திரை விமர்சனம்
வர்க்க பேதம், சாதி பேதம் இவற்றின் அடிப்படையில், ஆதிக்க வர்க்கமும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து, ஆண்டாண்டு காலமாக நடத்தி வரும் கொடுமைதான், அப்பாவி மக்களின் மீது பல்வேறு வகையில் தொடரும் தாக்குதல். சுதந்திரத்திற்குப் பின்பும், அதற்கான தீர்வு முழுமையாகக் கிடைத்திராத நிலையில், அவர்களின் இரட்சகர்களாக ஆங்காங்கே மக்களின் போர்க் குழுக்கள். அக்குழுக்களின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், எதிர்பார்க்கும் தீர்வுகள்,  நடைமுறைக்குச் சாத்தியமா என்பதெல்லாம், இன்னமும் விமர்சனத்துக்குரியவைதான். இது ஒருபுறம் இருக்க, இந்த யுத்தப் பின்னணியில் முகிழ்த்த அழகான காதல் கதைதான், வேணு உடுகுலா இயக்கத்தில்,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் வெளியாகி உள்ள தெலுங்குத்  திரைப்படம்,  ‘விராட பருவம்’ .

ஒரு கூத்துக் கலைஞனின் (சாய் சந்த்) மகள் வெண்ணிலா (சாய் பல்லவி). அப்பாவின் அன்பு மட்டுமல்ல, அவரது  பாடல்களும்கூட  அவளை வளர்த்தன.  சமூக அக்கறை கொண்ட கவிதைகளை எழுதிய ‘ஆரண்யன்’ மீது அவளுக்கு  ஈர்ப்பு. அப்பாவி கிராம மக்களின் மீது  அராஜகத்  தாக்குதலை ஏவிய காவலர்களைத் துவம்சம் செய்த ரவி தோழர்தான் (ரானா டகுபதி) ஆரண்யன் என்று அறிந்ததில், ஈர்ப்பு காதலாகக் கனிந்தது. அவளுக்கு அப்பாவும் அம்மாவும் (ஈஸ்வரி ராவ்) மணமுடிக்க முயற்சித்தபோது, அந்த உறவுக்கார மாப்பிள்ளையை (ராகுல் ராமகிருஷ்ணா) மறுதலித்து, வீட்டை விட்டு வெளியேறி,  ரவி குறித்த வெண்ணிலாவின் தேடல் துவங்குகிறது.

அந்தப் பயணத்தின் இடையே சந்திக்கும் ரவியின் தாய் (ஜரினா வஹாப்), சமூகச் செயற்பாட்டாளர் சகுந்தலா டீச்சர் (நந்திதா தாஸ்), பின்னர் தோழர் பரதக்கா (பிரியாமணி), தோழர் ரகு (நவீன் சந்திரா), காவல்துறையின் அடக்குமுறை என இவை எல்லாவற்றையும் தாண்டி, வெண்ணிலாவின் தேடல் முற்றுப் பெற்றதா, முழுமையும் பெற்றதா என்பதுதான், இப்படத்தின் மொத்தக் கதை.

மக்கள் போர்க் குழுவின் ஈடுபாட்டில், செயல்பாட்டிலான உறுதி, தீவிரத் தன்மை, ராணா டகுபதியின் நடிப்பில் தத்ரூபமாகப்  பிரதிபலிக்கின்றது. அதையும் தாண்டி மிளிருகிறது, சாய் பல்லவிக்குள் ஏற்படும் காதலின் பரிணாம மாற்றமும்,  அதன் வெளிப்பாடும்! ‘ஷாம் சிங்கா ராய்’ மைத்ரேயியைத் தொடர்ந்து, ‘ விராட பருவம்’ வெண்ணிலாவும், சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்கு அணி சேர்ப்பாள். துணைப் பாத்திரங்களில் இடம்பெற்ற கலைஞர்கள், கிடைத்த வாய்ப்பில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளதன் வாயிலாக, இணைப் பாத்திரங்களாகவே நிமிர்ந்து நிற்கின்றனர்.

‘அம்மாவோட வார்த்தை எனக்குப் பிடிவாதத்த கத்து கொடுத்துச்சுன்னா, அப்பாவோட பாட்டு,  வாழ்க்கைப் பாடத்த கத்துக் கொடுத்துச்சு’; ‘ஒரு சில விஷயத்துக்குக் காரணம் இருக்காது மாமா, காரியம் மட்டும்தான்’; ‘காதலோட ஆழத்தைப் புரிஞ்சுக்க முடியாதவங்க, உயிரோடு இருந்தாலும் பொணத்துக்குதான்  சமம்’; ‘ஒரு மனுஷன காதலிக்கறதுக்குக்  காரணம் வேணுமா டீச்சர்? பசி, தூக்கம், தாகம், கண்ணீர் இதெல்லாம் எப்படி உள்ளுக்குள்ள இருந்து, தானா வெளியே வருதோ, அதே மாதிரிதான் காதலும் டீச்சர்’; ‘அப்போ, காதல்ங்கறது சீர்கேடா, அப்போ ஜெனிய காதலிச்ச காரல் மார்க்ஸ், ஜியாங்க காதலிச்ச மாவோ, க்ருப்பாஸ்கய காதலிச்ச லெனின்.. அவங்களோடதும் சீர்கேடுதானா?’ (வெண்ணிலா)

‘அதிகார வர்க்கத்த கேள்வி கேட்டா போதும், தடா சட்டத்தில போடுவாங்க, அப்பாவிகள என்கவுண்டர் செய்வாங்க, தேர்தலுக்காக வாக்குறுதிகள அள்ளி வீசி அடிமை ஆக்குவாங்க… ஞாபகம் வச்சுக்கோங்க, இந்த இயற்கையோட மண்ணின் வளம் ஒங்களோடது’; ‘எழுது, எந்தப் பெண்ணுக்கு அநியாயம் நடந்தாலும், எனக்குக் கிடைத்த தண்டனைதான்  கிடைக்கும்’ (தோழர் ரவி)

‘மனித உரிமை பற்றிப்  பேசினா போதும், கொன்ன பொணம்கூடக் கிடைக்காத மாதிரி பண்ணிடறாங்க..’ (சகுந்தலா டீச்சர்)

‘நாமகூட,  மக்களுக்காகத்தான் வேலை செய்றோம். நாம வாழ்வதற்காக வேலை செய்கிறோம், அவங்க சாகறதுக்கும் துணிஞ்சு  போராடிட்டு இருக்காங்க’ (காவல்துறை அதிகாரி)

-ஆங்காங்கு நறுக்குத் தெறித்தது போலான,  சிந்தனைக்குரிய வசனங்கள் !

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா எனப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து அசத்திய, டேனி சான்சேஸ் லோபஸ், திவாகர் மணி ஆகியோரின் கண்கவர் ஒளிப்பதிவும், சுரேஷ் பொப்லியின்  கதையோட்டத்திற்கு நெருக்கமான இசையும், பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. குழந்தைக்குப் பெயர் வைத்து ‘லால் சலாம்’ சொன்ன நொடியில், துப்பாக்கி ரவையால் அந்தப் பெண் போராளியின் தலை சிதறிப் போவது, மயிர்க்  கூச்செறியும் காட்சி.  பாடல்கள் அத்தனையும் பொருள் பொதிந்தவை, இனிமையானவை ! ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

முற்றிலும் மாறுபட்டதொரு பின்னணியில், சாய் பல்லவியின் அழகும் நடிப்புத் திறமையிலுமான வண்ணத் தூரிகையால், இயக்குனர் வேணு உடுகுலா வரைந்த அழுத்தமான, அழகான ஒரு காதல் ஓவியம்தான், ‘விராட பருவம்’.

மதிப்பெண் : 8/10

  • மது ராஜேந்திரன்

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *