சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் குழந்தையைக் கொஞ்சிய செந்தாமரை, கயிற்றுக் கட்டிலைத் தலைமேல்  தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கைக் கொளுத்திப் பிடித்துக்கொண்டு, களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பினார்.

“அம்மா… நான் காவலுக்குக் கிளம்பறேன்”  என்ற செந்தாமரையின் குரல் கேட்டு,

“டேய்… நேத்து எத்தன தள டா அறுத்தீங்க? எத்தனை மூட்டை தேறும்?” என்று பட்டம்மா  ஆர்வமாய்க் கேட்டார்.

“அரிகராம் மேடும் அரசமர தளையும் அறுத்ததுமா. என்ன, அரிகராம் மேடு பத்து மூட்டையும் அரசமரம் எட்டு மூட்டையும் தேறும். கூலிக்குதான் என்ன பண்றதுன்னு தெரியல. குப்புசாமி ரெட்டி  நெல்லா கொடுக்கலாம்னு சொல்றாரு. நான் பணமா  கொடுக்கலாம்னு யோசிக்கறேன்” என்று அம்மாவிடம்  அனைத்தையும் கொட்டினார் செந்தாமரை. 

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மரகதம், “இதே விசயத்த நம்மகிட்ட சொன்னா  கேட்டுக்க மாட்டோமா..? ஆம்பளங்கற  கவுரதி  குறைஞ்சிடுமோ?” என்று மனதிற்குள்  பொருமினாள். 

“மரகதம், வீட்டை பத்திரமா பாத்துக்க. புழக்கடை பக்கம் ராத்திரில போக வேணாம். கதவை அழுத்தி தாப்பா போடு”  என்று  எச்சரிக்கை செய்துவிட்டு, போருக்குச் செல்வதுபோல  கட்டிலைக் கம்பீரமாகத் தலையில் வைத்துக்கொண்டு  செந்தாமரை கிளம்பினார்.

அந்த சமயத்தில் கோழி விற்பவன், பெரிய கூடையில் கோழிக்குஞ்சுகளை அடைத்து தலைமேல் தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் எடுத்துக்கொண்டு வந்தான்.

செந்தாமரை அவனிடம், “நீ எந்த ஊரு பா? வியாபாரம் எப்படிப் போகுது?” என்று பேச்சுக் கொடுத்து, அவனோடு பேசிக்கொண்டே களத்துமேடு வந்து சேர்ந்தார். தூரத்தில்  விளக்கு வெளிச்சம் தெரிந்தது.  

“யாருப்பா அது?” என்று அதட்டலாக ஒரு கத்தல்  வந்தது. கத்தியது  குப்புசாமிரெட்டி.

“மச்சான் நான்தான் செந்தாமரை” என்று பதிலுக்குக் கத்தினார்.

“ஏய் செந்தாமரை..  உனக்கு கீழண்டை  மாணிக்கம் வயல்ல  மணிலா போட்டிருக்கான். நாலு கொடி புடுங்கிட்டு வா; சுட்டு சாப்பிடுவோம்”  என்று அதிகாரம் பண்ணினார் குப்புரெட்டி.

செந்தாமரையும்  கொஞ்சம் கொடி பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்து, இரண்டு களத்துமேட்டுக்கும் நடுவில் போட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொளுத்தினார்.

“மச்சான் ஒரு கொடிமட்டும் கையில அகப்படாம, வழவழன்னு புடுங்கவே முடியலை மச்சான்” என்று கடுப்பாகக் கூறினார் செந்தாமரை.

மணிலா கொடியைத் திருப்பிவிட்டு கொளுத்திக் கொண்டிருந்த குப்புசாமி, திடீரென்று சிரித்தார். கையில் கொம்பு வைத்துக்கொண்டு கொளுத்திய கொடியைப் புரட்டிப் போட்டு  சிரித்துக் கொண்டே, “செந்தாமரை, உனக்கு எத்தனை நாளா பாம்பு கறி சாப்பிடணும்னு ஆசை?” என்று கேட்டார்.

“க்குவா… வாந்தி வருது. பாம்பு கறியா..?” என்று குமட்டினார் செந்தாமரை.

“பின்ன, மணிலா கொடிகூட பாம்பு சேர்த்து பிடிச்சி வந்திருக்க? நாம அதையும் சேர்த்து சுட்டுகிட்டு இருக்கோம்” என்று சொன்னார் குப்புரெட்டி.

இருட்டில் மணிலா கொடிக்கும் பாம்புக்கும்  வித்தியாசம் தெரியாமல், பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டதை உணர்ந்த செந்தாமரை, குப்பு ரெட்டியோடு சேர்ந்து சிரித்தார். குடும்பக்  கதையைப் பேசிக்கொண்டு  களத்து மேட்டில்  இருவரும் படுத்துத் தூங்கினார்கள்.

சூரியன் உச்சந்தலையைப் பிடித்து இழுத்ததும், எழுந்து மோட்டரைக் கிளப்பிவிட்டு, வேப்பங்குச்சியை வாயில் வைத்துக் கொண்டே   வயக்காட்டைச் சுத்திவந்து  அண்டைவெட்டி, மடைமாற்றி, குளித்துவிட்டு, களத்துமேடு வருவதற்கும் எட்டு மணி சங்கு கூவறதுக்கும்  சரியாக இருந்தது.

மரகதம் அதிகாலையிலேயே எழுந்து  அருக்காணி கொடுத்துவிட்ட பிஞ்சு அவரைக்காயில்  கால் கிலோ பூண்டைக் கொட்டி நல்லெண்ணெயில் முக்கி, குளிசெலவு போட்டு  நல்ல மணமா அவரைப்பிஞ்சு வதக்கலும் சுடச்சுட சாதமும் புனிதாவுக்குக் கொடுத்தாள். கருப்பட்டி காபி போட்டு மாமியாருக்கு கொடுத்தாள். இன்று சற்று அசந்து தூங்கியதில், கன்றுக்குட்டி ஊட்டிவிட்டது. மரகதத்தால் பால் கறக்கமுடியவில்லை.

மரகதம் தூக்குசட்டியில் கெட்டிக் கூழும், புதுசா வெள்ளையா இருக்கற நெத்திலிக் கருவாடு, மொச்சை, கத்தரிக்காய், வாழைக்காய், உருளை, முருங்கை, சொரக்காய் எல்லா காய்கறிகளையும்  போட்டு சும்மா தகதகன்னு மின்னுகின்ற  நெத்திலி கருவாட்டுக்  குழம்பும்  எடுத்துக்கொண்டு வயலுக்கு வந்தாள்.

ஒரு கை தலையில் இருக்கும் கூழ்  அண்டாவைப் பிடித்துக்கொண்டிருக்க, தோளில் செந்தாமரையின் சட்டையைப் போட்டுக்கொண்டு, ஒரு கையில் தூக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வயல் வரப்பில்  மரகதம் நடந்துவரும் அழகில்  மயங்கி, சூரியனும் கூடவே ஓடி வருகிறான். அதற்குள்  ஆட்கள் எல்லாம் கதிர் அறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

செந்தாமரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே, “மாமா.. ஏழாம் காப்புக்கு சம்பந்தி வீட்டுக்கு சொல்லணும்” என்று இழுத்தாள் மரகதம்.

“கூறு கெட்டவளே, அறுவடை நடக்குது. இப்ப போயி,,,” என்று கருவாட்டுக் குழம்பை நக்கிச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் செந்தாமரை.

“அதான்.. நான் இருக்கேனுங்க.. இதோ இருக்குது  மாம்பாக்கம். வயலில் குறுக்கால போனா பொழுது சாயறதுக்குள்ள வந்திடலாம்” என்று வழி சொன்னாள் மரகதம்.

செந்தாமரை மெளனமாக  சாப்பிட்டு முடித்து, சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். பெண்கள் ஆண்களிடம் காரியம் சாதிக்கும் இரண்டு இடம், ஒன்று சாப்பிடும் இடம்; இன்னொன்று திருமணம் ஆனவர்களுக்குத் தெரியும்.

பெண்களைப் பெற்றவர்கள் செல்வதற்குச் சங்கடப்படும் இடம் பெண்ணைத் திருமணம் செய்து  கொடுத்த வீட்டிற்குத்தான். செந்தாமரையும் அதே சங்கடத்துடன்  மாம்பாக்கம் நோக்கி நடந்தார்.

தொடரும்

  • சாம்பவி சங்கர்

Comments (2)


Mansoor

சகோதரி சாம்பவி
க.சே.ப. அத்தியாயம் 06
வயக்காட்டு களத்து மேடு சம்சாரம் கள்:
மரகதம், & செந்தாமரை
உரையாடல்கள் என
நேரலைக் காட்சிகள்
நம் முன் நடந்தேறும்
வேளையில், 7 ஆம்
காப்புக்கு சம்பந்தி
வீட்டாரை அழைக்க
செந்தாமரை மாம்பாக்கம் நோக்கி
நடை போட்டார்;
நாமும் மெல்ல அவர்
பின்னாலே நடை பயில
முனைகிறோம்…
கிராமத்து விஷயங்களை
சுவைபட எழுத்தில் வடித்த நாவலாசிரியர்
பாராட்டுக்குரியவர்.
ம்ம்…7 ஆம் அத்தியாயம்
7 ஆம் நாள் சம்பிரதாய
சடங்குகள் எப்படி
போகப் போகுதோ?!?
பார்ப்போம்….
-டாக்டர் சுதாமன். பெங்களூரு.

பாரதிமோகன் .க
பாரதிமோகன் .க
July 10, 2022

கனவுலகம் என்றால் ஏதோ சுவர்க்கம் உல்லாசம் என்பது மட்டுமல்ல

நமது முன் தலைமுறையினரின் வாழ்வு

அடிப்படை அலோபதி மருத்துவம் இல்லாத காலங்களில்

வாழ்க்கை எவ்வளவு சுலபமாக இருந்தது அவர்களுக்கு மண்ணும் மண் சார்ந்த நாகரீகமும் உணவு சார்ந்த மருத்துவமும் மனோ தைரியமும் அவர்களை எவ்வளவு வாழ்வியலில் ஒன்றிய மனிதர்களாக வாழ வைத்தது என்பதை

மிக நுணுக்கமாக இந்த நாவலில் காணலாம் ஒவ்வொரு எபிசோடும் மிகுந்த உயிர் தன்மை வாய்ந்ததாக மண்ணோடு பின்னி பிணைந்ததாக மனிதர்களின் மனதுக்குள் ஆழப் புதைந்துள்ள முன் தலைமுறைகளின் வாழ்வியல் மரபின் ஜீன்களை தட்டி எழுப்புகிறது

சாம்பவி சங்கரின் இந்த எழுத்து ஜாலம் ஏதோ அவருடைய முன்பிறவி விட்ட குறை என்று தான் நான் நினைக்கிறேன்

இப்பிறவியில் விழித்துக் கொண்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *