பேனா வீரர் பிரேம்சந்த்

பேனா வீரர் பிரேம்சந்த்

வாழ்வாவது மாயம் என்று எழுதியவர்களும் எழுத்தாளர்கள்தான்; வாழ்க்கை வாழ்வதற்கே என்று முழங்கியவர்களும் எழுத்தாளர்கள் தான்; இரண்டும் கெட்டானாக, வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாவோம் என்ற தோரணையிலே வளவளா சித்தாந்தங்களை வழங்கியவர்களும் எழுத்தாளர்கள்தான். இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் வாழ்ந்த உலகிலேதான் பிரேம்சந்த் – அன்பு நிலவன் என்ற எழுத்தாளரும் வாழ்ந்தார். மானுடத்தை உயர்த்துவது இலக்கியம்தான் என்று கருதிய இவர், நோய்வாய்ப்பட்ட காலத்தை, வெளியூர்ப் பயணம் மேற்கொண்டிருந்த காலத்தைத் தவிர மற்ற நேரங்களில், ஒவ்வொரு நாளும் எழுதுவதை ஒரு தவமாகக் கொண்டு தனது இறுதிக் காலம் வரை எழுதிக்கொண்டே இருந்தார். ஒருமுறை அவர் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, எழுதுவதை நிறுத்துமாறு வேண்டியபோது, “நான் எப்படி எழுதாமல் இருக்கமுடியும்? நான் ஒரு தொழிலாளி; எனக்குத் தொழில் எழுதுவது; உழைக்காமல் உண்ண எனக்கு உரிமை இல்லை” எனக் கூறியதோடு, தன்னைப் ‘பேனா பிடிக்கும் சிப்பாய்’ என்று சொல்லிப் பெருமிதம் கொண்டவர். ‘எங்கெல்லாம் அநீதியும் அநியாயமும் தலை தூக்குகின்றதோ அங்கெல்லாம் அவற்றிற்கெதிராக மனிதநேய உணர்வை வலுப்படுத்திப் போரிடச் செய்வதுதான் இலக்கியத்தின் லட்சியமாகும் என்று உரக்கக்கூறிய எழுத்தாளர் பிரேம்சந்த். தன்பத்ராய் ஸ்ரீ வத்சவா என்பது பிரேம்சந்தின் இயற்பெயர். உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி என்ற காசிக்கு அருகில் உள்ள லாம்கி என்ற இடத்தில் 31.07.1880இல் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1895இல் முதல் திருமணம் செய்துகொண்டார். 1905இல் சிவ்ராணி தேவி என்ற இளம் விதவையை மணந்துகொண்டார். பிரேம் சந்தின் தந்தை அஜா யப் லால், ஓர் அரசுப் பணியாளர். பிரேம் சந்தின் எட்டாவது வயதில் அவரது தாய் காலமானார். இவர்களது குடும்பம் ஒரு பெரிய கூட்டுக் குடும்பமாகும். தந்தை மறுமணம் செய்துகொண்டார். இதனால் மாற்றாந்தாயின் அலட்சியத்திற்கு ஆட்படுத்தப்பட்டார். காசியில் பள்ளியில் படிக்கும்போது, அவரது தந்தை அவருக்குச் செலவிற்குக் கொடுத்த ரூபாய் 5 போதுமானதாக இல்லாததால், ஒரு பையனுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டது. 17ஆவது வயதில் இவரது தந்தை மரணமுற்றார். குடும்பச் சுமை இவர் மீது விழுந்தது. உயர்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது சித்தி, சித்தியின் தம்பி, தனது தம்பி ஆகியோரைக் காப்பாற்றவேண்டிய கட்டாயச் சுமையை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறிய இவர், வறுமை காரணமாக கல்லூரியில் சேர பெரும்பாடாய்ப் போயிற்று. அப்போதும் ஒரு பையனுக்குப் பாடம் கற்பிக்கத் தொடங்கினார். தனது 19ஆவது வயதில் ஆசிரியரானார். அதனால் பொருளாதார நிலை சற்று உயர்ந்தது. அவர் உருது மொழியில் படைத்த படைப்புகளுக்குப் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இந்தியில் எழுதத் தொடங்கிய பிறகு வருமானம் அதிகரித்தது. வருமானத்தில் பெரும் பகுதி அச்சகம், பத்திரிக்கை நடத்தச் செலவிடப்பட்டதால் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. புத்தக வெளியீட்டாளர்கள் உரிய பணத்தை தராமல் மோசம் செய்ததால் அச்சகத்தை மூடினார். பாதி அச்சடிக்கப்பட்ட அவரது புத்தகங்களைப் பாதி விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், வறுமையைத் தனது நித்தியத் தோழி என்று பகடியாக வர்ணிப்பார். உருது, இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரிந்த இவர், அம்மொழிகளில் உள்ள ஏராளமான புத்தகங்களைப் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே அக்காலத்தில் வந்த பிரபலமான நாவல்களைப் படித்து முடித்துவிட்டார். கணிதம் பயிலக் காசி சென்றபோது, அங்குள்ள நூல்நிலையங்களில் கணிதத்திற்குப் பதிலாகக் கதைப் புத்தகங்களைப் படித்தார். தன் மைத்துனர் மூலமாக அலகாபாத் நூல் நிலையத்திலிருந்து நூல்களைப் பெற்றுப் படித்தார். மூன்று மொழிகளிலும் நிறையப் பத்திரிகைகள் படித்தார். அரசியல், பொருளாதாரம், சமூகவியல் இவற்றிலும் நிறைய புத்தகங்களை படித்தார். அவருடைய வாசிப்புப் பழக்கம் இறுதிவரை இருந்தது. உலகத்தின் கொடுமைகளையும் துன்பங்களையும் பார்த்த அவரால், இவை எல்லாம் கருணைமிக்க ஒரு கடவுளின் படைப்பு என்று ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட நாத்திகத்தில் நாட்டம் கொண்டார். இலக்கியத்தின் மூலம் சமூகத்தைச் சீர்திருத்த, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க ஆரம்பத்தில் முயன்றார். அடிமை நாட்டில் அரசாங்கத்தின் கீழ் பணி செய்வது அவரது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. காந்தியடிகளின் சொற்பொழிவைக் கேட்டபிறகு, ஒத்துழையாமை இயக்கத்தில் சேர முடிவு செய்து, தனது அரசுப் பணியைத் துறந்தார். அவர் அரசுப் பதவியில் இருந்தபோதே, தூக்கிலிடப்பட்ட தியாகி குதிராம்போசின் உருவப் படத்தைத் தமது அறையில் மாட்டி வைத்திருந்தார். சமகால சமூகப் பிரச்சினைகளை எதார்த்த நோக்கோடு, இயற்கையான பாத்திரங்கள் மூலம் தம் நாவல்களிலும் சிறுகதைகளிலும் கையாண்டு, தற்கால இந்தி, உருது கதை இலக்கியத்திற்கு வித்திட்டார். 12 நாவல்களை உருது அல்லது ஹிந்தியில் எழுதி, அவற்றில் பலவற்றைத் தாமே, தாம் அறிந்த பிற மொழிகளிலும் பெயர்த்தார். 300 சிறுகதைகள், மூன்று நாடகங்கள் எழுதியுள்ளார். பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்ட, கொடுமைக்குள்ளான, சுரண்டப்பட்ட மனிதன் அல்லது சமூகத்தின் குரலை உயர்த்திப் பிடிப்பது தமது கடமை என்று உறுதிபட நம்பி, அவற்றைத் தமது படைப்புகளில் வெளிப்படுத்தினார். ‘நம் நாட்டில் விவசாயிகளைச் சுரண்டும் ஜமீந்தார்களும் சேட்டுகளும் இருக்கக் கூடாது’ என்பதுதான் என் கம்யூனிசம் என்று உரையாடும்போது கூறியதோடு, அவற்றைத் தமது படைப்புகளில் எழுதினார். மனித நேயத்தின் வெளிப்பாடாக ஒரு நாவலில் குருட்டுப் பிச்சைக்காரனைக் கதாநாயகனாகச் சித்தரித்துள்ளார். வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் பிற அநீதிகளின் காரணமாகப் பெண்கள் விலை மாதர்களாக மாறும் நிர்ப்பந்தத்தை, பொருத்தமற்ற திருமணத்தின் விளைவுகளை, சேவா சதன், நிர்மலா என்ற கதைகளில் எழுதியுள்ளார். அந்நிய ஆட்சிக்கெதிராக மக்களின் சத்யாகிரகம், மதுவிலக்குப் பிரச்சாரம், அந்நியப்பொருள் மறியல், கதர் இயக்கம், தேசபக்தர்கள் போலீஸ் தடியடிக்குள்ளாகிச் சிறை சென்று உயிர்த் தியாகம் செய்வது போன்ற நிகழ்வுகள் இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. உபன்யாஸ் சாம்ராட், அதாவது நாவல் சக்கரவர்த்தி என்ற அடைமொழியை பிரேம் சந்திற்கு முதலில் பயன்படுத்தியவர் வங்க இலக்கியவாதி சரத் சந்திரர்.பிரேம்சந்த் சரத் சந்திரரிடம் தனது முதல் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுதித் தருமாறு வேண்டியபோது, அதற்கு அவர் வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் எழுதக்கூடிய அளவிற்கு உங்களது கதை உள்ளது. இதற்கு முன்னுரை எழுதும் தகுதி தனக்கில்லை என்றார். இதன் மூலம் பிரேம்சந்த் கதைகள் எந்த அளவிற்கு அவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை அறிய முடியும். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பெரும் புகழ்பெற்ற இந்தி, உருது எழுத்தாளர் மட்டுமல்லாது இந்திய விடுதலைக்காகவும் விவசாயிகளுக்காகவும் தீவிரமாகவும் தீரமாகவும் போராடிய இலக்கியப் போராளி பிரேம்சந்த். 1936இல் உருவான இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவரும் இவரே. இவரது பிறந்த தினம் இன்று.

திருப்பூர் எனும் திருப்புமுனை

திருப்பூர் எனும் திருப்புமுனை

திணறுகிறது திருப்பூர், திண்டாடுகிறது திருப்பூர், இனி பின்னலாடைத் தொழில் அழிந்துவிடும் என்றெல்லாம் பல்வேறு செய்திகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகவே இந்தச் சமூகத்தின் பேசுபொருளாக இருந்துவருகின்றன. உண்மை நிலவரம் என்ன? உள்ளபடியே இத்தொழில் அழிந்துவிடுமா? திருப்பூரின் எதிர்காலம் என்னவாகும்? ஊடங்கங்களிலும் பொதுமக்களிடமும் பரவும் செய்திகளுக்கும் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் தரவுகளை உள்ளடக்கிய அவதானிப்பை விடையாகப் பகிர்கிறார், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளரும் ஈஸ்டர்ன் குளோபல் க்ளோத்திங் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலரும் ஒன்றிய அரசின் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் நிரந்தர அழைப்பாளரும் பி.எஸ்.ஜி. கல்லூரியின் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புப் பாடத்திட்ட உருவாக்கக் குழு உறுப்பினருமான குமார் துரைசாமி அவர்கள். கட்டுரையாளர் முன் குறிப்பு: இந்தக் கட்டுரைகளைப் படிக்கும் முன், அரசியல் சிந்தாந்தச் சார்புகளை விடுத்து, பொதுவான மனநிலையில் அணுகுமாறு வேண்டுகிறேன். பல்வேறு அனுமானங்களைக் கடந்து நியாயமாக எழுப்பப்படும் ஐயங்களை இயன்றவரை தீர்க்க முயல்கிறேன். திருப்பூரைப் பொறுத்தமட்டில், பெருமளவில் பருத்தி விளையும் நிலப்பரப்பாக ஒரு காலத்தில் அறியப்பட்டது. சுமார் 60 -70 ஆண்டுகளுக்கு முன்னரே ஜின்னிங் மற்றும் நூற்பாலைகள் அமையப்பெற்ற ஊர் என்றாலும் 1950களில் மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் உள்ளாடை தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இங்கு மிகச் சிறிய அளவில் பனியன் உற்பத்தி தொடங்கப்பட்டு படிப்படியாக முன்னேறியது. பெருமளவு வேளாண் சமூகமாக அறியப்பட்ட இப்பகுதி மக்கள், பின்னலாடைத் தொழில் முனைவோர்களாகவும் தொழிலாளர்களாகவும் இந்தத் தொழிலை முன்னெடுத்தனர். 1979 இறுதியில் இத்தாலி வர்த்தகர் ஒருவரின் வருகையைத் தொடர்ந்து இங்கிருந்து நேரடி ஏற்றுமதிக்கான வாய்ப்பினைப் பெற்றது. அதற்கு முன்னர் ஏற்றுமதி ஆடைகள் இங்கு தயாரிக்கப்பட்டாலும் மும்பை, டெல்லி வர்த்தகர்கள் அதனைக் கொள்முதல் செய்து அவர்கள் நேரடி ஏற்றுமதியில் ஈடுபட்டுவந்தனர். 1984ஆம் ஆண்டு சுமார் 9 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்த இந்த நகரம், தற்போதைய நிலவரப்படி சுமார் 38 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி மற்றும் 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி என்கிற அளவில் உற்பத்தியை மேற்கொள்கிறது. சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலில் பணியாற்றுகின்றனர். 1984ஆம் ஆண்டு 300 நிறுவனங்கள் இருந்த ஊரில், தற்போது 20000 க்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்குகின்றன. பல்லடம் தாலுகாவில் ஒரு கிராமமாக அறியப்பட்ட திருப்பூர், இன்று ஒரு மாவட்டத்தின் தலைநகராக, உலகளவில் பின்னலாடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஊராக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்தப் பின்னலாடை ஏற்றுமதியில் 54% திருப்பூரிலிருந்து மட்டுமே உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளை உள்ளடக்கிய ஒரு தொழில் வளர்ச்சிக்கான நகரம் என்று உலகளவில் திருப்பூரை மட்டுமே அடையாளம் காட்ட இயலும். ஏனெனில், சமூகத்தின் அனைத்துத் தரப்பின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் கட்டமைப்பைத் தன்னகத்தே கொண்ட தொழில் நகரம் இது. இங்குள்ள நிறுவனங்களின் வரலாற்றுப் பின்னணிகளை ஆய்வு செய்தால், ஒன்று வேளாண் பின்னணி அல்லது நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி என்கிற பின்னணியைப் பறைசாற்றும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொழில் மற்றும் நகரம் என்கின்ற பின்புலம். தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் வேலை இல்லை, பருவமழை தப்பியதால் பிழைப்புக்கு வழி இல்லை எனும் நிலை எழும்போதெல்லாம், திருப்பூர் போனால் நாம் மட்டுமல்ல; நமது குடும்பத்திற்கான வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும் என்கிற ஒரு காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தொழிலாளர்களாக, நிர்வாகத்தின் அங்கமாக, திருப்பூரை நோக்கித் தனியாகவும் குடும்பமாகவும் பல்லாயிரக்கணக்கான பேர் புலம்பெயர்ந்து இங்கு குடியேறினர். அவர்களில் பலர், இன்றைய தேதியில் தொழில் முனைவோர்களாகவும் பலரின் குழந்தைகள் வாழ்வின் அடுத்த படிநிலையை நோக்கி நகர்ந்தும் இருக்கின்றனர். வந்தோரையும் வழியின்றித் தவித்தவர்களையும் அரவணைத்துக் காப்பாற்றிய நகரம் திருப்பூர். பனியன் உற்பத்தி என்பது பல்வேறு நிலைகளைக் கொண்டது. நூலில் தொடங்கி ஆடை நுகர்விற்கு வரும்முன், அடிப்படையில் குறைந்தது 7 நிலைகளைக் கடக்க வேண்டும். மிக நுட்பான வேலைப்பாடுகளைக் கொண்ட ஆடைகள் 15 நிலைகள் வரை கடந்து உற்பத்தி செய்யப்படும். உலகிலேயே மிக ஆரோக்கியமான, குழு சார் உற்பத்திச் சூழலைக் கொண்ட நகரம் திருப்பூர். ஒவ்வொரு படிநிலையிலும் ஏரளமான நிறுவனங்கள், பல்வேறு அளவுகளில் உற்பத்தியை மேற்கொள்கின்றன. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்ட நிறுவனங்களாகவே இவை இயங்குகின்றன. ஒவ்வொரு படிநிலையிலும் உள்ள குழுசார் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று ஆதரவாக, ஒற்றுமையுடன் செயல்படுவதே இந்த மாநகரின் பின்னலாடைத் தொழில் வளர்வதற்கான முக்கியக் காரணம். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ‘இனி இந்தத் தொழில் உயிர்ப்புடன் இருக்குமா?’ என்று சமூகத்தில் எழுந்துள்ள கேள்வி, தொடர்ந்து என்னுள் எதிரொலித்துக்கொண்டே உள்ளது. தற்சமயம் கடும் நெருக்கடியில் இந்தத் தொழில் உள்ளது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இரு பெரும் கொரோனா பெருந்தொற்றுக் காலம், பஞ்சு விலை ஏற்றம், ரஷ்யா -உக்ரைன் போர், அதன் தொடர்ச்சியாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகிய காரணிகளால் தொடர்ந்து ஏற்றுமதியிலும் உள்நாட்டுச் சந்தையிலும் இந்தத் தொழில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும்15 முதல் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. ஏறத்தாழ எல்லா நிறுவனங்களும் 50 முதல் 70 சதவீதக் கொள்ளளவிலேயே இயங்குகின்றன. மேற்சொன்ன காரணங்களைக் கடந்து, பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கச் சிக்கல், மின் கட்டண உயர்வு, வங்கிகளின் நடைமுறையில் மாற்றங்கள், அரசின் கொள்கைகளில் மாற்றம் என பிற காரணங்களும் வரிசை கட்டி நிற்கின்றன. இவை ஒருபுறம் இருக்க, உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களை மேம்படுத்திக்கொள்ளாத சூழலும் ஒரு பெரும் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை. யார் வேண்டுமெனாலும் தொழிலில் ஈடுபட்டுப் பொருளீட்டலாம் என்கிற நிலை மாறி, தகுதி பெற்றுத் தொழிலில் ஈடுபட்டால் பொருளீட்டலாம் என்கின்ற நிலையை அடைந்து, தற்போது, தகுதியானவர்கள் மட்டுமே தொழிலில் ஈடுபட்டுப் பொருளீட்ட இயலும் என்கிற நிலைக்கு வந்துள்ளோம். அடுத்தடுத்த பகுதிகளில் மேற்சொன்ன பல்வேறு விடயங்களைப் பற்றி விரிவாகப் பேசி, இறுதியில், தகுதியானவர்கள் என்பதன் பொருள் என்ன என்பதை அறிவோம். நம்பிக்கை மட்டுமே இப்போதைய தேவை. தொடர்ந்து பயணிப்போம். (அடுத்த பகுதி வெள்ளிக்கிழமை வெளியாகும்)

பொன்னியின் செல்வன் – 30

பொன்னியின் செல்வன் – 30

மதுராந்தகன் கொடிய எண்ணங்களுடன் சேந்தன் அமுதன் குடிசையை நோக்கிச் செல்கையில், பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்துடன், கருத்திருமன் மதுராந்தகனை மறிப்பதுபோலக் குறுக்கிட்டான். தன் கையிலிருந்த குறுவாளை, கருத்திருமனை நோக்கி மதுராந்தகன் ஓங்கினான். உடனே கருத்திருமன், தான் அவனுக்கு எதிரியல்ல என்றும் அவனுக்கு உதவுவதற்காகவே வந்திருப்பதாகவும் கூற, மதுராந்தகன் திகைத்தான். தன்னை மதுராந்தகனின் தந்தையாருடைய உண்மையான ஊழியன் என அறிமுகப் படுத்திக்கொண்ட கருத்திருமன், மதுராந்தகனின் தந்தை யார் என்ற ரகசியத்தை மதுராந்தகனின் காதில் சொன்னான். அவனும் ராஜகுமாரன் எனவும் தன்னுடன் வருமாறும் பலவகையில் மதுராந்தகனை அழைத்தான். மதுராந்தகன் அவனுடன் செல்வதாக முடிவு செய்தான். வந்தியத்தேவனைத் தங்களுடன் அழைத்துப்போவது பற்றி விவாதித்துக்கொண்டே, இருவரும் குதிரைகளை நோக்கி நடக்கத் தொடங்கினர். மதுராந்தகன், சேந்தன் அமுதனை ஏதாவது செய்யலாமென யோசித்து, பின் முடிவை மாற்றிக்கொண்டு நடக்கலானான். கருத்திருமனுடன் வந்திருந்த வந்தியத்தேவன், அவனின் வருகைக்காகக் காத்திருந்தான். மதுராந்தகனோடு கருத்திருமன் பேசியதன் ஒரு பகுதி அவன் காதிலும் விழவே, அவன் சற்றே குழம்பி குடிசையை நோக்கினான். அப்போது குடிசையின் பின்னால் இருந்த பலகணியின் வழியாக ஒரு உருவம், ஈட்டியைச் செலுத்துவதற்காகக் குறிபார்த்ததைக் கண்டு அதிர்ந்தான். அது பினாகபாணியேதான். பாதாளச் சிறையில் வந்தியத்தேவனால கட்டிப்போடப்பட்ட பினாகபாணி, பொன்னியின் செல்வருடன் வந்தவர்களால் அவிழ்த்துவிடப்பட்டான். வந்தியத்தேவன் தப்பித்ததை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்ததைக் கண்டு எரிச்சலுற்றவன், சேநாதிபதி பெரிய வேளாளரிடம் வந்தியத்தேவன் காணாமல் போய்விட்டதைச் சொல்லி உடனே தேடுமாறு வேண்ட, அவருக்குக் கோபம் வந்து அவனைத் துரத்திவிட்டார். முதன் மந்திரி அநிருத்தரிடமே பினாகபாணி சென்று நடந்ததைச் சொல்ல, அவரும் வந்தியத் தேவன் தப்பித்தது குறித்து ஏதும் சொல்லாமல் பினாகபாணியைக் குற்றம் சொன்னார். அவர், பினாகபாணியைத் தொடரச் சொல்லி, தான் அனுப்பியிருந்த ஆழ்வார்க்கடியான் மிச்சத்தைப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையால், பினாகபாணியை விரட்டிவிட்டார். இதற்கெல்லாம் வந்தியத்தேவன்தான் காரணம் என்பதால், அவனை எப்படியாவது தானே பிடித்துவிட வேண்டும் என எண்ணி, வந்தியத் தேவன் சேந்தன் அமுதன் குடிசையில்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து, சேந்தன் அமுதன் குடிசையை அடைந்தான் பினாகபாணி. அவனுக்கு அந்த வழி சரியாகத் தெரியாததானால், எப்படியோ தேடித்தேடி முயன்றதில், மதுராந்தகனும் கருத்திருமனும் ரகசியமாகப் பேசுவதைக் கண்டான். குதிரைகள் கட்டிப்போட்டிருப்பதைக் கண்டவன், எப்படியும் தப்பிக்க வந்தியத்தேவன் அங்குதான் வரவேண்டுமென நினைத்து அங்கு செல்லத் தொடங்கினான். அப்போது குடிசைக்குள்ளிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்ளும் குரல்களைக் கேட்டு, பலகணி வழியாகக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தான். பூங்குழலியின் மேல் இருந்த மோகம் கண்ணை மறைக்க, கையிலிருந்த ஈட்டியை சேந்தன் அமுதன் மேல் எறிவதற்காகக் குறிபார்த்த போதுதான், வந்தியத்தேவன் அவனைக் கண்டான். அதே சமயத்தில், இரு குதிரைகளில் மதுராந்தகனும் கருத்திருமனும் கிளம்புவதைக் கண்ட வந்தியத்தேவன், பினாகபாணியின் செயலைத் தடுப்பதே முதல் வேலை என்று சடுதியில் முடிவெடுத்தான். வந்தியத் தேவன் ஓடிவரும் சத்தம் கேட்டுத் திரும்பிய பினாகபாணி, வந்தியத்தேவனை அதே ஈட்டியால் விலாவில் குத்தினான். அதே சமயம் குதிரைகள் ஓடும் சத்தமும் கேட்கவே, தான் குத்தியது மதுராந்தகரை என்று தவறாக நினைத்துக்கொண்டே தலைதெறிக்க ஓட்டம் எடுத்தான். வந்தியத்தேவனின் அலறலைக்கேட்டு சேந்தன் அமுதனும் பூங்குழலியும் விளக்கை எடுத்துக்கொண்டு வந்து, அவனை உள்ளே தூக்கிச் சென்றார்கள். வாணி அம்மை பச்சிலை வைத்தியம் செய்து அவன் உயிரைக் காப்பாற்றினாள். ஆழ்வார்க்கடியான் படகில் கட்டியிருந்தபடிக்கு, வந்தியத்தேவன் தப்பித்து இலங்கைக்குப் போவதே இப்போதைக்கு நல்லது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்ததை நினைத்துக்கொண்டு வந்தியத்தேவனிடம் ஒரு செய்தி சொல்லி அனுப்பக் காத்திருந்தான். அதேபோல, இரு குதிரைகள் அவனைத் தாண்டவும் அவற்றில் போகும் நபர்களை பார்த்து வியப்படைந்தான். கருத்திருமன் பெயரைக் கூறி, உதவிக்கு அழைத்தான். அப்போது கருத்திருமன் மட்டும் திரும்பி வந்து அவனை அவிழ்த்துவிட, அவனைத் தாக்கி, ‘உடன் வந்திருப்பது யார்?’ எனக் கேட்டு மிரட்டினான். கருத்திருமனால் அவன் பிடியிலிருந்து தப்பிக்கவியததால், மதுராந்தகனை அழைத்துச் செல்வதாகக் கூறினான். மதுராந்தகனின் உண்மையான தந்தை யார் எனவும் சேந்தன் அமுதன் யார் மகன் எனவும் மீண்டும் மிரட்டவும், கருத்திருமன் உண்மையைக் கூற, ஆழ்வார்க்கடியான் அவனை விடுவித்தான். ஆழ்வார்க்கடியானும் அவன் ஆட்களும் தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி நடக்க, பினாகபாணி தலைதெறிக்க ஓடிவந்து இவர்களிடம் முட்டிக்கொண்டான். ‘வந்தியத்தேவன் அங்கு யாரையோ குத்திவிட்டு ஓடிவிட்டதாக’ ஆழ்வார்க்கடியானிடம் புலம்பினான். அவனிடம் மட்டும் நாலு குதிரையும் ஆட்களும் இருந்தால் பின்தொடர்ந்து சென்று பிடித்துவிடுவேன் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியான் அவனைக் கோட்டை நோக்கி அழைத்துச் சென்றான். கோட்டைவாயிலில், அநிருத்தரும் சேநாதிபதி வேளாளரும் நிற்க, எதிர்ப்புறத்தில் சின்ன பழுவேட்டரையர், பார்த்திபேந்திரன், மற்றும் கந்தமாறனும் பரிவாரங்களும் இருந்தனர். பெரிய பழுவேட்டரையரும் ஒரு யானை மேல் வீற்றிருந்தார். ஆழ்வார்க்கடியானின் யோசனையின் பேரில், வந்தியத்தேவன் தப்பிப் போய்விட்டதைச் சொல்லி, அவனைப் பிடித்துவர பினாகபாணி உதவி கேட்க, சில வீரர்களுடன் கந்தமாறனைப் பினாகபாணியுடன் சின்ன பழுவேட்டரையர் அனுப்பி வைத்தார். குதிரையில் சென்ற மதுராந்தகனும் கருத்திருமனும் இருட்டில் நதி வெள்ளத்தைத் தாண்டமுடியாமல் மரத்தின்மீது அமர்ந்திருந்தனர். கருத்திருமன் பாண்டிய நாட்டின் ரத்தின ஹாரம், மணிமுடி பற்றியெல்லாம் சொல்லி, மதுராந்தகனின் மனச்சோர்வைப் போக்கிக்கொண்டிருந்தான். பின்னால் வீரர்கள் வருவதைப் பார்த்தவுடன், வேகவேகமாக குதிரைகளுடன் அக்கரைக்கு இருவரும் சென்றனர். இருட்டில் வெள்ளத்திலிருந்து கரையேறும் முன்பு, மதுராந்தகனை வந்தியத்தேவன் என எண்ணிக் கந்தன்மாறன் ஈட்டி எறிய, மதுராந்தகன் வெள்ளத்தில் வீழ்ந்தான். மூங்கில் பாலத்தில் ஏறி, கருத்திருமனைப் பிடிக்கப் பினாகபாணி முயல, கருத்திருமன் பாலத்தின் கயிறுகளை அறுத்துவிட்டதில் பினாகபாணி வெள்ளத்தில் விழுந்து இறந்தான். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கருத்திருமன் தப்பி ஓட, வந்தியத்தேவன்தான் இறந்துவிட்டான் என எண்ணிக்கொண்டு, அவன் சடலத்தைக் கந்தமாறன் ஆற்றில் தேட, சடலம் கிடைக்கவில்லை என்பதால் ஆற்றில் அடித்துக்கொண்டு போயிருக்குமெனக் கருதி, கந்தன்மாறன் தஞ்சைக்கு திரும்பினான். இதற்குள், ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து சேந்தன் அமுதனின் குடிசையை அடைந்தான். அங்கு மதுராந்தகனுக்காக அவனைக் கூட்டி வந்த பல்லக்கு சிவிகையும் காவலர்களும் காத்திருந்தனர். உள்ளே சென்றபோது, மதுராந்தகன் கழற்றி வைத்துவிட்டுப் போயிருந்த ஹாரம், கிரீடம், உத்தரீயங்கள், வாகுவலயம் அனைத்தையும் ஒரு காவலன் கொண்டுவந்து தந்தான். ஆழ்வார்க்கடியான் குடிலின் கதவைத் தட்டியவுடன், கதவைத் திறக்காமல், பூங்குழலி வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். பின் கதவைத் திறந்து பார்த்து, காவலர்களைக் கண்டு பயந்தவளைத் தள்ளிக்கொண்டு ஆழ்வார்க்கடியான் உள்ளே சென்றான். வந்தியத்தேவனைக் கட்டிலுக்கடியில் மறைத்து வைத்திருந்ததைப்பற்றி ஆழ்வார்க்கடியான் கேட்க, சேந்தன் அமுதன் உண்மையை ஒத்துக்கொண்டு, உதவி செய்யுமாறு வேண்டினான். ஆழ்வார்க்கடியான், பொன்னியின் செல்வரின் யானையைக் கொண்டுவருவதாகவும் சேந்தன் அமுதன் மதுராந்தகன் கழற்றி வைத்த ஆபரணங்களைப் பூண்டு, வேடமிட்டு அதில் ஏறி வருமாறும் கூறினான். வந்தியத்தேவனை மதுராந்தகன் வந்த பல்லக்கில் ஏற்றிவிட்டு, பூங்குழலியை உடன் நடந்து வருமாறும் யோசனை கூறினான். பழுவேட்டரையர்களின் படை எப்போது வேண்டுமானாலும் இங்கு வருமெனவும் வந்தால் சேந்தன் அமுதனின் உயிரைக் காப்பாற்றத் தன்னுயிரைக் கொடுக்க முயன்ற வந்தியத்தேவனை நாம் காப்பாற்ற முடியாதெனவும் அவர்களை அவசரப்படுத்தினான். அவர்கள் சம்மதித்தனர். கோட்டை வாசலில் சின்ன பழுவேட்டரையருக்கும் சேநாதிபதி பெரிய வேளாளருக்கும் பூசல் ஏற்பட்டதைத் தடுக்க முடியாமல் முதன் மந்திரி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். சக்ரவர்த்தி உடல்நிலை சரியில்லாமல், தன் மூத்த மகனை இழந்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர்கள் சண்டையிட்டுக்கொள்வது அழகல்ல எனவும் மறுநாள் பகலுக்குள் அனைவரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தும்வரை அமைதியாக இருக்குமாறும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஆழ்வார்க்கடியான் அவரைத் தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவர் சின்ன பழுவேட்டரையரிடம் மதுராந்தகர் யானையில் அமர்ந்து வருவதாகவும் சேந்தன் அமுதனுக்கு அடிபட்டிருப்பதால் அவனைப் பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்வதாகவும் கூறினார். ஏற்கனவே, தனது மருமகனான மதுராந்தகனின் பாதுகாப்பு பற்றி விவாதத்தில் இருந்த சின்ன பழுவேட்டரையர், அமைதியானார். ஆனால் தன் பாதுகாப்பில் இருந்த கோட்டைக் காவலைப் பெரிய வேளாளர் வைத்திருப்பதால், உள்ளே வர முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து, வெளியே தங்கிவிட்டார். மறுநாள் சக்ரவர்த்தியிடம் இதைத் தெரிவித்தபோது, காலாந்தக கண்டர் வராமல் ஆலோசனையைத் தொடரமுடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கோட்டைக் காவலை மறுபடி அவரிடமே ஒப்படைக்கும்படி பெரிய வேளாளரிடம் சொல்ல, அவர்கள் அனைவரும் ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றியும் வந்தியத்தேவன் தப்பித்தது குறித்தும் கேள்விகளைத் தொடுத்தார்கள். அநிருத்தர், தன்னுடைய அஜாக்கிரதையால் வந்தியத்தேவன் தப்பித்தது உண்மையெனவும், திருப்பிக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பும் தன்னைச் சார்ந்தது எனவும் கூறினார். வந்தியத்தேவனைத் தொடர்ந்து பிடித்துவர கந்தன்மாறன் போயிருப்பதாகப் பார்த்திபேந்திரன் சொல்ல, குந்தவையின் முகம் வாடியது. அதைக் கவனித்த முதன்மந்திரி அது சாத்தியமில்லை என அவளுக்குக் குறிப்பால் உணர்த்தினார். மறுபடி கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்படைப்பது குறித்துப் பேச, அநிருத்தர் ராஜ்ய உரிமை பற்றி முடிவெடுத்தபின் அதை முடிவு செய்யலாமென யோசனை கூற, பெரிய பழுவேட்டரையரோ தன் தம்பி அவர் பொறுப்பிலிருந்து தவறியது உண்மைதான் எனவும் கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை எனவும் சொல்ல, அனைவரும் திகைத்தனர். சக்ரவர்த்தி பெரிதும் வருந்தி, ஒருநாளும் சின்ன பழுவேட்டரையர், தன் கடமையிலிருந்து தவறியதில்லை என ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார். அப்போது தன் தொண்டையைக் கனைத்துக்கொண்ட பெரிய பழுவேட்டரையர், ‘சின்ன பழுவேட்டரையர், தன்னை நந்தினியிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னதாகவும் தான் அதைக் கேட்கவில்லையெனவும் கூறினார். அந்தக் கொலை பாதகர்களை அன்றே கண்டுபிடித்திருக்க வேண்டுமெனவும், தான் தடுத்திருந்தால்கூட, அண்ணன் எனப் பாராமல் தன் கைகளை வெட்டியிருக்க வேண்டும் எனவும், அதனால் சின்ன பழுவேட்டரையர் தன் கடமையிலிருந்து தவறிவிட்டார் என்பது சரிதான் எனவும் கூறினார். கூடியிருந்தவர்களுக்கு அவருடைய பேச்சு மெய் சிலிர்த்தது. சக்ரவர்த்தி எல்லாவற்றையும் மறுத்து, சின்ன பழுவேட்டரையரின் மீதே நியாயமிருக்கிறது என்பதை மறுபடியும் எடுத்துரைத்தார். எனவே, கோட்டைக் காவலை அவரிடம் ஒப்படைக்குமாறும் பெரிய பிராட்டியிடம் ராஜ்ய உரிமை குறித்துக் கலந்து பேச வேண்டியிருப்பதால், இன்னும் மூன்று நாட்கள் கழித்து அதைப்பற்றிக் கலந்து பேசலாமெனவும் சக்ரவர்த்தி கூறினார். பார்த்திபேந்திரன், வந்தியத்தேவனைக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை அநிருத்தர் ஏற்றுக்கொண்டதை நினைவுபடுத்தினான். பெரிய பழுவேட்டரையர் ஏதோ சொல்லவந்து, பின் நிறுத்திக்கொண்டார். அன்று சாயந்திரமே சின்ன பழுவேட்டரையரிடம் கோட்டைக் காவல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதில் சில சலசலப்புகள் எழுந்தன. அங்கங்கே சிறுசிறு கலகங்களும் ஏற்பட்டன. மக்கள் ராஜ்ய உரிமை குறித்துப் பேசி சண்டை எழுந்தது. தஞ்சை முழுவதும் ஒருவிதப் பதட்டம் ஏற்பட்டிருந்தது. தொடரும்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 8

9. வியாசர் வம்சாவழி விளக்குவதென்ன? அம்பையின் கதை பீஷ்மரின் வாழ்க்கைச் சரித்திரத்தில் துடைத்தெறியப்பட முடியாத களங்கமாகும். ஏனென்றால், அம்பை ‘ராட்சதத் திருமணம்’ பற்றி எடுத்துவைத்த வாதம், மறுக்கப்பட முடியாத சட்ட நியதியாகும். அம்பை சால்வனைக் காதலித்தவள் என்பது உண்மையாக இருந்தாலும்  ராட்சதத் திருமண முறையில் பெண்ணின் விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவமில்லை என்பதால், அதைக் காரணம் காட்டி அவளைத் திருமணம் செய்ய மறுத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாத அதர்மம். மற்றவர்களின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக, சுயம்வர மண்டபத்திற்கு வந்திருப்பதை வெளிப்படச் சொல்லாமல், ‘ராட்சதத் திருமண முறையில்’ சகோதரர்களுக்காக, இளவரசிகளை பலவந்தமாகத் தோள்பலத்தினால் தூக்கிச் சென்றுவிட்டு அநாதரவாக விடுவதும் நிச்சயமாக ஏற்கமுடியாத அநீதியாகும். விசித்ரவீரியன் அம்பிகையையும் அம்பாலிகாவையும் திருமணம் செய்துகொண்டான். விசித்ரவீரியனுக்கு மனைவியர் மூலம் குழந்தைப் பேறு இல்லை. மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாவிட்டால், அந்த அரசவம்சம் அத்தோடு அழிந்துவிடும். மிகவும் உடல் நலிவடைந்திருந்த விசித்திர வீரியன், தனக்கு குழந்தைப்பேறு இல்லை என்பதும் தெரிந்திருந்தான். அரசி சத்யவதி பீஷ்மரிடம் விவாதித்தாள். அப்போதுதான் இன்னொரு ரகசியம் வெளிப்பட்டது. சத்யவதி, சந்தனு அரசனை மணக்கும் முன்பே பராசரர் என்ற முனிவரோடு சேர்க்கை ஏற்பட்டு, ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்தாள். அந்தக் குழந்தைதான் வியாசர். விசித்திர வீரியனுக்கு, தாய் வழியில் அண்ணன் முறையாவார். உத்தமரான வேத வியாசரை அம்பிகையோடும் அம்பாலிகையோடும் உடலுறவு கொள்ளச் செய்து, அதன் மூலம் புதல்வரைப் பெற்று, அரச வம்சத்தைத் தழைக்க வைப்பது என்ற யோசனையை சத்யவதி முன்வைத்தாள். பீஷ்மருக்கு வேறு வழியில்லை என்று புரிந்தது. ஆகவே சம்மதித்தார். விசித்திர வீரியனும் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். அரச வம்சம், வாரிசின்றித் துண்டிக்கப்பட்டுவிடக்கூடிய அபாயம் பற்றி, பீஷ்மரும் அமைச்சர்களும் அரசியல் பிரதானிகளும் பார்ப்பன வழிகாட்டிகளும் அமர்ந்து, அது குறித்துத் தீவிர ஆலோசனை செய்தார்கள். சத்யவதியின் யோசனை அனைவராலும் ஏற்கப்பட்டது. வியாசரும் அந்த ஏற்பாட்டிற்கு உடன்பட்டார். அதன்பிறகு விசித்திர வீரியன் சிறிது காலத்தில் இறந்துபோனான். விசித்ர வீரியனின் இறப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த ஏற்பாடு நடத்தி முடிக்கப்பட்டது என்றும் விசித்ரவீரியன் உடல் நலிவுற்று சிரமத்தில் இருக்கும்போதே, அவன் சம்மதத்துடன் இந்த ஏற்பாடு நடந்ததென்றும் இருவிதமாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. ஏனெனில், கணவன் சம்மதத்துடன் இந்த உறவு நடந்தால் மட்டுமே வியாசரின் பிள்ளைகள் விசித்ர வீரியனின் வாரிசுகள் என்று ஏற்கப்படுவார்கள். கணவனின் சம்மதத்துடன் வேறொரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டுக் குழந்தைப் பேறு அடைவதை இன்றைய சமுதாயத்தின் பார்வையில் பார்த்தால், அது மிக மிக ஆபாசமானதும் அசிங்கமானதுமான செயலாகத் தோன்றும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், உடலுறவின்றி கருமுட்டை அல்லது விந்து தானம் செய்து, செயற்கைக் கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒத்த ஏற்பாடு இது. இந்த முறையைப் பல்வேறு கோணங்களில் இருந்து, பல்வேறு விதமாக நியாயப் படுத்தினாலும் இன்றைய சமுதாயத்தால் ஏற்க முடியாத கேவலமான ஏற்பாடாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இதிலும் அம்பிகை மற்றும் அம்பாலிகையின் விருப்பம் குறித்து யாரும்  கவலைப்படவில்லை. இது அரச வம்சத்தை விருத்தி செய்ய, அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நியதி. வியாசருக்கும் அம்பிகைக்கும் பிறந்த திருதராஷ்டிரன், பிறவியிலேயே பார்வை இல்லாதவன். வியாசருக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த மகன் பாண்டு. திருதராஷ்டிரன் பாண்டுவிற்கு மூத்தவன். மூத்தவன் என்ற வகையில் அஸ்தினாபுரத்து அரசனாக வேண்டியவன் திருதராஷ்டிரன்தான். ஆனால் பார்வை இல்லாதவன் என்பதால், அரசனாக அவனுக்குத் தகுதியில்லை என்று கருதி, இளையவனான பாண்டுவிற்குத்தான் மன்னனாகப் பட்டம் சூட்டினார்கள். பாண்டு, தனது மனைவியரான குந்திதேவி மற்றும் மாத்ரியுடன் கானகத்திற்குப் போனபோதுதான், பாண்டுவின் பிரதிநிதியாக, அஸ்தினாபுரத்தின் மன்னாக, திருதராஷ்டிரன் ஆட்சி நடத்தினான். இதுதான் மகாபாரத இதிகாசத்தில் குருஷேத்ர யுத்தம் நடந்ததற்கான மூலகாரணம் என்பதை விளங்கிக் கொள்ளாவிடில் மகாபாரதமே விளங்காது. பார்வையற்றவன் அல்லது மாற்றுத் திறனாளிக்கு மன்னனாக உரிமையில்லை என்பது அன்றைய சட்ட நிலைப்பாடு. அந்த பாரதக் கலாச்சார நிலைப்பாடு இன்று மாறிவிட்டது. மாற்றுத் திறனாளி என்பதற்காக, யாரையும் எந்த ஒரு பொறுப்பு வகிப்பதில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய முடியாது என்பதை சொல்லத் தேவையில்லை. குருக்ஷேத்ர யுத்தத்தின் அடிப்படைக் காரணமாக இருந்த ஒரு சட்ட நிலைப்பாடு, இன்று காலாவதியாகிவிட்டதைப் பார்க்கிறோம். இந்தத் தகுதி நிர்ணயம் இல்லாமல் இருந்திருந்தால், மூத்தவனான திருதராஷ்டிரன்  அஸ்தினாபுரத்தில் சட்டப்பூர்வமான மன்னனாகி இருப்பான். திருதாஷ்டிரனின் புதல்வர்களான கௌரவர்களும் அஸ்தினாபுர ராஜ்ஜியத்தின் சட்டப்பூர்வமான வாரிசுகளாகி இருப்பார்கள். பாண்டுவின் மைந்தர்களான பாண்டவர்களுக்கு, ராஜ்ஜியத்தில் பங்கு கோர உரிமையில்லை என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டு இருக்கும். மாற்றுத்திறனாளி என்ற குறைபாடுதான், கௌரவர்களை உரிமை கோர விடாமல் தடுத்த சட்ட முட்டுக்கட்டை. இந்த விஷயத்தை சரியாகப் புரிந்துகொண்டவர்கள், துரியோதனனைக் கெட்டவன் என்று சொல்லப் பலமுறை யோசிப்பார்கள். மாற்றுத்திறனாளி என்பதால், தன் தந்தைக்கு அரச பதவி வகிக்கத் தகுதியில்லை என்ற சட்ட நிலைப்பாட்டை துரியோதனன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான், ராஜ்ஜியம் திருதராஷ்டிரனின் வாரிசுகளான தங்களுடையது என்பதிலும் பாண்டு புத்திரர்களுக்கு அதில் உரிமை கோர அருகதையில்லை என்பதிலும் அவன் திடமாக இருந்தான். அதிலும் பாண்டவர்கள் உண்மையில் பாண்டுவின் புத்திரர்கள் இல்லை என்பதும் அவனை  அவனுடைய நிலைப்பாட்டில் ஊன்றி நிற்க வைத்தது. மேலும், பாண்டு இறந்து போன பின்பு, திருதராஷ்டிரன் உயிரோடு இருந்து, மன்னனாக ஆட்சிபுரிந்துகொண்டு இருக்கும்போது, யுதிஷ்டிரன் அல்லது தருமபுத்திரனுக்கு இளவரசனாகப் பட்டம் சூட்டுவது முறையில்லை என்பதும் அவன் கருத்தோட்டத்திற்கு வலு சேர்த்த இன்னொரு முக்கியமான அம்சமாகும். (வரும் புதன்கிழமை தொடர்வோம்)

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

புதிய கண்டுபிடிப்புகளைப் போலவே கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப்படுவது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆன்லைன் கல்விக்கு அடிகோலும் முயற்சிகள்தான் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் அனைத்தும். இதற்காகப் பணியாற்றி, கடும் உழைப்பைத் தந்திருக்கும் கல்வித்துறையின் அத்தனை ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆசிரியர்களின் பணியிடங்களில் வகுப்புகளை கவனிக்க, பாடம் நடத்த, வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் சிறப்பு. இல்லை என்றால் அது குழந்தைகளுக்குச் இழைக்கப்படும் துரோகம்; அநீதி. கல்வித் துறையில் மணற்கேணி என்ற செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மணற்கேணி குறித்து, இரு வழிகளில் நாம் விளக்கலாம்.  முதலாவதாக, இது நாட்டிலேயே  முதன்முதலாக என்பது உண்மை அல்ல. ஆம், தமிழ்நாட்டின் கல்வித்துறையில் பத்தாண்டுகளுக்கும் முன்பாகவே, சபிதா ஐஏஎஸ் அவர்கள் கல்விச் செயலாளராகப் பணியாற்றியபோது, மாநிலக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) டிஜிட்டல் கன்ட்டென்ட் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தது. பல்வேறு வகையான பயிற்சிகள், பாடப்பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு, அறிவியல் காணொளிகள் என்று, முப்பரிமாண (3D) வரைவில் பலவிதமான வழிகளில் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கப்பட்டது. SCERTஇல் ICT CELL என்ற ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு SCERTஇன் விரிவுரையாளர் ஒருவரை அதற்குப் பொறுப்பாளராகப் பணியமர்த்தியது. அங்கு ஒருங்கிணைப்பாளராக பள்ளி ஆசிரியர் ஒருவரும் பணியாற்றினார். ICT CELL வழியாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2013 முதல் 2016 வரை டிஜிட்டல் கன்ட்டென்ட் சார்ந்த ஏராளமான பணிகள் ICT CELL வழியாக முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர்கள் தயாரித்த டிஜிட்டல் கன்ட்டென்ட் அனைத்தும் மாணவர்கள் பயன்பாட்டுக்காக SCERT  வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காகச் சேகரம் செய்யப்பட்டன. SCERTஇல் பயிற்சி பெறாமல், தனிநபராக ஆர்வமாக டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்தும்கூட அவை பெறப்பட்டன. சில மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், முதல்வர்கள் தலைமையில், ஆசிரியர்கள்  டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்,  அந்த நேரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கலாச்சாரமும் பெருகின. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை நவீனப் பள்ளிகளாக மாற்றம் செய்ய முயற்சி செய்ய ஆரம்பித்து வேகமெடுத்தது என்றும் கூறலாம். பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் உள்ள மனப்பாடப்பகுதியை, பாடல்கள் வழியாக டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகளாக மாற்றினர். அது மட்டுமல்ல; சிறு வகுப்புகள் முதல், ஒவ்வொரு வகுப்பிற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்ப்பாடம் மட்டுமல்ல; ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்  சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களுக்கும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் நீட்சியாகத்தான் சில வருடங்கள் கழித்து, கல்வித் தொலைக்காட்சி என்ற முயற்சியும் விரிவாக்கம் செய்யப்பட்டது.  கற்றலில் புதுமை செய்யக் கூடிய ஆசிரியர்களது (Innovative  Practicing Teachers)   பணிகளை டிஜிட்டல் ஆவணமாக்கும் வேலையையும் SCERT முன்னெடுத்தது. முதற்கட்டமாக, நூறு ஆசிரியர்களைத் தேர்வு செய்து  அவர்கள் செய்யும் புதுமையான கற்பித்தல் முறைகளைக் காணொளிகளாக  தயார் செய்து, வலைத்தளத்தில் பதிவேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகவும் ஒரு பெரும் தொகையை (ரூபாய் பத்து லட்சம்) SCERT  ஒதுக்கியது. இப்பணியைச் செய்ய முன்வந்தவரும்கூட, சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர்தான்.  இப்பணி நிறைவடைந்ததா என, இன்று வரை தெரியவில்லை. நூறு ஆசிரியர்களில், ஒருசிலரின் காணொளிகளை மட்டும் SCERT சேனலில் பார்க்க முடிகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பாடப்பிரிவுகளுக்கு, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் ஆகுமெண்டேட் ரியாலிட்டி என்ற  என்ற பிரிவிலும் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்போது முன்னெடுக்கப்பட்ட பணிகளுக்கான ஒரு சில உதாரணங்கள்: இப்படி ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.  அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே அமைந்துள்ள கல்வியியல் இணையக் கழகம், ஆசிரியர்களுக்கு செயலிகள் உருவாக்கும் (App Development) பயிற்சிகளையும்கூட வழங்கியது. அதற்கும் SCERT இன் ICT CELL  தான் ஒருங்கிணைப்பு செய்தது. பாடப்புத்தகங்களை ஃபிலிப் (flip) போல விரலால் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பும் முறையைப்போல டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்குத் தரப்பட்டது. இக்குழுவில் இணை இயக்குநர் ஒருவரையும் இணைந்திருந்தது SCERT நிறுவனம். டெல்லியில்  தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வழியாக இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட ஆசிரியர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்  (SCERT) ஒருங்கிணைப்பில் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை flip முறையில் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் செய்தனர். இப்படியாக, தொடர்ச்சியான பன்முகத்தன்மையுடன் பல வருடங்களாக, தொடர்ச்சியாக, டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணிகளைச் செய்ய ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். அந்தப் பயிற்சிகளில் திறன்பெற்ற ஆசிரியர்கள்தான், மாநில மையத்தில் பெரும்பாலும் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் உள்பட, பள்ளிக்கல்வி முன்னெடுக்கும் ICT சார்ந்த தொழில்நுட்பக் கற்றல் – கற்பித்தல்  திட்டங்கள் அனைத்திற்கும் இன்றளவும்  பங்காற்றி வருகின்றனர்.  சில வருடங்களாக அல்லது பல வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குப்  பாடம் நடத்துவதே இல்லை என்ற விமர்சனமும் பரவலாக உள்ளது. அரசின் முயற்சிகள் கல்வித்துறையை நவீனமாக்கும் பார்வையைக் கொண்டிருக்கலாம். ஆனால் எந்தத் திட்டம் போட்டாலும் ஆசிரியர்களே அதைக் கவனிக்க வேண்டும் என்றால், கற்பித்தல் பணிக்கு யாரை நியமிப்பார்கள்? முதல் பத்தியில் கூறியபடி, இரண்டாவது விளக்கம்: இந்த மணற்கேணி திட்டம் இணையவழிக் கல்வியை ஊக்குவிக்க உருவாகியுள்ளது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020இன் ஒரு கூறு. ஆம், ஏற்கனவே DHIKSHA செயலி வழியாக ஆசிரியர்கள் செய்யும் டிஜிட்டல் கன்ட்டென்ட் பதிவேற்றம் செய்யப்படும் என செய்தி வெளியானது; பின்னர் அது நடைமுறையிலும் வந்தது. புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020இல் தலைப்பு 24, இணைய மற்றும் டிஜிட்டல் கல்வி என்ற உபதலைப்பின் 3ஆவது பிரிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.  இணைய வழிக் கற்பித்தல் மற்றும் கருவிகள் என்ற தலைப்பில், DHIKSHA குறித்துக் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தான் அப்போதே நாம் வேண்டாம் என்று கூறினோம். அதாவது, மரு வைத்து மாறுவேடம் பூண்டால் அது மணற்கேணி. மருவை எடுத்துவிட்டால் அது DHIKSHA. DHIKSHA செயலியில் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் பதிவேற்றம் செய்ததும், வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அதைத் திறந்து பயன்படுத்த வேண்டும் என்றனர். ஆனால் அதில் கற்றல் வளங்கள் (டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகள்) எல்லாத் தலைப்புகளுக்குள்ளும் காலியாகவே இருக்கும். அது பெயருக்குத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 வளர்க்க நினைக்கும் இணையவழிக் கல்வியையே நாடச் சொல்கின்றன. நேரடிக் கற்பித்தலுக்கு வழிவகுக்காத இவை புறக்கணிக்கத்தக்கவையே. இதுவரை நாம் இங்கு கூறிய பத்தாண்டு கால டிஜிட்டல் வளங்கள் தமிழ்நாட்டின் குழந்தைகளது கல்வித்தரத்தை எந்த விதத்திலும் உயர்த்தவோ தரப்படுத்தவோ இல்லை. தரம் குறையவே செய்திருக்கிறது. அடிப்படையில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் நியமனம், கற்றல் கற்பித்தல் பணி தொய்வின்றி நிகழ்வதற்கான சூழலை உருவாக்குதல், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மட்டும் மேற்கொள்ளச் செய்தல் என யோசிக்கலாம். அதை விடுத்து, புதிய புதிய பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது – மணற்கேணி என்ற பெயரில் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளில் ஒன்றான DHIKSHA  செயலியைப்போன்ற செயலியை அறிமுகம் செய்வது அவசியமற்றது. தேவைக்கேற்ற செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டால்தான், கல்வி‌ ஏற்றமிகு வழியில் உயரும். 

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 7

8. அம்பையைக் கொன்ற பீஷ்மர் விசித்திரவீரியன் சார்பில் காசி இளவரசிகள் சுயம்வரத்தில் பங்கேற்க பீஷ்மர் சென்றார் என்பதை முந்தைய பகுதியில் பார்த்தோம். மகாபாரதக் காலத்தில் பல திருமண முறைகள் அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைகளாக இருந்தன. அதில் ஒன்றுதான் ‘ராட்சதத் திருமண முறை’ என்பதாகும். ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண், தன்னுடைய போட்டியாளர்கள் அனைவரையும் யுத்தம் செய்து தோற்கடித்து, பலவந்தமாகக் கவர்ந்துகொண்டு போய்த் திருமணம் செய்துகொள்ளும் முறைக்குத்தான் ‘ராட்சதத் திருமண முறை’ என்று பெயர். சுயம்வரத்திற்கு வந்திருந்த அனைவரும் பீஷ்மரின் வருகையின் நோக்கம் பற்றிப் புரியாமல் குழம்பிப்போய் நின்றனர். சுயம்வர மண்டபத்திற்குள் வந்த பீஷ்மர், திருமண விருப்பத்தின் பேரில் கூடியிருந்த மன்னர்களையும் இளவரசர்களையும் பார்த்து, “நான்  காசி இளவரசிகள் மூவரையும் கவர்ந்து போகிறேன். உங்களில்  அதை ஆட்சேபிக்கும் இளவரசர்கள் யாரேனும் இருந்தால், என்னுடன் போர்புரிந்து என்னைத் தடுத்துக் கொள்ளுங்கள்” என்று கர்ஜித்தபடி தன் வில் வளைத்து நாணேற்றி  யுத்தத்திற்குத் தயாரானார். அவர் கர்ஜனையைக் கேட்டதும் குழுமி இருந்த இளவரசர்களில் ஒருவனைத் தவிர, மற்ற அனைவரும் அவருடன் யுத்தம் செய்யப் பயந்து ஒதுங்கிக்கொண்டனர். சால்வன் என்ற இளவரசன் மட்டும் பீஷ்மரோடு யுத்தம் புரிய முன்வந்தான். அதற்குக் காரணம், மூன்று இளவரசிகளில் மூத்தவளான அம்பையும் அவனும், ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். சுயம்வரம் நடந்திருந்தால் அம்பை சால்வனின் கழுத்தில்தான் மாலையைப் போட்டு தன்னுடைய கணவனாக வரித்து இருப்பாள். பீஷ்மரின் செயலால் அதிர்ச்சியுற்ற சுத்தவீரனான சால்வன்,  அம்பையைத் தீவிரமாகக் காதலித்து வந்ததால், பீஷ்மரின் புகழ் பற்றியும் வீரம் பற்றியும் கவலைகொள்ளாமல் பீஷ்மருடன் கடும் யுத்தம் செய்தான். ஆனால் நீண்ட யுத்தத்திற்குப் பின் தோற்றுப்போய், மனமுடைந்து யுத்த களத்தை விட்டு விலகினான். ராட்சதத் திருமண முறையில், ‘கவர்ந்து செல்லப்படும்’ கன்னியரின் அபிப்பிராயத்தையோ விருப்பத்தையோ கேட்கும் வழக்கமில்லை. நிபந்தனை விதித்துத் திருமணத்திற்கு உடன்பட்ட கங்காதேவியைப் பார்த்த நாம், விருப்பு வெறுப்பை வெளியே சொல்லக்கூட உரிமையில்லாமல், பலவந்தமாய்த் தேரில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட  கன்னியரையும் பார்க்கிறோம். பீஷ்மரின் இந்த நடவடிக்கை முழுவதும், திருமணம் பற்றி மகாபாரதக் காலத்தில் வழக்கில் இருந்த சட்ட நியதிகளைக் கூர்ந்து கவனிக்க வைக்கிறது. எது எப்படியாயினும், ‘ராட்சதத் திருமண முறைப்படி’ யார் கவர்ந்து செல்கிறார்களோ, அவர்களேதான் கவர்ந்து சென்ற கன்னியரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமே தவிர, அவர்களை வேறு ஒருவருக்கு, அவர்கள் சொந்த சகோதரனாக இருந்தாலும் கன்னிகாதானம் செய்து  கொடுத்துத் திருமணம் செய்துகொள்ள வைப்பது என்பது ‘ராட்சதத் திருமண முறைக்கே’ விரோதமான செயல். பலவந்தமாகக் கவர்ந்து செல்லப்பட்ட மூன்று இளவரசிகளும், தங்களைத் திருமணம் செய்து மனைவியாக்கிக் கொள்ளவே பீஷ்மர் யுத்தம் செய்து அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டு இருந்தார்கள். அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் இளவரசிகளாக இருந்தாலும், தங்கள் விருப்பத்தை வெளியில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, தாங்கள் யாரை மணம் முடிக்கப் போகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது என்பதை இது காட்டுகிறது. இந்த ‘ராட்சதத் திருமண முறையில்’ இளவரசிகள் மூவரும் அஃறிணைப் பொருட்கள் போல நடத்தப்பட்டார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ‘பலமுள்ளவன் விரும்பியதை அடைந்து கொள்ளலாம்’ என்ற மிருக இனவிதி, மகாபாரதக் காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட விதியாக இருந்தது என்றாலும் அந்த விதி, நாம் நாகரீக உலகம் என்று சொல்லிக் கொள்ளும் இன்றைய சமுதாயத்திலும் அங்கீகரிக்கப்படாத விதியாக உள்ளது என்பதை ஊன்றிக் கவனித்தால் புரிந்துகொள்ள முடியும். அஸ்தினாபுரம் போன பின்புதான், தங்களை மணக்கப் போவது பீஷ்மரல்ல என்பது இளவரசிகளுக்குத் தெரிந்தது.  மேலும், பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரருக்கு, மனைவியராக்கவே தாங்கள் தூக்கி வரப்பட்டிருக்கிறோம் என்பதும் தெரிந்தது. சால்வனின் காதலியான அம்பைக்கு மட்டும் இந்த ஏற்பாட்டை ஒப்புக்கொள்ள இயலவில்லை. தைரியத்தை வரவழைத்துச் கொண்டு விசித்ரவீரியனிடம் ‘தான் சால்வனை உளமாரக் காதலிப்பதை’ நயமாக எடுத்துச் சொன்னாள். அதைக் கேட்ட விசித்ரவீரியன், வேறொருவரை மனம் விரும்பிக் காதலிக்கும் பெண்ணை, தான் திருமணம் செய்து தன் மனைவியாக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று சொல்லிவிட்டான். அதனால் விசித்ரவீரியன் பீஷ்மரிடம் விஷயத்தைச் சொல்லி, அம்பையை சால்வனிடம் அனுப்பி வைத்துவிடும்படி கேட்டுக்கொண்டான். நிலைமையைப் புரிந்துகொண்ட பீஷ்மரும் அம்பையை அவள் விரும்பிய வண்ணமே சால்வனிடம் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தார். ஆனால் சால்வனோ, ‘நான் சத்ரியன், என்னைப் போரில்  தோற்கடித்துவிட்டு, வேறொருவன் கவர்ந்து போன பெண்ணை நான் ஏற்றுக்கொள்வது சத்ரியனுக்கும் சத்ரிய தர்மத்திற்கும்  கேவலமான இழுக்காகும். எனவே உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம் காதலை மறந்துவிட்டு நீ பீஷ்மரிடமே போய்விடு’ என்று அம்பையைத் திரும்பவும் விசித்திரவீரியனிடம் அனுப்பி வைத்துவிட்டான். இதேபோல சால்வனும் விசித்திரவீரியனும் திரும்பத் திரும்ப ஒருவரிடம் இருந்து ஒருவர் அனுப்புவது பலமுறை தொடர்ந்தது . அம்பை மனமுடைந்து போனாள். அதனால் அவள் பீஷ்மரிடமே போனாள்.  ‘நீங்கள்தானே என்னைக் கவர்ந்து வந்தீர்கள்; இப்போது விசித்திரவீரியனும் சால்வனும் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அதனால் கவர்ந்து வந்த சத்திரியகுலத் திலகமான நீங்கள்தான் என்னை மணந்துகொள்ள வேண்டும்’ என்று சொன்னாள். ‘அம்பையே,  நான் பிரமச்சாரியாக  வாழ்வேன்’ என்று உலகறிய சபதம் செய்தவன். எனவே நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை’ என்று பீஷ்மர் கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டார். என்ன சொல்லியும் யார் சொல்லியும் பீஷ்மர் அம்பையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். அம்பை பல மன்னர்களை அணுகி, தனக்கு நீதி கிடைக்க வழி செய்யும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவர்கள் அனைவரும் பீஷ்மரின் பெயரைக் கேட்டதும் பயந்து விலகிக்கொண்டார்கள். இறுதியில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமரிடம் போய் அம்பை முறையிட்டாள். சத்ரியர்களை வதம் செய்வதையே தனது புனிதப் பணியாகக் கருதி, சத்ரியர்களை அழித்தொழித்தலில் ஈடுபட்டுவந்த பரசுராமரின் ‘சத்திரிய வதம்’ பற்றிய சபதம், மகாபாரதத்தின் இன்னொரு சுவாரசியமான உபகதை. பரசுராமர் அம்பையின் பொருட்டு பீஷ்மருடன் போரிட்டார். பல நாட்கள் நடந்த அந்த யுத்தம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததால் அம்பையின் எண்ணம் ஈடேறவில்லை. அதனால் பல்வேறு முயற்சிக்குப் பிறகு, சிவபெருமானை வேண்டி நெடுந்தவம் புரிந்து சிவபெருமானைத் தரிசித்து, ‘அடுத்த பிறவியில் பீஷ்மரைக் கொல்லும் வீரனாகப் பிறக்கும்’ வரத்தைக் கேட்டுப்பெற்று, தீக் குண்டத்தில் குதித்து இறந்துபோனாள். அந்த வரத்தின்படி, அடுத்த பிறவியில் சிகண்டியாகப் பிறந்து, பீஷ்மர் கொல்லப்பட அம்பை பிரதான காரணமானாள். இதில் உள்ள கேள்வியே, இதில் பீஷ்மர் செய்தது பின்னாளில் பிதாமகனாகக் கருதப்பட்டவரின் சரியான செயல்தானா என்பதுதான். அம்பையை விசித்ரவீரியன் மறுதலித்ததிலும் சால்வன் அம்பையை நிராகரித்ததிலும், அவர்களுக்குரிய நியாயம் இருந்தது. ஆனால் அம்பையை ‘ராட்சதத் திருமண முறைப்படி’ கவர்ந்து வந்த பீஷ்மர், சத்திரிய தர்மப்படி நடந்துகொள்ள மறுத்ததாலும், அதனால் அரச குமாரி என்றாலும் நிர்க்கதியாய் விடப்பட்ட அம்பையினால் பீஷ்மரை எதிர்த்துப் போராடி நியாயத்தை நிலைநாட்ட முடியவில்லை என்பதாலும், பீஷ்மர் ஒரு அபலைப் பெண்ணின் காதல் கோட்டையைத் தகர்த்தெறிந்ததுடன் அவளையே மரண வளையத்திற்குள் தள்ளிவிடும் அக்கிரமத்தையும் செய்தார். (வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

பாசிசத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்

பாசிசத்தின் பாலியல் வன்கொடுமை அரசியல்

மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி இப்போதுதான் சமூக ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளது. அந்தக் காட்சியைக் காட்ட வேண்டாம் என்று இந்திய அரசு கேட்டுக்கொண்ட பின் ஊடகங்களில் மறைப்புச் செய்து காட்டப்படுகிறது. இருப்பினும் அயல்நாட்டுக் காட்சி ஊடகங்கள் சிலவற்றில் அது தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. மே 3ஆம் நாள் மைதேயி இனத்துக்கும் குக்கி இனத்துக்குமான மோதலாகத் தொடங்கிய வன்முறை, உள்நாட்டுப் போர் என்னுமளவுக்கு முற்றி, இன்று வரை தொடர்கிறது. இரட்டை எஞ்சின் அரசுகள் என்று பாசக பெருமைப்பட்டுக்கொள்ளும் இந்திய நடுவணரசும் மணிப்பூர் மாநில அரசும் சேர்ந்து இந்த இன மோதலை, குக்கிகளுக்கு எதிரான இனவழிப்புப் போராகவே மாற்றிவிட்டன. குக்கிகளில் பெரும்பாலார் கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் என்பதால், நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. காணொளியாக வெளிவந்துள்ள பாலியல் வன்கொடுமை மே 4ஆம் நாள் காவல்துறையினர் முன்னிலையிலேயே நடந்துள்ளது. கொடுமைக்கு ஆளான ஒரு பெண், மே 18ஆம் நாள், காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் இத்துணைக் காலமும் இது குறித்துக் காவல்துறையும் மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்ச்சியை மூடி மறைத்தே வந்துள்ளன. எதிர்க் கட்சிகள் வன்மையான கண்டனங்கள் தெரிவித்த பின், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அணியமாய் இருப்பதாக அறிவித்த பாசக அரசு, உருப்படியான விவாதம் நடந்து தலைமையமைச்சர் மோதி விளக்கமளிக்க வேண்டிய நிலைமையைத் தவிர்க்கவே எல்லாத் தந்திரங்களும் செய்து வருகிறது. முதலில் குற்றவாளி ஒருவரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்த மாநில அரசு, இப்போது நால்வரைத் தளைப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இத்துணைக் காலம் இவர்களை ஏன் கைது செய்யவில்லை? என்ற கேள்விக்கு மாநில அரசு தரும் விடை: இரண்டு திங்களாகக் கிடைக்காத ஆதாரம் இப்போதுதான் கிடைத்ததாம். எது? இந்தக் காணொளிதான் அந்த ஆதாரமா? இதுபோன்ற இன்னும் பல காணொளிகள் இருப்பதாக மாநில முதல்வர் பிரேன் சிங்கே சொல்கிறார். அப்படியானால் இன்னும் பல வன்கொடுமைகள் நடந்துள்ளன என்று பொருள். தேசிய மகளிர் ஆணையமும் தங்களுக்குப் பல முறைப்பாடுகள் வந்திருப்பதாகச் சொல்கிறது. இந்த வன்கொடுமைக் குற்றங்களைத் தண்டிக்கவும் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் மாநில அரசு தானாக எதுவும் செய்யாது, காணொளிகள் வெளிவரும் வரை அது கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், பிறகு ஒரு சிலரைக் கைது செய்து கணக்குக் காட்டும் என்பதுதான் இதன் பொருள். வன்கொடுமையால் பாதிப்புற்ற பெண்களில் ஒருவர் காவல்துறைதான் தங்களை வெறிக் கும்பலிடம் விட்டுப்போனது என்று குற்றஞ்சாட்டுகிறார். வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கணவர் – நடந்ததை நேரில் பார்த்தவர் – இந்தியப் படையில் இருந்தவராம்! கார்கில் போரில் பங்கேற்றவராம்! இலங்கையிலும் இந்தியப் படையில் இருந்தவராம்! இந்த முன்னாள் இந்தியப் படையாள், இப்போது தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில், என்ன நடந்தது என்பதைச் சொல்கிறார்: ‘அந்த இரண்டு மூன்று பெண்களில் என் மனைவியும் ஒருத்தி. அந்தக் கும்பலில் இருந்தவர்கள் இந்தப் பெண்களை ஆடைகளைக் களையும்படிக் கட்டாயப்படுத்தினார்கள். எங்கள் ஊர்க்காரர்கள் சிலர் அந்தப் பெண்களைக் காப்பாற்ற முயன்றபோது, ஒரு பெண்ணின் தந்தையை அவர்கள் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்தார்கள். காவல்துறையினர் மைதேயி கும்பலுக்குத் துணை நின்றனர். அவர்கள் இந்தக் கொடுமைகளைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.’இப்படிப்பட்ட நிலைமையில் குக்கிகளால் மைதேயிகளுடன் சேர்ந்து வாழ முடியுமா? ‘நாங்கள் தனித் தனியாகத்தான் வாழ முடியும், அதுதான் சரி’ என்று குக்கிகள் சொல்கிறார்கள். நடுவணரசிலும் பாசக, மணிப்பூர் மாநில அரசிலும் பாசக! இதற்குப் பெயர் ‘இரட்டை எஞ்சின் சர்க்கார்’! வலுமிக்க ஆட்சியாம்! பாசக ஆட்சியில் வகுப்புவெறி வன்முறைக்கு இடமிருக்காது என்ற பீற்றல் மணிப்பூரில் பிய்ந்து தொங்குகிறது. இது பற்றிய கவலை பிரேன் சிங்குக்கும் இல்லை, அமித்சாவுக்கும் இல்லை. அகன்ற மார்போடு அகிலம் சுற்றும் அசகாய சூரர் நரேந்திர மோதிக்கு இருக்க வேண்டாமா? எவன் செத்தால் எனக்கென்ன என்று வெள்ளை மாளிகையில் விருந்துண்டு, பிதேன் இணையருக்கு வைரம் பரிசளித்து, கொசுறாக ஆய்தக் கொள்முதல் ஒப்பந்தம் செய்துகொண்டு தேச நலன் காத்து நெஞ்சு நிமிர்த்திக் கொண்டிருக்கிறார். மற்றதெல்லாம் இருக்கட்டும்; குசராத்து – 2002, மணிப்பூர் – 2023 இரண்டையுமே மறந்தும் மறைத்தும் இந்தியாவில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இல்லையோ என்ற சிறு ஐயத்தையே எள்ளி நகையாடுகின்றார். மே 4 வன்கொடுமைக் காணொளி வந்தது; உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது; மோதி வாயிலிருந்த கொழுக்கட்டையும் விழுந்துவிட்டது. மணிப்பூர் பற்றி மோதி திருவாய் மலர்ந்தருளியுள்ளார்: ‘மணிப்பூர் சம்பவத்துக்கு மன்னிப்பே கிடையாது’ என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், அங்கு குற்றம் இழைத்தவர்கள் மீது இரண்டு மாதங்களாக நடவடிக்கை எடுக்காத மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மீது மோதி நடவடிக்கை எடுப்பாரா?! ‘மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடுமைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது. எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் மோதி. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குகிற நாளில் இந்தக் கருத்தை அவர் நாடாளுமன்றத்தில் பேசினாரா? இல்லையே! காசுமீரில் அசீபா பானுவுக்கும் குசராத்தில் பில்கிஸ் பானுவுக்கும் உ.பி. ஹத்ராசில் அந்த தலித் பெண்ணுக்கும் – இப்படி எத்தனை எத்தனையோ பெண்களுக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகளில் பாசக உறுதியாகக் குற்றவாளிகளின் பக்கம் நின்றதைக் கண்ட யாரும் ‘மணிப்பூர் மகள்கள்’ என்று மோதி பேசுவதில் மயங்கமாட்டார்கள். மணிப்பூர் குற்றவாளிகளை மன்னிக்கவே முடியாது என்கிறார் மோதி. அப்படியானால் மோதி, அமித்சா, பிரேன் சிங் ஆகிய முதல் மூன்று குற்றவாளிகளையும் மன்னிப்பதற்கில்லை. ‘உண்மையிலேயே மணிப்பூர் நிலை குறித்துப் பிரதமர் மோடிக்கு கோபம் இருந்தால், முதல்வர் பிரேன் சிங்கை முதலில் பதவி நீக்கம் செய்யட்டும் பார்க்கலாம்!’ – என்கிறார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. ‘மணிப்பூர் தொடர்பில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், உச்ச நீதிமன்றம் தலையிடும்’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியத்தில் எப்படி இப்படி நிகழ முடியும்? என்று அதிர்ச்சி தெரிவிக்கிறார். இவ்வாறான கொடுமைகள் திரும்பத் திரும்ப நிகழுமானால், இது அரசமைப்புச் சட்டப்படியான குடியாட்சியம்தானா? அல்லது இந்த அரசமைப்பே குடியாட்சிய அரசமைப்புதானா? என்ற கேள்வி எழத்தான் செய்யும். அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், மணிப்பூர் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதும் பேசுபொருளாயிற்று. இந்தப் பின்னணியில்தான் நரேந்திர மோதி ‘மணிப்பூர் மகள்கள்’ பற்றிப் பேசுகிறார். இந்த நாடகத்தில் நாட்டு மக்கள் மயங்கமாட்டார்கள். பாசிச வெறியர்களுக்குப் படுகொலையும் பாலியல் வன்மொடுமையும் அரசியல் கருவிகள் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்களின் பாசிச அரசியலை முறியடிக்காமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியாது.

ஆயிஷா

ஆயிஷா

திரை விமர்சனம் சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள மாசூம் எனும் செல்வந்தர் வீட்டிற்கு, ஒரு பணிப் பெண்ணாகக் கேரளாவில் இருந்து செல்லும் ஆயிஷா, சில சிரமங்களைத் தாண்டி, அரண்மனை போன்ற அந்த வீட்டின் நடைமுறைகளை அறிந்துகொண்டு, நாளடைவில் குடும்பத்தின் தலைவி மமாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறார். விளைவு, சக பணியாளர்களின் மகிழ்ச்சிக்கு உகந்தவராகவும் அதுவரை மமாவின் முதன்மைப் பணியாளர்களாக இருந்த பெண்களுக்கு எதிரியாகவும் ஆகிவிடுகிறார். மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த வாழ்வில், ஆயிஷா குறித்த ஒரு உண்மை வெளிப்பட, நிலைமை தலைகீழாகிறது. மமாவுடனான ஆயிஷாவின் பிணைப்பு இளக, அவள் கேரளா திரும்புகிறாள். அடுத்து, ஆயிஷாவின் வாழ்க்கைப் பயணம் எப்படிச் செல்கிறது என்பதுதான், ஆஷிப் கக்கோடி அழகான திரைக்கதை எழுதி, அமீர் பள்ளிக்கல் அருமையாக இயக்கி, அரபிக் மற்றும் மலையாள மொழிகளில் தயாரிக்கப்பட்டு, அமேசான் பிரைம் வீடியோவில், ஆங்கிலத் திரை வசனங்களுடன் வெளியாகி உள்ள ‘ஆயிஷா’ திரைப்படத்தின் மீதிக் கதை. ஆயிஷாவாக மஞ்சு வாரியார், உழைப்பாளர்களைச் சுரண்டும் இடங்களில் எல்லாம் சீற்றம் கொள்ளும்போதும், “நான் எவ்வளவு அதிகாரம் மிக்கவன்னு உனக்குத் தெரியாது” என்று சொல்லும் சாராவிடம், “சாரா, என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. என்னோட விளையாடாத; உன்னோட விளையாட்டை நீயே நிறுத்திக்கோ. அதுதான் உனக்கு நல்லது” என்று புன்முறுவலுடன் சொல்லும்போதும், மமாவின் முதல் சந்திப்பில் நிகழும் சிறுசிறு தவறுகளை அதற்கடுத்த முறை சரி செய்துகொள்வதும் அவர்களுக்கு இணைப்பு இறுகவும் விலகவுமான நிகழ்வுகளின்போதும் முந்தைய வாழ்க்கை நினைவுகளில் லயிக்கும்போதும் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். நடனக் காட்சிகளிலும் கவர்கிறார். ஆயிஷா பாத்திரத்திற்கு இணையான மமா பாத்திரத்தில் மோனா டவில், அதியற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளார். செல்வந்தர் வீட்டில், குடும்பத் தலைவியாகக் காட்டும் கண்டிப்பும் பணக்கார மிடுக்கும் தோரணையும் ஆயிஷாவிடம் காட்டும் அன்பும் அவளிடம் தன் சொந்தக் கதையைப் பகிர்ந்து கொள்ளும் பாங்கும் அவளைச் சொந்த ஊருக்கு அனுப்பச் செய்யும் நாடகமும் பிரிவை ஜீரணிக்க முடியாத தவிப்பும் திரும்பப் பார்த்ததும் பெறும் உற்சாகமும் மன வலியும் உடல் வலியும் ஒரு சேர அழுத்த அவற்றின் வெளிப்பாடாய் முகப் பிரதிபலிப்பும் காதல் கணவர் நாசருடன் சென்ற அனுபவங்களை, அந்த இடங்களுக்கெல்லாம் விரும்பியவாறு பயணிக்க அவரது உடல்நிலை இடம் தராத நிலையில், அந்த நினைவுகளை ஆயிஷா நாடக வடிவில் உருவகித்ததைக் காணும்போதான நெகிழ்வும் என நடிப்பில் அற்புதங்கள் செய்கிறார். நிஷா (ராதிகா), அபித் (எஸ் வி கிருஷ்ண சங்கர்), சாரா (லத்தீஃபா), ஹார்வா (சல்மா), அப்துல்லா (இஸ்லாம் அப்துல் கவாத்), அகீஃப் (பாரா அல் நிஜாமீ), ஹம்சா (சம்சுதீன்), நர்ஸ் மெரினா குரியன் (மினி அல்போன்ஸ்) போன்ற துணைப் பாத்திரங்களும் சோடை போகவில்லை. அரபு நாடுகளுக்கு வீட்டு வேலைக்குச்  செல்லும் பெண்கள் பல விதங்களில் அவமரியாதையும் கொடுமையும் படுத்தப்படுவதாகத்தான் செய்திகளும் ஏன், படங்களும்கூட வந்திருக்கின்றன. இந்தப் படம் அவற்றையெல்லாம் மறுதலிக்கும் விதத்தில் உள்ளதே என்கிற சிந்தனைக்கு, “எந்த வீட்டுக்கு நாம அனுப்பப்படறோமோ அதப் பொருத்து நம்ம நெலம அமையும்” என்று வீட்டு வேலைக்கு ரியாத்திற்கு வரும் பெண்மணிகளில் ஒருவர் ஆயிஷாவிடம் சொல்வதில் விடை கிடைத்துவிடுகிறது. “பெண்கள மதிக்கறவங்கதான் அரேபியர்கள்”“வீட்டுக்கு வந்த விருந்தினர்ங்க மூனு நாள் தங்க இடமும் விருந்தும் கொடுத்ததுக்கு அப்புறம்கூட, எதுக்கு வந்தீங்கன்னு கேட்காததுதான் அரேபியாவோட பாரம்பரியம்” என்று நிமிஷா, ஆயிஷாவிடம் சொல்வதும் அதற்கு வலு சேர்க்கிறது. “மமாவோட நினைவு மங்கி வருது. பழசுதான் ஞாபகம் இருக்கு. ஆனா அவங்க மறந்துபோன பட்டியல்ல ஆயிஷா பேர் இல்ல” (சாரா)“எவரெஸ்ட் மலைய தாண்டறதவிடக் கஷ்டம்  மனுஷங்களோட மனச ஜெயிக்கிறது, இல்ல?” (நிமிஷா)போன்ற வசனங்களும் ஆயிஷா மமா இடையிலான உரையாடல்களும் நயம். இயற்கை அழகு கொஞ்சும் கேரளாவையும் பரந்த பாலைவனத்தில் ஆங்காங்கே பிரமிக்க வைக்கும் அரண்மனை வீடுகளையும் ஒருங்கே அழகுற வழங்கிய ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவின் திறன் பாராட்டுக்குரியது. கதைக் களத்தோடு இயைந்த பின்னணி இசையையும் பாடல்களுக்கான துள்ளலான இசையையும் அற்புதமாக வழங்கி உள்ளார், எம் ஜெயச்சந்திரன். படத்தொகுப்பைப் பழுதில்லாமல் செய்துள்ளார், அப்பு என் பட்டாத்திரி. இடதுசாரி இயக்கங்களோடு பணியாற்றி, இஸ்லாமியப் பெண்ணாக இருந்தாலும் சமூகத் தடைகளைத் தாண்டி, கருத்தியலைப் பிரதிபலிக்கும் நாடகங்களில்  நடித்ததால், எதிர்ப்புகளையும் கல்லடிகளையும் ஏன், துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொண்டு துணிவுடன் நடித்து, ஒரு கட்டத்தில் அரபு நாட்டிற்குப் பணிப் பெண்ணாகச் சென்று திரும்பிய நிலாம்பூர் ஆயிஷாவின் சுய வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் ‘ஆயிஷா’. திரைப்படத்தில், அவர் நாடகக் கலைஞராக இருந்த வாழ்க்கை சுருங்கிப் போயிருந்தாலும்,  சவுதி அரேபியாவில் பணிப் பெண்ணாக வாழ்ந்த காலம் விரிவாகவும் அவருக்கும் மமாவுக்கு இடையிலான பாசத்தின் பரிமாணத்தை மிகவும் அழகாகவும் நயமாகவும் சொல்லப்பட்டதற்காகவும் குடும்பத்தினர் அனைவரும் பார்க்கத்தக்க வகையில் ‘ஆயிஷா’ திரைப்படத்தை வழங்கியதற்காகவும் இயக்குநர் ஆமீர் பள்ளிக்கல் பாராட்டுக்குரியவர். மதிப்பெண் : 7/10

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 6

7. பீஷ்ம சபதமும் மீனவக் குடிவழிக்குப் போன அரசுரிமையும் கங்காதேவி எட்டாவது குழந்தையைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனபின், சந்தனு மகாராஜனுக்கு அவர்களைப் பார்க்கும் சந்தர்ப்பம் நீண்டகாலம் வாய்க்கவே இல்லை. மனநிம்மதியின்றி, எப்போதும் கங்கைக் கரையில் உலாவிக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், மிக அழகானவனும் ஆஜானுபாகுவானவனுமான ஒரு இளைஞன் கங்கையின் ஓட்டத்தை அம்புகள் எய்து நிறுத்திவைத்ததைப் பார்த்தான். அந்த அற்புதமான செயல் சந்தனு மகாராஜனைத் திகைக்க வைத்துவிட்டது.வியாசர் எந்தவொரு கதாபாத்திரத்தையும் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியுடன் மட்டுமே அறிமுகம் செய்வாரே தவிர, தட்டையாக அறிமுகம் செய்யமாட்டார். உபகதைகளைப் போலவே ஒரு அபூர்வமான நிகழ்ச்சியின் மூலம் ஒரு கதாபாத்திரத்தை மறக்க முடியாதபடி அறிமுகப்படுத்துவதும் மகாபாரதம் மாபெரும் இதிகாசமாக விளங்குவதற்குக் காரணமாக உள்ளது என்பது பலருடைய அபிப்பபிராயம். யாராலும் மறித்து நிறுத்த முடியாத கங்கையின் நீரோட்டத்தை மறிப்பவன், ஈடு இணை இல்லாத அஸ்திரப்பயிற்சி பெற்ற மாவீரனாகத்தான் இருக்க முடியும் என்று சந்தனு மகாராஜன் நினைத்தான். அப்போது கங்காதேவி மனிதவடிவில் சந்தனு மகாராஜன் முன் தோன்றினாள். “நீ வியந்து பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞன்தான் உன் மகன். அவன் பெயர் தேவவிரதன். அவனுக்குப் போர்க் கலை உள்ளிட்ட எல்லாக் கலைகளும் கற்றுத் தந்து மாபெரும் ஆளுமையாக்கி இருக்கிறேன். இனி அவன் என்னிடமும் உலகத்திடமும் கற்றுக்கொள்ள எந்த வித்தையும் பாக்கி இல்லை. எனவே நீ அவனை உன்னுடன் அழைத்துக் கொண்டு போ” என்று சொல்லி, தேவவிரதனை சந்தனு மகாராஜனிடம் ஒப்படைத்தாள். சந்தனு மகாராஜன் தேவவிரதனைக் கட்டித் தழுவிக்கொண்டு, கங்காதேவி சொன்னபடியே தன்னுடன் அழைத்துக்கொண்டு போனான். அதுமுதல், தேவவிரதனை கங்காபுத்ரன் என்று உலகம் அழைத்தது. வழக்கமாக, புதல்வரையும் புதல்வியரையும் தந்தையின் பெயரைச் சொல்லி, ‘அவர்களின் மகன்/மகள்’ என்று இப்போது அழைக்கும் வழக்கத்திற்கு மாறாக, தாயின் பெயரைச் சொல்லி அவருடைய மகன்/ மகள் என்றழைக்கும் பழக்கம் பரவலாக அப்போது வழக்கத்தில் இருந்தது இதன்மூலம் தெரியவருகிறது. மகாபாரதக் காலத்தில் தாய் வழிச் சமுதாயத்திலிருந்து தந்தை வழிச் சமுதாயமாக மாறும் போக்கு (transition) நிகழத் தொடங்கி இருந்தாலும் தாய்வழிச் சமுதாய வாழ்முறையே பெருமளவில் வழக்கில் இருந்ததை இது காட்டுகிறது. நமக்குத் தெரிந்து ஒரே ஒரு இடத்தில்கூட, வியாசர் உட்பட எந்தவொரு கதாபாத்திரமும் தேவவிரதனை ‘சந்தனு புத்ரன்’ என்று அழைத்ததாகத் தெரியவில்லை. பாண்டவர்களை ‘குந்தி புத்திரர்கள்’ என்று அழைப்பார்கள். ‘பாண்டுவின் புத்திரர்கள்’ என்றழைப்பது அபூர்வம். கர்ணனை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கிருபாச்சாரியரும் பாண்டவர்களும் ‘தேரோட்டியின் மகன்’ அல்லது ‘ராதேயன்’ என்று அழைப்பதில் மகிழ்ச்சி கண்டார்கள். இப்படி இருக்கையில், சந்தனு மகாராஜன் மீண்டும் சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் வசம் மையலில் விழுந்தான். மீனவப் பெண்ணின் தந்தை விதித்த பல நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததால், சந்தனு மகாராஜாவால் சத்யவதியை மணம் முடிக்க முடியவில்லை. அதனால் ஊனும் உயிரும் உருகி உருக்குலைந்து போனான். அதை அறிந்த தேவவிரதன், தன் தந்தை சந்தனு மகாராஜனுக்கு சத்யவதியைத் திருமணம் செய்து வைக்க, சத்யவதியின் தந்தையிடம் பேசினான். சத்யவதியின் தந்தையான மீனவர் தலைவன் அதிபுத்திசாலி. “என் மகளின் அழகுக்கு, அவளுக்குப் பிறக்கப்போகும் மகன் மன்னனாக வேண்டியவன். மகாராஜாவின் மூத்த மகனாகவும் பட்டத்து இளவரசனாகவும் நீங்கள் இருக்கும்போது, என் மகளின் மகன் எப்படி மன்னாக முடியும்?’ என்று சத்யவதியின் தந்தை தேவவிரதனிடம் கேட்டான்.“நான் இப்போதே பட்டத்து இளவரசன் என்ற பொறுப்பைத் துறக்கிறேன். அதுமட்டுமன்றி என் வாழ்நாள் முழுவதும் இளவரசனாகவோ மன்னனாகவோ முயற்சிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறேன்” என்று தேவவிரதன் கூறி சத்தியம் செய்தான். இருந்தும் சத்தியவதியின் தந்தை திருப்தி அடையவில்லை. “நீங்கள் பட்டத்து இளவரசனாகவோ மன்னனாகவோ மாட்டேன் என்று சத்தியம் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் பின்னாளில் உங்களுக்குத் திருமணமாகி உங்களுக்குக் குழந்தைகள் பிறந்தால் உங்கள் பிள்ளைகள் அரசனாகும் உரிமையைக் கோரலாம் அல்லவா? அந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய மகளின் மகனுக்கோ அவனது பிள்ளைகளுக்கோ அரசனாகும் வாய்ப்பு இல்லாமற் போய்விடுமே” என்றான் சத்தியவதியின் தந்தை. உடனே தேவவிரதன், “என் வாழ்நாளில் நான் திருமணம் செய்துகொள்ளமாட்டேன். பிரம்மச்சாரியாகவே இருப்பேன். இது சத்தியம்” என்று சத்தியம் செய்தான்.உடனே வானிலிருந்து “பீஷ்ம, பீஷ்ம” என்ற முழக்கம் கேட்டது. பீஷ்மன் என்றால் ‘செய்தவற்கரிய செய்பவன்’ என்று பொருள். சத்ரியர்கள் மட்டுமே அரசனாகத் தகுதி வாய்ந்தவர்கள் என்று சொல்லிவந்த பீஷ்மருக்கு, சத்யவதியின் வாரிசுகள் என்ற வகையில் குருவம்சமே மீனவ குலத்தைச் சேர்ந்தவர்களாகி விடுவார்கள் என்பது நினைவில் இல்லாமல் போனது விந்தையான உண்மை. தற்போது தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் மகாபாரதத்தில் சத்திரியர்களாக முன் நிறுத்தப்படும் அனைவரும் சத்யவதி என்ற மீனவ குலப் பெண்ணின் வழித்தோன்றல்கள் என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம். இந்தக் கோணத்தில் பார்த்தால், கர்ணணின் மகன் விருஷகேதுவை, சூத்திரன் என்ற காரணத்தினால் முடி சூட்டிக்கொள்ளக் கூடாது என்று தீர்ப்பளித்த பீஷ்மரின் சட்ட நிலைப்பாடு சரியானதாகத் தோன்றவில்லை என்பது ஒரு முக்கியமான விஷயம். சத்யவதியும் சந்தனு மகாராஜனும் திருமணம் செய்த கொண்டு இல்லறம் நடத்தியதன் பயனாக, சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்று இரண்டு புதல்வர்கள் பிறந்தனர். அவர்கள் பீஷ்மரின் ஒன்றுவிட்ட சகோதரர்கள். சித்திராங்கதன் இறந்துபோனான். விசித்திர வீரியன் அரசனான். காசி தேசத்து இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்ற மூவருக்கும் சுயவரம் நடக்க இருப்பதை பீஷ்மர் கேள்விப்படுகிறார். அவர்களை, தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனான விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறார். பீஷ்மர் வில்வித்தையில் மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமான பரசுராமனுக்கு மட்டுமே இணை வைத்துப் பேசக்கூடிய அளவிற்கு அற்புதமான வில்லாளி. அவருடைய போர் செய்யும் ஆற்றல்பற்றி, அனைத்து நாட்டு இளவரசர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். அதேபோல, அவர் பிரம்மச்சர்ய விரதம் பூண்டவர் என்பதும் தெரியும். இந்தச் சூழலில் அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோரின் சுயவரத்துக்கு பீஷ்மரே நேரில் வந்ததைப் பார்த்து சுயம்வரத்துக்கு வந்திருந்த அனைத்து இளவரசர்களும் திகைத்துப் போயினர். அவர் விசித்திர வீரியனின் சார்பில் அவர்களுடைய பிரதிநிதியாக சுயம்வரத்துக்கு வந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அதுவே இதுவரை இல்லாத நடைமுறை. அதிலும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவர் சுயம்வரத்தில் பங்கு கொள்வது என்பது கேள்விப்படாத விநோதம் மட்டுமல்ல. அது ஒரு முக்கியமான சட்டப் பிரச்சனையும் தர்ம நியதிப் பிரச்சனையுமாகும். தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனுக்காக, சுயம்வரத்தில் அவனுடைய பிரதிநிதியாகக் கலந்துகொண்டாலும் அது பீஷ்மரின் பிரம்மச்சரிய விரதத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பீஷ்மர் சுயம்வரத்தில் பங்கு கொண்டிருந்தாலும், வயதில் மூத்தவரும் பிரம்மச்சரிய விரதம் பூண்டவரும் அரச பதவி வேண்டாம் என்றவருமான பீஷ்மருக்கு இளவரசிகள் மாலை சூட்டியிருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். ஆக, பீஷ்மரின் சபதம் மீனவப் பெண்ணின் மகனுக்கு அரச பதவியைக் கொடுத்தது என்றால், அவரது வீரம் அவரது பிரம்மச்சரிய விரதத்தைக் கேலிப் பொருளாக்கி இன்னொரு அற மீறலுக்கும் காரணமாகிவிட்டது. (புதன்கிழமை தொடர்வோம்)

அக்கா

அக்கா

சிறுகதை “அப்பா.. அப்பா போயிட்டாருடா கதிரு…” சென்னையில் உறங்கிக்கொண்டிருந்தவனை மதுரையிலிருந்து அண்ணன் செல்வத்தின் குரல் இப்படியா வந்து எழுப்பி உலுக்கிப் போட வேண்டும்?! இரவு தூங்கியவர் காலையில் எழவேயில்லையாம். கதறி அழுதான் அண்ணன். ‘இப்படி விடியத்தான் காத்திருந்ததா இந்த ஞாயிறு’ என்று ஒரு கணம் நாளினைச் சபித்துத்கொண்டது நாக்கு. “அக்காவுக்கு சொல்லிட்டியாண்ணே?” அடுத்த வார்த்தையாய் இதுதான் வந்து விழுந்தது கதிரிடமிருந்து. “இப்பத்தான்டா டாக்டரக் கூட்டியாந்து கன்பஃர்ம் பண்ணேன். முதல்ல ஒனக்குத்தான் போடுறேன். இனிமேத்தான் எல்லாருக்கும் சொல்லணும். சொல்லாம இருப்பனா? நீ வா பேசிக்கலாம்.” அலுவலகத்துக்கும் மகளின் பள்ளிக்கும் விடுமுறை சொல்லி, வாடகைக் காருக்கு முகவரி தந்து என்று ஒருவழியாக அடித்துப் பிடித்துக் கிளம்பி அவன் பறந்த வேகத்திற்கு, காருக்கு வெளியே நகரம் நகர்வேனா என்றது. போன மாதம்தான் தன் மகளும் பேத்தியும் விடுமுறைக்கு வந்திருப்பதால், கொள்ளுப் பேத்தியோடு அப்பா இருக்கட்டும் என்று சொல்லி அப்பாவை அழைத்துப் போயிருந்தான் செல்வம். எதையாவது காரணம் சொல்லி, தங்களோடு அப்பாவின் இருப்பை நீட்டித்துக் கொள்வதில் இருவருக்குமே அப்படியொரு தாகம். “அக்கா ஊருக்குப் போனதும் நீங்க இங்க வந்துடணும் தாத்தா” என்று கையைப் பிடித்துக்கொண்டு சிணுங்கிய கதிரின் மகளுக்கு, ‘பத்து நாளில் வந்துவிடுவேன்’ என்று சமாதானம் செய்துவிட்டுப் போன அப்பா, இப்போது வராமலேயே போயிருந்தார். எண்பத்திரண்டு ஆகிறது. உழைத்துக் கழிக்கத்தான் அவரைச் சபித்திருந்தது போல இந்தப் பிறப்பு. ஊரில் விவசாயம் பொய்த்துப் போய் மூன்று பிள்ளைகளைக் கையில் பிடித்துக்கொண்டு மதுரைப் பக்கம் பஞ்சம் பிழைக்க வந்த சம்சாரி. பேப்பர் போடுவது, தேங்காய் பறிப்பது, சுண்ணாம்பு அடிப்பது, தியேட்டரில் டிக்கெட் கிழிப்பது என்று ஆட்டங்காட்டிய வாழ்வு, ஒருகட்டத்தில் அதுவே அசந்துபோய் அம்மன் கோயிலுக்கு அருகே பூக்கடையே நிரந்தரப் பிழைப்பு என்ற நிலைக்கு வந்திருந்தது. விடியலிலேயே பூ மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த சரக்கை, மொத்தக் குடும்பமும் நாள் முழுக்கக் கட்டிக்கொண்டிருக்கும். அப்படி மணத்துப் போனதுதான் இப்போதைய இந்த வாழ்வு. பூக்கடை வாசத்தில் பிழைப்போடு பிழைப்பாக, ஒரு முனைப்போடுபடித்ததனால், செல்வம் மதுரையிலேயே அரசுப் பள்ளி ஆசிரியராகவும் கதிர், சென்னையில் ஒரு தனியார் அலுவலகப் பணியிலுமாகத் திருமணம் குழந்தையென்று குடும்பம் விருத்தியாகி நிமிர்ந்தபோது, அதற்காகவே காத்திருந்ததைப் போல விடைபெற்றுக்கொண்டாள் அம்மா. வாலறுந்த பட்டம் போல, தன் உயிரறுந்து போனதில் அப்பாவின் ஓட்டமத்தனையும் அம்மாவின் மூச்சோடே ஒடுங்கிப் போனது. அம்மாவுக்குப் பிறகான நாட்களெல்லாம் அம்மாவின் நினைவுகளாக அப்பாவைத் தின்றுகொண்டிருந்தன. ஒட்டுமொத்த தைரியமும் அம்மாவோடு கரைந்து போயிருந்தும் பயமுறுத்துகிற வீட்டுக் கடனுக்காக வேண்டி, ‘ஓடுகிற வரைக்கும் ஓடுகிறேனே’ என்று சொன்ன அப்பாவை மகன்களது அதட்டல்தான் வீட்டோடு நிறுத்தியிருந்தது. வயதும் விசனமும் ஒருசேர மூத்திருக்க, உறக்கமில்லாப் பொழுதுகளோடு உழன்றுகொண்டிருந்தவர். பழுத்தால் உதிரவேண்டும் என்பது என்ன நியதியோ? “சார்… டீ சாப்பிடலாமா?” டிரைவர் அழைத்தபோது திருச்சி வந்திருந்தது. மகள் உறக்கத்திலிருந்தாள். “நேரத்துக்குச் சாப்பிடாம இந்த டீயக் குடிச்சேதான் பொழப்பு பொழப்புன்னு ஓடுனாரு ஒங்கப்பா. இந்நேரம் நம்மளோட இருந்திருந்தா நாலு டீ குடிச்சிருப்பாரு, இல்லங்க..”என்று கவிதா சொல்ல, ‘இனி இப்படித்தான் போல. ஆண்டாண்டு கால உறவின் பிணைப்பும் உயிர்ப்பும் இறுதியில் வெறும் நினைவுகளாக மட்டுமே தங்கிப் போகின்றன’ என்பதன் நிதர்சனம் உறைக்கையில் டீயும் கசப்புத் தட்டியது கதிருக்கு. மூன்று பிள்ளைகளை வளர்த்துக் கரையேற்றியது போக, ஒரு மச்சு வீடு கட்டிக்கொண்டதுதான் அப்பாவின் வாழ்நாள் சாதனையாக மிஞ்சியிருந்தது. பிழைக்க வந்த இடத்தில் எப்படியாவது முளைத்து எழுந்துவிட வேண்டுமென்ற வீம்பும் வாழ்ந்தேயாக வேண்டுமென்ற வைராக்கியமுமாக அப்பா வாழ்க்கையைப் படித்திருந்தார். கூடவேயிருந்து செல்வமும் கதிரும் அப்பாவைப் படித்திருந்தார்கள். ஆனால் எவர் எடுத்துச் சொல்லியும் எட்டாவதைத் தாண்டாத அக்கா ஜெயா மட்டும் எப்போதும் எதையும் யாரையும் படிக்கத் தலைப்படவேயில்லை. வீட்டில் மொத்தப் பேருக்குமே அக்கா என்றால் எப்போதுமே ஒருவித பயமும் பதற்றமும்தான். கோபமும் பிடிவாதமும் அழிச்சாட்டியமும் அவள் கூடவே பிறந்தவை. எதிலும் நிறைவு காணாத கண்கள். எத்தனைதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் சிலிர்த்துக்கொண்டு நிற்பாள். ‘கெடக்கட்டும்.. நாளப் பின்ன வந்தா, குத்த வச்சுக்க புடி மண்ணு வேணும்ல’ என்ற கணக்கில் ஊரில் விட்டு வந்த ஒரு துண்டு நிலத்தையும்  அடிமாட்டு விலைக்கு விற்றுத்தான் அக்காவின் கல்யாணம் முடிந்திருந்தது. அதிலும் ஏகப்பட்ட குறை அவளுக்கு. காப்பிப்பொடி கலரில் இன்னும் கொஞ்சம் கனத்த கரை போட்ட பட்டு எடுத்திருக்கலாம்… காதுத் தோடு இன்னுங்கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம்… அம்மாவின் அந்த எட்டுக்கல்லு பேசரியைத் தனக்குப் போட்டிருக்கலாம்… எலுமிச்சம் பழக்கார வீட்டு அன்னக்கொடி புருசனைப்போல இல்லாவிட்டாலும் மாப்பிள்ளையை இன்னும் கொஞ்சம் லட்சணமாகப் பார்த்திருக்கலாம்.. என்று வளர்ந்துகொண்டே போகிற அவளது குறைகளுக்கெல்லாம் காது கிடைத்தால் போதும்; இன்றைக்குப் பூராவும் கண்ணைக் கசக்கிக்கொண்டிருப்பாள். எப்போது பிறந்த வீட்டுக்கு வந்தாலும் இரண்டே நாளில் சந்தி சிரிக்கச் செய்துவிட்டு, ‘இனி இந்தப் பக்கமே வரமாட்டேன்’ என்று மூக்கைச் சிந்திவிட்டுப் போவாள்.  எண்ணி ஆறு மாதத்தில் புதிதாய் ஒரு பட்டியலோடு வந்து நிற்பாள். ‘பகல் கொள்ளை தோத்தது போங்க’ என்பாள் அம்மா. “விடுமா.. யார்ட்ட கேக்குறா அவ? செல்லுபடியாகுற எடத்துலதானே சிணுங்க முடியும்?!” சிரித்துக் கடந்துவிடுவார் அப்பா. இரண்டு அக்காக்களோடு பிறந்த அப்பாவுக்கு, செத்துப்போன அவரது பெரியக்காளின் சாயலும் குணமுமாகப் பிறந்திருப்பதாக மகளின் மீது வாஞ்சை அதிகம். அதனாலேயே அவளது கல்யாண குணங்கள் அத்தனையும் பொறுத்துக்கொள்ளுகிற அப்பா. “அதட்டவும் கொட்டவும், அக்கா தங்கச்சி இருக்கக் குடுத்து வச்சிருக்கணும்டா செல்வம். மாமஞ்சீரு நீங்க செய்ய.. அத்த சீரு அவ செய்யன்னு.. மனசாரக் குடுக்கவும் மனசார வாங்கிக்கவும் பொறந்தவன்னு ஒருத்தி இருக்க, புண்ணியம்ல பண்ணியிருக்கணும்..” என்று அவளது அதிகாரத்தையும் ஏவல் கேவல்களையும் மகன்களிடம் பூசி மெழுகுவார். அப்படியெல்லாம் பூசி மெழுகி வைத்துக்கொண்ட அக்காதான், அம்மா இறந்த கருமாதி வீட்டில், “வீட்ட தம்பிக வச்சுக்கட்டும். அம்மாவோட பண்ட பாத்திரம், பட்டுச்சேலை, காது கழுத்துல கெடந்த பத்துப் பவுனும் பொறந்த மக எனக்கு வந்தாகணும், சொல்லிப்புட்டேன்” என்று, சபையில் ஆங்காரமாக நின்றாடியபோது அப்பா ரொம்பவே ஆடிப்போனார். “ஏத்தா.. அம்புட்டுச் செரமத்துலயும் ஊருக்காட்ட வித்து , நீ கேட்டதுக்கும் மேலயே ஒம்மனசு குளுரக் குளுர நிறைவா செஞ்சுட்டேன். விடுத்தா பாத்துக்கலாம். இத்தோடயா போச்சு? இன்னும் எம்புட்டோ இருக்கு.  மலையாட்டமா இருக்காங்கெ ஒந்தம்பிக ரெண்டு பேரும். அப்டில்லாம் விட்டுறுவாங்கெளா உன்ன? இப்ப பாத்திரம் பண்டம், சேல கீலன்னு நீ கேட்டத எடுத்துக்க தாயீ. ஒனக்கே தெரியும்.. அடுத்தடுத்து ஒந்தம்பிங்க கல்யாணச் செலவு ஒங்கம்மா வைத்தியச் செலவுன்னு வம்பாடு பட்டுக் கட்டுன வீடும் பேங்கு அடமானத்துல இருக்கு. இன்னும் எனக்கு எத்தன நாளு விதிச்சுருக்கோ தெரியல. அதுக்குள்ள ஒங்கம்மா நகை அதுயிதுன்னு கொஞ்சம் சேத்துப் புடிச்சுத் தேத்தி வீட்ட மீட்டுறுவேன். நாம்பொழச்ச இந்தப் பொழப்புக்கு, ஒந் தம்பிக தலையிலக் கடனக் கட்டிட்டுப் போன பாவத்த வேற நான் தூக்கிட்டுப் போகணுமாத்தா..?” “எப்புடியோ வீடு அவனுகளுக்குத்தானே? அதுல எனக்கென்னா பங்கா கேக்கப் போறேன்? அப்புடில்லாம் பேராச புடிச்சவ இல்ல நானு. ஆத்தா சொத்து மகளுக்குத்தே. என்னைய ஏமாத்தப் பாக்காதிக. நான் விட மாட்டேன் ஆமா, சொல்லிப்புட்டேன்.” “இருக்கற நகையெல்லாம் ஒன்ட்ட குடுத்துட்டு, வெறுங் கடனை மட்டும் ஒந்தம்பிக தலையில கட்டச் சொல்றியே, நியாயமாத்தா? அவனுக குடும்பம் பாத்து கடெங்கட்டி வீட்டை மீட்டு எந்தக் காலத்துல எந்திரிச்சு நிக்க?” ம்ஹும். எந்த நியாயமும் செல்லுபடியாகவில்லை அக்காவின் தராசுக்கு முன்னே. தெரிந்த கதைதான். “சரி விடுத்தா. நீ முடிவு பண்ணிட்டு பேசுற. நா என்னத்தச் சொல்ல? தோடு வளையலுன்னு அஞ்சு பவுன மனசார வாங்கிக்க. ஆத்தா கழுத்துச் செயினு மட்டும் அப்பனோட இருக்கட்டும். ஏம் மிச்ச நாளுக்கு ஒரு பிடிப்பு வேணாமா? நீயே சொல்லு..” அப்பாவின் இறுதியான உறுதியிலும் சபையின் தீர்ப்பிலுமாக, அஞ்சு பவுனு குறைந்துபோன ஆத்திரம் அக்காவிற்கு. ‘இனி இந்த வீட்டுப் படி ஏறமாட்டேன்’ என்று கண்ணீர் விட்டுத் தூற்றியவாறு சாபமிட்டுவிட்டு, மறக்காமல் பண்ட பாத்திரங்களோடு போனவள்தான். வருடம் பதினாறு முடிந்தது. இந்த முறை அக்கா சொன்னபடியே செய்தாள். “வந்துருவா கழுத. எங்குட்டுப் போயிருவா..” மகன்களைத் தேற்றுவதாகத் தன்னை ஆற்றிக்கொண்டிருந்தார் அப்பா. காலங்கள் உருண்டோடி இருந்தாலும் கசப்புகளென்னவோ எல்லாருக்குள்ளும் உருண்டு திரண்டிருந்தன. கடைசியாக இப்போது அப்பாவைப் பார்க்கவாவது அக்கா வருவாளா, தெரியவில்லை. வீட்டுக்குள் நுழையும்போதே செல்வம் கதறிக்கொண்டு ஓடி வந்தான். கண்ணாடிப் பெட்டிக்குள் இப்பவும் அப்பா உறங்குவது போலவேதான் இருந்தார். பட்டு வேட்டி சட்டையில் அப்பாவைப் பார்க்கப் பார்க்கப் பொங்கிக்கொண்டு வந்தது துக்கம். செல்வம் தன் மகளின் திருமணத்திற்கு எடுத்துக் கொடுத்தது.  “ரொம்ப வெளீர்னு இருக்கு.. வேணாண்டா. சொன்னாக் கேளுங்கடா. விடுங்கடா என்னிய..”  என்று பிடிவாதம் பிடித்தவரை, மல்லுக்கட்டி முகூர்த்தம் வரைக்கும் கட்ட வைத்திருந்தார்கள். சாதாரண வேட்டி சட்டைக்கு மாறின பின்புதான் சாதாரணமாக இருந்தார் அவர். வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருக்க, கதிர் நினைத்தது போலவே அக்கா இன்னும் வந்திருக்கவில்லை. “சென்னையிலேர்ந்து நீ வந்து எறங்கிட்ட. இங்கன அழகர்கோயில்ல இருந்துகிட்டு இன்னும் வந்துச்சாப் பாரு.. காலையிலேர்ந்து நாலஞ்சு ஆள அனுப்பியாச்சு. என்ன செய்யக் காத்திருக்கோ?” என்று செல்வம் புலம்பிக்கொண்டிருந்தான். “நல்ல சாவுப்பா. கொடுத்து வச்சவரு. மேலுக்கு சொகமில்லன்னு கெடக்காம வைக்காம,யாருக்கும் தொந்தரவில்லாம தூக்கத்துலயே போய்ச் சேர்றது யாருக்குக் கிடைக்கும்!” என்பதான பெருமூச்சுகளுக்கிடையே, அழுகையும் புழுக்கமுமாக வியர்த்துக் கிடந்த நேரத்தை நெளிந்துகொண்டே போக்கிக்கொண்டிருந்த பெருசுகளின் குரல்கள், மெல்ல மெல்லக் காரியங்களை விரட்டத் தொடங்கின. “ஏப்பா செல்வம்.. வர்ற சனம் வந்துகிட்டே இருக்கட்டுமப்பா. அதுக்குள்ள நாம காரியத்த ஒவ்வொன்னாப் பாத்துக்கிட்டே இருப்போம். நேரம் போவுது பாரு..” நீர்க்குடத்துக்கு சருவம் எண்ணி, கோடிச் சீரெடுக்க சம்பந்தக்கார மக்களை அழைத்துக்கொண்டிருக்கையில் குடும்பத்தோடு வந்து இறங்கினாள் அக்கா. துள்ளத் துடிக்க, அழுகையோ ஆர்ப்பாட்டமோ எதுவுமில்லை. கால்கள் தயங்கித் தயங்கிப் பின்னிக்கொள்ள, குனிந்த தலை நிமிராமல்  உள்ளே போனாள்.இடையே காணாமல் போயிருந்த காலம், அவளை யாரோவாய்க் காட்டியது. கண்ணாடிப் பெட்டியின்மீது உரசிக் கொள்ளாத தூரத்தில் நின்றபடி அப்பாவின் முகத்தோடு உறைந்திருந்தவள், “அக்கா..” என்றழைத்தபடி பின்னாலேயே செல்வமும் கதிரும் வந்து நிற்க, சட்டென்று முன்னுக்கு நகர்ந்து குவிந்திருந்த மாலைகளைப் புறந்தள்ளிக்கொண்டே முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டாள். கோடியெடுத்து, நீர்க்குடம் தூக்கி, குளிப்பாட்டி,

உணவுத் தீண்டாமை

உணவுத் தீண்டாமை

இந்தச் சமூகத்தில், நாம் உண்ணுகிற உணவு என்பது, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளதைப்போல, ஒவ்வொரு மனிதருக்கும் உணவுப் பழக்கவழக்கம் வேறுபட்டே உள்ளது. உணவு விருப்பம் என்பது எல்லாருக்கும் ஒன்றுபோல இருக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை.   உலக நாடுகளில், அந்தந்த நாடுகளின் வாழ்வியல் சார்ந்து மக்கள் உணவுப் பழக்கத்தை வைத்திருக்கிறனர். அதில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்றவை பொதுவான அசைவ வகை உணவுகளாக அறியப்படுகின்றன. மேற்சொன்னவை மட்டுமல்லாது, நிலத்திலும் நீரிலும் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் ஆகியவையும் பல இடங்களில் மனிதர்களின் உணவுப் பட்டியலில் இருக்கின்றன. காய்கறிகளை / தாவரப் பொருட்களை மட்டுமே கொண்டு சமைக்கப்படும் உணவுகள் சைவ வகை உணவுகளாக அடையாளம் பெற்றுள்ளன. உலகின் பல நாடுகளில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி,  மீன் வகைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள்தான். இந்தியா போன்ற சில நாடுகளில் வாழ்கிற மக்களிடம், அவர்களின் குடி, சமயம், குடும்பம் போன்றவற்றின் அடிப்படையில், உணவுப் பழக்கவழக்கங்களில் அசைவமும் சைவமும் கலந்திருக்கிறன. உயிர் வாழவும் பசி போக்கவும் நாம் உண்கிற உணவில், சைவ உணவுதான் சிறந்தது என்று சிலரும், இல்லை இல்லை, அசைவ உணவுதான் சிறந்தது என்று சிலரும் அவரவர் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். உண்மையைச் சொன்னால், அவர்கள் அவர்களை அறியாமலே, மறைமுகமானதொரு அரசியல் வலையில் சிக்கவைக்கப்டுள்ளனர். இதனால் மனிதர்களுக்குள்ளே ஒற்றுமையை விலக்கி, வேற்றுமையை உருவாக்கி, உளவியல் ரீதியில் அவர்களை ஒருவகை நெருக்கடிக்கு உள்ளாக்கி வைத்திருக்கிறது இந்த உணவு அரசியல். இதனால், பழக்கப்பட்ட உணவை வைத்து ஒருவரை ஒருவர்  ஏளனமாகவும் இழிவாகவும் பார்க்கிற பார்வை இங்கே பரவலாக இருந்து வருகிறது. ஆம், சைவ உணவை உண்பவர்கள் எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள், போற்றத்தக்கவர்கள், அது பிறப்பின் பெருமை என்பதோடு, அசைவ உணவை உண்பவர்களை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத் தகுந்தவர்களாகவும் கீழானவர்களாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் பார்க்கிற எண்ணமும் ஒரு சாராரிடம் நிறைந்திருக்கிறது. அவர்களால் பொது இடங்களில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறபோது, அசைவ உணவு கொண்டுவந்தவர்களோடு இயல்பாகச் சேர்ந்து உணவருந்த முடிவதில்லை. அவர்களின் செயல்பாடுகளால் அசைவ உணவை உண்பவர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. அதைப்போலவே சைவ உணவு உண்பவர்களுக்கும் பல சங்கடங்கள் நிகழ்கின்றன என்பதையும் நாம் பார்க்கவேண்டும். பெரும்பான்மையாக அசைவ உணவுப் பிரியர்கள் ஒன்றுகூடும் இடங்களில், சைவ உணவு உண்பவர்களை, சாம்பார் சோறு என்றும் தயிர் சோறு என்றும் ஏளனத்துக்கு ஆளாகிறார்கள். காரணம், பெரும்பான்மை கோலோச்சுகிற இடங்களில் சிறுபான்மை தாக்குதலுக்கு உள்ளாகிறது. உணவு என்பது அவரவர் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, ‘நீ அதை உண்ணாதே என்பதும் இதைத்தான் உண்ண வேண்டும் என்பதும் ஆதிக்க மையத்தின் அடாவடிச் செயலாகும்.  இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், ஏழை எளியோர்களின் அன்றாட உணவுகளான பழஞ்சோறு, கஞ்சி, கூழ் போன்றவற்றைப்பற்றிப் பொது இடங்களிலோ மற்றவர்களிடத்திலோ பேசும்போது ‘ஆஹா, ஓஹோ’ என்பவர்கள், அதை ஏழைகளிடத்தில் காண்கிறபோது ஏளனமாகப் பார்கிற பார்வை பெரும்பாலோரிடம் இருக்கிறது. அது சைவமோ அசைவமோ, எதுவாக இருந்தாலும் ஏழைக்களிடம் இருப்பதால் அது, இவர்களைப் பொறுத்தவரை தீண்டத்தகாத உணவு, அவ்வளவுதான். என்னதான் ஒருவருக்கொருவர் உணவு விஷயத்தில் ஒவ்வாமையைக் காட்டினாலும், உணவுத் தீண்டாமை என்பது, ஏழைகளின் உணவுகளைபோல அசைவ உணவுகளின் மீது மட்டுமே அதிதீவிரமாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக அசைவத்தின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் தொடர்ந்து இருந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அண்மையில், முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, தனது சமூக வலைத்தளப் பதிவில், ‘அசைவ உணவு சாப்பிடுவோரின் ஆன்மாவால், நெற்றிப் பொட்டில் உள்ள சவ்வைக் கிழித்துக்கொண்டு சென்று இறைவனைச் சேர முடியாது’ என்று அவருடைய குரு கூறியதாகப் பதிவு செய்திருந்தார். உண்மையில் அவர், சைவத்துக்கு ஆதரவு என்கிற பெயரில் அசைவ உணவு குறித்த தன் அறியாமையை வெளிப்படுத்தியிருந்தார், அவ்வளவே. முருக பக்தரான கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்றவர்களுக்குக்கூட, உணவு விஷயத்தில் போதிய அறிவு இல்லை என்பதை அவரது உரைகளின் வழியே நான் கேட்டிருக்கிறேன். ஒருமுறை  அவர், சைவமே சிறந்ததென்று சொல்வதற்காக, ஒரு முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டி நட்டு வைத்தால், அது பல முருங்கை மரங்களாக வளர்ந்து நமக்குப் பயன் தரும். ஆனால் ஒரு ஆட்டை வெட்டி அதன் கால்களை நட்டுவைத்தால் ஆடு வளருமா எனக் கேட்கிறார். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் பகுத்தறிவற்றுப் பேசுகிறபோது சிறிய மனிதராக ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு உதாரணம் இதுபோன்ற மூடத்தனமிக்க பேச்சுகள்தான். முருங்கை குறித்த அவர் பேச்சு சரிதான் என்று வைத்துக்கொண்டாலும், எல்லா மரங்களும் வெட்டி நட்டால் வளராது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தென்னை மரத்தையோ பனை மரத்தையோ அல்லது நெல், சோளம் போன்ற பயிர் வகைகளையோ வெட்டி நட்டால் அவை வளராது; பக்குவப்படுத்தப்பட்ட விதைகளைப் போட்டால்தான் வளரும். அப்படித்தான், ஒரு ஆட்டை வெட்டி அதன் கால்களை நடுவதால் ஆடு வளராது. ஆனால் ஆடுகளை வளர்த்து பல குட்டிகளைப் போட்டபின்பு அது கசாப்பு கடை வழியே உணவாக மாறுகிறது. ஒரு ஆடு பல குட்டிகளை ஈனும். அவை இன்னும் பலப்பல குட்டிகளை ஈனும். விவசாயம் எப்படி நடைபெறுகிறதோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல கால்நடைகள் வளர்ப்பு. அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தம்பி பேசுகிறபோது, சைவம் சிறந்ததென்று சொல்வதற்காக, வாரியம் சுவாமிகள் சொன்னதாக ஒரு செய்தியைச் சொன்னார்.  எது சைவம்? எது அசைவம்?  என்று அவரிடம் கேட்டபோது, சாலையில் ஒரு ஆடு அடிபட்டு உயிருக்குப் போராடுகிறபோது, யார் கண்களில் நீர் சுரக்கிறதோ அது சைவம் எனவும் யார் வாயில் நீர் சுரக்கிறதோ அது அசைவம் என்றும் சொன்னதாகச் சொல்கிறார். இது எத்தகைய வக்கிர மனப்பான்மை?! அதாவது, சைவம் உண்பவர்கள் ஜீவகாருண்யம் மிக்கவர்கள், அன்பை போதிப்பவர்கள், யாருக்கும் தூன்பம் தராதவர்கள், நல்லவர்கள் என்பது போலவும் அதேசமயம் அசைவம் உண்பவர்கள் மற்ற உயிரினங்கள் மீது அன்பு செலுத்தாததோடு அதைக் கொன்று தின்பதையே முதல் குறிக்கோளாக வைத்திருப்பவர்கள், கொடூரமானவர்கள், மொத்தத்தில் நல்லவர்களில்லை என்பதாகவும் தரம் தாழ்த்தி பேசுபவரான வாரியார் சுவாமிகள், மிக நல்லவராக, பக்திமானாக நம் எல்லாராலும் மதிக்கப்படுகிறார்.  இவர்களைப் போன்ற சைவப் பெருமை பேசுகிறவர்களை, நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் போகிற போக்கில், “மூட்டைப் பூச்சிகளையும் கொசுகளையும் கொத்துக் கொத்தாக அடித்துக் கொல்பவர்களும், பல ஆயிரம் கூட்டுப்புழுக்களைக் கொன்று உருவாக்கப்படும் பட்டாடைகளை உடுத்துபவர்களும் மாட்டின் காம்புகள் நோகப் பாலைக் கறப்பவர்களும் மற்றவர்களுக்கு புத்தனைப்போலப் போதிப்பானுங்க; அயோக்கியப் பயலுங்க” என்று சாடுவார்.   உணவுகளில் எல்லாமும் எல்லாருக்கும் பிடிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கிறது. அதைத்தான் அவர்கள் விரும்பி உண்கிறார்கள். சைவ உணவுப் பிரியர்கள் ஒதுக்கி வைக்கும் காய்கறிகள் ஏராளம். போலவே அசைவப் பிரியர்கள் ஒதுக்கும் கறி வகைகளும் ஏராளம். ஆகவே சைவமோ அசைவமோ, அவரவர் விருப்பத்திற்கு உண்பதைத் தாழ்வானதாகவோ அருவருக்கத்தக்கதாகவோ யாரும் கருதவேண்டாம். ஒருவருக்கு ஜீரணம் ஆகிற எந்த உணவும் உண்ணக்கூடியதே. உயிர்கள் பிறப்பின் நோக்கம் இனப்பெருக்கம் என்கிறது அறிவியல். இனத்தைப் பெருக்க வேண்டுமென்றால், நீடித்து உயிர் வாழ வேண்டும். உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற உணவினை உண்டு நீடித்து வாழ்வோம்.

பொன்னியின் செல்வன் – 29

பொன்னியின் செல்வன் – 29

குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை ஒரு இளம்பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாள். வந்தவள் மணிமேகலைதான். அவள் மிகுந்த சோர்வுடன் வந்து நின்றாள். அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தபோதும் தன் தமையன் அவள் அரண்மனையில்தான் கொலையுண்டான் என்பதால் குந்தவையால் மணிமேகலையின்மீது இரக்கம் கொள்ள இயலவில்லை. ஆனால் வந்தியத்தேவன் – கந்தமாறன் நட்பும் அதனால், கந்தமாறன் தன் தங்கையை வந்தியத்தேவனுக்கு மணம் செய்விக்கலாம் என்ற யோசனை வைத்திருந்ததையும் கடைசியில் ஆதித்த கரிகாலனுக்கு இவளைத் திருமணம் செய்து வைக்கும் யோசனையாக அது மாறிப்போயிருந்ததையும் நினைத்து, அவளின் சோகத்தில் குந்தவைக்கு சுவாரசியம்கூடப் பிறந்தது. என்னவென்று அவளிடமே விசாரிக்கலானாள். அவள் தன் கண்ணீருக்கு மத்தியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றது தானே எனக் கூறினாள். திடுக்கிட்ட குந்தவை, “சம்புவரையரையும் கந்தமாறனையும் காப்பாற்றுவதற்காக இப்படிக் கூறுகிறாயா?” என வினவியபோது, அதை மறுத்த மணிமேகலை, அவர்கள் மதுராந்தகனையும் பின்பு ஆதித்த கரிகாலனையும் தன் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவர்களைத் தான் வெறுப்பதாகவே கூறினாள். மேலும் ஆதித்த கரிகாலன் தன்னை சகோதரியாக நினைத்து மடல் எழுதியிருப்பதையும் குறிப்பிட, குந்தவை மேலும் திகைத்தாள். அவள் வெகுவாகக் கலங்கிப் போயிருப்பதால், அவளுக்கு ஆறுதல் கூறி, அவளிடம் ‘என்ன நடந்தது’ என்று அக்கறையுடன் விசாரித்தாள். அவள், வாணர் குலத்து வீரர் வந்தியத்தேவர், பாதாளச்சிறையில் சிறைப்பட்டிருப்பதை மீட்பதற்காகவே வந்திருப்பதாகவும் அவரை எப்படியாவது விடுவிக்குமாறும் வேண்டிக்கொள்ள, குந்தவை திகைத்தாள். குந்தவை வந்தியத்தேவனைப் பார்க்கப் போவதற்கே தயங்கிக்கொண்டிருக்க, மணிமேகலை, அவன் மீதான கொலைப்பழியைத் தன்மேல் ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் வந்திருப்பதையும் வந்தியத்தேவன் பேரில் அவள் கொண்டிருக்கும் தூய அன்பினையும் கண்டு நெகிழ்ந்தாள். வானதி அவளை மேலும் விசாரித்தாள். ஆதித்த கரிகாலனால் வந்தியத்தேவருக்கு ஆபத்து இருப்பதாக நந்தினி தன்னை நம்பவைத்திருந்ததையும் ஆனால் ஆதித்த கரிகாலருக்கு அந்த எண்ணமேயில்லை என்று அவர் குந்தவையிடம் ஒப்படைக்கச் சொல்லி எழுதியிருந்த ஓலையில்  இருந்து தான் தெரிந்துகொண்டதையும் மணிமேகலை கூறினாள். குந்தவை அந்த ஓலையை வாங்கிப் படித்தாள். தன் விதியைத் தாண்டி, தான் செல்லப் போவதாகவும் வந்தியத்தேவன் முடிந்தவரை தன்னைக் காபந்து பண்ணியதாகவும் இதையும் மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு, தானே பொறுப்பு என ஆதித்த கரிகாலன் அதில் எழுதியிருந்தான். குந்தவை ஒருவாறு தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு மணிமேகலையிடம், அவள் ஆதித்த கரிகாலரைக் கொன்றதாகச் சொன்னால் அவரின் புகழுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனவும் இதை வந்தியத்தேவரும் விரும்பமாட்டார்; தவிர வந்தியத்தேவர் அந்தப் பழியைத் தானே ஏற்கவும் முனைந்து மணிமேகலையைக் காப்பாற்றவே விரும்புவார் எனவும் கூறினாள். மனமுடைந்து போன மணிமேகலை, எப்படியாவது வந்தியத்தேவனை இப்பழியிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டினாள். அப்போது அங்கு பொன்னியின் செல்வர் வர, வானதியையும் மணிமேகலையையும் சற்றுத் தள்ளி இருக்குமாறு கூறிவிட்டு, தம்பியுடன் குந்தவை தனித்துப் பேசலானாள். அப்போது தனக்குப் பட்டம் சூட்டுவதைப்பற்றித் தன் அதிருப்தியைத் தெரிவித்தவர், மணிமேகலையைக் கண்ணுற்று என்னவென்று வினவ, பாதாளச் சிறையில் இருக்கும் வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக சம்புவரையர் மகள் வேண்டி நிற்பதை குந்தவை வருத்தத்துடன் கூறினாள். பெரிதும் அதிர்ந்துபோன பொன்னியின் செல்வர், வந்தியத்தேவனை இத்தனை நாள் தாம் நினைத்துப் பாராமல் இருந்ததைக் குறித்து வெட்கினார். தான் நன்றிகெட்ட செயல் செய்துவிட்டதாக வருந்தி, உடனே அவனை விடுவிக்கும் ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகச் சொல்லிக் கிளம்ப, அப்போது அங்கு வந்த மலையமானும் பூதி விக்கிரம கேசரியும் அவரைப் போகவிடாது வாயிலிலேயே பலவந்தமாகத் தடுத்தனர். திகைத்துப்போன அருள்மொழிவர்மரிடம் பூதி விக்கிரம கேசரி கோட்டைக்காவல் பாதுகாப்பு, சின்ன பழுவேட்டரையரிடம் இருந்து தன்னிடம் வந்திருப்பதைக் கூறினார். மலையமான், வந்தியத்தேவனை இளவரசர் விடுவித்தால் ஆதித்த கரிகாலனின் கொலைப்பழி அவர் மீதே திரும்ப வாய்ப்பிருப்பிருக்கிறது எனக் கூறினார். சக்ரவர்த்தி மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்ட முடிவு செய்திருப்பதாகவும் சம்புவரையர் மற்றும் மற்ற குறுநில அரசர்களை அழைத்துவர பார்த்திபேந்திரன் போயிருப்பதாகவும் ஆனால் மதுராந்தகன் பட்டம் சூடுவதில் தங்களுக்கு விருப்பமில்லை எனவும் பூதி விக்கிரம கேசரி தெரிவித்தார். கரிகாலன் மரணம் பற்றிய உண்மை வெளிப்படும்வரையில் இளவரசர் அமைதியாக இருப்பது நல்லது என்ற அவர்களின் முடிவை குந்தவை ஒப்புக்கொள்ள, வந்தியத்தேவனைப் பாதாளச் சிறையில் சென்று பார்த்துவிட்டாவது வரலாம் என்று அனைவரும் முடிவு செய்து மணிமேகலையுடன் கிளம்பினர். அங்கு சென்று பார்த்தபொழுது வைத்தியர் மகன் பினாகபாணி மட்டுமே இருந்தான். வைத்தியர் மகன் பழையாறையில் வந்தியத்தேவனால் அவமானப்படுத்தப்பட்ட பிறகு முதன்மந்திரி அநிருத்தரிடம் சென்றான். முன்னொரு சமயம் அவன் பாதாளச்சிறையில் இருந்தபொழுது பக்கத்துச் சிறையில் இருந்த பைத்தியக்காரன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டவனுக்கு இலங்கையில் பாண்டிய நாட்டு ரத்தினஹாரம் மற்றும் மணிமகுடம் இருக்குமிடம் குறித்தும் சோழகுலத்துப் பட்டத்து வாரிசு ஒருவரின் பிறப்பு ரகசியம் குறித்தும் தெரியும் என்றும் தன்னை விடுதலை செய்தால் அதைச் சொல்வதாகவும் தன்னிடம் கூறியதாகச் சொன்னான். அநிருத்தர் அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக  சேனாதிபதியிடமிருந்து விடுதலை உத்தரவை வாங்கி அளிக்க, அதை எடுத்துக்கொண்டு பினாகபாணி பாதாளச் சிறையை அடைந்தான். அங்கு பக்கத்தில் இருந்த வந்தியத்தேவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து இழுக்காகப் பேசிவிட்டு, அந்த ரகசியம் அறிந்த பைத்தியக்காரனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். தானே அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் நல்லது எனக் கேட்டுக்கொண்டிருந்தவனை, பக்கத்து அறையிலிருந்து சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு வந்த வந்தியத்தேவன், அடித்துக் கட்டிப் போட்டான். வந்தியத்தேவன் பைத்தியக்காரனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறி பினாகபாணி, பொன்னியின் செல்வர் முதலானவர்களிடம் அழுதான். கடம்பூரில் இருந்து வந்தியத்தேவனைக் கட்டி இழுத்துவந்தபோது, அவனுக்கு தீக்காயங்களாலும் தன் எஜமானனுடைய மரணத்தைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியாலும் பெரிதும் மயங்கிய நிலையிலேயே தஞ்சைக்கு வந்தான். அவன்மீது இளவரசரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்திப் பாதாளச்சிறையில் அடைத்திருந்தார்கள்.  அப்போது பக்கத்துச் சிறை அறையிலிருந்த பைத்தியக்காரன் என்று தன்னை சொல்லிக்கொண்டவன், பினாகபாணி தன்னை விடுவிக்கப் போவதாகக் கூறவும், இருவரும் திட்டம் தீட்டி அவனைக் கட்டிப்போட்டுவிட்டு பினாகபாணி போல வந்தியத்தேவன் உடுத்திக்கொண்டு வாசலில் காத்திருக்கும் அநிருத்தரின் ஆட்களுடன் வெளியே சென்றனர். வழியில் பொன்னியின் செல்வர், குந்தவை, மணிமேகலை, வானதி, சேனாதிபதி என அனைவரும் எதிரே வர, தன்னைப் பார்க்கத்தான் போகிறார்கள் என அறியாத வந்தியத்தேவன் அவர்கள் கண்ணில் பட்டுவிடாமல் நின்றுகொண்டான். இவ்வளவு அருகிலிருந்தும் யாரிடமும் அணுகி உதவி கேட்க முடியவில்லையே என மருகினான். பின்னர் அநிருத்தரின் ஆட்களிடமிருந்தும் தப்பி, பைத்தியக்காரனும் வந்தியத்தேவனும் முன் பழுவூர் ராணியைச் சந்தித்த பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில், அதே வழியில் சென்று மதிலேறிக் குதித்து மறைந்துகொண்டனர். இருண்டபின்னேதான் சுரங்கப் பாதையை அடைய முடியுமென்பதால், மறைந்து உட்கார்ந்திருந்தபோது வந்தியத்தேவன் அந்தப் பைத்தியக்காரனின் கதையைக் கேட்டான். அவன் பெயர் கருத்திருமன். கருத்திருமன் ஒரு படகோட்டி. ஒருநாள் கலங்கரை விளக்கத்திலிருந்து கீழே விழுந்த, புத்தி சுவாதீனமற்று இருந்த ஊமைப் பெண்ணொருத்தியைக் கருத்திருமன் காப்பாற்றினான். அவளை ஈழ நாட்டில் விட்டு வரும்படி சோழ நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதால், ஓடத்தில் ஏற்றிக் கூட்டிப் போனான். வழியில் இன்னொரு மனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது. அவர் பாண்டிய அரசர் என்று தெரிந்தது. பின்னர் பாண்டிய அரசர், இலங்கை அரசன் மகிந்தனுக்கு, கருத்திருமன் மூலம் ஓலை கொடுத்தனுப்பினார். மகிந்தன் பாண்டியனுக்கு அடைக்கலம் அளித்தான். பாண்டியனின் தந்தை முன்பு, இலங்கையில் தங்கள் குலத்தின் புராதன ரத்தினஹாரத்தையும் மணிமகுடத்தையும் மறைத்து வைத்திருந்த இடத்தையும் கருத்திருமன் பார்த்துக்கொண்டான். பின்னர் பாண்டியருடன் ஊர் திரும்பியபின் அந்த  ஊமைப் பெண்ணை, கோடியக்கரையில் அவளது சகோதரியான வாணியுடன் பார்த்து அதிர்ச்சியுற்றான். அப்போது அந்தப் பெண் கருவுற்று இருந்தாள்.  அவர்களின் தமையனாரான கலங்கரை விளக்கக் காவலர் தியாகவிடங்கரின் வீட்டில் இரு சகோதரிகளும் இருந்தனர். மந்தாகினியின் தங்கையான வாணியின் மீது ஆசைப்பட்டுத் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது, கோடியக்கரை குழகர் கோயிலுக்கு வந்த செம்பியன் மாதேவி, அக்கா தங்கை இருவரையும் தன்னுடனே அழைத்துச் சென்றதால், வருந்தி பாண்டிய நாட்டுக்கே கருத்திருமன் சென்றுவிட்டான். பாண்டிய அரசர் நாட்டை மீட்கும் முயற்சியில் இருந்தார். அவரைச் சந்தித்தபோது, அவர் அந்த ஊமைப்பெண்ணை முடிந்தால் கூட்டி வரும்படி கூறினார். பழையாறையில்  வாணியைச் சந்திக்கச் செல்லும்போது அவள் ஒரு குழந்தையைப் புதைக்க முயன்றுகொண்டிருந்தாள். அவளுக்குக் கேட்கும் திறன் இல்லாததால், குழந்தை அழுததைக்கூடக் கேட்க இயலாமல் இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்திருந்தாள். பின்னர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதாகவும் கூறித் தன் கதையை முடித்தான். வந்தியத்தேவனுக்கு இப்போது அந்தக் குழந்தையைப் பற்றிய எல்லா உண்மையும் புரிந்துபோனது. அதற்குள் இருட்டிவிட, இருவரும் சுரங்கப்பாதை வழியே சென்று, சில பொற்காசுகளையும் நிலவறையிலிருந்து எடுத்துக்கொண்டு கோட்டையை விட்டு வெளியேறினர். அப்போது நதியில் ஒரு ஓடம் கட்டிப் போடப்பட்டிருந்ததைக் கண்டு அருகே செல்ல, மறைவிலிருந்து சிலர் வந்து வந்தியத்தேவனைத் தாக்கி ஓடத்துடன் கட்டிப் போட்டனர். தன்னை கட்டிப்போட்டது ஆழ்வார்க்கடியான்தான் எனத் தெரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனைத் திருப்பித் தாக்கிப் படகில் கட்டிப்போட்டான். முதன்மந்திரியிடம் கொண்டுபோவதற்காகவே தன்னைத் தாக்கினான் என்பதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், தாங்கள் இருவரும் ஈழத்துக்குத் தப்பிபோவதாகவும் அதற்கு இரண்டு குதிரைகள் எங்கு கிடைக்கும் எனவும் ஆழ்வார்க்கடியானிடம் கேட்டான். பெரிய பழுவேட்டரையரை அழைத்துக்கொண்டு வரும்போது, சேந்தன் அமுதன் குதிரையிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு அவனது குடிசையில் படுத்துக் கிடப்பதாகவும் அவனைப் பூங்குழலியும் வாணி அம்மையாரும் பார்த்துக்கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறி, அங்கு சென்றால் அந்தக் குதிரைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். அப்போது கருத்திருமன், சேந்தன் அமுதனுக்கு அடிபட்ட விஷயம் செம்பியன் மாதேவியாருக்குத் தெரியுமா என்றும் கேட்டுக்கொண்டான். பின் இருவரும் அங்கு செல்லத் தொடங்கினர். பூங்குழலி, அடிப்பட்டிருந்த சேந்தன் அமுதனுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருந்தாள். சேந்தன் அமுதன், தனக்குக் குணமாகிவிட்டால் பூங்குழலி தன்னை விட்டுப் போய்விடுவாள் என்பதால், தான் குணமாக விரும்பவில்லை என்று கூற, பூங்குழலி நெகிழ்ந்தாள். பூங்குழலிக்கு அருள்மொழிவர்மர் மேல் அன்பிருப்பதைப் பற்றி அவன் வினவ, வானதியே அவருக்கு உரியவள் என்றும் தன் அத்தைக்குக் கிடைக்காத சிங்காதனத்தின் மேல் எனக்கு  ஆசை ஏற்பட்டது என்றும் கூறினாள். சேந்தன் அமுதனை அத்தகைய வீரதீரப் பராக்கிரமச் செயல்களைச் செய்யுமாறு கேட்க, அவன் மறுத்து சிவத்தொண்டு செய்வதே தன் வாழ்வின் லட்சியம் எனக் கூறினான். தன் பதவி ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு, சேந்தன் அமுதனையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகப்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 5

6. மகாபாரதத் திருமணங்களில் ‘சமூக ஒப்பந்தம்’ இருந்ததா? இன்றைய சட்டங்களின்படி வேறொரு தம்பதிக்குப் பிறந்த குழந்தையை ஒருவர் தத்து எடுத்துக்கொள்ள முடியுமே தவிர, தன் மனைவிக்கு வேறொரு ஆண்மூலம் தனது சம்மதத்துடன் பிறந்த குழந்தையைத் தத்து எடுக்க முடியாது. மகாபாரதக் காலத்தில் நடந்ததையே பாருங்களேன்..! கர்ணன் பாண்டுவின் மகனும் அல்ல; பாண்டுவின் வாரிசும் அல்ல; அதனால் ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை உள்ளவனும் அல்ல. அதேபோல் அவன் மகனுக்கும் முடிசூட்டிக்கொள்ள உரிமையில்லை. மகாபாரதக் காலத்தில் நடைமுறையில் இருந்த இந்தச் சட்டங்களில் ஜாதி அல்லது குலம் எவ்வளவு பெரிய பங்கு வகித்திருக்கிறது என்பதை, கர்ணனும் விருஷகேதுவும் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள். அதாவது, தாய்வழியில் கர்ணன் க்ஷத்திரியன் என்றாலும் பாண்டுவின் புதல்வன் என்ற அங்கீகாரம் அவனுக்குத் தரப்படவில்லை. கர்ணனின் புதல்வன் என்றாலும் தாய் சூத்திரக் குலத்தில் வந்ததால் விருஷகேதுவுக்கும் பீஷ்மர் அங்கீகாரம் தரவில்லை. இது சரி என்றால், விசித்திர வீரியன் மீனவப் பெண்ணின் புதல்வன் ஆயிற்றே..! அவனுக்கு எப்படி அரச பதவி கிடைத்தது  என்ற பெரிய கேள்வி வருகிறது. அதை பீஷ்மரே அங்கீகரித்தும் இருக்கிறார். பீஷ்மரின் இயற்பெயர் தேவவிரதன். அவர் கங்காதேவிக்குப் பிறந்த எட்டாவது மகன். பீஷ்மரின் தந்தையின் பெயர் சந்தனு. சந்தனு அவள் கங்கை என்று அறியாமல் கங்காதேவி மேல் காதல் கொள்கிறான். கங்காதேவியும் திருமணத்திற்குச் சம்மதித்ததால் அவள் சந்தனுவின் முதல் மனைவியானாள். ஆனால் திருமணத்தின்போது கங்காதேவி,  சந்தனு மகாராஜனுக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறாள். தன்னை ‘யார்’ என்று சந்தனு மகாராஜன் ஒருபோதும் கேட்கக்கூடாது என்பது அதில் முதல் நிபந்தனை.  தான் என்ன செய்தாலும் ‘ஏன் செய்கிறாய்’ என்று கேட்கக் கூடாது என்பது இரண்டாவது நிபந்தனை. மோகத் தீயில் கொதித்துக்கொண்டிருந்த சந்தனு மகாராஜன், அந்த இரண்டு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு கங்காதேவியை, அவள் கங்காதேவி என்று அறியாமலேயே திருமணம் செய்துகொண்டான். சந்தனு மகாராஜனுக்கும் கங்கா தேவிக்கும் எட்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. முதல் குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தையை கங்காதேவி கங்கையில் கொண்டுபோய் வீசி மூழ்கடித்துக் கொன்றுவிட்டாள். சந்தனு மகாராஜனால் அதுபற்றி எதுவும் கங்காதேவியிடம் கேட்கமுடியவில்லை. அமைதியாக இருந்துவிட்டான். அதேபோல தொடர்ந்து பிறந்த இதர ஆறு குழந்தைகளையும் கங்காதேவி கங்கையில் வீசிக் கொன்றுவிட்டாள். சந்தனு மகாராஜனால் எதுவும் கேட்க முடியவில்லை. கடைசியாக எட்டாவது குழந்தை பிறந்த பின்பு  அதையும் கொல்வதற்கு கங்காதேவி குழந்தையை எடுத்துக்கொண்டு கங்கைக் கரைக்குக் கிளம்பியபோது, சந்தனு மகாராஜனால் முன்போல அமைதியாக இருக்க முடியவில்லை. ‘நீ யார்? ஏன் குழந்தைகளைக் கொல்கிறாய்?’ என்று சந்தனு  மகாராஜன்,  நிபந்தனையை மீறி கங்காதேவியைக் கேட்டுவிட்டான். கங்காதேவி சொன்னாள், ‘நான்தான் அமிர்தமாய் ஓடும்  கங்கை; நான் ஒரு சாபத்தால் மானுட வடிவத்தில் இருக்கிறேன்; இதுவரை நான் கொன்ற என் ஏழு மகன்களும் அஷ்ட வசுக்கள்; வசிட்ட முனிவரின் பசுவை அவர்கள் கவர்ந்துபோனதால் அஷ்ட வசுக்களை பூமியில் மனிதர்களாகப் பிறந்து வாடும்படி வசிட்ட முனிவர் சாபமிட்டார். (மனிதனாகப் பிறப்பதே இந்த ரிஷிகளுக்கு ஒரு தண்டனையாகத் தெரிவது வேடிக்கையான விஷயம்). பயந்துபோன அஷ்டவசுக்கள் தங்களால் மனிதர்களாகப் பிறந்து வாடமுடியாது என்றும் சாபத்தைத் திரும்பப் பெறும்படியும் வசிட்ட முனிவரைக் கெஞ்சினார்கள். மனமிரங்கிய வசிட்ட முனிவர், ‘எட்டு அஷ்டவசுக்களாகிய உங்களில் ஏழு பேர் மட்டும் பிறந்ததும் இறந்து சாப விமோசனம் பெற்றுவிடுவீர்கள்; ஆனால் பசுவைக் கவர்ந்துபோன எட்டாவது அஷ்டவசுவான பிரபாஸ் மட்டும் மனிதனாகப் பிறந்து நீண்ட காலம் வாழ்ந்த பின்புதான் மரணமடைய வேண்டும்’ என்று சாபத்தை மாற்றினார். அஷ்டவசுக்கள் என்னிடம் வந்து தன்னை அவர்களுடைய தாயாக இருக்கும்படியும் அதில் தங்களில் ஏழு பேரைப் பிறந்தவுடன் கங்கையில் வீசிக் கொன்று சாப விமோசனம் அளிக்கும்படியும் எட்டாவது அஷ்டவசுவை மட்டும் கொல்லாமல் வளர்த்து ஆளாக்கும்படியும் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, நான் எனக்குப் பிறந்த ஏழு அஷ்டவசுக்களைக் கொன்று அவர்களுக்கு சாபவிமோசனம் கொடுத்தேன். எட்டாவது மகனாகப் பிறந்த இந்த அஷ்டவசுவைக் கொல்லமாட்டேன். நானே வளர்த்து மாபெரும் ஆளுமையாக்கி, தக்க நேரத்தில் அவனை உன்னிடம் ஒப்படைப்பேன்’ என்று சொல்லிவிட்டு மகனை அழைத்துக்கொண்டு போய்விட்டாள். கங்காதேவிக்கும் சந்தனு மகாராஜனுக்கும் இடையே நடந்த திருமணத்திலும்  ஒரு சட்டப் பிரச்சனை இருக்கிறது. பாரதக் கலாச்சாரத்தின்படி, திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் புனிதமான செயல் என்பார்களே.. பாரதக் கலாச்சாரத் திருமணத்தை மேலை நாட்டினரைப் போல ‘சமூக ஒப்பந்தம்’ (Social Contract) என்று ஒப்புக்கொள்வது இல்லை.  துல்லியமாகச் சொல்லப்போனால் பெண்களுக்கு ஆன்மா என்று ஒன்று இருப்பதையே மனு சாத்திரம் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் கணவன் இறந்தபின்பு மனைவியைக் கணவனின் சிதையில் அமர வைத்து அவனுடனே தீயில் கொளுத்திப் பஸ்பமாக்கி, சதிமாதா என்று கோயில் கட்டி வணங்கினார்கள்.  அதனால் ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருத்தியல்  பாரதீயக் கலாச்சாரத்திற்கு எதிரானது.  ஆனால் கங்காதேவி விஷயத்தில் கங்காதேவி விதித்த நிபந்தனைகளை சந்தனு மகாராஜா ஏற்றுக்கொண்ட பின்புதான் கங்காதேவி திருமணத்திற்கே உடன்படுகிறாள். தான் யாரென்பதை வெளிக்காட்டாமலேயே சந்தனு மகாராஜனுடன் குடும்பம் நடத்துகிறாள். ஏழு குழந்தைகளைக் கங்கையில் வீசிக் கொல்கிறாள். அதுபற்றி சந்தனு மகாராஜன் கேள்வி கேட்டதும் தன்னை கங்காதேவி என்று வெளிப்படுத்திவிட்டுப் பிரிந்து போய்விடுகிறாள். இது மகாபாரதத்தில் வேறு எந்தப் பெண் பாத்திரத்திற்கும் கிடைக்காத சுதந்திரம்.  ‘சமூக ஒப்பந்தம்’ என்ற கருத்தியலில் விவாகரத்து என்ற உரிமை ரகசியமாக உள்ளடங்கியுள்ளது என்பதைக் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. மகாபாரதத்தில் உள்ள விதிவிலக்கான நிகழ்ச்சி இது.  இதுதான் அப்போதைய சட்டவிதி என்று சொல்லமுடியாது. இது தாளமுடியாத மோகத்தின் காரணமாக அப்சரஸ் போன்ற ஒரு அழகியின் நிபந்தனைக்கெல்லாம் ஒரு மன்னன் கட்டுப்பட்டு நடந்ததைக் காட்டும் வித்தியாசமான நிகழ்ச்சி. இந்த தேவவிரதன் செய்த மகத்தான சபதத்தால் மகாபாரத வாரிசுரிமை மீனவப் பெண்ணின் மகனுக்கு போனது. (அதை வரும் சனிக்கிழமை பார்க்கலாம்)

மனிதத் தொழிற்சாலைகள்

மனிதத் தொழிற்சாலைகள்

மொழிபெயர்ப்புக் கவிதை நாட்கள்… ஒருவேளை அவற்றில் பலவகை இருக்கலாம்ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும், சகோதரி டுமல்ட்? என் கடிதம், நானே செய்த அசைந்தாடும் நாற்காலி, என் வீணை எதுவுமே உனக்குக் கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது உன் வெளிச்சத்தில் என்குடியிருப்பை நிறுவ நான் விரும்பினேன்என்னுடைய ஒளிக்கீற்றுகளின் இருப்பை நீஅடையாளம் காணவில்லை என்கிறாயா? எனில், நிச்சயமாக எங்கோ ஒருதவறு நிகழந்திருக்க வேண்டும் நகரத்தின் பொழுதுபோக்கு மையத்தில்நீச்சல் குளத்தின் அருகேஉன் குழந்தையுடன் நீநடமாடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,ஒருமுறை நாம் அதே நீச்சலுடை அணிந்தோம்ஆனால் இப்போதுநம் கனவு தரிசனங்களின் குவிப்பில்சிறு விலகல் நடந்துள்ளது தோட்டத்து மண்நரியின் கால்தடம் பதிந்ததைப் போலதொடுவதற்கு சூடாக இருக்கிறது எங்கள் நடுத்தர நகரத்தை நான் பின்தொடர்ந்தேன்ஒரு வால்கிரீன்ஸில் நம் பாதை பிளவுபட்டபோதுவிக்டோரியன் துப்பறியும் நபரைப் போலகிரினோலின் ஆடையுடனும் குழைந்த இன் சொற்களுடனும்என் அடிச்சுவடுகளை நான் திரும்பப் பெற்றுக்கொண்டேன் ஆனால் இதோ, சகோதரி டுமல்ட்,நிழல்கள் என் பருத்த கைகளில் இறங்குகின்றனஎன் மார்பகங்களை இழுத்த குழந்தைகளைநான் நினைவில் வைத்திருக்கிறேன் எங்கள் வியர்வையும் பாலும்கலந்தே இருக்கின்றன

அகப்படாத ஒன்று

அகப்படாத ஒன்று

சிறுகதை சில மாதங்களாக இப்படித் தூக்கமில்லாமல் தவிப்பது, பெரும் ரோதனையாகவே பட்டது. வாழ்க்கை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று தெரியாமல், கண்களை இறுக்கிக் கட்டிவிட்டதுபோல் அல்லாடியது மனது. ஏதோவொரு கோபம். பல நினைவுகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, அவை ஏளனமாகச் சிரிக்கும்போதெல்லாம் அறைக்குள்ளிருக்கும் டேபிள், முகம் பார்க்கும் கண்ணாடி, டம்ளர், தலகாணி, போர்வையென்று, கையில் கிடைக்கும் பொருட்களெல்லாம் தூக்கியெறியப்படும். அதில் ஒருசில மதுபாட்டில்களும் அடங்கும். முன்பைவிடவும் இப்போதெல்லாம் பாட்டில்கள் அதிகமாகச் சிதறுகின்றன. அதொருவகையில் ஆறுதல் கொடுத்தாலும் போதாமையாகவே ஆட்டிப் படைக்கிறது. சத்தம் போட்டு ‘ஓ..’வென்று கத்த வேண்டும்; அலற வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை. தன்னுடைய இருக்கைகளையும் மூர்க்கத்தனமாக இறுக்கிக்கொண்டான். விரல்கள் சுடக்கு விட்டுக்கொண்டன. நடுராத்திரியில் ஏன் இவன் வெறி பிடித்தவனாகக் கத்துகிறான் என்று எண்ணி பக்கத்து அறையிலிருந்து ஆட்கள் வந்தால் என்ன செய்வது – சொல்வது? தன் நடவடிக்கையின் மீது யாருக்காவது சந்தேகம் வந்துவிடுமோ? என்கிற பயம், உள்ளூர பூதமாகவே வளர்ந்து, விரவிக்கிடக்கிறது. பேய் பிடித்ததுபோல், கட்டிலில்மேல் எழுந்து நின்றான். பின் சம்மணம் போட்டு உட்கார்கிறான். கால்நீட்டி மல்லாக்கப் படுத்துக்கொள்கிறான். திரும்பவும் எழுந்து உட்கார்கிறான்; நிற்கிறான். ஏதோ சைகை செய்து, தனக்குத்தானே பேசிக்கொள்கிறான். சன்னலுக்கருகில் வந்து வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்துத் திகைக்கிறான்; சிரிக்கிறான். அதொரு அற்புதமான இயற்கைச்சூழல் மிகுந்த மலைப்பகுதி. கிராமப்புறக் குடியிருப்பு என்றாலும் இருட்டு – சுடுகாட்டுத்தனமான அமைதி – இரவு நேரங்களில் மட்டும் அதற்கு அடிமையாகிப் போகிறான். ஆங்காங்கே, தெருவில் நடபட்டிருக்கும் சிற்சில போஸ்ட் விளக்குகள் மட்டும் மஞ்சள் நிற வெளிச்சத்தை வெளிக்காட்டிக்கொண்டாலும் அதெல்லாம் அவன் மூளையில், பிணத்தை எரிக்கும்போது மேலெழும்பும் கருஞ்சிவப்பு மஞ்சள் நிற தீ ஜுவாலையாகத்தான் பீடித்திருந்தது. அப்பீடித்தலின் காட்சிக்குள் மூழ்கிப்போனதால், உடல் முழுவதும் வியர்த்தொழுகியது. கண்கள், முகமென்று வடிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, மீண்டும் – மீண்டும் அதே காட்சியை அழுந்தப் பார்த்தான். வெளிச்சத்தில் தெரிந்த மரங்கள், தற்சமயம் பெண்களாக மாறிக்கொண்டன. அந்தப் பெண்கள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். அதற்குப் பதிலாக அவனும் சிரிக்கிறான். சிரித்துக்கொண்டே அழவும் – பின் சிரிப்பும். இதே நிகழ்வுதான் மாறி மாறி நகர்கிறது, சிலமணி நேரமாக. அதில் இடம்பெறும் எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. வெவ்வேறு வயது வித்தியாசத்தில், வெவ்வேறு முக அடையாளத்தில், தோள், நிறம், சிரிப்பு, கோபம், முகபாவனைகளைக் காட்டும் விதம், தோற்றம் என்று வகைப்படுத்தித் தோன்றினாலும் அவர்களெல்லாம் ஒருவருக்கொருவர் எந்தவொரு உறவோ, தொடர்போ கொண்டவர்கள் இல்லை. ஆனால், அப்பெண்களெல்லாம் அவனுக்கு ஒருவகையில் தெரிந்த, பழகிய முகங்களாகவே உணர்வுகளுக்குள் ஊடுருவியிருந்தார்கள். அதில், முதலில் நிற்பவளின் பெயர் செரின். அவளைப் பற்றி நிறையவே சொல்லியாக வேண்டும். அவள் வசித்த ஊரில் பிரச்சனை இருந்திருக்கிறது போலும். எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே குடிவந்து விட்டார்கள். அவன் வீட்டிற்கு நேரெதிர் வீடுதான். அவளை முதன் முதலில் சந்தித்தது, அந்த மெடிக்கல் ஷாப்பில்தான். ஏதோ வாய்க்குள் நுழையாத பெயர்கொண்ட மாத்திரைகளை வாங்கிக்கொண்டிருந்தாள். பார்த்தவுடன் ஒரு மெல்லிய மென்முறுவல். அவ்வளவுதான், நகர்ந்துவிட்டாள்.அதன் பின்பு ஒருவாரம் கண்ணில் படவில்லை. திடீரென்று ஒருநாள் அவளே நேரடியாக வந்து பேசினாள். “ஒரு வாரமா என்னைத் தேடுனீங்களோ?” “இல்லையே.. அப்டிலாம் ஒன்னுமில்லை. யாரு சொன்னது?” “யாருமில்ல. ஆனா உங்க மொகத்தப் பாத்தா உண்மைய முழுங்குன மாரிலாயிருக்கு..” இப்படிக் கேட்டவளிடத்தில், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், அவளின் முகத்தை நேராகப் பார்க்காமல் தவிர்த்திருந்தான். “திரும்பிட்டா என்ன அர்த்தம்?” என்று சொல்லிக்கொண்டே நெருக்கத்தில் வந்திருந்தாள். அவன் மௌனமாக நின்றிருந்தான். அந்த மௌனத்திற்கு விடை எங்கு ஒளிந்துகொண்டிருக்கும்? அதைத் தேடிப் பிடிப்பதற்குள், வலது கையை இறுக்கிப் பிடித்திருந்தாள். உடல் சிலுப்பிக் கொண்டது. மென்மையான குளிர்ந்த உள்ளங்கைகள், அவனது ரோமங்களை விளையாடிப் பார்க்க அழைப்பு விடுப்பதுபோல் அரவணைத்திருந்தது. “இதுதான் உங்களுக்கு ஃபஸ்ட் டைமா?” அந்தச் சிலிர்ப்பிலிருந்து இன்னும் விடுபடாதவனாகவே, அக்குளிரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். பேசாமல், நடுரோட்டில் ஒரு மூலையில், மரத்துக்கடியில் நின்றுபேசுவது எதுவும் சரியிருக்காதென்று, விறுவிறுவென அவளின் வீட்டிற்கே அழைத்துச் சென்றாள். அய்ந்தாயிரம் கொடுக்கும் அளவிற்கு நடுத்தரமான வீடுதான். தைரியமாக அழைத்துவரும்போதே வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்தது உண்மையாகவே இருந்தது. உள்ளே வந்ததும் மேலே போட்டிருந்த ஷாலைக் கழட்டி எறிந்துவிட்டாள். “இந்தச் சேர்ல உட்காரு. நான் இப்பம் வந்துர்றன்” என்று சொல்லிவிட்டு நேராக பெட்ரூமிற்குச் சென்றாள். முதல்முறை என்பதால், ஓர் அச்சம் கலந்த பதற்றம் உள்ளூர ஊறிக்கொண்டே முட்டி மொனங்கியது. “நீ இப்பம் எங்க போற?” என்று கேட்டதற்கு, “ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாறன். நீ வேணா டிவி போட்டு பாத்துட்டு இரு” என்று சொன்னவளுக்கு, கதவைப் பூட்ட வேண்டுமென்ற நியாபகம் வரவில்லை. அவன் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கதவை ‘டமால்’ என்று சத்தத்துடன் அழுந்தத் தள்ளிவிட்டுச் சென்றாள். ‘எதுக்கிப்படி தேவையில்லாம கதவ ஓங்கி அடைக்கணும்?’ திரும்பிப் பார்த்தவனுக்கு, அச்சிறிய இடைவெளியில் எல்லையில்லா ஓர் ஆனந்தக் கிளுகிளுப்பு உடலில் தொற்றிக்கொண்டது. ஓர் இளம் பெண்ணை அரைநிர்வாணமாகப் பார்த்தது அதுவே முதல்முறை. கண்ணாடியின் முன் தன்னழகை ரசித்துக் கொண்டாள். நீளமான கருநிறக் கூந்தலைக் கலைத்துக் கோதிவிட்டு, ஒவ்வொன்றாகத் தன் ஆடைகளைக் களைந்தாள். ஜீவா தன்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறான் என்பதைத் தனக்கு முன்னாலிருக்கும் கண்ணாடியின் வழியாக பார்த்துத் தெரிந்துகொண்டாள். இதுபோதும் என்றவளுக்கு, தன் மேனியைப் பலவாறு நெளித்து, கோவில்களில் வடித்திருக்கும் சிற்பங்களின் இணக்க நெளிவுகளையெல்லாம் தன் மேனிக்குள் கொண்டுவந்திருந்தாள். அதொருவிதமான நிர்வாண நடனமாகவே காட்சிப்படுத்தியிருந்தது. ஒரேயடியாக, நேரே சென்று லேசாகத் திறந்திருந்த கதவை முழுமையாகத் திறந்து அந்நடனத்தில் தானும் பங்கெடுத்துக் களைப்படைய வேண்டும்; அவளை இறுக்கியணைத்து, அகல விரிந்த முதுகினை நுனி நாவால் வருடி, காதுமடல், கழுத்துப்பகுதியை வெடுக்கென்று ஆப்பிளைக் கடித்துச் சுவைப்பதுபோல் சுவைக்க வேண்டும்; ஒடுங்கிய இடைமடிப்பு மட்டுமல்லாது, மேல் ஏறியிருந்த பிட்டமும் வெகுவாக நிலைகுலைய வைத்தது. ஆனால், அவனால் ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கமுடியவில்லை. பதற்றம் கலந்த ஒருவித பயம், நிலை தடுமாற வைத்தது. அது ஏன் என்றும் அவனுக்கு விளங்கவில்லை. அவள் கழட்டிப் போட்ட ஷாலை மடியில் வைத்து அமுக்கிக்கொண்டான். சிறிது நேரத்தில் ஈரமாகிப் போனது மட்டுமல்லாமல், என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. அங்கிருந்து கிளம்பிவிட்டான். மறுநாள் காலையில் ஓர் ஆர்வத்தோடு வாசலைப் பார்த்தே, கண்கள் தவம் கிடந்தன. ஒரு பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டு மாடிக்குச் சென்றால், எதிர் வீட்டின் வாசல் அழகாய்த் தென்படும். காலை மற்றும் மாலையில்தான் தலை காட்டுவாள். அவள் வீட்டின் மாடியிலும் தோட்டம் போட்டிருந்தார்கள். அது ஏற்கனவே முன்னிருந்தவர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தது. செடிக்குத் தண்ணீர் ஊற்றி, கொஞ்சநேரம் அக்காலைப் பொழுதை இதமானக் காற்றோடு அனுபவிக்க இசைவாள். அப்போது, செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டே, ஓரக் கண்ணால் பார்த்தும் பார்க்காததுபோல் பார்த்துவிட்டு நகர்வாள். அவனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. மனத்தில் கதாநாயகனாகவே உருவகித்துக் கொள்வான். அவளும் ஓரக்கண்ணால் பட்டும் படாமலும் சிரிக்கும் விதமென்று, ஓர் ஆழமான எண்ணவோட்டத்தையே, பெரும் ஆலமரமாக உரம்போட்டு வளர்க்கத் தொடங்கினான். அவளுக்கும் தன்னைப் பிடித்திருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாலும், தான் அப்படிச் செய்திருக்கக்கூடாது. வெளியேயும் வந்திருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். கதவினைத் திறந்துகொண்டு, வசந்தகாலத்தில் தன் மூர்க்கத்தனங்களையெல்லாம் வெளிக்காட்டி, பயம், பதற்றத்தைத் தூக்கி எறிந்திருக்க வேண்டும். இருந்தாலும் ஒரு சந்தேக மனநிலை வந்திருக்கிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களில்தான் சந்தித்திருக்கிறோம். பார்வைகள் ஏராளம். பேச்சுவார்த்தைகூட அந்தளவிற்கு நீளாத காலம். அப்படியிருக்கையில், எடுத்தவுடனே இந்த நடவடிக்கைக்கெல்லாம் உடன்படுவது, சற்று கலக்கத்தையே கொடுத்தது எனலாம். தொடக்கத்தில் அவளைப் பார்த்தவுடன், திருமணம் செய்துகொண்டு நிம்மதியான வாழ்க்கையினை வாழ வேண்டும் என மனத்திற்குள் திட்டம் தீட்டியிருந்தான். அந்தத் தீட்டலே அவனை ஒரு நிமிடம் தடுத்து நிறுத்தியது. தடுத்து நிறுத்துதலுக்குப் பின்னாகப் பல நெறிமுறைக் காரண வழியினைக் கடைபிடித்திருந்தான். நான் இப்படித்தான் இருக்க வேண்டும். எனக்காக ஒருத்தி இவ்வுலகில் காத்துக்கொண்டிருப்பாள். அவளின் மனத்தை நான் காயப்படுத்துவது, ஏற்றுக்கொள்ளமுடியாத வடுவாகவே படிமமாகிப் போய்விடும். அப்படிமம் என் வாழ்நாளை நிம்மதியில்லாமல் அலைக்கழிக்கும். மனபாரமாகச் சுரண்டிக்கொண்டேயிருக்கும். இரண்டு வாரத்திற்குள்ளே இதெல்லாம் நடந்திருப்பதுதான் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவள் பார்த்த பார்வை, நடந்துகொண்ட விதம், எல்லாமே மாயக் கனவாகவே, தினமும் இரவுகளில் எட்டிப் பார்த்துச் செல்லும். நல்லவேளை, தப்புத்தண்டாவிற்கு இடம் கொடுக்கவில்லை. எனக்காக, என் வாழ்க்கையில் பகிரயிருப்பவளுக்கு நேர்மையாக, அவ்வீட்டிலிருந்து வெளியேறியது மகிழ்ச்சியென்று ஒருபுறம் நினைத்தாலும், நீண்ட இடைவெளிக்குப்பின், செடிகளைக் காண வந்திருந்தவளைக் காண நேர்ந்தது. ஏனோ பூக்களெல்லாம் வாடிப்போய் கிடந்தன. தலை நிமிரவே இல்லை. தினமும் சூரியனைப் பார்த்து, இதமாக உடல் ரோமங்களை முத்தமிடும் தென்றலை உள்வாங்கி, யோகாசனமெல்லாம் செய்வாள். இன்று அக்காட்சி விடுமுறையாக மாறிப்போனது. வேகவேகமாக எல்லாவற்றிற்கும் ஊற்றிவிட்டுப் படிகளில் இறங்கும்போது, நான் மாடியில் இருப்பேனென்று முழுமையாகத் தன் முகத்தைத் திருப்பிக் காட்டினாள். ‘குற்றவுணர்ச்சி கலந்த கோபக் கனல் முகத்தில் பயங்கரமாகக் காட்சிக்கொடுத்தது. அந்தப் பார்வையை மனத்திற்குள் உள்வாங்க முடியாமல், சீரணிக்க முடியாமல் தலை குனிந்து தவித்துப்போனான். பெரும் குற்றமொன்றைச் செய்துவிட்டதாக மனம் இப்போது பதபதைத்து என்ன பயன்? என்னைத் தவறாக நினைத்திருப்பாளோ? இல்லை; அப்படியொன்றும் நினைத்திருக்கமாட்டாள். ஒருவேளை நினைத்திருக்கலாம். மாறி மாறித் தோன்றக்கூடிய சிந்தனைகளெல்லாம் அவனைத் தனியாக நின்று பேசிக்கொள்ளும் செயலைத் செய்யத் தூண்டின. குழப்பம் முழுமையாக அவனை ஆக்ரமித்திருந்தது.இந்நேரத்தில் சுகுமாரும் உடனில்லை. அவனிடம் சொல்லியாவது, இதற்கு விடையை எதிர்பார்த்திருக்கலாம். அவன் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை. இந்தக் கல்லூரி அப்பாவிற்கு செட்டாகவில்லை என்பதால் சொந்த ஊருக்கே செல்லவிருப்பதாகவும் அங்கிருக்கும் கல்லூரியொன்றில் அப்பாவுக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் போனில் முன்பு சொல்லியிருந்தான். அந்நம்பரைத் தொடர்புகொண்டால் எந்த பதிலும் இல்லை. முயற்சி வீணென்றாகிப்போனது.•அடுத்த நாள் அதிகாலையிலேயே பெரிய வண்டியொன்று தெருவில் சத்தம்போட்டுச் சென்றதைக் காதுகள் உணர்ந்துகொண்டாலும் எழும்பாமலேயே கிடந்தவன், போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான். தூக்கம் வரவில்லை. அவளை எப்போது பார்க்கிறேனோ அப்போது, மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும். ‘ஐயம் வெரி சாரி. எனக்கு இதுதான் முதல் தடவ. அதான்’ என்று சொல்லிவிடலாம். ஆனால் அதற்கவள், ‘சரி ஓகே. ஆனா எனக்கு மட்டும் இது பழக்கமோ?’ என்று எதிர்க்கேள்வி கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது? குழப்பமே முகத்தின் முன் வந்து நின்றது. என்ன ஆனாலும் சரி. ஒரு

மூன்றாம் விதி

மூன்றாம் விதி

சிறுகதை பாதி பூச்சு வேலை இன்னும் பாக்கி இருக்கு. ஷோகேஸ் வேலை, அடுப்படில கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. இருந்தாலும் வேற வழி இல்லாம வீடு கிரகபிரவேசம் நடத்தி, அதில இருந்து வசூலாகுற பணத்துலதான் பாக்கி வைச்ச கொத்தனார் கூலியைக் குடுக்கணுமுனு முடிவு பண்ணீட்டேன். பேங்குல வாங்குன வீட்டுக் கடனுக்கு மேல பிரசனல் லோன், நகைக் கடன் எல்லாம் வாங்கியும் வீட்டை முழுசா கட்டி முடிக்க முடியல. இதுல சில சவரன் நகை ஏலம் போயிருச்சு. கொஞ்சத்த வித்துப்புட்டேன். மொபைல்ல நம்பர் இருக்குற அத்தனை பேருட்டையும் முடிஞ்சளவு கறந்துட்டேன். ஒரு ஹால், ஒரு ரூம் இருக்கிற மாதிரி ஒன்னேமுக்கா செண்ட்டுல அரைகுறையா இந்த வீடு கட்டவே எனக்கு நாலு வருசம் ஆச்சு. அதுக்குள்ள பேங்குக்கு இ.எம்.ஐ வேற கட்ட வேண்டியதாயிருச்சு. இப்படி, இந்த வீட்ட இப்ப கட்டித்தான் ஆகணுமான்னு நினைக்காத நாளே இல்ல. “வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார்”ன்னு பெரியவுக சும்மாவா சொன்னாங்க?! பாதி உசுரும் பாதி உடம்பும் மொத்தமா போயும் முழுசா முடிக்க முடியல. கல்யாணத்தப் பண்ணி பொஞ்சாதியக் கூட்டிக்கிட்டு வந்த உடனேயே, நம்மல திருத்தி வழிநடத்த ஆரம்பிச்சுடறாளுக. என்னமோ நாமலாம் தறிகெட்டுத் திரியுற மாதிரியும் இவளுக வந்துதான் நமக்கு வாழ்க்கைய கத்துக் குடுக்குற மாதிரியும் நம்மல முழுசா வேற ஆளாவே மாதிப்புடுறாளுக. எப்படியாவது சொந்தமா ஒரு வீட்ட கட்டிப்புடணுமுன்னு மண்டைக்குள்ள இறங்கி வெதச்சுப்புட்டா மகராசி. ஆனா நம்ம முடிவெடுத்தா மட்டும் எதுவும் நடந்துடுமா என்ன? புள்ளைய இரண்டுக்கு மொட்டை போட்டு, குலதெய்வம் கோயில்ல கயறு கட்டி, வர்றவன் போறவன் சொல்லுற வேண்டுதலை எல்லாம் அவனவன் சொல்லுற மாதிரியே அப்படியே செஞ்ச பொறவுதான் பேங்கு லோன் சாங்சனே ஆச்சு. அதுவும் அந்த அழகர் கோயில் மலை மேல இருக்குற ஆறுபடை வீடுகள்ல ஒன்னான பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்குப் போயி, அங்க பக்கத்துல ஏழு கல்லை எடுத்து அடுக்கி வைச்ச பிறகுதான் கிரீன் லைட்டே எரிஞ்சுது, இந்த ஆபரேசன் ஓன் ஹவுஸ் திட்டத்துல. பத்தாயிரம் ரூபா வாடகை கொடுத்து, ரெண்டு பெட்ரூம் இருக்குற வீட்டுல எல்லா வசதியோட, ஊருக்குள்ளேயே பஸ் ஸ்டாண்டு, ஆஸ்பத்திரி, புள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம், எல்லாமே பக்கத்துலேயே இருக்குற மாதிரி ஒரு இடத்துல சௌக்கியமா இருந்துக்கிட்டு இருந்த நாங்க, இப்ப ஊருக்கு வெளியே ரிங் ரோட்டோரம், எந்த வசதியும் இல்லாத, என்ன வேணுமின்னாலும் ஒரு பத்து பதினஞ்சு கிலோமீட்டர் தூரம் போய் வரவேண்டி இருக்கிற இந்த இடத்துல வீட்ட கட்டி, அதுல நம்ம பேர எழுதி சொந்த வீடுனு மார் தட்டிக்கணுமாம். இதுல இந்த இ.எம்.ஐ. மட்டும் பதினஞ்சாயிரம் மாசம் அஞ்சாம் தேதி வந்தா கட்டணும். வாழ மரத்துல இருந்து சாப்பாடு வரைக்கும் வெறும் அட்வான்ஸ் மட்டுமே குடுத்து கிரகப்பிரவேசத்துக்கான வேலைய ஆரம்பிச்சிட்டேன். என் ராசிக்கு ஒம்போது ராசியும் எதிர்த் திசையில இருக்கறதால சிறப்புப் பரிகாரம் பண்ணணுமுன்னு நாலு பக்கத்துக்கு பூசை சாமான் வாங்க லிஸ்ட் வேற தந்தான் அந்த புரோகிதரு. நெருப்புல கொட்டி எரிக்கிறதுக்கு வாங்குன நெய் மட்டுமே ஐநூறு ரூவா. எனக்கு வந்த ஆத்திரத்துல அந்த புரோகிதரையே தூக்கி அந்தத் தீயில போடணுமுன்னு தோனுச்சு. அதுக்கு, எம்பொஞ்சாதி நான் கட்டுன தாலிய எடுத்து அவ கண்ணுல ஒத்திக்கிட்டா. எதிர்பார்த்த மாதிரி ஐநூறு பேத்துக்கு மேல கூட்டம் வந்துருச்சு மதியத்துக்குள்ளேயே. தலைக்கு கொறஞ்சது இருநூறு ரூவா மொய் செஞ்சாலும் இன்னைக்கு ஆகுற செலவுக்கு ஈடாகிருமுன்னு நிம்மதி வந்துருச்சு. கிரகப்பிரவேசத்துக்காக வீட்டு வாசல்ல பந்தல் போட இடஞ்சலா இருந்த அந்த மரத்துக் கிளைகளை வெட்டிப்போட்ட கொப்பு ஒன்னுல காக்கா கூடு ஒன்னு இருந்திருக்கு. வெட்டுனவன் அதைப் பாக்காம வெட்டிட்டான். வாசல்ல இருந்த அந்த மரத்துல ரெட்டைக் கிளை இருந்தா பக்கத்து வீட்டுக்கும் நமக்கும் சண்டை வருமுன்னு அவன் சொன்ன காரணம் ஏத்துகிற மாதிரி இருந்ததால, ஒரு கொப்பை வெட்ட அனுமதிச்சேன். இப்ப அந்தக் காக்கா பாவமுன்னு மனசு வலிக்க அதைப் பாத்தா, அது ஒரு சொட்டுக் கண்ணீர்கூட விடாம அடுத்த கொப்புல புதுக் கூடு ஒன்ன கட்டி முடிச்சு குடியேறிடுச்சு ஒரே நாள்ல. காக்காவுக்குலாம் எப்படித்தான் அதுக்குள்ள எல்லா லோனும் கிடைக்குதோ! இந்த லோன் வாங்குற கஷ்டத்தைவிடப் பெரிய கஷ்டம் ஒன்னு இருக்குன்னா, அது அந்த கவர்மெண்டு ஆபீஸ்ல அப்ருவல் வாங்குறதுதான். யாராருக்கு எவ்வளவு கொடுக்கணுமுன்னு ஒருத்தன் சொல்லுவான். அவன் யாருன்னு அந்த ஆபீசுல கண்டுபிடிக்கவே நான் நாலு பேத்துக்கு கத்தை கத்தையா செலவழிச்சது போக, டீ வாங்கிக் குடுக்கவே தனியா ஒரு லோன் போட வேண்டியிருந்துச்சு. அங்க இருக்கிறவன் கால்ல விழுந்து கெஞ்சி, காசையும் கொடுத்தாதான் காரியம் கொஞ்சமாவது நடக்கும். ஒவ்வொரு முறை இந்த இடம் ஒருத்தருட்ட இருந்து அடுத்தவனுக்குக் கைமாறும் போதும், இடத்தோட மதிப்புல பத்துல இருந்து இருவது சதவீதம் கவர்மெண்ட்க்கு வரி கட்டிதான் நம்ம பேருக்குக் கிரயம் பண்ணமுடியும். அப்படி இருந்தாலும் அதுல நம்ம இஷ்டப்படி ஒரு வீட்டக் கட்ட நம்மால முடியாதாம். அதைவிட ஒரு கொடுமை என்னன்னா, தண்ணிக்குன்னு போர் ஒன்னு போட்டேன். அதுக்கு கரண்டு கனெக்சன் வாங்கப் போனா, அம்பது மீட்டர் தூரத்துல வாய்கால் ஒன்னு இருக்குன்னு சொல்லி, பி.டபுல்யூ.டி ஆப்பீசுல நோ அப்சக்சன் சர்டிபிக்கேட்டு ஒன்னு கேட்டான். இதுல காமெடி என்னன்னா, அவன் வைச்சுருக்கிற மேப்ல இருக்கிற வாய்கால் நிஜத்தில எங்க இருக்குன்னு அந்த ஏரியாவுல இருக்கிற யாருக்குமே தெரியல. வேலூர்ல இருக்குற வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் போய், பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசி வாங்குன பின்னாடிதான் இந்த தோசம் தீர்ந்து, அந்த அப்ரூவல் கிடைச்சுது எனக்கு. ஏழாவது பந்தி சாப்பாடு போய்கிட்டு இருக்கும்போது பாயாசம் தீர்ந்து போச்சுன்னும் அதுக்கு பதிலா சாப்பிட வர்ர எல்லாருக்கும் ஐஸ்கிரீம் கொடுக்கணுமுன்னும் அவ வந்து மூக்க உறிஞ்ச, இல்ல இல்ல, என் ரெத்தத்த உறிஞ்ச ஆரம்பிச்சுட்டா. பக்கத்தில கடை எதுவும் இல்லாததால மாப்ளைய கூப்ட்டு வண்டியக் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்கிவர அனுப்ப, அந்த நேரத்துல கவர்மெண்டு வண்டி ரெண்டு வந்து நின்னுச்சு. அதில இருந்து இறங்குன ஆபீசர்களை இதுவரைக்கும் நான் பார்த்ததே இல்ல. கிரகப்பிரவேசப் பத்திரிக்கையும் கொடுக்கல. வந்தவங்கள்ல நாலு பேர் அளக்கிற டேப் ஒன்ன எடுத்து, ரோட்டுல இருந்து என் வீடு வரைக்கும் அளந்து பார்த்துட்டு, பின்னாடி இருக்கிற அடுப்படி வரைக்கும் இடிக்கணும், ரிங்ரோடு அகலப்படுத்துறதுக்கு ஆடர் வந்துருச்சு, அடுத்த மாசம் வேலை ஆரம்பிக்கப் போகுது, ஆபீஸ்க்கு வந்து என்னைப் பாருங்கன்னு சொன்னாங்க. மூக்க உறிஞ்சுகிட்டு பக்கத்துல நின்னவ, மூச்சப் பிடிச்சுக்கிட்டு அப்படியே சரிஞ்சுட்டா. எனக்கு ரெண்டு மணி நேரம் என்ன நடந்துச்சுனே தெரியாது. முழிச்சுப் பாக்கும்போது ஏதோ எழவு வீட்டுல இருக்குற மாதிரி ஒப்பாரிச் சத்தம் கேட்டுக்கிட்டு இருந்துச்சு. நாலு வருசத்துக்கு முன்னாடி இந்த வீட்டுக்கு அப்ரூவல் கொடுக்கும்போது இந்தமாதிரி பிராஜெக்ட்லாம் இல்லையாம். இப்ப கவர்மெண்ட்டே மாறிருச்சு, சிட்டியும் பெருசாயிருச்சுன்னு ஏதேதோ சொல்ல, எத்தன சாமிக்கு என்னென்ன பரிகாரமெல்லாம் செஞ்சு ஒழுங்கா நியாயமா ஒழச்சுக் கட்டுன வீட்டுல முழுசா ஒருநாள்கூட இன்னும் குடிபோகல. அதுக்குள்ள இந்த மாதிரி நடக்குதுன்னு அத்தனை சாமி மேலயும் கொலவெறி வந்துருச்சு. ஓன் ஹவுஸ்க்கு கிரீன் சிக்னல் போட்டு ஆரம்பிச்சு வச்ச, அந்த அழகர்கோயில் மலை மேல ஒய்யாரமா உக்கார்ந்து இருக்குற பழமுதிர்ச்சோலை முருகன நேருக்கு நேர் பார்த்து, நறுக்குன்னு நாலு வார்த்தை கேக்கணுமுன்னு பொஞ்சாதி புள்ளைகள கூட்டிகிட்டு வந்து சேர்ந்தேன். அங்கே ரோடுலாம் புதுசா, அகலமா, வண்டிங்க வசதியா போய் வர்ற மாதிரி போட்டிருந்தாங்க. நாங்க வேண்டுதலுக்காக அடுக்கி வைச்ச அந்த ஏழு கல்லு எங்கன்னு தேடினோம். எல்லாரும் வேண்டுதலுக்கு கல்லு அடுக்கி வைக்கிற இடத்தை எல்லாம் எடுத்துதான் இங்கயும் ரோட்ட அகலமா போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சுது. நிரந்தரமா குடி இருக்கறவங்களவிட அப்பப்ப வந்து போறவங்களோட வசதிதான் கவுருமெண்ட்டுக்கு முக்கியம்னு அப்பத்தான் எங்களுக்குப் புரிஞ்சுச்சு.

சிறுகதைகளின் பேரரசன்

சிறுகதைகளின் பேரரசன்

ஆன்டன் செகாவ் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சுவை, பயன், காலத்தை வெல்லும் தன்மை, பிறந்த இடத்திலே மட்டுமல்லாமல் செல்லும் இடமெங்கும் சிறப்பும் புகழும் பெறுகின்ற தன்மை ஆகிய பண்புகள் ரஷ்ய இலக்கியத்திற்கு உண்டு. மாளிகையிலே மதோன்மத்தராக இருந்தவர்களுக்கு, மாளிகை வாசம் பெற்ற பேனா தூக்கித் தந்த களிப்பு பானம் அல்ல ரஷ்ய இலக்கியம். பசியுடனும் பட்டினியடனும் பாதகருடனும் பாதிரியுடனும் போராடிச் செத்துக்கொண்டிருந்தவர்களுக்காகத் தீட்டப்பட்டது தான் ரஷ்ய இலக்கியம். புதியதோர் உலகு எழ, விழிப்புறச் செய்ததன் மூலம் உலகெங்கும் உயரிய இடம் கிடைத்தது ரஷ்ய இலக்கியத்திற்கு. அந்த வகையில் உலகச் சிறுகதை எழுத்தாளர்களில் முன்னணியில் நிற்பவன் ஆன்டன் பாவ்லோவிச் செகாவ் ஆவான். பிரெஞ்சு இலக்கியத்தை மாப்பசான் எந்த அளவிற்கு அலங்கரிக்கிறானோ அதற்கும் மேம்பட்ட அளவிற்கு ரஷ்ய இலக்கியத்தை அழகு செய்பவன் செகாவ். ரஷ்ய இலக்கியத்தின் பூர்த்தி செய்யப்படாத சிறுகதை மண்டபத்தை ஆடம்பரமாக, கம்பீரமாக எழச் செய்தவன் அவனே. தென் ரஷ்யாவில் உள்ள டாகன் பெர்க் என்ற நகரத்தில் 1860ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிறந்தான் செகாவ். அவனது தந்தை பால் செகாவ், ஒரு பலசரக்குக் கடைக்காரர். அவனது தந்தை வணிகம் செய்ததோடு, உலகைப் பற்றிய நல்ல அறிவையும் பெற்றிருந்தார். பரந்த மனப்பான்மையோடு இருந்த தன் தந்தையின் எண்ணம் நிறைவேறும் வகையில், நன்கு படித்துப் பள்ளி வாழ்க்கையில் வெற்றி கண்டான் செகாவ். வணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக, செலவுக்கு ஏற்ற வருமானம் இல்லாது போயிற்று. ஆகவே, 1876இல் அவனது தந்தை மாஸ்கோவிற்கு இடம்பெயர்ந்தார். மீதி இருந்த பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு 1879இல் ஆன்டன் செகாவும் மாஸ்கோ சென்றான். அங்கே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று, 1884இல் மருத்துவரானான். மாஸ்கோவில் மருத்துவராகப் பணிபுரிந்தாலும் அறியாமை நிரம்பிக் கிடந்த ரஷ்யாவில், அறிவின் மதிப்பை உணர்ந்து, இடையறாத தொல்லைகளைச் சமாளித்துக்கொண்டு, தன்னை அறிஞனாக்கிய பெற்றோர்களுடனே வாழ்ந்தான். மாஸ்கோ வந்தது முதலே எழுதுவதில் ஆசை கொண்டு, அவ்வேலையை ஆரம்பித்துவிட்டான். கிட்டத்தட்ட, 1884இல் மருத்துவராக வெளிவரும் பொழுது அவன் முழு வளர்ச்சியடைந்த பத்திரிக்கையாளனாக ஆகி இருந்தான். சில பொழுதுபோக்குப் பத்திரிகைகளுக்குக் கேலிச் சித்திரங்களை வரைந்து வந்தான். அதனால் ஓரளவு வருமானம் கிடைத்தது. 1886இல் அவனுடைய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து, சேர்த்து ஒரு நூல் வெளிவந்தது. அந்த நூல் மக்களின் மனதைக் கவர்ந்தது. அதிகமான பிரதிகளை அச்சேற்றிய மாஸ்கோவின் தினசரிப் பத்திரிக்கையின் ஆசிரியர்களான கிரி கரோவிச், சுவோரின் என்கிற இரண்டு இலக்கியத் தலைவர்களின் கண்களில் அது பட்டு கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு செகாவின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாறுதல் ஏற்பட்டது. அவ்விரு பத்திரிக்கை ஆசிரியர்களும் செகாவைத் தங்கள் தினசரிப் பத்திரிகைகளுக்குக் கதைகள் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டனர். செகாவின் கதைகளைப் பிரசுரிப்பதற்கு வார இலக்கிய ஏடு ஒன்றை ஆரம்பித்தனர். இவ்வாறாக, பொழுதுபோக்கு இலக்கியத்திலிருந்து உண்மை இலக்கியத் தளத்திற்கு வந்து சேர்ந்தான் செகாவ். 1886 – 1887 ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடைந்த நிலையில், அருமையான சிறுகதைகளை எழுத ஆரம்பித்துவிட்டான் செகாவ். இதே ஆண்டுகளில் நல்ல முறையிலே ஓரங்க நாடகங்களும் எழுதினான். இதனால் அவனது புகழ் வெகு விரைவில் ஓங்கியது. அவனுடைய இலக்கிய வருமானம் அவன் குடும்பம் முழுவதையும் நல்ல நிலையில் வைக்கும் அளவிற்கு வளர்ந்தது. 1890இல், செகாவ் சைபீரியாவை நோக்கிப் பயணம் செய்தான். அந்தக் காலத்தில், பெரிய சைபீரிய ரயில்வே கிடையாது. இருப்பினும் மிகுந்த சிரமத்துடன் ஆவலோடு பிரயாணம் செய்தான். திரும்பி வரும்போது சீனக் கடல் வழியாக இலங்கையைச் சுற்றி வந்து, ரஷ்யாவை அடைந்தான். ரஷ்யாவிற்கு வந்தவுடன் சைபீரியாவிலும் கீழ்க் கோடியிலும் குற்றவாளிகள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்பங்களைத் தனது எழுத்தில் வடித்து, அவற்றைப் போக்க சீர்திருத்த யோசனைகளையும் கூறி ஒரு புத்தகம் எழுதினான். இந்த எழுத்தின் காரணமாக 1892இல் சிறைச் சீர்திருத்தங்கள் பல செய்யப்பட்டன. அவனது எழுத்து வன்மை, நிறைய பணத்தை அள்ளித்தந்தது கைக்கு வந்த பணத்தை எல்லாம் பொதுநலம் குறித்துச் செலவு செய்தான். தான் பிறந்த ஊரான டாகன் பெர்கில், ஒரு நூல் நிலையம் மற்றும் பொருட்காட்சிச் சாலை அமைப்பதற்குப் பொருளுதவி செய்தான். 1892 – 1893 இல் காலராவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகலாக இலவசமாக மருத்துவம் பார்த்தான். 1897இல் காசநோயால் பாதிக்கப்பட்டான். நோய் குணமாவதற்காக, அந்த ஆண்டே காகசஸ் மலைப் பகுதிக்குச் சென்றான். அன்று முதல் அவன் சாகும் வரை காகசஸிலும் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் வாழ்ந்தான். மக்களின் ஊழல்கள், போலி வாழ்க்கை, சிறுமை முதலியவற்றை எல்லா இடங்களிலும் பார்த்து வந்ததால், இவருக்கு மனித சுபாவத்திலேயே நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. இந்த அவநம்பிக்கை அவருடைய இலக்கியம் முழுவதும் பிரதிபலிக்கிறது. புஷ்கின், துர்கனேவ், செகாவ் ஆகியோரால் ரஷ்ய மொழி வளர்ச்சி அடைந்தது. ரஷ்ய மொழி இவர்களால்தான் சிருஷ்டிக்கப்பெற்றது என்று எதிர்காலத்து இலக்கிய, சரித்திர ஆசிரியர்கள் சொல்வார்கள் என்று மாக்ஸிம் கார்க்கி செகாவைப் பற்றிப் புகழாரம் சூட்டுகிறார். ரஷ்ய வசன இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா, உண்மை ரஷ்யாவை மக்கள் முன் வைத்தவனான நிக்கோலி வாஸ்ஸிலி விச் கொகேல், காந்தியின் குரு, உலகம் முழுவதும் உயர்ந்த எழுத்தாளன் லியோ டால்ஸ்டாய், விடுதலை கீதத்தை பரப்பிய தியோடர் டாஸ்டாவஸ்கி ஆகியோர் இவர்மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். 400க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார் செகாவ். சொந்த வாழ்க்கையிலும் படைப்பிலும் காதலே அவரது ஆதாரப் புள்ளியாக இருந்தது. ‘பிணத்திற்குத்தான் ஆறடி நிலம் வேண்டும்; மனிதனுக்கு ஒட்டுமொத்த உலகமும் வேண்டியுள்ளது. உயிருள்ள மனிதனின் தேவையும் இறந்தவனின் தேவையும் ஒன்றில்லை’ என்ற இந்த வார்த்தைகள், வாழ்வின் மீதான செகாவின் பற்றுதலின் வெளிப்பாடாக உள்ளன. உப்புச் சப்பற்ற, சலிப்புமிக்க, அர்த்தம் புரியாத, துயரம் நிறைந்த வாழ்க்கையின் நிதர்சனத்தை, தனது கதைகளில் சுவாரசியமாக வர்ணிக்கும் திறன் மிகுந்தவர். வேறு எந்த எழுத்தாளனாலும் இவரைப் போல் வர்ணிக்க இயலாது. வாழ்வின் அத்தனை அம்சங்களையும் தனக்கே உரிய மாறுபட்ட கோணத்தில் அவரது கதைகள் கொண்டிருக்கின்றன. லியோ டால்ஸ்டாய், தியோடர் டாஸ்டாவஸ்கி ஆகியோர் நாவல்களில் செய்திருக்கும் சாதனையை, இவர் தனது சிறுகதைகளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். தன் எழுத்தை நம்பகத் தன்மையுடனும் துல்லியத்துடனும் கட்டமைக்கும் ஒரு தொழில்நுட்ப நிபுணன் எழுத்தாளன் என்ற சித்திரத்தை இலக்கிய உலகிற்கு அளித்தவர். செகாவ் தனது கதைகளின் மீதான விமர்சனத்தை ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அதுபற்றிக் கூறும்போது, ‘உழுதுகொண்டிருக்கும் குதிரையை அனாவசியமாகத் தொல்லைப்படுத்தும் ஈயைப் போல விமர்சகர்கள் இருக்கின்றனர்’ என்கிறார். சிக்கலான மனித உணர்ச்சிகளை விவரிப்பதில், மக்களின் உருவ அமைப்புகளை அப்படியே ஓர் ஓவியர் போலச் சித்தரிப்பதில் கைதேர்ந்த ஆன்டன் செகாவ் நினைவு தினம்  (15. 07. 1904) இன்று.

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 4

5. கர்ணன் பாண்டு புத்திரனா? மகாபாரதத்தில், பீஷ்மப் பிதாமகர் அம்புப் படுக்கையில் இருந்து பேசிய, சத்திரிய – சூத்திரத் தகுதிகள் பற்றிச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தோம். பீஷ்மர் இதுபோல் பலமுறை சட்டங்கள், தர்மங்கள் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். கர்ணனை, குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் ஏனைய பாண்டவர்களின் தந்தையான பாண்டுவின் மகனாக வீடுமன் கருதவில்லை என்பதைப் பார்த்தோம். ஏன்?கர்ணன் பிறந்தபோது, குந்திதேவி திருமணமாகாத பெண். கர்ணன் பிறந்த பின் திருராஷ்டிரனின் தம்பி பாண்டுவைத் திருமணம் செய்துகொள்கிறாள். பின்னர், பாண்டு சல்லியனின் தங்கை மாத்ரியை, இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொள்கிறான். பாண்டுவிற்கு, தன் திருமணத்திற்கு முன்பு குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் இருப்பதே தெரியாது. இந்த நிலையில், பாண்டுவும் குந்திதேவியும் மாத்ரியும் வனத்திற்குப் போய் விளையாடிக் களித்துக்கொண்டிருந்தபோது, அந்த இடத்திற்கு அருகில் ஒரு முனிவரும் அவரது மனைவியும் மான் உருவம் எடுத்து கலவியில் ஈடுபட்டு மகிழ்ந்துகொண்டிருந்தனர். முனிவரும் அவரது பத்தினியும் மான் வேடத்தில் இருப்பதை அறியாத பாண்டு, மான் வேடத்தில் இருந்த ரிஷியை அம்பெய்திச் சாய்த்தான். மரணத் தருவாயில் இருந்த ரிஷி, ‘அயோக்கியனே, நீ எந்த ஒரு பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டாலும் அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாக வெடித்து நீ இறந்துபோவாய்’ என்று சபித்துவிட்டு இறந்துவிட்டார்.அந்த சாபத்தினால் மனமுடைந்துபோன பாண்டு, தன்னுடைய இரு மனைவியரையும் தொடாமலேயே பிரம்மச்சாரியைப் போல் வாழ்ந்து வந்தான். அஸ்தினாபுரத்தின் மன்னான பாண்டுவிற்குக் குழந்தைப் பேறு வாய்க்க வாய்ப்பே இல்லை என்பது, பாண்டுவைக் கடும் மனவேதனைக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில்தான் குந்திதேவி, ‘முன்னொரு சமயம் துர்வாசமுனிவர் தனக்கு, தான் விரும்பும் யாரையும் அழைத்து உறவுகொண்டு குழந்தைப் பேறு அடையும் மந்திரத்தை’ வரமாகத் தந்திருப்பதைப் பாண்டுவிற்குத் தெரிவித்தாள். அப்போதும், தான் கன்னியாக இருந்தபோதே சூரிய தேவனிடம் அதைப் பரீட்சித்துப் பார்த்து, கர்ணனைப் பெற்றெடுத்த சம்பவத்தைப் பாண்டுவிடம் சொல்லாமல் குந்திதேவி மறைத்துவிட்டாள். அந்தக் குழந்தையை ஆற்றோடு விட்டுவிட்டதே கர்ணனின் துயரங்களுக்குக் காரணமாய் அமைந்தது. துர்வாசர் தந்த வரம் பற்றிக் குந்திதேவி சொன்னதைக் கேட்டு, பாண்டு அகமகிழ்ந்தான்.அந்த மந்திரத்தைத் தனது இரண்டவாது மனைவியான மாத்ரிக்கும் சொல்லித்தரும்படி பாண்டு குந்திதேவியிடம் சொன்னான். அதன்படியே, அந்த மந்திரத்தைக் குந்திதேவி மாத்ரிக்கும் சொல்லிக் கொடுத்தாள். குந்திதேவி அந்த மந்திரத்தைப் பயன்படுத்தி தருமதேவனை (எமதர்மன்) வரவழைத்து, அவன் மூலம் தருமன் என்கிற யுதிர்ஷ்டனைப் பெற்றெடுத்தாள். பின்னர் வாயு பகவானை வரவழைத்து, பீமனைப் பெற்றெடுத்தாள். கடைசியாக இந்திரன் மூலம் அர்சுனனைப் பெற்றெடுத்தாள். அதேபோல் மாத்ரி, அஸ்வினி சகோதரர்களை வரவழைத்து நகுலனையும் சகாதேவனையும் பெற்றெடுத்தாள். தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என்ற பெயருள்ள ஐவரையும் குடிமக்கள் அனைவரும் பாண்டவர்கள் என்று அழைத்தனர். பாண்டவர்களைப் பாண்டுவின் சம்மதத்தின் பேரில் பாண்டுவின் மனைவியர் வெவ்வேறு தேவர்கள் மூலம் பெற்றெடுத்ததால் பாண்டு அவர்களை, ‘தனக்கே பிறந்த தன்னுடைய வாரிசுகள்’ என்று ஏற்றுக்கொண்டான். அதனால் அவர்கள் ‘பாண்டுவின் புத்திரர்கள்’ ஆவார்கள். அதாவது மகாபாரதக் காலத்தில், ஒரு பெண் தன் கணவனின் சம்மதத்தோடு, வேறு ஆண்களோடு உறவுகொண்டு பெற்ற பிள்ளைகள், கணவனின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற தகுதியைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால் பாண்டவர்களுக்கு மூத்தவனான கர்ணன், குந்திதேவிக்கு பிறந்தது பாண்டுவிற்கு மரணம் வரை தெரியாத ரகசியம். அதனால் பாண்டுவிற்குத் தெரியாமலும் பாண்டுவின் சம்மதமின்றியும் பிறந்த கர்ணன் பாண்டுவிற்குப் பிறந்த மகனாகவும் வாரிசாகவும் கருதப்படமாட்டான் என்பதும் பீஷ்மர் சொன்ன இன்னொரு சட்டவிதி. அதாவது, கர்ணன் குந்திதேவிக்குப் பிறந்திருந்தாலும் பாண்டவர்களின் மூத்த அண்ணனாக இருந்தாலும் அவன் பாண்டுவின் மகனாகமாட்டான் என்பதால் பாண்டவர்களைப் போல அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோரும் உரிமையுள்ளவனாக மாட்டான் என்பது, தத்து எடுப்பது சம்பந்தமாக அப்போதைய நடைமுறையில் இருந்த சட்டவிதி. கர்ணனே அஸ்தினாபுர ராஜ்ஜியத்திற்கு உரிமை கோர அருகதை இல்லாதவன் என்பதால், விருஷகேதுவுக்கும் உரிமை கிடையாது என்பதை சொல்லத் தேவையில்லை.இதுதான் மகாபாரதம் சொல்லும் பாரதக் கலாச்சாரம் என்றால் பலர் ஆச்சர்யப்படக் கூடும். இந்த மகாபாரதக் கால வாரிசுரிமைகள், இத்தனை தூரம் வளைந்து போவதற்கும் ஆதிக் காரணம் பீஷ்மர்தான். எப்படி?(வரும் புதன்கிழமை பார்க்கலாம்)

அக்கா-மவ

அக்கா-மவ

க(வி)தை ஆறு வயசிருக்கும்அக்காவை அயித்தான்மேளம் கொட்டி தாலி கட்டயில.. அயித்தான் கைபிடிச்சி அக்கா போகயிலே‘அக்கா’ன்னு ஓடிப்போயி அவ கால கட்டிக்கிட்டேன்கண்ணுல தேக்கிவைச்ச மடை ஒடைச்சிஅக்கா சேலைய நான் நனைச்சேன் ஆத்தா மூக்கைச் சிந்தி அப்பால வீசிப்போட்டுஅக்கா காலவுடு; வாக்கப்பட்டு போறா அவவாடா ராசான்னு கை புடிச்சி வலிச்சிட்டா.. ஆத்தா கைய வுடு அக்காகூட போறேன்னுஅழுது புரண்டு மல்லுக்கட்டி நாந்திமிர.. திலும்பி திலும்பி பாத்து தெருவெறங்கி போன அக்காசட்டுனு ஓடியாந்து குனிஞ்சி முத்தமிட்டுசீரு பானையோடே கண்ணுல கரைஞ்சி போனா.. ஆறுயேழு நாளு அக்கா அக்கானுஅழுது பொலம்பியிருந்தேன்..ஆத்தா ஆயி அப்பன் தேற்ற தெளிஞ்சிகிட்டேன்.. பொண்ணா பொறந்துபுட்டா வயசும் வந்துபுட்டாவாக்கப்பட்டுத்தேன் மாமியா வூடு சென்னுமாமனோட குடுத்தனம் பண்ணிடோணும்.. ராசா அழுவாதே.. அக்கா பொண்ணு பெத்துஉனக்குக் கட்டி வைப்பா..அப்போ ஆத்தா சொன்னா… ஆறுமாசமாச்சிஅயித்தான், விளஞ்ச பலாப்பழத்தை சொமந்து வந்தாக..சேதி சொன்னான் சுப்பன் ஓடி வூடு வந்தேன்அக்கா வரலையான்னு அயித்தான் மூஞ்ச பாத்தேன்.. சிரிச்சபடி ஆத்தாசின்ராசு ஓடிப்போயி மாங்கா பறிச்சி வாடாஅக்கா ஆசைப்பட்டா..ன்னு சொன்னா மாங்கா வாங்கத்தேன் அயித்தான் வந்தாராக்கும்அக்காவை நா பாக்கோணும் அவயேன் வரலைன்னுஆத்தாவ திலுப்பி கேட்டேன் அப்பன் ஆத்தா ஆயி அயித்தான் எல்லாரும்கொல்லுன்னு சிரிச்சாக முட்டாப்பய மவனே அக்கா முழுகாம இருக்காடா..சேதி சொல்லத்தேன் மாமன் தேடி வந்தாரு..ஓடிப்போயி மாங்கா பறிச்சி வாடா..சீமக் கிழங்காட்டம் சிறுக்கிய பெத்துனக்குஅக்கா தருவாடா.. ஏதுமப்ப புரியல; ஆனா அக்கா ஏதோ தருவான்னுமாந்தோப்பு ஓடிப்போயி மடிநெறய மாங்காபறிச்சி வந்து அயித்தான் கைகுடுத்தேன்.. ஏழுமாசம் போச்சிஎங்கக்கா பொண்ணு பெத்துட்டானு சொல்லியனுப்பிச்சாக..ஆத்தா ஆயி பல்லு வெத்தலகரை வெளிய தெரியலாச்சி.. ஏலே சின்னராசு.. மருமவ பொறந்துபுட்டாஉம்முட அக்காவ போயி பாக்கோணும்..வெரசா வாடான்னு ஆத்தா கூப்பாடு போட்டுச்சி.. அக்காவ பாக்கோணும்..அதுமட்டுந்தேன் கேட்டுச்சி.. ஓடியாந்து ஏறிக்கிட்டேன்பூட்டிவச்ச வண்டீல அரைக்கால் சட்டையோட.. கிறுக்குப் பயபுள்ளஒன்னுந்தேன் போடாம போயி புள்ளய பாப்பியா..?சொக்கா போட்டு வாடான்னு ஆத்தா வெஞ்சிச்சி.. குடுகுடுன்னு குதிச்சி ஓடிப்போயி சொக்கா தேடிப்போட்டு தாறுமாறா தலைய வாரிவண்டியேறித்தேன் அக்கா வாசலுக்குப் போயி சேந்தேன்ஆத்தா அப்பன் ஆயிகூட.. வண்டி விட்டிறங்கி எல்லாரும் போயிட்டாக..ஒசரமான வண்டியில இறங்கத் தெரியாமத்தான்இப்படியும் அப்படியும் தொங்கி நாங்கிடந்தேன்.. அயித்தான் ஓடிவந்து அணச்சி இறக்கிபுட்டுவாங்க மருமவனே.. வில்வண்டிய விட்டுவரத்தேன் மனசில்லையோ எண்டுகேலி பேசிச் சிரிச்சாக.. அதெல்லா ஒன்னுல்ல..வீராப்பா சொல்லிப்புட்டு விருட்டுனுவீட்டுக்குள் நா நுழஞ்சேன்.. உத்தரத்து சட்டத்துல தூளி கெட்டியிருக்கஆத்தா ஆயி அக்கா அக்கா மாமியான்னு அத்தினி பேரும்சுத்தி நின்னுகிட்டு சொலசொலனு பேசிச் சிரிச்சாக.. எட்டிப் பாக்கத்தான் என் ஒசரம் பத்தலையே..ஏனோ மனசுக்குள்ள கோவம் கூடிடுச்சு..கூடத்து தூணு பக்கம் நானு நகந்து போயிகெட்டியாப் புடிச்சிகிட்டு தனியா உறுமி முறைச்சிருந்தேன். திலும்பி பாத்த அக்கா‘டேய் சின்ராசு..’ன்னு கூவிகிட்டே ஓடிவந்தா.. போக்கா.. என்னை பாக்கத்தான் உனக்கு நினப்பில்ல..சும்மா கொஞ்சுதியோ.. கோவம் உம்மேலன்னுகைய உதறிவிட்டு மூஞ்ச திலுப்பிக்கிட்டேன்.. சின்ராசு.. சின்ராசு.. அக்காவுன்ன மறப்பேன்னு நினைச்சுதியோ..அலகா உனக்காக பொண்ணு பெத்து வச்சிருக்கேன்..வந்திங்க பாருடா சின்னி.. சின்னினு அக்கா மட்டும் செல்லமா கூவும் என்பேரு..அக்கா அக்குள்ல அணச்சித் தூக்கி தூளியில சாச்சு பாருன்னு சொன்னா.. தூளிக்குள்ள பகுடரு மூஞ்சியப்பிகருப்பு மையால கண் புருவம் வரைஞ்சிமாரியாத்தா பொட்டுபோல நெத்தியில கன்னத்துலகறுப்புப் பொட்டு வச்சி கட்டவிரல் தூக்கிகைபிடிச்சுச் சிரிச்சா சிவப்பா சின்ன சிறுக்கி.. என் கண்ணுல என்னவோ பட்டாம்பூச்சி பறந்திச்சி..அக்கா கழுத்த கட்டிக்கிட்டு கன்னத்தில எச்சி வச்சேன்.. ஐய்யா..அக்கா மவ பொறந்தாச்சி..