கணிகண்ணன் நகர் நீங்குவதால் ஆழ்வாரும் நகர் நீங்கினார். அத்துடன் பெருமாளையும் அழைத்துக்கொண்டுபோய்விட்டார். மக்கள் பதற்றத்துடன் அலைகிறார்கள். அரசன்: என்ன! பெருமாளை அழைத்துக்கொண்டா?! என்ன உளருகிறீர் பட்டரே? அமைச்சர்: அரசே! அமைதி கொள்ளுங்கள். பட்டரே, நடந்தது என்ன? பட்டர் நடந்ததைச் சொல்லி முடிக்கிறார். அமைச்சர்: அரசே, வாருங்கள். ஆழ்வார் வெகுதூரம் போயிருக்க மாட்டார். அவரை சமாதானம் செய்து அழைத்து வருவோம். அவர் வந்தால்தான் பெருமாள் வருவார். அரசன்: அமைச்சரே, நீங்களுமா.. பெருமாள் அவர் பின்னே போய்விட்டாரா என்ன? அமைச்சர்: அரசே, மன்னிக்க வேண்டும். ஆழ்வாரின் தமிழில் பெருமாள் நகர் நீங்கிப் போய்விட்டார். இனி தமிழ் உள்ளளவும் பெருமாள் இந்தக் கச்சி திருவெஃகாவில் இருக்கமாட்டார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசருக்குப் பொறி தட்டியது. அரசர்: சரி, புறப்படுங்கள். (வெளியில் இருக்கும் மக்களிடம்) காஞ்சி நகர மக்களே! என்னை மன்னியுங்கள். ஆழ்வாரிடம் போகின்றேன். அவரை அழைத்துக்கொண்டுதான் வருவேன். அரசன், அமைச்சர், பட்டர் எல்லாரும் விரைகிறார்கள். மக்களும் அரசர் பின்னே நடக்கிறார்கள். மாசி மகத்தின் முழுநிலவு மேலேறி வந்து விண்வழியே அவர்களை முந்திக் கொண்டு ஆழ்வாரிடம் சேதி சொல்ல விரைகின்றது. காட்சி 5 காலம்: பின்னிரவுஇடம்: வேகவதி நதியின் அக்கரையில் ஒரு மரத்தடிபாத்திரங்கள்: அரசன், அமைச்சர், பட்டர், திருமழிசை ஆழ்வார், கணிகண்ணன் மற்றும் மக்கள். ஆழ்வார் வேகவதி நதியைத் தாண்டிப் போய்விட்டார் என்று அறிந்து எல்லாரும் நதியின் அக்கரை போய்ச் சேருகின்றனர். ஆழ்வாரும் கணிகண்ணனும் மரமொன்றின் அடியில் அமர்ந்திருக்கின்றனர். அரசன்: (வந்து கொண்டே), பக்தரே, இந்தச் சிறியேனை மன்னிக்க வேண்டும். கணிகண்டரே, நீரும் என்னைப் பிழை பொறுத்து மன்னித்து அருள வேண்டும். கச்சிப் பதிக்குத் திரும்ப வேண்டும். அமைச்சர்: தமிழ் உருவமே! தங்கள் வாக்கில் இருக்கும் நாரணன் இங்கும் நிறைந்து இருப்பதை உணர்கிறேன். கச்சியைக் கைவிட்டுவிடாதீர் ஐயா. தமிழ் வாக்கிற்குச் செவி சாய்த்து உம்முடன் வந்திருக்கும் இறையையும் அழைத்து வரவேண்டும். திருமழிசை ஆழ்வார்: கணிகண்ணனே, மன்னவன் மனம் வருந்தினான். நாம் மீண்டும் திருவெஃகா செல்லலாம்தானே? கணிகண்ணன்: ஐயனே, செல்லலாம். இத்தனை மக்களும் பெருமாளைத் தேடி வந்தார்களே..! ஆழ்வார்: மன்னவனே! அதிகாரத்தால் அடைய முடியாததும் உலகில் உண்டு என்பதைப் புரிந்திருப்பீர். இதோ, என் தமிழ் வாக்கிற்காக மணிவண்ணனும் என்னுடன் ஓரிரவு வந்து நிற்கும் இந்த இடத்தை மக்கள் ஓரிரவிருக்கை என்று நினைவில் வைத்திருப்பார்கள். சொல்லிவிட்டு ஆழ்வார் காஞ்சி நோக்கி நடக்கிறார். எல்லாரும் அவரைத் தொடர்ந்து நடக்கின்றனர். முழுநிலவு வானில் விழி மலர்த்தி சிரிக்கின்றது. திருவெஃகா கோயிலுக்குள் வந்ததும் ஆழ்வார் வெளியில் பார்த்துப் பாடுகின்றார். “கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சிமணிவண்ணா நீ கிடக்கவேண்டும் – துணிவுடையசெந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்பைந்நாகப் பாய்படுத்துக்கொள்” கோயில் எங்கும் ஆழ்வாரின் தமிழ்க் குரல் ஒலிக்கிறது.

விண்ணப்பம்

விண்ணப்பம்

கல்வெட்டுக் கதைகள் – 2 ” இந்த வேலையையும் விட்டுட்டு என்ன செய்ய போறீங்க “மருதம்மா அங்கலாய்த்துக் கொண்டாள்.“நானா விடுறேன். எப்டியும் அடுத்த மாசம் அனுப்பிருவாங்க. அதுக்குள்ள நாமளா.”ஏக்கப் பெருமூச்சும் வலியும், செய்வதறியா கவலையும் சேர்ந்து கொள்ள காசி சொன்னான். ஊர்ப் பொதுக் கூட்டத்தில் அப்படித்தான் பேசிக் கொண்டார்கள் . விசுவநாத குருக்கள் வயலில் வேலை செய்யும் அனைவருக்கும் இந்த மாதக் கூலி கிடைப்பதே கஷ்டம் என்றார்கள். சிலர் பக்கத்து வயலில் கேட்டுப் பார்ப்போமா. என்று யோசித்தனர். ” ஏங்க. அடுத்த வயல் நம்ம சோமசுந்தரம் ஐயா வயல் தான.” ” அங்க மட்டும் கிடைச்சிருமாக்கும் . அதுவும் தான போகப் போகுது ” . மருதம்மா சொல்லில் நியாயம் இல்லாமல் இல்லை. கடந்த ஓரிரு வாரங்களாகவே வேலை போய் விடும் அபாயம் இருப்பதாகத் தான் பட்டது காசிக்கு… வயலுக்குச் சொந்தக்காரர் வயலுக்கே வருவதில்லை. சதா சர்வ காலமும் சிவன் கோவிலே கதின்னு கிடக்கார். ஐயர் வீட்டம்மா மட்டும் அப்பப்போ வந்துட்டு போறாங்க. என்னிக்கும் வராதவங்க வர்றாங்கன்னா, ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது காசிக்கும் மருதம்மாவுக்கும். விசுவநாத குருக்கள் சிவபக்திக்குப் பேர் போனவர். நேம நிஷ்டைகள், ஆச்சார அனுஷ்டானங்களில் அவரை விஞ்ச ஆளில்லை அந்த ஊரில். ஊர் முழுக்க கோயில் பணிக்காகவே நிறைய பேர் இருந்தார்கள். இருப்பினும் காலை 4 மணிக்கு விழிக்கும் விசுவநாதய்யர் சிவனைப் பார்க்காமல் சாப்பிட்டதில்லை. தன் வயலில் என்ன நடக்கிறது. என்ன பயிர் விளைகிறது என்பதெல்லாம் அவர் கண்டுகொண்டதில்லை. எத்தனை மரக்கால் விளைச்சல் என்ற கணக்கெல்லாம் ஐயரம்மா கையில் தான். வயலை குத்தகைக்கு எடுத்தவரிடம் கறாராகப் பேசி வாங்கி விடுவாள். வயலில் வேலை செய்யும் குடும்பங்கள் மேல் ஐயரம்மாவுக்கு இருந்தது வாஞ்சையா, வேலை வாங்கும் திறனா, அக்கறையா என்பதை காசியால் பகுத்துச் சொல்ல இயலாமல் இருந்தது. மருதம்மா தான் ஐயரம்மாவுக்கு நெருக்கம். ” ஏண்டி மருது. உன்னாட்டம் இருக்கும் பொண்ணுங்க எல்லாம் வயல் வேலைக்கு வர்றயில நீ மட்டும் வீட்லயே அடைஞ்சு கிடந்தா என்னடி அர்த்தம். வாரத்துக்கு ரெண்டோரு நாள் கூலிக்கு வந்தா கிடைக்குற காசை சேர்த்து வைக்கலாமில்லையா. காசிக்கு சமர்த்து பத்தாது கேட்டியா. போன வாரம் ஒரு மணி நேரம் சேர்த்து வேலை செய்யச் சொன்னதுக்கு ராமு கிட்ட வாக்குவாதம் பண்ணிட்டான்னா இருக்கான். கூட கால் மரக்கா நெல்லு கிடைச்சா கசக்குமோ “ ராமு அந்த வயலை குத்தகைக்கு எடுத்திருந்தவன். உண்மையிலேயே காசிக்கு சாமர்த்தியம் போறாது தான். இல்லையானால் கிடைக்கும் கால், அரை மரக்கால் கூலிக்கு நான்கைந்து வருஷங்களாக அதே வயலில் கிடப்பானா.. ” மத்தவங்கள்ளாம் கூலி அதிகம் கேட்டு ஊர்ப் பொதுக்கூட்டத்தில் பேசுனா நீங்க மட்டும் ஊமையா இருந்தா கருங்காலிப் பட்டம் கிடைக்காதா . நாம வாழறதே கஷ்ட ஜீவனம். இதுல மூணாவதா ஒன்னு “.சொல்லி முடிப்பதற்குள் கண்ணில் நீர் திரை கட்டியது.அவர்களுக்கு மணமாகி இரண்டாண்டுகள் ஆகி இருந்தது. மூன்று மாதம் முன்பு தான் சிலையாட்டம் பெண் குழந்தை. ” நான் அதை போன கூட்டத்துலயே கேட்டுட்டேன். அந்த ராமுவுக்கும் எனக்கும் வாக்குவாதம். கூலி கூட்டிக் கேட்டா வேற வயலுக்கு மாத்திருவேன்னான். அது இருக்கு அஞ்சு கல்லு தூரத்துல. உன்னையும் பிள்ளையையும் விட்டுட்டு எப்படிப் போவேன். நீயும் தான் எப்படி கஞ்சி கொண்டாருவ . வெறும் வயித்துல வேலை பாக்குற அளவுக்கா நமக்கு தெம்பிருக்கு. ” தூங்கும் பிள்ளையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். ” அந்த ராமு எப்படியோ . ஆனா ஐயரூட்டம்மாக்கு நல்ல மனசுங்க. நானும் கொஞ்சம் வந்து கூட மாட வேலை பார்த்தா கூலி சேர்த்துக் கிடைக்குமேனு சொல்லிட்டிருந்தாங்க..” என்று இழுத்தாள்… ” அடி போடி இவளே. உனக்கு குழந்தை இருக்கிறது அந்தம்மாக்கு தெரியாதா என்ன. புருசனும் பொஞ்சாதியும் ஒரே வயலுக்கு வந்துட்டா அவங்களுக்குத் தாண்டி சல்லிசு. எனக்கு கொடுக்கும் கூலியை இன்னொருத்தனுக்கு கொடுக்க வேணாம் பாரு. உனக்கு குறைச்சு கொடுத்தாலும் நான் வாயைத் திறந்து கேட்க மாட்டன்னு அவங்களுக்குத் தெரியும். எனக்குத் தெரியாம நீ ஏதாச்சும் முடிவு எடுத்தா அவ்வளவு தான். சொல்லிட்டேன்”. கணவன் அதிசயமாகக் கோபப்படுவதை ஆச்சரியமாகப் பார்த்தாள் மருதம்மா. அங்கே விசுவநாத குருக்கள் வீட்டில் ராமு , ஐயரம்மாவிடம் பணிவாகப் பேசிக் கொண்டிருந்தான். ” குத்தகை முடிய இன்னும் ஆறு மாசம் இருக்குங்க. அதுக்குள்ள தொகையைக் கேட்டா எப்டி . நான் ஐயரு கிட்ட பேசிக்கிறேன். “ ” தோ பார் ராமு, ஐயாவுக்கு இதெல்லாம் பாக்க பொழுதில்லே. வர்ற சிவராத்திரிக்கு ராசா பேரில் சந்திப் பூஜைக்கு ஏற்பாடு நடந்திட்டிருக்கு. அதுக்காக பெரியவாள்லாம் வர்றா. ராசாவுக்கு தமக்கை இருக்காளோல்லியோ . அவாளுக்கு நம்ம கோயில் சுவாமி மேல ஏகப்பட்ட பிரியம். அவா ஏதோ விண்ணப்பம் பண்ணி சங்கல்பம் எடுத்து அதுல ஜெயிச்சுட்டாளாம். பதிலுக்கு சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனைன்னு அமர்க்களப் படுத்திட்டா. அடுத்த வாரம் நம்ம கோயிலுக்கு திருவிளக்கு கைங்கர்யம் பண்றா . அதுக்காக நம்மவா நிலம் சிலதை விலைக்குக் கேட்டிருக்கா. சபையிலே சொல்லியாச்சு. மாமாவைப் பத்தித் தான் நோக்குத் தெரியுமே. சிவனுக்குக் கொடுப்பது கொடுப்பினைம்பார். என்னமோ இவருக்கு எல்லாரும் அள்ளிக் கொடுத்திட்டா மாதிரி.” கொஞ்சம் போல இடித்துத் கொண்டாள்… உண்மையில் அரசாங்கம் இவர்களுக்கு அள்ளித் தான் கொடுத்திருந்தது. ஆனால், அவை கோயில் பணிக்காக மட்டுமே செயல்பட வேண்டும் எனும் உத்தரவுடன். விசுவநாத ஐயர் கையில் பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேகத்தை இழைத்து ஈஸ்வரனுக்குக் கைங்கர்யம் பண்ணக் கூடியவர். அவரது நேர்மை கருதியே நிலமும் கொடுக்கப் பட்டது. இருப்பினும் அவரைச் சார்ந்தவர்களுக்குத் தேவைகள் இருக்குமல்லவா. அவரவர்க்கு அவரவர் நியாயம். நிலம் கையை விட்டுப் போவதன் அபாயக் குறி கொஞ்சம் அதிகப் படியாகவே அவள் முகத்தில் தென்பட்டதை இராமு கவனிக்கத் தவறவில்லை. “மாமி. இப்போ நம்ம வயல்ல வேல பாக்குறவங்களுக்கு பதில் சொல்லியாகனும் நான். பாதி பேருக்கு மேல கூலி பாக்கி. எடுத்தோம் கவுத்தோம்னுல்லாம் செய்ய முடியாது பாத்துக்கங்க. வயல் நம்ம கைய விட்டுப் போகுதுன்னு அவங்களுக்குத் தெரிய வேண்டாம். அப்புறம் ஆளாளுக்கு கூலிய கூட்டிக் கேப்பானுங்க. இப்பவே அந்தப் பய காசி சாஸ்தி கேக்குறான். அதுவும் ஊர்க் கூட்டத்தில வச்சு. அவங்கூடச் சேர்ந்து எல்லா பயலுவளும் கேட்டா பிரச்சனை பெருசாவும். “ ” கவலைய விடு ராமா. அவம் பொஞ்சாதி கிட்ட நான் பேசறேன். நீ இனிமே அவன் கேட்டா, கூட ஒரு மணி நேரம் சேர்த்துப் பாக்கச் சொல்லு. அதுவும் முடியாட்டி நம்ம கணபதியையர் வயல்ல வேலைக்கி போகிறியான்னு கேளு. அதுவும் நீ தான் பாக்கறன்னு எனக்குத் தெரியும்.” என்றாள். பெண்களுக்கு ஊரெல்லாம் கண்கள் என நினைத்துக் கொண்டான் ராமு. இதற்கிடையில் உச்சி காலப் பூஜை முடிந்து விசுவநாத குருக்கள் வீட்டுக்கு வந்தார். வாசலில் ஜலம் விட்டு பின்னங்காலை மூன்று முறை அலம்பியவாறே இவர்கள் சம்பாஷணையைக் கேட்கும் விதமாக ” என்னப்பா ராமு. காத்து இந்தப் பக்கம் அடிக்குது. வழக்கமா ஆள் விட்டனுப்பிச்சா கூட வர மாட்டியே. ஓ மாமிகிட்ட பேசியாச்சா. பேஷ். ” . சிவச் சின்னங்கள் பளிச்செனத் தெரிய நித்தம் நினைந்துருகி சித்ததில் சிவத்தை நிறுத்தும் வேத பாராயணி அவர். லௌகீக சம்பந்தங்களில் சிறிதும் நாட்டமில்லாத வாழ்க்கை அவருடையது. நிலம் கையை விட்டுப் போகிறது என்ற பிரஞ்ஞையே இன்றி இருப்பவர். சிவச் சொத்து சிவனுக்கே என்பார். ” நமஸ்காரம் ஐயரே. நம்ம காணியை விற்பதற்கு ஏற்பாடாகிறது. கூடவே சோமநாதைய்யர், சுப்பிரமணியையர் காணியும். அரச கட்டளை. இருந்தாலும் ஐயர்ட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் . ” என அங்கலாய்த்தான். அவனுக்கு அவன் தொழில் போகிறதே எனும் கவலை. ” கொடுத்தவா கேக்கறா. இதுல நீயும் நானும் பேச என்ன இருக்கு சொல்லு. நீ மாமி காதைக் கடிச்சு ஒன்னும் ஆகப் போறதில்ல புரியறதா. போய் ஆக வேண்டிய வேலையைப் பார் ” என விரட்டினார். விசுவநாதையர் இப்படித்தான். அதிகம் பேச மாட்டார். ஆனால் பேசினால் ஒரு வார்த்தையாய் இருந்தாலும் அது திருவார்த்தையாய் வந்து விழும். அத்தனை தீர்க்கம். “சரி சரி. ராமு. நீ போய் ஆக வேண்டியதைப் பார். காசி வந்தான்னா என்னை வந்து பார்க்கச் சொல்லு. ” என்றாள் மாமி. அவன் ஏமாற்றத்துடன் கிளம்பினான். மருதம்மா குழந்தையை மடியில் போட்டுக் கொண்டே தெருவில் போவோர் வருவோரை கவனித்துக் கொண்டிருந்தாள் . குடிசைத் திண்ணையில் பக்கத்து வீட்டு முத்தம்மாள் வந்தமர்ந்தாள் . காசியோடு வயல் வேலைக்கு வரும் அவன் கூட்டாளி கந்தன் மனைவி. ” மருதக்கா. குழந்தைக்கு மேலுக்குச் சொகமில்லையா. ஏன் ஒரு மாதிரி இருக்கு.” அரைக் கண் மூடி தூக்கத்தில் இருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.“ம்ம். அதுவும் தான் என்ன செய்யும் . நம்ம ஒடம்புல ஓடுற இரத்தம் ஓடுனாத்தானே சொரக்கிறதும் சொரக்கும். அதுக்கும் வவுறு நெறையும். “. ஏன். காசியண்ணே வேலைக்குப் போகறதில்லையா.”” அதெல்லாம் போயாவுது . செஞ்ச வேலைக்கு கூலி வந்தாத்தானே வீட்டில் அடுப்பெரியும். இந்த மனுசன் வாயத் தொறந்து கேட்டதுக்கு வேத்து வயல் போகச் சொன்னாராமில்ல மொதலாளி. அதுவுமில்லாம இப்ப இருக்கிற வேலைக்கும் கேடு வந்திரும் போல. நிலமெல்லாம் கைய விட்டுப் போகுதாம். புதுசா வர்றவன் நம்மை வேலைக்கு வச்சுப்பான்னு என்ன நிச்சயம். பழைய மொதலாளியே கூலி ஒழுங்கா தருவதில்ல. புதுசா வர்றவங்க மொத்தமா தொறத்தி விட்டுட்டா தெருவுல தான் நிக்கணும். போக்கிடமுன்னும் எதுவுமில்ல. எங்க கஷ்டத்தை கேக்க எந்த நாதி இருக்கு இந்த ஊரில. ” மூக்கை சிந்தினாள். ” எங்கூட்டுக்காரரும் இதையே சொல்லித் தான் ஒருவாரமா பொலம்பறாரு. நிலத்தை அரசாங்கமே திரும்ப எடுத்துக்கப் போகுதாம். அது எப்டிக்கா நடக்கும். எனக்கு ஒண்ணுமே புரியல. ” என்றாள் முத்தம்மா. ” எது எப்படியோ. உம் புருசனுக்கும் எம் புருசனுக்கும் இனிமே வேலை இல்ல. உனக்கும் எனக்கும் நாதியில்ல.”” அப்படியெல்லாம் மனச