விராட பருவம்

விராட பருவம்

திரை விமர்சனம்வர்க்க பேதம், சாதி பேதம் இவற்றின் அடிப்படையில், ஆதிக்க வர்க்கமும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து, ஆண்டாண்டு காலமாக நடத்தி வரும் கொடுமைதான், அப்பாவி மக்களின் மீது பல்வேறு வகையில் தொடரும் தாக்குதல். சுதந்திரத்திற்குப் பின்பும், அதற்கான தீர்வு முழுமையாகக் கிடைத்திராத நிலையில், அவர்களின் இரட்சகர்களாக ஆங்காங்கே மக்களின் போர்க் குழுக்கள். அக்குழுக்களின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், எதிர்பார்க்கும் தீர்வுகள்,  நடைமுறைக்குச் சாத்தியமா என்பதெல்லாம், இன்னமும் விமர்சனத்துக்குரியவைதான். இது ஒருபுறம் இருக்க, இந்த யுத்தப் பின்னணியில் முகிழ்த்த அழகான காதல் கதைதான், வேணு உடுகுலா இயக்கத்தில்,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் வெளியாகி உள்ள தெலுங்குத்  திரைப்படம்,  ‘விராட பருவம்’ . ஒரு கூத்துக் கலைஞனின் (சாய் சந்த்) மகள் வெண்ணிலா (சாய் பல்லவி). அப்பாவின் அன்பு மட்டுமல்ல, அவரது  பாடல்களும்கூட  அவளை வளர்த்தன.  சமூக அக்கறை கொண்ட கவிதைகளை எழுதிய ‘ஆரண்யன்’ மீது அவளுக்கு  ஈர்ப்பு. அப்பாவி கிராம மக்களின் மீது  அராஜகத்  தாக்குதலை ஏவிய காவலர்களைத் துவம்சம் செய்த ரவி தோழர்தான் (ரானா டகுபதி) ஆரண்யன் என்று அறிந்ததில், ஈர்ப்பு காதலாகக் கனிந்தது. அவளுக்கு அப்பாவும் அம்மாவும் (ஈஸ்வரி ராவ்) மணமுடிக்க முயற்சித்தபோது, அந்த உறவுக்கார மாப்பிள்ளையை (ராகுல் ராமகிருஷ்ணா) மறுதலித்து, வீட்டை விட்டு வெளியேறி,  ரவி குறித்த வெண்ணிலாவின் தேடல் துவங்குகிறது. அந்தப் பயணத்தின் இடையே சந்திக்கும் ரவியின் தாய் (ஜரினா வஹாப்), சமூகச் செயற்பாட்டாளர் சகுந்தலா டீச்சர் (நந்திதா தாஸ்), பின்னர் தோழர் பரதக்கா (பிரியாமணி), தோழர் ரகு (நவீன் சந்திரா), காவல்துறையின் அடக்குமுறை என இவை எல்லாவற்றையும் தாண்டி, வெண்ணிலாவின் தேடல் முற்றுப் பெற்றதா, முழுமையும் பெற்றதா என்பதுதான், இப்படத்தின் மொத்தக் கதை. மக்கள் போர்க் குழுவின் ஈடுபாட்டில், செயல்பாட்டிலான உறுதி, தீவிரத் தன்மை, ராணா டகுபதியின் நடிப்பில் தத்ரூபமாகப்  பிரதிபலிக்கின்றது. அதையும் தாண்டி மிளிருகிறது, சாய் பல்லவிக்குள் ஏற்படும் காதலின் பரிணாம மாற்றமும்,  அதன் வெளிப்பாடும்! ‘ஷாம் சிங்கா ராய்’ மைத்ரேயியைத் தொடர்ந்து, ‘ விராட பருவம்’ வெண்ணிலாவும், சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்கு அணி சேர்ப்பாள். துணைப் பாத்திரங்களில் இடம்பெற்ற கலைஞர்கள், கிடைத்த வாய்ப்பில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளதன் வாயிலாக, இணைப் பாத்திரங்களாகவே நிமிர்ந்து நிற்கின்றனர். ‘அம்மாவோட வார்த்தை எனக்குப் பிடிவாதத்த கத்து கொடுத்துச்சுன்னா, அப்பாவோட பாட்டு,  வாழ்க்கைப் பாடத்த கத்துக் கொடுத்துச்சு’; ‘ஒரு சில விஷயத்துக்குக் காரணம் இருக்காது மாமா, காரியம் மட்டும்தான்’; ‘காதலோட ஆழத்தைப் புரிஞ்சுக்க முடியாதவங்க, உயிரோடு இருந்தாலும் பொணத்துக்குதான்  சமம்’; ‘ஒரு மனுஷன காதலிக்கறதுக்குக்  காரணம் வேணுமா டீச்சர்? பசி, தூக்கம், தாகம், கண்ணீர் இதெல்லாம் எப்படி உள்ளுக்குள்ள இருந்து, தானா வெளியே வருதோ, அதே மாதிரிதான் காதலும் டீச்சர்’; ‘அப்போ, காதல்ங்கறது சீர்கேடா, அப்போ ஜெனிய காதலிச்ச காரல் மார்க்ஸ், ஜியாங்க காதலிச்ச மாவோ, க்ருப்பாஸ்கய காதலிச்ச லெனின்.. அவங்களோடதும் சீர்கேடுதானா?’ (வெண்ணிலா) ‘அதிகார வர்க்கத்த கேள்வி கேட்டா போதும், தடா சட்டத்தில போடுவாங்க, அப்பாவிகள என்கவுண்டர் செய்வாங்க, தேர்தலுக்காக வாக்குறுதிகள அள்ளி வீசி அடிமை ஆக்குவாங்க… ஞாபகம் வச்சுக்கோங்க, இந்த இயற்கையோட மண்ணின் வளம் ஒங்களோடது’; ‘எழுது, எந்தப் பெண்ணுக்கு அநியாயம் நடந்தாலும், எனக்குக் கிடைத்த தண்டனைதான்  கிடைக்கும்’ (தோழர் ரவி) ‘மனித உரிமை பற்றிப்  பேசினா போதும், கொன்ன பொணம்கூடக் கிடைக்காத மாதிரி பண்ணிடறாங்க..’ (சகுந்தலா டீச்சர்) ‘நாமகூட,  மக்களுக்காகத்தான் வேலை செய்றோம். நாம வாழ்வதற்காக வேலை செய்கிறோம், அவங்க சாகறதுக்கும் துணிஞ்சு  போராடிட்டு இருக்காங்க’ (காவல்துறை அதிகாரி) -ஆங்காங்கு நறுக்குத் தெறித்தது போலான,  சிந்தனைக்குரிய வசனங்கள் ! ஆந்திரா, தெலுங்கானா, கேரளா எனப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து அசத்திய, டேனி சான்சேஸ் லோபஸ், திவாகர் மணி ஆகியோரின் கண்கவர் ஒளிப்பதிவும், சுரேஷ் பொப்லியின்  கதையோட்டத்திற்கு நெருக்கமான இசையும், பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. குழந்தைக்குப் பெயர் வைத்து ‘லால் சலாம்’ சொன்ன நொடியில், துப்பாக்கி ரவையால் அந்தப் பெண் போராளியின் தலை சிதறிப் போவது, மயிர்க்  கூச்செறியும் காட்சி.  பாடல்கள் அத்தனையும் பொருள் பொதிந்தவை, இனிமையானவை ! ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. முற்றிலும் மாறுபட்டதொரு பின்னணியில், சாய் பல்லவியின் அழகும் நடிப்புத் திறமையிலுமான வண்ணத் தூரிகையால், இயக்குனர் வேணு உடுகுலா வரைந்த அழுத்தமான, அழகான ஒரு காதல் ஓவியம்தான், ‘விராட பருவம்’. மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

அடடே சுந்தரா

அடடே சுந்தரா

திரை விமர்சனம் நானி, தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா நசீமுடன் இணைந்து  அட்டகாசமாக நடித்து, விவேக் ஆத்ரேயா எழுதி சிறப்பாகவும், சிரிப்பாகவும் இயக்கியுள்ள காதல் கதைதான், சுந்தரத் தெலுங்கில்  ‘அண்டே சுந்தரநிக்கி’, மொழி மாற்றத்தில் தேன் தமிழில் ‘அடடே சுந்தரா’. காதல் என்றாலே, வழக்கமாகச் சாதியோ மதமோ ‘கேட்’டைப் போடும்தானே! இந்தப் படத்தில் மதம்! எதற்கெடுத்தாலும் ஹோமம் செய்யும் விஸ்வநாத ஐயரின் (நரேஷ்) ஒரே மகன் சுந்தர பிரசாத் (நானி), ஊரறிந்த இந்து. பாயசமே கசப்பான முன் அனுபவத்தால், இந்து மதமும் கசந்த தாமஸின் (அழகம் பெருமாள்) இரண்டாவது மகள் லீலா தாமஸ் (நஸ்ரியா நசீம்). அவர்களுக்குள் லேசுப்பட்ட காதல் இல்லை. பள்ளி நாடகத்தில் வேஷமிட்டு நடித்தபோது துவங்கிய 100% உண்மையான காதல். நடுவிலே சுந்தரன் தொடர்பற்றுப்  போக, பருவமடைந்த லீலா கொஞ்சம் டைவர்ஷன் ஆகி, பின் சற்றுச் சுதாரித்து, இப்போது மீண்டு(ம்) சுந்தரனின் பாதையில்! 180 டிகிரி எதிரும் புதிருமாக உள்ள குடும்பத்தில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான நிலையைக் கடந்து,  காதலை நிறைவேற்றிக் கொள்ளத்தான், எத்தனை பாடுகள், பொய்கள், தந்திரங்கள், கோபதாபங்கள், உணர்ச்சிப் பிரவாகங்கள், மௌன யுத்தங்கள், சரணாகதிகள்…!!! இத்தனையையும் தாண்டி, அவர்களின் காதல் கைகூடியதா என்பதுதான், ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் மொத்தக் கதை. நகைச்சுவை கலந்த திரைப்படம், நானி, நஸ்ரியாவின் அசத்தலான தலைமையில், நரேஷ், ரோகிணி, பாட்டி அருணா பிக்‌ஷு,  அழகம் பெருமாள், நதியா, தன்வி ராம்,  மேனேஜர் ஹர்ஷவர்தன் பலமான கூட்டணியில்,  தங்குதடையின்றி ‘கலகல’வென்று செல்வது, இனிமை, சிறப்பு. மனிதத்தை மறுக்கும் மதவாதக் கருத்தியல்கள், சடங்கு சம்பிரதாயங்கள் மீது, ஆங்காங்கே அழுத்தமாகக் குட்டு வைப்பதும் பாராட்டத்தக்கது. பிராமணன், சமுத்திரத்தைத் தாண்டக்கூடாது என்கிற சம்பிரதாயம், அவசியத்திற்கும் அவசரத்திற்குமேற்ப மீறவும், அதற்கான பரிகாரமும்  படிப்படியாக நீர்த்துப்போய், நாக்கிலே ஒற்றைத் தர்ப்பையைக் கொளுத்தி, குறுக்கில் இழுத்து விடுவதில் குறுகிப் போவதையும், சுயநலத்தோடு ஒரு சமயம் மதத்தைப் பொருட்படுத்தாததையும், பிறிதொரு நிலையில் மதத் துவேஷத்தில் உக்கிரத்துடன் நிற்பதையும் இயக்குனர் பதிவு செய்திருப்பது, அவர்களை ஒருவேளை சிந்திக்க வைக்கக்கூடும். லேடிஸ் பை-சைக்கிளை எதிர்க்கும் சுந்தரனிடம் அப்பா, சிலதைக் காப்பாத்தணும்னா, சிலதை இழந்துதான் தீரணும்; விதவிதமான ரீசன் எல்லாம் உங்களாலதான் சார் சொல்ல முடியும்; என்னது! நல்ல குடும்பம்னு சொல்லி, சம்மதிக்க வெச்சியா? அப்ப, நம்ம குடும்பம் நல்ல குடும்பம் இல்லியா? போன்ற வசனங்களும், சுந்தரனுக்கும் அவனது மேனேஜருக்குமான  உரையாடல்களும் சுவையானவை. மேலும் இப்படத்தில், கருத்தரித்தது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும், ‘டிஸ்ஜெர்மினொமா’ எனும் கொடிய கருப்பைப் புற்று நோயின் அடையாளத்தை மறைத்துவிடும் கொடுமை குறித்து விழிப்புணர்வு கொள்ள வழிவகுத்த இயக்குனரை வெகுவாகப் பாராட்டலாம். சிறுவன் சுந்தரன் (வினய்) மற்றும் சிறுமி லீலா தாம்ஸன் (ஹரிகா கோயிலம்மா) போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். சௌமியா (அனுபமா பரமேஸ்வரன்),  ஜோதிடர் ஜோகராவ் ( ஸ்ரீகாந்த் ஐயங்கார் ), சுந்தரின் மாமா (பிரித்வி ராஜ்), ஜோசப் (வெங்கடேஷ் மஹா), டாக்டர் குரு (ராகுல் ராமகிருஷ்ணன்), கைனகாலஜிஸ்ட் (பவித்ர லோகேஷ்), வம்சி (சாய் ரோனக்), பட இயக்குநர் (அலி) எனத் துணைப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களும், நடிப்பில் சோடை போகவில்லை. விவேக் சாகரின் பின்னணி இசையும் பாடல்களும் இனிமை. நிகேத் பொம்மியின் கண்கவர் ஒளிப்பதிவு ‘பளிச்’. குறிப்பிடத்தகுந்தது, ரவி தேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பு. குறிப்பாக, ‘கட் டயலாக்ஸ்’  காட்சிகளை குழப்பமில்லாமல், விறுவிறுப்பு குறையாமல் ‘கட்’ செய்தது. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க, நிறைய நியாயம் இருக்கிறது. முன் பாதியில் கணிசமாகக்  குறைக்க வாய்ப்பும் இருக்கிறது. படத் தொகுப்பாளரை இயக்குநர் அனுமதித்திருக்கலாம். சமூகத்தில் முதன்மை பெற வேண்டியது, மதம் தாண்டிய மனிதக் காதலே என்பதை, அழுத்தந்திருத்தமாகவும் நகைச்சுவையுடனும் வழங்கும் விவேக் ஆத்ரேயின் ‘அடடே சுந்தரா’, பலே சுந்தராதான். மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

O2

O2

திரை விமர்சனம் ஆக்சிஜன்,  பிராணவாயு என்றெல்லாம் குறிப்பிடப்படும் உயிர்க்காற்று, உயிரைக் கொடுப்பதற்கு மட்டுமல்ல,  எடுப்பதற்கும்கூடக் காரணமாக அமையலாம் என்பதை,  ‘சீட் ஏஜ் திரில்லர்’ திரைக்கதையாக அறிமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ்,  ‘ஓ2’ திரைப்படத்தின் மூலமும் நயன்தாரா வழியாகவும் வழங்க முனைந்திருக்கிறார். ‘சிஸ்டிக் ஃபைரோசிஸ்’ எனும் சுவாச பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் சுவாசிக்க முடியாத வீராவுக்கு (ரித்விக்) அறுவைச் சிகிச்சை செய்யும் பொருட்டு, கோவையிலிருந்து கொச்சி நகருக்குத் தனியார் பேருந்தில் அழைத்துச் செல்லும் அம்மா பார்வதி (நயன்தாரா). இவரைப் போன்று அவரவர் பிரச்சனைகளுடன் ஒருங்கே பயணிக்கும் சில பயணிகள். போக்குவரத்து நெரிசல் காரணமாக, வழக்கமான பாதையை விட்டு குறுக்கு வழியில் செல்லும் பேருந்து, எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் பூமியில் புதைந்து, நம்மையும் பயத்தில் புதைய வைத்து விடுகிறது. அம்மா, குழந்தை, பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகளின் கதி என்ன என்பதுதான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள இரண்டு மணிநேரப் படத்தின் மொத்தக் கதை. தாவரங்களின் வகை, தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் உயிர்க்காற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்த புரிதலைக் கொண்ட தாய் பார்வதியாக நயன்தாரா, ‘எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா, அத பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டா; தட் அப்ளைஸ் டு மதர் நேச்சர் டூ’, ‘உண்மைய சொல்லனும்னா நாமெல்லாம் ஒரு சவப்பெட்டியில் புதஞ்சிருக்கோம்’, ‘ஒரு மனுஷன் சும்மா இருந்தாலே ஒரு நிமிஷத்துக்கு 16 லிட்டர் காத்து தேவைப்படுது; கண்ணுக்குத் தெரியாத பிரச்ன ஆக்சிஜன்’ என்று சொல்வதும், குழந்தையைக் காப்பாற்ற நடத்தும் துணிச்சலும் உணர்வுப்பூர்வமுமான போராட்டங்களும், அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகின்றன. அம்மாவுடன் பாசத்தைப்  பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளிலும், ஆக்சிஜன் வேண்டி, ஜோம்பிகள் போன்று எல்லோரும் தம்மை வெரித்துப்  பார்க்கும்போது, ஒருவித அச்சத்துடன் அவர்களை நோக்கும் போதும், குழந்தை ரித்விக்கின் நடிப்பு பளிச்சிடவே செய்கிறது. எதிலும் எப்போதும் சுயநலமாக நடந்து கொள்ளும், சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்யும், தண்ணீர் கொடுத்தவனையே ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லவும் செய்கின்ற, கொடுமையே உருவான போலீஸ்காரர், ‘கடவுளே ஒரு குறை வச்சாலும், ஒரு தாய் நெனச்சா அத சரியாக்க முடியும் தாயி ‘ என்று கூறும் குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த கைதி, அரசியல்வாதி ஆர். என். ஆர். மனோகர்,  பேருந்து ஓட்டுநர் ஆடுகளம் முருகதாஸ், ‘உன் தகுதிக்கேத்த ஸ்கூல்ல சேக்கோணும்’ என்று கூறும் பஸ் முதலாளி கவிதா பாரதி, அப்பா இடிக்கி பாஸ்கர், மகள், மருத்துவப் படிப்பை முடித்த இளைஞர் எனத் துணைப் பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களும் கவனம் பெறுகிறார்கள். யாராலேயோ அலட்சியமாக வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பை, எங்கெங்கோ பயணித்து இறுதியில் காற்றாடியின் இயக்கத்தையே நிறுத்தி விடுவதான குறியீடு, காரில் போனால் கண்டம் என்று சொன்ன ஜோசியக்காரர், நடக்கப் போகிற விபரீதத்தைச் சொல்லாத அங்கதம், எதற்கெடுத்தாலும் ‘பேட் டே’ என்று சொல்லிக் கொண்டு வரும் இளைஞன், பஸ் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்த வினாடி ‘மை குட் டே’ என்று கூறுவதிலான நகைமுரண் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. குழந்தை வீராவை அத்துணை நிர்பந்தப்படுத்தி, மீண்டும் பேருந்தில் மின்சாரத்தைப் பெறக் கீழே இறக்குவது, மூச்சுத் திணறலுக்கு ஆக்சிஜன் பெற முயல்வதைவிட அவசியமானதோ! நிலச்சரிவு நிகழக்கூடிய மலைப்பாங்கான மாநிலத்தில் இல்லாது, புதைந்திருக்கும் பேருந்தில் சரியான இடத்தை அறிந்துகொள்ள உதவும் கருவியை அரக்கோணத்தில் இருந்துதான் பெறவேண்டுமென்று கூறுவதை ஜீரணிக்க இயலவில்லை. இதுபோன்ற கதைக்கரு கொண்ட படத்திற்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது இசை. விஷால் சந்திரசேகர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பில் ஓரளவு நிறைவைத் தந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். ஆர் கே செல்வா படத்தொகுப்பை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கலாம். நயன்தாரா முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்தும், கதைக்கரு வித்தியாசமாக இருந்தும், வாய்ப்பிருந்தும் அதனைப் படமாக்கிய விதத்தில் செழுமை இல்லாது, இந்த பட்ஜெட்டுக்குள் எடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எடுத்தது போன்று, போதிய விறுவிறுப்பு இல்லாமல் போனதும், சில காட்சிகள் ‘அமெச்சுரிஸ்ட்’டாகவும்கூட அமைந்து விட்டது, சோகமே. மதிப்பெண் : 6/10 மது ராஜேந்திரன்

இருபத்து ஒரு கிராம்

இருபத்து ஒரு கிராம்

திரைவிமர்சனம் உள்ளார்ந்த அர்த்தத்தில் ஒரு சிலர் சற்று ஆணவமாகக்கூட “என் வெயிட் தெரியாம பேச வேண்டாம்” என்று கூறுவதைக் கேட்டு இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் தெரியாத ஒன்றுதான், அவர்களுடைய உயிரின் வெயிட்! அதைக் கண்டுபிடித்து, மர்ம முடிச்சுகளுடன் கூடிய விறுவிறுப்பான கதையை, பிபின் கிருஷ்ணா அறிமுக இயக்கத்தில் பெயரிட்டு, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம்தான்,  ‘இருபத்து ஒரு கிராம்’. பெருநிறுவன மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் அஞ்சலி (மானசா ராதாகிருஷ்ணன்) கொலை செய்யப்படுகிறார். வழக்கு விசாரணை கிரைம் பிரான்ச் டி.எஸ்.பி நந்த கிஷோர் (அனூப் மேனன்) வசம் வருகிறது. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சன்னி (அனு மோகன்) தலைமையிலான சிறப்புப் படையுடன் விசாரணை சென்று கொண்டிருக்கும் போதே, அயல்நாட்டில் இருந்து திரும்பும் அஞ்சலியின் சகோதரன் மார்ட்டின் (சந்து நாத் ஜி நாயர்) எரித்துக் கொல்லப்படுகிறார். சந்தேக ரேகை படிந்த மார்ட்டின் நண்பன் ஜிம்மி (அஜி ஜான்), ஃபாதர் ஜோசப் (நந்து) தவிர்த்து,  டிப்பர் டோனி (பினெஷ் பாஸ்டின்)  நிகில் (ஜீவா ஜோசப்) அடுத்தடுத்து கொலை செய்யப்பட, வழக்கு முட்டுச் சந்தில் நிற்க, எதிர்பாராமல் கிடைத்த ஒரு துப்பில், வேகமெடுத்துக் குற்றவாளியை நெருங்க, அவனே கொலையாகி வழக்கு மீண்டும் இடியாப்பச் சிக்கலாகி விடுகிறது. என்றாலும் சலைக்காமல், நுணுக்கமாக ஆய்ந்து, விடாமல் துரத்தும் நந்த கிஷோர், குற்றவாளியைப் பிடித்தாரா, குற்றவாளியைத்தான் பிடித்தாரா என்பதுதான், திருப்பங்களோடு சுவையாகச் செல்லும், ‘இருபத்து ஒரு கிராம்’ படத்தின் கதை. அருமையான மகளை இழந்து, விளைவாக மனைவியை (லினா லிஷாய்) இழந்து விடக்கூடாது என்கிற சோகம் ஒரு புறம் இருக்க, சவாலான இந்தத் தொடர் கொலை வழக்கைக் கையாள வேண்டிய நந்த கிஷோர் பாத்திரத்தில் அனூப் மேனன் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஷூட்டிங், சேசிங், பைட்டிங் இல்லாமல், விசாரணை, துப்பு, தடயவியல் முடிவுகள், நுணுக்கமான புலனறிவு என அப்பாத்திரமாக இயங்குவதில் அனூப்  தனது பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்குகிறார். மானசா ராதாகிருஷ்ணன், அனு மோகன், லினா லிஷாய், அஜி ஜான், ஜீவா ஜோசப், லினா, நந்து, ரஞ்சித், ரெஞ்சி பணிக்கர், விவேக் அனிருத் ஆகியோரும் ஏற்ற  பாத்திரங்களில் நேர்மையான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குழப்பமில்லாத திரைக்கதை. ஜித்து தாமோதர் ஒளிப்பதிவும், தீபக் தேவ் இசையும், அப்பு என் பட்டாத்ரி படத்தொகுப்பும் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டி, இயக்குநருக்குப் பக்க பலமாக உள்ளன. ஒரு வழக்கில் சந்தேகத்திற்கு உள்ளான ஒருவரை, குற்றவாளியாக  நிறுவுவதற்கு அடிப்படைத் தேவை, குற்றத்தின் நோக்கம். அதனைச் சந்தேகத்துக்கிடமின்றி அணுகுவதிலுள்ள காவல்துறையினரின் பல்வேறு கஷ்டநஷ்டங்களையும், சிரமங்களையும், ஏன், அழுத்தங்களையும்கூட உணரச் செய்யும் விபின் கிருஷ்ணாவின் ‘இருபத்து ஒரு கிராம்’,  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் விரும்பிகளுக்கு விருந்துதான். மதிப்பெண்: 7/10 மது ராஜேந்திரன்

சண்டிகர் கரே ஆஷிகி

சண்டிகர் கரே ஆஷிகி

திரைவிமர்சனம் எத்தனையோ வாதப் பிரதி வாதங்களையும் தாண்டி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, நாடாளுமன்றம் இயற்றிய சட்ட அங்கீகாரத்தின்படி, இந்நிகழ்வு இன்றைய நிலையில் இயல்பான ஒன்று என்றாலும், அத்தனை சுலபமாக இல்லாமல், நடைமுறையில் சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள், வலிகளின் நேர்த்தியான திரை வடிவம்தான், சுப்திக் சென், துஷார் பரஞ்சிபே எழுதி, அபிஷேக் கபூர் இயக்கி, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஹிந்தியில் வெளியாகியுள்ள ‘சண்டிகார் கரே  ஆஷிகி’. பாடி பில்டர் மனு முஞ்சள் (ஆயுஷ்மான் குரானா) சொந்தமாக ஜிம் நடத்தி வருகிறான். அதன் ஒரு பகுதியில், ஜும்பா நடனப் பயிற்சி தரும் ஆசிரியை மான்வி (வாணி கபூர்) இடையே மலர்ந்து பயணிக்கும் காதல், திருமணத்தை எட்டும் நிலையில், அவள் சொல்லும் ‘அந்த’ உண்மையை அவன் சகித்துக் கொள்ள முடியாமல், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முனைகிறான். தனது நேர்மையை உணராமல் பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டதையும், யாதொரு தவறும் செய்யாத நிலையில், சுயமரியாதை  காயப்படுத்தப்பட்டதையும் ஜீரணிக்க முடியாது தவித்துப் போகிறாள் மான்வி. இந்நிலையில், இவர்களிடையேயான பிரச்சனை எவ்விதம் தீருகிறதென்பதே சண்டிகார் கரே  ஆஷிகி படத்தின் மீதிக் கதை. புரிந்து கொள்ளாமல் மனு கிளம்பும்போது,  உடைந்து போவதில் ஆகட்டும், ஒரு சிறு கீரலுக்குக் குழந்தை போல அழுததைச் சுட்டிக்காட்டி, எத்தனை வெட்டு, ரண வலிகளை தான் தாங்கியதைச் சொல்லி, “இனி இதைவிட என்னைக் காயப்படுத்த ஏதுமில்லை, அப்படியான வலி ஏதாவது உனக்கு இருந்தா காட்டு” என்று சவாலாகச் சொல்வதில் ஆகட்டும், அப்பா, மகன் என்று குறிப்பிடும்போது, உடன் ‘மகள்’ என்று திருத்துவதில் ஆகட்டும், ஜிம்மை விட்டு நின்று விடும்படி கோரும் அப்பாவிடம், “என்னோட ஸ்கூல், என்னோட வீடு, என்னோட ஊர விட்டுட்டேன். இப்போ ஜிம்மையும் விட்டுட்டு எங்க ஓடுவேன்? நான் நான்தான். நானா இருக்கிற  எனக்கு எந்த அவமானமும் கிடையாது” என்று ஸ்திரமாக சொல்வதில் ஆகட்டும், “என்னோட கௌரவத்தை என்னால பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று சொல்வதில் ஆகட்டும் மான்வி பாத்திரத்தில் வாணி கபூர், அதேபோல, அவளின் நிலையை, அவளுடனான உறவை ஏற்றுக்கொள்வதிலான தயக்கத்தால், தேய்த்துத் தேய்த்துக் குளிப்பதில் ஆகட்டும், தனது நண்பர்களுடன் அவற்றைப் பகிர்ந்து தவறு இழைத்ததாகத் தடுமாறிப் புலம்புவதில் ஆகட்டும், அதே சந்தர்ப்பத்தில் அவர்கள் அவளை இழிவாகக் குறிப்பிடுவதை ஏற்காமல் சண்டையிடுவதில் ஆகட்டும், மருத்துவர் வழங்கிய ஆலோசனைகளுக்குப் பிறகு தெளிவு பெறுவதில் ஆகட்டும் மனு முஞ்சள் பாத்திரத்தில் ஆயுஷ்மான் குரானா என இருவருமே ஏற்ற பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தத்தம் நடிப்பின் பன்முகத் தன்மையை வெளிக்காட்டியுள்ளது சிறப்பு. மான்வியின் தந்தை மொஹிந்தர் (கன்வல்ஜித் சிங்), மனுவின் நண்பர்கள் (கௌரவ் சர்மா, கௌதம் சர்மா), மனுவின் அப்பா நவீன் (கிரிஷ் தாமிஜா), மனுவின் சகோதரிகள் (தான்யா அப்ரால், சாவன் ரூபாவாலி) ஆகிய கலைஞர்களும் சிறப்பாகவே பங்களிப்பைச் செய்துள்ளனர். ஒளிப்பதிவும் (மனோஜ் லோபோ) அருமை.  மாண்டேஜ் வகைப் பாடல்கள் இனிமை. இசை, சச்சின்-ஜிகர். சந்திரன் அரோரா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடும் படத்தில், முதல் நாற்பதாவது நிமிடத்திலேயே ‘அந்த’ உண்மையைப் போட்டுடைத்தும், படத்தின் இறுதிவரை இக்கதைக் கருவில் ரசிகர்களை அக்கறைப்படுத்தி,  ஈடுபாட்டுடன் கொண்டு செல்லும் இயக்குனர் அபிஷேக் கபூரின் துணிச்சலான திறமை பாராட்டுக்குரியது. மதிப்பெண்:7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

நரைத்தடம்

நரைத்தடம்

வயதானவர்கள் என்றால் வெட்டிக்கதை பேசிக்கொண்டு, ஊர் வம்பை விலைக்கு வாங்கிக்கொண்டு, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு மரத்தடியில் கட்டில் போட்டு சுகமாக ஓய்வெடுப்பவர்கள் என்கிற சினிமா மாயையை உதறிவிட்டு, நரைகூடிக் கிழப் பருவம் எய்தி – கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?! என்ற பாட்டுடைக் கவிஞன் பாரதியின் வரிகளுக்கு உயிர்ப்பித்துக் காண்பிக்கிறது ‘நரைத்தடம்’. பொதுவாகக் குறும்படம் என்றால் காமெடி, தினசரி ஹாட் டாபிக் மற்றும் காதல் கதைகளையே முக்கியமாகத் தேர்ந்தெடுக்கும் இந்தச் சூழலில் தனிமனித சுதந்திரத்திற்காகத் தன் கடைசி மூச்சுவரை வாழ்ந்துவரும் இடதுசாரி சிந்தனை கொண்ட பெரியவர் ஒருவரின் வாழ்க்கையையும் சமூகத்தின் மேல் அவர் கொண்டுள்ள அக்கறையையும் அழகாகக் காட்டியிருக்கிறார்கள். வயதானவர்களையும் அவர்களுக்கே உரித்தான குணாதிசயங் களையும் தாண்டி, பொதுச் சேவைகளில் ஈடுபடுவோர் படும் இன்னல்களையும் மற்றவரிடம் அடி வாங்கும் சூழ்நிலையையும் அசாதாரண மாகக் கூறுகிறார் இந்த கதையின் நாயகன். ‘சாதி, மத, அரசியல் பேதமின்றி சமூக அவலங்களை சிந்தனை செய்தால் நீயும் ஒரு போராளியே!’ என எதார்த்தமாக வாழ்ந்து வருகிறார் அந்தப் பெரியவர். தொடக்கக் காட்சியில் பசுமையான கிராமத்து மலை, ரசிக்கத் துடிக்கும் மனம் என கதையின் நகர்வில் உள்ள இடங்களைப் பார்த்துகொண்டே இருக்கலாம். மலையையும் மலை சார்ந்த இயற்கைச் சூழலையும் கண்ணாடிப் பேழைக்குள் திணித்து பச்சைப் பசேலென வளர்ந்துள்ள சினிமா வனத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சிறிய வீட்டில் இருந்து வெளியே வரும் முதல் காட்சியில் நரைத்த தலை முடியுடன் கண்ணாடி அணிந்த வயதான ஒருவர் பனியனுடன் வெளியே வரும் வேளையில் கதையின் மாற்று சிந்தனையை நன்கு அறியமுடிகிறது. கண்ணாடிக்கு முன் நின்று தனது தோள்பட்டை மீது கைவைத்துத் தடவிப் பார்க்கும் வேளையில் அதன் காரணம் நமக்குப் புரியவில்லை. முந்தையநாள் கள்ளச்சாராயம் விற்றவர்களைக் காவல்துறையிடம் காட்டிக் கொடுத்ததால், சாராய வியாபாரிகள் அடித்த இடத்தைத் தடவிக்கொடுப்பதாக வரும் காட்சி நம்மை நெகிழ்ச்சியான மனநிலைக்கு கொண்டு சென்று முந்தைய காட்சிக்கு விளக்கமளிக்கிறது. வயதானவரின் மகனாக வரும் நடிகர் ஒரு மகனாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். “நாமக் கட்டியும், கோவணத்தையும் தவிர வேறு அனைத்தும் விலை உயரும்” எனும் போதும் சிரிப்பையும், “இந்திய தேசியக் கொடியை உருவாக்கியதே ஒரு முஸ்லிம் பெண்மணிதானே!” என்று கூறும்போது நமது சமுதாயத்தின் நிதர்சனத்தையும் காட்சிப் படுத்துகிறார் கதையின் நாயகன். ஒருகட்டத்தில் “யோக்கியனாக எவன் வேண்டுமானாலும் வேசம் போடலாம், ஆனால் வாழ்வது கடினம்” என்று கூறும் வசனத்தில் தனிமைச் சுழலில் வளர்ந்த சிங்கத்தின் கர்ஜனை ஒலிக்கிறது. டீ குடிக்கக்கூட மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் போக வேண்டும் என்கிற அந்தப் பகுதியில், அவர் வாழும் தனிமைச் சூழல் மற்றும் சந்திக்கும் மனிதர்களுடன் கதையின் நாயகன் பேசும் விதத்தைப் பார்க்கும் போது, அவர் வாழும் காலத்திற்குள் சென்று அவருக்கு கிடைக்கப்பெற்ற வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் காளிதாஸ். “ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எனக்குப் போதவில்லை, 50 மணிநேரம் வேண்டும்” என்று கூறும் வேளையில் இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிக்கிப் போயுள்ள நாம் வாழ்க்கையை எப்படி நகர்த்தி வருகிறோம் என்று நச்சென்று கூறுகிறார். தினமும் காலையில் உணவு கொண்டு வந்து கொடுக்கும் மகன், மகன் போனபிறகு அந்த உணவைப் பறவைகளுக்கு வைத்துவிட்டு, தனக்கான உணவைத் தானே சமைத்து சாப்பிடும் அப்பா என, தந்தை மகன் உறவில் இருவரும் வாழ்கிறார்கள். இந்தக் கதைக்கு நாயகனாகவும், கதையின் கருப் பொருளாகவும் இறுதிவரை நம்மை அழைத்துச் செல்கிறார் அந்த நரைமுடிக் கிழவர். இடையில் வரும் கார்த்திக் கதாபாத்திரம் எதார்த்தத்தின் உச்சம். பகுத்தறிவுச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சமூகத்தின் மீது அக்கறை கொண்ட தனிமனிதர் ஒருவரின் வயோதிக வாழ்க்கையை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார்கள் படக்குழுவினர். படத்தின் இசை, ஒளிப்பதிவு மற்றும் வசனம் அனைத்தும் சிறப்பு. உலகம் முழுவதும் பல குறும்பட விழாக்களில் கலந்துகொண்டு சுமார் 22 விருதுகளையும், நார்வே குறும்பட விழாவில் சிறந்த குறும்படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நரைத்தடம். பொதுத்தொண்டு மற்றும் சமூகம் என்றால் என்னவென்று சரியான புரிதலின்றி எடுக்கப்படும் இன்றைய படங்களுக்கு மத்தியில் “நரைத்தடம்” ஒரு சிறந்த படைப்பு.

திரு தாய் அவளே…

திரு தாய் அவளே…

இலக்கியங்களில் எத்தனையோ தமிழ்ச் சமூகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் மனித சமூகங்களின் ஆண் பெண் எனும் இரு பிரிவுகளிலும் சேராமல் வாழ்ந்து வருகின்ற திருநங்கைகளுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் “திரு தாய் அவளே…” எனும் குறும்படம் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. போராட்டமே வாழ்க்கையெனப் பயணிக்கும் திருநங்கைகளுக்கு எதிரான கௌரவக் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் நிகழ்ந்து வந்தாலும் சமகால வாழ்வியலில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும், உணர்வுகளின் அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சிறப்பாகப் பேசுகிறது இந்தக் குறும்படம். தற்போதைய சூழலில் தங்களுக்கென ஒரு அங்கீகாரம் வேண்டும் எனக் கடுமையாகப் போராடி வரும் இவர்களின் வாழ்விலும் தற்போதைய சூழலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு ஊர்கள், சின்னஞ்சிறு அறைகள்;  வாடைகைக்குக்கூட எளிதில் கிட்டாத வீடுகள், தன் மனதுக்குப் பிடித்த குடும்பம் அமையுமா? என்ற ஏக்கம் என எப்போதும் மன அழுத்தத்துடனே வாழும் வாழ்வு அவர்களுடையது. மக்கள் மத்தியில் நிலவி வந்த தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, தங்களாலும் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று இவர்கள் சமீப காலமாக நிரூபித்து வருகிறார்கள். வனங்களில் சுற்றித் திரியும் பறவைகள் கூட இளைப்பாறும் வேளையில், மனிதராகப் பிறப்பெடுத்த திருநங்கைகளின் எண்ண ஓட்டங்களுக்கு ஓய்வே இல்லை என்றே கூறலாம். அதன் காரணமாக,  தற்போதைய சமூகத்தின் செவிலியர், அழகுக் கலை நிபுணர், காவல்துறை ஆய்வாளர் என பல தடைகளை தாண்டி தங்களுக்கென்று தனி அடையாளத்தைப் பதித்து வரும் இவர்கள் நிலவொளியில் உருவான கிறுக்கல்கள் என்றால் மிகையாகாது. பொது இடங்களில் திருநங்கைகள் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. இக் குறும்படத்தின் முதல் காட்சியில் குழந்தை ஒன்று காணமல் போய்விட, அதன் பெற்றோர் மற்றும் நண்பர்கள் தெருத்தெருவாக தேடி வருகின்றனர். ஓரிடத்தில் அந்தக் குழந்தையைக் காணும் படத்தின் நாயகி ஜீவா சுப்ரமணியம், அந்தப் பெண் குழந்தையுடன் விளையாடுவது போன்று கதை துவங்குகிறது. அங்கும் இங்குமாகக் குழந்தையைத் தேடும் பெற்றோர், தங்கள் குழந்தை திருநங்கையுடன் விளையாடுவதைக் காண்கிறார்கள். அதனைக் கண்ட குழந்தையின் தாய் “உங்களுக்கெல்லாம் கைதட்டிக் காசு வாங்கத்தான் தெரியும், குழந்தையைப்  பெத்து வளர்த்திருந்தால்தானே ஒரு தாயின் வலி தெரியும்” என்று கோபமாகப் பேச, அந்தப் பெண்ணிடம் இருந்து  வெளிப்படும் பாலின வெறுப்பு வார்த்தைகளால் கலங்கிப் போகிறார் நாயகி. தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு குழந்தைக்காக வசவுகள் வாங்கியது எண்ணி மனம் நொந்து அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் ஜீவா. அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி தவிக்கும் அவள் மறுநாள் டாக்டரிடம் சென்று தனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளதாகக் கூறுகிறார். டாக்டர் மட்டுமல்ல, பார்க்கும் நமக்கும் இது அதிர்ச்சியையும் இது சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. திருநங்கைகளின் வாழ்வியலில் நமது சமூகம் இதுவரை சந்திக்காத மறுபக்கங்களை மையப்படுத்துகிறது இதன் தொடர்ச்சி. தாய்மை எனும் தகுதியைப் பெறத் துடிக்கும் ஒரு திருநங்கையின் உணர்வை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது இந்தக் குறும்படம். தனக்கு தானே சீமந்தம் செய்து கொள்ளும் காட்சியில் ஜீவாவின் நடிப்பு நமது கண்களைக் குளமாக்குகிறது. தாய்மை என்பது பெண்களுக்கான தனித்துவ மான அடையாளம் என்பதை இந்தக் குறும்படம் மூலமாக உணர்த்தியுள்ளார் இதன் இயக்குநர் பிரவீன் குமார். வாடகைத் தாயாக பரிணாமம் பெறும் ஜீவாவின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. சிவகாசியைச் சேர்ந்த ஜீவா சுப்பிரமணியன் திருநங்கைகள் எதிர் கொள்ளும் கேலி கிண்டல்களை எதிர்கொண்டு வளர்ந்தவர். முன்னதாக கவண், தர்மதுரை, அயிரா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். படத்தின் இசை பல இடங்களில் படத்திற்கு ஒவ்வாத சூழலை உண்டாக்கினாலும், நாயகியின் நளினம் இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடுகிறது. ஒளிப்பதிவு அருமை என்று தான் கூற வேண்டும். வெளியிடப்பட்டதில் இருந்து சுமார் 31 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ள இந்தக் குறும்படம், தேசிய அளவில் 23 விருதுகளை வென்றுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தாலும் ஒரு காலத்தில் ஓரங்கட்டி வைக்கப்பட்ட திருநங்கைகள் இன்று தங்களது தனியாத‌ உணர்வுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ள தாய்மை உணர்வை அடையமுடியும் என்பதை இந்த வாடகைத்தாய் முறையை வெளிப்படுத்துவதன்மூலம் சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முயலும் “திரு தாய் அவளே”  குறும்படம், எதிர்காலக் குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு ஆவணக் காப்பகம் என்று தான் கூற வேண்டும்.

திரு தாய் அவளே…

திரு தாய் அவளே…

இலக்கியங்களில் எத்தனையோ தமிழ்ச் சமூகங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. ஆனால் மனித சமூகங்களின் ஆண் பெண் எனும் இரு பிரிவுகளிலும் சேராமல் வாழ்ந்து வருகின்ற திருநங்கைகளுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் “திரு தாய் அவளே…” எனும் குறும்படம் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது. போராட்டமே வாழ்க்கையெனப் பயணிக்கும் திருநங்கைகளுக்கு எதிரான கௌரவக் கொலைகளும், பாலியல் வன்முறைகளும் நிகழ்ந்து வந்தாலும் சமகால வாழ்வியலில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும், உணர்வுகளின் அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் சிறப்பாகப் பேசுகிறது இந்தக் குறும்படம். தற்போதைய சூழலில் தங்களுக்கென ஒரு அங்கீகாரம் வேண்டும் எனக் கடுமையாகப் போராடி வரும் இவர்களின் வாழ்விலும் தற்போதைய சூழலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. பல்வேறு ஊர்கள், சின்னஞ்சிறு அறைகள்;  வாடைகைக்குக்கூட எளிதில் கிட்டாத வீடுகள், தன் மனதுக்குப் பிடித்த குடும்பம் அமையுமா? என்ற ஏக்கம் என எப்போதும் மன அழுத்தத்துடனே வாழும் வாழ்வு அவர்களுடையது. மக்கள் மத்தியில் நிலவி வந்த தவறான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, தங்களாலும் இந்தச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று இவர்கள் சமீப காலமாக நிரூபித்து வருகிறார்கள். வனங்களில் சுற்றித் திரியும் பறவைகள் கூட இளைப்பாறும் வேளையில், மனிதராகப் பிறப்பெடுத்த திருநங்கைகளின் எண்ண ஓட்டங்களுக்கு ஓய்வே இல்லை என்றே கூறலாம். அதன் காரணமாக,  தற்போதைய சமூகத்தின் செவிலியர், அழகுக் கலை நிபுணர், காவல்துறை ஆய்வாளர் என பல தடைகளை தாண்டி தங்களுக்கென்று தனி அடையாளத்தைப் பதித்து வரும் இவர்கள் நிலவொளியில் உருவான கிறுக்கல்கள் என்றால் மிகையாகாது. பொது இடங்களில் திருநங்கைகள் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. இக் குறும்படத்தின் முதல் காட்சியில் குழந்தை ஒன்று காணமல் போய்விட, அதன் பெற்றோர் மற்றும் நண்பர்கள் தெருத்தெருவாக தேடி வருகின்றனர். ஓரிடத்தில் அந்தக் குழந்தையைக் காணும் படத்தின் நாயகி ஜீவா சுப்ரமணியம், அந்தப் பெண் குழந்தையுடன் விளையாடுவது போன்று கதை துவங்குகிறது. அங்கும் இங்குமாகக் குழந்தையைத் தேடும் பெற்றோர், தங்கள் குழந்தை திருநங்கையுடன் விளையாடுவதைக் காண்கிறார்கள். அதனைக் கண்ட குழந்தையின் தாய் “உங்களுக்கெல்லாம் கைதட்டிக் காசு வாங்கத்தான் தெரியும், குழந்தையைப்  பெத்து வளர்த்திருந்தால்தானே ஒரு தாயின் வலி தெரியும்” என்று கோபமாகப் பேச, அந்தப் பெண்ணிடம் இருந்து  வெளிப்படும் பாலின வெறுப்பு வார்த்தைகளால் கலங்கிப் போகிறார் நாயகி. தனக்குச் சம்பந்தமில்லாத ஒரு குழந்தைக்காக வசவுகள் வாங்கியது எண்ணி மனம் நொந்து அந்த இடத்தை விட்டு நகர்கிறாள் ஜீவா. அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி தவிக்கும் அவள் மறுநாள் டாக்டரிடம் சென்று தனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசையாக உள்ளதாகக் கூறுகிறார். டாக்டர் மட்டுமல்ல, பார்க்கும் நமக்கும் இது அதிர்ச்சியையும் இது சாத்தியமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. திருநங்கைகளின் வாழ்வியலில் நமது சமூகம் இதுவரை சந்திக்காத மறுபக்கங்களை மையப்படுத்துகிறது இதன் தொடர்ச்சி. தாய்மை எனும் தகுதியைப் பெறத் துடிக்கும் ஒரு திருநங்கையின் உணர்வை மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது இந்தக் குறும்படம். தனக்கு தானே சீமந்தம் செய்து கொள்ளும் காட்சியில் ஜீவாவின் நடிப்பு நமது கண்களைக் குளமாக்குகிறது. தாய்மை என்பது பெண்களுக்கான தனித்துவ மான அடையாளம் என்பதை இந்தக் குறும்படம் மூலமாக உணர்த்தியுள்ளார் இதன் இயக்குநர் பிரவீன் குமார். வாடகைத் தாயாக பரிணாமம் பெறும் ஜீவாவின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை. சிவகாசியைச் சேர்ந்த ஜீவா சுப்பிரமணியன் திருநங்கைகள் எதிர் கொள்ளும் கேலி கிண்டல்களை எதிர்கொண்டு வளர்ந்தவர். முன்னதாக கவண், தர்மதுரை, அயிரா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். படத்தின் இசை பல இடங்களில் படத்திற்கு ஒவ்வாத சூழலை உண்டாக்கினாலும், நாயகியின் நளினம் இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடுகிறது. ஒளிப்பதிவு அருமை என்று தான் கூற வேண்டும். வெளியிடப்பட்டதில் இருந்து சுமார் 31 லட்சம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ள இந்தக் குறும்படம், தேசிய அளவில் 23 விருதுகளை வென்றுள்ளது. ஒட்டுமொத்த சமூகத்தாலும் ஒரு காலத்தில் ஓரங்கட்டி வைக்கப்பட்ட திருநங்கைகள் இன்று தங்களது தனியாத‌ உணர்வுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ள தாய்மை உணர்வை அடையமுடியும் என்பதை இந்த வாடகைத்தாய் முறையை வெளிப்படுத்துவதன்மூலம் சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த முயலும் “திரு தாய் அவளே”  குறும்படம், எதிர்காலக் குறும்பட இயக்குனர்களுக்கு ஒரு ஆவணக் காப்பகம் என்று தான் கூற வேண்டும்.

தென்றல் வந்து தீண்டும்போது….

தென்றல் வந்து தீண்டும்போது….

இசைஞானி இளையராஜாவிற்கு மணி மகுடம் சூட்டுகிறது “தென்றல் வந்து தீண்டும் போது” குறும்படம். தமிழ் சினிமாவில் இசை என்றாலே இளையராஜாவிற்கு முன், இளையராஜாவிற்கு பின் என்ற சகாப்தத்தை உருவாக்கி, இன்று உலக சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு தமிழ் இசை அரசனாக முடிசூட்டப்பட்ட இசைஞானி  இளையராஜாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை இசை ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் கொண்டாட, பரந்து விரிந்த அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவரான அருள் சங்கர் என்பவர் தனது இசைத் தலைவனுக்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ஆம், ‘தென்றல் வந்து தீண்டும் போது’ எனும் குறும்படம் மூலமாக இசை ரசிகர்களின் மனதில் இளையராஜா எப்படி வாழ்ந்து வருகிறார் என்பதை தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். தமிழக சினிமா ரசிகர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் தனதாக்கிக் கொள்ளும் சக்தி கொண்டது இளையராஜாவின் இசை என்ற பேச்சு வழக்கு உண்டு. இதைக் கண்முன்னே காட்டியிருக்கிறார்கள் இதன் ஒளிப்பதிவாளர்கள் ராசாமதி மற்றும் சந்தோஷ் தயாளன். ‘தமிழ்ச் சமூகம் தவிர்க்கவே முடியாத இம் மாபெரும் கலைஞனுக்குத் தலைவணங்கி இக்குறும்படத்தை சமர்ப்பிக்கிறோம்’ என்ற முகப்பு வாசகத்தைப்  படிக்கும் போதே இக்குறும்படத்தின் கரு என்னவென்று புரிந்து விடுகிறது. இதுவே இந்த குறும்படத்தின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. வைதேகி காத்திருந்தாள் படத்தின் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’  என்ற காதல் தோல்விப் பாடலுடன்  தொடங்கு கிறது இந்தப் படம். காதல் தோல்வி என்றால் சோகமான பாடல்களைத்தான் கேட்க வேண்டும் என்கிற விதியை உருவாக்கியுள்ள இந்திய சினிமா ரசிகர்களிடையே இந்தப் படத்தின் நாயகனும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே சத்யா என்ற பெண்ணைக் காதலித்து, அந்தக் காதல் தோல்வியால் மனம் நொந்து போயிருக்கும் அருணுக்கு அவரது நண்பர் அறிவுரை கூறும்போதே படத்தின் தலைப்புப் பகுதி முழுவது மாக முடிந்துவிடுகிறது. படத்தின் முதல் காட்சி பெண் பார்க்கும் படலத்துடன் தொடங்குகிறது. யாழினி இந்தக் கதையின் நாயகி. கொஞ்சம் முக மற்றும் உடை ஒப்பனை சரியாகச் செய்திருந் தால் வெள்ளித்திரை நாயகியாகவே வாழ்ந்திருப்பார். ஆனாலும் இந்தக் கதைக்கு மெத்தப் பொருந்தியுள்ள பாத்திரமாக வாழ்ந்துள்ளார். கதையின் நாயகன் அருண், யாழினி உடனான பெண் பார்க்கும் முதல் சந்திப்பில், தனது முதல் காதல் குறித்து யாழினியிடம் கூறும்போது, ‘‘இங்கு வரும் வரையில் எனக்கு கல்யாண ஆசை இல்லை” எனும்போது, ‘‘அப்படியென்றால் இங்கு வந்த பின்னர் அந்த நினைப்பு மாறிவிட்டதா?” என்று கேட்க, நாயகன் அருணின் இரண்டாவது காதல் மொட்டு துளிர்விட தொடங்கு கிறது. 1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா திரைப்படத்தில் வரும் ‘வளையோசை கலகலகலவென’ என்ற பாடலைக் கேட்கும்போது முன்னாள் காதலி நினைவுக்கு வருவாரோ என்று அடிக்கடி குழப்ப நிலைக்குச் செல்கிறார் யாழினி. தொலைக்காட்சி யில் இந்தப் பாடல் பாடல் வரிகள் வரும் வேளையில், இசையின் ஒலியைத் தடை செய்து, காட்சிப் பதிவினை மட்டும் கண்டு ரசிக், நாயக னின் முதல் காதல் பற்றிய சந்தேகம் எழுகிறது. ஒரு கட்டத்தில் இளையராஜா பாடலையே கேட்கக் கூடாது என கணவரிடம் கண்டிப்பாக கூற, இளையராஜா பாடலைக் கேட்காமல் இவர்களின் குடும்ப வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் மீதமுள்ள படத்தின் கதை. படம் முழுக்க இரண்டு நபர்களைச் சுற்றி நகரும் கதைதான் என்றாலும் 26 நிமிடங்கள் எப்படிப் போனது என்று தெரியாமல் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அடிக்கடி பழைய காதலியைப் பற்றி கேட்கும் கேள்விகளைத் தவிர மற்ற இடங்களில் நடிப்புத் திறனில் ஒன்றிவிடுகிறார் நாயகி யாழினி. உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு குறும்பட விழாக்களில் கலந்து கொண்டு  சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த தயாரிப்பு என இதுவரை 22 விருதுகளை வாங்கியுள்ளது தென்றல் வந்து தீண்டும்போது குறும்படம். இளையராஜாவின் தென்றலை கலகலவென தீண்டியுள்ளது இந்தக் குறும்படம்.