நகைச்சுவை

“சார் எங்கே ஒரு வாரமாய் வாக்கிங் வரலே.” “சுகர் ஜாஸ்தி ஆயிடுச்சி.”  “கொரோனா”வில் வீட்டிலிருந்ததால மன அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும்.’’ ‘‘ஆமாம் சார் டாக்டரும் அதை தான் சொன்னாரு.’’ ‘‘பார்த்தீங்களா! நான் சொன்னது மாதிரியே சொல்லியிருக்காரு!’’ ‘‘ஆமா சார், உங்களால எப்படி சொல்ல முடியுது.’’  ‘‘எனக்கும் அதே பிராப்ளம் தான்…’’

சிம்மாசனங்கள் என்ன ஆகும்..!

சிம்மாசனங்கள் என்ன ஆகும்..!

நாடற்றவர்களா இவர்கள்..? இல்லை. இந்த நாட்டின் முதுகெலும்புகள். நாதியற்றவர்களா இவர்கள்..? இல்லை . இந்த நாட்டின் இரத்தமும் சதையுமானவர்கள். இவர்கள் இல்லையேல் உங்கள் இந்தியா ஏது.‌? ஆனால்- செருப்பாய் தேய்ந்து இந்த தேசத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களை தேய்ந்த செருப்பாய் எண்ணி தெருவில் வீசி எறிந்து விட்டதே இந்த அரசுகள் . காரணமென்ன..? பெருமுதலாளிகளின் எடுபிடிகளான அரசுகள் இந்த உழைக்கும் மக்களை ஊர் கொண்டு போய் சேர்த்தால் கார்ப்பரேட்டுகளின் கரன்சி பசிக்கு பங்கம் வந்துவிடும் என்பதால் காரணம் கூறாமல் பல்லாயிரம் மைல்கள் பட்டினியோடு நடக்க விட்டே கொல்கிறது. என்னசெய்யலாம்..? உயிரைக் கையில் பிடித்தபடி ஓடும் ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளியும் தானும் உரிமையுள்ள ஒரு இந்தியக் குடிமகன் என்பதை உணர்ந்து , செருப்பை கையில் எடுத்தால் உங்கள் சிம்மாசனங்கள் என்ன ஆகும்..?

வாசிப்பை மீட்டெடுக்கும் நுழைபுலம்!

கற்றனைத்தூறும் அறிவு என்றார் திருவள்ளுவர். கற்றலின் கேட்டலே நன்று என்றார் முன்றுரை அரையனார். வாசிப்பு என்பது நம் சிந்தை மகிழச் செய்வது மட்டுமன்று. அது நம் கற்பனைச் சிறகுகளை விரிக்கச் செய்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவல்லது. பரபரப் பான இந்த நுகர்வுலக வாழ்வில், வாசிக்கும் பழக்கம் அருகிவிட்டது. தொலைக்காட்சி, உள்ளங்கை இணையம், கேளிக்கை உள்ளிட்டவை புத்தகம் வாசிக்கும் பழக்கத்துக்கு முட்டுக் கட்டைகளாகி விட்டன. அருகிவிட்ட வாசிப்பை மீட்டெடுக்கவும், வாசிப்பு அனுபவத்தைப் பலருடன் பங்கிட்டுப் பரிமாறிக்கொள்ளவும், தென்சென்னைப் பகுதியில் நிலவும் இலக்கிய தாகத்துக்கு சில துளிகள் நீர்வார்க்கவும் துவங்கப்பட்டதுதான் நுழைபுலம் வாசிப்புக் குழு. பங்கிட்டால் பல்கிப் பெருகுவது கல்வியும் அறிவும்தானே! ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் நுழைபுலம் குழுவினர் ஒன்றுகூடி, தாங்கள் வாசித்த நூல்கள் குறித்து உரையாற்றியும், கலந்துரையாடியும், கருத்துகளைப் பகிர்ந்துகொண்டும் தங்கள் வாசிப்பு அனுபவத்தைக் கடத்துவது மட்டுமின்றி, நிகழ்கால சமூகப் பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நுழைபுலம் கலந்துரையாடலை நேரடி நிகழ்வாக நடத்த இயலாத சூழலில், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி ஷூம் செயலி வாயிலாக கடந்த 24.05.2020 அன்று வெற்றிகரமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப் பட்டது. இம்முதல் முயற்சியில் இருபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதுடன் பத்து பேர் தங்கள் வாசிப்பையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இந்திய ஒன்றியத்திலிருந்தும், உலகின் பார்வையிலிருந்தும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டிருக்கும் “காஷ்மீர் பனிமலைப் பயணம்” குறித்த தனது பயண அனுபவங்களை, பயண ஆர்வலர், தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலுக்குச் சொந்தக்காரர் அமுதா கிருஷ்ணா பகிர்ந்துகொண்டார். நாடறிந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய புகழ்பெற்ற நாவலான “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவல் குறித்த தனது வாசிப்பு அனுபவத்தை, சிறந்த கதை சொல்லியும், எழுத்து மற்றும் வாசிப்பில்  சிறந்தவருமான பூங்கொடி பாலமுருகன் எடுத்துரைத்தார். 18ஆம் நூற்றாண்டில் டேனியல் டேஃபோ எழுத்தில் வெளிவந்த, கடல் பயண சாகசம் குறித்த புகழ்பெற்ற ஆங்கில நாவலான “ராபின்சன் குரூசோ” குறித்து திராவிட சிந்தனையாளர், மொழிப் புலமையாளர் மு.க.இளவழுதி உரையாற்றினார். புகழ்பெற்ற எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த க.சீ. சிவக்குமார் எழுதிய வெள்ளந்தி கிராமத்து மனிதர்கள் குறித்த கட்டுரைத் தொகுப்பான “ஆதி மங்கலத்து விசேஷங்கள்” நூல் குறித்த தனது உரையால் அனைவரின் மனங்களையும் கவர்ந்தார் கவிஞர், எழுத்தாளர், இயற்கை வாழ்வியலருமான சாதாரணன் கௌதமன். மகாபாரதத்தின் ஒரு பகுதியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், பீமனின் நோக்கில் விவரிக்கும், எம்.டி.வாசுதேவன் நாயர் படைப்பில் உருவாகி, குறிஞ்சி வேலனின் தமிழாக்கத்தில் வெளியான கற்பனை நாவலான “இரண்டாம் இடம்” குறித்த தனது வாசிப்பின் நேசத்தை திரை இயக்குநர், எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், கூத்துக் கலைஞருமான ரெ.விஜயலெட்சுமி தன் சொற்களால் சிலாகித்தார். அல்லோபதி மருத்துவத் துறையில் கார்பொரேட் நிறுவனங்கள் மற்றும் சிறிய தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு, அவற்றுக்கிடையேயான வேறுபாடு, அவ்வேறுபாட்டை நாம் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம், மருத்துவத் துறையில் அன்றாடம் நிகழும் வளர்ச்சி, உடல்நலம் பேணுதலின் அவசியம் குறித்தெல்லாம் மருத்துவர் காமையம் கருண் நயம்பட எடுத்துரைத்தார். திரைப்படம், கூத்துக்கலை, எழுத்து, வாசிப்பு என பல பரிமாணங்கள் கொண்ட ரெ.விஜயலெட்சுமி எழுத்தில் நிலவெளி இதழில் வெளியான “காத்தாயி பாட்டி” சிறுகதை வாசிப்பில் தான் பெற்ற இன்பத்தை, வளர்ந்துவரும் சிறுகதை எழுத்தாளர், ஓவியர் தமிழன் காசி பகிர்ந்துகொண்டார். எழுத்து, இசை, நடனம் என பல துறையிலும் முற்றிலும் புதிய கோணத்தில் தன முத்திரையைப் பாதிக்கும் பாரி,  கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள வேலை இழப்பு, விகடன் குழும ஊழியர்களின் பணிநீக்கம், பொது முடக்கத்தின் தாக்கம் உள்ளிட்ட “நிகழ்கால சமூக சிக்கல்கள்” குறித்து உரையாற்றி நிறைவு செய்தார். நல்லு இரா. லிங்கம் நிகழ்வை ஒருங்கிணைத்து, தொகுத்தளித்தார். பேராசிரியர் விஜயராகவன், முத்துக்கருப்பன், காரை செல்வராஜ், அம்மாபேட்டை கருணாகரன், அருண் குமார்,  பாலாஜி, பாபு ராஜா, ஜெயசீலன் தேவாம்சம், கொழப்பலூர் ராஜா உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் நுழைபுலம் குழுவில் இணைந்து  தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு பயன் தரலாம், பயன் பெறலாம்.

கேலிச் சிரிப்பு

கேலிச் சிரிப்பு

சென்னை பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த போக்குவரத்திலிருந்து சற்றே ஒதுங்கி இருந்த வங்கியின் வாசலுக்கு அருகாமையில் இடம் தேடி வண்டிகள் வரிசையாகவும் , நெரிசலாகவும் இருந்த ஓர் இடத்தில் இரண்டு வண்டிகளுக்கு இடையில் தன்  ஸ்கூட்டியை சொருகி நிறுத்தினாள்.  அவசரத்துக்கு பேங்குக்கு வந்துபோக முடியுதா? பார்க்கிங் எப்பவும் புல்லாதான் இருக்கு. இப்படி பார்க்கிங் வசதியில்லாத இடத்தில் எதுக்காக பேங்கை நடத்து றாங்க என ஒருவகை சலிப்புடன் தனக்குத் தானே புலம்பியபடியே வண்டியின் சீட்டை தூக்கி அதற்குள்ளே தன் தலைக்கவசத்தை வைத்து சீட்டை மறுபடியும் அழுத்தி மூடி வேகவேகமாக வங்கியின் கண்ணாடி கதவைத் தள்ளி உள்ளே  சென்றாள். முழுமையாக குளிரூட்டப்பட்ட வங்கியி னுள்ளே நுழைந்தவள் முகத்தில் சில்லென்று குளிர் காற்று பட்ட சுகத்தைக் கூட பொருட்படுத்தாமல் எதிரே இருந்த கேஷியர் அறையைப் பார்த்தாள்.  ஐந்தாறு பேர் வரிசையில் நின்றிருந் தார்கள்.  அதைக் கண்டதும் இவளுக்குப் படபடப்பு அதிகரித்தது. ‘ச்சே’ இந்த பேங்கில் எப்பவும் கூட்டம்தான். அவசரத்துக்கு வந்தமா போனோமான்னு இருக்க முடியாது என்று தன் புலம்பலை உதடுகள் வழியாக முணுமுணுத்தாள். அருகிலிருந்த  மேசையின் கீழ் அலமாரி யில் கலர் கலராய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ஒரு காகிதக் கட்டிலிருந்து ஒரு தாளை உருவி எடுத்து மேசைமீது வைத்தாள். காலையில் வேலைக்குப் போகும் போது இது போன்ற சில எக்ஸ்ட்ரா  வேலைகளை செய்வதெல்லாம் மிக கொடுமையானது. இந்த டிராபிக்கில் வண்டியை ஓட்டிக்கொண்டு வருவதற்குள் உயிர் போய் உயிர் வருகிறது. அப்படி வந்தாலும் வந்த வேலை சீக்கிரம் முடியாம போகுது. வேலைக்கு கொஞ்சம் லேட்டா போனாலும்  மேனேஜர் கத்துகிறான். அவனிடம் கொஞ்சம் லேட்டா யிடுச்சி சார்னு வழியனும் . பெண்களுக்குத்தான் காலையில் எவ்வளவு வேலை இருக்கிறது . ஆண்களைப் போல் பேப்பர் படிச்சிட்டு ஊர்க் கதையை பேசிட்டு உட்கார்ந்த இடத்திலேயே காப்பி, பலகாரம் எல்லாம் வரவழைச்சி சாப்பிட்டுவிட்டு நாம தயாரா கட்டிவச்ச சாப்பாடு பாக்சை எடுத்து ஆபிசுக்கு கிளம்பிடுதுங்க. அப்படி நோகாம  வேலைக்கு கிளம்பி வந்துட்டு நம்ம உயிர எடுக்குதுங்க. பெண்களுக்குத் தான் உட்கார நேரமில்லாம எவ்வளவு வேலை. எல்லாவேலையையும் முடிச்சுட்டு நாமளும் வேலைக்குக் கிளம்பனும். ஆனால் அவர்களைப்போல சரியான நேரத்துக்கு வந்து நிற்கனும்னு நினைக்கிறாங்க. இதில் மாதாமாதம் அதுக்கு இதுக்குனு EMI தேதி தவறாமல் நாமதான் கட்டணும். எல்லாம் நம் தலை எழுத்து என்று அலுத்துக்கொண்டபடி தன் தோள் பட்டையில் குறுக்காக மாட்டியிருந்த   பையிலிருந்து பேனாவைத் தேடி எடுத்து எடுத்து எழுத துவங்கிய வளின் பார்வை கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த பெரியவரைக் கண்டது. பழுப்பேறிப்போன வேஷ்டி, அதற்கு சம்மந்தமே இல்லாத கட்டம் போட்ட சட்டையில் மேல் இரண்டு பட்டன்களை போடவில்லை, காலில் பல ஆண்டுக்கு முன் வாங்கி தேய்ந்துபோன ரப்பர் செருப்பு, எண்ணெய் தேய்த்து படியவாரிய தலை, நெற்றியில் சின்னதாக விபூதிக் கோடு. நரைத்த தலையில் இடைஇடையே கருத்த முடி.  ஷேவ் பண்ணாத முகம், மொத்தத்திற்கு பாத்ததும் படிப்பறிவில்லாதவர் என பளிச்செனத் தெரிந்த அறுபது வயதைத் தாண்டிய உருவம். இப்படி எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் வங்கிக்குள் வந்தாலே பலருக்கு டென்ஷன் ஏறும். இவளுக்கும் அதேபோல் எரிச்சலாக வந்தது. ‘ச்சே’ வேலைக்கு நேரமாயிடிச்சி, கேஷ் கவுண் டரிலும் ஜனங்கள் அதிகமாகிட்டாங்க. வரிசை நீண்டு இருக்கு. இதில் எப்போது பணத்தை கட்டிவிட்டு வேலைக்கு போவது… போதாக்குறைக்கு இவரைப் போன்றவர்கள் பேங்குக்கு வந்து ‘அம்மா கொஞ்சம் இந்த செலானை எழுதிக்கொடு’ என்று நம் உயிரை எடுப்பார்கள். ‘படிக்காதவங்கள பேங்குக்கு அனுப்பி அதுங்க நம்ம உசுர எடுக்குதுங்க’ என்று அலுத்தபடி ஒரு வகையான எரிச்சலுடன் ஓரக்கண்ணால் அந்த வயதானவரைப் பார்த்தாள். அவர் நேராக இவளை நோக்கி வந்து கொண்டிருந்தார். அதைக் கண்டதும் உடனே அருகில் வேறு யாராவது நம்மைபோல் எழுதுகிறார்களா என்று பார்த்தாள். அப்படி யாரும் அவளருகில் இல்லை. எழுதிக்கொண்டிருந்த ஒன்று இரண்டு பேரும் கேஷ் கவுண்டருக்கு போய் லைனில் நின்று கொண்டிருந் தார்கள். அவர் அருகில் வரவர இவளின் உள்ளம் படபடத்தது. உள்ளே வந்தவர் சற்று நின்று பார்வையை சுழல விட்டவர் அவளைப் பார்த்து ஒரு வகையான தயக்கத்துடன் நெருங்கி  வந்தார். அதை ஓரக்கண்ணால் பார்த்தவள் தலையை வலதுபுறமாகத் திரும்பி அவரை கவனிக்காதது போலவும், மிக டென்ஷனாக இருப்பது போன்றும்  காட்டிக்கொள்ள முயற்சித்தாள். ஆனாலும் அந்த முதியவர் அவளருகில் வந்து… ‘‘ஏம்மா” என்று மெல்லமாக அழைத்ததைக் கவனிக்காததுபோல் பாவனை செய்தாள். மீண்டும் அவர் ‘‘என்னம்மா! உன்னைத்தான்’’ என குரலை உயர்த்திக் கூப்பிட்டார்.  இதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது என்று அவளுக்குத் தோன்றியது. பெரியவரை நிமிர்ந்து பார்த்து சற்று எரிச்சலான முகத்துடன் ‘‘என்னங்க’’ என்றாள். பெரியவர் தயங்கித் தயங்கி ‘‘அம்மா! பேங்க் வாசலில் இந்தச் சாவி கீழே விழுந்துகிடந்தது. இது உங்களதுதானே?’’ என்ற கேள்வியுடன் சாவியை அவளிடம் நீட்டினார். பெரியவரின் தயக்கம் இப்போது இவளிடத்தில் ஒட்டிக்கொண்டது. அந்த தயக்கத்தோடு அதை வாங்கிப் பார்த்தவள் ‘‘ஆமாம், இது என்னுடைய வண்டிச் சாவிதான்’’ என்றாள். ‘‘இது பேங்க் வாசலில் கிடந்தது. உங்க அவசரத்துல சாவியை இப்படி எங்கேயாவது  தொலைச்சுட்டு தேடிட்டுருப்பிங்க பாவம். அதான் யாரு எவருன்னு பார்த்து கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் பத்திரமா வச்சுக்கங்க’’  என்று கூறிவிட்டு பதில் நன்றியைக்கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டார். ஒரு கணம் எதுவும் தோன்றாமல் பெரியவரின் முதுகையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் சில நிமிடங்கள் கழித்து கையில் இருந்த  சாவியைப் பார்த்தாள். சாவிக் கொத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஜோக்கர் பொம்மை அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. 

இந்த அரசு யார் உயிரைக் காப்பாற்றப் போகிறது?

இந்த அரசு யார் உயிரைக் காப்பாற்றப் போகிறது?

கேள்வி எழுப்புகிறார் முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க-வின் அரியலூர் மாவட்டச் செயலாளரும் குன்னம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங்கரிடம், புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் மாநில அரசு இவர்களுக்கு வழங்கி வரும் அத்தியாவசிய உதவித் திட்டங்கள் குறித்துப் பேசினோம். ‘‘எங்கள் அரியலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை விவசாயம் பொய்த்துப் போன மாவட்டம் இது. மேலும் இந்த மாவட்டத்தில் தான் அதிகப்படியான சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதனால் இம்மாவட்ட மக்கள் தங்களது வருமானத்தை ஈடுகட்டும் நோக்கில் பல்வேறு மாவட்டங் களுக்கும் மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து போய் விட்டனர். ஏற்கனவே உள்ள வறட்சி மற்றும் பொய்த்துப் போன விவசாயத்திற்கு மத்தியில் இந்த கொரோனா விவகாரத்தில் மிகப் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது அரியலூர் மாவட்டம். ஏனெனில் கோயம்பேடு சந்தை சுமை தூக்கும் தொழிலாளர்களில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மாவட்டைச் சேர்ந்தவர்களே. கடந்த ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை பச்சை மண்டலமாக இருந்த இந்த பகுதி. திடீரென சென்னைக்கு அடுத்த இடத்தில் வந்துள்ள விவகாரம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தினசரி வருமானம் முடக்கப்பட்டுள்ள சூழலில் அங்கு வேலை செய்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை இழந்து இருப்பிடங்களைத் துறந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பிய வேளையில், அவர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்காமலும் சரியான வழிகாட்டுதலைக் கூறாமலும் மாநில அரசு இவர்களை அலைக்கழித்துள்ளது. நிலைமை கைமீறிப் போன நிலையிலேயே விஷயம் எனது கவனத்திற்கு வந்த வேளையில், உடனடியாக களத்தில் இறங்கி  அவர்களுக்குச் சோதனை செய்யவேண்டும், உதவிகள் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தினசரி வருமானத்தில் அடிப்படையிலேயே இம்மாவட்ட மக்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருப்பதால் கடந்த 75 நாட்களுக்கு மேல் இவர்களின் வருமானம் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது இனிவரும் காலங்களில் இவர்களின் வாழ்வாதாரத்தை எப்படி ஈடுகட்ட போகிறார்கள் என்பதை நினைக்கும்போது மனம் பதைபதைக்கிறது. கொளுத்தும் வெயிலில் கால்களில் செருப்பு கூட இன்றி குடும்பம் குடும்பமாய் இடம் பெயரும் தொழிலாளர்களின் குருதி தார்ச் சாலைகளில் சுவடுகளாகப் பதிகிறது. மூட்டை முடிச்சுகளுடன்  இவர்கள் நடந்து செல்வதைப் பார்க்கிறபோது நெஞ்சம் பதறுகிறது. மத்திய மாநில அரசுகள் கொரோனாவோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று கூறுவதன் வழியாக தங்களால் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை ஒத்துக் கொள்கின்றன. சைக்கிளில் 1400 கிலோமீட்டர் பயணித்த சிறுமியைப் பற்றி பரிதாபம் கொள்ளும் யாரும் இந்த நிலைக்கு காரணம் யாரென்று விவாதிக்க மறுக்கிறார்கள். இந்தியாவின் குடிமக்கள் ரயிலில் அடிப்பட்டு குடும்பத்தோடு இறந்து போவதெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் அறிவார்களா? ‘‘புலம்பெயர் தொழிலாளர்களின் சூட்கேசை ராகுல் காந்தி இழுத்துக்கொண்டு செல்ல வேண்டியதுதானே’’ என்று பேசுகிறார் மத்திய நிதியமைச்சர். ஒரு அமைச்சர் பேசும் அவை நாகரீகமா இது? குஜராத் மாடல் என பொய் கூறிய கூட்டம்தான் இன்று புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. மக்கள் நிம்மதியை இழந்து வெகுநாட் களாகி விட்டது. தற்போது அரசு அறிவித்து வரும் எந்தத் திட்டங்களும் சராசரி குடிமக்கள் எவருக்கும் உபயோகப்படாத நிலையில், இந்த அரசு யாருக்காக செயல்பட்டு யார் உயிரைக் காப்பாற்றப் போகிறது?” எஸ்.எஸ்.சிவசங்கரின் காட்டமான இந்தக் கேள்விக்கு மத்திய மாநில அரசுகளிடம் நிச்சயம் பதில் இல்லை!

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

ஜோதிகா நடிப்பில் இணையத்தில் நேரடியாக வெளியான முதல் தமிழ்த் திரைப்படம்! முதலில், நேரடியாக இணையத்தில் ஏன் இந்தப் படம் வெளிவந்தது என்பதை பார்ப்போம்! மார்ச் 25 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், கொரோனா காரணமாக அதற்கு முன்பே ஊரடங்கை அரசு அறிவித்தது. தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் எப்போது அவை திறக்கப் படும் என்பதும் உறுதியில்லை. இப்போது லாக்டவுன்-4ல் இருக்கிறோம். இது மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே, திரைப்படம் எடுப்பது ஒரு தொழில் என்ற முறையில் வேறு வழியின்றி இப்படத்தை இணையத்தில் வெளியிட சூர்யாவின் 2D  நிறுவனம் முடிவு செய்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு காட்டி னார்கள். அதையும் மீறி சூர்யா இப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த நேரத்தில் இணையத்தில் அதாவது OTT தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவது பற்றிச் சொல்ல வேண்டும். OTT என்பதன் விரிவு “Over The Top”. நேரடியாக நமது ஆண்ட்ராய்டு ஃபோன், அல்லது டிவியில் இணையம் மூலம் வெளியிடுவது. சாதாரணமாக ஒரு படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு பல மாதங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகே தொலைக்காட்சி, இணையம் போன்றவற்றின் மூலம் பிற ஊடகங்களுக்கு உரிமை அளிக்கப்பட்டு வெளிவரும். (திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்று சட்ட அனுமதி இல்லாமல் வெளியிடப்படுவது வேறு கதை. அதை விட்டு விடுவோம்.) இந்த இணைய தொழில்நுட்ப வெளியீடு பற்றி சில வரிகள். மனிதன் சக்கரத்தைக் கண்டுபிடித்தது முதல் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையோ, ஊடகத்தையோ மக்களிடம் கொண்டு போகாமல் வணிக நோக்கில் தடுப்பது இயலாத செயல். சினிமா வரலாற்றில் முதன்முதலில் ஊமைப்படம், பின்னர் பேசும்படம், வண்ணப்படம், 70mm, சினிரமா, சினிமாஸ் கோப், த்ரீடீபடம் போன்ற பரிமாண வளர்ச்சி இருப்பது போல் திரைஊடக வரலாற்றிலும் திரை அரங்குகள், தொலைக்காட்சி, பின்னர் விசிஆர், சிடி வரிசையில் இப்போது வந்துள்ள OTT என்ற இணைய வெளியீடும் ஒரு பரிணாம வளர்ச்சிதான். அந்த வகையில் இப்படம் சினிமா ஊடக வரலாற்றில் ஒரு திருப்புமுனைப் படமாகும். ஆயினும், எந்தப் புதிய ஊடக கண்டு பிடிப்பாலும் திரையரங்குகள் மறைந்து போகாது என்று சொல்வார்கள். ஆனால், வெள்ளித்திரையில் பார்த்து மகிழ்வதற்கு மாற்று எதுவும் இல்லை என்பதை ரசிகர்கள் ஆதரவு நிரூபித்துள்ளது. இந்தப் படம் அமேசான் பிரைம் மூலம் வெளியிடப்பட்டது. இணையத்தில் அமேசான் பிரைம் நிறுவனத்துக்குச் சந்தா கட்டியவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம். நெட்ஃபிளக்ஸ், டிஸ்னி போன்ற மற்ற பிற இணைய ஊடகங்களும் இத்துறையில் இயங்கி வருகின்றன. 2020 மே29-ல் இப்படம் இணையம் மூலம் உலகம் முழுவதும் வெளியாகியது. நமக்கு நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இப்படத்தை தமிழில் திரைப்படங்கள் வெளிவராத ஃபிஜித் தீவு போன்ற உலகின் சிறிய தீவுகளில் உள்ள ரசிகர்களும் பார்த்து இணையத்தில் அப்போதே பதிவு செய்து விட்டனர். பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனத்துக்கு வருவோம். இயக்குநர் ஜேஜே ஃபிரடரிக் அறிமுகப்படம் இது.  ஒரு அறிமுக இயக்குனர் சொல்கிறபடி ஐந்து முத்தான மூத்த இயக்குநர்கள் கதாபாத்திரங் களாக நடித்திருப்பதால் அவர்களின் நடிப்பு பக்குவப்பட்டதாக அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற முதிர்ச்சி பெற்றதாக அமைந்துள்ளது. இப்படத்தின் மையக்கருத்தாக மூன்று ஜீனர்களை குறிப்பிடலாம். முதலாவது நீதிமன்ற விசாரணை, அடுத்தது பெண்களை மையமாகக் கொண்டது, மூன்றாவது மனித உணர்ச்சி. படத்தின் கதை 2004ல் ஊட்டியில் ஜோதி என்ற  சைக்கோகில்லர் வடநாட்டுப்பெண் பல சிறுவர்களை கடத்தி, கொன்று புதைத்து வைத்ததை போலீசார் கண்டுபிடித்து அப்பெண்ணை சுட்டுக் கொலை செய்துவிடுகிறார்கள் என்பது செய்தி. அந்த வழக்கை 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2020ல் வழக்கறிஞர் வெண்பா மீண்டும் ஆரம்பித்து நடத்துகிறார். அந்த வழக்கின் முடிவு என்ன என்பதே முழுத் திரைக்கதை. அடுத்தடுத்து இறுதிக் காட்சி வரை இடைவிடாது திருப்பங்கள். கிளைமேக்ஸ் எதிர்பாராத திருப்பம். படத்தின் ஆங்கில சப்டைட்டில் இருப்பதால் உலகத் தமிழர்களுக்கு மேலும் தெளிவாக கதைப் போக்கு புரிகிறது. பிற மொழியாளர்களும் படத்தைப் பார்த்து பின்பற்றலாம். இடைவேளை இணையத்தில் தேவை இல்லை. திரையரங்கில் வெளியிடும்போது பாப்கார்ன், பானங்கள் சாப்பிட இடைவெளி தேவை. ஆனால், இங்கே இணையத்தில் படம் பார்த்தாலும் நீங்கள் சமையல் அறை சென்று நொறுக்குத்தீனி எடுத்துக் கொள்வதற்காக இடைவேளை விட்டிருக்கலாம். பில்லா, ரங்கா காலம் தொட்டு நடந்து வரும் சிறுவர் கொலை கதைதான். சமீபத்திய அசீஃபா, நந்தினியைத் தொடர்ந்து பொள்ளாச்சி சம்பவங்கள் வரை “பெண் குழந்தைகளை சீரழிப்பது” (Girl Child Abuse) பற்றி இதில் இடம்பெறும் வசனமே பேசுகிறது. படத்தின் கதாநாயகி ஜோதிகா. 36 வயதினிலே, ராட்சசி வரிசையில் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் கதாநாயகன் இல்லை. வில்லன்கள், குணச்சித்திரப் பாத்திரங்கள் உண்டு. காதல் காட்சிகள், சண்டை, நகைச்சுவை போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. இதில் ஜோதிகா பண்பட்ட அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் உணர்ச்சிப் பிழம்பாகக் காட்சி அளிக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை கதையைச் சுமந்து செல்பவரும் அவர்தான். இதில் வழக்கறிஞர் வேடத்தில் வரும் பார்த்திபன் தனக்கே உரிய முத்திரையைப் பதிக்கிறார். மனிதன் படத்தில் வரும் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ராஜை இந்தப் பாத்திரத்துடன் இணைத்து நினைத்துப் பார்க்கலாம். மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சென்னையில் வந்து வாதாடியதும் நினைவுக்கு வருகிறது. அஜீத்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் வருவது போல் அதிகமான நீதிமன்ற காட்சிகள் நிறைந்த படம். ஆரூர்தாஸ் வசனத்தில் வந்த ‘விதி’ படமும் நீதிமன்றக் காட்சிகளை நினைவு படுத்துகிறது. ஆனாலும், 107 டிகிரி வெய்யில் பட்டையைக் கிளப்பும் இந்த மே மாதத்தில் குளுகுளு ஊட்டிக்கு நாம் நேரில் போக முடியாவிட்டாலும் ஊட்டி காட்சிகள் மனதுக்கு இதமாக இருக்கின்றன. தமிழ்க் கவிஞர்களில்  பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரை என்று  சொல்லப்படுவதுபோல் இதில் வரும் நடிகர்களை இயக்குநர் பாரதிராஜா பரம்பரை நடிகர்கள் என்றும் வகைப்படுத்தலாம். பாரதிராஜாவின் சீடர் பாக்யராஜ், பாக்யராஜின் சீடர் பாண்டிய ராஜன், பாண்டியராஜனின் சீடர் பார்த்திபன் என்று முத்திரை பதித்த மூன்று தலைமுறை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மூத்த நடிகர் பிரதாப் போத்தன் நீதிபதியாக வந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அரசியல்வாதி வரதராஜனாக நடிகர் தியாகராஜன், போலீஸ் டி.எஸ்.பி. யாக சுப்பு பஞ்சுவும் நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்பத் துறைகளில் ராம்ஜி சினிமாட்டோகிராஃபர், ரூபன் எடிட்டிங். இருவரும் சிறப்பாக ஒரு திகில் க்ரைம் கதைக்கு ஏற்ற வகையில் தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். வா செல்லம், கலைகிறதே கனவே உட்பட ஐந்து பாடல்கள் கோவிந்த் வசந்தா இசையில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் கதைக்கருவை ஒட்டியதாக பின்னணியில் பாடப்படுகின்றன. நீதிமன்றத்தில் ஜோதிகா வழக்கறிஞராக வாதாடும்போது, “ஒரு படி அரிசி திருடியதற்காக ஒருவரை அடித்துக் கொலை செய்த நாடு இது. ஆனால், பல நூறு பெண்களை நாசம் செய்தவர்கள் சுதந்திரமாக உலாவி வருகிறார்கள்!”, என்று  பேசும் வசனம் நெஞ்சைத் தைக்கிறது. தமிழ்ப்பெண்ணின் வீரம் பழங்காலத்தில் இருந்தே பேசப்படுகிறது. தன் கணவனை கள்வன் என்று தீர்ப்பளித்த பாண்டிய மன்னன் அரசவையிலேயே சென்று, ‘‘தேரா மன்னா” என்று வாதாடி வெற்றி பெற்றவர் கண்ணகி. அந்த வரிசையில் ஜோதிகா நீதிக்காகப் போராடி வெற்றி பெறுகிறார். இந்த ஊரடங்கு நாட்களில் அறுபது நாட்களுக்கு மேலாக பழைய திரைப்படங்களையும், டி.வி சீரியல்களையும் மீண்டும் மீண்டும் பார்த்துப் பார்த்து நொந்து நூடுல்சாகிப்போன உலகெங்கும் வாழும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தக் காலகட்டத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளிவந்திருப்பது ஒரு வரப்பிரசாதம். இதைவிட உருப்படியாக ஊரடங்கில் வேறென்ன செய்யப் போகிறீர்கள்? அனைவரும் ஒருமுறை பார்க்கலாம். குறிப்பாக ஆண்களும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களும் தவறாமல் பாருங்கள். நெஞ்சை உருக்குவதாக உள்ளது. படத்தின் கடைசியில் வரும் ஒரு வசனம்: பெண் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch எவை என்று சொல்லி வளருங்கள் என்று சொல்லும் நாம் ஆண் குழந்தைகளுக்கு இதை ஏன் சொல்லித் தருவதில்லை என்ற கேள்விக்குப் பதில் இல்லை. ஒரே ஒரு எச்சரிக்கை. படத்தின் கருத்தைப் பொறுத்தவரை ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகள் இப்படத்தைப் பார்ப்பது அவர்கள் மனதைப் பாதிக்கலாம். மற்றபடி அனைவரும் பாருங்க! +++++++++++++

வெட்டுக்கிளி ராணுவம் பராக் பராக்..!

வெட்டுக்கிளி ராணுவம் பராக் பராக்..!

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதும் பிரளயமாக அதிகரித்து வரும் புயல், வெயில், பூகம்பம், தீவிரவாதத் தாக்குதல்கள் என்ற வரிசையில் தற்போது பரவி வரும் கொரானா எனும் கொடிய வைரஸ் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் உயிர் பயத்தில் ஆழ்த்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 4 லட்சம் உயிர்களை பலி வாங்கிய இந்த வைரஸ் தாக்குதலையும் தாண்டி, இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு அடிமேல் அடியாக உருவெடுத்து வருகிறது வெட்டுக்கிளி படையெடுப்பு. ஏற்கனவே வாழ்வாதாரம் சீரழிந்து உள்ளதைச் சமாளிக்க முடியாமல் உள்ள இந்திய விவசாயிகள் தற்போதைய வெட்டுக்கிளி பூச்சித் தாக்குதலால் தங்களது பொருளாதாரச் சூழல் முற்றிலுமாக சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்பி வருகின் றனர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இந்த வெட்டுக்கிளிகள் வருவதாகச் சொல்லப்பட்டாலும் இந்தியாவில் எப்போதெல்லாம் பஞ்சம் தலை விரித்தாடியதோ அந்த வேளையில் எல்லாம் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நடந்துள்ள தாக வரலாறுகள் மூலமாக அறிய முடிகிறது. பெரும் கூட்டமாக மிகப் பெரும் எண்ணிக் கையில் படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம். தம் கண்ணில் படும் பயிர்கள் அத்தனையையும் அழித்து உண்டபடி கூட்டமாய் அடுத்தடுத்த உழவு நிலங்களை நோக்கி நகர்கின்றன. ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர் களுக்கும் மேல்கூட பயணிக்கும் திறன் கொண்ட இந்த கூட்டம், செடிகளின் இலைகள் முதல் வேர்கள் வரை எல்லாவற்றையும் சாப்பிடக்கூடியது. இவைகள் ஒன்றிணையும் வேளையில், ஓரிரு நாட்களில் ஒரு கிராமத்தின் மொத்தப் பயிர்களையும் தின்று தீர்த்துவிடும் வல்லமை பொருந்தியவை என்று தெரிவிக் கின்றனர் அறிவியலாளர்கள். கடந்த சில நாட்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் இந்த வெட்டுக்கிளி கூட்டம் சுமார்  எட்டாயிரம் கோடி ரூபாய் அளவிற்கான பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.  உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்கள் இருந்தாலும் சுமார் 22 இனங்களே பயிர்கள் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது. 1662ஆம் ஆண்டு முழுவதும் மதுரை நகரம் வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளைக் கண்டு மக்கள் அச்சத்துடன் இருந்தார்கள். பல குழந்தைகள் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தன எனவும், கரடிகளும் புலிகளும் காட்டை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றித் திரிந்து, சில நேரங்களில் இவை தலைநகருக்குள்ளும் கிறிஸ்தவ தேவாலயத்தின் சுற்றுச்சுவருக்கு வெளியிலும் சுற்றித் திரிந்தாகவும், பலர் திடீரென காரணங்கள் ஏதுமின்றி இறந்துபோகின்ற அந்த நேரத்தில் கடும் அச்சத்திற்கு இடையே இருந்த வேளையில், யாரும் அறிந்திராத பல வகையான வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் கூட்டம் கூட்டமாகத் தோன்றி பொறுத்துக்கொள்ள முடியாத துர்நாற்றத்தைப் பரப்பியும் காற்றை மாசுபடுத்தியும் மக்களைக் கடித்து பொறுக்க முடியாத வலியையும் ஏற்படுத்தின. இதன் மூலம் காலரா எனும் வியாதி பரவியதால் ஒரே குடும்பத்தில் பதினைந்து நாட்களில் ஏழு பேர் இறந்துபோனார்கள் என்கிறது வரலாறு. 1880ம் ஆண்டில் ரஷ்யாவின் தெற்குப் பிரதேசத்தில் உள்ள மக்கள் வெட்டுக்கிளிகளின் தாக்கத்துக்கு பயந்து பல நாட்கள் கதவைச் சாத்திக் கொண்டு வீட்டிற்கு உள்ளேயே முடங்கிக் கிடந்தார்களாம். 1955ம் ஆண்டில் மொராக்கோ நாட்டிற்குப் பறந்து வந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தின் அகலம் இருபது கிலோ மீட்டர் வரை பரவி வந்ததாகவும்,  அங்குள்ள ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த பயிர்களை அழித்தாகவும் கூறப்படுகிறது. அத்தகைய பெரிய திரள் ஒன்றுகூடும் பட்சத்தில் ஒரே நாளில் சுமார் 35 ஆயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படும் உணவை உட்கொள்ளும் அசாத்திய திறமை படைத்தவை இந்த கூட்டம் என்று கூறப்படுகிறது. வெட்டுக்கிளிகள் மிகக் குறுகிய காலத்தில் அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை. ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 100 மைல்கள் பயணம் செய்து வெட்டுக்கிளி கூட்டம் ஒரு நாட்டையே மூடி மறைத்த வரலாறு இன்றைக்கும் வியப்பின் சரித்திரம்.  லெபனான் நாட்டின் மீது பறந்த வெட்டுக்கிளிக் கூட்டத்தால் ஒரு நாள் முழுக்க சூரிய ஒளி இன்றி அச்சத்தில் தவித்தனர் அந்நாட்டு மக்கள். தமிழில் கூறப்படும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்கிற பழமொழிக்கு பதிலடி கொடுத்தன இந்த வெட்டுக்கிளிக் கூட்டம். அடுத்ததாக 1889ல் செங்கடல் வழியாகப் பறந்த வெட்டுக்கிளிக் கூட்டம் சுமார் 22 ஆயிரம் சதுர மைல் பரப்பளவுக்குப் பறந்ததாக பல்வேறு தரப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக மணலில் முட்டையிடும் வழக்கம் கொண்டவை வெட்டுக்கிளிகள். 1881ஆம் ஆண்டு சைப்பிரஸ் தீவில் உள்ள மணற்பரப்பில் இடப்பட்ட சுமார் 1,300 டன் வெட்டுக்கிளிகளின் முட்டைகளை மணலைக் கிளறி அளித்துள்ளனர் அந்நாட்டு அரசுத்துறையினர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து வழக்கமாக எகிப்து வழியாக எத்தியோப்பியா, ஏமன் நாடுகளைக் கடந்து அப்படியே பாகிஸ்தான் வரை பறந்து வந்து அத்துடன் தங்களது பயணத்தை முடிப்பதுதான் வெட்டுக்கிளிக் கூட்டத்தின் வழக்கம். எப்போதாவது இந்தியா பக்கம் எட்டிப்பார்க்கிற வெட்டுக்கிளிக் கூட்டம் இந்தமுறை முழுவேகத்தோடு உள்ளே நுழைந்துள்ளதைக் காண முடிகிறது. தற்போது படையெடுத்து வரும் வெட்டுக் கிளிகள் சுமார் 2 கிராம் எடையளவு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெட்டுக் கிளிகளின் சிறிய கூட்டத்தில் மட்டும் சுமார் 4 கோடி வெட்டுக்கிளிகள் இருக்கும் என்கிறது அதிர்ச்சியான செய்தியொன்று. இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களான ராஜஸ்தான் உத்திரப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு காரணமாக  விவசாயி களும் பொதுமக்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். மேலும் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் கிருஷ்ணகிரி  மற்றும்  நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு வரத் தொடங்கியுள்ளதால், அங்குள்ள மக்களிடையே பதற்றம் நிலவுகிறது. பாலைவன வெட்டுக்கிளிகளுக்கும், நமது மண்ணின் தன்மைக்கேற்ற வெட்டுக்கிளி களுக்கும் வேறுபாடு உண்டு என தமிழக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தாலும், அதன் தாக்கம் குறித்து  மக்களிடையே அச்சம் நிலவுகிறது. உலகம் முழுவதும் தொடரும் காற்று மாசுபாடு மற்றும் தொழிற்துறை வளர்ச்சியின் காரணமாக ஏற்படும் இயற்கைப் பேரழிவுகள், தற்போது பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று மற்றும் வெட்டுக்கிளிக் கூட்டத்தின் படையெடுப்பு என தற்போதைய நிகழ்வுகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்தால் பருவநிலை மாற்றம் என்ற ஒற்றை மையப்புள்ளி யில் அனைத்தும் இணைகிறதைக் காண முடிகிறது. வரலாறு காணாத புயல் மழை, வெப்பம், வறட்சி எனப் புதிய புதிய ஆபத்துகளை ஏற்படுத்தி உலகில் உள்ள மனிதக் கூட்டங்களை அழித்து வருகிறது இந்த இயற்கை பேரிடர். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிர்பலி விகிதத்தில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்ததாக தமிழகம் இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு வரும் வெட்டுக்கிளி படையெடுப்பைத் தடுத்திட தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் தகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன

விடியலை நோக்கி…

விடியலை நோக்கி…

வந்த வழிகளின் வனப்புகள் அனைத்துமே வளங்களை மட்டும் பறைசாற்றவே இல்லை… நெளிவு சுளிவுகளைக் கடந்தே வந்தாலும் வாழ்க்கை வழி மட்டும் இதுவரை வாய்க்கவே இல்லை… முகம் மட்டும் சிரிக்க அகமனைத்தும் அழ வயிறெனும் நிலம் மட்டும் பசிக்களையில் நிறைந்தே… களை பிடுங்க யாரும் வருவாரில்லை இங்கே வார்த்தைகளில் பொட்டிட்டு வாழ்க்கை மட்டும் தொலைந்தது… என் வாழ்வின் வழியையே தீர்மானிக்க உரிமையில்லை சுவடுகளைத் தீர்மானிக்க மட்டும் சிந்தனைகள் ஆயிரமாயிரம்… என் வலியறிந்தோர் வசமில்லை எதுவுமிங்கே வறுமையின் வரலாறுகளை சுருக்கங்களில் வரைந்தேன்… உழுத நிலத்தின் சுருக்கங்களில் அமிழ்ந்து புதைந்த விதைகளாய் வாழ்க்கை மட்டும் வரலாறாய் விடியலை எதிர்நோக்கியே…கோ.கார்த்திகேயன், கோவில்பட்டி

வெள்ளிக் கொலுசு சப்தம்

வெள்ளிக் கொலுசு சப்தம்

துள்ளிவரும் அலையாட்டம்கள்ளி நீ ஓடையிலேசொல்லி அழைக்குதடிசோட்டையாட கேக்குதடி பள்ளிப் பருவத்திலேதுள்ளியாடி போகயிலேவெள்ளிக் கொலுசு சப்தம்வேற்றுமொழி சொல்லலையே கெஞ்சலடி நாவுன்னைகொஞ்சவேண்டி நீயென்னைநஞ்சைத் தின்னவைக்காமல்நன்னெறியை தந்திடடி

கருணாநிதி 97

கருணாநிதி 97

இந்தியாவில் எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வளவு விமர்சனங்களை எதிர்கொண்டதாகச் சரித்திரம் இல்லை. எந்தக் காரியத்தில் இறங்கினாலும் எதிர் விமர்சனம் இன்றி கருணாநிதி வென்றதாக வரலாறும் இல்லை. ஒருவேளை இவரின் வெற்றிக்கு இந்த விமர்சனங்கள் தான் ஊன்றுகோலாக இருந்தனவோ என்ற எண்ணம் அவ்வப்போது எழுவதுண்டு. தனது அரசியல் பிரவேசம் முதல் கட்சியின் தலைவர் பொறுப்பு, முதல்வர் பதவி மற்றும் கடைசித் தருணம் வரை இவரின்  ஒட்டுமொத்த செயல்பாட்டையும் அக்குவேறு ஆணிவேறாக விமர்சனம் செய்வதற்கென்றே ஒரு வலைப் பின்னல் கட்டமைக்கப்பட்டிருந்தது கருணாநிதி எனும் தனிமனிதனைச் சுற்றி. அவரின்  தமிழும், காந்தக்குரலும், தளராத நம்பிக்கையும் தன் கீழ் இயங்கும் எல்லோரையும் அடையாளம் கண்டு பிடித்துவிடும் கருணாநிதியின் அரசியல் முகத்தையும் தாண்டி, அவருடைய மற்ற பரிமாணங்களைக் காணும் பட்சத்தில் இவரின் தொலைநோக்குப் பார்வை தற்போதைய அரசமைப்பின் தலைமைகளையே ஆச்சரியப்பட வைக்கிறது. ஆம், அமெரிக்காவில் நடைமுறை யில் உள்ள,  விவசாயிகள் மற்றும் மக்களிடையே இடைத்தரகர்கள் இல்லா வணிகம் மூலமாக நேரடி வணிகச் சங்கிலி ஏற்படுத்தி, உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சூட்சுமத்தை அறிந்து, தமிழகத்தில் உழவர் சந்தை என்ற திட்டத்தைத் தொடங்கி தாங்கள் விளைவிக்கும் உணவுப் பொருட்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் விவசாயிகள் நட்டமின்றி வருமானம் ஈட்டுவதற்கு வழிவகை ஏற்படுத்தினார். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இடைத்தரகள் மூலம் சந்தையில் விற்பனை செய்வதால், தரகர்கள் பலனடைந்து விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் வாடி வந்த வேளையில், தமிழகத்தில் விவசாயிகளுக்கான நேரடி விற்பனைச் சந்தையை உருவாக்கிய விதம் வியப்பின் சரித்திரக் குறியீடு.  2000 ஆண்டுகளின் துவக்கத்தில் கணினிகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த மற்ற மாநிலங்களுக்கு மத்தியில், தகவல் தொழில்நுட்பச் சேவை துறையில்தான்  எதிர்காலம் உள்ளது என்பதை நன்கு உணர்ந்த கருணாநிதி, 2000ஆம் ஆண்டே சென்னையைத் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகரமாக மாற்ற அன்று அவர் தூவிய டைடல் பார்க் எனும் விதைதான் இன்று பழைய மகாபலிபுரம் சாலையின் இருமருங்கிலும் புற்றீசல் போலப் பெருகியுள்ள ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிறுவனங்களாக வளர்ந்து நிற்கிறது. அதற்கு அடுத்ததாக சிறுசேரியில் அமையப்பெற்ற ஒன்றிணைந்த தகவல் தொழில்நுட்பக் கூட்டமைப்புகள் மூலமாக தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் வளர்ச்சியடைந்த பிரதேசமாக மாற்றியுள்ளது. இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி, இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய  நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் என இவர் கொண்டுவந்த திட்டங்கள் பலப்பல. ஆசியாவின் முதல் வேளாண் பல்கலைக்கழகம், ஆசியாவின் முதல் கால்நடைமருத்துவக் கல்லூரி, இந்தியாவின் முதல் சட்டப்பல்கலைக்கழகம், இந்தியாவின் முதல் கல்வியியல் (B.Ed.,M.Ed) பல்கலைக்கழகம் மற்றும் நாட்டின் முதல் கடல்சார் பல்கலைக்கழகத்தைக் கொண்டு வந்த கலைஞர் கருணாநிதி நவீன தமிழகத்தின் சிற்பி என்றால் அது மிகையாகாது. தோல்விகளைக் கண்டு துவளாமல் மீண்டெழுந்து ஐந்துமுறை தமிழகத்தின் முதல்வராக இருந்ததோடு, தி.மு.க என்னும் இயக்கத்தைக் கட்டிக் காத்தவர் என்றப் பெருமைக்குச் சொந்தக்காரர் இவர். நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களால் கலைஞர் எனும் அடைமொழிக்குப் பாத்திரமான கருணாநிதி அவர்களின் 97வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று கொண்டாடப்பட உள்ளது.

தென்றல் வந்து தீண்டும்போது….

தென்றல் வந்து தீண்டும்போது….

இசைஞானி இளையராஜாவிற்கு மணி மகுடம் சூட்டுகிறது “தென்றல் வந்து தீண்டும் போது” குறும்படம். தமிழ் சினிமாவில் இசை என்றாலே இளையராஜாவிற்கு முன், இளையராஜாவிற்கு பின் என்ற சகாப்தத்தை உருவாக்கி, இன்று உலக சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு தமிழ் இசை அரசனாக முடிசூட்டப்பட்ட இசைஞானி  இளையராஜாவின் பிறந்த நாள் வாழ்த்துக்களை இசை ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் கொண்டாட, பரந்து விரிந்த அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவரான அருள் சங்கர் என்பவர் தனது இசைத் தலைவனுக்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். ஆம், ‘தென்றல் வந்து தீண்டும் போது’ எனும் குறும்படம் மூலமாக இசை ரசிகர்களின் மனதில் இளையராஜா எப்படி வாழ்ந்து வருகிறார் என்பதை தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். தமிழக சினிமா ரசிகர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் தனதாக்கிக் கொள்ளும் சக்தி கொண்டது இளையராஜாவின் இசை என்ற பேச்சு வழக்கு உண்டு. இதைக் கண்முன்னே காட்டியிருக்கிறார்கள் இதன் ஒளிப்பதிவாளர்கள் ராசாமதி மற்றும் சந்தோஷ் தயாளன். ‘தமிழ்ச் சமூகம் தவிர்க்கவே முடியாத இம் மாபெரும் கலைஞனுக்குத் தலைவணங்கி இக்குறும்படத்தை சமர்ப்பிக்கிறோம்’ என்ற முகப்பு வாசகத்தைப்  படிக்கும் போதே இக்குறும்படத்தின் கரு என்னவென்று புரிந்து விடுகிறது. இதுவே இந்த குறும்படத்தின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. வைதேகி காத்திருந்தாள் படத்தின் ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’  என்ற காதல் தோல்விப் பாடலுடன்  தொடங்கு கிறது இந்தப் படம். காதல் தோல்வி என்றால் சோகமான பாடல்களைத்தான் கேட்க வேண்டும் என்கிற விதியை உருவாக்கியுள்ள இந்திய சினிமா ரசிகர்களிடையே இந்தப் படத்தின் நாயகனும் விதிவிலக்கல்ல. ஏற்கனவே சத்யா என்ற பெண்ணைக் காதலித்து, அந்தக் காதல் தோல்வியால் மனம் நொந்து போயிருக்கும் அருணுக்கு அவரது நண்பர் அறிவுரை கூறும்போதே படத்தின் தலைப்புப் பகுதி முழுவது மாக முடிந்துவிடுகிறது. படத்தின் முதல் காட்சி பெண் பார்க்கும் படலத்துடன் தொடங்குகிறது. யாழினி இந்தக் கதையின் நாயகி. கொஞ்சம் முக மற்றும் உடை ஒப்பனை சரியாகச் செய்திருந் தால் வெள்ளித்திரை நாயகியாகவே வாழ்ந்திருப்பார். ஆனாலும் இந்தக் கதைக்கு மெத்தப் பொருந்தியுள்ள பாத்திரமாக வாழ்ந்துள்ளார். கதையின் நாயகன் அருண், யாழினி உடனான பெண் பார்க்கும் முதல் சந்திப்பில், தனது முதல் காதல் குறித்து யாழினியிடம் கூறும்போது, ‘‘இங்கு வரும் வரையில் எனக்கு கல்யாண ஆசை இல்லை” எனும்போது, ‘‘அப்படியென்றால் இங்கு வந்த பின்னர் அந்த நினைப்பு மாறிவிட்டதா?” என்று கேட்க, நாயகன் அருணின் இரண்டாவது காதல் மொட்டு துளிர்விட தொடங்கு கிறது. 1988 ஆம் ஆண்டு வெளியான சத்யா திரைப்படத்தில் வரும் ‘வளையோசை கலகலகலவென’ என்ற பாடலைக் கேட்கும்போது முன்னாள் காதலி நினைவுக்கு வருவாரோ என்று அடிக்கடி குழப்ப நிலைக்குச் செல்கிறார் யாழினி. தொலைக்காட்சி யில் இந்தப் பாடல் பாடல் வரிகள் வரும் வேளையில், இசையின் ஒலியைத் தடை செய்து, காட்சிப் பதிவினை மட்டும் கண்டு ரசிக், நாயக னின் முதல் காதல் பற்றிய சந்தேகம் எழுகிறது. ஒரு கட்டத்தில் இளையராஜா பாடலையே கேட்கக் கூடாது என கணவரிடம் கண்டிப்பாக கூற, இளையராஜா பாடலைக் கேட்காமல் இவர்களின் குடும்ப வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் மீதமுள்ள படத்தின் கதை. படம் முழுக்க இரண்டு நபர்களைச் சுற்றி நகரும் கதைதான் என்றாலும் 26 நிமிடங்கள் எப்படிப் போனது என்று தெரியாமல் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதா? என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அடிக்கடி பழைய காதலியைப் பற்றி கேட்கும் கேள்விகளைத் தவிர மற்ற இடங்களில் நடிப்புத் திறனில் ஒன்றிவிடுகிறார் நாயகி யாழினி. உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு குறும்பட விழாக்களில் கலந்து கொண்டு  சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த தயாரிப்பு என இதுவரை 22 விருதுகளை வாங்கியுள்ளது தென்றல் வந்து தீண்டும்போது குறும்படம். இளையராஜாவின் தென்றலை கலகலவென தீண்டியுள்ளது இந்தக் குறும்படம்.

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை என்பதை நோய் என்றும் கூறலாம், அறிகுறி என்றும் கூறலாம். மஞ்சள் காமாலைக்கு ஆங்கிலத்தில் jaundice.  இது jaunice எனும் ப்ரெஞ்சு மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் மஞ்சள் நிறமாதல். இதை மருத்துவ ரீதியில் icterus என்றும் அழைப்பர். மஞ்சள் காமாலை நோயானது பிலிருபின்(Bilirubin) என்ற ஒரு மூலக்கூறினால் ஏற்படுகிறது. பிலிருபி னின் வாழ்க்கையை அறிந்து கொள்வோம். அப்போது தான் மஞ்சள் காமாலை எளிதாகும். நம் உடல் இயங்க இரத்தம் தேவை, இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்கள் குறிப்பிட்ட அளவில் இருப்பது அவசியம். அந்த இரத்தச் சிவப்பணுக் களால் தான் நம் இரத்தம் சிவப்பாக உள்ளது. இந்த இரத்தச் சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப் படுகிறது. இந்தச் சிவப்பணுக்கள் ஹீமோகுளோபினோடு இணைந்து ஆக்சிஜனை உடலிலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலம், நம் உடல் இயங்குகிறது. இந்த சிவப்பணுக்களுக்கு வாழும் காலம் என ஒன்று இருக்கும். அது 120 நாட்கள். 120 நாட்களுக்கு பின் வயது முதிர்ந்த இரத்த சிவப்பணுக்கள் உடைக்கப்படும் இந்த இரத்த சிவப்பணுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் இணக்கமற்ற பிலிருபின்னாக மாற்றப்படும். இந்த இணக்கமற்ற பிலிருபின் ஆனது ஒரு லிக்கியூடால் கரைக்கக்கூடிய ஒன்று. அதாவது நீரால் கரைக்க முடியாது. எனவே இதனை அல்புமின் நம் கல்லீரலுக்கு எடுத்து செல்லும். அங்கு இது யூரோபிலினிடோ குளுக்காரோனா ட்ரான்ஸ்பரேஸ் மூலம் இணக்கமான பிலிருபின் ஆக மாற்றும். இணக்கமான பிலிருபின் நீரில் கரையக்கூடிய ஒன்று. இது அங்கிருந்து பித்தப்பையின் பித்தக் குழாய் மூலம் கணையத்தை அடைந்து அங்கிருந்து குடலுக்குச் செல்லும். குடலில் உள்ள பொருட்களால் இந்த பிலிருபின் யூரோபிலினோஜன் ஆக மாற்றப்படும். யூரோபிலினோஜன்  நிறமற்றது. இந்த யூரோபிலினோஜனின் 80% வரையிலான அளவு அப்படியே குடலில் உள்ள பொருட்களால் ஸ்டெர்கோபிலி னோஜன் அதன் பின் ஸ்டெர்கோபிலினாக மாற்றப்படும். இந்த ஸ்டெர்கோபிலின் தான் மலத்திற்கு ஒருவகை மஞ்சள் பழுப்பு நிறத்தை கொடுக்கிறது. மீதமுள்ள 20% யூரோபிலினோஜன் மீண்டும் கல்லீரலுக்கு வந்து அங்கிருந்து குறிபிட்ட அளவு சிறுநீரக உறுப்பிற்கு வந்து யூரோபிலின் ஆக மாற்றப்படுகிறது. இந்த யூரோபிலின் தான், நம் சிறுநீருக்கு இளம் மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. மேலே கூறப்பட்ட பிலிருபின்னின் வரலாறு, எப்போதும் நிகழக்கூடிய ஒன்று. மேலே குறிப்பிட்ட வரலாற்றில் ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு வகை மஞ்சள் காமாலை ஏற்படும். அந்த வகைகளை அடுத்த இதழில் காண்போம். தொடரும்

சுவடு கடந்து வந்த பாதை

சுவடு கடந்து வந்த பாதை

2007 சனவரியில் ‘சுவடு’ மாத இதழ் வெளிவந்தது. ஒரு தாய் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையை பிரசவிக்கும்போது ஏற்படும் வலியையும் துன்பத்தையும் எப்படிப் பொறுத்துக்கொண்டு பெற்றெடுக்கிறாளோ, அப்படியே ‘சுவடு’வும் மாத இதழாகப் பிரசவமானது. ஈராக்கில் சதாம் உசேன் அமெரிக்க ஏகாதிபத்திய அரசால் தூக்கிட்டுக் கொல்லப் பட்டபோது… மனித இனமே அழுதது; அந்த ஒளிப்பட அட்டையுடன் 2007 சனவரியில் சுவடு வெளிவந்த நினைவு உள்ளத்தில் அழியாச்சுவடாகப் பதிந்துள்ளது. 2007 சனவரி முதல் 2012 டிசம்பர் வரை தொடர்ந்து பல்வேறு இன்னல்களைச் சந்தித்து ‘சுவடு’ ஒவ்வொரு மாதமும் வெளிவந்தாலும் நினைத்த இலக்கை அடையாமல் முடிவாகிப் போனது! மீண்டும் மின்னிதழாக இம்மாதம் ஜூனில் நண்பர்கள் பவா சமத்துவன், மணியன் கலியமூர்த்தி, நல்லு இரா.லிங்கம், தமிழன் இளங்கோ, எம்.செய்யது முகம்மது ஆஸாத் ஆகியோருடைய உதவியால் உங்கள் கரங்களில் சுவடு தவழ்வதுகண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  மானுடத்தின் பாதையில் சுவடு தொடர்ந்து தடம் பதிக்கும். உங்கள் ஆதரவோடு! நன்றியுடன், சா. அஹமது மன்சூர்