பதவி வாங்கும் கருவி

பதவி வாங்கும் கருவி

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை பெட்டியிலே பணமிருக்கும்பேருசொல்ல ஆளிருக்கும்வட்டிக்கென்று சென்றபணம்வளர்ச்சியிலே தானிருக்கும் ஒட்டிசில உறவிருக்கும்உறவினிலும் முரணிருக்கும்அட்டியிலை பெற்றப்பேருஆகாசம் தொட்டிருக்கும்! வீட்டுக்கே சாமிவரும்வீராப்பு பேசவரும்ஓட்டுக்கு பணங்கொடுத்தால்ஓடோடிப் பதவிவரும் மாட்டுக்கும் மரியாதைமறக்காமல் தேடிவரும்நாட்டுக்குள் இவருக்கென்றுநாற்புறமும் புகழுவரும்!  வந்தநோய் விரட்டவரிசையிலே மருத்துவரும்அந்தநோய் தீர்ப்பதற்குஆயிரமாய் செவிலியரும் எந்தபணம் கொடுத்தாலும்ஏற்காமல் முதுமைவரும்அந்தநாள் வந்துவிட்டால்அடுத்தநொடி தனிமைவரும்! அறிவார் அறியவரும்அறிவார்ந்த தத்துவத்தைவிரிவாய் சொல்வதென்றால்விடுகதை யந்தவித்தை புரியாமல் ஆடும்களம்பூமியடா நீயறிந்தால்தெரியாமல் வந்தநிலைதெளிவாக்கு மிந்தகதை! பொன்மணிதாசன்

காவியக் கலை

காவியக் கலை

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை புன்னகை யொளியில் பூத்தநல் என்னை சிலிர்ப்பாக்கும் – அவள்கண்ணடி காணும் கவிதை மொழியோகண்களை விரிவாக்கும்! விரிகுடை போலிரு விற்புரு இரண்டுவிழியிடம் கடன்கேட்கும் – நான்சொரிகிற பார்வை சூட்சம மறிந்துசூடும் நாணமதுவாக்கும்! கரைய மறந்த கார்முகில் குழலதுகாலை தான்நோக்கும் – என்விரல்சிறைபடச் செய்த சிகையின் அழகுசேர்த்தநல் வலையாக்கும்! வரைய இருந்த வனப்புறு அழகின்வடிவம் அவளாக்கும் -நான்நிறைய நிறைய நினைத்த வண்ணநித்திலப் பூவாக்கும்! உண்டு உருண்டு உதடுகள் உலரஉணர்வுகள் உசுப்பேத்தும் – தேனில்வண்டு விழுந்த வகையென் மனதுவழிதொட கொதிப்பேத்தும்! கண்டு நெருங்கி கலப்பது காவியகலையில் ஒன்றாக்கும் – அவளைக்கொண்டு குலவி கொஞ்சும் வேளைகுமணன் நானாக்கும்! பொன்மணிதாசன்

கரைசேராப் படகுகள் – 10

கரைசேராப் படகுகள் – 10

தொடர்கதைவயலில் வேலை செய்தவர்கள் கும்பல் கும்பலாக ஓடியதைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி ஓடுகிறார்கள்?’ என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தார் செந்தாமரை. “எலே.. செந்தாமரை, நம்ம ஊரு கன்னிமா கோயில்ல…. யாரோ பெரியவரு வந்திருக்காராம். எல்லாரும் பாக்க போறாங்களாம், நீயும் வாடா” என்று கோபால் நாயக்கர் கூப்பிடவும், குழந்தை பிறந்த தீட்டு இருப்பதை  மறந்து அவர் கூடவே ஓடினார் செந்தாமரை. கோவாலண்ணன் கூப்பிட்டாரேன்னு வேகவேகமாக வந்த செந்தாமரைக்கு கோயிலுக்கு கிட்ட வந்ததும்தான் தீட்டுன்னு உரைச்சது. இருந்தாலும் வந்துட்டமேன்னு வாசலைத்  தாண்டி ஒதுங்கி நின்றார். கோயில் வாசல்ல  அகலமா ஒரு கல்லு இருக்கும். அந்தக் கல்லு மேல, உடம்பெல்லாம் ஒட்டிப்போய், ஒல்லியாக வேட்டி மாதிரி ஒரு காவித் துணி கட்டிகிட்டு, மேலுக்கு ஒரு துண்ட விரிச்சி போட்டுகிட்டு, கையில ஒரு கொம்ப வச்சிகிட்டு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். “ஆரு இவரு..?” என்று செந்தாமரை கோவாலுவைக் கேட்டார். “இவருதான் பெரிய மகான்; வட நாட்ல இருந்து  வர்ராராம், இவர பாத்தா புண்ணியமா..” என்று கோவாலு விளக்கினார்.  எல்லாரும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். செந்தாமரை பயந்துகொண்டு ஓரமாக நின்றுகொண்டிருந்தார். மகான், செந்தாமரையைக் கையை அசைத்துக் கூப்பிட்டார். கிட்ட ஓடிப் போன செந்தாமரை, ‘படார்’னு அவர் காலில் விழுந்துட்டார்.  “எழுந்திரு, காய்ச்ச மரம்தான் கல்லடி படும்”னு  சொல்லிட்டு, “சுவாதி நல்லா இருப்பா”ன்னு சொன்னார். ‘அந்த மகான் என்ன சொன்னார்னு புரியலையே..”ன்னு வழியெல்லாம் யோசனையாகவே இருந்தார்  செந்தாமரை. “அண்ணாத்த…. நம்ம வீட்ல யாருண்ணா சுவாதி? இல்லாத பேரை சொல்றாரு” என்று குழப்பமாகக் கேட்டார் செந்தாமரை. “முட்டா பய மவனே.. புனிதா குழந்தைக்குதான் சுவாதின்னு பேர் வக்கச்  சொல்லியிருக்காரு டா” என்று விளக்கினார் கோவாலு. “அண்ணாத்த, எனக்கு ஒரு ஒத்தாச பண்ணுங்க. நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குறிப்பு கொடுத்திருக்கேன். குழந்தைக்குப் பேரு வாங்கி வந்துடுங்கண்ணா. நான் மவளுங்களை ஏழாம் காப்புக்கு அழைச்சிட்டு வந்திடறேன்”னு சொல்லி பொட்டி வண்டியில புறப்பட்டார் செந்தாமரை. நடுமகள்  ஊரைத் தாண்டிதான் பெரிய மகள் வீட்டுக்குப் போகணும். அதனால  முதல்ல நடுமகள் வீட்டுக்குப் போனாரு செந்தாமரை.  “கடிச்ச பாக்குல காப் பாக்கு கொடுக்காத பெரியாத்தா, நாபெத்த மவளே, நாபெத்த மவளேன்னு வழியனுப்ப வந்தாளாம்”.  அந்த மாதிரி வாயிலேயே வட சுடுவா, கோதை மாமியாரு பவளம். செந்தாமரையைப் பார்த்ததும் “வாங்க.. வாங்க”ன்னு வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்  பவளம். “எப்படி இருக்கீங்க சம்பந்தி?ன்னு தெரியாம கேட்டுட்டாரு செந்தாமரை. “நாயக்  கேட்பாரும் இல்ல, நடுவூட்ல வைப்பாரும் இல்ல;  ஏன்னு கேட்பாரும் இல்ல எடுத்து புடிப்பாரும் இல்ல”ன்னு ஒப்பாரி  வைக்க ஆரம்பிச்சுட்டா பவளம். ஆனா கழுத்துல மாட்டு வடமாட்டம் மோப்பு வச்ச  செயினு தொங்க, காதுல வைர பேசரி மின்ன, ஆளு நல்லா வளமாதான் இருந்தா. பஞ்சு மிட்டாய் நிறத்துல காபிதூள் பூப்போட்ட  வெல உசத்தியான சேலையில கூந்தலில் கனகாம்பரம் தொங்க செழிப்பா இருந்த, மகள் கோதையைப் பாக்கறதுக்கு செந்தாமரைக்கு  மனசுக்கு குளிர்ச்சியா இருந்தது. வயிறு குளிர  மோரைக் குடித்துவிட்டுக் கிளம்பினார். “நாளைக்கு புனிதா பொண்ணுக்கு ஏழாம் காப்பு, குடும்பத்தோட வந்துடுங்க”ன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினார். வண்டிய வேகமாக  கூவத்தூருக்கு ஓட்டினாரு. வவுறு பசியில கத்த, மாட்ட அடிச்சு   ஓட்டினார்.   உச்சி வெயிலுக்கு இவரோட  பெரிய மகள்  வசந்தி வீட்டுக்கு வந்தார். பேத்தி வளரும்போது பாட்டியா பாசம் காட்னவ, தாலி ஏறியதும் மாமியாரா மாறிட்டா. இருந்தாலும், செந்தாமரை மருமவன்தானே.. அதான், மருமவன் வருவாருன்னு எதிர்பார்த்து , வெடக்கோழிக் குழம்பு வச்சு, வயக்காட்டு நண்டை வறுத்து ரசம் பண்ணி வச்சிருந்தாங்க. வவுறு கதறக் கதற உள்ள போட்டுத் திணிச்சுட்டு, மீதிய அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும்   மூட்ட கட்டினார் செந்தாமரை. “காலைல கோழி கூவ வந்துடுங்க  அத்தை. வசந்தி.. நீயும்தான். புனிதா அவ புருசனை நெனைச்சு வெசனப்பட்டுகிட்டு இருக்கா. உன்னையும் கோதையையும் பாத்தா, அவ மனசு ஆறும்”னு  சொல்லிட்டு, “மாமனையும் மச்சானையும் வயக்காட்ல பாத்து சொல்லிட்டேன்”  என்ற சேதியும் சொல்லிட்டு கிளம்பினார். பொழுது சாயறதுக்குள்ள ஊரு போய்ச் சேரணும்னு வண்டிய அடிச்சு ஓட்டினார். வயக்காட்டு வேலைய கணக்கு தீர்த்துட்டு, கட்டின புடவயில கதிரெல்லாம் ஒட்டியிருக்க, முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க  வந்த மரகதத்தைப் பார்க்கும்போது, வழவழன்னு இருக்கற ரப்பர் மரத்துல பால் வடியறா மாதிரி இருந்தது. செந்தாமரையும் மாமியார் வீட்ல கொடுத்த தூக்குச் சட்டிய தூக்கிக்கிட்டு வீட்டுகுள் நுழைந்தார்.  “என்னதுங்க..? என் ஆத்தா கொடுத்தாங்களா?”ன்னு தூக்குச் சட்டிய  கையில வாங்கினாள் மரகதம். “விலை மோர்ல வெண்ணெய் எடுத்து, தலை மகனுக்குக் கல்யாணம் பண்ற குடும்பமாச்சே.. அவளா கொடுத்திருக்கப் போறா?”ன்னு  வம்பிழுத்தார்   பட்டம்மா. “ஓசியில உலை வச்சி, காந்தல்ல களிகிண்டற குடும்பமாச்சே உங்க குடும்பம்! நீ  என் குடும்பத்தைப் பேசறியா?”ன்னு பதிலடி கொடுத்தா மரகதம்.  “ஆரம்பிச்சிட்டீங்களா உங்க போராட்டத்த… சத்த நேரம் அடங்குங்க”ன்னு சத்தம் போட்டுட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்த செந்தாமரை மனசுகுள்ள, அந்த மகான் சொன்னது ஓடியது. அதற்குச் சாட்சியாக முருகர் படத்திற்குப் பின் இருந்து கடிதம் ஆடியது. தொடரும் சாம்பவி சங்கர்

இரவின் நிழல்

இரவின் நிழல்

திரை விமர்சனம்‘பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும்தான் என்னை எல்லா வயசிலேயும் விரட்டிக்கிட்டே இருந்தது ; சிலர் செய்யற பாவம் கங்கைக்குப் போனால் தீரும், சில பாவங்கள், செய்யறவா கங்கையோடு போனாலும் தீராது; வெதச்சுது எல்லாம் முளைக்கும்டா, பாவம் உட்பட’ – சுருக்கமாகச் சொன்னால் இதுதான், ‘இரவின் நிழல்’. நந்து (பார்த்திபன்) – காட்டமாகச் சொன்னால், கந்து வட்டிக்காரன்; கண்ணியமாகக் கூறினால், பைனான்சியர். குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரையிலான, கரடுமுரடான அவனது வாழ்க்கையை, வேதனையை, சுரண்டலை, பஞ்சமா பாதகங்களை, ஆஷாடபூதித்தனம் இல்லாமல், அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுவதுதான், பார்த்திபன் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி, நடித்துள்ள ‘இரவின் நிழல்’ எனும் உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் கதை. இதனை ‘டார்க் ஸ்டோரி’ என்றால் அது நகைமுரண். நந்துவின் வாழ்க்கைப் பாதையில் இடையிடையே பயணிக்கும் அம்மா ராணி (ரேகா நாயர்), சந்துரு (நந்து), ஆனந்த கிருஷ்ணன் (நந்து), காதலி லட்சுமி (சினேகா), மனைவி சிலக்கம்மா (பிரீகிடா சகா), பார்வதி (சாய் பிரியங்கா ரூத்), பிரேம குமாரி (வரலட்சுமி சரத்குமார்), சாமியார் பிரேமானந்தா (ரோபோ சங்கர்) ஆகியோர் துணைப் பாத்திரங்களாக மட்டுமல்லாது, நந்துவின் பாத்திரப் படைப்புக்கு உறுதுணையாகவும் நிற்பது சிறப்பு. சிலக்கம்மா (பிரீகிடா சகா) கலக்கலம்மா ! பொதுவாக, விருப்பப்பட்ட வாழ்க்கை எவருக்கும் அமைவதில்லை என்பதுதான் உண்மை. அமைந்த வாழ்க்கையை, கிடைத்த வாய்ப்புக்கேற்ப செப்பனிட்டுக்கொண்டு, அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்வதுதான், எல்லோருக்குமான வாழ்க்கையாக இருக்கின்றது.  நந்துவின் வாழ்க்கையும் அப்படித்தான். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், அவன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை ; அப்படியான வாழ்க்கைக்குத்தான்,  நந்து தேர்வானான். பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும் விரட்ட முடியாத இடத்தை அவன் அடைந்து, மனதில் குற்ற உணர்வும் அன்பு மயமான வாழ்க்கையும் ஒருங்கே முகிழ்த்து, நடக்கும் போராட்டத்தில் பலியாவது நந்து, பிழைத்து நிற்பது மனிதம். இவற்றை ‘செல்லுலாய்ட்’டில், நான்-லீனியர் சிங்கிள் ஷாட் மூலம், தொய்வில்லாமல் வழங்க பார்த்திபன் மிகவும் மெனக்கெட்டு இருப்பதை உணர முடிகிறது. வெற்றியும் பெற்றுள்ளார். நான்-லீனியர் சிங்கிள் ஷாட் குறித்த புரிதலை ஏற்படுத்த, படத்தின் முதல் அரை மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது. அதிலும் படத்திற்கான வாய்ஸ் ஓவர் தவிர்த்து, அந்தத் தொழில்நுட்பத்தை விளக்குவதற்கான வாய்ஸ் ஓவராக அமைந்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும். படத்திலும்கூட வாய்ஸ் – ஓவர்தான்; என்றாலும், இதில் காட்சிகளின் நீள அகலங்களுக்கு வாய்ப்பில்லாததைக் கணக்கில் கொண்டால்,  இதைத் தவிர்க்க முடியாதுதான் என்பதையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். பாவம் என்கிற ஒரு வட்டத்துக்குள்தான்  நந்துவின் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டது போல, மீண்டும் மீண்டும் அவனது காரியம் ஒவ்வொன்றையும் பாவமாகவே வரித்துக் கொண்டு வருகிறது, கதை. நாய் விற்ற காசு குறைக்காது என்பது போல, அவன் விற்கும் கஞ்சா காசுதான், அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை சுகபோக வாழ்க்கை வாழ வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். ஏசியா புக் ஆப் ரிகார்ட்ஸ், இண்டியா புக் ஆப் ரிகார்ட்ஸ் இரண்டிலும், ‘இரவின் நிழல்’ ‘முதல் ஏசியன் நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ படமாக முத்திரை பதித்த பார்த்திபனின் இந்தச் சாதனைக்கான கடும் உழைப்புக்கு,  ஏ ஆர் ரகுமானின் அட்டகாசமான இசையும், ஆர்தர் வில்சனின் பிரமிப்பான ஒளிப்பதிவும் பக்கா பலம். கலை இயக்குநர் விஜய் முருகனின் உழைப்பும் வீண் போகவில்லை. ‘நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ குறித்த புரிதலுடனான அனுபவத்திற்கும்,  வாலிபக் கவிஞர் வாலி போன்று, பார்த்திபனின் வார்த்தை ஜாலத்தைச் சுகிக்கவும், பொதுவாக எலைட் சமூகம் முகம் சுளிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றிய ஆபாசம் உட்பட ஆசாபாசங்களை, வலிகளை உணரவும், தூக்கம் தொலைத்த ஓர் இரவு வாய்க்கவும் வாய்ப்பளிக்கிறது, பார்த்திபன் இராதாகிருஷ்ணனின்  ‘இரவின் நிழல்’. மதிப்பெண் : 8.5/10 மது ராஜேந்திரன்

தமிழ்நாடு நாள் – சிறப்பு மலர்

தமிழ்நாடு நாள் – சிறப்பு மலர்

ஜூலை 18 – தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மலரை சுவடு வாசகர்களுக்காக மின்நூல் வடிவில் வெளியிடுகிறோம். நீங்கள் புத்தக வடிவில் இந்த மலரை வாசிக்க முடியும். கணினி அல்லது மடிக்கணினியில் வாசிப்பவர்கள் புத்தக்கத்தைத் திறந்த வடிவில் இரு பக்கங்களாகவும், அலைபேசியில் படிப்பவர்கள் ஒவ்வொரு பக்கமாகவும் வாசிக்கலாம்.

கரைசேராப் படகுகள் – 9

கரைசேராப் படகுகள் – 9

தொடர்கதை “ஏங்க மாமா… காப்பு சம்மந்தி வீட்லதானே போடுவாங்க? நாம ஏன் வாங்கணும்? மூனாம் மாசம் பொண்ணைக் கூட்டி அனுப்பும்போதுதான் குழந்தைக்கு கொலுசு, அண்ணாக்கயிறுன்னு போட்டு அனுப்புவாங்க” என்று குழப்பத்துடன் கேட்டாள் மரகதம். “இனாமாக் குடுத்த மாட்டைப் பூட்டி நெலாவுல ஏரடிச்சானாம் இளிச்சவாயன்”ன்னு உன் தலையில கட்டிடப் போறாங்கடா, உன் மருமவன் வூட்டு மனுசனுங்க” என்று ராகம் இழுத்தாள் பட்டம்மா. “என்னைய என்ன புத்திகெட்ட ஆம்பளன்னு நினைச்சயளா? ஆளாளுக்கு  அலப்பற தர்ரீங்க..” என்று செந்தாமரை சத்தம் போட்டுவிட்டு, அவங்களுக்கு   டவுனுக்குப் போக பொழுது ஆப்படலையாம். அதான் என்னய  வாங்கியாந்து வைக்கச் சொன்னாங்க” என்றார். மனிதனுக்கு இரண்டு நேரங்களில் கோபம் வரும். செய்த தப்பை மறைக்கும்போதும், தப்பு செய்யாத போது குற்றம் சாட்டப்படும் போதும்.  இதில் செந்தாமரை இப்பொழுது கோபப்பட்டது எந்த ரகம் என்று நமக்குப் புரியும். செந்தாமரை லேசாகக் குரலை உயர்த்தியதும், மாமியாரும் மருமகளும்  பொங்குகிற பாலில் தெளித்த தண்ணீர் மாதிரி ‘புஸ்சுன்னு’ அடங்கிவிட்டார்கள். செந்தாமரை வெளியில் வந்து, “ஏய்.. சுள்ளான் இங்க வாடா” என்று கூப்பிட்டதும், வாசலில் படுத்திருந்த சுள்ளான் வாலை ஆட்டிக்கொண்டே இவர் பின்னாடியே ஓடி வந்தது. இவர் வயக்காட்டுப் பக்கம் செல்வதைப்  பார்த்ததும் இவருக்கு முன்னாடி ஓடி வழிகாட்டியது. அதிகாலையில் எழுந்த மரகதம், வெள்ளிக்கிழமைங்கறதால வாசல்  தெளித்து அரிசி மாவில் பெரிதாகக் கோலம்போட்டு, அடுப்பு தட்டு   மொழுகி சும்மா வீட்டை ஜொலிக்க வைத்திருந்தாள். ‘நாளைக்கு வீட்டுக்கு சொந்த பந்தம், சாதி சனமெல்லாம் வருவாங்க’ என்று வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு,  தலைக்குக் குளித்து, சின்ன சின்ன பூ கண்ணுக்கே தெரியாத சிவப்பு நிறத்தில் இருந்த மஞ்சள் நிற நூல் புடவையைக் கட்டியிருந்தாள் மரகதம். அவளை ஏற இறங்கப் பார்த்த பட்டம்மா, ‘டொக்…. டொக்..’ என்று வெற்றிலை இடித்துக்கொண்டே, “சீமை சிறுக்கியாட்டும் சீவி முடிச்சு சிங்காரிச்சு வயக்காட்டுல கலெக்டரு உத்தியோகம் பாக்க போனாளாம் வித்தக்காரி” என்று வியாக்கனம் படிச்சார். பொழுது விடிந்ததும் சண்டை வேண்டாம் என்று முகத்தைப் பரண்மேல்  வைத்துக்கொண்டு வேலை பார்த்தாள் மரகதம். “என்னத்த சுத்தம் பண்றா இந்தக் கருப்பாயி?” என்று அவளைத் திட்டிக்கொண்டே மாட்டுக் கொட்டகையைப் பெருக்கி வாரி, சாணத்தைக் குப்பைக்குழியில் கொட்டினாள். மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு போட்டுத் தண்ணீர் காட்டிவிட்டு,  பித்தளையில நல்ல உயரமாக இருக்கும் பால் பாத்திரத்தில் பாலைக் கறந்து, நுரை பொங்கப் பொங்க அப்படியே எடுத்து வந்து பட்டம்மா பக்கத்தில் ‘பட்’டென்று வைத்துவிட்டு, “பால் வாங்க வரவங்களுக்கு அளந்து ஊத்திடுங்க” என்று வெடுக்கென்று சொன்னாள். நுரை பொங்கற பாலை ஊற்றி இழைய காய்ச்சி, கருப்பட்டி போட்டு  புனிதாவுக்கும் மாமியாருக்கும் கொடுத்துவிட்டு, ‘ரெண்டு டபரா’ காபியை கூஜாவில் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலில் வந்து, ‘வயக்காட்டுப் பக்கம் யாரு போறாங்க?’ என்று பார்த்துக்கொண்டு நின்றாள் மரகதம். “எலே.. குருவம்மா வயக்காட்டுப் பக்கம் போனீன்னா.. என் மாமங்கிட்ட  கொடுத்துடு” என்று சொல்லி, அந்தப்பக்கம் வந்த குருவம்மாவிடம் கூஜாவைக் கொடுத்தாள். “எக்காவ், உங்க வயலுக்குத்தான் அறுப்புக்குப் போறேன்” என்று ‘போற போக்குல’ சொல்லிக்கொண்டே போனாள் குருவம்மா. நேற்று, வயலில் வேலை செய்யும் ஆட்கள்,  “தினம் கூழு வேண்டாம்; அரிசிக் கஞ்சி வேணும்” என்று சொன்னதால் மரகதம் அடுப்பில் உலை வைத்து, பெரிய படியில் ஐந்து படி நொய் அரிசியை ஊறப் போட்டுவிட்டு,  பக்கத்துத் தெருவில் இருக்கும் இருக்கற நாவிதர் வீட்டுக்குப் போனாள். மரகதத்தைப் பார்த்ததும் ஓடி வந்த இருளாயியிடம், “நாளைக்கு புனிதாவுக்குத் தீட்டு எடுக்கணும். வயக்காட்டுல வேலை கெடக்கு,  கொஞ்சம் வெள்ளனயே வந்துடு” என்று சேதி சொல்லிவிட்டுக் கிளம்பினாள். வீட்டுக்கு வந்து கஞ்சி காய்ச்சி எடுத்துக்கொண்டு, தூதுவளை துவையலை  வாழையிலையில் மடித்து அண்டா மேல் வைத்துக்கொண்டு, முந்தானைத் தலைப்பை சிம்மாடு மாதிரி சுருட்டித் தலை மேல் வைத்துக்கொண்டு, ‘ஒத்த கையால’ அண்டாவைப் பிடித்துக்கொண்டாள். ‘ஒத்த கையை வீசி வீசி அவள் நடந்த தாள லயத்துல வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாரை மயங்கியது. நெல்லு பொறுக்கிக்கிட்டு இருந்த தேன்சிட்டு, அந்த அண்டா மேல இருந்த தட்டு விளிம்புல ஊஞ்சல் ஆடிக்கிட்டு வந்தது.’ இந்த காட்சியில் மயங்கிய சூரியனும், ‘தனக்கு ஒருவாய் கஞ்சி கிடைக்காதா?’ என்று, மரகதம் பின்னாலேயே ஓடிவர, மேகக் கூட்டங்கள் அலைஅலையாக ஒன்றோடு ஒன்று துரத்திக் கொண்டு சூரியனை முந்திக்கொண்டு ஓடிவர, ஒருவழியாக வயக்காட்டுக்கு வந்து சேர்ந்தாள் மரகதம். சுடச்சுட கஞ்சியைப் பார்த்ததும், கதிர் அரிவாளைப் போட்டுவிட்டு ஓடிவந்தாங்க. கும்பலா உட்கார்ந்து ஊரு கதையைப் பேசி உரண்டை இழுத்து கஞ்சி குடிக்கற சுகமும் வெஞ்சனம் இல்லாம உடல் உழைச்சி, வயிறாற கஞ்சி குடிக்கற சுகமும் சொர்க்கத்துக்குச் சமம். செந்தாமரை பெரிய மகளை கூவத்தூரில் உள்ள மச்சானுக்கே திருமணம் செய்து கொடுத்தார். நடு மகளை தேவாதூரில் கொடுத்தார். ‘இரண்டு  ஊரும் பக்கம் பக்கம்தான்; இருந்தாலும் நடந்து போக முடியாது’ என்று பொட்டி வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்புகிற நேரத்தில், வயக்காட்டில் வேலை செய்தவங்க எல்லாம் வேலையை விட்டுவிட்டு கும்பல் கும்பலாக ஓடினார்கள். தொடரும் சாம்பவி சங்கர்

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்ட அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டன. 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் பெறப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி சேர்க்கைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான தனியார்  கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் என மாணவர்களுக்கான சேர்க்கைப் பட்டியல்களும் வெளிவந்து கொண்டுள்ளன. உண்மையில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகாத இந்தச் சூழலில், ‘எங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?’ என CBSE பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் கேட்கின்றனர்.  மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பெரும்பாலான  CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புத்  தேர்வு முடிவுகள் வராமலேயே, பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் சில பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இடைத்தேர்வுகூட நடத்தி முடிக்கப்பட்டதுவிட்டது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இரண்டுக்குமே MCQ (Multiple Choice Questions) என்றழைக்கப்படும்  கொள்குறிவகைத் தேர்வில் எடுத்த முடிவுகளை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து  பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிபிஎஸ்சி பள்ளிகளைப்  பொறுத்தவரை, இருபருவங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில், முதல் பருவத்தின் இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையை நடத்தி உள்ளனர். மாணவர்களுக்கான பாடப் பிரிவுகளையும் பெற்றோர்களிடம் பேசி அவர்களாகவே தெரிவு செய்து 11 ஆம் வகுப்பு சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசுப் பாடத்திட்டத்திற்கான  தேர்வு விடைத்தாட்கள்  திருத்தும் பணி, ஜூன் முதல் வாரத்தில்  முடிந்து தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் வரக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணி ஜூன் 5 ஆம் தேதியே முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதற்காகத் தேர்ச்சி முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி, ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளிலிருந்து வருகின்றன.  கொரோனா காலத்தில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளும் மாணவர்களுக்கு முறையான கல்வி கிட்டாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் மாணவர்கள் சரியான காலத்தில் உயர் வகுப்புகளுக்குச் சென்று முறையான கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் உண்டல்லவா? அதை முறைப்படி செயல்படுத்த வேண்டிய கடமை அரசுகளுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் உண்டல்லவா? ஆனால் இதுவரை, ஒன்றிய அரசோ, மாநில அரசோ, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளோ இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கல்வியில் சமமின்மை நிலவுவது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக நம்  தமிழகத்தில், மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று பல்வேறு வகையான, பாடத்திட்டங்கள் சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வேறுபட்ட மன நிலையை உருவாக்கக்கூடிய கல்விச் சூழலே அதிகரித்து வருகிறது. இங்கு சமத்துவம் பேசுகிறோம்; சமமான கல்வி என்று கூறுகிறோம்; வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கிடையே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பொருளாதாரம் சார்ந்த வியாபாரமாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட அண்மைக் காலங்களில், கல்விச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதிகப் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்த பள்ளிகள் என்ற மனப்போக்கும் நிலவுகிறது. அதன் அடிப்படையிலேயே பத்தாண்டுகள் முன்பு வரை கோலோச்சிய பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சமச்சீர் கல்வி முறை வந்தபிறகு,  தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள, CBSE பள்ளிகளாக மாறின. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத சூழலில் இப்பள்ளிகள் CBSE அமைப்புக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்பாமல், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் மௌனமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக, மாணவர்கள் நலனைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் CBSE-ஐ எதிர்த்துப் போராட்டம் நடத்தாது ஏன்? ஒரே மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் தேர்ச்சி முடிவுகள் வரப்பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், சக வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளை இன்னமும் தேர்வு முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழலில் வைத்திருப்பது, மாணவர்கள் எதிர்காலத்தையும் மனநிலையையும் பாதிக்கும், பாழாக்கும் செயலாகும். எந்தக் கல்வி முறையில் பயின்றாலும், பயிலும் மாணவர்கள் அனைவரும் நமது குழந்தைகளே. இங்குள்ள கல்வி மற்றும் மனித வளத்துறைகள் இது குறித்து உரையாடல் நடத்தி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-இடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, CBSE அமைப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும்வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கச் சொல்வது என்ன நிர்வாக முறை? என்பது விளங்கவில்லை. மாநில அரசு எப்போது உறக்கம் கலைக்கும்? இந்தச் சூழலிலாவது, நம் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள், ஏற்ற பாடத்திட்டம் மாநிலப் பாடத்திட்டம் என்ற புரிதல் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும். கல்வி என்பது நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கேட்டுப் பெற வேண்டியது நம் கடமை. நாம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வர வேண்டும். கல்வி உள்ளூர் வளம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பார்கள். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அலங்கார முகமூடிக்கு ஆசைப்பட்டு CBSE பின்னால் ஓடினால், நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும்தான் பாழாகும் என்பதைப் பெற்றோர்களும் இந்த அரசும் உணர வேண்டும். கல்வி முதலாளிகள் தங்கள் மேட்டிமை மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநிலப் பாடத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், நுகர்வோர் உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கட்டாயம். பெற்றுக்கொண்ட பயணத்துக்கு உரிய சேவை வழங்காவிட்டால் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள்தான் குற்றவாளிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு CBSE பள்ளிகளில் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். உமா மகேஸ்வரி, கல்வியாளர்

வாழும் கவிஞன் வாலி

வாழும் கவிஞன் வாலி

கவிஞர் வாலியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர் பாடல்களோடு சிறு பயணம்: “நன்றி சொல்லவே உனக்குஎன் மன்னவா வார்த்தை இல்லையேதெய்வம் என்பதே எனக்குநீயல்லவா வேறு இல்லையே” இன்று அதிகாலை காரில் உட்கார்ந்தபோது, பனிக்குளிரைக் கிழித்துக்கொண்டு எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும்போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்; அவர் எழுதிய பாடல் முக விசேடம். கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,தான் ஒரு படைப்பாளி, என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை அவர் நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார். அதே சமயம், கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார். அதனால்தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டப்பட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும் “நன்றி சொல்லவே உனக்கு, என் மன்னவா வார்த்தை இல்லையே” பாடலும் பிடிக்கும்; அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும், “சின்ன ராசாவே…..சித்தெறும்பு என்னைக் கடிக்குது” பாட்டும் பிடிக்கும். இரண்டுமே வாலியின் பாடல்கள்தான். இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார். “அந்த நாள் ஞாபகம்நெஞ்சிலே வந்ததே வந்ததேநண்பனே…..” என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர்தான், “நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமா…நாம் வாழும் வீட்டுக்குள்வேறாரும் வந்தாலே தகுமா…..” என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன?!! “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி? சமைஞ்சது எப்படி?” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.“டாலாக்கு டோல் டப்பிமா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் போடுவது வாலியின் பண்பு. ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.எப்படி, அழுத்தமான சூழல் ஒன்றில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ, அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ, அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் – இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால்தான் நமக்கும் “யாப்போடு சேராதோபாட்டு தமிழ்ப் பாட்டுதோப்போடு சேராதோகாற்று பனிக்காற்று….” என்று இதயத்திலும் “ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்அன்பே உன் பேரைச் சிந்தித்தால்தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்கண்ணே நம் கண்கள் சந்தித்தால்நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..” என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது. “அன்னமிடும் கைகளிலேஆடிவரும் பிள்ளை இதுஉன்னருகில் நானிருந்தால்ஆனந்தத்தின் எல்லையதுகாயத்ரி மந்திரத்தைஉச்சரிக்கும் பக்தனம்மாகேட்கும் வரம் கிடைக்கும் வரைகண்ணுறக்கம் மறந்ததம்மா” தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி – இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை “தாமரை மேலே நீர்த்துளி போல்தலைவனும் தலைவியும் வாழ்வதென்னநண்பர்கள் போலே வாழ்வதற்குமாலையும் மேளமும் தேவையென்ன?” என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில் “நிலவினை நம்பி இரவுகள் இல்லைவிளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லைஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…” எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது. அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில் முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம். “மல்லிகை முல்லைப் பூப்பந்தல்” என்று “அன்பே ஆருயிரே” (1975) க்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக எழுதி, அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் சுவீகரித்துக் கொண்டவர், 30 வருடங்கள் கழித்து மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் “மயிலிறகே மயிலிறகே” என வருடும் வரிகளோடு அதே “அன்பே ஆருயிரே” தலைப்பில் வெளிவந்த இன்னொரு படத்திலும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். இவையெல்லாம் தன்னைப் பிரச்சாரப்படுத்திக் கவர்ந்து கொண்ட வாய்ப்புகள் அல்ல. அவர் மீதான ஈர்ப்பால் தானாகத் தேடி வந்தவை. கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை; அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.இன்னொரு பரிமாணமும் இருக்கிறது, அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும். தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத்தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி. கானா பிரபா

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

விரைவில் – சுருக்கமான வடிவில் வெளியாகிப் பல பத்தாண்டுகள் கடந்தும் இன்றளவும் பொன்னியின் செல்வன் புதினத்திற்கு வாசிப்பாளர்களிடம் வரவேற்பு குன்றாமல் இருப்பதே, இலக்கிய உலகில் கல்கி பதித்துள்ள அழிக்க இயலாத முத்திரைக்குச் சான்று. மொத்தம் 5 பாகங்களில் 2000-க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட இந்நாவலை இன்றைய அவசரகால உலகில் வாசிக்க இயலவில்லை என்ற குரல்களை ஆங்காங்கே கேட்க முடிகிறது. இந்தக் குறையை நீக்கும்வண்ணம், இதுவரை வாசிக்காதவர்களுக்கு ஒரு அறிமுகமாகவும், மீள் வாசிப்பு செய்ய விரும்புவோருக்கு ஒரு துரித வாசிப்புக்கான வழிவகையாகவும், பொன்னியின் செல்வனின் சாரத்தை மட்டும் எடுதது, சுவை குன்றாது சுவடு வாசகர்களுக்காக சுருங்கத் தரவுள்ளார் எழுத்தாளர் சவிதா. காத்திருங்கள், அடுத்த அறிவிப்பு விரைவில்…

கரைசேராப் படகுகள் – 8

கரைசேராப் படகுகள் – 8

தொடர்கதை சேதி  சொல்லப்  போன மனுஷன்  வெள்ளையத்தேவன் மாதிரி  வெள்ளைப் பசுவைப் பிடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் குழம்பித்தான் போனாள் மரகதம். “மதனி, நான்தான் அந்த ஊருதானேன்னு மாடு வாங்க அண்ணனைக் கூப்பிட்டுகிட்டுப் போனேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மாட்டை ஓட்டிச் சென்றான்   மாணிக்கம். ‘வெளைஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேர்றதுக்கே பணத்துக்கு  பவுசத்து நிக்கயிலே, இந்த மனுஷன் கூறு கெட்டுப்போய்  மாட்டைப் புடிச்சிட்டு வந்துட்டாரே’ன்னு மனதிற்குள்  பயந்த மரகதம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “சரி… சரி… வெளக்கு வைக்கப் போவுது. வீட்டுக்கு வந்து கஞ்சித் தண்ணி குடிச்சிட்டு, பொறவு களத்து காவலுக்கு வரலாம்”  என்று  கணவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அருக்காணி  ஆய்ந்து வச்ச கீரையெல்லாம்  சிவப்பு நிறத்தில் மஞ்சள் பூ போட்ட புடவை முந்தானையை விரித்து மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள் மரகதம். “அடியே…. எத்தனை பேரு வேலை செஞ்சாங்க? எவ்வளவு வேலை செஞ்சாங்கன்னு  சொல்லாமலேயே கிளம்பறயே…”  என கூப்பாடு போட்டார் செந்தாமரை. “ஆம்பள ஆளு 25, பொம்பள ஆளு 10, நம்ம அருக்காணியை எனக்கு ஒத்தாசைக்கு வச்சிருந்தேன். கணக்கு தீர்க்கும்போது  அவ வந்து நிக்கப் போறா. அவ கணக்கை  நான் பாத்துக்கறேன்” என்று படபடவென்று சொல்லிக் கொண்டே நடந்தாள் மரகதம். அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே பக்கத்தில் ஓடினார் செந்தாமரை. நாலு தளை தாண்டியதும்  கோவாலு  நாயக்கர் தோட்டம் வந்தது. “அண்ணாத்த, புள்ள பெத்தவளுக்கு கத்தரி பிஞ்சும் முருங்கைப் பிஞ்சும் பறிச்சுகறேன்” என்று தூர நிக்கற உருவத்தைப் பார்த்துக் கத்திவிட்டு வேகமாக கத்தரி பிஞ்சைப் பறிச்சா. “மச்சான் ரெண்டு முருங்கை பிஞ்ச ஒடியேன்”னு சொன்னவள், காய்களைப் பறிச்சதும் செந்தாமரை தோளில் இருந்து துண்டை எடுத்து அதுல பறிச்சதெல்லாம் போட்டு மூட்டை கட்டிக்கொண்டு நடையைக் கட்டினர் இருவரும்.  வீட்டிற்கு வந்ததும் இருவரும் அரப்புப்  பொடி போட்டு நன்கு குளித்துவிட்டு வந்தனர். “எலே செந்தாமரை, இன்னிக்கு ஏன் இவ்வளவு நேரம்?” என்று  கேட்ட  அம்மாவுக்கு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே, களத்து காவலுக்குப் போனதில் இருந்து முருங்கைக்காய் பறிச்சது வரைக்கும்  வெட்டி ஒட்டி படம் ஓட்டினார் செந்தாமரை.  காதில் தொங்கிய  பாம்படம் ஊஞ்சல் ஆட, மஞ்சள் நிறத்தில்  ஓரத்தில் மட்டும் காபி நிறத்தில் லேசான  கோடு போட்ட புடவை முந்தானையால் அடிக்கடி முகத்தை துடைத்துக் கொண்டும் ரவிக்கை அணியாத  மேலுக்கு  விசிறி   விட்டுக் கொண்டும் கதை கேட்டாள் பட்டம்மா பாட்டி. பின்பக்கம் இருக்கும் சமையல் அறையில் அடுப்பை ஊதி ஊதி நொந்து கொண்டிருந்த மரகத்திற்கு, ‘ஆத்தாளும் மவனும் அப்படி என்னதான் பேசுவாங்களோ!” என்று மனசுல உலை கொதித்தது. ஒரு வழியாக  சமைத்து  முடித்து   சாப்பாடு தட்டில்  வரும்போது  இரவு  ஏழு மணி சங்கு கூவியது. “ஏண்டி.. இந்த பச்ச புளிக்குழம்புக்கும், பருப்புத் துவையலுக்குமா இம்புட்டு நேரம்?” என்று வியாக்கனம் பேசினார் பட்டம்மா.  “ம்… உங்க அதட்டலுக்கு நான் பயப்படலாம், பச்சை மட்டை கூடவா பயப்படும்?”  என்று  வெடுக்கென்று  பதில் சொல்லிட்டு, “ஏனுங்க, நாளைக்கு கழிச்சுப் போட்ட புளியமரத்தை வெறவுக்கு ஏத்தி அனுப்புங்க” என்று பட்டம்மாள் மேலிருந்த எரிச்சலைக் கணவனிடம் காட்டினாள் மரகதம். நாலு முழ வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு, துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு, நீண்ட மூங்கில் கழியை ஒரு கையிலும்  லாந்தர் விளக்கை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு நின்ன  செந்தாமரையைப் பார்த்து, “என்  ராசா அப்படியே  மாறு வேசத்தில வரும் ராசராச சோழனாட்டம் இருக்கேடா”  என்று பட்டம்மா நெட்டை முறித்தாள். இதை ரசித்துக்கொண்டே தூக்குச் சட்டியை எடுத்துவந்து கொடுத்து, “மாமா, காசற கீரை சாதம். நிறைய  பூண்டு போட்டு நல்லெண்ணெய்யில்  பண்ணது; வீணாக்கிபுடாதீங்க. பருப்பு துவையலும் வச்சிருக்கேன். உங்களுக்குத்தான் வாயில்  வேப்பங்குச்சியை வச்சதுமே வயிறு பசிக்குமே…” என்றாள் மரகதம். “நாளைக்கு அமட்டச்சிக்கு  சொல்லணும். புனிதாவுக்கு தலைக்கு ஊத்த பச்சில மருந்தைத் தேடி எடுத்து வரணும். இதெல்லாம் முடிச்சிட்டு அப்பறம் வயக்காட்டுக்கு போ” என்று மரகதத்திற்குக் கட்டளையிட்டார் பட்டம்மா. “மரகதம் நீ சீக்கிரம் வந்து மாத்தினாதான் ஆச்சு. எனக்கும் நிறைய வேலையிருக்கு. ஐயர்கிட்ட  பேரு வாங்கணும்; பொண்ணுங்களுக்கும்  அங்காளி, பங்காளிக்கும்  சொல்லிட்டு வரணும். டவுனுக்குப் போய் காப்பு வாங்கணும்” என்று இழுத்த செந்தாமரையிடம்,  “என்னது..! காப்பா?” என்று மாமியாரும் மருமகளும் ஒத்து ஊதினார்கள். “தவள  மாட்டிகிச்சு” என்று செந்தாமரை நினைத்தார். தொடரும் சாம்பவி சங்கர்

பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

பேராசிரியரைப் பெயர் சொல்லி அழையுங்கள்

ஐரோப்பாவில் உள்ள பல்கலையில் வருகை தரு ஆராய்ச்சியாளராகச் சேர்ந்த புதிதில், பேராசிரியரை வழக்கம்போல் Sir என்று கூப்பிடத் தொடங்கினேன். முதல்முறை ‘அவ்வாறு அழைக்க வேண்டாம்’ என்று கூறிய அவர், இரண்டாம் முறையும் தவறி அழைத்தபோது சார் என்று சொல்ல வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறி, அவர் பெயரைச் சொல்லி அழைக்கும்படி கூறினார். ஆங்கிலத்தில் பெயர் சொல்லி அழைத்தலே மரியாதைக்கு உரியதுதான் என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. நம்மவர்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது அவர்களை Sir என்று அழைக்க ஆரம்பித்து, பிற்பாடு அக்கலாச்சாரம் அனைத்து மட்டத்திலும் வேரூன்றி விட்டது. சார் என்று தங்களை அழைத்தலை எந்த ஐரோப்பிய, அமெரிக்க அல்லது வளர்ந்த நாடுகளின் பல்கலைப் பேராசிரியர்களும்/ஆராய்ச்சியாளர்களும் சற்றும் விரும்புவதில்லை. உளவியல் ரீதியாகவே தாங்கள் இவ்வாறு அழைக்கப்படுவதை அவர்கள் வெறுக்கிறார்கள். தங்கள் அறைக்கு எந்த மாணவர் வந்தாலும் சரிசமமாக அமர வைத்தே பேசுகிறார்கள் /விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் எந்த இடத்திலும் அடிமைத்தனம் இருக்காது. சர்வதேசப் பல்கலையில் பி.எச்டி / முதுமுனைவர் ஆய்வுப் பணியிடங்களுக்குப் பேராசிரியர்களைத் தொடர்பு கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியத் தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். உயர்கல்வி மற்றும் அயலகப் பணிகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு இந்தத் தகவல்கள் பயன்படும் என்று நம்புகிறேன். மின்னஞ்சலின் துவக்கத்தில் ‘Dear Sir/Madam, Respected Sir/Madam’ என்று துவக்குவதை அறவே தவிர்க்க வேண்டும்.. எனவே, இ-மெயிலில் Sir என்று தொடர்ந்து பயன்படுத்துவது நமக்கான வாய்ப்பை நாமே கெடுத்துக்கொள்வது போன்றதாகும். Dear Prof. XXX அல்லது Dear Dr. XXX என்று பெயருடன் இ-மெயில் ஆரம்பித்தல் நலம். இதைப்போலவே இ-மெயிலின் இறுதியில் Thanking you sir என்பதையும் தவிர்க்க வேண்டும். மெயிலின் எந்த ஒரு இடத்திலும் Sir என்பது கட்டாயம் இருத்தல் கூடாது. சுருக்கமான சுய அறிமுகத்துடன் எத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளோம்/பெற விண்ணப்பித்துள்ளோம் என்பதைக் கூறி விண்ணப்பிக்கும் பதவிக்கு/படிப்பிற்கு அப்பேராசிரியரின் ஆய்வுக் குழுவைத் தேர்ந்தேடுத்த காரணத்தையும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும். அதற்கு முன்னர் அக்குழுவிற்கு விண்ணப்பிக்கும் தகுதி நமக்கு ஓரளவேனும் இருக்கிறதா என்ற சுய பரிசோதனை செய்வது சாலச் சிறந்தது. அக்குழுவினர் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஈடுபடும் ஆய்வுத்துறை பிரிவுகள், பெற்றுள்ள நிதியுதவி, பேராசிரியரின் அனுபவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தொடர்பு கொள்ள வேண்டும். அப்பேராசிரியரின் சிறப்புரைக் காணொளி ஏதேனும் Youtube போன்ற ஊடகங்களில் இருந்தால் அவற்றைக் கண்டும் அவரது ஆராய்ச்சி ஈடுபாட்டை, மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனை அறியலாம். அப்பேராசிரியரின் குழு வெளியிட்டுள்ள ஓரிரு சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சொல்லி அவற்றின் உள்ள ஆய்வு முடிவுகள் நம்முடைய ஆராய்ச்சி ஆர்வத்துடன் ஒத்துப்போவதைச் சுருக்கமாக குறிப்பிடலாம்.. நம்முடைய தனித்திறன்களையும் (skills) குறிப்பிடலாம். தனிப்பட்ட முறையிலான சுருக்கமான ஆராய்ச்சி சுய விவர அறிக்கையை (CV) கட்டாயம் இ-மெயிலில் இணைக்க வேண்டும். அதில் பக்கம் பக்கமாகக் கதை எழுதாமல், முக்கிய ஆய்வுக் கட்டுரை வெளியீடுகள், வாங்கிய விருதுகள், பங்கேற்ற கருத்தரங்குகள் (conference) மற்றும் செமினார் நிகழ்வுகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு கல்வித் தகுதி போன்ற பொதுவான பிற தகவல்களை இணைத்தால் போதுமானது. இதற்கான மாதிரி CV-க்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. பி.எச்.டி-க்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் தன்னுடைய உத்தேச ஆராய்ச்சித் திட்டம் (Proposed research work) குறித்த ஒரு பக்க அறிக்கையை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். தாங்கள் முதுகலை படிக்கும்போது ஏதேனும் ஆய்வுக் கட்டுரை (Research article) /காப்புரிமை (Patent) எழுதி வெளியிட்டிருந்தால் அதன் Soft copy-யை இ-மெயிலுடன் இணைத்தல் நலம். இது அவர்களின் தேர்வை இன்னமும் உறுதிப்படுத்தும். இ-மெயிலின் Subject மற்றும் எழுத்துப் பிழைகள், ஆங்கில இலக்கணக் குறைபாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி, பிழையின்றி அனுப்ப வேண்டும். இது மிக முக்கியமானது. ஒரே இ-மெயிலை காப்பி செய்து பல பேராசிரியர்கள்/ ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும். இது தனிப்பட்ட ஆய்வு/ வேலை வாய்ப்பு என்பதால் ஒவ்வொரு பேராசிரியர்/ ஆராய்ச்சியாளருக்கு அனுப்பும்போதும் அதீத கவனம் கொண்டு நேரம் செலவழித்து அனுப்புவதில் தயக்கம் காட்டுதல் கூடாது. பி.எச்.டி-க்கு விண்ணப்பிக்கையில் ஒரு பேராசிரியர் /ஆய்வாளர் தன் ஆய்வகத்தில் காலிப் பணியிடம் இல்லை பதில் என்று சொன்னாலும் அவரது இ-மெயில் முகவரியை தவறாது சேமித்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் முது முனைவர் (Post-doctoral) ஆராய்ச்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கையில் அவரை மீண்டும் தொடர்பு கொள்ள அது வசதியாக இருக்கும். அனைத்துப் பேராசிரியர்களும் நாம் அனுப்பும் இ-மெயிலுக்கு பதில் கூறுவது இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலும் சர்வதேசப் பேராசிரியர்கள் மாணவர்களை Skype போன்ற ஊடகங்கள் மூலமே தொடர்பு கொள்வார்கள் என்பதால், நேர்முகத் தேர்விற்காக அவர்கள் தொடர்பு கொள்ளும் முன்னர் யாரேனும் நண்பருடன் இணைந்து மாதிரி Skype உரையாடலை மேற்கொள்வது பதற்றமடைதலைக் குறைக்கும். தட்டுங்கள் திறக்கப்படும், தன்னம்பிக்கையோடு தட்டுங்கள் வாய்ப்புகள் தானாகவே வழி திறக்கும். ஆனந்தகுமார் சூசைமாணிக்கம், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சி அறிவியலாளர், மாட்ரிட், ஸ்பெயின்.

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

“உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையில்தான் சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்” என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவை இன்றும் சொற்களாகவேதான் இருக்கின்றனவேயன்றி, செயலாக்கம் பெறவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது தமிழக அமைச்சரின் நேற்றைய செயல். ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஆறாவது முறையாக அமைச்சராகவும் பதவியில் இருக்கும்  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு செயலை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள  பாலவநத்தம் கிராமத்தில், அமைச்சரைக்கண்டு தனது கோரிக்கை குறித்து  மனு அளிக்க வந்த ஒரு பெண்ணின் தலையில், தன் கையிலிருந்த பேப்பரால் அமைச்சர் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல்கொடுப்பவர்களும் அமைச்சரின் இந்த ஆனவப் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதுடன் தேசிய மகளிர் ஆணையம் அமைச்சரமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பாஜக வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வழக்கம்போலவே செலக்டிவ் பாலிடிக்ஸ் மனப்பான்மையுடன் கள்ள மௌனம் காக்கின்றன. சற்றே துணிவுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்களை மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடக்கி வைக்கும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. சமுக வலைத்தளங்களில் நொடிக்கொருமுறை வலம் வரும் இது போன்ற காணொலிகளைக் காணும் எந்தப் பெண்களும், இனி எப்படி மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முற்படுவார்கள்? தங்களுக்கான உரிமைகளையோ, தேவைகளையோ எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்? பலர்கூடி நிற்கும் பொதுவெளியில் மனு கொடுக்கச் செல்லும் பெண்களுக்கே இந்த நிலைதான் இங்கு. தனது அதிகாரத்தின் வலிமையை விளிம்புநிலை மக்களிடம் காட்டுவதுதான் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களுக்கான மாண்பா? பொதுவாக அரசியல்வாதிகளின் அதிகார போதையே ஏழை மக்களின் மீது கை வைக்கும் துணிச்சலைத் தருகின்றது. அதுவும் பெண்கள் என்றால், அந்தத் துணிவு பன்மடங்காகப் பெருகி விடுகிறது.  மூச்சுக்கு மூச்சு, சமூக நீதியை வலியுறுத்தும் கட்சியிலிருந்துதான் இப்படியொரு மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஐ சமூகநீதி நாளாக அறிவிப்பதனால் மட்டும் சமூகநீதி பிறந்துவிடாது. அதன் ஓர் அங்கமான பெண் உரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும்  பெரியார் காட்டிய பாதையில் நடப்பதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, சமூக நீதி என்பது குறிப்பிட்ட இனத்திற்கானது இல்லை,  இச்சமூகத்தில் உள்ள அனைவருக்குமானது. குறிப்பாக ஆயிரமாயிரமாண்டுகளாக  பள்ளங்களிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் புதையுண்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கானது. அந்தப் பள்ளங்களைச் சமன் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியேயன்றி தங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான இடங்களில் மட்டுமே பேசி, கைதட்டு வாங்குவதல்ல என்பதை அமைச்சரும், கட்சி மேலிடமும் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி சூடுபிடிக்கத் துவங்கிய சில மணி நேரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே, “அமைச்சர் என்னை அடிக்கவில்லை, அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என விளக்கமளித்திருப்பது – விளக்கமளிக்க வைக்கப்பட்டிருப்பது – நகைச்சுவையின் உச்சம். இன்றைய முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரை அடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி இப்போது நம் நினைவில் மீண்டும் வருகிறது. தன் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் அடிக்கும் உரிமையை எந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது? ஒரு சாமானியப் பெண்ணைப் பொதுவெளியில் அலட்சியமாக நடத்தும் அரசியல்வாதிகள், இதுபோன்ற சாமானியர்களால்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் பெண்களை அராஜகமாக நடத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களோ, மேன்மைதாங்கிய(!) மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே, இது மக்களாட்சி என்ற நம்பிக்கையை உருவாக்கும். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவரைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உருவாகும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பதவி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி மக்கள் அனைவரையும் சமமாக மதிப்பதே உண்மையான சமூக நீதி. அதுவே உண்மையான திராவிட மாடல். எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி அவமதிப்பது திராவிட மாடல் அல்ல; அது சட்ட விரோதம். ரமாதேவி இரத்தினசாமி

விராட பருவம்

விராட பருவம்

திரை விமர்சனம்வர்க்க பேதம், சாதி பேதம் இவற்றின் அடிப்படையில், ஆதிக்க வர்க்கமும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து, ஆண்டாண்டு காலமாக நடத்தி வரும் கொடுமைதான், அப்பாவி மக்களின் மீது பல்வேறு வகையில் தொடரும் தாக்குதல். சுதந்திரத்திற்குப் பின்பும், அதற்கான தீர்வு முழுமையாகக் கிடைத்திராத நிலையில், அவர்களின் இரட்சகர்களாக ஆங்காங்கே மக்களின் போர்க் குழுக்கள். அக்குழுக்களின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், எதிர்பார்க்கும் தீர்வுகள்,  நடைமுறைக்குச் சாத்தியமா என்பதெல்லாம், இன்னமும் விமர்சனத்துக்குரியவைதான். இது ஒருபுறம் இருக்க, இந்த யுத்தப் பின்னணியில் முகிழ்த்த அழகான காதல் கதைதான், வேணு உடுகுலா இயக்கத்தில்,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் வெளியாகி உள்ள தெலுங்குத்  திரைப்படம்,  ‘விராட பருவம்’ . ஒரு கூத்துக் கலைஞனின் (சாய் சந்த்) மகள் வெண்ணிலா (சாய் பல்லவி). அப்பாவின் அன்பு மட்டுமல்ல, அவரது  பாடல்களும்கூட  அவளை வளர்த்தன.  சமூக அக்கறை கொண்ட கவிதைகளை எழுதிய ‘ஆரண்யன்’ மீது அவளுக்கு  ஈர்ப்பு. அப்பாவி கிராம மக்களின் மீது  அராஜகத்  தாக்குதலை ஏவிய காவலர்களைத் துவம்சம் செய்த ரவி தோழர்தான் (ரானா டகுபதி) ஆரண்யன் என்று அறிந்ததில், ஈர்ப்பு காதலாகக் கனிந்தது. அவளுக்கு அப்பாவும் அம்மாவும் (ஈஸ்வரி ராவ்) மணமுடிக்க முயற்சித்தபோது, அந்த உறவுக்கார மாப்பிள்ளையை (ராகுல் ராமகிருஷ்ணா) மறுதலித்து, வீட்டை விட்டு வெளியேறி,  ரவி குறித்த வெண்ணிலாவின் தேடல் துவங்குகிறது. அந்தப் பயணத்தின் இடையே சந்திக்கும் ரவியின் தாய் (ஜரினா வஹாப்), சமூகச் செயற்பாட்டாளர் சகுந்தலா டீச்சர் (நந்திதா தாஸ்), பின்னர் தோழர் பரதக்கா (பிரியாமணி), தோழர் ரகு (நவீன் சந்திரா), காவல்துறையின் அடக்குமுறை என இவை எல்லாவற்றையும் தாண்டி, வெண்ணிலாவின் தேடல் முற்றுப் பெற்றதா, முழுமையும் பெற்றதா என்பதுதான், இப்படத்தின் மொத்தக் கதை. மக்கள் போர்க் குழுவின் ஈடுபாட்டில், செயல்பாட்டிலான உறுதி, தீவிரத் தன்மை, ராணா டகுபதியின் நடிப்பில் தத்ரூபமாகப்  பிரதிபலிக்கின்றது. அதையும் தாண்டி மிளிருகிறது, சாய் பல்லவிக்குள் ஏற்படும் காதலின் பரிணாம மாற்றமும்,  அதன் வெளிப்பாடும்! ‘ஷாம் சிங்கா ராய்’ மைத்ரேயியைத் தொடர்ந்து, ‘ விராட பருவம்’ வெண்ணிலாவும், சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்கு அணி சேர்ப்பாள். துணைப் பாத்திரங்களில் இடம்பெற்ற கலைஞர்கள், கிடைத்த வாய்ப்பில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளதன் வாயிலாக, இணைப் பாத்திரங்களாகவே நிமிர்ந்து நிற்கின்றனர். ‘அம்மாவோட வார்த்தை எனக்குப் பிடிவாதத்த கத்து கொடுத்துச்சுன்னா, அப்பாவோட பாட்டு,  வாழ்க்கைப் பாடத்த கத்துக் கொடுத்துச்சு’; ‘ஒரு சில விஷயத்துக்குக் காரணம் இருக்காது மாமா, காரியம் மட்டும்தான்’; ‘காதலோட ஆழத்தைப் புரிஞ்சுக்க முடியாதவங்க, உயிரோடு இருந்தாலும் பொணத்துக்குதான்  சமம்’; ‘ஒரு மனுஷன காதலிக்கறதுக்குக்  காரணம் வேணுமா டீச்சர்? பசி, தூக்கம், தாகம், கண்ணீர் இதெல்லாம் எப்படி உள்ளுக்குள்ள இருந்து, தானா வெளியே வருதோ, அதே மாதிரிதான் காதலும் டீச்சர்’; ‘அப்போ, காதல்ங்கறது சீர்கேடா, அப்போ ஜெனிய காதலிச்ச காரல் மார்க்ஸ், ஜியாங்க காதலிச்ச மாவோ, க்ருப்பாஸ்கய காதலிச்ச லெனின்.. அவங்களோடதும் சீர்கேடுதானா?’ (வெண்ணிலா) ‘அதிகார வர்க்கத்த கேள்வி கேட்டா போதும், தடா சட்டத்தில போடுவாங்க, அப்பாவிகள என்கவுண்டர் செய்வாங்க, தேர்தலுக்காக வாக்குறுதிகள அள்ளி வீசி அடிமை ஆக்குவாங்க… ஞாபகம் வச்சுக்கோங்க, இந்த இயற்கையோட மண்ணின் வளம் ஒங்களோடது’; ‘எழுது, எந்தப் பெண்ணுக்கு அநியாயம் நடந்தாலும், எனக்குக் கிடைத்த தண்டனைதான்  கிடைக்கும்’ (தோழர் ரவி) ‘மனித உரிமை பற்றிப்  பேசினா போதும், கொன்ன பொணம்கூடக் கிடைக்காத மாதிரி பண்ணிடறாங்க..’ (சகுந்தலா டீச்சர்) ‘நாமகூட,  மக்களுக்காகத்தான் வேலை செய்றோம். நாம வாழ்வதற்காக வேலை செய்கிறோம், அவங்க சாகறதுக்கும் துணிஞ்சு  போராடிட்டு இருக்காங்க’ (காவல்துறை அதிகாரி) -ஆங்காங்கு நறுக்குத் தெறித்தது போலான,  சிந்தனைக்குரிய வசனங்கள் ! ஆந்திரா, தெலுங்கானா, கேரளா எனப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து அசத்திய, டேனி சான்சேஸ் லோபஸ், திவாகர் மணி ஆகியோரின் கண்கவர் ஒளிப்பதிவும், சுரேஷ் பொப்லியின்  கதையோட்டத்திற்கு நெருக்கமான இசையும், பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. குழந்தைக்குப் பெயர் வைத்து ‘லால் சலாம்’ சொன்ன நொடியில், துப்பாக்கி ரவையால் அந்தப் பெண் போராளியின் தலை சிதறிப் போவது, மயிர்க்  கூச்செறியும் காட்சி.  பாடல்கள் அத்தனையும் பொருள் பொதிந்தவை, இனிமையானவை ! ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. முற்றிலும் மாறுபட்டதொரு பின்னணியில், சாய் பல்லவியின் அழகும் நடிப்புத் திறமையிலுமான வண்ணத் தூரிகையால், இயக்குனர் வேணு உடுகுலா வரைந்த அழுத்தமான, அழகான ஒரு காதல் ஓவியம்தான், ‘விராட பருவம்’. மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் தொண்ணூறுகளின் இறுதியிலேயே வந்து விட்டாலும் இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 2015 வரை உச்சத்தில் இருந்த பாடலாசிரியர். பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து, பழனி பாரதி என்று தனி ஆளாகத் திரைத்துறையில் கோலோச்சிய பாடலாசிரியர் வரிசையின் கடைசிக் கண்ணி அவர்தான். இனி தனி ஒருவருக்கு அந்த இடம் சாத்தியமில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகு அப்படி ஒரு நிலையில் அவரும் இருந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் அவர் முக்கியமானவர். அவருடைய வெற்றி என்பது யுவன் மற்றும் ஜி.வி யின் வெற்றியும்தான். நிறைய பேர் நா.முத்துக்குமார் குறித்துப் பேசுகிறபோது, யுவனைப் பேசுகிற அளவுக்கு ஜி.வி. குறித்துப் பேசுவதில்லை. ஆனால் வெயில், கிரீடம், அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய ஜி.வி.யின் முக்கியமான ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமார்தான். ‘தலைவா’விலும் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய பாடல்கள் உண்டு (பலர் ஜி.வி.இசையமைத்த பாடல்களையும் யுவன் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர்). இந்த இருவரைத் தவிர பிறருக்கும் எழுதியிருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரும் ஊடுருவி விட முடியாத ரஹ்மானின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி, ஆறு படங்களில் பாட்டு எழுதி விட்டார் (பல்லேலக்கா – சிவாஜி, வளையபட்டித் தவிலு- அழகிய மகன், ராத்திரியின் சொந்தக்காரா- பார்த்தாலே பரவசம், டாக்ஸி டாக்ஸி- சக்கரக்கட்டி, ஜோதா அக்பர், சர்வம் தாளமயம்) பட்டுக்கோட்டையின் பலம் சமூகம். கண்ணதாசன் மரபு சார்ந்த தமிழ் வாழ்வியலையும் பக்தி மரபையும் எளிமைப்படுத்தித் திரையில் தந்தவர். வைரமுத்து மரபு இலக்கியத்தை நவீன சிந்தனைகளோடு இணைத்தவர்; கூடுதலாக கிராமிய வாழ்வியலையும் நவீன வாழ்வின் பல்வேறு கூறுகளையும் திரையில் வடித்தவர். அறிவுமதி தனக்கான தனித்துவத்துடன் கூடிய கவிஞர்; அப்துல் ரகுமானின் திரையுலக பிம்பம்‌. பழநி பாரதி நவீன மெட்டுகளுக்கேற்ப, தாளங்களுக்கேற்ப கவித்துவத்துடன் கூடிய புதுமையான வரிகளைக் கண்டறிந்தவர். தாமரை காதலின் பெண் மொழியை பாடல்கள் வழி பேசியவர். வாலி இந்தக் கணக்கில் வர மாட்டார். அவர் பாத்திரத்தின் வடிவத்தைத் தானும் அடைந்து விடும் நீர் போன்றவர். அவர் பலம், பலவீனம் இரண்டுமே இதுதான். ஆனால், இயற்கை சார்ந்த ஜென் மனநிலையையும் பித்தேறிய காதலின் உளறல்களையும் தனித்துவமாக பாடல்களில் வடித்தவர் நா.முத்துக்குமார்தான். ‘மின்சாரக் கம்பியின் மீதுமைனாக்கள் கூடு கட்டும்’என்பதெல்லாம் அழகிய படிமம். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்காற்றிடம் கோபம் கிடையாது’என்று கேட்பதற்கு மரங்களோடு உறவாடுகிற மனநிலை வாய்த்திருக்க வேண்டும். ‘தாராளமா மனசிருந்தாகேரளான்னு தெரிஞ்சுக்க’என்றெழுதிய ரசனை நிறைந்த குறும்புக்காரன். ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்கு தானே மருந்து’என்றார் வள்ளுவர். பிற நோய்களுக்கு மருந்து வேறிடத்தில் இருக்கும்; காதல் நோய்க்கு அதுவே மருந்து என்கிற வள்ளுவரின் சிந்தனையை‘காதல் நோய்க்கு மருந்து தந்துநோயைக் கூட்டுமே’என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றவர். பெண்ணின் கண்களைப் பார்த்து‘உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களென்பேன்’என்று சொல்வதற்கெல்லாம் எப்படிப்பட்ட ரசனை இருக்க வேண்டும்..!! ஆழமாக மட்டுமல்ல, எளிமையான வரிகளிலும் காதலைச் சொல்லி விட முடியும் அவரால்.‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லைஅவளுக்கு யாரும் இணையில்லைஅவள் அப்படி ஓன்றும் கலரில்லைஆனால் அது ஒரு குறையில்லை’என்பதுதானே சாமானியக் காதலனின் குரலாக இருக்க முடியும்..! ‘கொடுத்ததை திருப்பி நா கேட்ககடனா கொடுக்கலையேஉனக்குள்ளதானே நா இருக்கேன்உனக்கது தெரியலயேபாக்காத பாக்காதகுத்தும் பார்வையால்என்ன பார்க்காதேபோகாத தள்ளிப் போகாதேஎன்ன விட்டு விட்டுதள்ளித் தள்ளிப் போகாத’எவ்வளவு எளிமையான சொற்களில் மிகப்பெரிய உணர்வு சொல்லப்பட்டிருக்கிறது..! ‘கதைகளைப் பேசும் விழியருகேஎதை நான் பேச என்னுயிரே’என்று சொற்கள் திகைத்து நிற்கிற இடத்தையும் எல்லா கவிஞர்களையும் போலவே இவரும் அடையாளம் காட்டியிருக்கிறார். ‘பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்‌‌காற்றுவெளியில் கலந்தே இருக்கும்சாம்பல் உதிரும்.. வார்த்தை உதிருமா?பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்உயிரும் போகும்.. உருவம் போகுமா?உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்‌விரல்கள் இன்று எங்கே?தோளில் சாய்ந்து கதைகள் பேசநமது விதியில் இல்லைமுதல் கனவு கண்டிடும் முன்னரேதூக்கம் கலைந்ததே’என்றெல்லாம் எழுத, காதலின் அமானுஷ்யத்தை உணர்கிற அரூப மொழியில் உழன்றவனாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் குறித்து அவர் எழுதிய பாடல்கள் ஊரறிந்தவை. பெண் குழந்தை பற்றிய திரைப்படப் பாடல்களில் ‘அபியும் நானும்’ படத்தில் வருகிற ‘வா வா என் தேவதையே’ பாடல்தான் எனக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும் (வைரமுத்து).ஆனால், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் கவித்துவமும் கற்பனையும் நன்றாக இருக்கும்.‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’என்பது அழகான தொடக்கம்; சந்தேகமே இல்லை. ‘இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லைசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்மலையின் அழகோ தாங்கவில்லைஉந்தன் கைகள் பிடித்து போகும் வழிஅது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்பது அழகான ஏக்கம்; அதிலும் சந்தேகமே இல்லை. ‘தூரத்து மரங்கள் பார்க்குதடிதேவதை இவளா கேக்குதடிதன்னிலை மறந்து பூக்குதடிகாற்றினில் வாசம் தூக்குதடிஅடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?உனது புன்னகை போதுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்ற வரிகளிலும் அதே வாசம். ‘உன் முகம் பார்த்தால் தோணுதடிவானத்து நிலவு சின்னதடிமேகத்தில் மறைந்தே பார்க்குதடிஉன்னிடம் வெளிச்சம் கேட்குதடிஅதைக் கையில் பிடித்து ஆறுதல் உரைத்துவீட்டுக்கு அனுப்பு நல்லபடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்கிற இடத்தில் டோஸ் ரொம்ப கூடி, காதல் பாடலின் மிகை வந்து விடுகிறது. சினிமா பாடலாசிரியர்களில் வைரமுத்துக்குப் பிறகு, கவிதைத் தொகுப்புகளும் நன்றாக அமைந்தது பழநி பாரதி, யுகபாரதி, முத்துக்குமாருக்கு மட்டுமே. கதை வடிவில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். இந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்குப் பதிலாக, இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படத்தான் தோன்றுகிறது. மானசீகன் ஓவியங்கள்: ரம்யா ரோஷன்

சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

1799, மே மாதம் 4-ம் தேதி. ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையைக் காக்க, திப்பு சுல்தான் விரைந்து செல்கிறார். தான் உயிரினும் மேலாக நம்பிக்கை வைத்திருந்த பூர்ணையாவும், மிர்சாதிக்கும், கமருதீனும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாறியதைக்கண்டு, ஒரு வினாடி பதைத்துத்தான் போனார். அவர்தான் வீரனாயிற்றே; உடைவாளைச் சுழற்றிக் களத்தில் இறங்கினார் திப்பு. எதிர்முகாமில் வெல்லெஸ்லி தலைமையில் ஏகாதிபத்தியப்படை. பெரும் போர் நடந்தது. போரின் நடுவே ஏதோ ஒரு துரோகியின் வாள் திப்புவைத் தாக்கியது. போர் முடிவுக்கு வந்து, வெள்ளையர்கள் திப்புவைத் தேடுகின்றனர். இறுதியில், ஒரு மன்னனுக்குரிய எந்த அடையாளமும் இன்றி, போர்க்களத்தில் வீரர்கள் உடல்களுக்கிடையில் கிடக்கிறது, மாவீரன் திப்பு சுல்தான் உடல். போர்முடிந்ததும், திப்பு சுல்தான் மகன்களும் மகள்களும் உறவினர்களும் வேலூர் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில், போர்க்களத்தில் உயிர் நீத்த ஒரே மன்னரான திப்புசுல்தான் வாரிசுகள்,வேலூர் சிறையில் வாளாவிருக்கவில்லை. வேலூர் கோட்டைக்குள் இருந்த சிப்பாய்கள், மீசை வைக்கக்கூடாது; தலைப்பாகை மாற்ற வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாட்டு கொண்டு வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் உத்தரவுகளை எதிர்த்து, சிப்பாய்கள் கனன்று கொண்டிருந்தனர். சிப்பாய்களின் எதிர்ப்பை திப்பு சுல்தானின் மூத்த மகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும், அரசியல் ரீதியாக உருமாற்றி வந்தனர். இறுதியில், 1806 -ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி, புரட்சிக்கான தேதி தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தத் தேதியில் புரட்சி நடைபெறவில்லை. பின்னர் 1806-ம் ஆண்டு, ஜூலை மாதம் 10-ம் தேதி நிச்சயிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில், ஜூலை 10-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, வேலூர் கோட்டைக்குள் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள், சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசீம், சுபேதார் ஷேக் ஹுசைன் ஆகியோர் தலைமையில் அணிவகுத்து, ஆங்கிலேய அதிகாரிகளையும், ஆங்கிலேய ராணுவ வீரர்களையும் சுட்டு வீழ்த்தினார்கள். கட்டாய தலைப்பாகை அமுல் படுத்திய கர்னல் மிக்கிராஸ் உட்பட, 14 வெள்ளை அதிகாரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். “வாருங்கள் நவாப், திப்பு சுல்தான் ஆட்சியைத் தொடருங்கள்” என்று, திப்பு சுல்தானின் மூத்த மகனை அழைத்தனர் சிப்பாய்கள். வேலூர் கோட்டைக்குள் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்பு சுல்தானின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால், அதிகாலை ஆர்க்காட்டிலிருந்து கர்னல் ராபர்ட் கில்லஸ்பி (Colonel Robert Gillespei) தலைமையில் பிரிட்டிஷ் படைகள் வந்து, புரட்சிக்காரர்களை வேட்டையாடியது.தன்னெழுச்சியாக எழுந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான பெரும் புரட்சி, வெந்து தணிந்தது. ஆனாலும், அந்தத் தீ நாளங்கள் அணைந்ததுபோல் தோன்றினாலும், அதில் புகைந்து கனன்று கொண்டிருந்த தீக்கனல்,1857-ம் ஆண்டு அடுத்த புரட்சிக்கு உந்து சக்தியாக இருந்தது என்பது வரலாறு. ஆனால், 1806 -ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உரிய இடத்தைப் பெறவில்லை என்பதுதான் கொடுமை. ஷாகுல் ஹமீது

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்

கடந்த 15 மாதங்களில் என்னுடைய பயன்பாட்டுக்கென அதிகபட்சமாக 400 – 500 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் போட்டு ஈருருளி ஓட்டியது போக, மீதி அத்தனை தூரங்களையும் மிதிவண்டியிலேயே பயணிப்பதன் அனுபவக் குறிப்புகள்: அலுவலகம் சென்று வருவது, இடையில் தேநீர் பருக, மதிய உணவுக்குச் செல்வது, அஞ்சல்/தூது அஞ்சல் அனுப்பச் செல்வது என, ஒரு நாளைக்கு சராசரியாக 20 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே சென்று வருகிறேன். வெளியூர் பயணங்கள், நகர எல்லைக்குள் பிறருடன் செல்வது, குடும்பத்தினருடன் ஆங்காங்கே சென்று வருவது, பெட்டிகள், மூட்டைகளை எடுத்துச் செல்வது போன்றவற்றிற்கு மட்டுமே மகிழுந்து. மற்ற நாட்களில் அதைத் தொடுவதே இல்லை. சில நாட்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு வேலைகள் இருந்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டிய அழுத்தம் இல்லாத நாட்களில், நகர எல்லைக்குள் 40 கிலோமீட்டர் கூட மிதிவண்டியில் பயணிப்பதுண்டு. எப்போதாவது கொஞ்சம் சோம்பலாக இருக்கும் நாட்களில் நகருக்குள் சென்றுவர, ஒரு வேலையை முடிக்க நேரம் குறைவாக இருக்கும்போது, கட்டுச்சிப்ப அலுவலகங்கள் சென்றுவர, மகிழுந்து பராமரிப்புக்கு விட்டிருக்கும்போது என அரிதிலும் அரிதாக மட்டுமே ஈருருளியை எடுப்பதுண்டு. 2009-இல் வாங்கிய BSA SLR Photon Freedom மிதிவண்டிதான். சன்னமான சுமைதாங்கி உண்டு. கியர் கிடையாது. Ralco, Bedrock, Hartex போன்றவற்றில் டயர் போட்டாலும் நைலான் டயர் விரைவில் தேய்ந்து விடுவதோடு எதிர்பாராத நேரத்தில் ஓட்டையாகி விடுவதால் இரப்பர் டயரே சிறந்தது என்று தோன்றுகிறது. கடந்த ஒரு வருடத்தில் கோயமுத்தூர் நகர எல்லைக்குள், தோராயமாக 2500 – 3000 கிலோமீட்டர் மிதிவண்டியில் ஓட்டியிருந்தாலும், பயணத்தொலைவு, கலோரிகளை அளப்பதற்குச் செயலி எதுவும் பயன்படுத்தவில்லை; திறன்மிகு கைக்கடிகாரமும் (ஸ்மார்ட் வாட்ச்) பயன்படுத்துவதில்லை. எப்போதுமே ஒரு லிட்டர் தண்ணீர் புட்டியை சுமைதாங்கியில் வைத்திருப்பதுண்டு. நிதானமாக அளவான வேகத்தில் செல்வதால் கபால கவசம் அணிவதில்லை. எப்போதாவது வெயிலுக்குத் தொப்பி அணிவதுண்டு. இதுவரைக்கும் மற்ற வண்டிகள் இடித்து விழுந்தது, சறுக்கியது, நாய்கள் துரத்தியது என்று எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி, மகிழுந்து என எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நம் மீது மோதக்கூடிய எதிர்பாராத விபத்தைத் தடுக்க வேண்டுமெனில் Be visible என்ற அடிப்படையை மறக்கக்கூடாது. ஒரு விநாடி யாரோ ஒரு ஓட்டுநர் கவனிக்கத் தவறுவதாலேயே விபத்து ஏற்படுகிறது. சைக்கிளை பைக் என்று விளிக்கும் நவயுக மிதிவண்டி வெறியர்கள், ஈருருளி ஓட்டுபவர்கள், மகிழுந்து ஓட்டுநர்கள் என எல்லோருமே மிகவும் அலட்சியமாக இருப்பது வாகனத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் எதிரொளிப்பான் (Retro Refelective Strip/Sticker) விசயத்தில்தான். இரவு நேரங்களில் be visible என்பது மிக முக்கியம். பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி ஓட்டி வரும் ஒரு நபரை நான்கு சக்கர வாகனங்களில் உள்ள A piller ஓரிரு நொடிகள் மறைத்து blindspot-ஐ ஓட்டுநருக்கு உண்டாக்கக் கூடியது. கணிசமான ஓட்டுநர்கள் அலைபேசியில் பேசுவது, உடனிருப்பவர்களுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபடுவது என வருகிறார்கள். குடிகார நாய்கள் வண்டி ஓட்டி வருவதும் நம் ஊரில் இயல்பானதாகிவிட்டது. இத்தகைய ஆபத்தான ஓட்டுநர்கள் தூரத்தில் உள்ள சின்னச்சின்ன அசைவுகளை எல்லாம் கவனித்து முகப்பு விளக்கின் dim, bright-ஐ மாற்றி மாற்றி அடித்துப் பார்த்தெல்லாம் வண்டி ஓட்டுவதில்லை. குத்து மதிப்பாக பிரேக்கையும், ஆக்சிலரேட்டரையும் மிதித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக நாம் அன்றாடம் reflective jacket போட்டும் வாகனம் ஓட்ட முடியாது. தினமும் இரவு வீடு திரும்புவபவர்களுக்கு மிதிவண்டியுடன் வரும் எதிரொளிப்பான் போதாது. நாமே சிவப்பு நிற 3M எதிரொளிப்பான் ஸ்டிக்கரை முன்னும் பின்னும் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டியதுதான் (முறைப்படி பார்த்தால் முன்புறம் வெள்ளை நிற எதிரொளிப்பான் மட்டுமே இருக்க வேண்டும். இருந்தாலும் சிவப்பு அல்லது மஞ்சள் பட்டையை ஒட்டுவதில் தவறில்லை). இரு சக்கரங்களுக்கும் முழுமையான Mud guard இல்லாத மிதிவண்டிகளை அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் பயன்படுத்தவே முடியாது. சாலைகளில் திடீரென சாக்கடை ஓடும், மழை பெய்த பின் மணிக்கணக்கில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும், வண்டியில் அடிபட்ட நாய் அல்லது பூனையின் உடல் சாலை முழுவதும் ஒட்டியிருக்கும். கண்ட இடத்தில் எச்சில் துப்பி வைத்திருப்பார்கள்; சில இடங்களில் வாந்தி எடுத்து வைத்திருப்பார்கள். எவ்வளவு பார்த்துப் பார்த்து ஓட்டினாலும் சில இடங்களில் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் காலை இரண்டையும் தூக்கிக்கொண்டு நேராக விட வேண்டியதுதான். அப்போதுதான் இரும்பு mud guard-இன் அருமை புரியும். காற்றில் ஆடிக்கொண்டே வரும் பிளாஸ்டிக் mud guard இருக்கும் மிதிவண்டிகளில் அவ்வப்போது எதிரொளிப்பானை mud guard மறைத்து விடுகிறது. இதை அறியாமல், ஆபத்தை உணராமல் பலர் இரவு நேரங்களில் செல்கின்றனர். சக்கரத்தின் கம்பியில் மாட்டியிருக்கும் ஆரஞ்சு வண்ண எதிரொளிப்பான் வில்லைகள் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டவை. அதன் முக்கியத்துவம் தெரியாத பலர் அவற்றைத் துடைப்பதே இல்லை; உடைந்துவிட்டால் புதியது மாட்டுவதும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அவற்றை கழட்டிவிட்டு புதியது மாட்டுவது அவசியம். சுமைதாங்கியும், இரும்பு mud guard-உம் இல்லாத நவயுக மிதிவண்டிகளை அன்றாடப் பயன்பாட்டுக்கு வைத்திருப்பது சவாலான செயல். நமக்குப் பயன்பட வேண்டிய பொருளே நமக்கு சுமையாக மாறிவிடக்கூடாது என்பது என் கருத்து. Gear உடைய, suspension வைத்த மிதிவண்டிகளின் இயல்பான பயன்பாடு பற்றித் தெரியவில்லை. கோயமுத்தூர் போன்ற சமதளமான நகரத்தில் அவற்றால் என்ன பயன் என்று நானறியேன். பஞ்சாங்கத்தைப் பார்த்து செவ்வாய் கிரகத்துக்கு இராக்கெட் விடுவதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். Gym-க்கு car-இல் வந்து நின்றுகொண்டிருக்கும் cycle-ஐ ஓட்டி கலோரிகளை எண்ணுவதை ஜீரணிக்கவே முடிவதில்லை. பல இடங்களுக்கும் நான் மிதிவண்டியிலேயே செல்வதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர் மிதிவண்டிக்கு மாறினார்கள். ஆனால் ஓரிரு மாதங்களில் அதைக் கைவிட்டுவிட்டு பழையபடி ஈருருளிக்குத் திரும்பிவிட்டனர். தனிப்பட்ட விருப்பம், தன்னூக்கம், ஈடுபாடு என்பதைத் தாண்டி அதற்கான முக்கிய காரணம் அவர்களது மிதிவண்டி டயர். அன்றாடப் பயன்பாட்டுக்கான மிதிவண்டியில் டயர் சன்னமாக இருக்க வேண்டும். நம் மக்கள் பெரிய button கொண்ட MTB அல்லது மிக சன்னமான track டயர் உள்ள ஒன்றை எந்தவிதமான யோசனையும் இல்லாமல் வாங்குகின்றனர். காதணிபாடி மாட்டி பாட்டுக் கேட்டுக்கொண்டே ஒருநாளும் சாலைகளில் சென்றதில்லை. அவ்வாறு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடியது என்பதோடு இசையை அவமதிக்கும் செயல். வெளியூர் செல்லும்பொழுது மிதிவண்டியை பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள bike stand-களில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடுவதால் இப்போதெல்லாம் வீட்டிலிருந்து சென்று வரும் taxi செலவும் இல்லை. நாளொன்றுக்கு 20 ரூபாய் நிறுத்தக்கட்டணம் மட்டுமே. வெயில் நேரத்தில் செல்வது பழகிவிட்டால் ஒன்றுமே தெரியாது. வியர்வை வந்தாலும் அலுவலகம் சென்றவுடன் பத்து நிமிடங்களில் இயல்பாகி விடுகிறது. சட்டை அழுக்காவதும் இல்லை. மழை நின்ற அடுத்த சில நாட்கள் சாலைகளில் உள்ள சேறு, சகதி காய்ந்து புழுதியாக பறக்கும். அதுவும் முகக் கவசம் அணிவதால் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் தலை முடி முழுவதும் புழுதியாக இருக்கும். அப்படியே சீவினால் சீப்பு நிறம் மாறுவது தெரியும்! Traffic jam என்ற பிரச்சினை ஒருபோதும் மிதிவண்டிக்காரர்களுக்குக் கிடையாது. ஈருருளிகளே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து மொத்தமாக நின்றுவிட்டாலும் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்து சென்று பத்து மகிழுந்துகளைத் தாண்டிய பிறகு இறக்கி வைத்து எப்போதும் போல ஓட்டிச் செல்லலாம். இதைவிட இன்னும் குறைவான நுகர்வுடைய minimalist வாழ்க்கை முறைக்குச் செல்ல மூன்று கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தை நடந்து மட்டுமே செல்வது என்ற இலக்கை 2023-க்கு செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். ஆர். எஸ். பிரபு

மகா மகா சாணக்கியன்

மகா மகா சாணக்கியன்

“தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட – இழிவாய்க் கருதப்பட்ட மக்கள், அதாவது தீண்டத்தகாதோர் –  கீழ் சாதியார் – ஈன சாதியார் – சூத்திரர் என்பனவாகிய, ‘பிறவி இழிவும் – பிறவி அடிமைத்தனமும், சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி, பிரவாகமும், வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கை கொண்டு, அதில் இறங்கி வேலை செய்தவர், அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி; ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கு விரோதி! இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான  நிலையில், நெருப்பின்மேல்  நின்றுகொண்டு வேலை செய்வதுபோல், வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் – இலக்கியமாகவும் விளங்கினார்.” இவ்வளவு அடைமொழிகளையும், அர்த்த மிக்க சொல்லாடல்களையும் தந்தை பெரியார் அவர்களால் பொழிந்து எழுதப்பட்டது யாருக்கு என்றால், பானகல் அரசர் என்று கூறப்படும் பனங்கண்டி இராமராய நிங்கர் அவர்களுக்குத்தான்! தந்தை பெரியார் நெஞ்சத்தில் ஆழமாகக் குடிகொண்ட இந்தப் பெரு மகனாரின் பிறந்தநாள் இந்நாள் (சூலை 9, 1866). பெருஞ்செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் முன்னோர்கள் ஆந்திராவின் பானகல்லு எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். அதன்பின் காளஸ்திரியில் குடியேறினர். காளஸ்திரி அரசர் குடும்பத்தோடு மண உறவு கொண்டவர்கள். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்தவர் – சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர். 1912 முதல் 1915 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு முத்திரையைப் பொறித்தவர். டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நீதிக் கட்சியின் வேர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1919ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி, பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் வாதிட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் பானகல் அரசர் அங்கம் வகித்தார். 1920ஆம் ஆண்டில் சென்னை மாநில முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். வழக்குரைஞர் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். உடல் நலக்குறைவு காரணமாக சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் பதவியிலிருந்து விலகியபோது, பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1923ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதம அமைச்சர் ஆனார். இவர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் பெற்ற உரிமைகளும், வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் அசாதாரணமானவை. 1) 1921ஆம் ஆண்டில் முதல் வகுப்புவாரி உரிமைச் சட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) இயற்றப்பட்டது.  2) பஞ்சமர், பறையர் என்ற பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று அழைக்கப்படுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 3) தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக ‘லேபர் கமிஷனர்’ என்ற தனி அதிகாரிகள் நியமனம். 4) ஆங்கிலேயர் வசமிருந்த சென்னை மாநில மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. (நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்குத் துணை போனது என்று வாய்க் கூசாமல் பேசுவோர்க்கு இது காணிக்கை)  5) சென்னைப் பல்கலைக்கழக சட்டம்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. 6) கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தலைமை ஆசிரியர்களின் அதிகாரத்தில் இருந்தது.  பெரும்பாலும் அவர்கள் பார்ப்பனர்களாக இருந்ததால், பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் நுழைவு என்பது தடையாக இருந்தது. இதனை மாற்றி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு என்று தனிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 7) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது (இந்தக் கால மருத்துவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வேண்டும்). 8) பார்ப்பனர்களின் கொட்டமாக இருந்து வந்த இந்துக் கோயில்களின் சொத்துகளைக் காப்பாற்ற, இந்து அற நிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (மத விஷயங்களில் அரசு தலையிடுகிறது என்று சத்தியமூர்த்தி அய்யர் போன்ற தலைவர்கள் போட்ட கூச்சல் கொஞ்ச நஞ்சமல்ல! நீதிக்கட்சிக்காரர்கள் பிராமணர்களை மட்டுமல்ல; கடவுளையும் அழிக்கக் கிளம்பி விட்டனர். மதத்தை அழிக்க முனைந்து விட்டனர் என்று முரட்டுக் கூச்சல் போட்டனர்). 9) நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவும் திட்டம் – தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கு வழி செய்யப்பட்டது. 10) சென்னையில் தியாகராயர் நகர் என்ற விரிந்த பகுதியை உருவாக்கிய வரும் இவரே! “மகா மகா சாணக்கியன்” என்று பார்ப்பனர்களால் கருதப்பட்டவர் பானகல் அரசர். தனது திரண்ட செல்வத்தைப் பொது வாழ்வுக்காகக் கொட்டியவர். தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பானகல் அரசர் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய மிக நீண்ட அறிக்கை – பானகல் அரசரின் அருமையையும், சாதனையையும் என்றென்றைக்கும் பறைசாற்றும்! வேறு எந்தத் தலைவருக்கும் இவ்வளவுப் பெரிய அறிக்கையை தந்தை பெரியார் வெளியிட்டதில்லை. ‘திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?’ என்று கேட்பவர்கள் அதன் சாதனைகளை அறியாதவர்களே! நீதிக்கட்சி அடிகோலிய கட்டுமானத்தின்மீதுதான் இன்றைய வளர்ச்சிகள் எல்லாம் நிமிர்ந்து நிற்கின்றன என்பதுதான் உண்மை. குறிப்பாக, சமூகநீதி என்பது இன்றைக்கு இந்தியா முழுவதும் உயிரோட்டமாக – ஒடுக்கப்பட்ட மக்களின் அடிநாதமாக இருக்கிறது.  இந்திய அரசமைப்புச் சட்டமே அங்கீகரிக்கிறது என்றால் அதற்கான ஆசான் நீதிக்கட்சியே! நீதிக்கட்சியே!! ‘மகா மகா சாணக்கியன்’ என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட பானகல் அரசரின் பிறந்த நாளில் அந்தப் பெருமகனாரை மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவு கூர்வோம். சமூகநீதிக்கு அறை கூவல்கள் புறப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பானகல் அரசர் என்ற பெருமானின் உணர்வுகளை, தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற போராட்டக்  குணத்தோடு முன்னெடுப்போம்! சமூக நீதிக்கான சவால்களை முறியடிப்போம்! வாழ்க பானகல் அரசர் என்ற பெம்மான்! கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்9-7-2016சென்னை பானகல் அரசரின் 156 ஆம் பிறந்தநாள் இன்று! ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பானகல் அரசரின் 150 ஆம் பிறந்தநாளில் வெளியிட்ட அறிக்கை இது.

கரைசேராப் படகுகள் – 6

கரைசேராப் படகுகள் – 6

சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் குழந்தையைக் கொஞ்சிய செந்தாமரை, கயிற்றுக் கட்டிலைத் தலைமேல்  தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கைக் கொளுத்திப் பிடித்துக்கொண்டு, களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பினார். “அம்மா… நான் காவலுக்குக் கிளம்பறேன்”  என்ற செந்தாமரையின் குரல் கேட்டு, “டேய்… நேத்து எத்தன தள டா அறுத்தீங்க? எத்தனை மூட்டை தேறும்?” என்று பட்டம்மா  ஆர்வமாய்க் கேட்டார். “அரிகராம் மேடும் அரசமர தளையும் அறுத்ததுமா. என்ன, அரிகராம் மேடு பத்து மூட்டையும் அரசமரம் எட்டு மூட்டையும் தேறும். கூலிக்குதான் என்ன பண்றதுன்னு தெரியல. குப்புசாமி ரெட்டி  நெல்லா கொடுக்கலாம்னு சொல்றாரு. நான் பணமா  கொடுக்கலாம்னு யோசிக்கறேன்” என்று அம்மாவிடம்  அனைத்தையும் கொட்டினார் செந்தாமரை.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மரகதம், “இதே விசயத்த நம்மகிட்ட சொன்னா  கேட்டுக்க மாட்டோமா..? ஆம்பளங்கற  கவுரதி  குறைஞ்சிடுமோ?” என்று மனதிற்குள்  பொருமினாள்.  “மரகதம், வீட்டை பத்திரமா பாத்துக்க. புழக்கடை பக்கம் ராத்திரில போக வேணாம். கதவை அழுத்தி தாப்பா போடு”  என்று  எச்சரிக்கை செய்துவிட்டு, போருக்குச் செல்வதுபோல  கட்டிலைக் கம்பீரமாகத் தலையில் வைத்துக்கொண்டு  செந்தாமரை கிளம்பினார். அந்த சமயத்தில் கோழி விற்பவன், பெரிய கூடையில் கோழிக்குஞ்சுகளை அடைத்து தலைமேல் தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் எடுத்துக்கொண்டு வந்தான். செந்தாமரை அவனிடம், “நீ எந்த ஊரு பா? வியாபாரம் எப்படிப் போகுது?” என்று பேச்சுக் கொடுத்து, அவனோடு பேசிக்கொண்டே களத்துமேடு வந்து சேர்ந்தார். தூரத்தில்  விளக்கு வெளிச்சம் தெரிந்தது.   “யாருப்பா அது?” என்று அதட்டலாக ஒரு கத்தல்  வந்தது. கத்தியது  குப்புசாமிரெட்டி. “மச்சான் நான்தான் செந்தாமரை” என்று பதிலுக்குக் கத்தினார். “ஏய் செந்தாமரை..  உனக்கு கீழண்டை  மாணிக்கம் வயல்ல  மணிலா போட்டிருக்கான். நாலு கொடி புடுங்கிட்டு வா; சுட்டு சாப்பிடுவோம்”  என்று அதிகாரம் பண்ணினார் குப்புரெட்டி. செந்தாமரையும்  கொஞ்சம் கொடி பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்து, இரண்டு களத்துமேட்டுக்கும் நடுவில் போட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொளுத்தினார். “மச்சான் ஒரு கொடிமட்டும் கையில அகப்படாம, வழவழன்னு புடுங்கவே முடியலை மச்சான்” என்று கடுப்பாகக் கூறினார் செந்தாமரை. மணிலா கொடியைத் திருப்பிவிட்டு கொளுத்திக் கொண்டிருந்த குப்புசாமி, திடீரென்று சிரித்தார். கையில் கொம்பு வைத்துக்கொண்டு கொளுத்திய கொடியைப் புரட்டிப் போட்டு  சிரித்துக் கொண்டே, “செந்தாமரை, உனக்கு எத்தனை நாளா பாம்பு கறி சாப்பிடணும்னு ஆசை?” என்று கேட்டார். “க்குவா… வாந்தி வருது. பாம்பு கறியா..?” என்று குமட்டினார் செந்தாமரை. “பின்ன, மணிலா கொடிகூட பாம்பு சேர்த்து பிடிச்சி வந்திருக்க? நாம அதையும் சேர்த்து சுட்டுகிட்டு இருக்கோம்” என்று சொன்னார் குப்புரெட்டி. இருட்டில் மணிலா கொடிக்கும் பாம்புக்கும்  வித்தியாசம் தெரியாமல், பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டதை உணர்ந்த செந்தாமரை, குப்பு ரெட்டியோடு சேர்ந்து சிரித்தார். குடும்பக்  கதையைப் பேசிக்கொண்டு  களத்து மேட்டில்  இருவரும் படுத்துத் தூங்கினார்கள். சூரியன் உச்சந்தலையைப் பிடித்து இழுத்ததும், எழுந்து மோட்டரைக் கிளப்பிவிட்டு, வேப்பங்குச்சியை வாயில் வைத்துக் கொண்டே   வயக்காட்டைச் சுத்திவந்து  அண்டைவெட்டி, மடைமாற்றி, குளித்துவிட்டு, களத்துமேடு வருவதற்கும் எட்டு மணி சங்கு கூவறதுக்கும்  சரியாக இருந்தது. மரகதம் அதிகாலையிலேயே எழுந்து  அருக்காணி கொடுத்துவிட்ட பிஞ்சு அவரைக்காயில்  கால் கிலோ பூண்டைக் கொட்டி நல்லெண்ணெயில் முக்கி, குளிசெலவு போட்டு  நல்ல மணமா அவரைப்பிஞ்சு வதக்கலும் சுடச்சுட சாதமும் புனிதாவுக்குக் கொடுத்தாள். கருப்பட்டி காபி போட்டு மாமியாருக்கு கொடுத்தாள். இன்று சற்று அசந்து தூங்கியதில், கன்றுக்குட்டி ஊட்டிவிட்டது. மரகதத்தால் பால் கறக்கமுடியவில்லை. மரகதம் தூக்குசட்டியில் கெட்டிக் கூழும், புதுசா வெள்ளையா இருக்கற நெத்திலிக் கருவாடு, மொச்சை, கத்தரிக்காய், வாழைக்காய், உருளை, முருங்கை, சொரக்காய் எல்லா காய்கறிகளையும்  போட்டு சும்மா தகதகன்னு மின்னுகின்ற  நெத்திலி கருவாட்டுக்  குழம்பும்  எடுத்துக்கொண்டு வயலுக்கு வந்தாள். ஒரு கை தலையில் இருக்கும் கூழ்  அண்டாவைப் பிடித்துக்கொண்டிருக்க, தோளில் செந்தாமரையின் சட்டையைப் போட்டுக்கொண்டு, ஒரு கையில் தூக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வயல் வரப்பில்  மரகதம் நடந்துவரும் அழகில்  மயங்கி, சூரியனும் கூடவே ஓடி வருகிறான். அதற்குள்  ஆட்கள் எல்லாம் கதிர் அறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  செந்தாமரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே, “மாமா.. ஏழாம் காப்புக்கு சம்பந்தி வீட்டுக்கு சொல்லணும்” என்று இழுத்தாள் மரகதம். “கூறு கெட்டவளே, அறுவடை நடக்குது. இப்ப போயி,,,” என்று கருவாட்டுக் குழம்பை நக்கிச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் செந்தாமரை. “அதான்.. நான் இருக்கேனுங்க.. இதோ இருக்குது  மாம்பாக்கம். வயலில் குறுக்கால போனா பொழுது சாயறதுக்குள்ள வந்திடலாம்” என்று வழி சொன்னாள் மரகதம். செந்தாமரை மெளனமாக  சாப்பிட்டு முடித்து, சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். பெண்கள் ஆண்களிடம் காரியம் சாதிக்கும் இரண்டு இடம், ஒன்று சாப்பிடும் இடம்; இன்னொன்று திருமணம் ஆனவர்களுக்குத் தெரியும். பெண்களைப் பெற்றவர்கள் செல்வதற்குச் சங்கடப்படும் இடம் பெண்ணைத் திருமணம் செய்து  கொடுத்த வீட்டிற்குத்தான். செந்தாமரையும் அதே சங்கடத்துடன்  மாம்பாக்கம் நோக்கி நடந்தார். தொடரும் சாம்பவி சங்கர்

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழகப் பள்ளிக் கல்வியில் நாம் எதிர்பார்க்காத அளவில் பல மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் கல்வியைச் சீர்திருத்தம் செய்து, அடுத்த கட்ட நகர்வை நோக்கி வளர்க்கும் செயல்முறைகளா என்று பார்த்தால், அதுதான் இல்லை. புதிய தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தன்னார்வலர்களைப் பள்ளிக்குள் அனுமதித்தல் என்ற கருத்துதான், தொடர்ந்து தமிழகத்தில் பல விதங்களில் செயல்பாட்டில் வந்துகொண்டே உள்ளது. இல்லம் தேடி கல்வியில் ஆரம்பித்து, தற்போது பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பிக்கக் கூறியுள்ள ஃபெல்லோஷிப் தன்னார்வலர்  திட்டம் வரை அனைத்து நிலையிலும் தன்னார்வலர்கள்தான்.   நிகழ்காலக் கல்வியை நாம் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தால், இன்றைய பள்ளிக்கல்வி மிகுந்த ஆபத்தில் உள்ளது என்பதனை நாம் உணர முடியும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களின் பள்ளிகளில் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் நிகழ்வுகளே. திருப்பூர், சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், வட இந்தியாவிலிருந்து வந்துள்ள சில நபர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, கைவினைப் பொருட்கள் செய்யும் முறை குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகின்றனர். இந்த நபர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்ற அறிவிப்பை, முதன்மைக் கல்வி அலுவலர்களே வெளியிட்டுள்ளனர். இதற்காக மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் கொண்டு வந்துள்ள புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனராம். ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தமிழ் மொழியாக்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். ஏற்கனவே, கொரோனா காலக் கற்றல் இடைவெளியால் வாசிக்கும் திறனில் குறைந்துள்ள மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், மாணவர்களின் மொழியறிவு முற்றாக அழிந்துவிடும் என்று புலம்புகிறார்கள். நாமும் பார்த்திருப்போம், நாம் படித்த காலத்தில்கூட, இதைப்போல ஒரு மனிதர் பள்ளிக்கு வருவார். மிகவும் நலிந்த பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவரது தோற்றத்திலேயே வெளிப்படும். காகிதத்தில் பூ, மரம், தொப்பி, மெழுகுவர்த்தி ஸ்டேண்டு போன்றவற்றைச் செய்து காட்டுவார். பின்னர், அதைப்போன்ற செயல்முறைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை மாணவர்களிடம் காண்பித்து, 2 ரூபாய் கொடுத்து விருப்பப்படுபவர்கள் வாங்கலாம் என்பார். ஒருசிலர் வாங்குவார்கள். அப்போது வந்தவர்கள் எல்லாம்   வேலை இல்லாத காரணத்தால், இதைப்போல ஒரு தொழிலை மேற்கொண்டு, அன்றாடம் பிழைப்பு நடத்த வருபவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் புதிய தேசிய கல்விக் கொள்கையை வலிமையாக எதிர்த்து வரக்கூடிய சூழலில், நமது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் இரண்டு வடநாட்டு மனிதர்கள் வட இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். ஹிந்தி மொழி மட்டுமே பேசக் கூடிய இவர்கள் தமிழ் மொழியே தெரியாமல், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில், மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளின் நலனின் அக்கறையுள்ள ஆசிரியர்கள், தங்கள் எதிர்ப்புக்  குரலைக் கவலையுடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய பாடப்பிரிவேளைகளில் (Periods) மாற்றம் செய்துள்ளனர். அதில் தமிழ், ஆங்கிலம்,  சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஏற்கனவே  வழக்கில் இருந்த ஏழு பிரிவேளைகள் ஆறாகக்  குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு பிரிவேளையில் கல்வி இணைச் செயல்பாடுகள்  என்ற வகுப்புக்கான செயல்பாட்டை சேர்த்துள்ளனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பெறப்பட்டு, பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக  ஒதுக்கப்பட்ட பிரிவேளைகளில் செய்யக்கூடிய பணிகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது.  காகிதம் மடித்தல், தொப்பிகள்  செய்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்தல் என ஏராளமான பட்டியலைக் கொடுத்துள்ளது.  அதற்கான ஆசிரியர்கள் ஏற்கனவே பள்ளிகளில் இருக்கின்றனர். பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று  கலை  ஆசிரியர்கள், சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களே குழந்தைகளுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால் அதை விடுத்து, பள்ளிக்குச் சற்றும் தொடர்பில்லாத வெளி நபர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதித்து செயல்முறைகள் வெளியிட்டு இருக்கின்றனர் கல்வி அலுவலர்கள், இதற்கு ஆணையர் கடிதமும் கூடுதல் பலமாம்.  மேலும்  கலை ஆசிரியர்களாக இல்லாத பிற ஆசிரியர்களும் சிறப்பாசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் கூட இச்செயல்பாடுகளை நேர்த்தியாகக் கையாள முடியும். காரணம்  இன்று இணையத்தில், வலையொலி (YOU TUBE)யில்  தேடினால் ஏராளமான காணொலிகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளே காணொலியைப் பார்த்து மிக அழகாகக் கைவினைப் பொருட்களைச் செய்து வருகின்றனர். குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும் என்றால், எந்த ஆசிரியரும் இந்தக் கல்வி இணைச் செயல்பாடுகள் பிரிவேளையை அணுகும்போது, குழந்தைகளுக்கு அவர்களாகவே  வழிகாட்டுவார்கள். ஏராளமான பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இருக்கின்றது. அங்கும் காணொளிகளைக் காட்டிப் பயிற்சி தரலாம்.  எல்லாமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது .குழந்தைகளது பெற்றோர்கள் பெரும்பாலும் அலைபேசிகளை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் அந்தச் செயல்பாடுகளின் இணையப்பக்கத்தை நாம் கூறினால் அவர்களாகவே தேடுவார்கள் அல்லது ஆசிரியர் அதைப் பார்த்து வந்து வகுப்பறையில் கற்றுத் தரலாம். இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது வட இந்தியாவிலிருந்து வந்துள்ள தன்னார்வலர்களை??!! அதாவது, வெளி நபர்களை முறையாகப் பள்ளிக்குள் அனுமதித்து, அவர்களுக்குப் புத்தகங்களை விற்கும் உரிமையையும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சில மாவட்டங்களில் ஆணை மூலமாக வழங்கியுள்ளது தெரியவருகிறது. அவர்களுடைய ஆணையின் செயல்முறைக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்வையில், ஆணையரின் கடித எண்ணையும் இணைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது, தமிழக பள்ளிக்கல்வித் துறை வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தனிநபர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் கூடாரமாக மாறுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதனால், இங்கே பலன் அடைபவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுகிறது. சராசரியாக ஒரு பள்ளியில் சில நூறு புத்தகங்களை அவர்கள் விற்றாலும்கூட, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகங்களை விற்கும்பொழுது பல கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கப்படும். இந்தத் தனி நபர்களுடைய முதலாளி யார்? எங்கிருக்கிறார்? அவர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும் என்ன தொடர்பு? யாரோ சிலர் வருமானம் ஈட்டும் இடமாக தமிழகப் பள்ளிகளை மாற்றுவது ஏன்? இவற்றையெல்லாம் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகக் கண்ணோடு நோக்கவேண்டும். இத்தகைய செயல்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது, பள்ளிகள் இது போன்ற வெளி நபர்களைக் கட்டாயமாக உள்ளே அனுமதிக்கக்கூடாது, அலுவலர்கள் உத்தரவு கொடுத்தாலும் அதை மறுப்பதற்கான உரிமை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இதில் தலையிட்டு நிராகரிக்க முடிவு செய்ய இயலும்.   இவர்களைப் போன்ற வெளிநபர்கள் எதற்காக நம் பள்ளிகளை நாடி வரவேண்டும்? பள்ளிக்குத் தொடர்பில்லாத நபர்களைப் பள்ளிக்குள் அனுமதிப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? இதைப்போன்ற செயல்பாடுகளைக் கற்பிக்கப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இல்லையெனினும் நியமனம் செய்ய வேண்டியது அரசின் கடமை.  நமது ஆசிரியர்களுக்கு இல்லாத திறன் ஒன்றும் அவர்கள் எடுத்து வரவில்லை. ஆகவே, தன்னார்வலர்களைப் பள்ளிக்குள்  அனுமதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கத்தையும் அதனைக் கொல்லைப்புற வழியே அனுமதிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாட்டையும்  உறுதியுடன் நாம் நிராகரிக்க வேண்டும். சு. உமாமகேஸ்வரி 

மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

வாழ்நாள் முழுதும் வரலாற்றைத் தேடியமயிலையின் வானம்பாடிஆழ்ந்த தமிழ்ஞானிஆனால் படிக்கவில்லை பள்ளிதாண்டி கோயில் வரலாறெனில் அதன் கொடி வரலாறாய் விரியும்சமய வரலாறெனில் தத்துவமும் குடைபிடிக்கும்பண்பாட்டைச் சொல்லவந்தால் பயன்பாடும் சேர்ந்துவரும்மொழியின் வரலாறென்றால் மூதறிஞரும் முகமன் சொல்வார் அதனால்தான்பாரதிதாசன் இப்படி அறையலுற்றார் ‘தமிழையே வணிகமாக்கித்தன்வீடு மக்கள் சுற்றம்தமிழிலே பிழைப்பதற்குதலைமுறை தலைமுறைக்குத்தமிழ்முதலாக்கிக் கொண்டபல்கலைத் தலைவன் எல்லாம்தமிழ்ச் சீனி வேங்கடத்தின்கால் தூசும் பெறாதென்பேன்’ மொழிக்கு சமயங்களின் கொடைகளைமுத்தான பலநூல் வழி மொழிந்ததெல்லாம்மொழிச் சரிதம் படிப்போருக்கு முழுநிலவாய்க் கூடவரும் ‘கிறித்துவமும் தமிழும்’ அவர் எழுதிய முதல்நூலாம்பொறிவாயில் ஐந்தவித்த புத்தனைப் பின்தொடர்ந்த‘பௌத்தமும் தமிழும்’ அடுத்து வந்தது‘சமணமும் தமிழும்’ ‘இசுலாமும் தமிழும்’‘இந்துமதமும் தமிழும்’ என்றெல்லாம்சமயத்தோடு மொழிவரலாற்றைச் சேர்த்து எழுதினார் அழகர் கோவில் வரலாறு எழுதப் புகுந்தஅறிஞர் தொ.பரமசிவன்மயிலை வேங்கடத்தின் ஆய்வையேமுதற்புள்ளியாகக் கொண்டார் தரவில்லாமல் இருண்டிருந்த களப்பிரர் வரலாற்றைஇலக்கிய வெளிச்சத்தில் கரம்பிடித்து அழைத்து வந்தார்பல்லவ மன்னர்கள் வரலாற்றைப்பலநூல்களாய் எழுதித் தந்தார் மகாபலி புரத்தை மாமல்லபுரம் என்றுகண்டுதமிழர் மனதில் மகிழ்ச்சி பெய்தார்மகேந்திரப் பல்லவனின் மத்த விலாச அங்கதத்தைதமிழில் தந்தவரும் மனோன்மணியத்தைபதிப்பு செய்தவரும் மயிலையார்தான் நுண்ணிய கலை ஆய்வும் அவரே தொடங்கிவைத்தார்சங்க கால வரலாறு தொட்டுசமகால இலக்கிய வரலாறு வரைமயிலை சீனி வேங்கடசாமியின் கொடை உண்டு கல்வெட்டு ஆய்வுக்கும் செப்பேட்டு ஆய்வுக்கும்சொல்வெட்டுச் செய்த மயிலை சீனி வேங்கடசாமிக்குசூலை எட்டில் நினைவு தினம் தமிழைக் கொண்டாடுமுகத்தான்தமிழ்த் தேனீயை அறிந்து போற்றுவோம் கோமதி சங்கர்